மழை,நிலா,வானம்,வட்டம்

வழிதவறி தேநீரீல் விழுந்த
மழைத்துளி
எங்கு
செல்வதாய் சொல்லி
கிளம்பி இருக்கும்?
o
சாக்கடையில் விழுந்து கிடக்கும்
பாதி நிலா
மீதியை
வானத்தில் தேடிக்கொண்டிருக்கிறது
o
பால்யத்தில்
அகலக் கைவிரித்த ராட்சஷனாய்
வானத்தை சொன்ன கிழவிதான்
என் கவிதைகளின் மூலம்
o
முனியாண்டியின்
ஆவி இருப்பதாய் சொல்லப்பட்ட
ஆலமரத்தை
கடக்கையிலெல்லாம்
பயம் கவியும்.
கடந்த மாதம் அதை
வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் வருத்தம்தான்.
o
தரையை கழுவிக் கிடக்கிறது மழை
உதட்டில் முத்தமிடுகிறது தேநீர்
புன்னகைத்து கடந்து போகிறாய் நீ
கொல்லத்தான் செய்கிறது காதல்.

Leave a Comment