மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
(குறள் எண் 829)
-வெளியில் நண்பராய்க் காட்டி மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரை சிரிக்க வைத்து மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நட்பெனச் சொல்லி
சிரித்து நடிக்கிறாய் நீ
உன் நடிப்புகள் தெரிந்து
சிரிப்பதாய் நடிக்கிறேன் நான்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நட்பிற்குள் நான்
நன்றாய் நடிப்பதை
இன்றுதான் கண்டுபிடித்திருக்கிறாய்
இந்த நடிப்பு உன்னிடம் கற்றதுதானென
எப்போது கண்டுபிடிப்பாய்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லாம் கற்றுக் கொடுக்குமாம் நட்பு
இப்போது தொடங்கி இருக்கிறது
நட்பற்று நட்பாய் நடிக்கவும்
கற்றுக் கொடுக்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நானும் கொஞ்சம்
துன்பமாய் நடிக்கிறேன்
துணையாய் நடிக்கும் நீயாவது
இன்பமாய் இருந்து
விட்டுப் போ இதயத்துள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்குள் நட்பிற்குள் இடைபுகுந்த
ஒரு "டி" யால்
வந்திருக்கிறது
நம் நட்பிற்குள் நடிப்பு ![]()
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடரும்…