அர‌ளிப்பூக்க‌ளும் பியூரெட் குழாய் க‌ளும்

கூப்பிடும் தூரத்தில்
கற்களை சேர்த்து
ஓடிக்கொண்டிருக்கிறது ரத்த ஆறு
தடிமனாய் குமிழ் விட்டுக்கொண்டிருக்கிறது
பியூரட் குழாய் ஈகோ
கொதிக்கும் அமில
ஊற்றில்
சட்டென உறைகிறது பனிக்கட்டி நீர்
புகையெனப் பறக்கும்
கோபம் கலைந்தபின்
இழப்பதற்கு எதுவுமில்லை
நீயுமில்லை.
o
கூட்ட‌த்தில்
காட்டிக் கொடுத்து
புண்ணிய‌ம் சேர்த்த
அதே கொலுசுதான்
இன்று அமில‌த்தை ஊற்றுவ‌தும்
o
மரணம்
கோழைத்தனமென
இன்னும் நீங்கள் எழுதிக் கொண்டிருங்கள்
சதுர மில்லிமீட்டர் சதைத்துணுக்குகள்
பிய்ந்து விழுவது உஙகளுக்கு தெரியாது
கந்தக அமிலங்களால் காய்ந்து போன உள்ளங்களோ
கத்தி கீறி காய்த்துப்போன உள்ளங்கைகளோ
உங்களுக்கு கிடையாது
விடாமல் அறுத்துக் கொண்டிருக்கும்
வார்த்தை வாள்கள்
உங்கள் மீது பாய்ச்சப்படவில்லை
தொண்டையை நனைக்கும்
மீன்கொத்திப் பறவைகளை
குடுவை பீய்ச்சி விளையாடியவர் நீங்கள்
நீங்கள் அடுத்த கவிதை எழுதுமுன்
நான் தற்கொலை செய்துகொள்ளுமுன்
இந்த வரியை மட்டும் படித்துவிடுங்கள்
நான் காதலிக்கிறேன். நீங்கள் இல்லை.
o
இருள் பூத்துத் தொங்கும்
போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து
வெளிவ‌ருகிறாள்
அர‌ளிப்பூ தேவ‌தை
பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின்
மேல்
க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம்
ப‌ழைய‌ க‌விதையொன்றின்
பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார்
காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன்
எல்லாக் க‌விதைக‌ளிலும்
தேவ‌தை
என‌ அடித்து எழுதுகிறான்
ஆசிரிய‌ சித்த‌ன்
o

Leave a Comment