சில ரோஜாக்கள்


பேராண்மையும் மஞ்சள் ஜட்டியும்
அக்டோபர் 28, 2009, 5:11 மு.பகல்
கோப்பு வகை: Poems

பேராண்மை வில்லும் அம்புமென முதல் விளம்பர பலகையிலேயே விழிகளை ஈர்த்த படம்.மாலுமிகளின் காதலை சொன்ன இயற்கை,வெளிப்படையான அரசியல் எதிர்ப்பு வசனங்களை ஒளித்து வைத்ததுடன் காதலின் புனிதக் கட்டுமானத்தை உடைத்த ஈ படங்களை தந்த எஸ்.பி.ஜனநாதன் கொடுத்த நம்பிக்கையென மாற்று சினிமா என்ற ஈர்ப்புதான் பேராண்மை தந்து வைத்திருந்தது.

மலைவாழ் மக்களில் ஒருவனாக "ஜெயம்" ரவி. N.C.ச் மாணவர்களின் பயிற்சியாளர். இவர் பயிற்சியாளராய் இருப்பதை விரும்பாத மாணவிகள். அவர்களின் சீண்டல்.கடைசியில் சீண்டிய மாணவிகளை வைத்தே தன் நாட்டை பெருமைபடுத்தும் சக்தே இந்தியா.

1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் A zori zdes tikhie. அதன் இயக்குநர் Stanislav Rostotsky. அதன் கதை இதுதான்,

புரட்சிக்கு முன்பு, விவசாயியாக இருந்த ஒருவர் புரட்சியில் பங்கேற்றுப் பிறகு சோவியத் ராணுவத்தில் ஒரு படை பிரிவுக்கு தலைமை ஏற்கிறார். 1942ல் – இரண்டாம் உலகப்போரின் போது, ரஷ்ய எல்லைப் பகுதியில் உள்ள காட்டிற்குள், நுழைந்த ஜெர்மானியப் படைகளை எதிர்த்து, ஏறக்ககுறைய 50 வயதான அவர் தலைமையில் 5 பெண்கள் 16 ஜெர்மானிய நாஜிகளை எப்படி கொல்கிறார்கள்? என்பதுதான் கதை.

படத்தின் துவக்கத்தில், கிராமத்தான் தொனியில் இருக்கிற அந்த தளபதியை, படித்த அந்த ஐந்து இளம் பெண்களும், அடிக்கடி கிண்டல் செய்வதாக இருக்கிறார்கள். ‘இளமைக்கே உரிய குறும்பு’ எனறு அமைதி காக்கிறார் அவர். பிறகு நாஜிகளுடன் சண்டை செய்யும்போது, போருக்குரிய வியூகங்களை எப்படி வகுக்கிறார். அந்தப் பெண்களிடம் இருக்கும் வீரத்தை வெளிகொண்டு வந்து எப்படி புத்திசாலித்தனமாக, வேகமாக இயங்குகிறார், என்பதை பார்த்து வியக்குகிறார்கள் அந்தப் பெண்கள். அவருடன் இணைந்து 16 ஜெர்மானிய நாஜிகளை கொன்று ஒழிக்கிறார்கள்.

இரண்டு படங்களையும் த‌மிழ் சினிமா ம‌சாலாவில் தோய்த்து எடுத்து காய‌ப்போட்டிருக்கிறார்.

எருமைமாட்டுக்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் மாணவிகள் ஆங்கிலத்தில் கிண்டல் செய்வதும் பயிற்சிக்குப் போவதாய் சொல்லும் போதே கண்டிப்பாய் பயிற்சியாளர் ஹீரோதான் எனத் தெரிந்து விடுகிறது. இதை முக்கிய சஸ்பென்ஸ் என நினைத்து ஜீப்பிலிருந்து கை,கால் என தனித்தனியாக இறங்கி வருகிறார் ஜெயம் ரவி. அய்யோ பாவம்!

N.C.C பயிற்சியாளர் பயிற்சிக்கான நேரத்தில் வகுப்பறையில் அமரவைத்து உலக அரசியல் பற்றி கற்றுக்கொள்ள சொல்கிறார். எந்த நிமிடம் என்ன நடக்குமென தெரியாத தலை போகும் போராட்டாத்தின் நடு நடுவே இது M.12 ரக துப்பாக்கி, இது AK.46 ரைபிள், இது வேப்ப மரத்தின் சுள்ளி என கன்னன்னாபின்னன்னா என பாடம் எடுக்கிறார். பின் வரிசையில் எந்த குப்பனோ சுப்பனோ குறட்டை விடுவது முன்வரிசை வரை கேட்கிறது.

எருமையின் வயிற்றில் பிரண்டு விழுந்த கன்னுக்குட்டி போல் சம்பந்தமற்ற இடங்களின் அரசியல் வசனங்கள் துருத்திக்கொண்டு நிற்பது தனியாய் தெரிகிறது.முதல் பாதி முழுக்க மலைஜாதி மக்களில் ஒருவனை, ஹீரோவை அவமானப்படுத்தும் வசனங்களை ஜனநாதன் ரூம் போட்டு எழுத, எல்லா வசனங்களையும் சென்சார் ரூம் போட்டு வெட்டி விட்டது. அய்யோ பாவம் இயக்குனர்.

அண்ணாம‌லை ர‌ஜினியின் க‌ட‌வுளே க‌ட‌வுளே நினைவிருக்கிற‌தா. அதன் காட்சியை இர‌ண்டு முறை இங்கு உப‌யோக‌க‌ப் ப‌டுத்தி இருக்கிறார்க‌ள்.இதெல்லாம் தேவையா ஜ‌ன‌நாத‌னுக்கு?

சுத்தி அரிவாளை அங்கங்கு உபயோகிக்க முயன்றிருக்கிறார். வீணாக்குவதற்கு உபயோகிக்காமல் இருக்கலாம்.

அங்கக்கு அப்பா!இதோ நம்ம ஜனநாதன் என தலை நிமிர வசனங்கள் கை கொடுக்கிறது.

"கிராம‌த்துப் பொண்ணுக்கு முந்தான‌ ஒதுக்கி கால‌ம் போச்சு, ந‌க‌ர‌த்துப்பொண்ணுங்க‌ளுக்கு முடிய‌ ஒதுக்கியே கால‌ம் போச்சு"

"நான் இங்லீஷ் பேசுனா என் ம‌க்க‌ளுக்கு புரியாது, உங்க‌ளுக்கு புடிக்காது"

லென்ஸ் வ‌ச்சு தேட‌னும். பாவ‌ம் ஜ‌ன‌நாத‌ன் ர‌சிக‌ர்க‌ள்!

ஒரே ஒரு ஆறுதல் இந்திய ஏவுகணைய அழிக்க வருகிறவர்களில் விஜயகாந்த் பாணியில் எந்த "கான்" களும் இல்லாமல் சர்வதேச கூலிப்படையாய்க் காட்டியது.

தினம்தினம் கந்த சஷ்டி கவசத்துடன் விழிக்கும் பெண், "காக்க காக்க கனகவேல் காக்க" வரியில் இறந்து விழுவது யாராலும் கவனிக்கப்படாமல் போன கடவுள் மீதான பகடி.

என்.சி.சி தோழிகளின் அறைக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஜன நாதனுக்கு தேவையா? குளியலறையில் துண்டை அவிழ்த்தெறிவது, மஞ்சள் ஜட்டியை கழட்டுவது நிர்வாணமாய் ஹீரோவை சந்திக்கப் போகும் பெண் என அடித்தட்டு மக்களை உணர்ச்சி தூண்டும் காட்சிகள் வெறும் வியாபாரத்திற்கா?

மலை ஜாதிப் பையன் என்பதற்காக செருப்பை தூக்கி போடுகிறார் உயர்(ஜாதி) அதிகாரி கக்கூஸ் கழுவ சொன்னாலும் செய்கிறார். இறுதியில் இவர் ஏவுகணையைக் காப்பாற்ற உயர் அதிகாரி விருது வாங்குகிறார். அந்த காட்சியில் மலைஜாதி ஹீரோவின் முகம் கூட இல்லை.கோபத்தை எதிரிகளிடம் தான் காட்டவேண்டும் என்ற வியாக்கியானம் வேறு. இவர்களைப் பொறுத்தவரை கட்டமைக்கும் எதிரி என்பது எல்லைக்கு அப்பாலிருந்து வந்து போர் தொடுப்பவன் மட்டுமே. உள் நாட்டின் உயர்ஜாதியினர் என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையா?

இதுவரை சினிமாவில் இவர்கள் நுழைக்க நினைக்காத நிறைய குட்டி குட்டி விஷயங்கள் (பார்த்தீனிய செடிகள் வரை) புகுத்தியிருந்தாலும் காதில் கொலுசும்,கையில் கம்மலும், காலில் வளையலும் அணிந்தது போல் பொருந்தாத இடங்களில் அழகாயிருக்கிறது.

ஜன நாதன் தன் பாணியிலேயே படம் எடுக்கலாம். கமர்ஷியல் புகுத்துகிறேன் பேர்வழி என கம்யூனிசத்தை கடித்துக் குதறாமல் இருப்பது நல்லது.


1 மறுமொழி இது வரை
மறுமொழியவும்

2009 the best film.we want much more flims

Comment by mohamed faisal




மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>