பனிபொழியும் நிலத்திலிருந்து
கண்ணாடியால் பிரிக்கப் பட்டிருக்கிறது
தவளைகளின் கூடு
கரக் கரக்கோ
பட படவோ
தன் மொழியில் பாம்புகளை
அழைக்கிறது தவளைகள்
கண்ணாடிக்குள்ளிருந்து
பனி உருக்கும் தவளைகள்
கால்களை கன்னத்துக்கு வைத்திருக்கிறது
தேனீர் அருந்தும் பொழுதுகளில்
அடுத்த நிமிடத்தின் மரணத்திற்கு முன்
வெட்டப்பட்ட கால்களுடன்
லிப்டுகளில் அலையும் தவளைகள்
சுவற்றில் எழுதுகிறது
மழை பற்றிய கவிதைகளை
o
மெளனத்தின் தாள்களை இரவில் கிழிக்கிறது
சில தவளைகள்
மொட்டைமாடி பிரதேசங்களில் பிசுபிசுக்கிறது
சிமெண்ட் கலவைகள்
பழைய கட்டிடங்களில்
வெள்ளையடித்துப் போயிருக்கிறது
இரவில் பொங்கிய பாதரசம்
இடம்பெயர்தல் குறித்த உண்மைகளை
மறைத்திருந்தான் நண்பனொருவன்.
வழக்கம்போல்
மழை அடித்து ஓய்ந்தது.
o
மறைவிடங்களிருந்து வெளிவருகிறது தவளையொன்று
பாம்பினைத் தின்னும் பாதைகளில்
ஓலமிட்டு அலைகிறது ஆண்தவளை
யாருமற்றவர்களை யாதுமற்றவையாய்
திருத்தி எழுதுகிறது கடைசி துளி பனி
மின்சார பறவையின்
கடைசி சிறகு வந்தடைகையில்
போர்வையை இறுக்கமாக்கி
இறந்து போகிறேன் நான்.
என் மரணத்தின் சாட்சியாய்
கல்லறை மேல் பூத்து நிற்கும்
கவிதை பூவும்
காதல் தவளையும்
நானே படைத்தவை