உலுக்கிவிட்டது எனச் சொல்வார்களே அந்த நிகழ்வைச் சந்தித்தேன். மறந்துவிட்ட அல்லது மறந்துவிட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் மனதின் அடி ஆழத்திலிருந்து மேலே வந்து புரண்டு கொண்டிக்கிறது. கவிதை நிகழ்த்துதல் என்ற அடுத்த பரிமாணத்தில் போய்க்கொண்டிருக்கும் கவிதை உலகின் அடுத்த நிலையது. ஒரு கவிதை நிகழ்த்தப்படுகிறது. நடிக்கப்படுகிறது. காட்சிப் படுத்தப் படுகிறது அல்லது ஒற்றை வார்த்தையில் குறும்படமாக்கப்படுகிற்து.

“சொன்ன வார்த்தைகளைவிட சொல்லாத வார்த்தைகளில்தான் இருக்கிறது கவிதை.” “சொல்லாதே காட்டு எனபது குறும்படம்”. இரண்டும் சுஜாதா சொன்னது. இங்கே வார்த்தையே இல்லை. சொல்லில் அடங்காத சில நிகழ்வுகள் காட்சிப்படுத்த்தப்பட்டிருக்கிறது. ஒற்றை அறை ஒரு மனிதன் ஒரு நாள். வெறும் பத்து நிமிடமே படம். ஒரு அசாதாரண அமைதியில் போய்கொண்டிருக்கிறது. வெகுஜன ரசனைக்கு படம் பிடிக்காமல் போனால் அதுவே ஆகச் சிறந்த வெற்றி என்பேன்.

உங்களில் எத்தனை பேர் விடுமுறையில் தனியே அறையில் அடைந்து கிடந்திருப்பீர்கள். பேசுவதற்கு யாருமிலாமல் அல்லது எதுவுமில்லாமல் ஒரு சிகரெட் பாக்கெட்டும் ஒரு பாட்டிலும் மட்டுமே துணை கொண்டு அந்த நாட்களை கழித்திருப்பீர்கள். விடுமுறை நாள் என்பது ஒரு உதாரணம் மட்டுமே. ஒரு மிகப்பெரிய இழப்பிற்குப்பின் ஒரு மிகப் பெரிய தோல்விக்குப் பின் ஒரு துரோகத்திற்குப் பின் ஒரு புறக்கணிப்பிற்குப் பின், ஒரு பிறழ்வுக்குப் பின் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒற்றை அறையில் அடைந்து கிடந்திருந்தாலும் இந்தக் காட்சிக் கவிதையின் வலி உங்களின் உயிர்வரைத் தாக்கும்.

அந்த மனிதனைவிட என்னைக் கவர்ந்தது, ஒரு காட்சியில் வரும் பூனை. அது ஒரு உயிர். அடைக்கப்பட்ட ஜன்னலை விட்டு வெளியேறிவிடத் துடிக்கும் ஒற்றைஉயிர். யாருமில்லாத அந்த அறையில் தப்பிவிடத் துடிக்கும் உயிர் யாராக இருக்க முடியும்? ஒரு அமானுஷ்ய ஒலி எழுப்பி கண்ணாடி ஜன்னலில் தொங்கித் தீர்கிறது பூனை. அவன் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பியபின் அது தப்பிக்கத் துடிக்கிறது. ஏன்? கேள்விகளை உங்களிடம் கேட்கவில்லை. உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறேன்.

இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் ஒளியமைப்பு.அமெச்சூர் குறும்படக் காரர்களுக்கு ஒரு தீராத ஆசையிருக்கிறது. நல்ல வெளிச்சத்தில் எல்லார் முகமும் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதே அது. இது ஒரு கிளிஷே போலாகிவிட்ட நிலையில் கதைக்கேற்ற ஒளியில் முக்கால் இருட்டில்தான் இருக்கிறது மொத்தக் கதையும். இதுவே அந்த அமானுஷ்ய நிகழ்விற்கு ரத்தச் சாயம் பூசிய உணர்வைத் தருகிறது. இந்த உணர்வைத்தான் முதலில் சொன்னேன் மனம் நடுங்குகிறது என்று. ஒரு முறை பாருங்கள். மாற்றுக் கருத்து இருந்தால் பேசுவோம்.

இணைப்பு :
1. http://www.youtube.com/watch?v=mXPnbSiry5Q
2. http://www.youtube.com/watch?v=D6WVxC2wAx4

எழுத்து இயக்கம் : அய்யப்ப மாதவன்.