சென்னை வந்ததும் போய்ப்பார்த்த முதல் புத்தகத் திருவிழாவை நினைத்துப்பார்க்கிறேன்.நான்கு வருடத்திற்கு முன்பு. அச்சுப்புத்தகங்களின் மீது ஆர்வம் இல்லாதிருந்த காலம். எல்லாப்புத்தகங்களும் இணையத்தில் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அபிரிமிதமாக இருந்தது. காசு கொடுத்து புத்தகம் வாங்குவது முட்டாள்தனம் என நம்பிக்கொண்டிருந்த நாட்கள் அவை. சும்மா சுற்றிப்பார்த்து ஜூஸ் குடித்து திரும்பி வந்த காமெடி நாட்கள் அவை.
அன்றிலிருந்து இன்று வரை எழுத்து/வாசிப்பு நண்பர்கள் வட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது . ஒவ்வொரு வருடத்திலும் தெரிந்த எழுத்தாளர் பெயர்களும் வாசிக்கவேண்டிய படைப்புகள் என அறிவுறுத்தப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நாலு வருட நட்பு வட்டத்திற்கே இன்று ஒரு பை நிறைய முதுகுவலியுடன் சுமந்து வீடு திரும்பினேன். இனி வரப்போகும் வருடங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. சுமைதூக்கிகள் ஆட்டோ லாரி என்று போகலாம். டப்பு விஷயத்தை நினைத்தால் சினிமாவில் நடிக்கப்போனாலோ அல்லது அரசியலில் நுழைந்தாலோ மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.
எக்கள் ஊர் திருவிழாக்களில் இதே விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். 11 மணிக்கு மேல் கூட்டம் குறையத்தொடங்கும். அவரவர் மதிய உணவு குட்டித் தூக்கம் போன்ற அடிப்படை கடமைகளை முடித்துவிட்டு சாவகாசமாக 3 மணிக்கு மேல் கிளம்பி 6 மணி வாக்கில் கோவிலில் கூட்ட்ம் அம்மும். கடவுளுக்கே இந்த கதியென்றால் புத்தகங்களுக்கு இருக்காதா என்ன? இங்கே இவர்கள் 11 மணிக்குதான் ஆரம்பிக்கிறார்கள். நான் இடத்திற்கு போய் சேரும்போதே மணி இரண்டு. லஞ்ச் டைம். பாவம் சீக்கிரமே உணவை முடித்துவிட்டு உள்ளே சுற்றிக்கொண்டிருந்த ஜந்துக்களை பதிப்பக ஆள்கள் பாவமாய் பார்ப்பது போல் தோன்றியது. தொடங்கியதில் இருந்து முதல் முறையாய் சூடு பிடித்திருக்கும் விற்பனையை மகிழ்ச்சியாய்க்கூட பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதைப்புரிந்து கொள்ளும் அறிவெல்லாம் எனக்கேது?
முன்னணி பதிப்பகங்களை விட்டு (எனக்கு) அதிகமாய் தெரியாத பதிப்பகங்கள் பக்கமாய் இன்று சுற்றிக்கொண்டிருந்தேன். ”எப்படி?” “வாழ்வில் நீ” போன்ற புத்தக வகையறாக்கள் அதிகம் தெரிந்த பதிப்பகங்கள் பக்கம் போகவில்லை. ஒரு நாலு புத்தகத்தில் 500 காப்பிகள் + காவி முக்காடில் ஆசிர்வதிக்கும் பிளக்ஸ் ஒன்று + பெரிய சைஸ் எல்.சி.டியில் சொற்பொழிவு கேசட் சகிதம் களைகட்டிய சில பதிப்பகங்களுக்கு பின்னங்கால் பிடறியில் பட ஓடாத குறையில் முகத்தை திருப்பி , அவர்கள் வலிய நம்மை அழைப்பதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காத அளவில் கடந்தேன்.
வம்சி,கீழைக்காற்று,அடையாளம் கவர்ந்தன. கவிதாவில் சா.கந்தசாமியின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பு இரண்டு புத்தகங்களாக கிடைத்தது. அதைவிட முக்கிய விஷயம் கவிதாவில் நின்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து லதா என தோள் தட்டிக்கூப்பிட்டார் அகநாழிகை வாசு. பாட்ஷா படத்தின் ரஜினி போல ஒரு படை சூழ வந்திருந்தார். உடன் உயிரோடை லாவண்யா, யாத்ரா மற்றும் எனக்கு பெயர் மறந்துவிட்ட மற்றும் பலர். (ஒருவேளை நீங்கள் இதைப்படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும் நண்பர்களே, எனக்கு முக/பெயர் நினைவு குறைவு. புத்தகக்காட்சிக்கு வரும்போது வந்த பாதையையே மறந்து, நாலு பேரைக்கேட்டு வந்து சேர்ந்தேன்). வரும் இதழ் அக நாழிகையில் என் படைப்பும் வரும் எனச் சொன்னார். மிக்க மகிழ்ச்சி. அதிக நேரம் நின்று பேச முடியவில்லை, சுற்ற் வேண்டிய ஸ்டால்கள் அதிகம் ( நானும், அக நாழிகை வாசு & கோ படையும் எதிரெதிர் திசையில் சுற்றிக்கொண்டிருந்தோம், நான் கடை எண் 1ல் தொடங்கி ஏறுமுகம், அவர் மேலே தொடங்கி இறங்குமுகம்) , சீக்கிரம் கிளம்பினால்தான் நேரத்திற்கு பேருந்துகிடைத்து வீடு வந்து சேர முடியும் என்பதும் ஒரு காரணம்.
தன்னம்பிக்கை வரவர அதிகமாகிக்கொண்டே போகிறது. எதாவது செய்ய வேண்டும். எதோ நான் மனக்கட்டுப்பாடு உள்ளவன் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் எழுத்தாளர்கள் வெவ்வேறு இடங்களில் பரிந்துரைத்த புத்தகங்களைத் தொகுத்து ஒரு பட்டியல் போட்டு புத்தககாட்சிக்குள் சுற்றினால், பட்டியலில் இல்லாத புத்தகங்களைத்தான் அதிகம் வாங்கினேன். இன்னும் 4 நாள்கள்(வார விடுமுறை நாள்கள்) அதற்குள் பட்டியலை முடிக்க முயற்சிக்க வேண்டும்.
உயிரெழுத்து அரங்கில் வாமுகோமுவின் புதிய நாவல் (என்றுதான் சொன்னார்கள்) “கூப்பிடுவது எமனாக இருக்கலாம்” எடுத்தேன். ( டேக் லைனாக நாவலல்ல கொண்டாட்டம் எனப்போட்டிருந்தார்கள். கண்ணுடையோர் காண்பதற்காகச் சொல்கிறேன்
) உதவிக்கு இருந்த பதிப்பகத்தின் நண்பர் நல்ல நாவல், வாமு கோமுவை இதிலிருந்தே தொடங்கலாம் என்றார். ஏற்கனவே ‘சாந்தாமணி’ நாவலும் ‘பிற்பகம்ல் மரணம்’ படித்திருக்கிறேன் என்றேன். மேலும் கீழும் பார்த்துவிட்டு என்ன செய்கிறீர்கள் என்றார். வேலையைச்சொன்னதும் ‘இல்ல இதையெல்லாம் படிக்கிறீர்களே’ என்றார். வெறுப்பாக வந்தது. பொட்டிதட்டுபவன் இதையெல்லாம் படிக்கக்கூடாது என்கிறாரா? இல்லை முன்வழுக்கை அறிவுஜீவிகளுக்காகத்தான் எங்கள் பதிப்பகம், இளைஞர்கள் போய் ஜெப்ரி ஆர்ச்சரை படியுங்கள் என குத்துகிறாரா எனப் புரியவில்லை. வாமுகோமுவைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். அவர் அழைத்து இன்னும் சில எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறேன் வாருங்கள் என்றார். யார் கண்டது, சுஜாதாவை அறிமுகப்படுத்தலாம் என்ற பயம் தோன்றியதால் நடையைக்கட்டி விட்டேன்
ஆங்காங்கே சிறு சிறு கூட்டம் நின்றபடி பேசி சிரித்துக்கொண்டிருந்தது. பிரபல/பிரபலமில்லாத பதிவர்கள். சில எனக்குத் தெரிந்த முகங்கள் கூட. அவர்களுக்கு என்னைத்தெரியாதது வசதியாக இருந்தது. அறிமுகம் செய்து கொள்ளாமல் மானசீக மன்னிப்புடன் அடுத்த கடைக்கு நகர்ந்துவிட்டேன். நேரம் குறைவு நண்பர்களே. இந்த ஒரு கோடிப்புத்தகங்களுக்குள் சுற்ற எனக்கு 5 விடுமுறை நாட்கள்தான் இருக்கின்றன. ஒரு பதிவர் சந்திப்பில் எல்லோரையும் சந்திக்கிறேன்.
ஞாயிறும் போவதாக உத்தேசம். நேரம் அதிகமாய் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். அதைப்பற்றிய பதிவு, இதைப்போலவே ஞாயிறு நள்ளிரவில்.
Jan 09, 2011 @ 07:31:22
சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அங்கு நடந்த கவியரங்கம் நிகழ்சியில் கவி மார்கண்டேயர் வாலி அவர்களின் அசத்தலான பேச்சின் ஒரு பகுதி இங்கே
http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html
சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு « மனம் போன போக்கில்
Jan 09, 2011 @ 08:29:14