இன்னொரு முறை புத்தகத்திருவிழாவிற்குள் சுற்றக் கிளம்பிவிட்டேன். எக்மோரிலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறினேன். கூட்டம் நிறைந்திருந்தது. பச்சையப்பன் கல்லூரி நிறுத்தம் இறங்கு என நடத்துனர் சொன்னதும் முக்கால்வாசிப்பேர் இறங்கியது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இத்தனை பேர் எனக்கு கூட்டாக இருக்கிறார்கள். இத்தனை கூட்டம் ஒரு புத்தக விழாவிற்கும் வருகிறது. அவர்கள் வாங்கப்போவது சமையலோ சாரு நிவேதிதாவோ. வாசிக்கும் பழக்கம் இருப்பது பெரிய சந்தோஷம்.
நேற்றைக்கே சொல்ல வேண்டும் என நினைத்தேன். காவ்யா பதிப்பகத்தின் பாதி புத்தகங்கள் பழைய புத்தக கடையில் பச்சையப்பன் கல்லூரியை ஒட்டிய சுற்றுச்சுவர்கருகே கிடைக்கிறது. புத்தகத்தை எடுத்துப்பார்த்து அதன் பக்கங்களுக்கேற்ப இருபதோ முப்பதோ அதிக பட்சம் 50க்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். ரமேஷ் பிரேமின் சொல் என்றொரு சொல் அங்குதான் வாங்கினேன். அதே புத்தகம் அரங்கிற்குள் 200+.
ஞாயிற்றுக்கிழமை மூன்றுமணி. கூட்டத்திற்கு கேட்கவும் வேண்டுமா. திருவிழாக்கூட்டம், தி. நகர் கூட்டம். ஒருவருக்கொருவர் இடித்துக்கொள்ளாமல் உள்ளே நுழையவே முடியவில்லை. வாசிப்பு பழக்கம் இல்லை என்பது அபத்தமோ என்று தோன்றுகிறது. வாசிக்கத் தயாராக இருக்கிறார்கள், தங்கள் விருப்பத்திற்கு கிடைத்தால்
கூட்டத்திற்கான அத்தனை அபத்தங்களையும் பார்கக் முடிந்தது. கர்ம சிரத்தையாக பள்ளி வாயிலிலிருந்து அரங்கு வாயில் வரை கொடுக்கும் துண்டு பிரசுரங்களையெல்லாம் சேகரித்துக்கொண்டே வந்து ஒருவர் அரங்கு வாயிலில் வீசிவிட்டு நுழைவுக்கட்டணம் செலுத்தச் சென்றார். நுழையும் போதே லிச்சி ஜூஸ் எங்கு கிடைக்கும் என நணப்ர் ஒருவர் விசாரித்துக்கொண்டிருந்தார்.(எங்கேயோ படித்திருக்க வேண்டும்.) உடுமலை ஸ்டாலில் சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை ஒருவர் விசாரித்தார். அவர்கள் எங்களிடம் இல்லையென்றும் எங்கே கிடைக்குமென்றும் தெரியாதென்றார்கள். ஜெயகாந்தன் நாவல் என்பது வாங்க வந்தவர்களுக்குத் தெரியவில்லை. கவிதாவில் தொகுப்பு கிடைக்கிறது எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். (பாரா ஸ்டைலில்) வாசகர்கள்!
காலச்சுவடு உயிர்மை கிழக்குதான் இன்றைக்கு சுற்றுவதாக முடிவெடுத்திருந்தேன். முட்டாள்தனம். விடுமுறை நாள் கூட்டத்தின் முக்கால்வாசி அங்கேதான் குவிந்திருந்தார்கள். அதிலும் கிழக்கு கூட பரவாயில்லை உதவிக்கு பதிப்பக ஆள்கள் இருந்தார்கள். மற்ற இரண்டிலும் உள்ளே நுழைந்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நின்றோம் தேடினோம் தேர்ந்தெடுத்தோம் என்பதில்லாமல் விடுவிடுவெனப்போய் முன்னரே முடிவு செய்திருந்த சில புத்தகங்களை மட்டும் எடுத்துவிட்டு நடையைக்கட்டிவிட்டேன்.
உயிர்மை வாசலில் செம கூட்டம். நர்சிம் வேறு நின்று கொண்டிருந்ததால் சாரு வந்திருப்பார் என ஆர்வமாக எட்டிப்பார்த்தால் பார்த்திபன். ஏமாற்றம் ஒருபக்கம் எரிச்சல் ஒருபக்கம். மனுஷயபுத்ரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு கிறுக்கல்கள் புத்தகத்தில் கையெழுத்துப்போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தோன்றிய வெறுப்புணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. மனுஷ்யபுத்ரன் புத்தகம் எதாவது வாங்கவேண்டும் என வந்திருந்த நண்பனுக்கு நீரலானது தொகுப்பை வாங்கச்சொல்லி அனுப்பிவிட்டு வெளியில் வந்து தள்ளி நின்றுகொண்டிருந்தேன்.
பிறகு நர்சிமுக்கு ஹாய் போட்டு பேசிக்கொண்டிருந்தேன். கூட இருந்த் நண்பருக்கு ‘கணையாழியின் கடைசிபக்கங்கள்’ பற்றிச் சொல்லும்போது ‘பாருங்கள் மயிர்கூச்செறிகிறது” எனச் சொல்லி கையைக்காட்டிக்கொண்டிருந்தார். உண்மையில் அந்தப்புத்தகத்தைப்பற்றீ பேசும்போது எனக்கும் அதே உணர்வுதான். அதே மயிர்க்கூச்செறிதல்.நான் சொல்லவில்லை. 72-78 வது வருடங்களில் இன்றைய ஜாம்பவான்களைப்பற்றி கணிப்பது சாதாரண விஷயமா, மனுஷ்யபுத்ரன், மணிரத்னம், கமல், கல்யாண்ஜி எல்லோரையும் சிலாகித்திருப்பார் மனுஷன். வாத்தியார்!
தேடிச்சென்ற நகுலன் கவிதைகள் காவ்யாவில் இல்லை. ஜெயமோகன் சிறுகதைகள்/குறு நாவல்கள் தொகுப்பு , நேநோ உயிர்மையில் இல்லை. எதிர்பாராத வகையில் ”நகுலனின் கதைகள்” கிடைத்தது. மெளனி சிறுகதைகளை வேறு இடத்தில் வாங்கிவிட்டு காலச்சுவடில் பார்த்தால் மெளனி படைப்புகள் இரண்டு கட்டுரைகள் மட்டுமே சேர்க்கப்பட்டு அநியாயவிலையில் இருந்தது. எல்லா குறிப்பிடத்தகுந்த நாவல்களும் முதற்பதிப்பு 80-100க்கு கிடைக்க, அதே நாவல்கள் கிளாசிக் வரிசையில் 150-250 வரை வைக்கப்பட்டிருந்தது. அநியாயம்.
விடுமுறை நாளென்பதால் நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள் என பதிவுகளிலிருந்து நம்புகிறேன். யாரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது. எந்த சந்திப்புகளும் இல்லாமல் சிப்பி பொறுக்கும் குழந்தையைப்போல புத்தகங்களை மட்டும் பொறுக்கிக்கொண்டிருந்தேன். நிறைய புத்தக அறிமுகங்களை இந்த வருடம் எழுதலாம் என நம்பிக்கை. இனி அடுத்த சனிதான் செல்லமுடியும் . புத்தக வேட்டை ஓரளவு முடிந்துவிட்டதால் நண்பர்களைச் சந்திக்கலாம் என எண்ணம். பார்க்கலாம்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு « மனம் போன போக்கில்
Jan 10, 2011 @ 03:13:52
Jan 10, 2011 @ 10:17:03
வெங்காயத்தினைப் போல ஒவ்வொரு அரங்கிலும் புத்தகத்தின் விலை மாறு பட்டிருந்தது. ஒரு அரங்கில் 1000 ரூபாய் பகவத் கீதை ரூபாய் 250, இன்னொரு அரங்கில் 900 ரூபாய் பகவத் கீதை 190.
கல்கியின் பொன்னியின் செல்வனை சொல்லவே வேண்டியதில்லை. புத்தக சந்தைக்கு சென்றதிலிருந்து சிந்தனை மாறியிருந்தது. இப்போதும் நிறைய சிந்திக்க வைக்கிறது உங்கள் இடுகை.
நன்றி!.