ஊருக்குள் நுழையும்போது வெயில் ஏறத்தொடங்கியிருந்தது.மிதிவண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்தேன். பின்னால் இருந்த கல்லில் சாய்ந்து கொண்டேன். சட்டையின் மேல் பொத்தானை கழட்டிவிட்டுக்கொண்டேன். கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டேன். கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது போல் தோன்றியது. கண்ணுக்குமுன்னே அந்த பொட்டல் காடு விரிந்திருந்தது. காடெங்கும் சின்னச்சின்ன நடுகற்கள் முளைத்திருந்தன. சின்ன வயதில் ஒரு முறை அப்பாவுடன் இதே ஊருக்கு வந்திருக்கிறேன். குழந்தையாய் இருந்ததில் ஒரு செளகரியம் இருந்தது. அப்பா இதே மாதிரிதான் இதே கல்தூணில் அமர்ந்து தோள்துண்டால் முகத்தை துடைத்துக்கொள்வார். என்னைப்பார்த்து சிரிப்பார். வேட்டி மடிப்பில் எப்போதும் தேன்முட்டாயோ கல்கோனாவோ முடிந்து வைத்திருப்பார். எடுத்து நீட்டுவார். மிதிவண்டியில் அமர்ந்துகொண்டே அதை வாங்க கை நீட்டுவேன். எட்டாது. தன் வாயில் போடப்போவதைப்போல் அபி நயம் காட்டுவார். என்னையும் மீறி அழும் பாவனைக்கு உதடு பிதுங்கிவிடும். சிரித்துவிட்டு என் வாயில் வீசப்போவதுபோல் கை ஓங்குவார். அழுகை மறைந்து சிரித்தபடி ஆ வென வாயைத் திறப்பேன். மறுபடியும் சிரித்து எழுந்து வேட்டியை உதறி விட்டு என்னை நோக்கி வந்து வாயில் ஊட்டுவார். கன்னக் கதுப்புகளுக்குள் ஒதுக்கிக்கொண்டு அவரைப்பார்த்துச் சிரிப்பேன். எச்சில் ஒழுகும். மேல் துண்டை எடுத்து துடைப்பார். சட்டையில்லாத கருப்பு உடம்பில் துண்டு செம்மண் பாதையைப்போல் கிடக்கும்.
அப்பொழுதெல்லாம் இந்தப் பாதை செம்மண் தரையாகத்தான் இருந்தது. இரண்டு பக்கமும் வயல் இருக்கும். நடுவில் எங்காவது வைக்கோலை வைத்துக்கட்டி பொம்மை வைத்திருப்பார்கள். அங்கங்கே ஒரு குச்சியில் கோமணத்துணி போல வெள்ளையாகக் கட்டி வைத்திருப்பார்கள். பொம்மையை அப்பா சோளக்கொல்லை பொம்மை என்று சொல்லுவார். நெல் முளைக்கும் வயலில் சோளக்கொல்லை பொம்மை எதற்கெனத் தெரியாமல் கேட்டபோது அப்பா கதை சொல்லத் தொடங்குவார். அவர் கதையில் சோழ ராஜாக்கள் வருவார்கள். யானை கட்டி போர் அடிக்கும் நிகழ்வுகள் வரும். பாலாறும் தேனாறும் தெருக்களில் ஓடும். சுதந்திரம் கிடைத்தபின் தான் எல்லாம் நாசமாயிற்று என முடிப்பார். சோளக்கொல்லைக்கும் சோழ ராஜாக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பல வருடங்களுக்குத் தெரியாமலே இருந்தது.
வயல் வெளிகளில் நெற்கதிர்கள் என் உயரத்திற்கு நிற்கும். வரப்புகளில் நிற்கும் கொக்குகள் திடீர் திடீரென முடிவெடுத்து எதாவது ஒரு திசை நோக்கி பறக்கும். ஒற்றையாய் இல்லாமல் கூட்டமாய்த்தான் கிளம்பும். கிளம்பி அடுத்த வயலிலேயே இறங்கி எதையாவது தேடிக்கொண்டிருக்கும். நீண்ட நாள்களுக்கு கொக்குகளுக்கு ஒற்றைக்கால்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த்தேன். வயது நம்பிக்கைகளைத்தான் முதலில் தகர்க்கிறது
கோடைக்காலங்களில் இதே பாதை முக்கிற்கு வரும்போது வயல் பெரும்பாலும் அறுக்கப்பட்டிருக்கும். மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். காக்கைகள் மாட்டின் மேல் அமர்வதும் பறப்பதுவுமாய் போக்கு காட்டிக்கொண்டிருக்கும். அனல் காற்று முகத்தில் அடிக்கும்போதெல்லாம் தலையைத்திருப்பி அப்பாவின் கீழ் முதுகுப்பகுதியில் தலையைச் சாய்த்துக்கொள்வேன். வேர்வை வாசம் மூக்கில் ஏறும். என்னவோ அந்த வாசம் பிடித்திருந்தது. அப்பாவின் இடது கை அன்னிச்சையாய் என் தலையைப்பிடித்துக்கொள்ளும். மிதிவண்டியை தொடர்ந்து செலுத்திக்கொண்டிருப்பார்.
அப்பாவின் வேலையை நான் எடுத்துக்கொண்ட போது எனக்கு வயது 22. சின்ன வயதில் பெரிய பாரமென்பார் அப்பா. வேறு வழியில்லை. அப்பாவுக்கு எப்படி கால் போனதென தெரியாது. ஒரு நாள் காலையில் தூக்கத்தில் இருந்தவனை அரக்கப்பரக்க இழுத்துக்கொண்டு அம்மாதான் பெரியாஸ்பத்திரிக்கு பேருந்து ஏறினாள். ஒரு படுக்கையில் ஒரு காலில் முட்டிப்பகுதியில் வெள்ளைத்துணி சுற்றப்பட்டிருக்க படுத்திருந்தார். கேட்டதற்கு லாரி ஏறிவிட்டதென்றார். அம்மாதான் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள். பிறகு கண்ணைத்துடைத்துவிட்டு, சேலையை வரிந்து கட்டிக்கொண்டு இரண்டு மணி நேரம் சண்டை பிடித்தாள். இப்பொழுதெல்லாம் அப்பா சிரிப்பைத் தொலைத்து விட்டிருந்தார். அம்மா நான் இல்லாத நேரங்களிலெல்லாம் அப்பாவுடன் சண்டை பிடிக்கிறாள் எனத் தெரிந்து கொண்டேன். பல முறை ஒளிந்திருந்தும் அம்மா அப்பா சண்டையைப்பார்திருக்கிறேன். அம்மாவின் சண்டையில் ஆர்வமில்லாமல் பக்கத்துப்படுக்கைகளை நோட்டமிட்டேன். கை கால் விரல் என விதவிதமான உறுப்புகளை இழந்து விட்டு படுக்கைகளிலோ தரைப்பாய்களிலோ படுத்திருந்தார்கள். அம்மாவின் சண்டையில் சரோசா என்ற வார்த்தை மட்டும் புதிதாக இருந்தது. அரசல் புரசலாக புரியவும் செய்தது. வேறு வழியில்லை. கிளம்பி வெளியில் வந்தேன். மருத்துவ வளாகத்தில் இருந்த மஞ்சனத்தி மரம் இன்னும் நினைவில் நிற்கிறது. பூத்துக்குலுங்கியபடி. பூக்கள் தரையெங்கும் சிதறிக்கிடந்தன. அங்கேயும் மரத்தின் கீழே ஒரு கல்தூண் கிடந்தது. அமர்ந்து கொண்டிருந்தேன். எவ்வளவு நேரமெனத் தெரியாது. குருவிகள் ஒரு பக்கம் கூட்டமாய் பூக்களைக்கொத்திக் கொண்டிருந்தன. சண்டை சுவாரசியத்தை இழந்தபோதுதான் நான் ஆஸ்பத்திரியிலிருப்பது நினைவுக்கு வந்தது. உள்ளே போனதும் அம்மா கையைப்பிடித்துக்கொண்டு ஒரு பாடு அழுது தீர்த்தாள். உங்கப்பன் மாதிரி இல்லாம நீயாவது என்ன ஏமாத்தாம இருடா என்றாள். அப்பாவின் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு முதல் முறையாக தொழிலுக்கு வரும்போது 22 வயது.
இன்று இங்கு அமர்ந்திருக்கும் நாளுக்கும் முதல்முதலாய் தொழிலுக்கு வந்த நாளுக்கும் இடையே பதினேழு வருடங்கள் ஓடிவிட்டன. இருபத்தேழு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். கால் அழிந்து வீட்டில் படுத்திருந்த அப்பா பிறகு யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார். புதிது புதிதாய் அவருக்கு நோய்கள் உடம்பில் ஏறிக்கொண்டே இருந்தன. மருத்துவம் செய்து மாளவில்லை. கால் போனதிற்கு ஒரு மனிதன் இத்தனை நொடித்துப்போவான் என்பது ஒரு புரியாத புதிர். புதிர்களை அவிழ்க்காமல் புதிய புதிர்களை உருவாக்கியபடியே உருண்டு கொண்டிருந்தது காலம். நான்கு வருடங்களில் அப்பா முழுவதுமாய் படுத்த படுக்கையாகிவிட்டார். பீ மூத்திரம் அள்ளும் பணிவிடைகளை அம்மாதான் செய்துகொண்டிருந்தாள். ஒரு நாள் காலையில் படுக்கையிலேயே கழிவுகளுடன் மரணத்திருந்தார் அப்பா. அம்மா அழக்கூட தோன்றாமல் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மறு நாள் பின்கட்டிலிருந்த கிணற்றில் குதிந்து இறந்து போனாள். என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தவனை வந்தவர்கள் இழுத்து ஏதேதோ சடங்குகளைச் செய்யவைத்தார்கள்.
துஷ்டி கேட்பதற்காய் வந்திருந்த தாய்மாமா அத்தை மற்றும் துர்கா எங்கள் வீட்டிலேயே இரண்டு மாதம் தங்கியிருந்தார்கள். மிகவும் வற்புறுத்தி வீட்டிற்குள்ளேயே சின்னதாய் மேடை அமைத்து துர்க்காவைக் கட்டி வைத்துவிட்டுத்தான் நகர்ந்தார் மாமா. துர்கா குழந்தைகள். தொழில். பையனின் படிப்பு. பெண்ணின் திருமணம். திரும்பிப்பார்த்தால் நான் விட்டு வந்திருந்த ஊர் மறைந்ததிருப்பதைப்போலேதான் என் பால்யத்தை நினைக்கிறேன். இருபத்தேழு வருடங்களில் எங்கிருந்தொ கிளம்பி எங்கேயோ வந்துவிட்டேன். வந்தது நான் என்பது மட்டும் மாறவில்லை. துர்கா பையன் பெண் பெயரைத்தவிர எல்லாக்குணங்களும் மாறிவிட்டது. என் அப்பாவுடன் போனது போல என் மகன் ஒரு நாளும் என்னோடு வேலைக்கு வந்ததில்லை. பள்ளி. கல்லூரி. விடுமுறை நாள்களில் சக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தான். பெண்ணை பாதியில் படிப்பை நிறுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கும்போது ஏக ஆர்ப்பாட்டம். சுமூகமாய் எலலாம் முடியும்போது தலை நரைக்கத்தொடங்கியிருக்கிறது.
கொஞ்சம் வெயில் அசங்கியது போல் தோன்றியது. ஊருக்குள் போகலாம். செம்மண் தார்ரோடாகியிருக்கிறது. வயல்கள் முற்றிலும் அழிந்து சின்னச்சின்ன கற்களை நட்டிருக்கிறார்கள். கார்டன் சிட்டி பெயர் பலகை நிறம் மங்கிக்கிடந்தது. தொழிலின் மேல் வெறுப்பாய் வந்தது. இந்த நிலங்களுக்கு புரோக்கர் வேலை பார்த்திருந்தால் கூட ஓரளவு அமர்வு நிலைக்கு வந்திருக்கலாம். இன்னும் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சமாளித்துக்கொண்டிருக்கிறேன். பையன் படிப்பு சிலோன் பண்ணையார் புண்ணியத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் தோட்டத்திற்கு கணக்குவேலைக்கு வைத்துக்கொள்ள தயார் செய்கிறார்கள் எனப்புரிகிறது. ஆனால் அதைவிட்டால் வேறு வழியும் இல்லை.
எழுந்திருக்கும்போதுதான் அந்த கல்லைப்பார்த்தேன். பாதி துண்டிகப்பட்ட ஒரு தூணைப்போல் இருந்தது. மிகுந்த வேலைப்பாடுகளுடன். நுட்பமாய் செதுக்கப்பட்டிருந்த சிற்ப இடைவெளிகளில் மண்ணேறி இடைவெளியும் புடைப்பும் ஒரே தளத்திற்கு வந்திருந்தது. கோவில் தூணாக இருக்கலாம் எனத் தோன்றியது. எதோ ஒரு சோழன் இந்தத்தூணின் முன் நின்று பயபக்தியாய் வெண்ணை அடிக்கும் காட்சி மனதிற்கு வந்து சிரித்துக்கொண்டேன். கோவில்தூண்களின் ஒரு காலத்தில் புழுதி படிவது சகஜம் என சம்பந்தமில்லாமல் தோன்றியது. பொத்தானைபோட்டு உளி இருந்த பையை சுருட்டி மிதிவண்டியில் மாட்டி விட்டு ஊரை நோக்கி மிதிக்கத்தொடங்கினேன். உங்கள் வீட்டிலும் அம்மி உரல் கொத்தும் வேலையிருந்தால் சொல்லுங்கள். கிரைண்டர்களும் கொத்தித் தருவேன்.
Jan 03, 2012 @ 07:32:15
வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
Jan 05, 2012 @ 10:59:12
Congrats man