சில வருடங்களாக கவிதைகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்குமுன்பு எட்டிப்பார்த்தவை எழுதிப்பார்த்தவை எல்லாம் கவிதை என்ற வகைக்குள்ளேயே வராத, அல்லது கவிதைப்பாடசாலையின் மழலைப்பாடங்களான காதல் கிறுக்கல்கள் மட்டுமே. இந்த குறுகிய வாசிப்பிற்குள்ளேயே கவிதைத்தொகுப்புகள் ஆயாசம் கொள்ளச் செய்பவைகளாக, எரிச்சலூட்டுபவையாக பொழுதுபோக்காக, புன்னகைக்கவைப்பவையாக விதவிதமான பரிமாணங்களைப் பெற்றுவிட்டன. இருந்தாலும் இன்னும் சிப்பி பொறுக்கும் சிறுவனாக புத்தகக் கடைகளுக்குள் புதிய கவிதைத்தொகுப்புகளை ஆர்வத்துடன் எடுத்து படித்துப்பார்க்கிறேன். எங்கிருந்தாவது ஒரு அதிசய விதை ஒரு மரத்தை எனக்குள் விதைத்துப்போகாதா என.

2010ன் ஆரம்ப மாதங்களில் எதோ ஒரு நாளில்தான் நேசமித்ரன் என்ற பெயர் முதல் அறிமுகம் எனக்கு. புரியாத கவிதைகள் பற்றிய  நண்பர்களின் பேச்சில் சட்டென்று மேலெழுந்தது இந்தப்பெயர். அன்றிலிருந்து இன்றுவரை நேசமித்ரன் கிறுக்கு என்னைப்பிடித்தாட்கொண்டிருக்கிறது. அந்த ஆர்வத்தில் 34 வது புத்தகக்காட்சிக்கு நேரே போனது உயிர்மை அரங்கிற்கு. கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் இன்னும் வெளிவரவில்லை என்ற பதிலைச் சுமந்து கொண்டுதான் அந்த நாளில் அரங்கிற்குள் சுற்றினேன். என் முதல் தொகுப்பை அச்சில் பார்ப்பதுபோல், அந்த நாளில் தவறிவிட்டதுபோல் அத்தனை வருத்தம். அடுத்த வார இறுதியில் வெளிவந்துவிட்டது என தெரியும். உயிர்மை அரங்கில் மனுஷ்யபுத்ரனிடம் எனது சுய அறிமுகத்திற்குப்பின் சொன்னேன் ‘ நேசமித்ரனுக்காகத்தான் வந்தேன் ‘ ’ஓ! நேசன் வருவதாய்ச்சொன்னாரா?’ ‘இல்லை. அவருக்கு என்னைத் தெரியாது, அவர் புத்தகத்திற்காக வந்தேன்’ . பதிலாக வந்த மனுஷ்யபுத்ரனின் பார்வை  இன்றும் நினைவிருக்கிறது.

எந்தககவிதையையும் ’புரியவில்லை. அதனால் நிராகரிக்கிறேன்’ எனச் சொல்பவர்கள் மேல் ஒரு சின்ன மனவருத்தம் இன்றும் தோன்றுகிறது. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றுவீட்டீர்கள் என உங்களுக்குச் சொன்னது யார்? எல்லா அனுபவங்களையும் புரிதல் சார்ந்து எப்படி தராசில் வைப்பீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையை நீங்கள் கேட்டுப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் மணித்துளிகள் எடுத்துக்கொள்ளும்போது கவிதைக்கு ஒரு சிறு பங்கு உழைப்பைச் செலவழிக்காமல் புரிந்து கொள்ளலாம் என்ற சோம்பேறித்தன நம்பிக்கையை எதைவைத்து வளர்த்தீர்கள்.

நினைவிலிருக்கும் வரை, இத்தனை சிறிய கவிதைத்தொகுப்பை இத்தனை நாள்கள் படித்தது இந்தத் தொகுப்பிற்கு மட்டும்தான் என நினைக்கிறேன் , நேசமித்ரனின் உலகம் எப்போதும் காட்டு நெல்லிக்காயைப்போல உண்டு தீர்க்க நீண்ட நேரத்தையும், உழைப்பைத் தின்று வாழ்க்கையின் காரத்தைக் கண்ணில் பூசுவதாகத்தான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்தத் தொகுப்பும் அப்படியே.

ஸ்டெராயிடும் ஐபில்லும் அற்று அன்றைய நாள்
இனிதே முடிந்தது கணினித் திரைக்கு இருபுறமும்
இருந்த முகமற்ற கிகோலோவுக்கும் அவளுக்கும்
பிக்சல்கள் மற்றும் டெசிபல்கள் வழி

தொகுப்பிலேயே குறைந்த உழைப்பில் புரியும் கவிதை இதுதான் என நினைக்கிறேன். இதற்கே ஐந்து புதிய வார்த்தைகளையும் அதற்குப்பின்னான செயல்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஐபில், ஸ்டெராய்டு,கிகோலோ,பிக்சல்,டெசிபல், இதில் எதாவது ஒன்று புரியவில்லை என்றால் கவிதை மறுவாசிப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. //முகமற்ற கிகோலோ// வில் முதல் வார்த்தை இல்லாமல் வாசித்தால் ஒரு தளத்திலும், கிகாலோ இல்லாமல் வேறு தளத்திலும் இருக்கிறது.

என் ரசனையில் நேசமித்ரனின் கவியுலகம் ஒரு சிலந்திவலை. சிக்கித் தவிக்கலாம், மேலேறி மிதக்கலாம், ஒளி மின்னுவதை ரசிக்கலாம், அல்லது, ரசனையை மறந்து தள்ளி வைத்துவைத்துவிட்டுக்கூட போகலாம். ஒரு விடுகதை போல சொல்லும் வார்த்தைகளை சொல்லாத வார்த்தைகளுக்கான கைகாட்டியைப்போல் அணுகலாம். சொல்லாத வார்த்தைகள் மட்டுமே கவிதையாய் அடைவதால், விடுகதையை விடுவிக்கும் ஆர்வமும் நேரமும் இருப்பவர்களுக்கான , கவிதையை பொழுதுபோக்கின்றி கவிதையாய் ரசிப்பதாற்கான தேடலுக்கு எளிய கண்டடைதல்.

நேசமித்ரனிடம் வியக்கும் இன்னொரு தடம், ஒற்றைக்கவிதைக்குள் தனித்தனியாய் ஒளிந்திருக்கும் பிற கவிதைகள். உதாரணத்திற்கு இது.

நீரின் கண்

விழும் நிழலில் தன்முகம் பார்க்கும்
நீரின் கண்

பாம்பின் உடல் சித்திரத்தில் பிராம்மி
எழுத்தின் சுழி

துரோகம் நெகிழி
திமிங்கலத்தின் மார்புக்காம்பில்
சுரக்கிறது சாவு கலவாத காதல்

சிறகுதான் ஆனால் கனம் பெங்குவினுடையது

ஆகாசம் கூப்பமுடிவது வண்ணத்துப்பூச்சிக்கு மட்டும்

லெஸ்பியனின் கருமுட்டை தானத்தில்
கற்பு கதீட்டர் வழி

கவிதையின் ஒவ்வொரு பத்தியும் தனித்தனியே வாசித்துப்பாருங்கள். பிறகு சேர்த்து.   அல்லது முதல் மூன்று பத்திகள் மட்டும். அல்லது கடைசி மூன்று.  முதல் பத்தியும் கடைசி பத்தியும். எல்லாவித சாத்தியஙக்ளில் ஒவ்வொரு வித அனுபவம் தரும் கவிதை. இது கவிதை. இன்னும் சொல்லப்போனால், நேசமித்ரன் இதை உத்தேசித்து எழுதினாரா, இதுதான் இதன் அர்த்தமா, இதுதான் உண்மையான பார்வையா, எதுவும் தேவையில்லை. உணமையில்  வாசிப்பவன்தானே கவிதையை உயிருடன் எழுதுகிறான். கடைசி இரு வரியின் முழுவீச்சை அறிய, கதீட்டர் பற்றி கூகுள் செய்து பாருங்கள். பிரமிக்கிறேன் நேசன்.

நெருடிய விஷயங்கள் எனப் பார்த்தால், முதலில் மொழி. மொத்த தொகுப்பிலும் தேடினாலும் ஆங்கில வார்த்தைகள் இல்லாத கவிதைகள் மிகக் குறைவாகவே கிடைக்கும் எனத் தோன்றுகிறது. பிக்சல், கத்தீட்டர், கார்டூன், கிராபிக்ஸ் , ஆங்கிலச்சொற்களின் தமிழ் உச்சரிப்பு நடை கொஞ்சம் தடுமாற்றம் செய்கிறது.  நாகம் பாம்பு சர்ப்பம் அரவம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு டிராகன் கவிதைகளுக்குள் தலையாட்டுவது, கரடுமுரடான காட்சிப்படிமத்துக்கு மட்டுமெனில் வேட்கை கொண்ட வாசகனை தேர்ந்த கவனத்துடன் குழப்பி விலக்குகிறீர்கள் எனக் குற்றம் சாட்டுவேன்.

அடுத்தது பன்முக வரிகள். ‘ நீரின் கண்’ கவிதையைப்போல ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு குறுங்கவிதை தொகுப்பு ஒரு முழுமைச் சித்திரம் என பிரமித்து நின்றாலும் சில கவிதைகளில் குறுங்கவிதைகள் குறுகி முடிந்துவிடுகின்றன. முழுமையென ஒற்றைத் தலைப்பின் கீழ் நிற்பது வெவ்வேறு வண்டிகளின் பாகங்கள் பொருத்திய இருசக்கரவாகனத்தைப்போல தொடர்பற்றுத் தெரிகிறது.

கவிதைத் தொகுப்புகளை வெவ்வேறுவிதமாய்க்கொள்ளலாம். விதை , தளிர், செடி, மரம் , விருட்சம், போன்சாய் மரம், என் ரசனையில் ”கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்”,  புதிய விருட்சங்களைத் தாங்கி நிற்கும் விதை. அழுத்தமான கைகுலுக்கல் நேசமித்ரன்.

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன்
உயிர்மை பதிப்பகம் – ரூ.50