அ.
கவிதைகளை வைத்து அரசியல் செய்வதை விட கவிதைகளுக்குள் அரசியல் எளிதானதாக இருக்கலாம் போலிருக்கிறது. பிரச்சார நெடிகளைக் கடந்து ஒரு சிறு அனுபவத்தை அதன் சாரத்தோடு முண்டு சுற்றி அதற்குள் அரசியலைக் கோர்ப்பதென்பது சாதகப் பட்சியிடம் மிஞ்சும் மழையின் காலம்.

ஆ.
துப்பாக்கி ரவைகளை மூங்கிலுக்குள் இட்டு புல்லாங்குழலென வாசிக்கச் சொல்வதென்பது ஒரு வரலாற்றுத் துயரம். எதோ ஒரு கணத்தில் எல்லோருடைய கைக்கும் மாற்றப்பட்டிருக்கும் மூங்கில்குழல் நக்கீரனுக்கு மட்டும் கவிதையாய்ச் சமைகிறது.

இ.
தன் கருவி மீட்டி இசை கசிந்துருகச்செய்யும் பெண் பெரிய மண்டபத்தில் தன் சுருதி அகழும் நாயனக்காரனாகிறாள். ஹெர்பேரியத்திற்கான தயாரிப்பு குழந்தை வளர்ப்பாகிறது. மூவாயிரத்துத் தொண்ணூறாவது முறையாக வெள்ளரிப்பிஞ்சு விற்கும் சிறுமி சாம் மாமாவுடன் போட்டியிட்டாலும், எலுமிச்சை நிற மெய் நீர் அரசியலின் மீது பெய்கிறது.

ஈ.
நண்பர்கள் சுயத்தை தன் குருதியில் பிறர் படிக்க பொதுவில் வைக்கிறார்கள். பிறர் குருதிகளின் மீது தன் பார்வைகளைக் குவிப்பதே இல்லை. சுயவிமர்சனம் என்றுகூட இதைச் சொல்லலாம். வாசிக்கக்கிடைக்கும் பெரும்பாலான கவிதைகள் கண்ணாடியுடனான உரையாடல்களாயிருந்தன. தன்னைத் தவிரபிறர் நிறங்களை மழுப்பிக்காட்டும் சுயக்கண்ணாடிகள். நக்கீரனுக்கு மூக்குக் கண்ணாடி வாய்த்திருக்கிறது. முன்னால் விரிந்திருக்கும் உலகம் தெரிகிறது. அதே கண்ணாடியின் பிம்பங்கள் வாசிப்பவனுக்கும் அதே சாயலில் கடத்தப்படுகின்றன. ஒருவேளை எங்கள் கண்ணாடிகளில் முகம் பார்க்கும் பகுதியில் ரசம் பூசும் கையாக நக்கீரன் கைகளைப் பற்றிக்கொள்வேன்.


கல்பாலிகைகளை நீருக்குள் மறைத்த சமணமுனி திகம்பரனாய்த் திரும்பி வரும்போது காவலாளிகளின் இருத்தல் குழப்புகிறது. நான் வெட்டிய குளத்திற்கு எவனோ காவலாளியாகி என்னையே துரத்தும் வலி. விடலைகளில் கைகளில் அடைபடும் கல்முலைகளில் கசிந்துருகுகிறது தாய் நிலத்தில் விரட்டப்பட்ட மனிதர்களின் கண்ணீர்.

தமிழ்கவிஞர்களில் போலிச்சமநிலை மீதான சிறுகல் விழுகிறது ஒரு இடத்தில் . எத்தனைச் சம நிலையுடன் எதன் மீது விழுந்தாலும் சிறு நகர்வும் ஒரு முனைக்கு கடத்திவிடுகிறது கவிஞனை (எழுத்தாளன் என்ன இன்னும் கூட்டம் சேர்க்கவா?) கிழக்கு மேற்கு இசங்கள் தோலில் வரிக்குதிரைத் தடங்களை விட்டு சுய அடையளமுமில்லாமல் மாறுவேடமும் இல்லாமல் கோமாளிக்கோலத்தில் கொண்டு நிறுத்திவிடக்கூடும். கொடுமைகளின் உச்சம் சொந்த நிலத்தில் சகதிகளுக்குள் புதைந்து சவப்பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்வது. சொந்த நிலத்தில் விழுந்த நிழல் ஜிப்சியென்றால், இதுவும் அதுவே.

இசைக்கலைஞன் கவிஞனைப்போல நினைவிலிருந்த கானகம் ஒன்றினை மேடையில் மீளூருவாக்கம் செய்கிறான். கூட்டிசைகளை இரைச்சல் என்றும் சொல்லலாம். புத்தகங்களை அதன் நுணுக்கங்களுக்காகப் படிப்பவன் ரசிக்குமளவு ஆதி வேரினை, பியானோ குடுத்த மரத்தினை மரத்திலிருந்த இருவாச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிப்பவன், இசையொத்த கவிதைகளை நுணுக்கங்களுக்காக அன்றி, வரலாற்றுப்புரிதலுடன் படிப்பவன் தன் வெட்டுக்க்காயங்கள் மீதான கவனம் கொண்ட நோயாளியென வாதையினைத் தான் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது இல்லையா?

ஓவியர்கள் வன்முறையாளர்களாகவும் இருக்கிறார்கள். பறக்கும் கிளிகளைவிட கூண்டிலிருக்கும் கிளிகளைத்தான் ஓவியர்களுக்குப் பிடித்திருக்கிறது. வண்ணங்களையும் அதன் நுணுக்கங்களையும் மட்டும் அறியாத சிறுகுழந்தைக்கு மட்டுமே கூண்டு உறுத்துகிறது. கரு மையினால் கூண்டை அழித்துவிட்டு கிளி பறந்து விட்டதாக கற்பனை செய்து கொள்வதுதான் எவ்வளவு எளிது?

படைப்பு குறித்த ஒரு பார்வையினை இன்னொருவருக்குக் கடத்தும்போது அதன் ரகசியங்களை உடைக்காமலிப்பது உத்தமம்தான் இருந்தாலும், ரகசியங்கள் மட்டுமே ஒருவரை படைப்பினை நோக்கி இழுக்க வாய்ப்பிருக்கிறது எனும் பட்சத்தில், ரகசியங்களை விட அதன் நோக்கிய ஈர்ப்பே பிரதானமாக எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன சில நிகழ்வுகளை அதன் பின்னணிகளோடு மொழி அலைகளோடு நக்கீரனின் விளையாட்டை என் பெயர் ஜிப்சியில் பார்க்கலாம். அல்லது பெரிதாய் ஈர்க்கப்பட்ட சில ரகசியங்களை தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்வது குறித்த மனக் கொந்தளிப்பாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.. அல்லது…

சுருள் சுருளாய் விரிகிறது நக்கீரனின் அரசியல் . பென்சிலுக்குள் ஒளிந்திருக்கும் சுருள் அடுக்குகளைப்போல ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு உள் நோக்கி அல்லது வெளி நோக்கி விரிந்து கொண்டே போக முடிகிறது. இந்தக் கவிதைகளில் நக்கீரன் இல்லை. அவரின் தனிமை, அவரின் அடுக்குமாடிக்குடியிருப்பின் தூரத்தில் தனித்த கடலின் சோகம் இல்லை. தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் யுவதியின் கிளர்ச்சியில்லை. சண்டைப்படம் முடிந்து வாகனத்தின் பஞ்சு மெத்தைகளில் முஷ்டி மடக்கிக் குத்திப்பார்க்கும் போலிவீரம், நீ அவனில்லை. நாந்தான் அவன் என்ற செருக்கு இல்லை.

ஒரு கோப்பைத் தேநீருடன் சோபா ஒன்றில் சாய்ந்தமர்ந்து எல்லா நிகழ்வுகளையும் அடுக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிகளில் பார்க்கும் அறிபுனைவுக் கதையின் கடவுளாக அமர்ந்திருக்கிறார் கவிஞர். சில அபத்தக் காட்சிகளின் ஒளித்துண்டை நம் முன்னால் தூக்கிப்போட்டு புன்னகைக்கிறார். அந்தக் காட்சியுடன் ஒன்றலாம், அல்லது அதன் பின்னணிக்குள் சுருள் படிகளுக்குள் இறங்கலாம் அல்லது சுருள் சுருளாக…
ஒள
முன்னுரையில் நக்கீரன் சொல்வது போல கவிஞர்களின் துப்பாக்கி காலியாக இல்லை. நக்கீரன் துப்பாக்கி மொழியால் நிரப்பப்பட்டிருக்கிறது. பொதுமைப்படுத்தப்படவேண்டுமெனில் மீன்களின் நிர்வாணமென்னும் அபத்தத்தைப்போலவே அரசியலற்ற கவிதைகள் என்பதுவும் அபத்தம்தான் என்றாலும் புதையுண்டிருந்த மொகஞ்சதாரோ மனுஷியின் நாவாகவும் இருக்கிறது என் பெயர் ஜிப்சி.

என் பெயர் ஜிப்சி – நக்கீரன்
கொம்பு வெளியீட்டகம் – ரூ.50.

ஆன்லைனில் வாங்க