முன்குறிப்பு (அ) எச்சரிக்கை : மலம் அள்ளும் கனகம் பற்றிய பதிவு. குறைந்தது 5-6 மணி நேரத்திற்கு சாப்பாடு உள்ளிறங்காமல் போகலாம். எனவே சரியான நேரம் பார்த்து படிக்கவும். . கவனம்.

அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..

-மலர்வதியின் முன்னுரையிலிருந்து

சிறுவயதில் எங்கள் கிராமத்தில் எல்லாவீடுகளிலும், பின்புறம் கழிவறைக்கான மறைப்பு இருந்தது. மறைப்பு மட்டும் இருந்து. வீடுகளின் நிதிநிலைக்கேற்ப மறைப்பானது கூரையற்ற செங்கல் சுவர்களாககவோ, ஓலைத்தடுப்புகளாகவோ இருக்கும். உள்ளே கழிவறைக்கான குழி என்று கூட ஒன்றும் இருக்காது. கால் வைக்கத் தோதாக பழைய அடுப்பைப்போல கொஞ்சம் உயரமாக செங்கல் திண்டுகளோ, அல்லது மண்கட்டிகளோ வைக்கப்பட்டிருக்கும். இரண்டுக்கும் நடுவில் பழைய கழிவுகள் காய்ந்து கெட்டித்துக்கிடக்கும். கால் வைப்பதற்கான திண்டுகளில் வைத்து கடமையை முடித்துவிட்டு வரவேண்டியதுதான். இவையும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும். குழந்தைகள் என்றால், தனியாய் கொஞ்ச தூரம் நடக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டும், பத்துவயதுக்கு மேல் பின் பக்கம் போனால், வீட்டில்யாராவது கம்பெடுத்து வாய்க்கால் பக்கம் ஓடு என விரட்டிவிடுவார்கள். கிராமத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வென்று என்று காலர் ஏற்றிக்கொண்டு போய்வரவேண்டியதுதான்.

இந்த கழிவறை அமைப்புகளைச் சுத்தப்படுத்துவதற்கென்று வாரம் ஒரு முறை எங்கள் ஊருக்குள் வரும், பெண்ணைப்பற்றித்தான் நான் சொல்லவந்தது. அவர் பெயர் நினைவிலில்லை என்று பொய் சொல்லவிரும்பவில்லை. அவர் பெயர் தெரியாது. அப்பவும். ஊர் அவரது ஜாதியைச் சொல்லித்தான் அழைத்த நினைவு. ஒரு பேச்சுக்கு தூப்புக்காரி கனகத்தின் பெயரையே இவருக்கு வைத்துக்கொள்வோம். கனகம் வாரம் ஒரு முறை வருவார். கையில் ஒரு ஓலைக்கூடை. கிட்டத்தட்ட சினிமாக்களில் காட்டப்படும் பரிசல்களின் பாதி அளவு அகலம், ஓரளவு ஆழம். முழ சதுரத்தில் இரண்டு தகரங்கள். இரண்டு தகரங்களாலும், காய்ந்த மனிதமலத்தை வழித்து கூடையில் போட்டு கொண்டு போய் ஊர்க்கோடியில் வாய்க்கால் கரை யோரத்தில் கொட்டிவிட்டு வருவார். இதற்கு சம்பளம் என்று எதுவும் யாரும் குடுத்ததாய் நினைவில்லை. சாப்பாடு மட்டும். அதுவும் ஊர்முறைச் சாப்பாடு என்று பெயர். வேளைக்கு ஒருவீட்டுக்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பின்வாசல் பக்கம் வருவார். இவருக்கென்றே வீட்டிற்குள் ஈயச்சட்டிக்குள் முந்தைய நாளின் மீந்த உணவுகள் மொத்தமாய் சேகரிக்கப்பட்டு இருக்கும், வீட்டு பெண்மணி வழித்து இவர் பாத்திரத்தில் விடுவார்.

வீட்டுப்பெண்மணியின் மன நிலையைப்பொறுத்து சில நாள் சூடாகவும் உணவு கிடைக்கலாம். ஆனால் தனித்தனியாக இல்லை. அதே விதமான மொத்தமாக சோறு, குழம்பு, கூட்டு மொத்தமும் கலக்கப்பட்டு.
தூப்புக்காரியின் கனகத்திற்கும் நான் பார்த்த கனகத்திற்குமான வேறுபாடுகள் இங்குதான் தொடங்குகிறது. நாவலின் கனகத்திடம் சாதிவாரி அடக்குமுறைகள் இல்லை. ஊர்ச்சாதிகளின் ஒன்றைச் சேர்ந்தவள். கணவனை இழந்து வேறுவழியில்லாமல் தூப்புக்காரியாகிறாள். வழக்கம்போல ஊர் கனகத்தின் தொழிலைச் சொல்லி விலக்கிவைக்கிறது. கழிவென்பது எல்லாவிதமான மனிதக்கழிவுகளுக்கும் போகிறது. திருமணவீட்டின் எச்சில் இலையிலிருந்து மருத்தவமனையின் கழிவுரத்தம் தோய்ந்த துணி. நடுவில் எதற்கும் இருக்கட்டுமே என கொஞ்சம் கழிவறை பக்கமும் நாவல் போய் வருகிறது. கழிவறைக்கு சுத்தம் செய்வதற்கு போகும் கனகம், இரு காதலர்களின் லீலைகளைப்பார்க்க நேரிடுகிறது (சரி புணர்ச்சியும் ஒரு கழிவு வெளியேற்றம் தான் இல்லையா? ) தனது பெண்ணை நினைத்துக்கொள்கிறார்.

தூப்புக்காரியின் அனுபங்களில் தொடங்கும் கதை, தூப்புக்காரி மகளின் காதல், தோல்வி, மகளும் தூப்புக்காரியாகும் சூழ்நிலை என ஒன்று தொட்டு ஒன்றாக பயணித்து, தூப்புக்காரியின் மகள் ஆரம்பத்தின் தூப்புக்காரி நிலையைத் தொடும் இடத்தில் முடிகிறது.

கவனத்தில் கொள்ளப்படாத தூப்புக்காரிகளின் வாழ்வியலை கவனப்படுத்த முயற்சித்ததற்காக பாராட்டினாலும், நாவல் அந்தக் களத்தை சரியான வரைவியலோடு தொடவில்லை என்றே உணர்கிறேன். மிக எளிதாக ஒரு பெண் பார்வையிலான காதல் கதையாக இதை வெளியேற்றிவிடமுடியும். களம் என்பது தூப்புக்காரி என்பதை நீக்கிவிட்டு எந்த பெண்-வளர்த்த-பெண் இடத்திலும் கதையை மிக எளிதாகப் பொருத்திவிட முடிகிறது. காதலனை மனஓட்டத்தை, காதலியின் மன ஓட்டத்தைப் பேசிய அளவிற்கு தூப்புக்காரியின் மன ஓட்டம் பதிவு செய்யப்படவேயில்லை. தூப்புக்காரிகளின் வாழ்வை நோக்கி குவிந்திருக்கவேண்டிய வாசக கவனம், ஒரு தேய்வழக்குகளாலான ”தமிழ்சினிமாவில் நாயக- நாயகி இணைந்தார்களா என வெள்ளித்திரையில் காண்க” தரத்தில் போய்க்கொண்டிருக்கிறது.தூப்புக்காரியின் துயரமென்பது, மிகச்சில காட்சிகளுடன் கடந்து போய்விடுகிறது.

கவனப்படுத்தப்படாத மனிதர்களை நோக்கிய பார்வையை எழுத்தில் கொண்டுவர விரும்பிய நம்பிக்கைக்காக மட்டும் பாராட்டலாம்.

தூப்புக்காரி – மலர்வதி – அனல் வெளியீடு – ரூ 75