காதல். ஒற்றைச்சொல்லுக்குப் பின்னாக எத்தனை எத்தனை மனங்கள் அலையடித்துக்கொண்டிருக்கின்றன. கவிதையைப்போல என்றைக்கும் சாஸ்வதமான ஒரு சொல்லாக காதல் எத்தனை பெரியதாக விரிந்திருக்கிறது. காதல் என்பது இருவருக்கிடையே நிகழும் தனித்த அற்புத ரசாயன மாற்றமாக இருக்கும் அதே நேரத்தில், எல்லா காதல்களுக்குள்ளும் எப்படியாவது ஒரு பொதுத்தன்மை எப்படி நிகழ்கிறது. ஒற்றைக்காதலைத்தான் ஒருவருக்கொருவர் செய்துகொண்டிருக்கிறோமா. நமக்கான சிறப்பு நிகழ்வென்று எதுவுமே கிடையாதா. கன்னி 2006ல் எழுதப்பட்டிருக்கிறது, இதே வித நிகழ்வுகள், இதே வித பெண்கள், இதே மஞ்சள் சுடிதார், இதே மனப்பிறழ்வு பலருக்கு நிகழ முடியுமா? பெரிய நாடகத்தின் ஒரு பகுதியாகத்தான் எல்லாமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நம் காதலென்பது இந்தப்பிரபஞ்சத்தில் எல்லா மனிதர்களாலும் அவரவர் வெர்ஷனில் காலங்காலமாக வாழ்ந்து வருவதுதானா.. நாளை நம் சொற்களையும் இன்னொருவன் இதே போல்தான் உணரப்போகிறானா.
நாவலில் பிரான்சிஸ் சந்தனப்பாண்டியுடன் இரண்டு பெண்கள் வருகிறார்கள். அமலா, அடுத்தது சாரா. மனப்பிறழ்வுடையவர்களின் சொற்களில் தன் வாழ்வின் எதிர்காலம் கண்டு எப்பொழுதாவது திடுக்கிட்டிருக்கிறீர்களா… கன்னியின் பிய்த்துப்போடப்பட்ட கட்டுமானத்திற்கு நடுவே அந்த அறியா ஒழுங்கு திடீரென எழுந்து முகத்திலறைகிறது. முதலில் பிறழ்வுற்ற பாண்டி. பிறகு பிறழ்வுக்கு காரணமாகும் அமலா. பிறழ்வின் ஆரம்ப கணங்கள், பிறகு சாரா. அமலா பாண்டியைவிட வயதில் பெரியவள். அவனைத் தட்டித் தட்டி செதுக்குபவள். அமலாற்பவம் எனும் மேரியம்மையின் பெயரைக்கொண்டு, ஆண்டவரின் தொண்டு ஊழியத்திற்காக நேர்ந்துவிடப்பட்டவர். கடலையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் குமரியம்மனின் ஆகிருதியை வியப்பவள்.
“ப்யூரிட்டியை மனிதர்கள் வணங்கியே ஆகவேண்டும், அவர்களுக்கு வேறு வழியேயில்லை. குறிப்பாக ஆண்களுக்கு”
சாராவைச் சந்திக்கும்போது முதலில் பாண்டிக்கு தோன்றும் உணர்வு, அவள் அவனைவிட சிறியபெண் என்பதே. அமலா கிராமப் பணிக்கு சென்றபின் பிறழ்வு தொடங்குகிறது, சாரா வருகிறாள். அதே கிராமப்பணிக்கு. பாண்டி அமலாவுக்கு பரிசளித்த மஞ்சள் சுடிதார் அணிந்து கொண்டு. மஞ்சள் நிஜமாகவே காதலின் நிறமாக இருக்கிறதா, அல்லது வாசிக்கும் பைத்தியக்காரர்கள் மஞ்சளை தன் காதலியின் அடையாளமாகப் பார்க்கிறார்களா. இந்தத்தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும், எனது மஞ்சள் மோகம். இது ஒரு பெண்ணிடமிருந்து எனக்குத் தொற்றிக்கொண்டது. பாண்டி, கிட்டத்தட்ட அதே மனநிலையில் மஞ்சளை அணுகுகிறாள். நிலம் மஞ்சள்., வெயில் மஞ்சள். பெண் மஞ்சள்.
வண்ண அறிவியலின்படி மஞ்சள் சிந்தனையின், நம்பிக்கையின், மனப்பிம்பங்களின் நிறம், அதிகபட்ச தூரத்திலிருந்தும் எளிதாக ஈர்ப்பது. தொலைவினால் பிறழும் மன நிலையைப்பற்றி பேசும்பொழுது அனைத்தும் மஞ்சளாக மாறுவது எத்தனை பொருத்தமான திறப்பு இல்லையா. எல்லாக்காதலர்களிடமும் சில பொதுக்குணங்களைப் பார்க்கமுடியும். பாண்டியிடமும். தர்க்கச் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையேயான போராட்டம். இனி எப்போதாவது வரப்போகும் இடைவெளி குறித்த விடாத பயம். அதன் காரணமாக மனதிற்குள்ளேயே உறுவாகும் வெற்றுப்பிம்பங்கள். அதன் மூலம் மெல்ல மெல்ல உருவாகிவரும் இருவருக்கு மட்டுமேயான ஒரு வெளி. அந்த வெளியியில் பிறருக்கு இடம் இல்லை. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிற்றுயிரும் அங்கே ஒரு கதாபாத்திரமாகிறது. உயிறற்ற கடல், மலை, பாறை, வெயில், இரவு எல்லாம் ஒரு பங்கு எடுத்துக்கொள்கிறது. அந்தப்பிறழ்வில் வெளித்தப்படுபவர்களாக சக மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
சொற்கள் முற்றிலும் அழிந்து உள்ளே உள்ளே உள்ளேயென தனக்குள் நுழையும் ஒரு மெளனத்திற்கான தேடல் நிகழ்கிறது பிரிவிற்குப்பின்னர். பாண்டிக்கு நிகழ்வதும் அதுவே. அவன் சொற்கள், அவனுக்கான பிரபஞ்சத்திற்குள் அமிழ்ந்து மெளனத்தைத் தேடுபவை மட்டுமே. சொல்லிலிருந்து மெளனத்திற்கு திரும்பும் வழி எனும் வரி அடிக்கடி கன்னியில் வருகிறது. அந்த மெளனத்தை காதலற்றவர்கள் அறிவதில்லை. அந்த மெளனத்தை அடைய முயற்சிக்கும்போது நம் எல்லா படைப்புகளும், எழுத்துக்களும் அதன் அர்த்தத்தை இழந்துவிடுகின்றன. மெளனம் அல்லது தன்னுடனான உள் நோக்கிய பேச்சு பார்ப்பவர்களுக்கு பிறழ்வுற்றவனின் அர்த்தமற்ற சொற்கள் மட்டுமே. அந்தப்பிறழ்வை அறிய அந்த நொடியில் வாழ்ந்த சிலர் அறிகிறார்கள் மிகத் தெளிவாக.
அமலாவும் சாராவும் இரு பெண்கள் எனத் தோன்றவில்லை. அமலா எனும் நிஜத்தின் நிழலாக, அமலாவை பாண்டி அடையத் தடையாக இருந்த வயதையும் பாண்டியின் கூச்சசுபாவத் தயக்கத்தையும் நீக்கினால் சாராவுடனான வாழ்வு வருகிறது. இருவருமே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அமலா வேற்றூருக்கு கிராமப்பணியாகச் செல்லும் நேரத்தில் சாரா இவ்வூருக்கு வந்துவிடுகிறார். அதுவும் மிகச்சரியாக பிறழ்வின் ஆரம்ப நாட்களைப்பற்றி பேசும் பகுதிக்குப் பிறகு. அமலா ஊரின் தெய்வக்குழந்தையாக இருக்கிறார். சாரா முழுக்க முழுக்க பாண்டியின் தெய்வமாக இருக்கிறார். இறந்து போன அத்தையின் சாயலில், அத்தையின் மகளான கற்பனையாக.
நாவலை முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும்போது கன்னி எனும் பெயர் வேறு தளத்திற்கு நினைவுகளைக் கொண்டு செல்கிறது. இறந்து போன அத்தை – குமரி – குமரியம்மன் – கன்னித்தாய் மேரி – சாரா – அமலாற்பவம் – கன்னித்தாய் – தேவகுமாரன் பாண்டி. நாவல் பெருங்காலம் கனவுலகத்தில் பிறழ்வு மொழியில் நிகழ்கிறது. எல்லாமே கனவாகவும், அதே நேரம் எல்லாமே துல்லியமாகவும் . மனப்பிறழ்வுடனும், சொற்களில், சாரா-பாண்டி அல்லது சாரா அமலாவுக்கிடையேயான உறவைச் சுட்டுபவையாகவும். கந்தர்வப்பெண்ணின் கால்பட்டு காலம் காலமாக மண்ணிற்குள் புதைந்தபடி உலகின் இரு கண்ணிகளுக்குள் அலைந்து கொண்டிருக்கும் கிளிஞ்சல், பிரான்சிஸ் சந்தனபாண்டி எனும் காதலானகவோ, நீங்களாகவோ, ஏன் நானாகக் கூட இருக்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்