துரந்தரா,

உன் அன்பு உன்னைக் காலங்களிலிருந்து துண்டித்து,
தனித்த வான்வெளியில் அலையச் செய்யும்
உன் காலங்கள்
உன்னுடையவைதானா என சிந்தித்தபிறகாக
இந்தப்
பாதையின் வழியாக
செல்வாயாக

தேவி,
என் காலங்கள் அன்பின் பாற்பட்டவை.
இந்த அழிவின் பொருட்டே
என் பாதங்களை வைக்கிறேன்

துரந்தரா,
நீ கொலைகளின் புத்திரனாக
இருக்க விரும்புகிறாயா
ஆம் தேவி,
உன்னைக் கொல்லுமளவு கோவமும்
உனக்காக சாகுமளவு அன்பும்தான்
என்னுள்
ஓயாத சண்டையிலிருக்கிறது.

O

இன்னும் அந்த கூழாங்கற்கள்
காற்றில்தான்
நிற்கின்றன

அவள் அதை ஒருவேளை
பிடிக்கக்கூடும்
அவன் அதை ஒருவேளை
வெறுப்பில்
தட்டிவிடக்கூடும்

காற்றில் நிற்கும் கூழாங்கற்களில்
நிற்கிறது
காலம்
சில ஆண்டுகளுக்கு முந்தைய நாளொன்றில்.

O

ஆடல்வல்லோன்
தன் சடைவிரித்து நிற்கிறான்
அவளைக் கையில் ஏந்தியபடி

அவள் அவள் என்கிறான் அவன்
அது அது என்கிறது காலம்

கால்மாற்றும் பொழுதில்
குண்டலம் தவறி வீழ்கிறது

அவன் அதை எடுக்கப்போவதில்லை.

O
யாரோ கடிகாரங்களை
திருப்பி வைத்துவிட்டார்கள்
யாரோ பேட்டரிகளை திருப்பிப்போட்டுவிட்டார்கள்
யாரோ
காலத்தை முதலிலிருந்து மீண்டும் வாழ்கிறார்கள்
தூக்கிப்போட்ட பொம்மையை
திரும்ப எடுத்துச்செல்லும்
குழந்தையிடம்
பொம்மைக்கு எந்த கோபமும் இல்லை

யாரோ காலங்களை தூக்கிப்போட்டுவிட்டார்கள்
யாரோ கடிகாரங்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்

O

வீழ்கிறவனின் கைகள் காற்றில் துழாவுகிறது
பற்றிக்கொள்ளும்
ஒரு விழுதுக்காக
விரிந்து காக்கும் ஒரு துணிக்குடைக்காக
ஏந்திக்கொள்ளும்
கரங்களுக்காக

வீழ்ந்தவனின் கைகள்
தரையில் துழாவுகிறது
நொறுங்கிய எலும்புகளை சேர்த்துக்கட்டும்
ஒரு கயிறுக்காக
உதிராமல் எடுத்துச் செல்லும்
ஒரு படுக்கைக்காக
ஊன்றி எழத்தேவையான
ஒரு கோலுக்காக
எழுந்து நடக்கும்போதுதான்
பொழியத்துவங்குகிறது
குருதியைக் கழுவும் மழை

ஆனாலும் இது
அவையல்ல.