இந்த இரவில்
உன் கால்பெருவிரல்களுக்கு கட்டப்பட்டிருந்த
கயிறு நினைவுக்கு வருகிறது

அது அத்தனை
வெளுப்பு

புதிய கோடித்துணியிலிருந்து
திரித்திருந்தார்கள்

அதே போன்ற ஒரு
வெள்ளைத்துணியில்

என்றோ ஒரு நாள் தூளியில்
ஆடியிருக்கிறேன்

புகைப்படம் எடுத்திருக்கலாம் நீ

O

இத்தனை ஆண்டுகள் கழித்து

உன்னை நீ என்று
சுட்டியதன் அபத்தங்கள் பற்றி

திடீரென யாரோ
நினைவூட்டுகிறார்கள்

ஆனாலும் அதன் கதகதப்பு
இன்னும்
கையில் இருக்கிறது.

சொற்களின் சூடு
உன் கைச் சூடு

நான் பற்ற வைக்கவேண்டியிருந்த
இன்னொரு கற்பூரத்தின் சூடு.

O

அங்கே ஆழத்திற்கு செல்வதற்கான
வழிகள்
இருக்கின்றன

அங்கே ஒரு பழைய தையல்மிஷின்
இடையறாது ஓடிக்கொண்டிருக்கிறது

அங்கே சொற்கள்
மெளனத்திற்கு திரும்பும் பாதைக்கு
காத்திருக்கின்றன

அங்கே தலைகோதும் விரல்கள்
இருக்கின்றன

அங்கே கிழித்தெறியப்பட்ட
ஒரு உயில் இருக்கிறது

அங்கேதான்.