துடியன் பெரும்பாலையின் நினைவுகளிலிருந்து வெளியேறி மழைப்பசுங்காட்டின் முதல் நிழலுக்குள் காலடி வைத்தபோது மழை வெளுத்து நிழல் எழுந்திருந்தது. இருள்காட்டின் மழைப்பொழுதுகள் மேலும் இருளானவை. அவற்றினை மீறி ஒரு முறை எரி உள் நுழையும்போது தனி ஒளி கொண்டு சுடர் விடுகிறது காடு. நனைந்த அகல் நுனி தீபற்றி இருள் விரட்டுவது போல ஆதவன் முகம் பட்டு இலைகளைத் திருப்பி வெளியே பார்க்கிறது. ஆனாலும் ஆழத்தின் இருள் அப்படியே சமைந்திருக்கிறது. வெளியிருந்து பார்ப்பவர்களுக்கான ஒளியையும் அகல் பாதத்தின் இருளையும் அப்படியே கொண்டு நதி பொருள் மரம்விட்டு எரிகிறது காட்டின் அகல். பெருமரத்தின் சிற்றிலைகள் தலைவணங்கி ஒளியை சிறு கொடிகளுக்கும் கொடிகள் தாள்பணிந்து சிறுகாளான்களுக்கும் ஒளியினைப் பகிர்ந்திருந்தன. மென்பனி பயணத்திற்கு முந்தைய இறுதி வணக்கங்களைத் தன் சருகுகளில் வழிந்து அளித்திருந்தது.
மொத்த காடும் சோம்பல் முறிப்பதைப்போல வளைந்து ஒளிக்கு வழிவிட்டு நிலம் பார்த்து சிரித்திருந்தது. துடியன் காட்டின் மீது பாடப்பட்ட பழம்பாடல்களின் சொற்களை ஒரு முறை மீட்டெடுத்தான். சொல்லப்பட்ட மரங்களின் பெயர்களை. அவற்றின் உன்மத்தம் கொண்ட பாடல்களின் மீது உடல் அதிர நரம்பெரிய ஆடிய கணங்களை. மலர்களின் வகைகளை. அவற்றின் கூர் இலைகள் மீதான கனவுகளை. முதல்முறை காடுபார்ப்பவன் கண்ணற்றவர்கள் கண் அடைவதன் கணமொத்திருந்ததை உணர்ந்து சிலிர்த்தான். வறண்ட நாவும் காய்ந்த உடலும் வெடித்த பாதங்களும் வெறிகொண்டு சாட்டின. இதோ கையருகே மரம். இதோ கையருகே மலர். இதோ கையறுகே நதி. கானல்களற்ற பெரும்பாதை எதிரே மூடி ஒளித்துவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அவற்றை அடைவாயாக சிதனே. அவற்றை அள்ளிப்பருகுவாயாக. சொரிந்து சூடுவாயாக என அகம் குரலிட்டது. சலித்த கால்களை வெறியூட்டி கண்மூடி கொஞ்சம் மூச்சிழுத்து காட்டின் உள் நுழைந்தான்.
புது ஈரத்தில் மட்கத் தயாராகும் நிலம் களிமண் வாசனையை காட்டிற்கு பூசியிருந்தது.
மென்பசுமையின் பனித்துளிகளில் சூரியன் சுடர் விட்டது. வெளிச்சத்தின் குரல் இருளின் பாதைகளுக்குள் சின்ன காலடிகள் வைத்து நடந்துகொண்டிருந்தது. மழை கழுவிய மரங்கள் தலைகளைச் சிலுப்பி மிஞ்சிய மழையை மட்கும் வேர்களுக்கு பரிசளித்தது. சிறுதாவரங்களின் மழைவெடித்த வேர்கள் புடைத்து மண்கீறி மேலேறி சூரியன் காண சித்தம்கொண்டு மேலேறின. விதைகள் நிலம் நோக்க ஆளத்திலிருந்து மண்புழுக்கள் கீறி எடுத்துவரக்கூடும். காலடிகளில் கசங்கி ஓசையெழுப்பாமல் மட்கிய இலைகள் நிலத்தில் புதைந்தன. சிறுபறவைகள் மண்டிய இலைகளுடன் சிறகடித்து வழிசமைத்தன. முட்டைகள் உடைத்து வெளியேறும் குஞ்சினைப்போல பறவைகள் காட்டின் இருள் உடைத்து சூரியனுக்கு ஏறி வெம்மை பட்டு மீண்டும் குளிர் இறைஞ்சி கூடுகளுக்குத் திரும்பி தன் குஞ்சுகளை அடைந்து கொண்டன. புதர்களின் கொடிகளின் சிறுவேர்களின் பெருந்தண்டங்களில் நிறம்மாறி குரல் மட்டும் வெளியிட்ட உயிரிகள் சிலிர்த்து குரல்வற்றி மீண்டும் பேரிசையின் தன் பாடல்களை தேடி அடைந்தன.
துடியன் சிறுகூர் கிளை கொண்டு பாத வெடிப்பு நிரடி அனல் நீக்கி முன்சென்றான் . அனல் காய்ந்த அரையாடை தொடைகளை அறுத்து சிவக்கச் செய்திருந்தது. மழைக்காலத்தின் முதற்பனி தொடுகையில் சிவந்த நரம்புகள் குளிர்ந்து அதிர்ந்து சுருங்கி வலி கொண்டன. தொடைச் சிவப்பின்மீது கைக்கெட்டிய இலைகளைக் கொய்து பிசைந்து பூசினான். காடு தன் மருந்துகளை தானே வளைத்து நீட்டியதைப்போல் உணர்ந்தான். எரிந்த தோல் மெல்ல குளிர்ந்து அடங்கியது. தலையெட்டும் கிளைகளில் நா நீட்டி இலை அனுப்பும் மழை தரையடையும் முன்னதாக கொஞ்சம் நாபி நனைத்தான். குளிர்ந்த நாபி முதல்முறை குரல் எழுப்பி காட்டின் நடனத்தில் தன்னை இணைக்க இறைஞ்சியது. நீரறியாத திரிசைடைகளின் மீது சொரிந்து மஞ்சள் மலர்கள் குளிர்வித்தன. குளிர்வித்த மரத்திற்கு சிறுமாரோடம் என பெயரிட்டு அழைத்தான்.அன்னையிழந்த குழந்தைக்கு மார்பினைப் புகுத்தி பசியாற்றும் கன்னித்தாயின் சிறுமார்புகள் நினைவில் எழுந்தன. சூடான அமுதுபோல் அந்தக் குளிர் உச்சம் நனைத்தது. . பெருங்காட்டின் ஒவ்வொரு காலடியிலும் சொல்லில் மட்டும் அறிந்த மரங்களைக் கண்டான். அவற்றின் வண்ணங்களையும். மர அசைவுகளுக்குள் கூட்டமாய் ஆடும் வெறியாட்டின் ஒத்திசைவு ஒளிந்திருந்தைக் கண்டு மனம் நிறைந்தான். உரசும் கிளைகள் ஒன்றையொன்று உடைக்காமல் தலையசைத்து காற்றிற்கு வழிவிட்டதைப்போலிருந்தது.
வண்ணங்களுக்குப் பழகாத கண்களைச் சுருங்கி அசைவுகளையும் மலர்களையும் இலையடையளாங்களையும் கொண்டு பெயர்களைச் சூட்டியபடி முன் நடந்தான். ஏற்கனவே இடப்பட்ட பெயர்கள் காடே தன் நாவில் எழுதிப் பெற்றுக்கொள்வதாகத் தோன்றியது. அனல் நிறைந்து மழை பூசிய கண்கள் சிவந்து எரிந்தன. விழி சுருக்கி மேலும் மேலும் என மரங்களின் பெயர்களை வாய்விட்டுச் சொல்லி செவிவிட்டுக் கேட்டான். உடல் மொத்தமும் மழையாகிப் பொழிந்தவன் போல குளிர்ந்து புது தணலால் எரிந்து அலைந்தபடி இருந்தான். விழைவின் வழியாக வெளியேறும் உயிர்வளி வாய்திறந்து பெருமூச்சுகளை எழச் செய்தது . தன் கரங்களால் தரையறிந்த துடியன் அதன் பசையொட்டி வெயிலில் காட்ட விரும்பினான் . ஒவ்வொரு மரத்தின் பட்டையும் உரித்துச் சுவைத்தான் . ஒவ்வொரு சுவையின் வழியாக தன் குருதியின் வெம்மையைத் தணித்து குளிரோட்டத்தை தனக்குள் எழுப்ப விழைந்தான் . விழிகாணும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நிறமும் கண்க000ளைக் குழைந்து மயக்கு எழுப்பியது . சிறுமீனை கடல் நோக்கி இழுத்துச் செல்லும் நதியின் வேகத்தொடு காடு இழுப்பதை உணர்ந்தான். மெளனம் காய்ந்த நாவினை நீட்டி மரத்திலிருந்து சொட்டும் பசும் இலை நீரை மீண்டும் சுவைத்தான். ஒவ்வொரு மரத்திற்கும் மழை ஒவ்வொரு சுவையை அளித்திருந்தது. மென் கசப்பு. குடல் பிரட்டும் துவர்ப்பு அல்லது நாசியில் வாசம் நிறையும் இனிப்பு.
அனலறுத்த பாதங்கள் மட்கிய இலைகளின் சகதியை அறியும்போது தன் ஒவ்வொரு செல்லிலும் அந்த ஈரத்தைச் சுவைத்துவிரிந்தன . சகதிகள் நிறைக்கும் பாதவெடிப்புகள் தன் முழுவடிவை முதன்முறை அடைந்தன . பனிசொட்டும் மலர்களைச் சூடிய சிகை காய்ந்த மயிர்களைக் களைந்து புதுமயிர்களை முழுதாய் முளைக்க ஏறி ஊறல்கொண்டன . துடியன் வறட்டுக் கரங்களை சிகைகளை விரித்து மழையாட்டினான் . முதல்முறை ஈரம்பட்ட சிகைப்பூச்சிகள் தன் பாதைகளின் மழையை அறிந்து மலர் மிதந்து சருகுகளுக்கு இறங்கின . நீண்ட நகங்களை துடியன் மரப்பட்டைகளை உரிக்கும் இடைவெளிகளில் உடைத்துச் சீர்செய்தான் . ஈரம்படிந்த காலடிப்பாறைகளின் கையுரசி நகங்களை ஒழுங்குபடுத்தினான் . பெருஞ்சிகை அளிக்கும் முதற்கர்வத்தை அனல் காய்ந்து இடம்மறந்த கிளைமயிர்களை மீண்டும் ஒழுங்குபடுத்தினான் . முதலீரம் தொட்ட தோற்செதில்கள் உதிர்ந்து விடைபெற்றன . ஒவ்வொரு மலரும் கசக்கி துடியன் உடல்பூசிக்கொண்டான் . அரையாடையை கிழித்து உறிந்து மறுஆடை புனைந்து அரையில் கட்டினான் . மழையீரத்தின் கரங்கள் பட்ட தொடை இடுக்குகள் சிவந்து கன்றி குளிர்ந்தன . உடல்கூசிச் சிரித்தான் துடியன் . கடைசியாய் சிரித்த பழங்காலம் நினைவுக்கு வந்தது.
புன்னகைகளை எண்ணிக்கொள்ளும்போதே ஆடல் உள்ளே எழுந்தது. கானல் நீருக்குப் பின் பாலைச்சுனைகளில் கால் நனைத்து ஆடிய நினைவுகள் பாதங்களை நிலையழியச் செய்தது. பேராடல்களில் விரல்கோதி மணல் பறக்க எழும் உன்மத்தம் உடல் நடுங்கச் செய்தது. கைகளை வீசி தொலைவின் சிறு இலைகளைப் பிய்த்தெறிந்தான். வெறிகொண்டு கால்களை வீசி மட்கிய இலைகளைச் சாட, காணாத திசைகளில் உடல்வீச தடுக்கும் அனிச்சை அச்சம் கால்களைக் கூசச் செய்ததது. பாலை மணல் நுழையும் காற்றினால் திறந்திருப்பது. ஆடல்களை வரவேற்பது. பசி மயக்கும் நாபி வறட்சியும் கொண்டும் உடலை அச்சமுற வீசி ஆடச் செய்வது. காடு மொத்தமாய் தன்னளவில் மூடியிருப்பவது. பாலையின் திறப்பு கொடுக்கும் தைரியம், மூடிய காடுகளில் அச்சமென கவிந்து இருள் கொள்ளச் செய்கிறது. . சொல்லற்று உடலற்று எழும் ஆடல் காற்றின் திசையை மூச்சின் வழியில் அறிந்து இசைவு கொள்ளும் ஆடல். மூச்சிரைக்க நா துடிக்க நரம்புகள் தெறிக்க உயிர்வளிதனை உன்மத்தம் கொள்ளச் செய்யும் ஆடல். ஆனாலும் பாலைச் சுனைகள் கால் படும் உயிர்கள் அற்றவை. ஆனால் இந்த மட்கிய இலைகளுக்குக் கீழே நிலப்புழுக்களின் பயணம் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடும் என்ற அச்சமே நிலையழிந்து நடை கெடுத்தது.
காடு தனக்குள் சுருங்கிக்கிடந்ததது . செடியில் எழும் காடு மரமாகக் கவிந்து சருகாக அழுகி மண்ணாகச் சமைந்து காடெழுப்பியிருந்தது . நிலமறியா பாதங்களாக மட்கிய சருகுகளுக்குள்ளாக மழை ஈரத்தின் முழு உயிராக தான் அறிந்த முதற்காட்டை துடியன் முழுதுமாய் விழுங்கிட விரும்பினான் . ஒவ்வொரு இலையும் தனக்காக எழுந்தாக எண்ணி அரைத்து பூசிக்கொண்டான் . ஒவ்வொரு மலரும் தனக்காக மலர்ந்தாக எண்ணி சிகைசூடினான் . ஒவ்வொரு கனியும்தனக்காய் கனிந்ததாய் எண்ணி உடைத்துச் சுவைத்தான் . காடென்பது மனிதர்களை முழுதாய் விழுங்கிவிடும் அமானுஷ்ய பெரு மிருகம் . மிருகங்களை ஒளிக்கும் காடு , மனிதர்களுக்கு முன்பாக தன் பல்லாயிரம் கரங்கள் விரித்து எழுந்து நிற்கிறது . ரீங்காரங்களை நிறைக்கும் காடு செவிப்புலனை மயக்குகிறது . மலர்களும் கனிகளும் பின்னெடுங்காலத்துச் சருகுகளும் குழைந்து எழும் மட்கிய வாசனை நாசியை மயக்குகிறது . மழையின் கம்பிகளின் ஊடாக இலை நிழல்களால் எழும் இருட்டு கண்ணை மயக்குகிறது . தீராமழைச்சுவையும் அழியாப்பெருந்தாகமும் நாவினை மயக்குகிறது . பலத்தின் மாயையிலிருந்து உயர்வின் மாயையிலிருந்து இறுக்கத்தின் மாயையிலிருந்து உடலைப் பெருமரங்கள் மயக்குகிறது . துடியன் உளமயக்குகளை அது நிகழும் கணங்களை அதற்கான காலடிகளை எண்ணிக்கையினால் அளந்தபடி காடேகினான் .
காட்டின் இருளுக்கு கண்பழகும் காலம்வரை சித்தனின் புலன்களை காடே நடத்தியது . பிறட்டல் வாசனை எழும் மனமயக்கி வனங்களிலிருந்து காடே அவனை விலக்கியது . பறித்துச் சுவைத்த சிறு இலைகளில் விடங்கள் அவனை அடையவேயில்லை. பெருமிருகங்கள் தொலைவிலிருந்தபடி பேரொலியெழுப்பி பின் தன் பாதை நடந்தன. .காந்தல்சுவை கனிகளின் தோல் கருக்கி விலக்கியது . முறிகிளைகள் பாதைகளைத் தீர்மானித்தன . விலக்கா இருள் மட்டும் பாதங்களை இடறி சருகுகளுடன் அவனை இறுக்கியது . மோதும் மரத்தண்டுகள் பட்டைகிழித்து உடலுரசின . விழுந்தும் எழுந்தும் உடைந்தும் கீறியும் குளிர்ந்தும் எரிந்தும் பிரிந்தும் நிறைந்தும் துடியன் முதற்பாதைகளை வெடிப்பின் பாதங்களால் அறிந்தான் . பெரு அனலுக்குப் பழகிய உடல் சிறு ஈரத்திற்கும் , கொடுங்காற்றின் காதுகள் ரீங்காரத்திற்குள்ளும் சுடுமணல் நிறைந்த நாசிகள் மட்கிய மலர் வாசனைக்கும் பழகின . பேரமைதியென கவிந்திருந்த காட்டினை காதுபழகியதும் இடையற்ற இரைச்சல் இருப்பதை உணர்ந்தன. பிறகு இரைச்சல் தங்களுக்குள் பிரிந்து இலையசைவென மர முறிவென பறவைக்குரலென பூச்சி அசைவென அடையாளம் அறிவித்தன. ஊறாக்கழியொன்றை உடைத்து நிறுத்தி நிற்க முயற்சித்தான் . கழிஉடைந்து மண் எடுத்துக்கொண்டது . உடல் பூசிய இலைச்சாறுகள் பனி நனைந்து வாசம் உண்டாக்கின.
நக்கிச்சுவைக்கும் கடித்து விழுங்கும் உடைத்துத் தின்னும் கனிகள் அவற்றுக்குள் பிரிந்து காடெங்கும் விரிந்திருந்தன. நீண்ட உணவற்ற பாதைகளின் நினைவுகள் அவனைத் தொடர்ந்து எல்லாவற்றையும் சுவைக்க வைத்தது. பறித்துக் கட்டி பயணத்திற்குச் சேமிக்க காடு அவன் மனதினை அனுமதிக்கவில்லை. கண்ணில் படும் தொலைவுகளில் வெவ்வேறு நிறங்களில் பழுத்து வெடித்த உணவுகள் கிளை விரித்து அழைத்தபடி இருந்தன.
கால்கள் தன் பாதையை தானே அறிந்தன . உள்ளார்ந்து ஓடும் அனலின் காற்று உடலை வெம்மை கொள்ளச் செய்தது . ஒவ்வொரு தப்படியிலும் அனல்வெடிப்பின் நீர்கோர்த்து தோல்சுருங்கி பாதங்களின் முழுமையை நிறைக்க முயன்றது . மலர்கள் தொடர்ந்து உதிர்க்கும் மரம் ஒவ்வொரு இலையையும் அசைத்து விட்டிருந்த மழையின் இறுதித் துளிகளை சித்தனின் மீது கோர்த்தது . காய்ந்து பிரிந்த சடையின் நீர்க்கோர்ப்புகளின் ஊடாக மயிரிழைகள் பிரிந்தன . விரல்தொட்டுக்கோதி பிரிகற்றைகளை நீவிச்சேர்த்தான். அனல்வெந்த விரல்கள் நீரறியும்போது தெறித்துக் கோர்த்தன. உடல்வெம்மை புறவெம்மைக்குப் பழகாமல் தன் மயிர்க்கால்களைச் சிலிர்த்தும் தளர்த்தியும் புது நடனம் புரிந்தது. உள்ளார்ந்த மனஒலியின் வெடிப்பு நீர்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் புடைத்துக்கிளம்பியது. அதிரா நடையின் வழி துடியன் தன் ஒவ்வொரு மரத்தையும் கடந்து சென்றான்.
மணல் மஞ்சளுக்கும் மலர் மஞ்சளுக்குமான இடைவெளிகளை கண்கள் கூசி அசங்கி பின் அறிந்து முன்சென்றான். பழுத்த வேர்கொடிகளை பிய்த்து எறிந்தபடி. சிறு கரடுகள் துள்ளித் தாவியபடி. வளைந்த மரங்களில் கால் தொற்றி ஏறி மறுபுறம் குதித்தபடி. மட்கிய இலைவாசங்களை முழுக்க இழுத்து பின் வெளிமூச்சினை விட்டான். வலுத்த பெருமரங்களை ஓங்கி அறைந்து கிளைகளைக் குலுங்கச் செய்தான். ஆடும் விழுதுகளில் தொற்றி ஆடி கொஞ்சம் அறுத்து இடைசுற்றிக் கட்டிக்கொண்டான். அடுத்த விழுதுகள் கைக்கெட்டும்போது தூரத்துச் சிறுசெடிகளை குறித்து எறிந்துச் சாய்த்தான்.
அனல் கொப்புளங்கள் உடைந்து நீர்வடிந்தது. பனித்துளிகளால் புண் துடைத்த குருதி ஒவ்வொரு மயிர்காலின் வழியாகவும் அழுக்கை வெளியேற்றிவிடத் தூண்டியது. தன்புண்களை தானே நக்கித்தீர்க்கும் பூனையின் வெறியுடன் துடியன் தன் உடற்பாகங்களை நீவி நீரை வெளியேற்றினான். வெளியேற்றும் ஒவ்வொரு துளி அழுக்கும் இன்னும் இன்னும் என பனி குடித்தது. பாலையின் உணவாக விரல் நகங்களைத் தின்று நடந்த நினைவு அதிர உரசி அழுக்கு நீக்கும்போது சித்தனின் கண்களின் எழுந்தது. இருள் பழகும்போது அறியும் ஒவ்வொரு உருவமும் முதலில் பேயாக எழுந்து பின் மலராக மலர்ந்து சிரித்தது. கொடுமஞ்சளின் அனலிலிருந்து கண்களின் வெம்மையை சிவப்பும் மஞ்சளும் வெள்ளையுமான மலர்கள் தனக்காக பெற்றுக்கொண்டன. பதிலியாகக் கிடைத்த குளுமையை கண்கள் உள்ளத்தின் துளிகளுக்கு குருதியோட்டத்தை எழச் செய்தது.
கனிந்துதிர்ந்த நாவல்மரங்களின் கரையை நடக்கும்போது வாயில் துவர்ப்புச் சுவை எழுந்தது. உமிழ் நீர் திரட்டி காறினான். அவிந்த கருவண்டுகளை ஒத்த நாவல்பழங்களை உடலில் சிறிது தேய்த்து நாவிலிட்டான். உப்பும் துவர்ப்புமான சுவை வேர்வை மணத்துடன் நாசியிலிருந்தும் எழுந்தது. அலர்ந்து காய்ந்த அடிவயிற்றின் அமிலஎரி அடங்கும் வரை கனிந்த பழங்களையும், பின் சுவைக்கான செங்காய்களையும் பின் பச்சை மணத்திற்கான பசுங்காய்களையும் கடித்துச் சுவைத்து உமிழ்ந்தபடியே நாவல் மரங்களின் கரையைக் கடந்தான்.
கொடிகளுக்குள் ஒளிந்து ரீங்காரமிடும் சிறு பூச்சிகளைப்போல, சிறு நதிகள் ஒளிந்து காடுகளைப் பிரித்து ஓடிக்கொண்டிருந்தது. சிறுகற்களை விரைவுடன் உருட்டி இழுத்துச் செல்லும் சிற்றாறுகள் அடிபாதைகள் அத்தனையும் மணலாக்கியிருந்தது. உருளும் கற்கள் தொடர்ந்து நதிசெல்ல, அசையா பாறைகள் கரைகளென ஒதுங்கி நின்றிருந்தன. சலசலத்தோடும் நதிவழிகளைக் கடக்கும்போது பாசிபடிபடிய துடியன் பாறைகளில் அமர்ந்தமர்ந்து எழுந்தான். வெம்மை உலர்ந்து உடல் குளிர் அறிந்து அமிலஎரி தொடங்கும்போது அடுத்த நதிமுகத்தைத் தேடி அவன் அலையத்தொடங்கினான். மணல்பரப்புகளுக்கும் வீசுஅனலுக்கும் பழகிய உடல் சரலும் நதிஉருட்டிய கற்களுக்கும் மெல்ல தன்னை முகம்மாற்றிக்கொண்டிருந்தது. இன்னொரு முறை பாலைக்கு திரும்பும் தேவையில்லை என்பதே ஆசுவாசமாக இருந்தது. பசியும் எரியும் அனலும் வற்றா நீரூற்றென உப்புமண வியர்வையும் வறண்ட நாவும் நினைவில் எழும்போதெல்லாம் கொடுங்கனவிலிருந்து எழுவதைப்போல உடல் உலுக்கி தனைமீட்டான். குழந்தையின் முதற் நகமணலைப்போல கிடைத்த கனி, மரம், பட்டை செடி அத்தனையும் முகர்ந்து பின் சுவைத்தான். கூழாங்கற்களை வாயிலிட்டு குதப்பி ஓலமிட்டான். காடெங்கும் எதிரொலிக்கும் ஆதிச்சொல்லின் திசையறியும் விளையாட்டென செவிப்பறைகளை கூர்தீட்டிக்கொண்டான்.
குதப்பிச் சுவைத்து எஞ்சும் விதைகளை நதிகளில் உழிந்தான். நதி சிறு நீர்ப்பந்துகளை உருட்டி அவனை உமிழ்ந்தது. சிறுகிளைகளை உடைத்து தூரத்தில் செல்லும் நதிகளை எறிந்தான். நதி எங்கிருந்தோ சில பெருமரத் தண்டுகளைப் பறித்துக் கொண்டுவந்து முதுகில் அறைந்தது. மிகச் சிறு கனிகளைப் பிய்த்து அவன் நதிக்கு படைத்தபோது, தூரத்தின் கனிந்த பழங்கள் நதியின் ஓட்டத்தில் மிதந்து வந்து கால் தொட்டு மேல்செல்லாமல் ஆடிக்கொண்டிருந்தன. நதியினைத் தன் மூத்தோனென வணங்கினான். இளையோனெனச் சீண்டினான். தந்தையென மடி அணைந்தான். அம்மையென் முலைகுடித்தான். அத்தனை நாடகங்களையும் நதியும் இவனுடன் விளையாடியது.
கண்பழகி உடல்பழகி இறுதியாக செவி காடு பழகுகிறது என்றறிந்தான். கண்பழகிய இருளிலும் ஒளிந்து வெளியாகும் ஒளியிலும் குரல்களால் மட்டும் சிறுபூச்சிகள் இருப்பறிவித்தன.. உடல் பதறி ஓசையின் திசையடைந்து புலன்சுருக்கி கண்களைக் குவித்தான். பின் ஓசையின் முகத்தை பேரிரைச்சலின் ஒசையிலிர்ந்து பிரித்து உயிரிகளின் முகம் கண்டான். பின்னரே முகம் ஓசையுடன் இணைந்து உயிரென உருக்கொண்டு நிறைந்தன. உயிர் பின்னொரு பழம் இலக்கிய பெயராக நினைவில் எஞ்சியது. பிறகெப்போதும் ஓசையின் கணத்திலேயே கண்ணும் மெய்யும் உயிரைச் சென்றடைந்துவிடுவதை, அவற்றைக் கண்ட தருணத்தை மீட்டெடுத்துவருவதை அறிந்தான். நினைவுகள் எல்லாம் இறுதியாய் நினைவினைத் தொட்ட நொடிகளை மீட்டெடுத்தலே என உணர்ந்தான். ஒரு ஒலி அதன் சூழலையும் இணைத்துக்கொண்டுவருவதை அறிந்து அதிர்ந்தான். அதிரும் ஒரு மரத்தின் முறி, சற்றுமுன் வேறொரு நதிக்கரையில் இன்னொரு உயிரின் குரலுடன் முறிந்ததை நினைவூட்டியது. ஆடலின் ஒவ்வொரு பெருங்குரலின் உயிரிகளிலும் காடெங்கும் நிறைந்திருக்கும் இசை சிறு உயிர்களின் மொழியிலிருந்தே எழுவதாகத் தோன்றியது. உள்கரங்களின் தன் வாழ்வினை அடக்கிவிடக்கூடும் சிறு உயிரின் குரல் சன்னதம் கொண்டெழுவதைப்போல காடெங்கும் எழுந்து நிறைவதை செவிபழகிய சில நொடிகளில் உணர்ந்து கொள்ளமுடிகிறது. சிறு சிறு குரல்களின் ஒழுங்கின்மைகள் இணைந்து ஒரு பேரிசையை உருவாக்கிவிடுகின்றன. இசைபழகாத காதுகள் மட்டுமே அவற்றை இரைச்சலாக உணர்கின்றன என்றான். பிறகு திரும்பி யாருமின்மையை உணர்ந்து புன்னகைத்தான். விழியும் உடலும் மயிர்க்கால்களும் அறிவதெல்லாம் செவி அறியும் குரல்களையே என்றொரு எண்ணம் எழுந்தது. ஒவ்வொரு உயிரியையும் பிரித்தரியும் விசை உள்ளிருந்தே எழுகிறதே. ஒன்றாகவே இருக்கும் ரீங்காரம் ஒன்றிற்கொன்று ஒத்திருப்பதில்லை என்பதொரு உளமயக்கா அல்லது ஆழ்மனதின் அறிதலா என்பதை அறியாத வண்ணம் துடியன் அக்காட்டின் பெருவளைவிற்குள் செவிப்பறைகளின் வழியாக வளைத்து அறிய முயற்சித்தான்.
சில நாழிகை அலைதலுக்குப்பின் துடியன் அச்சிறுகுன்றின் மீதிருந்த பெருமரத்தை அடைத்தான். பல்லாயிரம் கைகொண்டெழும் கொற்றவை போல அம்மரம் பல நூறு வேர்களை கிளைகளிலிருந்து பரப்பி பெரும்பரப்பில் விரிந்து அசையாமலிருந்தது. இலைகள் பிரித்து உடைத்த தாமரை இலைகளைப்போல பெருத்து நரம்புகள் நீவ உள்ளங்கை அளவிருந்தன. அரைக்கச்சை இலைகளை அறுத்து வீசிவிட்டு துடியன் அம்மரத்தின் இலைகளை காம்புகளால் கட்டி பெருங்கச்சையை அவற்றின் சிறுவேர்களின் ஒன்றினால் கோர்த்து இடையணிந்தான். கால்கள் வீசவும் குறியாடவும் குளிர் இறங்கவுமான பரப்புடன் அவ்வாடை விரிந்து அரை நிறைத்தது. கருமரத்தின் தண்டென நிறைந்திருந்த கால்களை, உள்ளழுக்கு வெளியேறி பிசுபிசுத்த உடலை நரம்புகள் புடைத்த கரங்களை அவ்விலைகளின் நீர்கொண்டே பூசினான். உடல் அறியும் சுகங்களுக்கு எல்லையே இல்லையெனத் தோன்றியது.
விழுதுகளை அறுத்து உரசி, வெம்மைக்கொப்புளங்களை உடைத்தான். பனிதொட்டு நீவி குருதிச்சுவைகளைத் துடைத்தான். நதிக்கற்களை உதைத்து நரம்புகளை உடைப்பெடுத்தான். போதுமென்ற நிகழ் எழுவதாயில்லை. குருதியோட்டம் தீபற்றி இன்னும் இன்னும் என வெறி கொண்டது. கனிகளைச் சவைத்தும் விதைகளை உடைத்தும் அவிக்க அவிக்க அடிவற்றில் எரி மேலும் மேலும் என்றது. பட்டைகளின் துவர்ப்பும், இலைகளின் பசுமையும் கனிகளின் இனிமையும் கொள்வோம் கொள்வோம் என்றது. குளிரை பனியை மேலும் மேலும் என்றது அனல் காய்ந்த உடல். கானல் நினைவுகளை நதிகளில் கழுவ எழுக எழுக என்ற சூடு. நரம்பதிரும் ஓசைகளை மரத்தண்டுகளால் அறைந்து அடைந்தான். உன்மத்த ஆடல்களில் காடு அவனை ஏந்தி எறிந்து தாங்கி பேராட்டு கொண்டது. எறிந்த கிளைகளில் பதறி எழுந்த பறவைகள் சித்தனின் முகங்களில் நகம் உரசி காடு தனது என்றன. மேலும் கிளைகளை எறிந்து காடு தனது என்றான். அகந்தை எழும்பொழுதெல்லாம் சிறு புற்களால் இடறி காடு தானே என்றது. முதற்காலடி பழகும் குழவியின் வெறியாட்டம் கொண்டான். அருகமர்ந்தது பூரிக்கும் தாய் என்றானது காடு. .
ஆடல் வழிப்பாதையின் சுழிந்து அமிந்திருந்த நதியின் அழிமுகத்தை அடைந்தான். நதிக்கரையில் விரிந்த ஆலம் தன் விழுதுகளை நீராட விட்டு கவிந்திருந்தது. பழங்கொத்திகள் பறித்தளித்த ஆலவிதைகளை புழுக்கள் தன் வீடென எண்ணி நெளிந்து வாழ்ந்திருந்ததைக் கண்டான். இலையொன்று பறிந்து கசக்கு முகர்ந்து ஆலம் என்றறிந்தான். காலம் ஆலமென விரிந்து ஆலகாலமாகிறதென்றொரு வரி நினைவில் விழுந்தது. பெரு நரம்புகளை புடைத்து நதிக்கரையினை நிறைத்திருந்த ஆலம் கனிகளை நதியில் எறிந்தபடி இருந்தது. நதி பதிலுக்கு உருளாத கூர்கற்களை வேர்களின் இடைவெளிகளில் எறிந்து சுணங்கி முன் சென்றது. அலையாடும் மரங்களில் வாலில் தொங்கும் மந்திகளைப்போல நதிவெள்ளத்தில் மிதந்த தக்கைகள் ஆலவிழுதுகள் பற்றி திசைமாற்றி தொடந்து மிதந்து சென்றன. அனிச்சையாய் ஒரு முறை ஆலம்பழம் கடித்து கசந்து நதி உமிழ்ந்தான். வேர் இடைவெளியொன்றைக் கண்டறிந்து கால் நதியினை உதைக்க அமர்ந்து ஓடும் நதியை ஊறும் மீன்களை விரல்களால் உரசியபடி பெருமரத்தின் சரிவொன்றில் அமர்ந்து நதியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
உடல்சாய அமரும்போது நதியின் எதிர்ப்புறமாக அப்பெருங்குன்றைக் கண்டான். முழுக்க செவ்வெரி மலர்கள் பூத்துச்சிவந்து தீப்பற்றிய தனிமரத்தைப்போல அக்குன்று எழுந்து முன்னால் நின்றது. ஒழுங்கற்ற காட்டின் முதல் ஒழுங்கென அக்குன்றின் மர வரிசைகளை துடியன் உணர்ந்தான். நிலம் தெரியாத படி செவ்வெரி மலர்களால் நிறைந்திருந்த குன்று உச்சத்தில் செல்ல மெல்லக் குறைந்து மேற்பரப்பின் ஒற்றை குறுமரம் மட்டுமே கொண்டிருந்தது. ஒற்றை குறுமரத்தின் அருகில் பெருமர்க் கிளைகள் முழுதும் நீக்கப்பட்டு பருத்த ஆதிமரத் தண்டொன்று பீடெமன சமைந்திருந்து. அதில் அவள் இருந்தாள். மஞ்சள் ஆடைகொண்டு விரித்த சடையும் பழுத்த நெற்றியும் கொண்டு. அவள் என்பதை தொலைவிலேயே அறிவிக்கும் கண் முகத்தினை மழுங்கச் செய்திருந்தது. அனல் விளக்கில் திரி மையத்தில் எழுந்து நின்றது போல் அவள் மஞ்சள் இருந்தது.
ஆழத்திலிருந்து மேடையின் பீடத்தில் அமர்ந்திருந்தவள் அகல்விளக்கின் ஒளியெனத் தெரிந்தாள். பாலையின் ஒற்றைப்பனை தொலைவிலிருந்து காண்கையில் உருவாக்கும் கானல் போல அவள் பீடம் இருந்தது. மஞ்சள் ஆடையினை மலர்களைக் கொண்டு பிணைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது. தெளிவற்ற முகம் தொடர்ந்து காண்கையின் ஒளிவடிவாக இருந்தது. மலர்களின் மீதாக மிதக்கும் கருவண்டுகளைப்போல விழிகள் உருவம் கொண்டன. அருகமர்ந்து காதல் கொள்ளும் வேட்கை எழுந்தது. ஆனாலும் பீடங்களற்று குன்றின் உச்சி தனித்திருந்தது. காலடியில் மட்டுமே அடுத்தவர் அமரமுடியும். யட்சி என்றொரு ஒற்றைச் சொல் உள்ளத்தில் நிறைந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்