ஒரு முத்தத்தைக் கடத்துவதற்கு
எவ்வளவு பிரயாசைப்படவேண்டியிருக்கிறது
உடல் எத்தனை
வெறுப்புடன் உன்னை நோக்கி
எறியப்படுகிறது
இந்த முகம்தான்
உன்னை
பழக்கப்பட்ட இடங்களிலிருந்து
விரட்டியது
இந்த முத்தம்தான் உன்னை
பழக்கமில்லாத இடங்களில்
அமர்ந்து
அழச் செய்தது
இந்தக்கரம்தான் உன்னை மறுதலித்து புன்னகைத்தது
திரும்பிச்செல்லும் பாதைகளில்தான்
எத்தனை பழைய முற்கள் காத்திருக்கின்றன
அறிவாயா தோழி?
O
அதே வேலையிலிருந்துதான் அவன்
தெறித்து ஓடியிருக்கிறான்
அதே காதலைத்தான் அவள்
கண்ணீருடன் நினைவு கூர்கிறாள்
அதே காட்டிற்குள்தான்
அவன் இன்னும்
நடந்துகொண்டிருக்கிறான்
ஒரு கோப்பை தேனீரில்
எல்லாம் மாறும்
சினிமாக்கள்
இப்பொழுதுதெல்லாம் திரைக்குக்கூட
வருவதில்லை தோழி
O
சிறுபிள்ளையின்
விளையாட்டில்
புண்பட்டு
மாரில் அடித்துக்கொண்டு கதறும்
இன்னொரு சிறுமி
தோத்துட்டே இருக்கேன்மா என சின்னவிசயத்தில்
புண்பட்ட சிறுவனின் குரல்
மறுபடியும் தோத்துட்டேன் எனும்
ஒரு பெண்மணியின்
குரல்
கதறல்களின் இரைச்சல் தாங்கமுடியாததாக
இருக்கிறது
குறிப்பாக சுவற்றில் பட்டு அறையெங்கும்
எதிரொலிக்கும்போது
குறிப்பாக சுவற்றிற்கு அந்தபக்கமும் இன்னொருவன் குரலற்று அமர்ந்திருக்கும்போது.
மறுமொழியொன்றை இடுங்கள்