ஒரு யானையை
நீங்கள் புகைபோட்டு பிடித்துவிடமுடியும்
என்பது
நீங்கள் நம்ப முடியாத ஒரு ரகசியம்
அன்புக்கு தாழ் பணியும்
ஓநாய்களுக்கு
கொஞ்சம் சதை
மலை மீது ஆடும் சிறுமலருக்கு
ஒரு துளி நீர்
அல்லது
எல்லாருக்கும் அன்பளிப்பாக
ஒரு
கடைசி நம்பிக்கை
O
கடைசியாக ஒருமுறை
மழை பொழிகிறது
நீண்ட வருடங்களுக்குப்பிறகு
சில முத்தங்கள்
சில புகைப்படங்கள்
சில பழைய டைரிக்குறிப்புகள்
அனந்தா
உன்னை நான் முத்தமிடத்தான் விரும்பினேன்
ஆனால் இன்று
நீ இறக்கலாம் தவறில்லை
மழை நின்றுவிட்டது.
அனந்தன் நின்று கொண்டிருக்கிறான்
மழை விட்டபிறகு
சொட்டச்சொட்ட நனைந்தபடி
காயும் வரைக்கும்.
பலகோடி நூற்றாண்டுகளாய்
காயாத ஆடைகளுடன்
O
அறிபுனைகளின் பின்னால்
ஓடுகிறவர்களின் கதை
ஒன்று
ஒரு நாள் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்
எல்லா காலங்களையும்
மாற்றி எழுதமுடியுமென
எல்லா கண்ணீரும் மீண்டும் கண்களுக்குள்
புகுந்து கொள்ளும்
அவர்கள் திரும்பிப்போகமுடியும்
திருத்தி எழுதமுடியும்
மீண்டும் இழந்த
நாட்களை வாழமுடியும்
ஒருமுறை
இதுவரை நடந்ததெல்லாம்
அத்தனைபேரின் நினைவிலிருந்தும்
அழிந்துபோகும்.
ஒரு
பெருத்த நியாயம்
பயணத்தில் இருந்தவர்கள்
அத்தனை
நேரக்கோடுகளையும் நினைவில் வைத்திருக்கவேண்டும்
இந்த நியாயம்தான் அத்தனை
நேரக்கோடுகளையும்
பற்றவைக்கிறது
இல்லையா?
மறுமொழியொன்றை இடுங்கள்