உங்கள் துயரங்கள்
கோப்பையின்
நீர் போல
ஆழத்திற்குச் செல்வதாயிருக்க
உங்கள்
கோப்பைகளின் அளவுகள்
விரிவடைய வேண்டியிருக்கிறது
சிறிய கூண்டின்
சிறிய கம்பிகள்
வழியாக வெளியேற
முகமூடிகளை உரிதல்
நம்மைக் கொஞ்சம் எடையிழக்கச் செய்யக்கூடும்
பறப்பதற்கு பெரிய சிறகுகளை
விட
முக்கியம்
உங்களிடம் இருக்கும் சிறிய
இறகுகள்தான் என்பதை
நம்புவதில் என்ன கடினம்?
o
அலையும் ஆத்மாக்களின் மரணம்
குரூர நிம்மதியைத்
தருகிறது என்பதை
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுவேன்
அம்புகள் குறிபார்க்கும்
வானத்தில்
அலைந்து திரியும்
பறவைகள்
நமது
வசதியான இருக்கைகளிலிருந்து
பார்க்கும்போது
அழகாகத்தான் இருக்கும்
பாதங்களை
நகர்த்தினால்
தட்டுப்படக்கூடும்
மங்கலான குருதியில் நிற்பவர்களின்
கைதட்டலுக்காக
எவ்வளவுதான் சொடுக்குவான்
தெருக்கலைஞன்
தன் சாட்டையை?
o
இதுவரை ஏற்றுக்கொள்ளமுடியாத
அறிவுரைகளை
யாருமே சொன்னதில்லை
மூளையின் அடியாழத்திலிருந்து
பூத்து வரும்
பனியில்
நனைந்த மலரின் பரிசுத்தம்
கழுவப்பட்ட சிசுவின் செம்பாதத்தின்
வாசனை
தொடுவதற்கு மிருதுவான பட்டுத்துணியின் திரைச்சீலை
ஒரே ஒரு பிரச்சினை
வீடெங்கும் திரைச்சீலைகள்
அறையெங்கும் திரைச்சீலைகள்
சவப்பெட்டிகளில்
மரியாதை நிமித்தம்
மடித்து வைக்க
ஆயிரம் ஆயிரம் திரைச்சீலைகள்
மறுமொழியொன்றை இடுங்கள்