சேர்ந்தார்போல் நூறுவார்த்தைகள் எழுதி சில மாதங்களாவது இருக்கும். புத்தகத்தைப்பற்றி எழுதி பல வருடங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். எதோ ஒரு அலைக்கழிப்பு அல்லது விலக்கம் அல்லது மொழியின் மீது கூர்மையின்மை.

சில நீண்ட வருடங்களாக தடைபட்ட பயணமும் கையருகில் வந்து தட்டிப்போக டிசம்பரில் ஒரு நிலையற்ற கொந்தளிப்பில் இருந்தேன். தொழிலுக்குச் சம்பந்தமே  இல்லாத புதிய நிரல்மொழியொன்றைக் கற்று எழுதி அழித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல கரிபீயன் கடற்கொள்ளை திரைப்பட வரிசையை முழுவதுமாக பார்த்து வைத்தேன்.  ஜாக்கிசான் திரைப்படங்கள், Buddycop வகையறா நகைச்சுவைத் திரைப்படங்கள், கடைசியாக காலவரிசைப்படி முழுவதுமாக ஜாக்கிசான் திரைப்படங்கள்.  ஆனாலும் எதோ ஒரு வெற்றிடம் மிச்சமிருந்தது. செவிகளில் இடைவிடாது வந்துவிழும் இல்லாத கடலின் பேரிரைச்சல்.

எதோ ஒரு புள்ளியில் ஜெயமோகன் வலைத்தளத்தை நீண்ட நாட்களாக வாசிக்கவில்லை என நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஆண்டுகளாக. கடைசியாக புனைவுக்களியாட்டு சிறுகதை வெளியாகும் காலத்தில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். வெண்முரசின் கண்ணி எங்கோ தொலைவில் அறுந்திருந்தது. நினைவு சரியானால், நீலம் தொடங்கப்பட்டதும்.  இடைவெளிக்கு பிறகு வெய்யோன், பன்னிருபடைக்களம் இரண்டும் தொடர்ச்சியாக வாசித்தது. அதன்பிறகு முழுக்க அறுந்த கண்ணி, புனைவுக்களியாட்டு வரிசையை மட்டும் முழுதும் வாசிக்க அமைந்தது.அதற்குப்பிறகு பூரண மவுனம்.  அவ்வப்போது தோன்றுவதுண்டு. முதற்கனலில் தொடங்கி முழுக்க வாசிக்கவேண்டும், அதைக்குறித்த விரிவான அல்லது கைக்கெட்டும் குறிப்புகளை எழுதிப்பார்ப்பதென்றும். நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை கதையே.

ஆக, மீண்டும் டிசம்பர் மத்திய வாரங்களில் ஜெயமோகன் வலைத்தளம். நவம்பர்-31ல் தொடங்கி பின்னோக்கி வாசித்துக்கொண்டிருந்தேன். கதைகள், கட்டுரைகள், கடிதங்கள். எண்ணவேகத்தில் எழுதமுடியாது, எழுதும் வேகத்தில் பேசமுடியாது எனும் பிரபல சொல் ஜெயமோகன் வலைத்தளத்தை வாசிக்கும்போதெல்லாம் நினைத்து புன்னகைக்க வைப்பது. எண்ண வேகத்தில் எழுத வாய்க்கப்பெற்ற ஒரு இயற்கை வரம்.

ஏப்ரல்-22, அவரது பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறார். பின்குறிப்பில் கொந்தளிப்பான மனநிலை குறித்தும், முன்னரே எழுதப்பட்ட குறு நாவல் அந்த நாளுடன் தொடர்புபடுத்திக் காரணமின்றி கொள்வதைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன.  கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, மறு ஆண்டின் ஜனவரி 25ல் அதைக் கையில் வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒப்புநோக்கும் ஒருவித மனநிலையில்.  இறுதி பகுதில் வரும் 
“களவாணிச்சிறுக்கி நம்மகிட்டே விளையாடியிருக்காடா… குறும்பியா இருந்தாலும் கனிவுள்ளவளாக்கும்டே” வரிகளுக்கு செண்பகராமன் போல நிலமறைந்து சிரிக்கும் மன நிலை எழுந்தது.

திருநெல்வேலி, மதுரை , நாகர்கோயில் எனக்கு பால்யத்துடன் தொடர்புகொண்ட நிலங்கள். திரும்பும் திசையெல்லாம் பெண்தெய்வங்கள். இசக்கி, பேச்சி, உச்சினிமாகாளி, மாரி, முப்புடாதி. இவர்களை முழுங்கிச்சிரிக்கும் நெகிழித்தாளில் திடீரென கடந்த இருபதாண்டுகளில்  முளைத்திருக்கும், அல்லது புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கும் ஸ்ரீலஸ்ரீ அருள்மிகு அம்பாள்கள். டவுசர்களை இழுத்துக்கொண்டு ஆள்காட்டி விரல் பிடித்து நடந்த காலம் முதல் மடித்துக்கட்டிய வேட்டியை தழைய விட்டு ஏசிக்காற்று முகத்திலறைய உள் நுழையும் , நோய்தொற்றுக்கு முந்தைய வருடாந்திர விடுமுறை நாட்கள் வரை அதே வண்ணத்தில் நிறைந்திருப்பவை, திருச்செந்தூர் முருகனும், குமரி அம்மனும் எனத்தோன்றுகிறது. இவர்களிடம் பக்தி குறித்த எதிர்பார்ப்பில்லை என்பது போன்ற ஒரு சகஜ நிலையில் இன்றும் இருக்க முடிகிறது.

முன்னெப்போதோ பாவாடைச்சட்டை அலங்காரத்தில் கன்னியாக்குமரி கோயிலில் மூக்குத்தி ஒளியில் குமரியன்னையைப் பார்த்து பள்ளிசெல்லும் சக சிறுமி என்றெண்ணிக்கொண்ட அதே பாவனைகள் இன்றும் அங்கே கிடைக்கின்றன.

பின்னட்டைக்குறிப்புகளை, பாராட்டுக்குறிப்புகளக் முதலில் வாசித்துவிட்டு புத்தகங்களைப் படிப்பது ஒரு அழகிய விளையாட்டு. நூறு சதவீத நகைச்சுவைக்கு சாத்தியமுள்ள விளையாட்டு.  குமரித்துறைவியின் பின்னொட்டுக்குறிப்பு, இது முழுக்க மங்கலம், மங்கலமன்றி வேறில்லை என்கிறது. சரி. முழு நகைச்சுவையாகத்தாகத்தான் இருந்தாகவேண்டும் இல்லையா?  சிறு பிழையின்றி, சிறு அமங்கலமின்றி, எதிர்சொல் ஒன்று எங்கும் அமையால் ஒரு படைப்பு நிறைவுருமா என்பது போன்ற கேள்விகள்.  குறைக்காகக் காத்திருக்கும் அல்லது அதைத் தேடி உள்நுழையும் ராயசத்தின், திவானின் நிலை எனத்தோன்றுகிறது.

கடிதமொன்றில் ஜெயமோகனே சொல்லியிருப்பது போல, “கதைகள் வாசிப்பவனுக்கு எதையும் சொல்வதில்லை, அவனது அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைத் தீண்டுகின்றன” என்பது எத்தனை மெய்.  எங்கெங்கோ தீண்டிச்செல்லும் நினைவுகள். முதல் பாகத்தில் செண்பகராமனின் குடிவழிக்குறிப்புகளில் தாண்டித்தாண்டி சென்று கொண்டிருந்தேன்.  பழைய ஏற்பாட்டு ஆதியாகமகத்தில் வரும் அவன் இவனுக்குப்பிறந்தான் எழு நூறு வருடம் வாழ்ந்து இவனைப்பெற்றான் வரிசை சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.  நிகழ்வுக்கு முந்தைய போர்களைப் பற்றிய வரலாற்று மயக்கு புனைவு பகுதியும் அவ்வாறே. ஆனாலும் இருகாந்தங்களின் ஒரே துருவம் போல ஈர்த்தலும் விலக்கமும் ஒருங்கே நிகழும் ஒரு மாயம்.

அம்மை ஆரல்வாய்மொழிக்கு வந்துசேரும் கதையை செண்பகராமன் சொல்லத்தொடங்கியதுமே முழுக்க கதைக்குள் வந்துவிட்டேன் எனத்தோன்றுகிறது. கொண்டையத்தேவன் பல்லக்குத்திரைக்குப் பின்னால் கண்ட கிளி கொண்ட கரிச்சிறுமி இடத்தில் முதல் துணுக்குறல். சிறுமி பாதம் பணியும் தருணத்திலிருந்து அலையென முட்டிமோதி அதே இரவில் முடித்து, என்னையே கொஞ்சம் தொகுத்துக்கொண்டபோது, இதைப்பற்றி எழுதினால் மட்டுமே வெளியேற முடியும் எனத்தோன்றியது.

ஈர்க்கப்பட்ட புனைகதைகளுக்குள் நாம் என்னவாக நம்மை அடையாளம் கண்டுக்கொள்கிறோம் என்பதில் மிகப்பெரிய கூட்டு நனவிலி வேலை செய்கிறது என நம்புகிறேன். குமரித்துறைவி முழுவதும் பல பாத்திரங்களாக பொருத்திக்கொண்டேன் எனத்தோன்றுகிறது.  நம்பூதிரி “மகளாக வந்தவள் மங்கலமாக வீட்டைவிட்டுப்போகும் ஒரே  நாள்” எனச் சொல் எடுக்கும்போது செண்பகராமன் உணரும் திடுக்கிடல் ஒரு மூத்த தமையனுடையது. நினைகாலமெல்லாம் தெரிந்திருந்தாலும் அருகில் வரும்போது அர்த்தமற்ற பதட்டம் கொள்ளும் பொறுப்பான தமையன். முன்னதாக உள்ளீடற்ற காரணங்களைச் சொல்லி தமக்கையைப் பிரிதலை தள்ளிப்போடும் முதிரா இளைஞன். எல்லாம் துலங்கும்போதும், அடிவயிற்றில் சுரக்கும் பெயரற்ற அமிலம்.

“பித்தன் பேய்ச்சியை மணந்த ஊர், அரண்வாய்மொழி” எனும் வரியில் துணுக்குற்று நிறுத்திவிட்டு என்னைத் தொகுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. எழுதத்தொடங்கி அந்தரந்தில் நிற்கும் ரிபு நாவலில் கெளரிக்கு அளிக்கப்பட்ட ஊர் இது. கிட்டத்தட்ட இந்த வரியை  நான் பல ஆண்டுகளா விரித்தெடுக்க விரும்பும், முயற்சி செய்யும்  நாவலின் கதைச் சுருக்கம் எனலாம். கூடவே கொன்றை மரங்கள். சரக்கொன்றை மலர் தூவ ரயில் நிலைய இருக்கைகளில் பேசிக்கொண்டிருக்கும் சித்திரமொன்று இருக்கிறது. மகளாக, தங்கையாக, தோழியாக, அன்னையாக குமரியை பாத்திரங்கள் காணும்போதெல்லாம் நானும் உடன் காண்கிறேன். திருக்கல்யாண நிகழ்வுகளில் வல்லப கணபதி குறும்புகளில் குறும்புச் சிறுவனை மட்டுமே காணமுடிகிறது. சுந்தரேசரை பல்லாக்கில் ஆராட்டி மண்டபத்துள் கொண்டுவருகையில் ஒரே நேரத்தில், அதை அங்கே  சுமப்பவனாகவும்,  பால்யத்தில்  திருவிழா பார்க்கும் சிறுவனாகவும் , இதே ஆராட்டின் தற்கால நிகழ்வில், கூரிய எதிர் கருத்துக்கள் நண்பர்களுடன் பகிர்ந்த முதிர்ந்த இளைஞனாகவும் பல புள்ளிகளை தொட்டுத்தொட்டுச் செல்கிறேன்.

தொடக்கம் முதலே பூரண மங்கலம். அத்தனை அமங்கல வாய்ப்புகளிலும் , மழைக்கால வெக்கையின் குளிர்க்காற்றென பூத்து வரும் ஒரு சொற்றொடர். மதுரையிலிருந்து வரும் திருமுகத்தில், பேரரசனின் சீண்டும் சொல்லை நோக்கிச் சென்று, பூத்து மலரும் அரசியின் அன்பான வேண்டுகோள். பொய் சொல்ல வாய்ப்பிருக்கும் அரசனிடம் ஒரு மறுப்புச் சொல்.  திரித்துச் சொல்ல வாய்ப்பிருக்கும் கணியனுக்கு ஒரு எதிர்ச்சொல்.  

நம்பூதிரியிடம் தமக்கு வசதியான ஒரு சொல்லைப்பெற செண்பகராமன் செல்லும்போது,
“அஸ்வத்தாம ஹத: குஞ்சரக” வின் வெண்முரசுச் சொல் “இறந்தான் அஸ்வத்தாமன் எனும் யானை” நினைவுக்கு வந்தது. ஆனால் மனம் நிறைந்தவன் கைபிடித்துச் செல்லும் மகள் கொடுக்கும் மங்களம் எனப்பொருள்படும் உரையாடலில், உடல் சிலிர்ந்து நெஞ்சம் நிறைந்து விம்மக்கூடியது.  ஒவ்வொரு எதிர்ச்சொல்லுக்கும் ஒரு எதிர்ச்சொல் விழுந்து நேராக்கிக்கொண்டே செல்கிறது.

கடைசிவரையிலும் ஒரு எதிர் நிகழ்வை ஆளுள்ளம் எதிர்ப்பார்த்துக்கொண்டே இருந்தது எனத்தோன்றுகிறது. கள்ளழகர் திருவிழாவில் நிகழ்வது போல, ஒரு பானை காணாமலாவது. அல்லது புனைவின் சாத்தியங்களில் ஒரு யானை மதம் கொண்டு பாகனை உடல்முறிப்பது. அல்லது ஒரு இடறல்.  செண்பகாரமன் சங்கறுக்கும் சூளுரைக்கும்போது உண்மையிலேயே அதைவிரும்பினேன் என நினைக்கிறேன். மங்கல பலி.  முழுமங்கல நிகழ்வின் ஒரு குருதித்துளி. அரசன் காணாமல் ஆகும்போது ஒரு வயோதிக மரணம். வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பலிபீடத்தில்  வெறுமை பீடித்த ஒரு தலை.

இல்லை இல்லையென மறுத்து பூத்துச் செல்கிறது நிறைவுகளின் மலர். இறுதியாக நிகழ்கிறது ஒரு தடுக்கல். பிழை. திவான் வந்து நகையாடவேண்டும், தளவாய் இழித்துரைக்கவேண்டும் என வேண்டுகிறது ஆழுள்ளம்.  மன்னிப்புக்கோருகிறார் திவான். பின்கதையொன்று வெட்டி வருகிறது. கணக்கை நேர்செய்கிறது. மழையீரத்தின் மலர் பூத்து மலர்கிறது மீண்டும்.

பூத்து பூத்து நெஞ்சு நிறைந்து மகிழ்வில் கண்ணில் நீர் கோர்த்து நாளாயிற்று எனத்தோன்கிறது. அல்லது வருடங்கள். அத்தனை கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் வெறுமையும் நீங்கி குளிர்க்காற்றில் தூரத்து மலைமுகடுகளை அதிகாலையில் பார்த்து நிற்கும் மனநிலை.  தரைதட்டிப்போன குறிப்புகளைத் தூசுதட்டலாம், ரிபுவை எழுதத்தொடரலாம், எதுவும் அமையாவிடில் வெண்முரசையாவது வாசித்து முடிக்கலாம்