இப்படித்தான் ஒருமுறை
வெற்று நெற்றியாக இருந்தது
யாரோ திருநீறு வைத்தார்கள்

இப்படித்தான் முன்பொருமுறை
பனிக்கால ஜன்னலருகில்
தனித்திருந்தேன்
யாரோ புன்னகைத்தார்கள்

இப்படித்தான் ஒருமுறை
யார்கையையோ பிடித்து
தார்ச்சாலை ஓரத்தில் அமரவேண்டியிருந்தது
யாரோ தண்ணீர் கொடுத்தார்கள்

இதுவரை நடந்தவை
எல்லாமே ஏற்கனவே நடந்தவை

கொஞ்ச நாள் காத்திருக்கலாம் தவறில்லை
எப்போதும் நடக்காத
ஒன்றிற்காக

O

பொறிகள் மழையெனப்பொழியும்
காலத்திலிருந்து
நீண்ட உறக்கத்திற்கான பனிக்காலத்திற்கு
கரடிகள் மெல்ல
அசைந்தாடி வருகின்றன

மகரந்தங்களின் பரந்த நிலத்தில்
பனிமூடியிருக்கிறது.
ஒரு நாள் வெயில் வரும்
எப்பொழுதாவது மலர் வரும்
கண்டிப்பாக மழை வரும்

வாசலுக்கு வெளியே
மரணச்செய்திகளின் தபால்காரன்
காத்திருக்கிறான்

O

திடீரெனப் பெய்யும் மழையில்
குழந்தைகள் இந்த நிலத்தில்
வந்து இறங்கக்கூடும்

பாணன் தன் ஆயுதங்களைத் துடைத்து
பைத்தியக்காரனிடம்
அளித்துவிட்டு திரும்பி நடக்கிறான்

செய்திகள் அற்ற நிலம்
அங்கே இருக்கிறது
எங்கோ தொலைவில்.

அடுத்த தப்படியில் அடைந்துவிடும் தொலைவில்.

Advertisement