இதோ
காலுக்கு அருகிலிருக்கும்
இந்த ஆழங்களிலிருந்துதான் மேலேறி
வந்தேன்

இதோ
கைக்கெட்டும் தொலைவிலிருக்கும்
நீரின் ஓட்டத்திலிருந்துதான்
கைப்பிடித்து  வந்தேன்

சுழற்பாதைகளில்
கீழிறங்கும் மனிதர்கள்
மேலேறும் மனிதர்களுடன் சேர்ந்துதான்
கட்டிடமே சுற்றி வரும்
மயக்கத்தை உருவாக்கினார்கள்

ஆழங்கள் அழகானவை
மேலிருந்து பார்க்கும்போது.
மேலேயே இருக்கும்போது.

O

ஒருமுறை முயற்சி செய்யச் சொல்லித்தாம்
அந்த மலரைக் கொடுத்தார்

ஒரே ஒரு முறை
ஒரு நாளைக்கு ஒரு முறை
ஒவ்வொரு தேவைக்கும்
ஒரு முறை.

மலர் விதை இடுகிறது
விதை மரம் இடுகிறது
மரம் மீண்டும் மலர் இடுகிறது

இன்றைய காட்டில் மலர்கள்
மூட
நினைத்துக்கொள்கிறேன்

கழிவோடையின் கரையில்
வைத்து
என்னிடம் அளிக்கப்பட்ட முதல் மலரை.

O

உண்மையில்
அடுத்தவருக்கு ஆறுதல்சொல்வதென்பது திரும்பி வர
முடியாத ஒரு புதிர்பாதை.

ஆற்றுப்பாலத்தின் மேல் நின்று
படகுக்கு வழிசொல்லும்
தற்கொலைக்காரனின் குரல்

அத்தனை தொலைவிலும்
அத்தனை அருகிலும் நிற்கும்
அதே ஆறு

படகுகள் கடந்து சொல்லும்
குரல் நின்றுவிடும்
ஆறு அங்கையே இருக்கும்.
ஆற்றுப்பாலமும்.

பிறகு யாரோ ஒருவர்
அங்கே நின்று மலர்களை வீசி
மெளனம் செலுத்துவார்.

Advertisement