நந்து அறைக்குள் நுழைந்தபோது அறை சிதறிக்கிடந்தது. காலியான புட்டிகள் உருண்டிருந்தன. செய்தித்தாள் மீது பரத்தியிருந்த கிழங்குவறுவல் துண்டுகள் காற்றில் பறந்து அலங்கோலமாக இருந்தது. இன்னும் ஒரு புட்டி மிச்சமிருந்தது. இன்பா கதை சொல்பவனைப்போல கை நீட்டி அமர்ந்திருந்தான். சந்துரு கைகளை பின்னால் ஊன்றி கதை கேட்டுக்கொண்டிருந்தான். மீதி இருவரும் புன்னகையுடன் திரும்பி நந்துவைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்கள். இடங்கள் மாறியிருந்தன. ஒரு இடவெளியைக் கண்டறிந்து நந்து போய் அமர்ந்தான். இன்பா தலை திருப்பி நந்துவைப்பார்த்து `அவன மிதிக்கணும்ல. அதான் சொல்லிட்ருக்கேன்` என்றான். எவனை எதற்காக என்ற கேள்விகள் தேவையில்லை. சொல்லத்தொடங்கப்ப்ட்ட கதைகள் அதன் பாதைகளைத் தானே கண்டறியட்டுமென அமைதியாக இருந்தான். இன்பா பதில் வராததில் குழம்பி சந்துரு பக்கம் திரும்பி மறுபடி `அவனை மிதிக்கணும்ல` என்றான்.

`மிதிப்போம் சரி. எதுக்காம்` சந்துரு சொல்லிவிட்டு நந்துவைப்பார்த்து மறுபடி சிரித்தான். `எங்கிட்டையே லெட்டர் குடுக்க வாரான் பாத்துக்க. அவட்ட குடுக்கச் சொல்லி. உன் ஆளுக்கு. நீயாரு நாம யாருன்னு தெரியும்ல அவனுக்கு. அப்புறமும் கொழுப்பு. அவன விட்டுட்டே இருக்கியல. அதான் ஆடுதான்` சொல்லிவிட்டு இன்பா ஆசுவாசமானான். சந்துரு தன் கதையைச் சொல்கிறவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவன் போல சுவற்றின் மூலையில் ஆடிக்கொண்டிருக்கும் சிலந்தியைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிலந்தி வலையை இன்னும் பெரிய பரப்புக்கு விரிப்பதைப்போல சுவரினை அளைந்து கொண்டிருந்தது. ஒரு நூலில் வலையிலிருந்து பழைய திரைப்பட நாயகர்களைப்போல ஆடியிறங்கி பின் மேலேறி சுவற்றில் கால்களை வைத்து உந்தி மறு முனையைத் தொட்டது. அங்கிருந்து மீண்டும் ஆடல் மறு முனை. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்குமே வலை தன் பரப்புகளை இழுத்து பெரிதாகிக்கொண்டேயிருந்தது. திடீரென சன்னதம் வந்தவன் போல ` அடிக்கிறது இல்ல. அடிச்சா நாலு நாளாவது கிடைல கிடக்கணும். இன்னும் காலேஜ்ல பண்ணாப்ல அவன் கிட்ட போய் பஞ்ச் பேசிட்டு வர்றது மறு நாளே அவன் வந்து திருகுத்தாளம் பண்றதுன்னு இருக்கக்கூடாது` என்றான் சந்துரு.

`லேய் பண்றதெல்லாம் செர்ரி நான் நாளைக்கு ராத்திரிக்கு ஊருக்குப்போவணும். அதுக்கு முன்னாடி பண்னுங்க. நானும் ரெண்டு போட்ருதேன். ஆபிஸ் கருமம் தத்தியாப்போவுது கை சுருசுருங்கு` என்றான் நந்து. `இங்கதான் சிஎஸ்ஸி வாரான் பய. கனராபேங்க் வாசல்ல வச்சு அடிப்போம். அல்லது ஆரெம்பி பைக்ஸ்டாண்ட்ல வச்சுப்போம்` இன்பா சிரித்தான். `பேங்கு அப்பா வந்தாலும் வருவாரு. இன்பா நீ அவன பேச்சுக்காட்டி பைக்ஸ்டாண்டு கூட்டி வா பாத்துப்போம்`என்றான் சந்துரு. `லேய் போதவாக்குல எதாவது பேசிட்டு நாளைக்கு விடிஞ்சதும் முருகான்னு மலந்துராதீங்கடே. நாளன்னிக்கு இழுத்தா நான் வரமுடியாதுபாத்துக்க` நந்து பெப்சியின் கடைசி சிப்பைக் கவிழ்த்துக்கொண்டான். இன்பா தரையைத்துடைப்பவ்ன்போல கண்ணை மூடியபடியே துளாவி சிப்ஸை எடுத்து போட்டுக்கொண்டான். `அடிச்சுட்டு ஊருக்கு ஓட்ற நாய்க்கு பேச்சப்பாத்தியா. நாங்க இங்கதாம்ல இருப்போம். அடிக்கிறொம் நாளைக்கு` என்றான். மிச்சம் இருந்த இருவரும் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருக்கிறவர்கள். போதையின் கடைசி கணங்களில் இருந்தார்கள். கண்கள் சுருங்கி மின்விசிறியைப் பார்த்தபடி `இருக்கோம்ல. நாங்களும் வருவோம். நாளைக்குச் சாயங்காலம் என்ன` என்றான் ஒருவன்.

நால்வரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். பிறகு நந்துவைப்பார்த்து சிரித்தார்கள். `சரில கடைசி கட்டிங். எடு ஒரு சியர்ஸ்` என்றான் இன்பா. `முடிஞ்சிருச்சு மாப்ள இரு வர்றேன்` நந்து எழுந்தான். கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி இருட்டில் பூனையைப்போல உறுமிக்கொண்டிருந்தது. இருளில் அதன் கசியும் ஒளியை நோக்கி நடந்து கதவைத்திறந்து குனிந்து சின்ன ஒரு பெப்சி கேனை எடுத்துக்கொண்டான். நிமிர்ந்த போது அங்கே அவள் நின்றிருந்தாள். கெளரி. `என்ன கொள்ளக்கூட்டத்தலைவனாட்டம் திட்டமெல்லாம் முடிஞ்சுதா` என்றாள். நந்துவிற்கு முழங்கை மயிர்கள் கூச்செறிந்தன. `ம். சும்மா பேசிட்டு இருந்தோம்` திரும்பி நடந்தான். `உங்க நம்பரென்ன` தன் அலைபேசியை கையில் பிடித்தபடி கேட்டாள். நோக்கியா. எண்களின் வெள்ளைக்கண்ணாடி இருளில் மின்னியது.

`எதுக்கு` தன் அலைபேசி வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

` நாளைக்கு யார் கிடைல கிடக்குறாங்கன்னு கதை கேட்கணும்ல`

`ப்ரியாகிட்ட கேட்டுக்கங்க`

`ம்ம்க்கும். அவ உங்க பேச்சுல தலையிடக்கூடாதுன்னு புலம்பிகிட்டு இருந்தா. என் காதுல விழுந்தத வச்சுக்கேட்டா ஒட்டுக்கேட்டியான்னு அதுக்கு வேற மல்லுக்கு நிப்பா`

`ம்`

`என்ன ம். குடுக்க விருப்பமில்லைன்னா சொல்லுங்க. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்கமாட்டேன்`

பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவனைப்போல எண்களைச் சொன்னான். சொன்னபிறகு ஆங்கிலத்தில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. `இப்ப மொபைல் இல்ல. ஒரு ஹாய் அனுப்பி விடுங்க. நாளைக்கு நம்பர சேவ் பண்ணிக்கிறேன்` என்றான். அவள் எதுவும் சொல்லாமல் திரும்பி பிரியாவின் அறைக்குச் சென்றாள். கதவருகில் `ம்` என்பதுபோல் கேட்டது. அல்லது பெருமூச்சாக இருக்கலாம். சிறிது நேரம் குழம்பி நின்றிருந்துவிட்டு சந்துருவின் அறைக்குவந்தான். மற்றவர்கள் அப்டியே படுத்திருக்க, சந்துரு மீதிக்குப்பைகளைச் சுருட்டி மூலையில் பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு படுக்கைகளைப் போட்டுக்கொண்டிருந்தான். ` நீ வரவரைக்கும் இருப்பாங்களா. முடிஞ்சுது. நீ கட்டில்ல படு. நான் இவனுக கூட படுத்துக்கிறேன்`

நந்து தரையில் படுத்திருந்தவர்களைத்தாண்டிப்போய் கட்டில் ஏறினான். மின்விசிறி சத்தமாக தலைக்குள் சுழன்றது. சந்துரு புரண்டு எதையோ முனகி அமைதியானான்.

o

வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. நந்து கண்ணன் கபே தகரக்கூரையின் கீழாக நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தான். கூப்பிடும் தூரத்தில் நாகர்கோயிலுக்கும் திருனெல்வேலிக்குமான பேருந்துகள் ஒன்றையொன்று எதிர்முட்டுவது போல் ஓடிவந்து பேருந்து நிலையத்திற்குள் வளைந்து திரும்பிக்கொண்டிருந்தது. கபே கனராபேங்க் மாடியிலிருக்கும் சிஎஸிக்கான வழிக்கும் பைக்ஸ்டாண்டுக்கான வழிக்கும் மிகச் சரியாக மத்தியில் இருந்தது. சுழல் படிக்கட்டுகளின் நெரிசல் தூரத்தில் தெரிந்தது . முந்தைய வகுப்பு முடிந்திருக்கவேண்டும். அடுத்த வகுப்பிற்கான நுழைகிறவர்களும் மேலிருந்து இறங்கி வருகிறாவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும் விலகிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றனர். இன்பா வந்திருக்கவில்லை. கிட்டு நிலையத்திற்கு வளையும் திருனெல்வேலி பெயரிட்ட பேருந்திலிருந்து ஓட்டத்திலிருந்து இறங்கி இருபுறமும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து மறுபுறம் வந்தான். சாலையைக் கடந்தபிறகு நந்துவைப்பார்த்துவிட்டு சற்றுக்குழ்ம்பி கையசைப்பதா வேண்டாமா எனக்குழம்பினான். நந்து கிளாஸை கபே சுவற்றில் வைத்துவிட்டு கையசத்தான். கிட்டுவும் கையத்துவிட்டு அவனை நோக்கி தயங்கியபடியே வந்தான். நந்து காசைக்குடுத்துவிட்டு அவனை நோக்கிச் சென்றான்.

`என்னல இங்க நிக்க. உன் பசங்க இல்லாம, மெட்ராஸ்லதான இருக்க` என்றான் கிட்டு. `ஆமா லிவுக்கு வந்தேன். ஏர்வாடி போணும் அதான் நிக்கேன் . நீ எப்படில்ல இருக்க. என்ன பண்ற` நந்து சிந்தனையில்லாமல் வாயில் வந்ததைச் சொன்னான். இன்பா வரும்வரை பேச்சுக்குடுக்கவேண்டும். `ம். மாமா திருவனந்தபுரத்துல கூப்ட்றேன்னு சொல்லிருக்காரு. சும்மா இருக்கோம்னு அப்டியே கம்யூட்டர் கிளாஸ் போய்ட்டு இருக்கேன்` என்றான். நந்து அலுவலகக் கதைகளைச் சொல்லியய்படியே பைக்ஸ்டாண்ட் நோக்கி நடந்தான். கிட்டு பேசிக்கொண்டே கூடவந்தான்.`கிளாஸ் போய்க்கலாம் இப்ப என்ன. சும்மா சர்டிபிகேட்டுக்காக பண்றதுதான இதெல்லாம்`. நந்து பைக்ஸ்டாண்டில் மறைவான வெளியேறும் வழியில் ஒதுங்கி நின்று சுவற்றில் ஒற்றைக்கால் மடித்து நின்றான். கிட்டு எதிரில் கையாட்டி பேசிக்கொண்டிருந்தான். சராசாரிக்கு சற்று அதிகமான உயரம். அண்னாந்து பார்த்து பேசிக்கொண்டிருந்ததில் நந்துவிற்ர்கு கழுத்து இழுத்தது. நெளித்து கழுத்திற்குச் சொடக்கெடுத்து திரும்பும்போது இன்பாவும் சந்துருவும் பைக்கை ஸ்டாண்டிற்குள் நுழைத்தார்கள். விரல்களில் சொடக்கெடுத்து நந்து தயாரானான். பின்வாசல் வழியாக வெளியேறி எதற்கும் சம்பந்தமில்லாதவர்கள் போல இன்பாவும் சந்துருவும் வந்தார்கள். `இந்தா வந்துட்டாங்க்கல்ல பாண்டவனுகளுல்ல ரெண்டு பேரு. மிச்ச ரெண்டு பேரும் வரானுகளாமா` கிட்டு சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தான்.

பதட்டம் தெரிந்தது. நந்து எதுவும் அறியாதவன் போல கால்மாற்றி நின்றான். கைகாட்டினான். `என்னல மூத்துரசந்துல என்ன பண்ணுதிய` என்றான் இன்பா. `சார் வருவீங்கன்னு வெயிட் பண்றோம், மிச்ச ரெண்ட எங்க` என்றான் கிட்டு. `சார் பெரிய சூரரு இவருக்கு படையத்தான் கூட்டிவரணும். நான் ஒருத்தன் போதாதா` இன்பா சீண்டினான். கிட்டு மையமாப் புன்னகைத்தான். `என்ன இப்ப` என்றான். `ஒண்ணுமில்ல. சந்துரு ஆளு பின்னாடி சுத்துறத நிறுத்திக்க என்கிட்ட அவளுக்கு லெட்டர் குடுக்கிற சீன விட்ரு. அவ்ளொதான்` இன்பா கோணலாகச் சிரித்தான். கிட்டு ஒன்றும் சொல்லவில்லை. முத்துவும் மணியும் மறுபுறத்திலிருந்து வந்தார்கள். `என்னல சும்மா பேசிட்ருக்கிய` வந்த வேகத்தில் மணி துள்ளி கிட்டுவை அடித்தான். காதுக்கு சற்று மேல் அடிவிழுந்து கிட்டு நின்ற இடத்தில் தடுமாறினான். இன்பா இருவரின் தோளில் கைவைத்து எக்கி வயிற்றில் மிதித்தான். கிட்டு வயிற்றைப்பிடித்துக்கொண்டு மடங்கி அமர்ந்தான். ஐவரும் சுற்றிலிருந்து கை நீட்டி கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்க்ள். கிட்டு ஓடமுடியாமல் திமிறி சில அடிகளை விலக்கிவிட்டு பல அடிகளை தலையிலும் மறைத்திருந்த கைகளிலுமாக வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். சந்துரு கண்ணைக்காட்ட இன்பா பேண்ட்பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தான். சைக்கிள் பல்சக்கரத்தை இரண்டாகவகுந்து கூர்முனைகளை மழுங்கடிட்த்து தேய்க்கப்பட்டிருந்த இரும்பு வளையம். இடைவெளியில் கைவிட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓங்கி குத்தினான். முதல் குத்து ம்ணிக்கெட்டில் விழுந்தது. கிட்டு பதறி கையை உதற அடுத்த குத்து ஆளமாக கன்னத்தில் விழுந்தது. வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. ரத்தைத்தைக் காறித் துப்பும்போது இரண்டு பல்துண்டுகள் விழுந்தன. சந்துரு அதை வாங்கி தானும் ஒரு குத்து குத்தினான். காதில் மண்டையெலும்பில் ஆழமாக அடிவிழுந்த சப்தம் நங்கென்று கேட்டது. கிட்டு மல்லாந்து விழுந்தான். கண்காட்டிவிட்டு மணியும் முத்துவும் நடந்துசென்று திருனெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். சந்துரு ஓடிப்போய் பைக்கை எடுத்துவந்தான். இன்பாவும் நந்துவும் ஏறிக்கொண்டனர். பைக்கைக் கிளப்பி சந்துரு சாலையில் கலந்தான். வளைவெடுத்து பாதையைக் கடக்கும்போது நந்து திரும்பிப்பார்த்தான். கிட்டு அதே இடத்தில் மல்லாந்து கிடந்தான்.

`லே என்னல இப்படி அடிச்சுப்புட்டிய. செத்துகித்து போய்ருக்கப்போறான்ல. ` நந்து குரல் நடுங்கிக்கொண்டிருந்தது. ` நீ வாயவைக்காத. பல்லு ரெண்டு விழுந்துருக்கும். இனி மொளைக்காது. எங்ககிட்ட வச்சுக்கிட மாட்டான். நீ ஊருக்குப் போறவன் ஏங்கிடந்து சலம்புத`. சந்துரு நந்துவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வாரம்ல என்று கைகாட்டிவிட்டுச் சென்றான். நந்து உள்ளே போய் சட்டையைக் கழற்றி ரத்தம் இருக்கிறதா என சுற்றிப்பார்த்துவிட்டு இல்லையென்றதும் திருப்தியாகி வெளுப்புத்துணி மூட்டை மீது எறிந்துவிட்டு சாரம் மாற்றி வந்து மறு நாள் கிளம்புவதற்காக துணிகளை மடித்து வைத்தான்.

அலைபேசியை எட்டிப்பார்த்தான் அது சிணுங்கும் விளக்குகளின்றி உயிரற்றுக்கிடந்தது. ஒரு பகல் முடியப்போகிறது. இன்னும் அவளிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்தால் அவள் எண்ணை வாங்கியிருக்கலாம். அவளாக அனுப்பும் வரை அவள் எண் தெரியாது. எதோ ஒரு தயக்கம் பிரியாவிடம் அவள் எண் கேட்பதிலிருந்து தடுத்தது. ஒரு இரவில் அறைகுறையாகப் பார்த்த பெண்ணைப்பற்றி ஏன் இவ்வளவு குழம்புகிறோம் என்று தோன்றியது. இது நிகழ்வது எதிர்பார்த்திருந்தோம் என்ற எண்ணம் வந்து பழைய எண்ணத்தில் மீது மோதியது. தலையை உலுக்கிக்கொண்டான். அடுக்களை சென்று வீட்டுத்தீவனங்கள் சிலவற்றை கவரில் கட்டி வந்து பெட்டியில் வைத்தான். மீண்டும் ஒருமுறை சுற்றிவந்து கொடியில் காய்ந்துகொண்டிருந்த துணிகளை மடித்து வைத்தான். வந்து படுத்து எப்போது உறங்கினோம் என்றறியாமல் உறங்கிப்போனான்.

o
நந்து எழுந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. பதறி மணி பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. குருவாயூர் எக்ஸ்பிரஸுக்கு இன்னும் நேரமிருந்தது. ஆசுவாசமானான். போய் முகங்கழுவி அடுப்படிக்குப் போனான். கடுங்காப்பி இருந்தது. சுற்றிலும் பார்த்தான் பால் இல்லை. சுடவைத்துக் குடித்தான். ` நாந்தான் வரும்லால. நீயென்ன அடுப்புல நிக்கது. ஆம்பள அடுப்படில நிக்காதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்` டிவியிலிருந்து அம்மா எழுந்துவந்தார். `பால் இல்ல பாத்துக்க. சரி வரட்டும் போடுவோம்னு இருந்தேன் நீபாட்டு வந்துட்ட` என்றார். ` சென்னைக்குப்ப்போய் தான் தான் போடவேண்டும் என்றாலும், கடையில்தான் குடிப்பேன் என்றாலும் என்ன சொன்னாலும் அவருக்கு குரல் உடைந்துவிடும். சமாதனப்படுத்துவது பெரும்பாடாகிவிடும். ஒண்ணும் சொல்லாமல் காபியை எடுத்துக்கொண்டு அடுக்களையைவிட்டு வெளியே வந்தான். குடித்துவிட்டு டம்ப்ளரை உணவுமேசையில் பாத்திரங்களுடன் வைத்துவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப்போனான். வெந்நீர் சூடு இறங்கியிருந்தது. கன்னத்தில் ஓங்கி அடித்ததில் முழங்கைக்கு அருகே இருந்த உளைச்சலுக்கு இதமாக இருந்தது. குளித்துவிட்டு வெளியே வந்தான். `போன் கத்திட்டே இருந்துது போய் என்னானு பாரு` என்றார்.

வழக்கமான குறுஞ்செய்திகள். மாலை வணக்கங்கள். பல எண்களுக்கு நடுவே அவள் குறுஞ்செய்திகள் வரிசையாக இருந்தன. `ஹாய்` . `என்ன சில்லுண்டித்தனமெல்லாம் முடிஞ்சுதா` ` நாளைக்கு யார அடிக்கிறதா இருக்கீங்க` `பிசியா“ நான் கெளரி தெரியலையா“ஹலோ` . பதினைந்து நிமிடத்தில் வரிசையாக அனுப்பியிருந்தாள். `ஹாய். கிளம்பிகிட்டு இருக்கேன். ஊருக்கு` ஒரே குறுசெய்தியாக அனுப்பிவிட்டு கிளம்பினான். ஜீன்ஸுக்கு மாறினான். போட்டோவாகத் தொங்குகிறவர்கள். அருகிலிருக்கும் அம்மன் கோயில் குங்குமம். வரிசையாக ஆசீர்வாதங்கள். முடித்துவிட்டு மீண்டும் அலைபேசியையும் பேக்கையும் எடுத்துக்கொண்டான். அம்மாவிற்கு ஒரு வணக்கம். `வரேன்`. `ம். பாத்துப்போ`. தெருவில் இறங்கி நடந்தான். இருள் கவிந்திருந்தது. வழக்காமன நாய்கள் காலடி கேட்டு குரைத்தபடி வந்து முகம் பார்த்து ` நீயா. யாரோன்னு நினைச்சேன். போய்ட்டுவா போய்ட்டு லெட்டர் போடு` வகை முகக்குறிகளுடன் தலையாட்டிவிட்டு வீட்டுக்குள் போயின. சிரித்துக்கொண்டான். இருபது சொச்ச வருடங்களில் திருடர்க்ளையே பார்த்திராத குறு நகரத்திலேயே ஒதுக்குப்புறமான வீட்டுத்தொகைகளில் யாரைத்தேடி அலைகின்றன இந்த நாய்கள் என்று தோன்றியது. மீண்டும் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் ` அடேங்கப்பா. அதுக்குள்ள சென்னை ஊராவும், ஊர் வேறயாவும் மாறிடுச்சா` அவள்தான். அவளின் சீண்டல்கள் இரண்டே இரவுகளில் பழகி புன்னகைக்க வைத்தன. `அப்டியே சொல்லிப்பழகிட்டேன்` `ம். எப்படி போறீங்க பஸ்ஸா?` என்றாள் `இல்ல ட்ரெயின் . ஒம்பதரை குருவாயூர்` என்றான்.

`சரி கேட்டதுக்கு பதில் வர்லியே` `என்ன கேட்டீங்க? எதுக்கு பதில்வரல` `உங்க ரவுடித்தனம் பத்தி` `ம்ம். அதெல்லாம் முடிஞ்சுது. பல்லு பேந்துருக்கும். இனி எங்க வழில வரமாட்டான்` ` உங்க வழின்னா. ஊருக்குப்போற வழியா` `இல்ல. சந்துரு வழிக்கு` அனுப்பியபிறகு அவளுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வந்தது ` எங்க அஞ்சு பேர் வழிக்கும்தான் அதுக்குத்தான அடிச்சது` இன்னொரு குறுஞ்செய்தியை அனுப்பினான். `ஹா ஹா. சந்துரு லவ் மேட்டர்தான. இதுகூடயாத் தெரியாம இருக்காங்க` என் குழப்பங்களை எங்கோ அமர்ந்து புரிந்துகொள்கிறாள் என்பது மேலும் குழப்பமாக இருந்தது ` பிரியா சொல்லிருக்கா. உங்க பாண்டவ பிரண்ட்சிப். லெட்டர் எழுதுறதுக்கு நீங்க குடுக்கிறதுக்கு அவர் இன்பா. லவ் பண்றதுக்கு மட்டும் சந்துரு. நல்லாருக்கு உங்க கதை.` என அதற்கும் பதில் வந்தது. ` நாளைக்கு எனக்கு ஒரு பிரச்சினைன்னா அவன் வருவான். இதெல்லாம் இருக்கிறதுதான` என்றான் நந்து. பதில் வரவில்லை. பார்க்கவில்லை எனத் தோன்றியது. முக்கியமான வேறு வேலையில் அவள் இருப்பாள். அல்லது அவள் அலைபேசியை வைத்து பேசிக்கொண்டிருப்பதைப் பிடிக்காத யாராவது அறைக்கு வந்திருக்கவேண்டும். அவளுக்கான காரணங்களை தான் ஏன் உருவாக்கிக்கொள்கிறோம் என்ற எண்ணம் வந்து புன்னகைத்தான்.

ரயில் நிலையத்தில் முன்பதிவற்ற பெட்டிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு திறந்து கிடந்த பாதை வழியாகப்போய் ரயில் நிலையப்பெஞ்சில் அமர்ந்து கொண்டான். தூரத்தில் பாண்டவ கூடுகை ஆலமரம் கிளைபரப்பி ஹோவென நின்றிருந்தது. வனாந்தரத்தில் வேட்டையாடிவிட்டு இளைப்பாறும் மிருகமொன்றின் சித்திரம் அந்த மரத்தை எப்போது தூரத்திலிருந்து பார்த்தாலும் நினைவுக்கு வரும். சிறுவயதில் பள்ளி விட்டு வந்து ஊஞ்சலாடிக்கிடந்த காலத்திலிருந்து கல்லூரி மாலைகளில் கூடியமர்ந்து கதையளந்த காலங்கள் வரை ஆலமரம் அவர்கள் ஐவருக்கும் முக்கியமான இடமாக இருந்தது. சிறுவயதில் அவர்கள் அந்த ஆலமரத்தில் மரக்குரங்கு விளையாடுவார்கள். இறங்கினால் கீழே நின்று விரட்டுகிறவன் தொட்டுவிட்டால் தோல்வி. ஆலமர விழுதுகள் மண் தொடாமல் மரத்திலேயே இருந்தபடி கால் இறங்க வசதியானவை. பழுத்த மரங்களின் கிளைகள் தரைதொலைவிற்கே இணையாக வந்து திடிரென மேல் நோக்கி வளைகிறவை. வளைந்த மரங்களின் விழுதுகள் தரையைத் தொடுவதற்காக ஆடிக்கொண்டு கீழிறங்குபவை. விளையாட்டு மரங்கள் தொடர்ந்து மனிதக் கைபட்டு தரைதொடாத விழுதுகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பவை. சுண்டு விரல் பருமன் முதல் தொடை பருமன் வரை விதவிதமான விழுதுகள். இளமைக்கு அவர்கள் வந்தபோது மரவிளையாட்டுகள் முற்றிலுமாக ஊரிலேயே குறைந்திருந்தது. புதிய சிறுவர்கள் அந்த மரத்தை பாரம்பரியத்தின் படி தத்தெடுத்துக்கொள்ளவில்லை. அவர்களே மரத்தை தங்கள் மாலை சந்திப்புக்கள்மாக்கிக் கொண்டார்கள். சிறுவயதில் ஏறி விழுந்து கை உடைத்துக்கொண்ட மர நிழலில் இளமையில் சாய்ந்திருந்து உடல் மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். சந்துரு தன் காதலைப் பற்றி நண்பர்களுக்கு அந்த மரத்தடியில் வைத்துதான் அறிவித்தான். பிற நண்பர்களும் தங்கள் வாழ்விலும் காதலென்று ஒன்று வந்தால் அந்த மரத்தடியில்தான் நண்பர்களுக்கு அறிவிப்போம் எனச் சொன்னார்கள். சாதாரண மரம் திடீரென வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக அன்றிலிருந்து மாறிப்போயிருந்தது.

`ட்ரெயின் எப்போ` குறுஞ்செய்தி ஒளிர்தது. `இன்னும் அர மணி நேரம் இருக்கு. வெறும் ஸ்டேசன்ல தேவுடு காத்துட்டு இருக்கேன்` என்றான். `எங்க`. `வேற எங்க பெஞ்சுலதான். ` `அந்த மஞ்சப்பூ மரம் இருக்குமே அந்த பெஞ்சா` அவள் குறுஞ்செய்திக்குப்பிறகுதான் அதைக் கவனித்தான். அந்த சிறு சிமெண்ட் மேடைக்கு அருகிலேயே சரக்கொன்றை மரமொன்று நின்றிருந்தது. மரமென்றும் சொல்லமுடியாமல் செடியென்றும் சொல்லமுடியாத உயரம். நிலையத்தின் குழல்விளக்கில் பொன்னென ஒளிரும் மலர்கள். பாதி உதிர்த்த கிளைகள். தனி இரவில் பெஞ்சில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அருகமர்ந்து தலையாட்டும் பாவனையில் அது கேட்டுக்கொண்டிருக்கூடும் என்று தோன்றியது. `அதேதான். சரக்கொன்றை. அரபுல இது பேர் கியார்சாம்பார் தெரியுமா` என்று சொன்னான். `மஞ்ச கலர்னா சாம்பார்ன்றதா… இதெல்லாம் ஏன் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க` என்று பதில் வந்தது. ` யாரோ எப்பவோ சொன்னது. ` `அரபுல சொல்லுறாங்கன்னா முஸ்லீமா?` என்றாள். `ஆமா. பேரு ஆயிஷா. வேண்டியவங்கதான்` என்றான். அனுப்பியபிறகு சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது. அவள் அமைதியாகும் நேரங்களிலெல்லாம் அவன் அமைதியிழந்தான். அமைதியிழப்பதை உடல் நடுங்கத்தொடங்குவதை தொண்டை அடைப்பதை அவனே ஆச்சர்யமாக கவனித்தான். அவள் அங்கே வேறு வேலைகளில் பிசியாகியிருக்கக் கூடும். அல்லது எதையாவது அனுப்புவதற்காக எழுதி எழுதி அழித்துக்கொண்டிருக்கவேண்டும். ரயில் தண்டவாளங்கள் இரவில் தொடமுடியாத தூரத்திலிருந்து கிளம்பி காலடி நழுவி தொடமுடியாத தூரங்களுக்கு நீண்டு போய்க்கொண்டிருக்கிறது. ஆலமரங்கள் பகலெல்லாம் வெயிலாடிய தலையை காற்றில் அலைந்து உளைச்சலெடுத்த விழுதுகளை இளைப்பாறச் செய்கின்றன. சரக்கொன்றை மரத்தின் சீனப்பெயரில் ஒரு திருனெல்வேலி அண்ணாச்சியின் குரல் இருக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத சொற்றொடர்கள் உள்ளே ஓடின. `லவ்வரா` ஒரே வார்த்தை அவளிடமிருந்து வந்தது. `இல்ல. ஸ்கூல் பிரண்டு. இப்ப எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது. இந்தவயசுக்கு அவங்கள்ள கல்யாணமே பண்ணி வச்சிருப்பாங்க` நீளமாக விளக்கவேண்டிய அவசியம் எழுந்தது கண்டு குழம்பி தலையை உலுக்கிக்கொண்டான். `ம். ரொம்பத்தான். குட் நைட்` இரவின் கடைசிக் குறுஞ்செய்தி என்ற அறிவிப்பு இது. ரயில் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. அல்லது வந்து சென்றிருக்கலாம். அல்லது வராமலே ரத்தாகி வீட்டுக்குத் திருப்பிச் செல்லவேண்டியிருந்தால், அல்லது சந்துருவீட்டிற்கு செல்லவேண்டியிருந்தால், அங்கு கெளரிவரவேண்டியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. குட் நைட் அனுப்பி இந்த இரவை இப்படியே முடித்து வைக்கலாமா அல்லது எதாவது கேள்விகளை அனுப்பி பேச்சைத்தொடரலாமா எனக் குழம்பினான். பெண்கள் எப்பொழுதும் இருபுறமும் கூரான கத்திகளைத்தான் நம் கையில் கொடுக்கிறார்கள் எனத்தோன்றி சிரித்துக்கொண்டான். எறிந்தே ஆகவேண்டும். எந்தப்பாதி அவளைக் காயப்படுத்தும் எனச் சொல்லமுடியாது. பேச்சைத் தொடர்வதையும் பேச்சைத்தொடராதையும் இரண்டையுமே நாளைய குற்றச்சாட்டாக வைத்துக்கொள்ள முடியும். குட் நைட் என மீண்டும் மீண்டும் எழுதி எழுதி அனுப்பாமல் அழித்தான். `ட்ரெயின் ஏறிட்டீங்களா` மீண்டும் அவளிடமிருந்தே குறுஞ்செய்தி வந்தது. அவர்கள் எறியும் போது கைப்பிடி மட்டுமே இருக்கிறது. அதை நாம் பிடிக்கும்போதுதான் இருபுறமும் கத்திகளை வெளிப்படுத்துகிறது. ஏறியிருந்தாலும் அதனால்தான் பதில் சொல்லவில்லை என்றாகிவிடும். ஏறாவிடில் ஏன் பதில் இல்லை என்ற குற்றச் சாட்டு வரலாம். மீண்டும் கத்திகள். ` இன்னும் இல்ல. உங்க மரத்துக்கிட்ட பேசிக்கிட்ருக்கேன்` என்றான். `ம். எனக்கும் பேசப்பிடிக்கும். ஆனா நான் ட்ரெயின்ல போறதே அபூர்வம். அதுவும் எதிர்திசைல போகணும். எதிர்பகுதில பாத்தீங்களா பெஞ்சு தனியா மரம்தனியா பிரிச்சு பிரிச்சு நட்டு வச்சிருக்காங்க. மெட்ராஸ் போறதுலதான் மரமும் பெஞ்சும் ஒண்ணாக்கிடக்கு` என்றாள்.

அவள் சொன்னது சரிதான். இருபுறமும் மரம் நட்டவர்கள் வேறு வேறு ஆட்களாக இருக்கவேண்டும் எனத் தோன்றியது. மூன்று ஆதிகாலத்து பெஞ்சுகள் மூன்று மரங்கள். எதிர்புறத்தில் இரண்டு பெஞ்சுகளுக்கு நடுவில் ஒரு மரம் கணக்கில் நட்டிருந்தார்கள். இந்தபுறம் ஒரு பெஞ்சுக்கு அருகில் ஒரு மரம் என்ற கணக்கு. சிறு செடியாக வைக்கும்போதே பெஞ்சில் அமரப்போகிறவனை எண்ணுவதற்கு தனி மனம் வேண்டும். அது குழந்தையின் மனமாக இருக்கலாம். அல்லது பருவத்திலிருக்கும் பெண்ணின் மனம். பெண்ணின் மனம் மட்டும்தான் இப்படி காலாதீதங்களைக் கடந்து கண்னக்குகளை உருவாக்கும். காலாதீதங்களுக்கு கணக்குகளை நியாபகம் வைத்திருக்கிறவர்கள். அந்த் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாம். கணவன் எதிர்புறம் இடைவெளிகளில் மரம் வைக்க அவள் இந்தப்புறம் பெஞ்சுக்கொன்றாக மரங்களை நட்டிருக்கவேண்டும். அவர்களுக்கொரு குழந்தையிருந்தால் அது நடுவில் தண்டவாளத்தில் அமர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற பதறினான். இல்லை. அந்தக்குழந்தை இந்தப்பெஞ்சுகளில் எதாவது ஒன்றில் அமர்ந்திருக்கக்கூடும். பெரும்பாலும் அம்மாவின் புறத்தில். அவள் கணக்குகள் இல்லாதவள் ஆயினும் பெஞ்சில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக இடைவெளி விடாமல் சரக்கொன்றைச் செடியை பெஞ்சுக்கு அருகிலேயே நட்டிருக்கவேண்டும். அவன் இதுவரை சரக்கொன்றை மரமாக மஞ்சள் நிறத்தில்தான் பாத்திருக்கிறான் செடியாகப் பார்த்திருக்கவில்லை என்பது நியாபகம் வந்தது. கெளரியை முதல் முறைப் பார்த்தபோது அவளும் மஞ்சள் சுடிதாரில் இருந்தாள். பூத்துக்குலுங்கும் மரமாக. அவள் செடியாக இருந்த சிறுவயதுகள் எங்காவது புகைப்படத்தொகுப்பில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடும். `ம்ம்` என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். . `ட்ரெயின்ல தூங்கிருவீங்களா` ` பொதுவா தூக்கம் வராது. சீட்ல எங்கியாவது உக்காந்து அரத்தூக்கம் தூங்குவேன். முழிச்சிருந்தாலும் மெசேஜ் அனுப்ப முடியாது. டவர் விட்டுவிட்டு கிடைக்கும். மொபைல் சார்ஜ் போய்டும்னு ஆப் பண்ணிடுவேன்` என்றான். ` நீளமா பேசுறீங்க. மெசேஸ்க்கு கேட்கல. சும்மா கேட்டேன்` என்றாள். அமைதியாக இருந்தாள். அவளிடமிருந்தே மறுபடி `சரி இதுக்குமேலையும் மொபைல நோண்டுனா ஹாஸ்டல்ல கூட இருக்கதுக மேல விழுந்து பிறாண்டும். நானும் தூங்குறேன் இப்ப நெஜமாவே குட் நைட்` என்றாள். ` குட் நைட்` என்றான். அலைபேசியை அணைத்து மடித்து பெட்டியைத் திறந்து மடித்த துணிகளுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தான். சரக்கொன்றை மரத்தைத் திரும்பிப்பார்த்தான். இருளில் அது இன்னும் தலையாட்டிக்கொண்டிருந்தது. புன்னகத்தது போல் இருந்தது. அவனும் புன்னகைத்து தலையசைத்தான். காற்றில் ஒரு மலர் உதிர்ந்து அவன் தோள் பட்டையில் விழுந்தது.