ரிபு – 7

1 பின்னூட்டம்

நந்து அறைக்குள் நுழைந்தபோது அறை சிதறிக்கிடந்தது. காலியான புட்டிகள் உருண்டிருந்தன. செய்தித்தாள் மீது பரத்தியிருந்த கிழங்குவறுவல் துண்டுகள் காற்றில் பறந்து அலங்கோலமாக இருந்தது. இன்னும் ஒரு புட்டி மிச்சமிருந்தது. இன்பா கதை சொல்பவனைப்போல கை நீட்டி அமர்ந்திருந்தான். சந்துரு கைகளை பின்னால் ஊன்றி கதை கேட்டுக்கொண்டிருந்தான். மீதி இருவரும் புன்னகையுடன் திரும்பி நந்துவைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்கள். இடங்கள் மாறியிருந்தன. ஒரு இடவெளியைக் கண்டறிந்து நந்து போய் அமர்ந்தான். இன்பா தலை திருப்பி நந்துவைப்பார்த்து `அவன மிதிக்கணும்ல. அதான் சொல்லிட்ருக்கேன்` என்றான். எவனை எதற்காக என்ற கேள்விகள் தேவையில்லை. சொல்லத்தொடங்கப்ப்ட்ட கதைகள் அதன் பாதைகளைத் தானே கண்டறியட்டுமென அமைதியாக இருந்தான். இன்பா பதில் வராததில் குழம்பி சந்துரு பக்கம் திரும்பி மறுபடி `அவனை மிதிக்கணும்ல` என்றான்.

`மிதிப்போம் சரி. எதுக்காம்` சந்துரு சொல்லிவிட்டு நந்துவைப்பார்த்து மறுபடி சிரித்தான். `எங்கிட்டையே லெட்டர் குடுக்க வாரான் பாத்துக்க. அவட்ட குடுக்கச் சொல்லி. உன் ஆளுக்கு. நீயாரு நாம யாருன்னு தெரியும்ல அவனுக்கு. அப்புறமும் கொழுப்பு. அவன விட்டுட்டே இருக்கியல. அதான் ஆடுதான்` சொல்லிவிட்டு இன்பா ஆசுவாசமானான். சந்துரு தன் கதையைச் சொல்கிறவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவன் போல சுவற்றின் மூலையில் ஆடிக்கொண்டிருக்கும் சிலந்தியைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிலந்தி வலையை இன்னும் பெரிய பரப்புக்கு விரிப்பதைப்போல சுவரினை அளைந்து கொண்டிருந்தது. ஒரு நூலில் வலையிலிருந்து பழைய திரைப்பட நாயகர்களைப்போல ஆடியிறங்கி பின் மேலேறி சுவற்றில் கால்களை வைத்து உந்தி மறு முனையைத் தொட்டது. அங்கிருந்து மீண்டும் ஆடல் மறு முனை. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்குமே வலை தன் பரப்புகளை இழுத்து பெரிதாகிக்கொண்டேயிருந்தது. திடீரென சன்னதம் வந்தவன் போல ` அடிக்கிறது இல்ல. அடிச்சா நாலு நாளாவது கிடைல கிடக்கணும். இன்னும் காலேஜ்ல பண்ணாப்ல அவன் கிட்ட போய் பஞ்ச் பேசிட்டு வர்றது மறு நாளே அவன் வந்து திருகுத்தாளம் பண்றதுன்னு இருக்கக்கூடாது` என்றான் சந்துரு.

`லேய் பண்றதெல்லாம் செர்ரி நான் நாளைக்கு ராத்திரிக்கு ஊருக்குப்போவணும். அதுக்கு முன்னாடி பண்னுங்க. நானும் ரெண்டு போட்ருதேன். ஆபிஸ் கருமம் தத்தியாப்போவுது கை சுருசுருங்கு` என்றான் நந்து. `இங்கதான் சிஎஸ்ஸி வாரான் பய. கனராபேங்க் வாசல்ல வச்சு அடிப்போம். அல்லது ஆரெம்பி பைக்ஸ்டாண்ட்ல வச்சுப்போம்` இன்பா சிரித்தான். `பேங்கு அப்பா வந்தாலும் வருவாரு. இன்பா நீ அவன பேச்சுக்காட்டி பைக்ஸ்டாண்டு கூட்டி வா பாத்துப்போம்`என்றான் சந்துரு. `லேய் போதவாக்குல எதாவது பேசிட்டு நாளைக்கு விடிஞ்சதும் முருகான்னு மலந்துராதீங்கடே. நாளன்னிக்கு இழுத்தா நான் வரமுடியாதுபாத்துக்க` நந்து பெப்சியின் கடைசி சிப்பைக் கவிழ்த்துக்கொண்டான். இன்பா தரையைத்துடைப்பவ்ன்போல கண்ணை மூடியபடியே துளாவி சிப்ஸை எடுத்து போட்டுக்கொண்டான். `அடிச்சுட்டு ஊருக்கு ஓட்ற நாய்க்கு பேச்சப்பாத்தியா. நாங்க இங்கதாம்ல இருப்போம். அடிக்கிறொம் நாளைக்கு` என்றான். மிச்சம் இருந்த இருவரும் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருக்கிறவர்கள். போதையின் கடைசி கணங்களில் இருந்தார்கள். கண்கள் சுருங்கி மின்விசிறியைப் பார்த்தபடி `இருக்கோம்ல. நாங்களும் வருவோம். நாளைக்குச் சாயங்காலம் என்ன` என்றான் ஒருவன்.

நால்வரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். பிறகு நந்துவைப்பார்த்து சிரித்தார்கள். `சரில கடைசி கட்டிங். எடு ஒரு சியர்ஸ்` என்றான் இன்பா. `முடிஞ்சிருச்சு மாப்ள இரு வர்றேன்` நந்து எழுந்தான். கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி இருட்டில் பூனையைப்போல உறுமிக்கொண்டிருந்தது. இருளில் அதன் கசியும் ஒளியை நோக்கி நடந்து கதவைத்திறந்து குனிந்து சின்ன ஒரு பெப்சி கேனை எடுத்துக்கொண்டான். நிமிர்ந்த போது அங்கே அவள் நின்றிருந்தாள். கெளரி. `என்ன கொள்ளக்கூட்டத்தலைவனாட்டம் திட்டமெல்லாம் முடிஞ்சுதா` என்றாள். நந்துவிற்கு முழங்கை மயிர்கள் கூச்செறிந்தன. `ம். சும்மா பேசிட்டு இருந்தோம்` திரும்பி நடந்தான். `உங்க நம்பரென்ன` தன் அலைபேசியை கையில் பிடித்தபடி கேட்டாள். நோக்கியா. எண்களின் வெள்ளைக்கண்ணாடி இருளில் மின்னியது.

`எதுக்கு` தன் அலைபேசி வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

` நாளைக்கு யார் கிடைல கிடக்குறாங்கன்னு கதை கேட்கணும்ல`

`ப்ரியாகிட்ட கேட்டுக்கங்க`

`ம்ம்க்கும். அவ உங்க பேச்சுல தலையிடக்கூடாதுன்னு புலம்பிகிட்டு இருந்தா. என் காதுல விழுந்தத வச்சுக்கேட்டா ஒட்டுக்கேட்டியான்னு அதுக்கு வேற மல்லுக்கு நிப்பா`

`ம்`

`என்ன ம். குடுக்க விருப்பமில்லைன்னா சொல்லுங்க. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்கமாட்டேன்`

பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவனைப்போல எண்களைச் சொன்னான். சொன்னபிறகு ஆங்கிலத்தில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. `இப்ப மொபைல் இல்ல. ஒரு ஹாய் அனுப்பி விடுங்க. நாளைக்கு நம்பர சேவ் பண்ணிக்கிறேன்` என்றான். அவள் எதுவும் சொல்லாமல் திரும்பி பிரியாவின் அறைக்குச் சென்றாள். கதவருகில் `ம்` என்பதுபோல் கேட்டது. அல்லது பெருமூச்சாக இருக்கலாம். சிறிது நேரம் குழம்பி நின்றிருந்துவிட்டு சந்துருவின் அறைக்குவந்தான். மற்றவர்கள் அப்டியே படுத்திருக்க, சந்துரு மீதிக்குப்பைகளைச் சுருட்டி மூலையில் பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு படுக்கைகளைப் போட்டுக்கொண்டிருந்தான். ` நீ வரவரைக்கும் இருப்பாங்களா. முடிஞ்சுது. நீ கட்டில்ல படு. நான் இவனுக கூட படுத்துக்கிறேன்`

நந்து தரையில் படுத்திருந்தவர்களைத்தாண்டிப்போய் கட்டில் ஏறினான். மின்விசிறி சத்தமாக தலைக்குள் சுழன்றது. சந்துரு புரண்டு எதையோ முனகி அமைதியானான்.

o

வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. நந்து கண்ணன் கபே தகரக்கூரையின் கீழாக நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தான். கூப்பிடும் தூரத்தில் நாகர்கோயிலுக்கும் திருனெல்வேலிக்குமான பேருந்துகள் ஒன்றையொன்று எதிர்முட்டுவது போல் ஓடிவந்து பேருந்து நிலையத்திற்குள் வளைந்து திரும்பிக்கொண்டிருந்தது. கபே கனராபேங்க் மாடியிலிருக்கும் சிஎஸிக்கான வழிக்கும் பைக்ஸ்டாண்டுக்கான வழிக்கும் மிகச் சரியாக மத்தியில் இருந்தது. சுழல் படிக்கட்டுகளின் நெரிசல் தூரத்தில் தெரிந்தது . முந்தைய வகுப்பு முடிந்திருக்கவேண்டும். அடுத்த வகுப்பிற்கான நுழைகிறவர்களும் மேலிருந்து இறங்கி வருகிறாவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும் விலகிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றனர். இன்பா வந்திருக்கவில்லை. கிட்டு நிலையத்திற்கு வளையும் திருனெல்வேலி பெயரிட்ட பேருந்திலிருந்து ஓட்டத்திலிருந்து இறங்கி இருபுறமும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து மறுபுறம் வந்தான். சாலையைக் கடந்தபிறகு நந்துவைப்பார்த்துவிட்டு சற்றுக்குழ்ம்பி கையசைப்பதா வேண்டாமா எனக்குழம்பினான். நந்து கிளாஸை கபே சுவற்றில் வைத்துவிட்டு கையசத்தான். கிட்டுவும் கையத்துவிட்டு அவனை நோக்கி தயங்கியபடியே வந்தான். நந்து காசைக்குடுத்துவிட்டு அவனை நோக்கிச் சென்றான்.

`என்னல இங்க நிக்க. உன் பசங்க இல்லாம, மெட்ராஸ்லதான இருக்க` என்றான் கிட்டு. `ஆமா லிவுக்கு வந்தேன். ஏர்வாடி போணும் அதான் நிக்கேன் . நீ எப்படில்ல இருக்க. என்ன பண்ற` நந்து சிந்தனையில்லாமல் வாயில் வந்ததைச் சொன்னான். இன்பா வரும்வரை பேச்சுக்குடுக்கவேண்டும். `ம். மாமா திருவனந்தபுரத்துல கூப்ட்றேன்னு சொல்லிருக்காரு. சும்மா இருக்கோம்னு அப்டியே கம்யூட்டர் கிளாஸ் போய்ட்டு இருக்கேன்` என்றான். நந்து அலுவலகக் கதைகளைச் சொல்லியய்படியே பைக்ஸ்டாண்ட் நோக்கி நடந்தான். கிட்டு பேசிக்கொண்டே கூடவந்தான்.`கிளாஸ் போய்க்கலாம் இப்ப என்ன. சும்மா சர்டிபிகேட்டுக்காக பண்றதுதான இதெல்லாம்`. நந்து பைக்ஸ்டாண்டில் மறைவான வெளியேறும் வழியில் ஒதுங்கி நின்று சுவற்றில் ஒற்றைக்கால் மடித்து நின்றான். கிட்டு எதிரில் கையாட்டி பேசிக்கொண்டிருந்தான். சராசாரிக்கு சற்று அதிகமான உயரம். அண்னாந்து பார்த்து பேசிக்கொண்டிருந்ததில் நந்துவிற்ர்கு கழுத்து இழுத்தது. நெளித்து கழுத்திற்குச் சொடக்கெடுத்து திரும்பும்போது இன்பாவும் சந்துருவும் பைக்கை ஸ்டாண்டிற்குள் நுழைத்தார்கள். விரல்களில் சொடக்கெடுத்து நந்து தயாரானான். பின்வாசல் வழியாக வெளியேறி எதற்கும் சம்பந்தமில்லாதவர்கள் போல இன்பாவும் சந்துருவும் வந்தார்கள். `இந்தா வந்துட்டாங்க்கல்ல பாண்டவனுகளுல்ல ரெண்டு பேரு. மிச்ச ரெண்டு பேரும் வரானுகளாமா` கிட்டு சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தான்.

பதட்டம் தெரிந்தது. நந்து எதுவும் அறியாதவன் போல கால்மாற்றி நின்றான். கைகாட்டினான். `என்னல மூத்துரசந்துல என்ன பண்ணுதிய` என்றான் இன்பா. `சார் வருவீங்கன்னு வெயிட் பண்றோம், மிச்ச ரெண்ட எங்க` என்றான் கிட்டு. `சார் பெரிய சூரரு இவருக்கு படையத்தான் கூட்டிவரணும். நான் ஒருத்தன் போதாதா` இன்பா சீண்டினான். கிட்டு மையமாப் புன்னகைத்தான். `என்ன இப்ப` என்றான். `ஒண்ணுமில்ல. சந்துரு ஆளு பின்னாடி சுத்துறத நிறுத்திக்க என்கிட்ட அவளுக்கு லெட்டர் குடுக்கிற சீன விட்ரு. அவ்ளொதான்` இன்பா கோணலாகச் சிரித்தான். கிட்டு ஒன்றும் சொல்லவில்லை. முத்துவும் மணியும் மறுபுறத்திலிருந்து வந்தார்கள். `என்னல சும்மா பேசிட்ருக்கிய` வந்த வேகத்தில் மணி துள்ளி கிட்டுவை அடித்தான். காதுக்கு சற்று மேல் அடிவிழுந்து கிட்டு நின்ற இடத்தில் தடுமாறினான். இன்பா இருவரின் தோளில் கைவைத்து எக்கி வயிற்றில் மிதித்தான். கிட்டு வயிற்றைப்பிடித்துக்கொண்டு மடங்கி அமர்ந்தான். ஐவரும் சுற்றிலிருந்து கை நீட்டி கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்க்ள். கிட்டு ஓடமுடியாமல் திமிறி சில அடிகளை விலக்கிவிட்டு பல அடிகளை தலையிலும் மறைத்திருந்த கைகளிலுமாக வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். சந்துரு கண்ணைக்காட்ட இன்பா பேண்ட்பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தான். சைக்கிள் பல்சக்கரத்தை இரண்டாகவகுந்து கூர்முனைகளை மழுங்கடிட்த்து தேய்க்கப்பட்டிருந்த இரும்பு வளையம். இடைவெளியில் கைவிட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓங்கி குத்தினான். முதல் குத்து ம்ணிக்கெட்டில் விழுந்தது. கிட்டு பதறி கையை உதற அடுத்த குத்து ஆளமாக கன்னத்தில் விழுந்தது. வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. ரத்தைத்தைக் காறித் துப்பும்போது இரண்டு பல்துண்டுகள் விழுந்தன. சந்துரு அதை வாங்கி தானும் ஒரு குத்து குத்தினான். காதில் மண்டையெலும்பில் ஆழமாக அடிவிழுந்த சப்தம் நங்கென்று கேட்டது. கிட்டு மல்லாந்து விழுந்தான். கண்காட்டிவிட்டு மணியும் முத்துவும் நடந்துசென்று திருனெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். சந்துரு ஓடிப்போய் பைக்கை எடுத்துவந்தான். இன்பாவும் நந்துவும் ஏறிக்கொண்டனர். பைக்கைக் கிளப்பி சந்துரு சாலையில் கலந்தான். வளைவெடுத்து பாதையைக் கடக்கும்போது நந்து திரும்பிப்பார்த்தான். கிட்டு அதே இடத்தில் மல்லாந்து கிடந்தான்.

`லே என்னல இப்படி அடிச்சுப்புட்டிய. செத்துகித்து போய்ருக்கப்போறான்ல. ` நந்து குரல் நடுங்கிக்கொண்டிருந்தது. ` நீ வாயவைக்காத. பல்லு ரெண்டு விழுந்துருக்கும். இனி மொளைக்காது. எங்ககிட்ட வச்சுக்கிட மாட்டான். நீ ஊருக்குப் போறவன் ஏங்கிடந்து சலம்புத`. சந்துரு நந்துவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வாரம்ல என்று கைகாட்டிவிட்டுச் சென்றான். நந்து உள்ளே போய் சட்டையைக் கழற்றி ரத்தம் இருக்கிறதா என சுற்றிப்பார்த்துவிட்டு இல்லையென்றதும் திருப்தியாகி வெளுப்புத்துணி மூட்டை மீது எறிந்துவிட்டு சாரம் மாற்றி வந்து மறு நாள் கிளம்புவதற்காக துணிகளை மடித்து வைத்தான்.

அலைபேசியை எட்டிப்பார்த்தான் அது சிணுங்கும் விளக்குகளின்றி உயிரற்றுக்கிடந்தது. ஒரு பகல் முடியப்போகிறது. இன்னும் அவளிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்தால் அவள் எண்ணை வாங்கியிருக்கலாம். அவளாக அனுப்பும் வரை அவள் எண் தெரியாது. எதோ ஒரு தயக்கம் பிரியாவிடம் அவள் எண் கேட்பதிலிருந்து தடுத்தது. ஒரு இரவில் அறைகுறையாகப் பார்த்த பெண்ணைப்பற்றி ஏன் இவ்வளவு குழம்புகிறோம் என்று தோன்றியது. இது நிகழ்வது எதிர்பார்த்திருந்தோம் என்ற எண்ணம் வந்து பழைய எண்ணத்தில் மீது மோதியது. தலையை உலுக்கிக்கொண்டான். அடுக்களை சென்று வீட்டுத்தீவனங்கள் சிலவற்றை கவரில் கட்டி வந்து பெட்டியில் வைத்தான். மீண்டும் ஒருமுறை சுற்றிவந்து கொடியில் காய்ந்துகொண்டிருந்த துணிகளை மடித்து வைத்தான். வந்து படுத்து எப்போது உறங்கினோம் என்றறியாமல் உறங்கிப்போனான்.

o
நந்து எழுந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. பதறி மணி பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. குருவாயூர் எக்ஸ்பிரஸுக்கு இன்னும் நேரமிருந்தது. ஆசுவாசமானான். போய் முகங்கழுவி அடுப்படிக்குப் போனான். கடுங்காப்பி இருந்தது. சுற்றிலும் பார்த்தான் பால் இல்லை. சுடவைத்துக் குடித்தான். ` நாந்தான் வரும்லால. நீயென்ன அடுப்புல நிக்கது. ஆம்பள அடுப்படில நிக்காதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்` டிவியிலிருந்து அம்மா எழுந்துவந்தார். `பால் இல்ல பாத்துக்க. சரி வரட்டும் போடுவோம்னு இருந்தேன் நீபாட்டு வந்துட்ட` என்றார். ` சென்னைக்குப்ப்போய் தான் தான் போடவேண்டும் என்றாலும், கடையில்தான் குடிப்பேன் என்றாலும் என்ன சொன்னாலும் அவருக்கு குரல் உடைந்துவிடும். சமாதனப்படுத்துவது பெரும்பாடாகிவிடும். ஒண்ணும் சொல்லாமல் காபியை எடுத்துக்கொண்டு அடுக்களையைவிட்டு வெளியே வந்தான். குடித்துவிட்டு டம்ப்ளரை உணவுமேசையில் பாத்திரங்களுடன் வைத்துவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப்போனான். வெந்நீர் சூடு இறங்கியிருந்தது. கன்னத்தில் ஓங்கி அடித்ததில் முழங்கைக்கு அருகே இருந்த உளைச்சலுக்கு இதமாக இருந்தது. குளித்துவிட்டு வெளியே வந்தான். `போன் கத்திட்டே இருந்துது போய் என்னானு பாரு` என்றார்.

வழக்கமான குறுஞ்செய்திகள். மாலை வணக்கங்கள். பல எண்களுக்கு நடுவே அவள் குறுஞ்செய்திகள் வரிசையாக இருந்தன. `ஹாய்` . `என்ன சில்லுண்டித்தனமெல்லாம் முடிஞ்சுதா` ` நாளைக்கு யார அடிக்கிறதா இருக்கீங்க` `பிசியா“ நான் கெளரி தெரியலையா“ஹலோ` . பதினைந்து நிமிடத்தில் வரிசையாக அனுப்பியிருந்தாள். `ஹாய். கிளம்பிகிட்டு இருக்கேன். ஊருக்கு` ஒரே குறுசெய்தியாக அனுப்பிவிட்டு கிளம்பினான். ஜீன்ஸுக்கு மாறினான். போட்டோவாகத் தொங்குகிறவர்கள். அருகிலிருக்கும் அம்மன் கோயில் குங்குமம். வரிசையாக ஆசீர்வாதங்கள். முடித்துவிட்டு மீண்டும் அலைபேசியையும் பேக்கையும் எடுத்துக்கொண்டான். அம்மாவிற்கு ஒரு வணக்கம். `வரேன்`. `ம். பாத்துப்போ`. தெருவில் இறங்கி நடந்தான். இருள் கவிந்திருந்தது. வழக்காமன நாய்கள் காலடி கேட்டு குரைத்தபடி வந்து முகம் பார்த்து ` நீயா. யாரோன்னு நினைச்சேன். போய்ட்டுவா போய்ட்டு லெட்டர் போடு` வகை முகக்குறிகளுடன் தலையாட்டிவிட்டு வீட்டுக்குள் போயின. சிரித்துக்கொண்டான். இருபது சொச்ச வருடங்களில் திருடர்க்ளையே பார்த்திராத குறு நகரத்திலேயே ஒதுக்குப்புறமான வீட்டுத்தொகைகளில் யாரைத்தேடி அலைகின்றன இந்த நாய்கள் என்று தோன்றியது. மீண்டும் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் ` அடேங்கப்பா. அதுக்குள்ள சென்னை ஊராவும், ஊர் வேறயாவும் மாறிடுச்சா` அவள்தான். அவளின் சீண்டல்கள் இரண்டே இரவுகளில் பழகி புன்னகைக்க வைத்தன. `அப்டியே சொல்லிப்பழகிட்டேன்` `ம். எப்படி போறீங்க பஸ்ஸா?` என்றாள் `இல்ல ட்ரெயின் . ஒம்பதரை குருவாயூர்` என்றான்.

`சரி கேட்டதுக்கு பதில் வர்லியே` `என்ன கேட்டீங்க? எதுக்கு பதில்வரல` `உங்க ரவுடித்தனம் பத்தி` `ம்ம். அதெல்லாம் முடிஞ்சுது. பல்லு பேந்துருக்கும். இனி எங்க வழில வரமாட்டான்` ` உங்க வழின்னா. ஊருக்குப்போற வழியா` `இல்ல. சந்துரு வழிக்கு` அனுப்பியபிறகு அவளுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வந்தது ` எங்க அஞ்சு பேர் வழிக்கும்தான் அதுக்குத்தான அடிச்சது` இன்னொரு குறுஞ்செய்தியை அனுப்பினான். `ஹா ஹா. சந்துரு லவ் மேட்டர்தான. இதுகூடயாத் தெரியாம இருக்காங்க` என் குழப்பங்களை எங்கோ அமர்ந்து புரிந்துகொள்கிறாள் என்பது மேலும் குழப்பமாக இருந்தது ` பிரியா சொல்லிருக்கா. உங்க பாண்டவ பிரண்ட்சிப். லெட்டர் எழுதுறதுக்கு நீங்க குடுக்கிறதுக்கு அவர் இன்பா. லவ் பண்றதுக்கு மட்டும் சந்துரு. நல்லாருக்கு உங்க கதை.` என அதற்கும் பதில் வந்தது. ` நாளைக்கு எனக்கு ஒரு பிரச்சினைன்னா அவன் வருவான். இதெல்லாம் இருக்கிறதுதான` என்றான் நந்து. பதில் வரவில்லை. பார்க்கவில்லை எனத் தோன்றியது. முக்கியமான வேறு வேலையில் அவள் இருப்பாள். அல்லது அவள் அலைபேசியை வைத்து பேசிக்கொண்டிருப்பதைப் பிடிக்காத யாராவது அறைக்கு வந்திருக்கவேண்டும். அவளுக்கான காரணங்களை தான் ஏன் உருவாக்கிக்கொள்கிறோம் என்ற எண்ணம் வந்து புன்னகைத்தான்.

ரயில் நிலையத்தில் முன்பதிவற்ற பெட்டிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு திறந்து கிடந்த பாதை வழியாகப்போய் ரயில் நிலையப்பெஞ்சில் அமர்ந்து கொண்டான். தூரத்தில் பாண்டவ கூடுகை ஆலமரம் கிளைபரப்பி ஹோவென நின்றிருந்தது. வனாந்தரத்தில் வேட்டையாடிவிட்டு இளைப்பாறும் மிருகமொன்றின் சித்திரம் அந்த மரத்தை எப்போது தூரத்திலிருந்து பார்த்தாலும் நினைவுக்கு வரும். சிறுவயதில் பள்ளி விட்டு வந்து ஊஞ்சலாடிக்கிடந்த காலத்திலிருந்து கல்லூரி மாலைகளில் கூடியமர்ந்து கதையளந்த காலங்கள் வரை ஆலமரம் அவர்கள் ஐவருக்கும் முக்கியமான இடமாக இருந்தது. சிறுவயதில் அவர்கள் அந்த ஆலமரத்தில் மரக்குரங்கு விளையாடுவார்கள். இறங்கினால் கீழே நின்று விரட்டுகிறவன் தொட்டுவிட்டால் தோல்வி. ஆலமர விழுதுகள் மண் தொடாமல் மரத்திலேயே இருந்தபடி கால் இறங்க வசதியானவை. பழுத்த மரங்களின் கிளைகள் தரைதொலைவிற்கே இணையாக வந்து திடிரென மேல் நோக்கி வளைகிறவை. வளைந்த மரங்களின் விழுதுகள் தரையைத் தொடுவதற்காக ஆடிக்கொண்டு கீழிறங்குபவை. விளையாட்டு மரங்கள் தொடர்ந்து மனிதக் கைபட்டு தரைதொடாத விழுதுகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பவை. சுண்டு விரல் பருமன் முதல் தொடை பருமன் வரை விதவிதமான விழுதுகள். இளமைக்கு அவர்கள் வந்தபோது மரவிளையாட்டுகள் முற்றிலுமாக ஊரிலேயே குறைந்திருந்தது. புதிய சிறுவர்கள் அந்த மரத்தை பாரம்பரியத்தின் படி தத்தெடுத்துக்கொள்ளவில்லை. அவர்களே மரத்தை தங்கள் மாலை சந்திப்புக்கள்மாக்கிக் கொண்டார்கள். சிறுவயதில் ஏறி விழுந்து கை உடைத்துக்கொண்ட மர நிழலில் இளமையில் சாய்ந்திருந்து உடல் மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். சந்துரு தன் காதலைப் பற்றி நண்பர்களுக்கு அந்த மரத்தடியில் வைத்துதான் அறிவித்தான். பிற நண்பர்களும் தங்கள் வாழ்விலும் காதலென்று ஒன்று வந்தால் அந்த மரத்தடியில்தான் நண்பர்களுக்கு அறிவிப்போம் எனச் சொன்னார்கள். சாதாரண மரம் திடீரென வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக அன்றிலிருந்து மாறிப்போயிருந்தது.

`ட்ரெயின் எப்போ` குறுஞ்செய்தி ஒளிர்தது. `இன்னும் அர மணி நேரம் இருக்கு. வெறும் ஸ்டேசன்ல தேவுடு காத்துட்டு இருக்கேன்` என்றான். `எங்க`. `வேற எங்க பெஞ்சுலதான். ` `அந்த மஞ்சப்பூ மரம் இருக்குமே அந்த பெஞ்சா` அவள் குறுஞ்செய்திக்குப்பிறகுதான் அதைக் கவனித்தான். அந்த சிறு சிமெண்ட் மேடைக்கு அருகிலேயே சரக்கொன்றை மரமொன்று நின்றிருந்தது. மரமென்றும் சொல்லமுடியாமல் செடியென்றும் சொல்லமுடியாத உயரம். நிலையத்தின் குழல்விளக்கில் பொன்னென ஒளிரும் மலர்கள். பாதி உதிர்த்த கிளைகள். தனி இரவில் பெஞ்சில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அருகமர்ந்து தலையாட்டும் பாவனையில் அது கேட்டுக்கொண்டிருக்கூடும் என்று தோன்றியது. `அதேதான். சரக்கொன்றை. அரபுல இது பேர் கியார்சாம்பார் தெரியுமா` என்று சொன்னான். `மஞ்ச கலர்னா சாம்பார்ன்றதா… இதெல்லாம் ஏன் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க` என்று பதில் வந்தது. ` யாரோ எப்பவோ சொன்னது. ` `அரபுல சொல்லுறாங்கன்னா முஸ்லீமா?` என்றாள். `ஆமா. பேரு ஆயிஷா. வேண்டியவங்கதான்` என்றான். அனுப்பியபிறகு சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது. அவள் அமைதியாகும் நேரங்களிலெல்லாம் அவன் அமைதியிழந்தான். அமைதியிழப்பதை உடல் நடுங்கத்தொடங்குவதை தொண்டை அடைப்பதை அவனே ஆச்சர்யமாக கவனித்தான். அவள் அங்கே வேறு வேலைகளில் பிசியாகியிருக்கக் கூடும். அல்லது எதையாவது அனுப்புவதற்காக எழுதி எழுதி அழித்துக்கொண்டிருக்கவேண்டும். ரயில் தண்டவாளங்கள் இரவில் தொடமுடியாத தூரத்திலிருந்து கிளம்பி காலடி நழுவி தொடமுடியாத தூரங்களுக்கு நீண்டு போய்க்கொண்டிருக்கிறது. ஆலமரங்கள் பகலெல்லாம் வெயிலாடிய தலையை காற்றில் அலைந்து உளைச்சலெடுத்த விழுதுகளை இளைப்பாறச் செய்கின்றன. சரக்கொன்றை மரத்தின் சீனப்பெயரில் ஒரு திருனெல்வேலி அண்ணாச்சியின் குரல் இருக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத சொற்றொடர்கள் உள்ளே ஓடின. `லவ்வரா` ஒரே வார்த்தை அவளிடமிருந்து வந்தது. `இல்ல. ஸ்கூல் பிரண்டு. இப்ப எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது. இந்தவயசுக்கு அவங்கள்ள கல்யாணமே பண்ணி வச்சிருப்பாங்க` நீளமாக விளக்கவேண்டிய அவசியம் எழுந்தது கண்டு குழம்பி தலையை உலுக்கிக்கொண்டான். `ம். ரொம்பத்தான். குட் நைட்` இரவின் கடைசிக் குறுஞ்செய்தி என்ற அறிவிப்பு இது. ரயில் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. அல்லது வந்து சென்றிருக்கலாம். அல்லது வராமலே ரத்தாகி வீட்டுக்குத் திருப்பிச் செல்லவேண்டியிருந்தால், அல்லது சந்துருவீட்டிற்கு செல்லவேண்டியிருந்தால், அங்கு கெளரிவரவேண்டியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. குட் நைட் அனுப்பி இந்த இரவை இப்படியே முடித்து வைக்கலாமா அல்லது எதாவது கேள்விகளை அனுப்பி பேச்சைத்தொடரலாமா எனக் குழம்பினான். பெண்கள் எப்பொழுதும் இருபுறமும் கூரான கத்திகளைத்தான் நம் கையில் கொடுக்கிறார்கள் எனத்தோன்றி சிரித்துக்கொண்டான். எறிந்தே ஆகவேண்டும். எந்தப்பாதி அவளைக் காயப்படுத்தும் எனச் சொல்லமுடியாது. பேச்சைத் தொடர்வதையும் பேச்சைத்தொடராதையும் இரண்டையுமே நாளைய குற்றச்சாட்டாக வைத்துக்கொள்ள முடியும். குட் நைட் என மீண்டும் மீண்டும் எழுதி எழுதி அனுப்பாமல் அழித்தான். `ட்ரெயின் ஏறிட்டீங்களா` மீண்டும் அவளிடமிருந்தே குறுஞ்செய்தி வந்தது. அவர்கள் எறியும் போது கைப்பிடி மட்டுமே இருக்கிறது. அதை நாம் பிடிக்கும்போதுதான் இருபுறமும் கத்திகளை வெளிப்படுத்துகிறது. ஏறியிருந்தாலும் அதனால்தான் பதில் சொல்லவில்லை என்றாகிவிடும். ஏறாவிடில் ஏன் பதில் இல்லை என்ற குற்றச் சாட்டு வரலாம். மீண்டும் கத்திகள். ` இன்னும் இல்ல. உங்க மரத்துக்கிட்ட பேசிக்கிட்ருக்கேன்` என்றான். `ம். எனக்கும் பேசப்பிடிக்கும். ஆனா நான் ட்ரெயின்ல போறதே அபூர்வம். அதுவும் எதிர்திசைல போகணும். எதிர்பகுதில பாத்தீங்களா பெஞ்சு தனியா மரம்தனியா பிரிச்சு பிரிச்சு நட்டு வச்சிருக்காங்க. மெட்ராஸ் போறதுலதான் மரமும் பெஞ்சும் ஒண்ணாக்கிடக்கு` என்றாள்.

அவள் சொன்னது சரிதான். இருபுறமும் மரம் நட்டவர்கள் வேறு வேறு ஆட்களாக இருக்கவேண்டும் எனத் தோன்றியது. மூன்று ஆதிகாலத்து பெஞ்சுகள் மூன்று மரங்கள். எதிர்புறத்தில் இரண்டு பெஞ்சுகளுக்கு நடுவில் ஒரு மரம் கணக்கில் நட்டிருந்தார்கள். இந்தபுறம் ஒரு பெஞ்சுக்கு அருகில் ஒரு மரம் என்ற கணக்கு. சிறு செடியாக வைக்கும்போதே பெஞ்சில் அமரப்போகிறவனை எண்ணுவதற்கு தனி மனம் வேண்டும். அது குழந்தையின் மனமாக இருக்கலாம். அல்லது பருவத்திலிருக்கும் பெண்ணின் மனம். பெண்ணின் மனம் மட்டும்தான் இப்படி காலாதீதங்களைக் கடந்து கண்னக்குகளை உருவாக்கும். காலாதீதங்களுக்கு கணக்குகளை நியாபகம் வைத்திருக்கிறவர்கள். அந்த் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாம். கணவன் எதிர்புறம் இடைவெளிகளில் மரம் வைக்க அவள் இந்தப்புறம் பெஞ்சுக்கொன்றாக மரங்களை நட்டிருக்கவேண்டும். அவர்களுக்கொரு குழந்தையிருந்தால் அது நடுவில் தண்டவாளத்தில் அமர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற பதறினான். இல்லை. அந்தக்குழந்தை இந்தப்பெஞ்சுகளில் எதாவது ஒன்றில் அமர்ந்திருக்கக்கூடும். பெரும்பாலும் அம்மாவின் புறத்தில். அவள் கணக்குகள் இல்லாதவள் ஆயினும் பெஞ்சில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக இடைவெளி விடாமல் சரக்கொன்றைச் செடியை பெஞ்சுக்கு அருகிலேயே நட்டிருக்கவேண்டும். அவன் இதுவரை சரக்கொன்றை மரமாக மஞ்சள் நிறத்தில்தான் பாத்திருக்கிறான் செடியாகப் பார்த்திருக்கவில்லை என்பது நியாபகம் வந்தது. கெளரியை முதல் முறைப் பார்த்தபோது அவளும் மஞ்சள் சுடிதாரில் இருந்தாள். பூத்துக்குலுங்கும் மரமாக. அவள் செடியாக இருந்த சிறுவயதுகள் எங்காவது புகைப்படத்தொகுப்பில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடும். `ம்ம்` என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். . `ட்ரெயின்ல தூங்கிருவீங்களா` ` பொதுவா தூக்கம் வராது. சீட்ல எங்கியாவது உக்காந்து அரத்தூக்கம் தூங்குவேன். முழிச்சிருந்தாலும் மெசேஜ் அனுப்ப முடியாது. டவர் விட்டுவிட்டு கிடைக்கும். மொபைல் சார்ஜ் போய்டும்னு ஆப் பண்ணிடுவேன்` என்றான். ` நீளமா பேசுறீங்க. மெசேஸ்க்கு கேட்கல. சும்மா கேட்டேன்` என்றாள். அமைதியாக இருந்தாள். அவளிடமிருந்தே மறுபடி `சரி இதுக்குமேலையும் மொபைல நோண்டுனா ஹாஸ்டல்ல கூட இருக்கதுக மேல விழுந்து பிறாண்டும். நானும் தூங்குறேன் இப்ப நெஜமாவே குட் நைட்` என்றாள். ` குட் நைட்` என்றான். அலைபேசியை அணைத்து மடித்து பெட்டியைத் திறந்து மடித்த துணிகளுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தான். சரக்கொன்றை மரத்தைத் திரும்பிப்பார்த்தான். இருளில் அது இன்னும் தலையாட்டிக்கொண்டிருந்தது. புன்னகத்தது போல் இருந்தது. அவனும் புன்னகைத்து தலையசைத்தான். காற்றில் ஒரு மலர் உதிர்ந்து அவன் தோள் பட்டையில் விழுந்தது.

ரிபு – 6

பின்னூட்டமொன்றை இடுக

பறையன் காட்டில் முதற்காலடி வைக்கும்போது இருள் தொடங்கியிருந்தது. நெல்லரியில் எறியப்பட்ட சரல்களேன காடு கூடடையும் பறவைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லாத பறையை காற்றில் அறைந்து கொண்டிருந்தன விரல்கள். ஒவ்வொரு அதிர்வுக்கும் காடு நகர்ந்து மீண்டெழுந்தது. காட்டின் அதிர்வினை இறுக்கும் கயிற்றினைத் தேடி பறையன் கண்கள் அலைபாய்ந்தன. காடே பெரும் இசையக்கருவியென ஆடிக்கொண்டிருந்தது. சிறு செடிகள் அசைந்துஅருகமைந்த பெருமரங்களை அறைந்தன. பெருமரங்கள் அசைந்து இருளை அறைந்தது. இருள் பறவைகளை அறைந்து கூடுகளுக்குத் திருப்பியது. ஒலியின் வழியாகவே கூட்டினை அறியும் பறவைகள் தன் குஞ்சுகளை சொற்களால் தேடி அடைந்தன.

சருகுகள் உரசும் ஒலியும் இலைகள் உரசும் ஒலியும் ஒத்திசைவுடன் பேரிசையை உருவாக்குவதாக தனக்குள் நிறைந்தான். பழுத்த இலைகளை பாதம் கூசி ஒலி நிரப்பினான். மழைவண்டுகள் ரீங்காரம் அதிர்வுகளின் பெருங்கடலில் ஒற்றைக் கம்பிகொண்டு கட்டுவதான சித்திரம் தோன்றியது. கனவில் எழுந்த அதிர்வென இசைக்குறிப்புகள் உள்ளெ எழுந்து உடனே மறைந்தன.

நிகழ்தலின் கணத்திலும் நினைவின் கணத்திலும் ஒருங்கே நின்றிருந்தான். கால்கள் முன்பின்னாக ஆடலை நிகழ்த்தியபடியிருந்தன. இடக்கை காற்றின் பறையை ஏந்தியிருந்தது. வலக்கை நிறைந்த காற்றில் அறைந்தபடி இருந்தது. அதிர்வுகளை உடலே பழக்கத்தினால் அறிந்து அதிர்ந்துகொண்டிருந்தது. அடுத்து அடுத்து என விரல்கள் முன்சென்றன. பாதங்களில் தாளம் எழுந்தது. ஒற்றை ஒலிகளால் ஆன பெரும் இசை நிகழ்வென காடு அசைந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

சுவடுகளின் இடைவெளிகள் இசையின் ஒருங்கு கொண்டிருந்தன. வீசும் கைகளில் சிக்கும் இலைகளில் வெளிப்பறையின் தாளம் கண்டு அறைந்தபடி முன்சென்றான். பாதையெங்கும் சென்ற தடங்கள் முறிந்த கிளைகளாலும் உதிர்ந்த இலைகளாலும் விரிந்தது. உடலதிர்வு நடையைச் சோர்வுகொள்ளும் f தருணமெங்கும் காய்ந்து உடைந்து உளுத்து வீழ்ந்திருந்த தண்டுகளை அறைந்து பொடிசெய்தபடி நின்றிருந்தான். விலங்குத்தோலில் அறைந்து வறண்டிருந்த உள்ளங்கைகள் உழுத்த மரங்களின் தும்பு நிறம் கொண்டன. மரங்களை அறைவதற்கும் தும்புகளை கையிலிருந்து தட்டுவதற்கும் சீரான இடைவெளி இருந்தது. இடைவெளிகளில் தடாரி இசை கொண்டது. கைகள் சலிக்கும்போது பாதங்களாலும் பாதங்கள் சலிக்கும்போது கைகளாலும் அளந்தபடி காட்டின் உள்ளே உள்ளெ என்றறிந்தபடி சென்றுகொண்டிருந்தான். உதிர்மலர்கள் அறைந்த நீர்ப்பாதைகளின் இசைவில் குரவையிருந்தது.

இசையற்ற இசைவளிகளில் பாடல்களை பறையண் கண்டான். அதிரும் பறையில் எழுந்துவரும் பாடலை உடல் வருடும் அனலென உள்ளுக்குள் கேட்டான். நாப்பழக்கமற்ற காப்பியங்கள் சொற்களால எழாமல் இசையாகவே எழுந்தது. இல்லாத பறையறையும் ஒலிகளை நாவில் எழுப்பியபடியே முன்னகர்ந்தான். இடைவெளி விழும் கணங்களில் காடு அவன் காப்பியங்களை பறவைச்சிறகடிப்பில் மூங்கிலுரசும் மரகுகைகளில் கரைமோதும் நதியலைகளில் நீட்டிச்சென்றது. பாதம் இடறும் புள் கடித்த பழங்களை மரங்களை நோக்கி எறிந்தான். மரங்கள் பிற மரங்களை இலையுரசி இலையுரசி செய்தியனுப்ப வழிகாத்திருந்த மரங்கள் மறுசொல்லென மலர்களை அவன் மீது எறிந்தன. நகரும் விதையென காட்டினுள் அலைந்தபடி இருந்தவனை பாதங்களின் ஆடல் தரையொட்டி இணைத்திருந்தது.

சுழித்தோடும் சிற்றோடைகளில் கால் வீசி நடனம் கொண்டான். எதிர்த்தோடும் சுழிப்புகள் பதிலுக்கு நீரறைந்து வாழ்த்தின. சிறு சீண்டல்களில் வலித்து முகம் சுழித்து பின் மீண்டு புன்னகைக்கும் மகவென காடு இருந்தது. மகவின் ஒலியில் இசையறியும் அன்னையென இணைந்துகொண்டான். நண்பகல் மழை சகதியென காயாமல் கலந்து பாதங்களில் படிந்தது. உதறலில் கணமெங்கும் இசையைக் கண்டறிந்தான். உடல் சலித்து மரங்களில் அமர்ந்தபோதும் காடு அவனை ஒலியெழுப்பி அழைத்தது. சோர்வுற்ற மனத்தினை மலரெறிந்து உரசியது. கனிந்த பழங்கள் தலைவிழுந்து உடையாமல் நிலம் அடைந்தன. கனிகளை உறிஞ்சிச் சுவைத்தபின் விதைகளை சிற்றோடைகளில் எறிந்தான்.

தூரத்து பேரருவியின் இசை எல்லா திசைகளிலிருந்தும் எதிரொலிப்பதை உணர்ந்தான். உள நோக்கு குரல் தேறி தேடி அலைந்தும் பேரருவி தன் கண்மறை ஆட்டத்தை ஆடுவதாக இருந்தது. தொடுவான மயக்கென நீரோசை எங்கோ தூரத்தில் எழுந்தது. பாதை தேர்ந்து இசையெழுப்பி சலிப்புற நடந்தபின் அதே அருவி எதிர்திசையிலிருந்து ஒலியெழுப்பியது. கனவுக்குள் அலைபவனென மீண்டும் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பத்திரும்ப வருவதாக உணர்ந்தான். ஆனாலும் சிறு மலர்கள், புதிய மரங்கள், தளிர் இலைகள் இல்லை நாங்கள் அன்னியர்கள் என்றன. ஏற்கனவே வந்த பாதையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருந்தான். பேரருவி அல்லது அழிமுக சுழல் அல்லது விசைகொண்டோடும் ஒரு நதியை அடைந்தால் அதன் ஊற்றுக்கண் தேறி அடையலாம் என அலைந்து உடல்மனம் சலித்தான்.

இருள் காட்டினை முழுதாக மூடும்முன்னதாக காடு கண்களுக்கு பழகியிருந்தது. பழகிய காடு வளர்ப்புப்பிராணியென நெகிழ்ந்து வழிவிட்டு குழைந்து முகம் பார்த்தது. நகரும் முன்னாத அடுத்த காலடியில் அருகணையும் சருகுகளை பசுந்தளிரென உடலில் அறிந்தான். பேரிசையின் அடுத்த அடிக்கென காத்திருக்கும் தண்டங்களை உளுத்த மரங்களை விரல் அறிந்திருந்தது. பாதவிரல் தொடும் கனிகள் இன்னதென அகம் உணர்ந்தது.அதிர்வின் இடைவெளிகளில் இசையின் பரிமாணங்கள் உருவாகிவருகின்றன. தூரத்து நதி ஒரு கனவில் எழுந்த ஒலியென எண் திசைகளிலும் எதிரொலிக்கிறது. பெருவீழ்வின் அருவி, பேராற்றலின் நதியை உருவாக்குகிறது. பாறைகளால் வழிகாட்டப்பட்ட நதி வழித்துணைக்கு அப்பாறையினையே இசையெழ உருட்டிச் செல்கிறது. பறையன் தன் காலடி சிறு கற்களை அப்படியே உருட்டியபடி இருந்தான். கூழாங்கற்கள் நதியின் பாதையை அறிந்தவை. நதியிலிருந்து பெருங்காட்டின் நடுப்பாதைக்கு வழிதவறி வந்துவிட்டவை. இவற்றை அதிரச் செய்வதன் மூலம் எங்கிருந்தோ இணையென நதி இசையெழுப்புவதை அறியக்கூடும். இவற்றை எறிதலின் மூலம் நதியின் பாதையில் காற்று இச்சிறுகற்களை கொண்டு செல்லக்கூடும். கனவிலிருந்து எழும் இசை மறு கனவில் தொடர்வதைப்போல.

வெறுங்கை அளையும் காற்று பறையின்மையின் சுமைகொண்டு கைஇணைப்புகளில் உளைச்சல் தந்தது. இன்மையின் வலி இருத்தலில் பெரிதாக வளர்ந்துகொண்டே செல்வதை பறையன் கண்டான். உளுத்தமரங்களின் உட்பாகங்களை உரித்தெடுத்து இலைகளால் கட்டி மெல்ல விரல்தட்டி ஓசை எழுப்பினான். அதிர்வற்று நீர் அளையும் கல்லென ஓசை கொண்டு மயங்கியது. பின் இலைகள் பொதிந்து உள்மடிந்தன. பருத்த தண்டங்களைக் குடைந்து பேரரச இலைகள் தைத்துக் கட்டினான். தோலறையும் பறையன்றி இலையறையும் பறை ஓசையின்றி உள்ளே அடங்கியபடி இருந்தது.

ஒரு கணு விட்டு மூன்றாம் கணுவில் மூங்கில் தண்டமொன்றை உடைத்தான். இருபுறம் துளையிட்டு சக்கைகளை ஊதி வெளியேற்றினான். பறவையின் இறகுகளை உள்ளடைத்துப் பொதிந்தான். நாகத் தோல் போர்த்தி துளைகளைக் கற்றதிரக் கட்டினான். ஆனாலும் விரல்களுக்குப் போதவில்லை. பேரதிர்வின் கரங்கள் உள்ளங்களை கொண்டு அறைய அச்சிறுகுழல் போதுமானதாய் இல்லை. இருளில் கண் தெரியாத தொலைவிற்கு அந்தக்குழலை எறிந்தான். எங்கோ சிறுவேர்களில் மோதி அந்தக்குழல் வீழ்ந்தது.

கைகள் அறிவதென்னபதை அறிந்திருந்தான். பெருவட்டத்தை விரும்பும் கரங்களுக்கு சிறு உறிகள் போதாதென்பது தெளிந்தது. இருள் மேலும் மேலும் என மூடி எழுந்தது. மேலும் மேலும் என கண்களைச் சுருக்கி தன் பறையை தேடித் திரிந்தான். தூரத்து கனவின் அருவியோசை எழுந்தபடியே இருந்தது. இசை அதிர்கிறது நதி அதிர்கிறது. இலை அதிர்கிறது. ஒத்திசைவின் கணங்களின் வழியே இங்கே எங்கோ எனது நதி ஒளிந்திருக்கிறது என்றொரு எண்ணம் எழுந்தது.

மழையொளிக்கீற்றென பெருநிலவு அடரிலைகளில் கரைந்து வழிந்திருந்தது. வழியும் நிலவொளி பட்டு எதிரொளிக்கும் இரு கண்களை தூரத்து மரத்தின் மறைவினில் கண்டான். மெல்ல மரங்களைச் சுற்றி நெருங்கிய போதும் அசையாமல் இருந்தது. அருகிருந்த நீண்ட மரக்கிளையை ஒடித்து அவற்றின் கண்ணருகே அசைத்தான். அசைவின்றி இருந்தது. நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தியபோது கிளை மெல்ல நெகிழ்ந்து உடல் நுழைந்தது. எருது சற்று மரம் சாய்ந்தபடி இறந்திருந்தது.

முன்கழுத்தின் மறைவுப்பகுதியில் ஆழமாகப் பற்கள் பதிந்திருந்தன. வேங்கைகளின் கடிதப்பிய எருது ஓடிச் சலித்து மரமணுகி சாய்ந்து பின்னர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தான். மெல்ல விரல்தொட்டு நீவி கண்மூடி கையெடுத்தான். ஊன். உண்பவர்களிடமிருந்து தப்பி உண்பவர்களுக்காகக் காத்திருக்கும் பெரும் ஊன் என்றொரு சொல் உள்ளே எழுந்து துணுக்குற்றான். உயிருள்ள ஆவினை வாஞ்சையுடன் நீவும் கரங்களுடன் மெல்ல உடலெங்கும் உள்ளங்கைகளால் நீவினான். சிறு ஊணுயிர்கள் வாய்கொள்ளுமளவு ஊனினை கடித்துப்பிய்த்து பின் மழை கொண்டபின் விட்டுச் சென்றிருந்த தடங்கள் உடலெங்கும் இருந்தன.

மீண்டும் காலை அவை திரும்பிவரக்கூடும். அல்லது நீர்மை வடிந்து குளிர்மட்டும் எஞ்சும் நள்ளிரவில் அவை திரும்பி வரக்கூடும். எண்ணங்கள் அதிர்ந்து நினைவில் அலைந்து நிகழ்வினுக்கு திரும்பிவரும்போது விரல்கள் இறந்த எருதின் திமிலில் தாளமிடுவது கண்டு துணுக்குற்று பின் நகர்ந்தான். ஆம், இதுவே எனக்கான பறைக்காக காத்திருக்கும் எருது. ஆம் இதுவே பசியற்ற என் ஆணவம் இளைப்பாறுவதற்கான இசை. ஆம் அதற்காகத்தான் எங்கோ பல்பட்டு இங்கே வந்து என் பாதை மறித்து விழிதிறந்து காத்திருக்கிறது இவ்வெருது என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

கணு உடைந்த மூங்கில்களிலிருந்து இளம் நுனிகள் சில ஒடித்துவந்தான். பிறகு கால் இடறிய சிறு கற்களில் கூர் கொண்டிருந்த சில பொருக்கி கூரற்ற பிறகற்களில் உரசி இன்னும் கூர்மை கொண்டான். கூர்மையின்மை சிறுகூர்மைகளை இன்னும் கூர்செய்கிறது. வளைவற்ற பெருமரத்து வேர்களை நீர் நனைத்து உலராமல் பாறைகளின் அறைந்து திரித்தான். கூர்கற்கள் கொண்டு முன்னோர்களை ஆதிதெய்வங்களை வணங்கி எருதினைக் தோல்கிழித்தான்.

கைகள் அறையும் தொலைவினையும் கட்டும் தொலைவினையும் கணக்கிட்டு தோல்கிழித்து மண்ணிலிட்டு புரட்டினான். எருது இன்னும் கண்மூடி அமர்ந்திருந்தது. சிற்றோடை ஒன்றில் குருதி நீங்க தோலினை கழுவினான். மண்ணிலுட்டு மெல்லப்புரட்டி கரைந்த மணல் ஓடும் ஆழ நீர் குழைத்து சகதிகொண்டு தோலினைப்பூசினான். பின் இளம்மூங்கில்களை வளைத்து சகதிபூசிய எருதுத்தோல் சுற்றி நனைந்த வேர்களைக் கொண்டு கட்டினான். அரையில் நிறுத்தி கைவீசி அளந்தான். மனம் குவிந்து மீண்டும் சகதி பூசி சகதிகுழைத்து சகதிபூசினான். கூரற்ற இரு முனைமழுங்கிக் கூழாங்கற்களை உரசி எரியெழுப்பினான். மழையூறிய கிளைகள் நீர்பற்றி காற்றில் புகை எழுப்பின.

பெரு நடைக்குப்பிறகான சலிப்பு மூச்சுக்காற்றினை முற்றிலுமாக ஈரம் உலர்த்தியிருந்தது. இதழ்குவித்து எரிக்காக ஊதும் தோறும் வளி தடை பட்டு நெஞ்சடைத்தது. மீண்டும் பரல்களைப் பற்றி நீரூறிய இலைகளைக் கிளறி காய்ந்த சருகுகளைக் கண்டடைந்து கொண்ர்ந்து குவித்தான். எரி தீட்டும் கற்களை மரவுரியில் மேலும் மேலும் என சூடேற தோய்த்து பின் உரசினான். பொறி எழுந்தது. எழும்பொறி சருகுகளைப் பற்றும்முன் வெளியின் ஈரம் குடித்து சருகுகள் உள்மடிந்தன. மெல்ல மெல்ல எரியெழும் பசி உடலென சருகுகள் ஒன்றையொன்று இருகப்பற்றி எரியினைப் பற்றிக்கொண்டன. இரட்டைச் சருகுகள் மெல்லப்பற்றியபின் குவி சடசடவென நரம்புகளை ஒடித்துக்கொண்டு பரவத்த்தொடங்கியது. உடல்பதறி குவியினை பிறசருகுகள் அருகாவண்ணம் சுற்றிவட்டமிட்டான். வெறுங்கைகளால் ஈரம்குழப்பிய சகதிகொண்டு அணையிட்டான்.

தாளத்திரும்பாத எரி வானம் ஏறிப்பரந்தது. காலிணைப்பு உயரம் எழுந்தபின் மெல்ல அடங்கக்காத்திருந்தான். ஒடித்த மரத்தண்டங்களை சருகுகளின் மீது அடுக்கினான். சகதிபூசிய எருதின் தோலை மெல்லத்தீட்டி எரியில் வாட்டினான். ஈரமறிந்த சகதியினை எரி முதலில் ஈரத்தை முழுக்க உறிஞ்சி விண்ணெழுந்தது. பின் ஈரமற்ற தோலின் மீது கரிபடிந்தது. துடைத்து அடித்து நெகிழ்வித்து பின் வாட்டினான். இறுக்கிக் கட்டி விரல்சுழற்றி ஈரம் அற சகதி காய்ந்து உதிர்ந்து இடைவெளிகளை நிரப்பும்வரை ஆட்டி அசைத்து ஆடி அதிரவைத்து ஈரமிழக்கினான். ஈரம் அழிந்தபின் சதைக்கொழுப்புகள் உருகிய பின் குருதியும் காய்ந்தபின் தோல் பறையென அதிரத்தொடங்கியது. மழை நிறைந்த காட்டில் முளைத்துவரும் சிறு மகவென இசையெழுந்துவந்தது. அடித்து அதிரச்செய்தான். காயாத சிறு குருதி நினைவுகள் எரியுருகி நெருப்பில் சொட்டின. மீண்டும் எரி பெரும் பனையென மேலெழுந்து அமர்ந்தது. உப்புக்காற்று ஊறிய கரங்களை மண் துடைத்து எரியில் காட்டி மீண்டும் இறுகிய தோலறைந்தான். பறை தன் முதல் அதிர்வை அடைந்தது.

எரியும் தண்டங்களை விலக்கி எல்லை வளையத்தின் வெளியில் சகதி நனைத்து அணைத்து தூரத்து மரங்களுக்கு எறிந்தான். தனக்குள்ளான தணலடங்கும் சருகுகளுக்கான பறைகளை நாடியில் பொருத்தி காத்திருந்தான். விரல்கள் காற்றின் பறைகளுக்காக அலைந்து தோலில் மோதி அதிர்ந்து குதித்தன. சருகுகள் அடங்கிய பின்னரும் கனல் இருந்தது. குதிங்கால் கொண்டு சருகுகளைப் பரத்தி சகதிகளில் மிதித்தான். கனல் அடங்கியபிறகு தன் பாதைகள் தேறி மீண்டும் காட்டினுள் நடக்கத்தொடங்கினான்.

ஒத்திசைவின் அதிர்வுகளுக்கு ஊடாக இடைவெளிகளை எளிதாக கணிக்கமுடிந்தது. நனவிலியின் ஆழத்திலிருந்து இசைஞனின் உள்ளுணர்விலிருந்து திசைகள் துலங்கத்தொடங்கின. தூரத்து அருவியின் எதிரொலிப்புகளுக்கு ஈடாக தன் பறையை இடக்கையில் அறையும்போது நீரொலியெலுப்பி இங்கிருக்கிறேன் என்றது. பாதைகள் மாறி எதிர்திசை கண்டு சிம்பு அறைதலுக்கு எதிராக நதி அங்கில்லை இளையோளே என்றழைத்தது. மனமயக்கி செடிகளுக்குள் நடக்கும்போது சிற்றோடைகள் விலகச்சொல்லி எச்சரித்தன.

ரீங்காரங்களின் இசைவுகளுக்கு நடுவில் பாதையிருந்தது. தூரத்து மரங்கள் உரசும் இசைகளின் வழியாக சாரல் நுழைந்து வெளியேறி முகம்தொட்டு உரசி புன்னகைத்தது. கூடடையும் பறவைகள் திரும்பிவரும் பாதைகண்டு எதிர்வழியில் சென்றான். உளுத்த மரங்களை தயங்கிக்கடந்த பாதங்கள் மிதித்து பறையனை விண்ணுக்கழைத்தன. ஒடித்த சிறுசெடிகளின் பாதைகளின் வழியாக அதிர்வின் கணங்களைக் குடித்தபடி தொடர்ந்தான். பாதைகளற்ற அடர்மரங்களை அறுத்து நுழையும் வெறியாட்டு சாக்காட்டுப்பறையின் இசையில் எழுந்தது. பாதை தெளியும் தோறும் பாதங்கள் கொண்டாட்டம் கொண்டு தேங்குவதாக உணர்ந்தான்.

உள்ளங்கைக்கு மிக அருகில் அடையும் பொருள் இருக்கையில் கொண்டாடும் உடற்சோம்பல் பாதங்களை பின்னிழுக்கிறது. கணித்த திசைகள் துலங்கி அடைவின் பொற்கரங்கள் நீளும்போது பாதையின் அழகுகளை விழிகடக்காமல் உள்வாங்கி நிறைப்பதை அறிந்து அதிர்ந்து பின் புன்னகைத்தான். விரல்கள் தன் பாதையைத் தானே தேரும் குழவி மீன்களென இசைகளுக்குள் நீந்தியபடியிருந்தன. சிம்பு தன் ஆடலை பறையின் நெகிழ்வுகளுக்குள் தொலைத்து மீண்டு நுழைந்து வெளியேறியது.

அதிர்வுகள் அதிர்வில் இணைந்து இசையென்றாயின. ஒலிகள் மேலும் மேலுமென ஒலிகளை தனக்குள் இணைத்து ஒத்திசைவின் கணங்களுக்கு இழுத்துச் சென்றது. தூரத்து நீரோசையும் மிதிபடும் சருகோசையும் அசையும் இலையோசையும் அதிரும் தோலோசையும் வெளிவிடும் மூச்சும் ஒத்திசையும் கணத்திலிருந்து இசை உருவாகிவந்ததது. ஒத்திசைவின் கணங்களை அடைந்தபின்னர் நீரோசையினை கண்டறிவது எளிதாக இருந்தது. பாதைகள் துலங்கி வந்தன. பாதை மாறி திசை திரும்பும்போது ஒத்திசைவின் கணங்கள் தடுமாறி இசை நின்றது. பின் பறையன் தன் பறையினைத் திருப்பி ஒத்து எழும் திசை நோக்கி பாதைகளை அமைத்தான்.

அதிர்வுகள் கொண்டாடும் கணம்தோறும் நீரோசை எழுந்தபடியே இருந்தது. இன்னும் இன்னும் என முன் சென்றான். வேகம் வேகமென பறை எழுந்தது. சருகுகளின் அசைவுகளின் வழியாக ஆடல் நீண்டது. இருள் கவியும் நிலமெங்கும் பாதைகள் கால்கள் மட்டும் அறிந்த பேரொளியின் திசையென நீண்டன. தாள்மரக்கிளைகளை மிதித்து விண்ணெழுந்து இறங்கினான். உயர்மரங்களின் சிறுகாய்களை உதைத்து மரமேகினான். கவிந்த மரக்கிளைகளுக்கு ஊடாக வெண்ணிலவு வழிந்து எங்கோ தான் இருப்பதை அறிவித்திருந்தது.

விழிமயக்கென கண்கள் சுழல, இசையின் அதிர்வுமட்டுமே கைத்துணையென முன்னகர்ந்தான். எங்கொ சிவமூலிகையின் மணம் எழுந்தது. பிறகு இன்னெதென பிறித்தரியமுடியாத பல ஆயிரம் மலர்களின் மணம். பின்னர் மட்கிக்குவையும் இலைகளின் வீச்சம். சிற்றுயிர்கள் பதறி ஓடிஒளியும் புதர்களை ஓசைகளால் அறிந்தான். பேருயிர்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்று எரியும் அகலென விழிகளை நிறுத்தி வழியனுப்பின. அருகே மேலும் அருகேயென நீரோசை நெருங்கிக்கொண்டிருந்ததது. மண்குவைகளை கரைத்த அழிமுகப்பின் மணம். மெல்ல காற்றிலாடும் இலைகளின் பேரிரைச்சல். நீரில் ஆடும் வேர்களின் நிழலென ஓசை முன்வந்தது. மீன்கள் நீந்தும் அசைவின் ஒலி அதிரும் பறைகளின் இடைச்செவியென நிறைந்தது. இசை உருவாக்கும் மொழியெனவும் மொழி செவிகொண்டு உறைந்து நிற்கும் குழவியெனவும் மனம் கொண்டான்.

அதிர்ந்த மரங்கள் வழிவிட்டு நிலவொளி துலங்கும் திசையைக் தொலைவில் கண்டான். அருவியிறங்கும் மலையின் முதல் ஆற்றொழுக்கென மனம் உணர்ந்தது. அதிரும் பறையிலிருந்து கையெடுத்தான். இறுகப்பற்றுவதற்காக சுற்றியிருந்த நாரினை சுழல் இழுத்து தொங்கும் இலையென இடையின் ஓரத்தில் கட்டினான். கால்கொண்டு வேகம் கொண்டு நடக்கும்போது மரத்திலாடும் குரங்கென பறை இடையில் ஆடியது. காலெடுத்து ஓடி அருவி ஆறென முகம் மாற்றி ஓடித்திரியும் முதல் நதியின் கரை நின்றான். மனம் நிறைந்து ததும்பி ஒளியென்றாகிறது. நிலவொளி ஆடிப்பிம்பனெ அதிரும் பறையென நீரில் விழுந்து எழுந்த்து இரட்டைக்குளவியென முன் நின்றது. பெருந்தாலத்தில் எறியப்படும் பறவை உணவென ஓசையுடன் அருவி வீழ்ந்து நதியாகிக்கொண்டிருந்தது.

ஓடும் நதியின் தெளிவில் அசையாமல் நின்றிருக்கும் ஆடியென தன் முகத்தினை பறையன் கண்டான். பெரு நடையின் சோர்வும் உதிர்சருகுகளின் ஈரமும் ஒட்டியிருந்தது. ஓடும் நதியினை ஒரு குவை கையள்ளி பார்த்து நின்றிருந்தான். ஒற்றை சிறு துண்டு நிலவு. பேராடியின் ஒரு சிறு களவு. கைதுடைத்து மீண்டும் நதியில் விட்டான். முகத்தின் ஒரு பகுதி உருகி எங்கோ அலைந்து சென்றது. நிலவு பின் செல்வதாக நினைத்திருத்தல் துலக்கமாக இருந்தது. பின் கைகுவித்து சிறிது நீரள்ளி முத்தமிட்டான். வாய்குவித்து கொப்பளித்தான். மெல்ல விரல்களால் உள்ளங்கைகளால் ஓடும் நீரினை அறைந்தான். பெரும் பறை. இயற்கையின் நில்லாத அசைவிலாத தொடர்ந்து நகரும் பறை. ஒற்றை பெரும் நடன ஆடல்வல்லான் ஒரு கையை மட்டும் அருவியென நீட்டியறையும் பெரும்பறை.

இரு காலடி பின் வைத்து மணல் நீர்குடித்து உறைந்திருந்த தொலைவிற்கு வந்தான். சிறுபாத இடைவெளிகளுக்கு அப்பால் நில்லாமல் பெரும்பாறைகளை உருட்டும் ஒரு நதி. கொஞ்சம் பின்னடங்கி பெரு நதிகளைக் குடிக்கும் மணற்பாறைகள். அரையிலிருந்து அவிழ்த்து புலித்தோல் பறையை இரு கைகளின் ஏந்தினான். இறைவன் முன் இறைஞ்சி நிற்கும் புரவலரின் கைத்தாலம். கால்களால் சிறிது மண்குவித்து ஒருபக்கமாக சாய்த்து நிறுத்தினான். இதுவரை நிரவப்பட்ட அத்தனை மலைகளின் ஆடிபிம்பம். நதிக்கரையில் அமர்ந்து வீழருவியைப் பார்த்து அமர்ந்திருக்கும் பெருமுதியவனின் ஒற்றைத் தலை. ஒரு முறை தலைகுவித்து தன் பறையை வணங்கினான். பின்னர் ஓடிச்சென்று ஓடும் நீரில் பாய்ந்தான்.

இடப்புறமிருந்து வலப்புறம் பாயும் நதியில் குறுக்காக நீந்தியபடி இருந்தான். நீர்விசை அசைத்து அவனைப் புரட்டியது. நதியோட்டத்தின் முறிந்த கிளைகள், பேரருவியின் உயரத்திலிருந்து உடல்தொட விதிக்கப்பட்ட சிறுவெள்ளை மலர்கள் மோதிக்குலைத்தன. தொடர்ந்து நீந்தியபடியிருந்தான். ஓடும் நதியின் திசை நோக்கி பாயத்தொடங்கும் சிறுமீன்களென கண்கள் தனித்திருந்தன. நீண்ட கிளையொன்று மோதும்படி வர மூழ்கி சுழன்று மீண்டான். நதியோட்டத்தின் தப்பிய சிறு எறும்பென மிதந்து கிடந்தான். வேகத்தின் முகம் போர்வையெனத் தழுவி மூதாதையென வாழ்த்தி சிறுவனென விளையாடி தொடர்ந்தது. கன்னியைக் குலாவும் இளமைந்தனென நதிப்போக்கில் மிதந்து முத்தமிட்டான். ஊடலில் முகம்திருப்பும் இளைஞனென விசையெதிர்த்து கால்களிட்டான். அருகமர்ந்து கண்பார்த்துச் சிரிக்கும் வாழ்வோனென குறுக்கே கிடந்து கடந்து மீண்டுவந்தான். ஊழ்கத்திலமர்ந்து மரணம் காத்திருக்கும் முதியவனென மிதந்துகிடந்தான்.

இரவு குளிர்ந்து நீரென கிடந்ததன. வீழருவியின் விசை ஒன்றோடொன்று உரசி வெப்பம் கொண்டிருந்தது. நிலவொளியில் மறைந்திருக்கும் சூரியென குளிர்போர்வையின் உள்ளாக வெப்பம் ஓடிக்கொண்டிருந்தது. விரல்நுனிகள் நீர் ஊறி குருதி நிறம் கொள்ளும் வரை நதியாடிக்கிடந்தான். பின் மெல்லச் சலித்து மீண்டும் ஒரு நீள் மூச்சு கொண்டு நதியாழத்தின் வேர்வரை சென்று ஒற்றைக் கூழாங்கல் கண்டெடுத்து மீண்டான். நதியோட்டத்திலிருந்து விலகி கரையேறிறான். மூதாதையின் புன்னகையுடன் பறை காத்திருந்தது. கனிகளை இறைசாட்டும் பூசகனென பணிவுடன் கொண்டுவந்த கூழாங்கல்லை பறை முன் வைத்தான். எதற்காக இந்த நாடகத்தை நடிக்கிறோம் என்றொரு கேள்வி எழுந்தது. எங்கோ கிளம்பி எங்கோ அலைந்து இந்த நதிக்கரையின் தன்னை கொண்டுவந்து சேர்த்திருக்கும் விசையெதுவென அறியாமல் உளம் குமைந்தான். முதியவன் அருகமரும் இளையோனின் தயக்கத்துடன் மணல் ஆடையொட்ட பறையின் அருகமர்ந்தான். தூரத்து அருவி சென்று சேரும் மலை முகட்டில் அவள் நின்றிருந்தாள்.

எண்ணைப்பசையொட்டிய அன்னையின் கற்சிலையென அவள் உடல் ஒளிகொண்டிருந்தது. மஞ்சள் மலரால் கோர்த்த ஆடை அணிந்திருகக்கூடும் என கணித்தான். நிலவொளி முகம்துலங்காமல் உடல்பட்டு எதிரொளிப்பதாக இருந்தது. அவள் அங்கிருந்து சற்று கூர்ந்து நோக்கினால் தன்னை அறிந்துகொள்ளமுடியும் என்பதை உணர்ந்தான். ஆனால் அவள் உடலசைவுகளில் அதற்கான நோக்கு இல்லை.மொத்தக்காட்டினையும் தன் ஒருத்திக்க்கென உள்ளாக்கிக்கொண்ட நிமிர்வு இருந்தது. காட்டில் தனித்திருக்கும் பேரன்னைகள் சிற்றுயிர்கள் பேருயிர்கள் எல்லாம் கடந்து காடே தானாகிறார்கள் எனும் காவிய வரி நினைவுக்கு வந்து உடல் சிலிர்த்தான். தானும் ஒரு குளவியென மடியொட்டி கிடக்கும் கனவு எழுந்து வந்தது. முலையுறிஞ்சும் வேட்கை. அன்னையெனவும் துணைவியெனவும் எழும் உளமயக்கு. அருவியென வீழ்வது நதியென எழுவது போன்றதொரு வேட்கை. மயிர்க்கால்கள் கூச்செரிந்தன. உயிர்களற்ற வனாந்தரமென எழுந்த கனவு ஒற்றைப்பெண் அத்தனை வெற்றிடத்தையும் நிரப்பும் விந்தையென வியந்தான்.

ஒற்றைச்சொல் காப்பியங்களை உருவாக்கிவிடுகிறது. ஒற்றை அதிர்வு பறையினை காட்டிக்கொடுக்கிறது. ஒற்றைச் செடி காட்டினை தொடங்கிவைக்கிறது. வெற்றிடங்களை தானாகவே நிரப்புதல் கன்னிகளுக்கு வரமென அளிக்கப்பட்டிருக்கிறது. மண்குழைத்துப்பூசி காய்ந்த சுவர்களுக்குள் ஒரு பெண் முதற்காலடி எடுத்துவைத்து ஒற்றை அகலை நிரப்பும்போது இல்லமென சூல்கொள்கிறது. பெரும்போரில் தோற்று ஓடிய குலங்கள் ஒற்றைப்பெண் விதையிலிருந்து மீண்டுவந்து கருவறுத்திருக்கின்றன. அலைஅலையென சொற்கள் எழுந்தபடி இருந்தன. கையில் பறையில்லாபோது சொல்லற்று அலைந்ததை நினைத்துக்கொண்டான். இந்த ஊற்று காப்பியங்களை எழுதும் விரல்களை தரக்கூடும். ஓவியங்களின் மறைந்திருக்கும் பெருஞ்சொற்றொடர்கள், பெருங்காட்டினை எரிக்கும் சிற்றகலினை இந்த சொற்போக்கு கொண்டு வந்து தரக்கூடும்.

அவள் மலராடை அவிழ்த்து கால்வழியும் சிற்றொடையில் விட்டாள். எங்கென்று அறியாத வேகத்துடன் அது அருவியென்றாகி விழுந்தது. பின்னர் மலைமுகட்டின் உச்சியிலிருந்து கால்தூக்கி நீரில் பாய்ட்ந்தான். ஒரு கணம் விண்ணில் எழுந்து பின் ஆழத்தின் இரைச்சலுக்குள் நீர்கொத்திப்பறவையெனப் பாய்ந்தாள். உளம் அதிர்ந்து உடல் நடுங்கி கால் குழைந்து தரை அமர்ந்தான். பேரணங்கே என் அன்னையே என சொல் எழுந்தது.

ரிபு-4

பின்னூட்டமொன்றை இடுக

பெயருக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடைப்பட்ட கணத்தில் நந்து மஞ்சள் வண்ணத்தில் தொடங்கி அதன் ஒளிவிடும் அறிவியல் காரணங்கள் வரை நீண்ட தூரம் சென்றிருந்தான். அடுத்த வார்த்தை நாக்கில் சிக்கி புரண்டிருந்தது.

“ஏன் உங்கூர்ல பொண்ணுங்களையே பாத்ததில்லையா ஏன் அப்டி பாக்குறீங்க எல்லாரும்” மிகச் சுலபமாக மெளனத்தை உடைத்தாள். பதில் சொல்வதற்கு யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு அவகாசாம் வேண்டும். பெரிய நகைச்சுவை கேட்டவன் போல் சத்தமாகச் சிரித்தான். இடைவெளி கிடைத்தது. கொஞ்சம் சிரித்தபோதே பதில் கிடைத்திருந்தது. “ஊரு பொண்ணெல்லாம் ஒண்ணுதான். எப்பவும் புதுசு மேல ஒரு ஆச்சர்யம் இருக்கும்ல. அதான் அப்டி பாக்குறாங்களா இருக்கும். எங்கூர் கட்டம் போட்ட கரும்பச்சை சுடிதாருக்கும் உங்க மஞ்சள் ப்ளைன் சுடிதாருக்கும் உங்களுக்கு வேணா வித்தியாசம் தெரியாம இருக்கலாம். ஆனா எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும்ன்றதே இந்த ப்ளைன் சுடிதார பாக்கும்போதுதான் தோணும்னா பாத்துக்கங்களேன்.”

” நல்லா பேசுறீங்க” பதிலில் குத்தல் இருந்ததுபோல் நந்துவிற்குத் தோன்றியது. பெரிய விளையாட்டு போலவும். பிடித்த பெண்கள் பாராட்டினாலும் முகம் சுளித்தாலும் ஒரே மாதிரியான குழப்பம்தான் முதுகுத்தண்டில் ஊர்கிறது. “அட நிஜமாங்க. இப்ப நீங்க கேட்குறவரைக்கும் உங்கள வெறிச்சுப் பாத்ததுக்குக் காரணம் அந்த மஞ்சள்தான்னு எனக்கு சத்தியமா தெரியாது, இவ்வளவு ஏன், நான் வெறிச்சுப்பாத்தானான்னு கூட தெரியாது”

“அப்ப நான் பொய் சொல்றேன்றீங்களா?” கெளரியின் கேள்வியில் ஒரு கொஞ்சல்கோபம் இருந்தது.அமைதியாக இருந்தான். போட்டியை நீட்டாமல் வேறு இடத்திற்கு செல்லத் தோன்றியது. “எந்தூர் நீங்க… எங்காலேஜ்ல எப்படி புதுசா… அதுவும் ப்ரியா கூட” இத்தனை நேரம் உடனிருந்தவளை ஒருவார்த்தை கேட்காமல் வாயடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்து துணுக்குற்றான். திரும்பி ப்ரியாவைப் பார்த்தான். அவள் உதட்டோர குறும்புச் சிரிப்புடன் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தாள்

“ஆராம்ளி. மெப்கோலதான் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப தூரமா இருக்குன்னு இந்தவருசம்தான் மாத்திட்டாங்க. இப்பவும் போகவர கஷ்டம்னு ஹாஸ்டல்லதான் இருக்கேன். இங்க பலதடவ வந்திருக்கேன். உங்களத்தான் பாத்ததில்லை. இதுதான் முதல்தடவ. அதுவும் ஒரே ஆளா அஞ்சாறு பாட்டிலோட”

“அதென்ன ஆராமுளி ஏழாமுளி. ஆரல்வாய்மொழின்னு முழுசாவே சொல்லலாம்ல.” அவள் பார்வையிலிருந்து மறுபடியும் சீண்டிவிட்டதாகத் தோன்றியது. இந்த மாட்டுத்தடியன்கள் திரும்பி வந்து தொலையலாம். “எவ்வளவு அழகான பேர் இல்ல நெருப்பு வாய் மொழி. ஒளிவடிவம். நெருப்புகூட மஞ்சள்தான். உங்கள மாதிரி..” நாக்கைக் கடித்துக்கொண்டான். ப்ரியா அதிர்ந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“என்னல வம்பளத்துட்டு இருக்கியோ. ஏய் நீங்க போய் படிங்கட்டி. நாங்க எங்க வேலையப்பாக்கோம்” சந்துரு சரியான இடைவெளியில் உள்ளே நுழைந்தான். நிஜாம் பாக்கு வாசம் அவன் சட்டையெல்லாம் வீசியது. அது பணக்கார வாசமும் கூட. அரசியலின் வாசனை. எங்கொ தொலைதூர நகரத்தின் மூலவர் பெற்றிருக்கும் அதிகாரம் குட்டைகள் ஆறுகள் வாய்க்கால்களைக் கடந்து பாயும் கடைசி வரப்புகளுக்குப் பாயும்போது செழித்துவளரும் சிறு நகரத்து வரப்போர செடிகளின் மினுமினுப்பு. கொஞ்ச நாள் இப்படியே எதாவது கோர்ஸ் அது இது என சுற்றிவிட்டு எந்தத் தருணத்திலும் ஒரு சண்டையில், பஞ்சாயத்தில் இறங்கி யாரையாவது அடித்தோ வெட்டியொ ஒரு கேஸ் கிடைத்துவிட்டால் திரும்பி வரும்போது அப்பாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாய் உள்ளுர் அரசியல் கணக்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எதிர்காலம் இதுதான். இதுவும் சிறப்புதான் எனத் தெளிவாகத் தெரிந்தபின் முகத்தில் எழும் பூரிப்பு, பணம் கொடுக்கும் நிம்மதியான உணவில் வரும் ஊட்டம்.

ப்ரியா கண்காட்ட கெளரியும் அவளும் அறையை விட்டு கிளம்பினார்கள். கெளரி திரும்பி பார்த்தாள். கண்களில் கோபமும் உதட்டில் சிரிப்பும் இருந்தது.

o

வேலையைப்பத்தி சொல்லம்ல கேப்போம்

சந்துரு வந்து லாவகமாக சரக்குபாட்டிலை, சோடாபாட்டிலைத் திறந்தபடியே கேட்டான். நந்துவுக்கு நிச்சயம் தெரியும் எதைச்சொன்னாலும் கிண்டல் செய்யப்போகிறார்கள் என்று. குடிக்கிறவர்கள் எப்பொழுதும் குடிக்காமல் உடன் இருப்பவர்கள் தங்கள் பொழுதுபோக்கு என நினைத்துதான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டாவது மூன்றாவது கிளாஸ் உள்ளே நுழையும்போதே அது தலைகீழாக மாறிவிடுகிறது. மறு நாள் எழுந்தபின்னர் அவர்களுக்கு பெரும்பாலும் மூன்றாவது கிளாஸின் கதை நியாபகத்தில் இருப்பதில்லை. முதல் இரண்டு கிளாஸ்களையே நகைச்சுவையாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“அதுக்கென்ன மாப்ள. போகுது. இப்பதான உள்ளபோய்ருக்கேன் தலையும் புரியல வாலும்புரியல. ஆனா பெரிய கம்பெனி பாத்துக்க. மூச்சப்புடிச்சு ரெண்டுவருசம் இருந்தா அப்புறம் எப்படியும் சுத்தி சுத்தி இதே மாதிரி கம்பெனிகதான். வாய்ப்பு கிடைச்சா அமேரிக்க பறந்துருவேன் பாத்துக்க.”

” வாய்ல சுட்டா நல்லாத்தாம்லே இருக்கும். இந்தா நம்ப கோம்பை வெளி நாடு போறேன்னு ஆடுமாட வித்துப்போனான். ஆறே மாசத்துல முதுகு பழுத்து திரும்பி வந்தாம்ல. நாம நினைக்கது இருக்கட்டும். நடக்கது என்னன்னு ஒண்ணு இருக்கு பாத்துக்க” சோடா பாட்டிலை விட்டு முகத்தைத் திருப்பாமல் சொன்னான் மணி. இன்பா எதுவும் பேசவில்லை. கையில் கிளாஸை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ” நீ தப்பிட்ட பாத்துக்க. நானும் எங்கியாவது போய்டணும்ல. குறைஞ்சது மதுரை திரூந்தபுரம்னாவது. வீட்ல இருந்தா வெளங்காது.”

முதல் கிளாஸை ஒருவருக்கருவர் மோதிக்கொண்டனர். நந்துவும் தனது பெப்சி பெட் பாட்டிலை அதனுடன் மெல்ல உரசிக்கொண்டான். சத்தமாய் ஒரு ச்சியர்ஸ். உண்மையில் இது அடுத்த அறையில் இருக்கும் பெண்களுக்கான அறிவிப்பும் கூட. ஆரம்பித்துவிட்டோம் இனி விடியும் வரை வரக்கூடாது என்றொரு அறிவிப்பு. எப்பொழுதும் பிரியா இந்தத் தருணத்திற்காக காத்திருப்பாள் என்பது தெரியும். அவள் அறையிலிருந்து எழுந்துவந்து பட்டாசல் விளக்கை அணைத்துவிட்டு போய் அறையில் அமர்ந்து கொள்வாள். எப்பொழும் நந்து இவர்களுடன் இருக்கும் நாட்களில் தெருவாசல் விளக்கு போடப்படும். இவர்கள் மூன்று ரவுண்டு தாண்டி நான்காவது ரவுண்டில் சொன்னதையே சொல்லும் கணம் வந்ததும் நந்து போய் வெளியில் நின்றிருப்பான். மிகச் சிறிய நேரம். அந்த நள்ளிரவில் மஞ்சள் விளக்கொளியில் பறந்தடங்கிய மண் புழுதியைப் பார்த்துக்கொண்டு நிற்பதுவும் ஒரு வகை போதை என்றறிந்திருந்தான். எதிர்பார்த்ததே இம்மி பிசகாமல் நிகழ்ந்தது.

வழக்கமான கச்சேரி கதைகள். சந்துருவின் அரசியல் முகம் பூசிய கதைகள். வட்டிவசூலில் சந்தித்த மனிதர்களின் கதைகள். அவர்களின் கதறல்கள். நந்து சுவாரசியமின்றி பெப்சி பாட்டிலை பார்த்துக்கொண்டே கெளரியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். இத்தனை காலங்களில் ஏற்படாத ஒரு உணர்வு. வாலிபத்தின் முதற்காலடிகளில் நண்பர்கள் ஆளுக்கொரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கையில் எந்தப்பெண் மீதும் எழாத ஒரு உணர்வு.

உண்மையில் பிறரை விட நந்துவிற்கு பெண் நண்பர்கள் அதிகம். அவர்கள் நண்பர்களாகவே கடைசி வரை இருந்ததுதான் காரணம். சிலர் காதல் கடிதங்களுக்காக எழுதிக்கொடுக்கும்படி கேட்டு அணுகியவர்கள். சில நேரங்களில் ஒரு இணையின் இரு கடிதங்களையுமே நந்துவே எழுதியிருக்கிறான். இருவருக்குமே அது தெரியாது. அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கு உணர்வு இருக்கிற்து. நந்துவிடம் சொற்கள் இருக்கிறது. சொற்கள் மட்டும். எழுதி எழுதியும் தீராத காதல் இருந்தாலும், கடைசி வரை, அதாவது இந்த குறிப்பிட்ட நாள் வரை அந்தக் காதலை தனக்காக எழுதிக்கொள்ளும் தேவை ஏற்படவே இல்லை.

“என்னல கனவு கண்டுட்டு இருக்க”, சந்துரு வண்ணங்களுடன் பறந்துகொண்டிருந்த சோப்புக்குமிழியை உடைத்தான்.

அதொண்ணுமில்லை. சும்மாதான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்.

அதான் நீ யோசிக்க லெச்சணம் மூஞ்சில எழுதி ஒட்டிருந்துச்சே அந்த புதுபுள்ளைட்ட பேசிட்டு இருந்தப்பவே.

ச்ச. அதெல்லாம் ஒண்ணுமில்ல

மொசப்புடிக்க நாய மூஞ்சப்பாத்தா தெரியாதா. எத்தன பாத்துட்டோம். ஏன் நீயேஎத்தனதடவ இவன் வந்து எங்கிட்ட லட்டர் எழுதச் சொல்லி கேட்பன்னு எத்தனபேரப்பாத்துச் சொல்லிருக்க. நடந்துச்சா இல்லியா.

அதில்ல… மூஞ்சில தெரியும்தான்.

அதேதான். நீயும் அப்டித்தான் மூஞ்ச வச்சுட்டு இருக்க அவளப்பாத்ததுல இருந்து. ஆனா ஒண்ணு சொல்லுதன் மாப்ள. நீ சிக்கி சீரழிஞ்சு போகப்போற உன் முழியெல்லாம் ஒண்ணும் வெளங்குதாப்ல இல்ல பாத்துக்க.

பாட்டில் பாதிக்கு மேல் காலியாகிருந்தது. இன்பாவும் மணியும் காரசாரமாக அடிதடி நிலமைக்கு நெருங்கியவாறு எதையோ உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். மிகச்சுலபத்தில் போதை ஏறிவிடக்கூடியவர்கள். சந்துரு மெதுவாகத்தான் சுருதிக்கு வருவான். அவனுக்கும் சுருதி ஏறியபின் நிச்சயம் அமரமுடியாது. உண்மையில் சண்டையிடும் அந்த இருவரைவிட சமாதானம் செய்யும் சந்துருவின் சத்தம் கொடுமையாக ஒலிக்கும். அவர்கள் நிறுத்தியபிறகும் கூட சில நாள் தொடர்ந்து உரத்த குரலில் சமாதானம் செய்து கொண்டிருப்பான்.

அடச்சே. எங்கியோ பாத்தமாதிரி இருக்கு மாப்ள அவள. அதான் யோசிச்சுட்டு இருக்கேன் எங்கன்னு. சரியாத்தெரியல.

கிழிச்ச. ஆராம்ப்ளிக்கும் போனதில்ல. மெப்கோல எங்க போய்ருப்ப. என்ன போய்ருக்கியா..

ஆராம்ளிக்கு போனதில்ல.ஆனா ஒரு தடவ ஸ்கூல்ல டிஸ்ட்ரிக் லெவல் காம்பெடிசன்ன்னு மெப்கோ போய்ருக்கேன் மாப்ள. அங்க இருக்கலாம்ல.

மிதிவாங்கப்போறபாத்துக்க. நீ ஸ்கூல் போய் நாலுவருசம் இருக்குமா. அவ அந்தக்காலேஜ்ல ரெண்டு வருசந்தான். சும்மா பேசணும்னு பேசாத என்ன.

ஆனாலும், சொல்லிவிட்ட பிறகு அந்த நினைப்பு உருண்டுகொண்டே இருந்தது. எங்கோ பார்த்திருக்கிறோம். எங்கே. நான்கு வருடத்திற்கு முன் அவள் அந்தக்கல்லூரிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா. ஆனாலும், பெண்கள் நிச்சயம் நான்கு வருடங்களாக ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பதின்மத்தில் வாய்ப்பே இல்லை. மிகச் சிறிய இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசங்களை அடைந்து ஆளே மாறியிருப்பார்கள். ஆனாலும் இந்தச் சிந்தனை உழன்றுகொண்டே இருந்தது. பெப்சி முடிந்திருந்தது. “மாப்ள இன்னொரு பெப்சி எடுத்துட்டு வரேன் என்ன. ” சந்துருவும் பிறருக்கும் தனக்கான பொதுப் பஞ்சாயத்தைத் தொடங்கியிருந்தார்கள். நந்து மெல்ல எழுந்து அறைக்கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி அருகில் மீண்டும் அவள். கெளரி.இருட்டில்.விளக்கைப்போடாமல். குளிர்சாதனப்பெட்டியின் மெல்லிய வெளிச்சம் அவள் மீது விழுந்திருந்தது. பிரதிபலிப்பதைப்போல. நந்து விளக்கருக்கே போய்விட்டு அதைப்போடாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அந்த முகத்தின் தனியாக விழும் ஒளி. நிச்சயம் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று உறுதியாகத் தெரிந்தது. எதோ ஒரு கணத்தில் தடுமாறி சுவிட்சை அழுத்திவிட்டான். கெளரின் கையிலிருந்த தண்ணீர்பாட்டில் சற்று குலுங்கியது. திடீர்வெளிச்சத்தில் பயந்திருக்கக்கூடும். திரும்பி ” நீங்களா ” என்றாள். “பயந்துட்டேன்” அந்த ஆசுவாசம் பிடித்திருந்தது. அழகாக இருந்தது.

“ம். உள்ள போரடிச்சுது. அதான் கிளம்பி வெளிய வந்தேன். வாசல்ல கொஞ்ச நேரம் நிக்கலாம்னு” பதில் நினைத்ததற்கும் சொன்னதும் வேறாக இருந்தது. மெல்ல குளிர்சாதனப்பெட்டிலிருந்து அடுத்த பெப்சியை எடுத்துக்கொண்டான். கொஞ்சம் தயங்கி நின்றான். என்ன எதிர்பார்த்தான் என அவனுக்கே தெரியவில்லை. “எனக்கும் அதே. வெளிய இன்னேரத்துல நிக்கலாமா. யாரும் தப்பா நினைக்கமாட்டாங்களே” என்றாள். இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று திடீரென விளங்கியது. இந்நேரத்துல யாரும் வரப்போறதில்ல. நான் எப்பவும் நிக்கிறதுதான். வாங்க”

“வாங்கவா… என்ன கொழுப்பா. போரடிச்சுதுன்னு சொன்னேன். நீங்க நின்னா தப்பா நினைக்கமாட்டாங்களான்னு கேட்டேன். என்னையும் வந்து நிக்கச் சொல்றீங்களா. அதுவும் இன்னேரத்துல”

“ஏன் பயமா. இருட்டா நாயா”

“எனக்கென்ன பயம். வாங்க நிப்போம்”

என்ன நிகழ்ந்ததென்று குழப்பமாக இருந்தது. வருகிறேன் என்றாளா வரமாட்டேன் என்றாளா. வந்து நிற்பது வெறும் வீம்புதானா. இல்லை சீண்டல் விளையாட்டா. ஏன் எளிய விஷயங்கள் விருப்பமானதாய் ஆனபிறகு இத்தனை சிக்கலான கேள்விகளை உருவாக்குகின்றன. பெப்சி மூடியைத் திருகித் திறந்தான். ஒலியுடன் திறந்துகொண்டது. எந்த சலனமும் இன்றி வாசல்கதவைத் திறந்து திண்ணையில் அமர்ந்துகொண்டாள். அவள் எதிரே அவளது சைக்கிள் நின்றிருந்தது.சில நொடிகள் திண்ணையில் அமர்வதா அருகில் நிற்பதா என்ற குழப்பத்திற்குப் பிறகு முடிவெடுத்து அவள் சைக்கிளின் பின் இருக்கையில் இருபுறம் கால் போட்டு அமர்ந்துகொண்டான். எதிரில் சைக்கிள் கைப்பிடி இடைவெளியில் அவள் முகம் இருந்தது. இடதுபுறம் தூரத்தில் எங்கோ எதையோ தேடிக்கொண்டிருப்பவள் போல திரும்பியிருந்தாள். எதிரிலிருந்த தெருவிளக்கிலிருந்து மஞ்சள் ஒளி ஒரு பக்க முகத்தில் மட்டும் விழுந்திருந்தது. கழுத்தின் தங்கச்சங்கிலியில் மெல்லிய மினுமினுப்பு. ஒளிவிழுவதால் கண்ணில் தெரியும் கண்ணீரின் பிரதிபலிப்பு. இந்தப்பிரதிபலிப்புக்குள் தானும் ஓரக்கண்ணில் பார்க்கப்படுகிறோம் என்ற உணர்வு எழுந்து மயிர்க்கால்கள் குறுகுறுத்தன.

“ஆமா அதென்ன அரளிப்பூ”

“ம்ம் செவ்வரளி. சின்னவயசுல இருந்தே செவ்வரளி புடிக்கும். அதான்.”

“ நீங்களே வரைஞ்சதா”

“இதுக்கு ஆள்வச்சா வரைவாங்க. அதுவும் யார்கிட்டையாவது சைக்கிள்ள அரளிப்பூ வரைஞ்சு தாங்கன்னா சிரிக்கமாட்டாங்க”

சிறிதாக புன்னகைத்தான்.

“பாருங்க நீங்களே சிரிக்கிறீங்க. ஆமா எப்ப பாத்தீங்க அரளிய”

“ நானா சின்னவயசுல. எங்கூர் கோயில் நந்தவனத்துல. அரளி நந்தியாவெட்டையெல்லாம்.”

“என்ன நக்கலா. என் சைக்கிள்ள இருக்கத எப்ப பாத்தீங்கன்னு கேட்டேன்.”

“ம். வந்ததுமே உங்க தரிசனத்துக்கு முன்னாடியே அரளி தரிசனம்தான்”

முறைத்தாள். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள். கண்களில் மெல்லிய சிரிப்பு தெரிந்ததைப்போல் இருந்தது.

”ஏன் எதும் தப்பா சொல்லிட்டனா” நந்துவுக்கு பேச்சை வளர்க்கத் தோன்றியது. இடைவெளிகள் ஒவ்வொன்றிலும் எங்கோ தூர விலகிப்போகும் சாயல். ஒவ்வொரு சொல்லும் உரிமை எடுத்துக்கொண்டு சீண்டும் விளையாட்டு. சீண்டும்போது மேலதிகமாக எழும் இதயத்துடிப்பின் ஓசை. அவளுக்கும் இப்படித்தான் இருக்குமா. இல்லை ஆண்களுக்கு மட்டுமா. சந்தித்த சில மணி நேரங்களில் இதெல்லாம் நிகழ்வது சாத்தியம்தானா. சாத்தியம் என்றாலும் சரிதானா. இடைவெளிகளில் சிந்தனைகள் வேகமாகச் சென்று எங்கோ ஒரு சுவற்றில் மோதி உடைந்தது. உடைதலைத் தவிர்ப்பதற்காகவாது எதையாவது பேசிக்கொண்டிருக்கவேண்டும்.

தப்பு சரின்னு சொல்லல. ஆனா கொஞ்சம் ஓவரா பேசறீங்க.

வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டுப்போய்டும்னு எங்க அப்பத்தா கூட சொல்லும்

ஆமா தூக்கிட்டுப்போற எலும்புத்துண்டு மாதிரிதான் இருக்கீங்க.

நந்துவுக்கு உள்ளே எதோ உடைந்தது.

“சாரி… விளையாட்டுக்குத்தான் சொன்னேன். மறுபடியும் சாரி”

“அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாரும் சொல்றதுதான. பழகிடுச்சு.”

அவள் முகம் சுருங்கியிருந்தது. பெண்கள் எத்தனை துல்லியமாக உணர்வுகளை முகத்தில் மறைப்பார்கள் என்பதை அறிந்திருந்தான். இவள் புதிதாக இருந்தாள். எல்லாவகையிலும். பல நாட்களாக அதே நடைபாதையில் இருக்கும் மலர் மழை நாளில் புதிய முகம் அடைவதைப்போல அத்தனை நாட்கள் பழகிய பெண்களிலிருந்து முற்றிலும் புதிதாக இருந்தாள். இருகைகளிலும் செயினைப்பிடித்துக் கடிக்கும் பெண்களிலிருந்து புலிப்பல்லின் நுனியில் செயினை கடித்துக்கொண்டு கைகளைப் பின் சாய்த்து நிறுத்தி உடல் தாங்கி தொலைவின் குரல்களை கூர்மையான கண்களால் கற்றுக்கொள்ள எத்தனிக்கும் அந்த அமர்வு புதிதாக இருந்தது. எல்லா நேரத்திலும் சொந்த சகோதரன் முன் கால்களை இறுக்கிக்கொண்டு சங்கடத்துடன் அமர்ந்திருக்கும் பெண்களிலிருந்து சகஜமாக கால்மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் அந்த உடல்மொழி புதிதாக இருந்தது.

” நான் வரும்போது எதோ பாடிட்டு இருந்தீங்களே என்ன பாட்டு.” மிகச்சுலபமாக குற்ற உணர்ச்சிகளைத் தாண்டிச்செல்கிறாள். அல்லது அதற்கு முயற்சி செய்கிறாள்.

“ம்ம். மன்றம் வந்த தென்றலுக்கு. நேத்து எங்கையோ மறுபடி கேட்டேன். அப்பமேருந்து முணுமுணுத்துட்டே இருக்கேன். மேடையைப்போல வாழ்க்கையல்ல என்ன மாதிரி வரி.. அந்த சிச்சுவேசன் கூட. எவ்வளவு கனவோட உறவுக்குள்ள வந்திருப்பான் அந்த புருஷன். வேசத்தைக் கலைச்சு மாறமுடியாத உறவுக்குள்ள பழசையே நினைச்சுட்டு இருந்தா எப்படி..”

“ரேவதி இடத்துல இருந்து யோசிச்சுப்பாருங்க. எத்தன வருச கனவு. பாத்தவுடனேல்லாம் ஒருத்தர வாழ்க்கைல ஏத்துக்கமுடியுமா. மோகனுக்கு மனைவின்றது ஒரு கொடுக்க்கப்பட்டது. அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் அவர் அதே உணர்வோடதான் இருந்திருப்பாரு. ஆனா அவளுக்கு அப்டியா. இன்னொருத்தர அந்த இடத்துல வச்சுப்பாத்துட்டு திடீர்னு மாத்திக்கணும்ன்றது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா. அதெல்லாம் பொண்ணா இருந்து பாத்தாதான் புரியும். உண்மை என்ன தெரியுமா காதலோட பாக்குற மோகன் மறுபடி மறுபடி கார்த்திக்க நியாபகப் படுத்துறதுதான் பெரிய வேதனையே. மத்தவங்க கிட்ட சிரிச்சு பேசுற அவளால அவன்கிட்ட பேசமுடியாதுன்னா அதுவும்தான். கூட உரிமை உள்ளவன், உரிமை எடுத்துக்குவான்னு பயம் கூட இருக்கும்ல.”

“அதுக்குன்னு கம்பளிப்பூச்சி ஊர்றமாதிரி இருக்காமா. மீறி கைவைக்க உரிமை உள்ளவந்தான. பண்ணல. அதும்போக இந்தக்காலத்துல அப்டி யாராவது முட்டாளா இருப்பாங்களா என்ன”

“ஓ. மறுத்தாலும் கேட்காம பாஞ்சிருவீங்க அதான உங்க ஆம்பள புத்தி”

“பாய்வோம் மாட்டோம்ன்றது ரெண்டாவது. மறுக்கிறது நியாயமான்னு கேக்கேன்”

“இதுல என்ன நியாயம் அனியாயம் இருக்கு. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. யார் வாழ்க்கைலையும் யாரும் மூக்க நுழைக்கக்கூடாது. அது யாரா இருந்தாலும் ஹஸ்பண்டா இருந்தாலும் லவ்வரா இருந்தாலும். தனிப்பட்ட ஸ்பேஸ் ஒண்ணு இருக்கணும். அப்டி இல்லைன்னா என்ன வாழ்ந்து என்னத்த”

நந்து மிரண்டு போய் நின்றான். அவள் குரல் நேரத்துக்கு நேரம் உயர்ந்துகொண்டே வருவதுபோல் இருந்தது. தன்னுடன் பேசும் சாக்கில் தனக்குள்ளாகவே எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாளாயிருக்கலாம். ஆனாலும் நாணிக்கோணாமல் மென்மையான இதயம் போன்ற பூச்சுகள் இல்லாமல் எகிறிப் பேசியது பிடித்திருந்த்து.

“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றீங்க” நந்து உண்மையில் மிரட்டலாக குரல் உயர்த்தி கோபத்தைக் காட்ட நினைத்தான். கடைசி வார்த்தையில் தொண்டை திடீரென வறண்டு கீச்சிட்டது. அவள் சிரித்துவிட்டாள்.

உள்ள போலாம்ன்றேன். எதோ குடும்பச்சண்டைய ராக்கருக்கல்ல ரோட்ல போட்றாப்ல இருக்கு

ஏன் படிக்கப்போறீங்களா உள்ளே போனால் அவன் குடிகும்பலோடும் அவள் வேறு அறையிலும் இருக்கவேண்டும் என்பது இடறியது. இந்தச் சண்டையாவது இப்படியே இடைவெளியில்லாமல் நீண்டு பின் உறங்கினால் இந்த இரவுக்கு அர்த்தமிருக்கக்கூடும்.இந்தப்பெண்ணுக்கு மட்டும் இதுவரை தான் கண்டிராத புன்னகையொன்று கண்களுக்குள் பயணம் செய்வதை உணர்ந்தான். ஒற்றை இமைதூக்கிமுக்கால்பாக உதடுகள் மட்டும் நெளிய மறுபாகம் அதே மென்கோபத்துடன் இறுகியே இருக்கிறது. அர்த்த நாரி புகைப்படத்தில் இடப்பாகம் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கும் அம்பிகை போல.

குடும்பச்சண்டை என்ற வார்த்தை அழகாக உள்ளே நுழைந்து உறைந்தது. “எல்லா குடும்பமும் சண்டை போட்றதுதான். ஏன் குடும்பத்துக்கூடத்தான உரிமையா சண்டை போடத்தோணும். உரிமையில்லாதவங்கள நாம சண்டைபோட்றதில்லைல.”

“ஏன் இப்ப நாம சண்டை போடல. இதுல எங்க இருந்து வந்து உரிமை.சண்டையெல்லாம் எப்பவும் யார்கூடவேணா போடலாம். சும்மா அளக்காதீங்க”.

“சண்டை இல்ல உரிமை. திரும்ப வர்றதுல இருக்கு. தெரியாதவங்க கிட்ட போட்ற சண்டையும் தெரிஞ்சவங்க கிட்ட போட்ற சண்டையும் குடும்பத்துல நடக்குற சண்டையும் ஒண்ணில்ல. நடுவில பெரிய இடைவெளி இருக்குல்ல. அங்கதான் எல்லா விஷயமும் இருக்கு”

“கவிஞருக்கு பேச சொல்லியா குடுக்கணும்”

சில நொடிகள் உறைந்து மீண்டான். ” நான் கவிதை எழுதுவேன்னு யார் சொன்னா”
“அதுவா உள்ள தற்செயலா பேச்சு வந்துது உங்களப்பத்தி அப்ப ப்ரியாதான் சொன்னா. கவிதையெல்லாம் எழுதுவீங்களாம். டைரி டைரியா வச்சுருக்கீங்களாம். யார்கிட்டையும் காட்டமாட்டீங்களாம்.”

“ஹா ஹா. தற்செயலா என்னப்பத்தி பேச்செல்லாம் வருதா… நல்லவிஷயந்தான்”

இமை உயர்த்தி ஒரு நொடி முறைத்துவீட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள். சிரிக்கும்போதெல்லாம் மறுபுறம் திரும்பிக்கொள்ளும் அவள் தன்னுணர்வில் ஒரு அழகு இருந்தது. ஆண்பார்க்கையில் மாரப்பைச் சரிசெய்யும் பதட்டமின்றி எதிர் வருகிறவன் வழிவிடத்தூண்டும்படி கூந்தலைத் தூக்கி கழுத்தோரமாக பின்னால் எறியும் கர்வம். உன்னைக் கவனிக்கிறேன். நீ பொருட்டில்லை. நீ என் பிரியத்துக்குரியவன் இல்லை என முகத்திலறையும் கர்வம்.

“ஆமா கவிதையெல்லாம் ஏன் எழுதுறீங்க”

“எதூ.”

கவிதை. கவிதை ஏன் எழுதுறீங்கன்னு கேட்டேன்.

“இதுவரைக்கும் எப்படி எழுதுறீங்கன்னு கேட்டவங்கதான் இருக்காங்க. ஏன் எழுதுறீங்கன்னு யாருமே கேட்டதில்ல.”

“ஓ. சாரி. இல்ல. யாருக்கும் காட்டாம எழுதி எழுதி ஒளிச்சு வைக்கிறதுல என்ன ஆர்வம்னு தெரிஞ்சுக்கத்தான். தப்பா இருந்தா மறுபடி சாரி”

தப்பெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா கொஞ்சம் புதுசு அவ்ளோதான்.

ம்ம். அப்ப சொல்லமாட்டீங்க அப்டித்தான

அப்டி சொல்லல… ஆனா இதுல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. அது சின்ன வயசு பழக்கம். எதோ ஒரு காரணத்துக்காக எழுத ஆரம்பிச்சி, இப்ப சும்மா எடுத்து வைச்சிருக்கேன். காரணங்கள் முடிஞ்சுபோனதால இப்ப எங்கியும் பகிர்ந்துக்கிற்தில்லை. ஒரு தடவ காலேஜ் பேக்ல இருந்துது. பசங்க பாத்துட்டாங்க. மத்தபடி கவிஞனா நான் சொல்லிக்கிறதோ காட்டிக்கிறதோ இல்ல

ம்ம். என்ன காரணம். சொல்லலாமா

முதல் நாவல் அனேகமா எழுதுவேன். எழுதுனதும் முதல்ல உங்ககிட்டையே காட்டுறேன் சரிதான

அதுவரைக்கும் காண்டக்ட்ல இருந்தா பாப்போம்

முதல் நாளே இப்படி சொல்றீங்க. உங்கள நம்பி காரணம்வேற சொல்லணும்ன்றீங்க. சரியவா இருக்கு

அதுவும் சரிதான்

மெளனம் மெல்ல வந்து உள்ளே விழுந்தது. முதல் சந்திப்பிலேயே நியாபகத்திற்கு கொண்டுவர விரும்பாத காலங்களைப்பற்றி ஏன் பேசினோம் என்பது குழப்பமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் பேசுகிறோம். என்ன உரிமையில் பால்யத்தைப் பேசுகிறோம். அல்லது எந்த உரிமையில் பால்யத்தின் கதைகளை தயக்கமின்றி இவளால் கேட்க முடிகிறது.

”உள்ள போலாம்” படக்கென எழுந்து கொண்டாள். சொல்வதற்கு இதற்கு மேல் எதுவும் இல்லை என்பதைப்போன்ற ஒரு வேகம். பேசியது அத்தனையும் சரிதானா என்ன எண்ணிப்பார்த்துக்கொள் என வாய்ப்புக்கொடுக்கும் ஒரு அசைவு. திரும்பிப்பார்க்காமல் மிதிவண்டியிலிருந்து எழுந்தானா என்பதைக் கூட கவனிக்காத ஒரு அலட்சியம். இந்தப்பெண் எப்படி இத்தனை சிறு நிமிடங்களில் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்திப்போகிறாள். ஏன் அவள் கோபம் இத்தனை சுடுகிறது. ஏன் சிறிய முகச்சுளிப்பு இப்படி சுடு நீரில் அமிழ்த்துகிறது. யாரையும் எதற்கும் ஏற்காமல் தள்ளி வைத்துப்பார்க்கும் மனது இவளை மட்டும் ஏன் இப்படி கட்டி பின் தொடர்கிறது. மறுபேச்சின்றி தன் பாதையில் போகும் ஒரு பெண்ணை எது இழுத்து பதறி ஓடிப் பின் தொடரவைக்கிறது. கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன, உண்மையில் கேள்விகள் அப்பொழுதுதான் தொடங்குகின்றன என்பது அவனுக்கு எங்கோ ஒரு ஆழத்தில் தெரிந்திருந்தது,

மசான பதி

பின்னூட்டமொன்றை இடுக

வழக்கமாகச் செய்வதுதான், மீண்டும் ஒருமுறை, வழக்கத்தை விடாமலிருக்கும் பொருட்டு. வழக்கமென தொடங்கப்பட்டவை ஒரு முறை அதன் குறித்த நாளைத் தவறினால் மீண்டும் அம்மனநிலைக்குத் திரும்பாத சோம்பேறித்தனம் வாய்த்திருக்கிறது. தினம் ஒன்றென எழுதத்தொடங்கிய இத்தளம் ஆகட்டும், அல்லது வாரம் ஒரு முறை எழுதத்தொடங்கிய இத்தொடர் ஆகட்டும், குறித்த நாளை ஒருமுறை தொடங்கியபின் மீண்டும் அங்கே திரும்ப முடிவதில்லை. அத்தொடர்களில் பல பதிவுகள் இன்னும் நிறையாமல் காத்திருக்கின்றன. அவ்வப்போது அந்த தளங்களை எதாவது நினைவூட்டலுக்காகத் திறக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எப்பொழுதாவது மீண்டும் எழுத முயற்சி செய்யும்போது இயலாமை முகத்திலறைகிறது மீண்டும் எப்பொழுதாவது வெளிவரும் என நண்பர்களுக்குச் சொல்லும்போது கழிவிரக்கம் எழுகிறது. அந்த நிலை இதற்கும் வரவேண்டாம் என்பது இவ்வருடம்வரை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம்.

புதிதாக எதுவுமில்லை. முந்தைய தொகுப்பிற்குப்பிறகான அத்தனை பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நாட்குறிப்புகளைத் திரும்ப வாசிக்கும் மனநிலையன்றி இத்தொகுப்புகளுக்கு யாதொரு அர்த்தமும் இல்லை. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது சொல்வெளிப்பாடுகள் தொடர்ந்து மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்ள முடிகிறது. பல கவிதைகள் அந்தக்கணத்தைக் கடந்தபின் எந்த உணர்வையும் எனக்கே எழுப்பாதவையாக இருப்பதை உணர்ந்து நீக்கமுடிகிறது. ஒரு எளிய வாசகனாக, சில வரிகளை, சில வார்த்தைகளை நீக்கி செப்பனிட்டு, இனி இவை அதன் வடிவத்தை அடைந்துவிட்டன என ஆசுவாசம் கொள்ளமுடிகிறது. ஒருவேளை பிறிதொரு நாள் வாசிக்கும்போது மொத்த தொகுப்பையும் நிராரகரிக்கும் மன நிலைக்கும் வந்து சேரக்கூடும். பயணமின்றி சொல்லேது?

ஏன் மார்ச் 10 எனும் கேள்வி எப்பொழுதும் அந்தரங்கத்தைத் தொடுவது. இந்நாளில்தான் சொல்லின் கூர்மையை அறிந்துகொண்டேன் என நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு சொல் எத்தனை தூரம் ஒருவரை உடைக்கும், எத்தனை ஆழமாக மன நிலைகளை மாற்றும், எத்தனை பொறுப்புடன் பொதுவில் எழுதுபவன் தன் சொற்களை தேர்ந்து உபயோகிக்கவேண்டும், எத்தனை அவமானத்துடன் நம் சொற்கள் நமக்கு திரும்பி வரக்கூடும் போன்ற சாத்தியங்களை அறிந்து கொண்ட நாள். சொற்களை பொதுவில் வைக்குமுன் எத்தனை கவனம் தேவை, சொற்களை நண்பர்களுடன் பகிரும்முன் நமக்குள் நமக்காக சொல்லிப்பார்த்துக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல பரிமாணங்களை அறிந்து கொண்ட நாள். இந்த நாளில்தான் எழுத்தாளனாக விரும்பும் நான், எத்தனை பெரிய சுமையை விரும்புகிறேன் என்பதை நானே அறிந்தேன். எனக்கே என்னை நினைவூட்டும் நாளெனவும் நீங்கள் கொள்ளலாம்.

ஏன் புத்தகமாக வெளியிடக்கூடாது எனும் கேள்விக்கு வெளியாகும் புத்தகங்களையும், அதன் முன்பின் நிகழும் ஆட்டங்களையும் மட்டுமே கை காட்டுவேன். நண்பர்களைச் சந்திக்கும்போது, நண்பர்களுடன் இருக்கும்போது ஒரு புத்தகம்வெளியிட்டவன் என சுட்டிக்காட்டப்படுவதை தயக்கமும் கூச்சமுமாக மறுக்கவே விரும்புவேன். ஆகவே, இனி நீங்கள் மசான பதியைச் சந்திக்கலாம்.

தரவிறக்க : https://drive.google.com/file/d/0ByFr3N63dPrbX3BLN0h1NnZIaWM/view?usp=sharing

வாசிக்க :  https://issuu.com/lathamagan/docs/masanapathy

நீங்கா அன்புடன்
லதாமகன்

கன்னி – காதலென்னும் பிரபஞ்ச நிகழ்வு

பின்னூட்டமொன்றை இடுக

kanni

 

காதல். ஒற்றைச்சொல்லுக்குப் பின்னாக எத்தனை எத்தனை மனங்கள் அலையடித்துக்கொண்டிருக்கின்றன. கவிதையைப்போல என்றைக்கும் சாஸ்வதமான ஒரு சொல்லாக காதல் எத்தனை பெரியதாக விரிந்திருக்கிறது. காதல் என்பது இருவருக்கிடையே நிகழும் தனித்த அற்புத ரசாயன மாற்றமாக இருக்கும் அதே நேரத்தில், எல்லா காதல்களுக்குள்ளும் எப்படியாவது ஒரு பொதுத்தன்மை எப்படி நிகழ்கிறது. ஒற்றைக்காதலைத்தான் ஒருவருக்கொருவர் செய்துகொண்டிருக்கிறோமா. நமக்கான சிறப்பு நிகழ்வென்று எதுவுமே கிடையாதா. கன்னி 2006ல் எழுதப்பட்டிருக்கிறது, இதே வித நிகழ்வுகள், இதே வித பெண்கள், இதே மஞ்சள் சுடிதார், இதே மனப்பிறழ்வு பலருக்கு நிகழ‌ முடியுமா? பெரிய நாடகத்தின் ஒரு பகுதியாகத்தான் எல்லாமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நம் காதலென்பது இந்தப்பிரபஞ்சத்தில் எல்லா மனிதர்களாலும் அவரவர் வெர்ஷனில் காலங்காலமாக வாழ்ந்து வருவதுதானா.. நாளை நம் சொற்களையும் இன்னொருவன் இதே போல்தான் உணரப்போகிறானா.

நாவலில் பிரான்சிஸ் சந்தனப்பாண்டியுடன் இரண்டு பெண்கள் வருகிறார்கள். அமலா, அடுத்தது சாரா. மனப்பிறழ்வுடையவர்களின் சொற்களில் தன் வாழ்வின் எதிர்காலம் கண்டு எப்பொழுதாவது திடுக்கிட்டிருக்கிறீர்களா… கன்னியின் பிய்த்துப்போடப்பட்ட கட்டுமானத்திற்கு நடுவே அந்த அறியா ஒழுங்கு திடீரென எழுந்து முகத்திலறைகிறது. முதலில் பிறழ்வுற்ற பாண்டி. பிறகு பிறழ்வுக்கு காரணமாகும் அமலா. பிறழ்வின் ஆரம்ப கணங்கள், பிறகு சாரா. அமலா பாண்டியைவிட வயதில் பெரியவள். அவனைத் தட்டித் தட்டி செதுக்குபவள். அமலாற்பவம் எனும் மேரியம்மையின் பெயரைக்கொண்டு, ஆண்டவரின் தொண்டு ஊழியத்திற்காக நேர்ந்துவிடப்பட்டவர். கடலையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் குமரியம்மனின் ஆகிருதியை வியப்பவள்.

“ப்யூரிட்டியை மனிதர்கள் வணங்கியே ஆகவேண்டும், அவர்களுக்கு வேறு வழியேயில்லை. குறிப்பாக ஆண்களுக்கு”

சாராவைச் சந்திக்கும்போது முதலில் பாண்டிக்கு தோன்றும் உணர்வு, அவள் அவனைவிட சிறியபெண் என்பதே. அமலா கிராமப் பணிக்கு சென்றபின் பிறழ்வு தொடங்குகிறது, சாரா வருகிறாள். அதே கிராமப்பணிக்கு. பாண்டி அமலாவுக்கு பரிசளித்த மஞ்சள் சுடிதார் அணிந்து கொண்டு. மஞ்சள் நிஜமாகவே காதலின் நிறமாக இருக்கிறதா, அல்லது வாசிக்கும் பைத்தியக்காரர்கள் மஞ்சளை தன் காதலியின் அடையாளமாகப் பார்க்கிறார்களா. இந்தத்தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும், எனது மஞ்சள் மோகம். இது ஒரு பெண்ணிடமிருந்து எனக்குத் தொற்றிக்கொண்டது. பாண்டி, கிட்டத்தட்ட அதே மனநிலையில் மஞ்சளை அணுகுகிறாள். நிலம் மஞ்சள்., வெயில் மஞ்சள். பெண் மஞ்சள்.

வண்ண அறிவியலின்படி மஞ்சள் சிந்தனையின், நம்பிக்கையின், மனப்பிம்பங்களின் நிறம், அதிகபட்ச தூரத்திலிருந்தும் எளிதாக ஈர்ப்பது. தொலைவினால் பிறழும் மன நிலையைப்பற்றி பேசும்பொழுது அனைத்தும் மஞ்சளாக மாறுவது எத்தனை பொருத்தமான திறப்பு இல்லையா. எல்லாக்காதலர்களிடமும் சில பொதுக்குணங்களைப் பார்க்கமுடியும். பாண்டியிடமும். தர்க்கச் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையேயான போராட்டம். இனி எப்போதாவது வரப்போகும் இடைவெளி குறித்த விடாத பயம். அதன் காரணமாக மனதிற்குள்ளேயே உறுவாகும் வெற்றுப்பிம்பங்கள். அதன் மூலம் மெல்ல மெல்ல உருவாகிவரும் இருவருக்கு மட்டுமேயான ஒரு வெளி. அந்த வெளியியில் பிறருக்கு இடம் இல்லை. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிற்றுயிரும் அங்கே ஒரு கதாபாத்திரமாகிறது. உயிறற்ற கடல், மலை, பாறை, வெயில், இரவு எல்லாம் ஒரு பங்கு எடுத்துக்கொள்கிறது. அந்தப்பிறழ்வில் வெளித்தப்படுபவர்களாக சக மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

சொற்கள் முற்றிலும் அழிந்து உள்ளே உள்ளே உள்ளேயென தனக்குள் நுழையும் ஒரு மெளனத்திற்கான தேடல் நிகழ்கிறது பிரிவிற்குப்பின்னர். பாண்டிக்கு நிகழ்வதும் அதுவே. அவன் சொற்கள், அவனுக்கான பிரபஞ்சத்திற்குள் அமிழ்ந்து மெளனத்தைத் தேடுபவை மட்டுமே. சொல்லிலிருந்து மெளனத்திற்கு திரும்பும் வழி எனும் வரி அடிக்கடி கன்னியில் வருகிறது. அந்த மெளனத்தை காதலற்றவர்கள் அறிவதில்லை. அந்த மெளனத்தை அடைய முயற்சிக்கும்போது நம் எல்லா படைப்புகளும், எழுத்துக்களும் அதன் அர்த்தத்தை இழந்துவிடுகின்றன. மெளனம் அல்லது தன்னுடனான உள் நோக்கிய பேச்சு பார்ப்பவர்களுக்கு பிறழ்வுற்றவனின் அர்த்தமற்ற சொற்கள் மட்டுமே. அந்தப்பிறழ்வை அறிய அந்த நொடியில் வாழ்ந்த சிலர் அறிகிறார்கள் மிகத் தெளிவாக.

அமலாவும் சாராவும் இரு பெண்கள் எனத் தோன்றவில்லை. அமலா எனும் நிஜத்தின் நிழலாக, அமலாவை பாண்டி அடையத் தடையாக இருந்த வயதையும் பாண்டியின் கூச்சசுபாவத் தயக்கத்தையும் நீக்கினால் சாராவுடனான வாழ்வு வருகிறது. இருவருமே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அமலா வேற்றூருக்கு கிராமப்பணியாகச் செல்லும் நேரத்தில் சாரா இவ்வூருக்கு வந்துவிடுகிறார். அதுவும் மிகச்சரியாக பிறழ்வின் ஆரம்ப நாட்களைப்பற்றி பேசும் பகுதிக்குப் பிறகு. அமலா ஊரின் தெய்வக்குழந்தையாக இருக்கிறார். சாரா முழுக்க முழுக்க பாண்டியின் தெய்வமாக இருக்கிறார். இறந்து போன அத்தையின் சாயலில், அத்தையின் மகளான கற்பனையாக.

நாவலை முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும்போது கன்னி எனும் பெயர் வேறு தளத்திற்கு நினைவுகளைக் கொண்டு செல்கிறது. இறந்து போன அத்தை – குமரி – குமரியம்மன் – கன்னித்தாய் மேரி – சாரா – அமலாற்பவம் – கன்னித்தாய் – தேவகுமாரன் பாண்டி. நாவல் பெருங்காலம் கனவுலகத்தில் பிறழ்வு மொழியில் நிகழ்கிறது. எல்லாமே கனவாகவும், அதே நேரம் எல்லாமே துல்லியமாகவும் . மனப்பிறழ்வுடனும், சொற்களில், சாரா-பாண்டி அல்லது சாரா அமலாவுக்கிடையேயான உறவைச் சுட்டுபவையாகவும். கந்தர்வப்பெண்ணின் கால்பட்டு காலம் காலமாக மண்ணிற்குள் புதைந்தபடி உலகின் இரு கண்ணிகளுக்குள் அலைந்து கொண்டிருக்கும் கிளிஞ்சல், பிரான்சிஸ் சந்தனபாண்டி எனும் காதலானகவோ, நீங்களாகவோ, ஏன் நானாகக் கூட இருக்கலாம்.

தூப்புக்காரி – மலர்வதி

2 பின்னூட்டங்கள்

முன்குறிப்பு (அ) எச்சரிக்கை : மலம் அள்ளும் கனகம் பற்றிய பதிவு. குறைந்தது 5-6 மணி நேரத்திற்கு சாப்பாடு உள்ளிறங்காமல் போகலாம். எனவே சரியான நேரம் பார்த்து படிக்கவும். . கவனம்.

அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..

-மலர்வதியின் முன்னுரையிலிருந்து

சிறுவயதில் எங்கள் கிராமத்தில் எல்லாவீடுகளிலும், பின்புறம் கழிவறைக்கான மறைப்பு இருந்தது. மறைப்பு மட்டும் இருந்து. வீடுகளின் நிதிநிலைக்கேற்ப மறைப்பானது கூரையற்ற செங்கல் சுவர்களாககவோ, ஓலைத்தடுப்புகளாகவோ இருக்கும். உள்ளே கழிவறைக்கான குழி என்று கூட ஒன்றும் இருக்காது. கால் வைக்கத் தோதாக பழைய அடுப்பைப்போல கொஞ்சம் உயரமாக செங்கல் திண்டுகளோ, அல்லது மண்கட்டிகளோ வைக்கப்பட்டிருக்கும். இரண்டுக்கும் நடுவில் பழைய கழிவுகள் காய்ந்து கெட்டித்துக்கிடக்கும். கால் வைப்பதற்கான திண்டுகளில் வைத்து கடமையை முடித்துவிட்டு வரவேண்டியதுதான். இவையும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும். குழந்தைகள் என்றால், தனியாய் கொஞ்ச தூரம் நடக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டும், பத்துவயதுக்கு மேல் பின் பக்கம் போனால், வீட்டில்யாராவது கம்பெடுத்து வாய்க்கால் பக்கம் ஓடு என விரட்டிவிடுவார்கள். கிராமத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வென்று என்று காலர் ஏற்றிக்கொண்டு போய்வரவேண்டியதுதான்.

இந்த கழிவறை அமைப்புகளைச் சுத்தப்படுத்துவதற்கென்று வாரம் ஒரு முறை எங்கள் ஊருக்குள் வரும், பெண்ணைப்பற்றித்தான் நான் சொல்லவந்தது. அவர் பெயர் நினைவிலில்லை என்று பொய் சொல்லவிரும்பவில்லை. அவர் பெயர் தெரியாது. அப்பவும். ஊர் அவரது ஜாதியைச் சொல்லித்தான் அழைத்த நினைவு. ஒரு பேச்சுக்கு தூப்புக்காரி கனகத்தின் பெயரையே இவருக்கு வைத்துக்கொள்வோம். கனகம் வாரம் ஒரு முறை வருவார். கையில் ஒரு ஓலைக்கூடை. கிட்டத்தட்ட சினிமாக்களில் காட்டப்படும் பரிசல்களின் பாதி அளவு அகலம், ஓரளவு ஆழம். முழ சதுரத்தில் இரண்டு தகரங்கள். இரண்டு தகரங்களாலும், காய்ந்த மனிதமலத்தை வழித்து கூடையில் போட்டு கொண்டு போய் ஊர்க்கோடியில் வாய்க்கால் கரை யோரத்தில் கொட்டிவிட்டு வருவார். இதற்கு சம்பளம் என்று எதுவும் யாரும் குடுத்ததாய் நினைவில்லை. சாப்பாடு மட்டும். அதுவும் ஊர்முறைச் சாப்பாடு என்று பெயர். வேளைக்கு ஒருவீட்டுக்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பின்வாசல் பக்கம் வருவார். இவருக்கென்றே வீட்டிற்குள் ஈயச்சட்டிக்குள் முந்தைய நாளின் மீந்த உணவுகள் மொத்தமாய் சேகரிக்கப்பட்டு இருக்கும், வீட்டு பெண்மணி வழித்து இவர் பாத்திரத்தில் விடுவார்.

வீட்டுப்பெண்மணியின் மன நிலையைப்பொறுத்து சில நாள் சூடாகவும் உணவு கிடைக்கலாம். ஆனால் தனித்தனியாக இல்லை. அதே விதமான மொத்தமாக சோறு, குழம்பு, கூட்டு மொத்தமும் கலக்கப்பட்டு.
தூப்புக்காரியின் கனகத்திற்கும் நான் பார்த்த கனகத்திற்குமான வேறுபாடுகள் இங்குதான் தொடங்குகிறது. நாவலின் கனகத்திடம் சாதிவாரி அடக்குமுறைகள் இல்லை. ஊர்ச்சாதிகளின் ஒன்றைச் சேர்ந்தவள். கணவனை இழந்து வேறுவழியில்லாமல் தூப்புக்காரியாகிறாள். வழக்கம்போல ஊர் கனகத்தின் தொழிலைச் சொல்லி விலக்கிவைக்கிறது. கழிவென்பது எல்லாவிதமான மனிதக்கழிவுகளுக்கும் போகிறது. திருமணவீட்டின் எச்சில் இலையிலிருந்து மருத்தவமனையின் கழிவுரத்தம் தோய்ந்த துணி. நடுவில் எதற்கும் இருக்கட்டுமே என கொஞ்சம் கழிவறை பக்கமும் நாவல் போய் வருகிறது. கழிவறைக்கு சுத்தம் செய்வதற்கு போகும் கனகம், இரு காதலர்களின் லீலைகளைப்பார்க்க நேரிடுகிறது (சரி புணர்ச்சியும் ஒரு கழிவு வெளியேற்றம் தான் இல்லையா? ) தனது பெண்ணை நினைத்துக்கொள்கிறார்.

தூப்புக்காரியின் அனுபங்களில் தொடங்கும் கதை, தூப்புக்காரி மகளின் காதல், தோல்வி, மகளும் தூப்புக்காரியாகும் சூழ்நிலை என ஒன்று தொட்டு ஒன்றாக பயணித்து, தூப்புக்காரியின் மகள் ஆரம்பத்தின் தூப்புக்காரி நிலையைத் தொடும் இடத்தில் முடிகிறது.

கவனத்தில் கொள்ளப்படாத தூப்புக்காரிகளின் வாழ்வியலை கவனப்படுத்த முயற்சித்ததற்காக பாராட்டினாலும், நாவல் அந்தக் களத்தை சரியான வரைவியலோடு தொடவில்லை என்றே உணர்கிறேன். மிக எளிதாக ஒரு பெண் பார்வையிலான காதல் கதையாக இதை வெளியேற்றிவிடமுடியும். களம் என்பது தூப்புக்காரி என்பதை நீக்கிவிட்டு எந்த பெண்-வளர்த்த-பெண் இடத்திலும் கதையை மிக எளிதாகப் பொருத்திவிட முடிகிறது. காதலனை மனஓட்டத்தை, காதலியின் மன ஓட்டத்தைப் பேசிய அளவிற்கு தூப்புக்காரியின் மன ஓட்டம் பதிவு செய்யப்படவேயில்லை. தூப்புக்காரிகளின் வாழ்வை நோக்கி குவிந்திருக்கவேண்டிய வாசக கவனம், ஒரு தேய்வழக்குகளாலான ”தமிழ்சினிமாவில் நாயக- நாயகி இணைந்தார்களா என வெள்ளித்திரையில் காண்க” தரத்தில் போய்க்கொண்டிருக்கிறது.தூப்புக்காரியின் துயரமென்பது, மிகச்சில காட்சிகளுடன் கடந்து போய்விடுகிறது.

கவனப்படுத்தப்படாத மனிதர்களை நோக்கிய பார்வையை எழுத்தில் கொண்டுவர விரும்பிய நம்பிக்கைக்காக மட்டும் பாராட்டலாம்.

தூப்புக்காரி – மலர்வதி – அனல் வெளியீடு – ரூ 75

அலைந்து திரிபவன் அழகியல் – Books I Read @ 2012

பின்னூட்டமொன்றை இடுக

2009 | 2010 | 2011

வாசிப்பு ஒரு போதையாக மாறிப்போகும் சாத்தியங்களைக் கொண்டது. எந்தக் களத்தில் தொடங்குகிறோமோ, அதன் ஆழங்களை நோக்கி அதன் சாத்தியங்களை நோக்கி இழுத்துச் செல்லக்கூடியது. முன்முடிவுகளைக் கழற்றிவைத்து, அரசியல்கள், தனிப்பட்ட காழ்ப்புகள், கிசுகிசு கேட்கும் மனநிலைகள் எல்லாவற்றையும் விடுத்து, புனைவுகளை, அதன் புதிர்த்தன்மையுடன் வாசிக்கும் மனம், மீளுருவாக்கம் செய்து நிகழ்வுகளைத் தனக்குள் நடத்தி, அதன் மறைகண்ணிகளைத் தேடும் வாசக மனம் வாய்க்க வேண்டும் என்பதே பிரார்த்தனை. 2012ல் வாசிப்பு குறைவு. அடிக்கடி அறை மாற்றிக்கொண்டிருந்ததும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதும், இணைய மேய்ச்சல்களில் காலம் செலவிட்டதுமென சமாதானங்களைச் சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். எதையும் ஒரு சட்டமாக குறுக்கிக்கொள்ளாமல், அந்த நொடிக்காக வாழ்வதென ஆசை கொண்டபின், இத்தனை புத்தகங்களை இந்த வருடம் வாசித்தாகவேண்டுமென மட்டும் சட்டம் போட்டுக்கொள்ள முடியுமா என்ன?

உலோகம் – ஜெயமோகன்

இந்த நாவலின் பின்னாலிருக்கும் அரசியலோ (அப்படி யாரும் இருந்தால்) இதில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும் மனிதர்களோ எதைப்பற்றிய அறிதல் இல்லாமல், அவற்றைத் தெரிந்து கொள்ளும் விருப்பமில்லாமல்தான் படித்தேன். ஈழப்பின்னணியில் ஒரு திரில்லர் போன்ற விளம்பர வாக்கியங்கள் கொடுத்திருந்த நெருடல்வேறு. இலக்கியத்தரத்தில் ஒரு திரில்லர் வகையறா வாசக-விளம்பரங்கள் வேறு. ஆனாலும், எல்லா நெருடல்களையும் தாண்டி, பரபரவென படித்து முடிக்க முடிந்தது. ஜெமோவின் பிற புனைவுகளில் நிகழும் மின்னல் தருணங்களும் கூடவே. குறிப்பாக நாயகனின் தொடையில் வெளியேறாமல் தங்கிவிட்ட தோட்டாவின் விவரணைகள் வரும் இடங்களிலெல்லாம், முன்னோ பின்னோ, விருப்பமில்லாமல் செய்யும் ஒரு நிகழ்வு ஒட்டிக்கொண்டேயிருந்தாக உணர்ந்தேன். ஜெமோ இல்லையா? :)
விசும்பு – ஜெயமோகன்


புத்தகக் கண்காட்சியில் வாங்கி, வரும்வழியிலேயே (ரெயில்வே ஸ்டேஷனிலோ, ரயிலிலோ, நினைவில்லை) படித்து முடித்த புத்தகம். அறிவியல் புனைகதைகள் என நான் படித்தவை சுஜாதா மட்டும்தான். அதைத்தாண்டி எதுவும் தெரியாது. (சுஜாதா தவிர மற்றவர்கள் அனைவரும் எழுதியவை சுஜாதாவின் சாயல் என்றும், சுஜாதாவின் கதைகளே மேலை நாட்டு உருவல் என்றும் பிரியும் இன்ன பிற கிளைக்கதைகளை விட்டுவிடுவோம் ) என்றாலும், ஜெமோவின் களம் வேறாக இருக்கிறது. மறுவாசிப்பு செய்யாமல் யோசித்துப்பார்த்தால் கூட சித்த மருத்துவம் சார்ந்த சிறுகதையொன்று உடனடியாக நினைவுக்கு வருகிறது. ரசவாதம், தியான முறைகள் என்றெல்லாம் ஜெமோவின் வழக்கமான இந்திய ஞான மரபிற்குள்ளான சாத்தியங்கள்தான் இந்த தொகுப்பு முழுவதும் என்றே நம்புகிறேன். வழக்கமான ஆய்வுக்கூடம் – நரைத்த தலை புரபசர்களெல்லாம் குறைந்து, ஏற்கனவே நமது சூழல் பார்த்திருக்கக்கூடும் சாதாரண வயதானவர்களின் அறிவியல்தான் இந்த தொகுப்பு முழுவதும் கிடைக்கிறது.

குட்டி இளவரசன் (மொழிபெயர்ப்பு) – ஆந்த்வான் து செந்த்


குழந்தைகளுக்கான கதைதான். இருந்தாலும், குட்டி இளவரசனின் கதையை எல்லா சமகால அரசியல்களையும் பேசும் சுருக்கப்பட்ட வடிவமாகவே உணர்ந்தேன். எல்லா வேலையும் தானே செய்யும், தினமும் பலமுறை சூரிய உதயத்தைக் காணும் கிரகம், அதிலிருந்து வெளியேறி பிற கிரகங்களுக்குச் செல்லும்போது அவன் சந்திக்கும் மனிதர்கள் எல்லாமே தனித்துவிடப்பட்ட ஒருவனின் மனக்குமுறல்களாகவே தோன்றியது. அவனை எல்லா விதத்திலும் எல்லாவற்றிலிமிருந்து விலகிக்கொண்ட ஒரு தனி மனிதனாகவும், அவன் சந்திக்கும் கிரகங்களை அதன் உரிமையாளர்களை அவன் தனது குறுகிய வட்டத்திலிருந்து வெளிவரும்போது உலகம் அவனை எதிர்க்கொள்ளும் விதமாகவும், ஒவ்வொரு காட்சியையும் விரித்துக்கொண்டே வாசிக்க முடிகிறது. எத்தனை பெரிய உலகம் இது… எத்தனை குறுகிய வட்டம் நமது? அவன் கேட்கும் கேள்விகளில், அவன் உணர்வுகளில் எதை எதையோ ஒப்பிட்டுப் பார்த்து குழப்பிக்கொள்ள எத்தனை குதர்க்கமான மனம் எனது? :)

மேன்ஷன் கவிதைகள் – பவுத்த அய்யனார்

தனிப்பட்ட முறையில் , ஆண்களின் உலகம் பற்றிய எழுத்துகளில் ஒரு ஆர்வமிருக்கிறது. பொதுவாக தனிமை – குறித்து ஆயிரக்கணக்கான கவிதைகளை அள்ளிக்கொட்ட எத்தனை பேர் இருந்தாலும், மேன்ஷன்களைப் பற்றி எத்தனை தூரம் எழுதப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. திருவல்லிக்கேணியின் மேன்சன்களில் கொட்டிக்கிடக்கும் கதைகளைப்பற்றி அங்கு தங்கியிருந்த நண்பன் சொல்லியிருந்தவை தந்த மயக்கத்தின் காரணமாகவே இதன் பால் ஈர்ப்பு வந்தது. ஆண்களின் தனிமை உலகை எளிய வார்த்தைகளில் தடதடவென தட்டிப்போகும் தொகுப்பாகவே பார்க்கிறேன். எதோ ஒரு கவிதையின் முடிவாக வரும் ”பிரம்மாண்ட நகரின் சிறிய குடுவைக்குள் மின்விசிறி நான்” போதாதா?
மயன் சபை – தபசி


எளிய மொழியில் மின்னல்கணங்களைப் பிடித்துவைக்கும் கவிதைகளை எழுதுபவர்களும், அந்தக் கவிதைகளும் இருக்கும் இலக்கிய குறுவட்டத்திற்குள் ஒரு ரகசிய வட்டமாக இயங்கிவருகிறார்களோ என்றொரு சந்தேகம் உண்டு எனக்கு. தபசியை அறிமுகம் செய்தது வினாயகமுருகன் என்பதாலும் இந்த சந்தேகம் வந்திருக்கலாம். மிக எளிய மொழி. மிக நுண்ணிய கணங்கள். ஒரு வாராந்தரியைப் படிக்கும் வேகத்தில் படிக்க முடிகிறது. ஒரு புன்னகையுடன், அதன் குறியீடு என்ன கேள்விகள் என்னென்ன என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளாமல், ஒரு அனுபவஸ்தரிடம் கதை கேட்கும் பாணியில் இந்தக் கீற்றுகளை புன்னகைத்தே உள்வாங்கிவிட முடிகிறது. எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான் பாடலை மேற்கோள் காட்டும் கவிதை ”அப்பா ஊதாரியாய் இருந்தால், எல்லாம் அம்மா தலையில்தான் விடியும் என முடிகிறது. வாவ்!

எம்ஜி ஆர் கொலைவழக்கு – ஷோபா சக்தி

ஷோபா சக்தியின் இணைய எழுத்துகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். அச்சுப்படைப்புகள் எதுவும் வாசித்ததில்லை. பொதுவாக எனக்கு நிகழும் தடுமாற்றம்தான் இந்த புத்தகம் வாசிக்கும்போது. ஒன்று மொழி. எந்தவித முன் அனுபவமும், இந்த மொழியுடன் எனக்குக் கிடையாது என்பதால், பக்கங்களைக் கடக்க, பொருளை உணர கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கிறது (சில வட்டார வழக்கு வார்த்தைகள் தென் தமிழகத்தின் சில வட்டார வார்த்தைகளுடன் ஒத்துப்போவது இன்ப அதிர்ச்சி). இரண்டாவது அரசியல். எனது அறியாமைதான் வேறென்ன? இதைத்தாண்டி சிறுகதைக்குள் நுழையலாமென்றால், என் தேடலுக்கான எதுவும் கிடைக்கவில்லை. காரணம் , மொழியும் அரசியலும் அன்னியப்பட்டுப் போனபின், கிட்டத்தட்ட சுயசரிதைத்தன்மை கொண்ட கதைகளில் எதை எடுத்துச் செல்வது?
யுரேகா என்றொரு நகரம் – எம்,ஜி சுரேஷ்

எம்ஜிசுரேஷினைப் படிக்கும்போதெல்லாம் ஒரு குழப்பம் வருகிறது. இவை இலக்கிய பெர்சுகளின் பார்வையில், இலக்கியத்துக்குக் கீழ்வருமா, இல்லை வணிக எழுத்தின் கீழ் வருமா? (பிரேம் – ரமேஷ் படிக்கும்போதும் இந்தக் குழப்பம் வரும்) யுரேகா என்றொரு நகரம் ஆராய்ச்சியாளர்கள் கண்டடையும் தொலைந்து போன அல்லது புதையுண்டுபோன ஒரு பழங்கால நகரம். அதற்கான ஆராய்சியாளர்களின் உழைப்பு, அந்த இடத்தை அவர்கள் அடையும் நாட்கள் என விரியும் நாவல், அத்தனை நிச்சயத்தன்மையுடன் நிகழ்கிறது. புதையுண்ட நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்களின் புகைப்படம் கூட நடுவில் வருகிறது . இறுதி அத்யாயத்தில் கொண்டை ஊசி வளைவில் பொசுக்கென திரும்பும்போது, இன்னொரு முறை நாவலை படிக்கத் தோன்றுகிறது.
நகுலன் – நவீனன் டைரி

நகுலன் ஒரு போதை. இது இந்த வருடம் படித்த நாவல் என்பதைவிட, இந்த வருடம் தொடங்கிய நாவல் என்றே சொல்லலாம். எதோ ஒரு இடைவெளியில், மனம் கனத்து கண்ணீர் பொங்கும் நேரத்தில், அல்லது கொண்டாட்டமாய் ஒரு ஆட்டம் போடத்தோன்றும் நாளில், அல்லது எதுவுமற்ற வெளியில் மனம் அடங்கியிருக்கும் நாளில் என எந்த மன நிலையில் புரட்டினாலும், எதோ ஒரு திடுக்கிடலை, சந்தோசத்தை, புன்னகையை அதன் நொடி ஆச்சர்யத்தை எப்போதும் நகுலனின் நாவல்கள் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றன. ஒரு நாளில் டைரிப்பகுதியை, ஒரு நாளில் சம்பாஷணைப்பகுதியை, இன்னொரு நாளில் கவிதைப் பகுதியை என தொடர்ந்து பலமுறை, முழுவதுமாகவும், இடையிலிருந்தும், சில பக்கங்களென்றும் விதவிதமாய் படித்துப்பார்த்தாயிற்று. ஒரு நாளும் நாவல் அதன் நிச்சய-ஆச்சர்யத்திலிருந்து தவறியதேயில்லை. நகுலன் போதை. வேறென்ன்ன சொல்ல? :)
பாம்புத் தைலம் – பேயோன்

இந்த முகம் (எனக்குத்) தெரியாத மனுஷனுக்கு மட்டும் எங்கிருந்து பகடி இத்தனை சரளமாக வருகிறது எனத் தெரியவில்லை. அதுவும், துணுக்குத் தோரணம் கட்டும் சிறுபிள்ளைத் தனமில்லை, நுண்ணிய இதுவரையிலான படைப்புகளின் போலித்தன்மையை வஞ்சமாய்ப் புகழும் பகடி. கட்டுரைகளின் முதல் வரி கூட, ஏற்கனவே படித்த கட்டுரைகளின் தேய்வழக்கு முறையில் ஆரம்பித்து, சின்ன டுவிஸ்ட், சின்ன நகைச்சுவையுடன் கைவருகிறது. தாம்பரம் பயணக்கட்டுரை அதன்பிறகு எந்த எழுத்தாளருடைய எந்த பயணக்கட்டுரை படித்தாலும் நினைவுக்கு வரும். பேயோன் பேயோன் தான்.
மங்கலத்து தேவதைகள் & எட்றா வண்டிய – வாமுகோமு

மணி பாரதியாகட்டும், சாமி நாதனாகட்டும் ,பொன்ராசு உள்ளிட்ட இன்ன பிற பாத்திரங்கள் ஆகட்டும், வாமுகோமுவின் நாயகர்கள் கனவுகள் அற்றவர்கள். பெண்களைத் தேவதையென்றுயர்த்தி, பின் மனைவியென்று அடக்கித் தூக்கிப்போட்டு உடைக்காதவர்கள். காமத்தை, அதன் கனலை, மழைக்காலத்தில் கடந்து போகும் தெரு நெருப்பைப்போல அதன் பழக்கத்தில் மிகச்சுலபமாய் அண்மித்தும் தொலைவுற்றும் கடந்து செல்கிறவர்கள். சினிமாக்களைப்போல, கெட்ட கணவன் திருந்தி கிளைமாக்ஸில் திரு நீறு வைத்து கோவிலுக்குப்போய் பத்தினி தெய்வத்தின் வேண்டுதலை நிறைவேற்றாதாவர்கள். குடியும் காமமும் அதன் நெளிவு சுழிவுகளும் அதன் ஓட்டத்தில் அனுபவத்தில் தெரிந்த தெளிவுள்ள எளியவர்கள். இதே விரிவும் களமும், எதிர்பாலுக்கும் சம அளவில் கொடுக்கப்பட்டிருக்கும். அய்யய்ய்யோ நான்லாம் காதலிக்கமாட்டேன்பா அப்பா திட்டுவார் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர்கள். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என சுற்றியிருக்கும் பதினாறுமுழத்தை இழுத்துவிட்டுக்கொள்ளாதவர்கள். வாழ்க்கை . எல்லா கிராமப்புறங்களின் கிண்டல் கேலி காமம் சாதி. கூடவே வாமுகோமுவின் அனுபவத்திலிருந்து ஊர்கள், மொழி நடை. எத்தனை நாவல், எத்தனை சிறுகதைகள் படித்தாலும் இதே கூட்டணியில்தான் வெவ்வேறு ஆள்கள், வெவ்வேறு காதலையும், வெவ்வேறு பின்னணிகளையும் , வெவ்வேறு தொழில்களையும் வைத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் களம் ஒன்றேதான்.

அழிக்கப்பிறந்தவன் – யுவகிருஷ்ணா


யுவகிருஷ்ணாவின் பதிவுகளை, அறிமுகம் கிடைத்த நாளிலிருந்து தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், யுவாவின் எழுத்துக்களைப்போலவே அவரின் தொடக்கங்கள் பிடிக்கும். சரியாகச் சொல்வதென்றால், முதல்வரி. தலைப்பு ஒன்றைச் சொல்லியிருக்கும், அதன் மீதான நம் முன்முடிவு ஒன்றாக இருக்கும், முதல் வரி இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் ஆரம்பிக்கும், கிட்டத்தட்ட ஐந்தாறுவரிகளுக்கு ஏன் இதைப்பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உள் யோசனையுடன் ஓடி, திடீரென தலைப்புக்கும் களத்திற்கும் உள்ளே வருவார். இந்த நாவலிலும் முதல் வரி அப்படித்தான் இருந்தது. “இயக்குனர் ஷங்கர் கமிஷனர் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருந்தார்” நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் உங்களை நகரும் ரயிலுக்குள் பொசுக்கென ஒருவர் பிடித்து இழுத்தால் ஏற்படும் அதிர்ச்சி. தொடர்ந்து திருட்டு டிவிடி, வாப்பா, பர்மா பஜாரின் நிழல் உலகம், இருள் பூசிய சப்வேக்களின் மறைகதைகள் என தடதடக்கும் ரயில் வேகத்தில் ஓடுகிறது கதை. அட்டை டூ அட்டை அட்டகாசம் என்ற பழைய விளம்பர வரி தெரியுமா உங்களுக்கு? நம்பி படிக்கலாம் :)

மாதொருபாகன் – பெருமாள்முருகன்


பெருமாள்முருகன் பற்றி அவர் எழுதிய எல்லா படைப்புகளையும் வாசித்தவர்கள் யாராவது விரிவாக பேசவேண்டும். எந்த சுயவிளம்பரங்களும், படைப்புகளுக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் விளையாட்டுத்தனங்களும் அற்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் ஒரு ஆளுமையெனத் தோன்றுகிறது. என் கடன் எழுதிக்கிடப்பதே வகையறாவெல்லாம் இணைய வெளியில் சாத்தியமில்லை என்பதாலேயே இந்த ஆச்சர்யம். வாமுகோமுவின் கொங்கு நிலத்திற்கும், பெருமாள் முருகனின் கொங்கு நிலத்திற்குமான பொதுவாக வேறுபாடாக நான் கருதுவது, வாமுகோமுவின் ஊர்கள், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்டவை. தறியோட்டிகளாலும், பஞ்சாலைத் தொழிலாளர்களாலும் ஆன ஒரு கடாமுடா வகையறா. பெருமாள் முருகனின் ஊர்கள் பச்சை நிலம் கொண்டவை. நகரத்தின் சாயல்களற்ற வெள்ளந்தி மனிதர்களாலானவை. காமத்தை புறங்கையால் ஒதுக்கி உறவுகளும், மண்வாசனையும், வீம்புகளும் பிணைந்தவை. மாதொருபாகன் குழந்தையில்லாத தம்பதிகளின் வாழ்வைப்பேசுகிறது. 20களின் இறுதியில் திருமணம் செய்து ”பிளானிங்கில்” இருக்கும் இன்றைய தலமுறையில் எவ்வளவு தூரம் ’மலடி’ ‘மலடன்’ போன்ற உளவியல் தாக்குதல்கள் இருக்கின்றன என யோசித்தோமானால், குறைவென்றே தோன்றுகிறது. அதன் நெருக்கடிகள், உறவினர்களின் குத்தல் பேச்சுகள், அதற்கான வேண்டுதல்கள் என பச்சை ரத்தம் ஒழுகும் மன உலகம் அது. அத்தனை வீரியமாய் இதில் வெளிப்பட்டிருக்கிறது. நேர்கோட்டில் பயணிக்கும் இந்த வகை கூட ரசிக்கவே வைக்கிறது. இவரின் இன்னபிற புத்தகங்களையும் படிக்கவேண்டும்.

ராஸலீலா – சாரு நிவேதிதா


ஹா. வாசிப்பைப்பற்றி பேசும்போது சாரு இல்லாமலா? ராஸலீலா குறித்த குறிப்புகள் சாருவினைத் தொடர்ந்து படிக்கும் யாருக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதை தன் படைப்புகளில் சிறந்ததென்று சாருவே சொல்லிக்கொள்வதும், வாசகர் வட்டத்தில் பிறமொழி எழுத்தாளர்களைப் பற்றி பேச்சுவரும்போது அவர்களைப்படித்தவர்கள், அதைவிட ராஸலீலா சிலபல மடங்குகள் சிறப்பென்று புகழ்வதுவும், அந்த அரசியல் இன்னபிறவுக்குள் நமக்கு வேலையில்லை. புத்தகம் பேசட்டும். ராஸலீலாவின் சாருவின் வழக்கமான புள்ளிகள் அத்தனையும் உண்டு. தனித்துவிடப்பட்ட எழுத்தாளன், சுயபுலம்பல்கள், காமம். கூடவே இதில் டெல்லியும் குமாஸ்தா வேலையும், அரசாங்க அலுவலகங்களின் பின்புலமும், அதன் அபத்தங்களும். அதே விறுவிறுப்பாக, நேர்ந்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டியைப்போல் இழுத்துச் செல்லும் மொழி நடையும். ஆனால் இதைச் சாருவின் படைப்புகளில் சிறந்ததென்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆட்டுக்குட்டியை இழுத்துச் செல்லும் மொழி நடை என்று சொன்னேனில்லையா? இதில் நீண்ட தூரத்திற்கு நடையோ நடையென நீள் நடை. ஆட்டுக்குட்டி கால் வலித்துச் சோர்ந்து தரையில் படுக்குமளவு அதீத விளக்கங்கள், அதீத விவரணைகள் இன்னும் பல இழுவைகள். ஒரு பிரபல மலையாள இதழில் தொடராக வெளிவந்ததாக சாரு சொன்னதாக நினைவு. எனில், அந்த இதழுக்கான சமரசங்களாக இருக்கலாம் என்று கூட ஒரு சந்தேகம் வருகிறது. ஆனாலும், முதல் முறையாக சாருவை ஆரம்பிப்பவர்கள், ராஸா லீலாவை தாராளமாகத் தொடங்கலாம். காமம் என்ற வார்த்தையே ஆபாசம் என நினைப்பவர்கள் சாருவை விட்டு தூரம் செல்லலாம். உங்களுக்கு நல்ல்லது. எதற்கு தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டு? :)

எல்லாமே பிறருக்கு தைரியமாக பரிந்துரைக்கும் படைப்புகளாகவே இந்த வருடம் அமைந்திருக்கிறது. எதையும் நொந்து கொண்ட நினைவில்லை. ஆரம்பித்து சலிப்புற்று பாதியில் நிறுத்திய புத்தகங்களை தொடர்வதற்கான மன நிலை வாய்க்காமல், அவை இந்த பட்டியலில் வராமல் போனது கூட காரணமாக இருக்கலாம். எப்படியோ, என் காலங்களை சில புத்தகங்கள் தன் புதிர்களால் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை வாழ்வில் ருசியிருக்கும்.

என் பெயர் ஜிப்சி – ஹெர்பேரியத்திலிருந்து பூக்கும் மலர்.

பின்னூட்டமொன்றை இடுக

அ.
கவிதைகளை வைத்து அரசியல் செய்வதை விட கவிதைகளுக்குள் அரசியல் எளிதானதாக இருக்கலாம் போலிருக்கிறது. பிரச்சார நெடிகளைக் கடந்து ஒரு சிறு அனுபவத்தை அதன் சாரத்தோடு முண்டு சுற்றி அதற்குள் அரசியலைக் கோர்ப்பதென்பது சாதகப் பட்சியிடம் மிஞ்சும் மழையின் காலம்.

ஆ.
துப்பாக்கி ரவைகளை மூங்கிலுக்குள் இட்டு புல்லாங்குழலென வாசிக்கச் சொல்வதென்பது ஒரு வரலாற்றுத் துயரம். எதோ ஒரு கணத்தில் எல்லோருடைய கைக்கும் மாற்றப்பட்டிருக்கும் மூங்கில்குழல் நக்கீரனுக்கு மட்டும் கவிதையாய்ச் சமைகிறது.

இ.
தன் கருவி மீட்டி இசை கசிந்துருகச்செய்யும் பெண் பெரிய மண்டபத்தில் தன் சுருதி அகழும் நாயனக்காரனாகிறாள். ஹெர்பேரியத்திற்கான தயாரிப்பு குழந்தை வளர்ப்பாகிறது. மூவாயிரத்துத் தொண்ணூறாவது முறையாக வெள்ளரிப்பிஞ்சு விற்கும் சிறுமி சாம் மாமாவுடன் போட்டியிட்டாலும், எலுமிச்சை நிற மெய் நீர் அரசியலின் மீது பெய்கிறது.

ஈ.
நண்பர்கள் சுயத்தை தன் குருதியில் பிறர் படிக்க பொதுவில் வைக்கிறார்கள். பிறர் குருதிகளின் மீது தன் பார்வைகளைக் குவிப்பதே இல்லை. சுயவிமர்சனம் என்றுகூட இதைச் சொல்லலாம். வாசிக்கக்கிடைக்கும் பெரும்பாலான கவிதைகள் கண்ணாடியுடனான உரையாடல்களாயிருந்தன. தன்னைத் தவிரபிறர் நிறங்களை மழுப்பிக்காட்டும் சுயக்கண்ணாடிகள். நக்கீரனுக்கு மூக்குக் கண்ணாடி வாய்த்திருக்கிறது. முன்னால் விரிந்திருக்கும் உலகம் தெரிகிறது. அதே கண்ணாடியின் பிம்பங்கள் வாசிப்பவனுக்கும் அதே சாயலில் கடத்தப்படுகின்றன. ஒருவேளை எங்கள் கண்ணாடிகளில் முகம் பார்க்கும் பகுதியில் ரசம் பூசும் கையாக நக்கீரன் கைகளைப் பற்றிக்கொள்வேன்.


கல்பாலிகைகளை நீருக்குள் மறைத்த சமணமுனி திகம்பரனாய்த் திரும்பி வரும்போது காவலாளிகளின் இருத்தல் குழப்புகிறது. நான் வெட்டிய குளத்திற்கு எவனோ காவலாளியாகி என்னையே துரத்தும் வலி. விடலைகளில் கைகளில் அடைபடும் கல்முலைகளில் கசிந்துருகுகிறது தாய் நிலத்தில் விரட்டப்பட்ட மனிதர்களின் கண்ணீர்.

தமிழ்கவிஞர்களில் போலிச்சமநிலை மீதான சிறுகல் விழுகிறது ஒரு இடத்தில் . எத்தனைச் சம நிலையுடன் எதன் மீது விழுந்தாலும் சிறு நகர்வும் ஒரு முனைக்கு கடத்திவிடுகிறது கவிஞனை (எழுத்தாளன் என்ன இன்னும் கூட்டம் சேர்க்கவா?) கிழக்கு மேற்கு இசங்கள் தோலில் வரிக்குதிரைத் தடங்களை விட்டு சுய அடையளமுமில்லாமல் மாறுவேடமும் இல்லாமல் கோமாளிக்கோலத்தில் கொண்டு நிறுத்திவிடக்கூடும். கொடுமைகளின் உச்சம் சொந்த நிலத்தில் சகதிகளுக்குள் புதைந்து சவப்பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்வது. சொந்த நிலத்தில் விழுந்த நிழல் ஜிப்சியென்றால், இதுவும் அதுவே.

இசைக்கலைஞன் கவிஞனைப்போல நினைவிலிருந்த கானகம் ஒன்றினை மேடையில் மீளூருவாக்கம் செய்கிறான். கூட்டிசைகளை இரைச்சல் என்றும் சொல்லலாம். புத்தகங்களை அதன் நுணுக்கங்களுக்காகப் படிப்பவன் ரசிக்குமளவு ஆதி வேரினை, பியானோ குடுத்த மரத்தினை மரத்திலிருந்த இருவாச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிப்பவன், இசையொத்த கவிதைகளை நுணுக்கங்களுக்காக அன்றி, வரலாற்றுப்புரிதலுடன் படிப்பவன் தன் வெட்டுக்க்காயங்கள் மீதான கவனம் கொண்ட நோயாளியென வாதையினைத் தான் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது இல்லையா?

ஓவியர்கள் வன்முறையாளர்களாகவும் இருக்கிறார்கள். பறக்கும் கிளிகளைவிட கூண்டிலிருக்கும் கிளிகளைத்தான் ஓவியர்களுக்குப் பிடித்திருக்கிறது. வண்ணங்களையும் அதன் நுணுக்கங்களையும் மட்டும் அறியாத சிறுகுழந்தைக்கு மட்டுமே கூண்டு உறுத்துகிறது. கரு மையினால் கூண்டை அழித்துவிட்டு கிளி பறந்து விட்டதாக கற்பனை செய்து கொள்வதுதான் எவ்வளவு எளிது?

படைப்பு குறித்த ஒரு பார்வையினை இன்னொருவருக்குக் கடத்தும்போது அதன் ரகசியங்களை உடைக்காமலிப்பது உத்தமம்தான் இருந்தாலும், ரகசியங்கள் மட்டுமே ஒருவரை படைப்பினை நோக்கி இழுக்க வாய்ப்பிருக்கிறது எனும் பட்சத்தில், ரகசியங்களை விட அதன் நோக்கிய ஈர்ப்பே பிரதானமாக எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன சில நிகழ்வுகளை அதன் பின்னணிகளோடு மொழி அலைகளோடு நக்கீரனின் விளையாட்டை என் பெயர் ஜிப்சியில் பார்க்கலாம். அல்லது பெரிதாய் ஈர்க்கப்பட்ட சில ரகசியங்களை தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்வது குறித்த மனக் கொந்தளிப்பாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.. அல்லது…

சுருள் சுருளாய் விரிகிறது நக்கீரனின் அரசியல் . பென்சிலுக்குள் ஒளிந்திருக்கும் சுருள் அடுக்குகளைப்போல ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு உள் நோக்கி அல்லது வெளி நோக்கி விரிந்து கொண்டே போக முடிகிறது. இந்தக் கவிதைகளில் நக்கீரன் இல்லை. அவரின் தனிமை, அவரின் அடுக்குமாடிக்குடியிருப்பின் தூரத்தில் தனித்த கடலின் சோகம் இல்லை. தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் யுவதியின் கிளர்ச்சியில்லை. சண்டைப்படம் முடிந்து வாகனத்தின் பஞ்சு மெத்தைகளில் முஷ்டி மடக்கிக் குத்திப்பார்க்கும் போலிவீரம், நீ அவனில்லை. நாந்தான் அவன் என்ற செருக்கு இல்லை.

ஒரு கோப்பைத் தேநீருடன் சோபா ஒன்றில் சாய்ந்தமர்ந்து எல்லா நிகழ்வுகளையும் அடுக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிகளில் பார்க்கும் அறிபுனைவுக் கதையின் கடவுளாக அமர்ந்திருக்கிறார் கவிஞர். சில அபத்தக் காட்சிகளின் ஒளித்துண்டை நம் முன்னால் தூக்கிப்போட்டு புன்னகைக்கிறார். அந்தக் காட்சியுடன் ஒன்றலாம், அல்லது அதன் பின்னணிக்குள் சுருள் படிகளுக்குள் இறங்கலாம் அல்லது சுருள் சுருளாக…
ஒள
முன்னுரையில் நக்கீரன் சொல்வது போல கவிஞர்களின் துப்பாக்கி காலியாக இல்லை. நக்கீரன் துப்பாக்கி மொழியால் நிரப்பப்பட்டிருக்கிறது. பொதுமைப்படுத்தப்படவேண்டுமெனில் மீன்களின் நிர்வாணமென்னும் அபத்தத்தைப்போலவே அரசியலற்ற கவிதைகள் என்பதுவும் அபத்தம்தான் என்றாலும் புதையுண்டிருந்த மொகஞ்சதாரோ மனுஷியின் நாவாகவும் இருக்கிறது என் பெயர் ஜிப்சி.

என் பெயர் ஜிப்சி – நக்கீரன்
கொம்பு வெளியீட்டகம் – ரூ.50.

ஆன்லைனில் வாங்க 

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன்

2 பின்னூட்டங்கள்

சில வருடங்களாக கவிதைகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்குமுன்பு எட்டிப்பார்த்தவை எழுதிப்பார்த்தவை எல்லாம் கவிதை என்ற வகைக்குள்ளேயே வராத, அல்லது கவிதைப்பாடசாலையின் மழலைப்பாடங்களான காதல் கிறுக்கல்கள் மட்டுமே. இந்த குறுகிய வாசிப்பிற்குள்ளேயே கவிதைத்தொகுப்புகள் ஆயாசம் கொள்ளச் செய்பவைகளாக, எரிச்சலூட்டுபவையாக பொழுதுபோக்காக, புன்னகைக்கவைப்பவையாக விதவிதமான பரிமாணங்களைப் பெற்றுவிட்டன. இருந்தாலும் இன்னும் சிப்பி பொறுக்கும் சிறுவனாக புத்தகக் கடைகளுக்குள் புதிய கவிதைத்தொகுப்புகளை ஆர்வத்துடன் எடுத்து படித்துப்பார்க்கிறேன். எங்கிருந்தாவது ஒரு அதிசய விதை ஒரு மரத்தை எனக்குள் விதைத்துப்போகாதா என.

2010ன் ஆரம்ப மாதங்களில் எதோ ஒரு நாளில்தான் நேசமித்ரன் என்ற பெயர் முதல் அறிமுகம் எனக்கு. புரியாத கவிதைகள் பற்றிய  நண்பர்களின் பேச்சில் சட்டென்று மேலெழுந்தது இந்தப்பெயர். அன்றிலிருந்து இன்றுவரை நேசமித்ரன் கிறுக்கு என்னைப்பிடித்தாட்கொண்டிருக்கிறது. அந்த ஆர்வத்தில் 34 வது புத்தகக்காட்சிக்கு நேரே போனது உயிர்மை அரங்கிற்கு. கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் இன்னும் வெளிவரவில்லை என்ற பதிலைச் சுமந்து கொண்டுதான் அந்த நாளில் அரங்கிற்குள் சுற்றினேன். என் முதல் தொகுப்பை அச்சில் பார்ப்பதுபோல், அந்த நாளில் தவறிவிட்டதுபோல் அத்தனை வருத்தம். அடுத்த வார இறுதியில் வெளிவந்துவிட்டது என தெரியும். உயிர்மை அரங்கில் மனுஷ்யபுத்ரனிடம் எனது சுய அறிமுகத்திற்குப்பின் சொன்னேன் ‘ நேசமித்ரனுக்காகத்தான் வந்தேன் ‘ ’ஓ! நேசன் வருவதாய்ச்சொன்னாரா?’ ‘இல்லை. அவருக்கு என்னைத் தெரியாது, அவர் புத்தகத்திற்காக வந்தேன்’ . பதிலாக வந்த மனுஷ்யபுத்ரனின் பார்வை  இன்றும் நினைவிருக்கிறது.

எந்தககவிதையையும் ’புரியவில்லை. அதனால் நிராகரிக்கிறேன்’ எனச் சொல்பவர்கள் மேல் ஒரு சின்ன மனவருத்தம் இன்றும் தோன்றுகிறது. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றுவீட்டீர்கள் என உங்களுக்குச் சொன்னது யார்? எல்லா அனுபவங்களையும் புரிதல் சார்ந்து எப்படி தராசில் வைப்பீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையை நீங்கள் கேட்டுப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் மணித்துளிகள் எடுத்துக்கொள்ளும்போது கவிதைக்கு ஒரு சிறு பங்கு உழைப்பைச் செலவழிக்காமல் புரிந்து கொள்ளலாம் என்ற சோம்பேறித்தன நம்பிக்கையை எதைவைத்து வளர்த்தீர்கள்.

நினைவிலிருக்கும் வரை, இத்தனை சிறிய கவிதைத்தொகுப்பை இத்தனை நாள்கள் படித்தது இந்தத் தொகுப்பிற்கு மட்டும்தான் என நினைக்கிறேன் , நேசமித்ரனின் உலகம் எப்போதும் காட்டு நெல்லிக்காயைப்போல உண்டு தீர்க்க நீண்ட நேரத்தையும், உழைப்பைத் தின்று வாழ்க்கையின் காரத்தைக் கண்ணில் பூசுவதாகத்தான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்தத் தொகுப்பும் அப்படியே.

ஸ்டெராயிடும் ஐபில்லும் அற்று அன்றைய நாள்
இனிதே முடிந்தது கணினித் திரைக்கு இருபுறமும்
இருந்த முகமற்ற கிகோலோவுக்கும் அவளுக்கும்
பிக்சல்கள் மற்றும் டெசிபல்கள் வழி

தொகுப்பிலேயே குறைந்த உழைப்பில் புரியும் கவிதை இதுதான் என நினைக்கிறேன். இதற்கே ஐந்து புதிய வார்த்தைகளையும் அதற்குப்பின்னான செயல்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஐபில், ஸ்டெராய்டு,கிகோலோ,பிக்சல்,டெசிபல், இதில் எதாவது ஒன்று புரியவில்லை என்றால் கவிதை மறுவாசிப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. //முகமற்ற கிகோலோ// வில் முதல் வார்த்தை இல்லாமல் வாசித்தால் ஒரு தளத்திலும், கிகாலோ இல்லாமல் வேறு தளத்திலும் இருக்கிறது.

என் ரசனையில் நேசமித்ரனின் கவியுலகம் ஒரு சிலந்திவலை. சிக்கித் தவிக்கலாம், மேலேறி மிதக்கலாம், ஒளி மின்னுவதை ரசிக்கலாம், அல்லது, ரசனையை மறந்து தள்ளி வைத்துவைத்துவிட்டுக்கூட போகலாம். ஒரு விடுகதை போல சொல்லும் வார்த்தைகளை சொல்லாத வார்த்தைகளுக்கான கைகாட்டியைப்போல் அணுகலாம். சொல்லாத வார்த்தைகள் மட்டுமே கவிதையாய் அடைவதால், விடுகதையை விடுவிக்கும் ஆர்வமும் நேரமும் இருப்பவர்களுக்கான , கவிதையை பொழுதுபோக்கின்றி கவிதையாய் ரசிப்பதாற்கான தேடலுக்கு எளிய கண்டடைதல்.

நேசமித்ரனிடம் வியக்கும் இன்னொரு தடம், ஒற்றைக்கவிதைக்குள் தனித்தனியாய் ஒளிந்திருக்கும் பிற கவிதைகள். உதாரணத்திற்கு இது.

நீரின் கண்

விழும் நிழலில் தன்முகம் பார்க்கும்
நீரின் கண்

பாம்பின் உடல் சித்திரத்தில் பிராம்மி
எழுத்தின் சுழி

துரோகம் நெகிழி
திமிங்கலத்தின் மார்புக்காம்பில்
சுரக்கிறது சாவு கலவாத காதல்

சிறகுதான் ஆனால் கனம் பெங்குவினுடையது

ஆகாசம் கூப்பமுடிவது வண்ணத்துப்பூச்சிக்கு மட்டும்

லெஸ்பியனின் கருமுட்டை தானத்தில்
கற்பு கதீட்டர் வழி

கவிதையின் ஒவ்வொரு பத்தியும் தனித்தனியே வாசித்துப்பாருங்கள். பிறகு சேர்த்து.   அல்லது முதல் மூன்று பத்திகள் மட்டும். அல்லது கடைசி மூன்று.  முதல் பத்தியும் கடைசி பத்தியும். எல்லாவித சாத்தியஙக்ளில் ஒவ்வொரு வித அனுபவம் தரும் கவிதை. இது கவிதை. இன்னும் சொல்லப்போனால், நேசமித்ரன் இதை உத்தேசித்து எழுதினாரா, இதுதான் இதன் அர்த்தமா, இதுதான் உண்மையான பார்வையா, எதுவும் தேவையில்லை. உணமையில்  வாசிப்பவன்தானே கவிதையை உயிருடன் எழுதுகிறான். கடைசி இரு வரியின் முழுவீச்சை அறிய, கதீட்டர் பற்றி கூகுள் செய்து பாருங்கள். பிரமிக்கிறேன் நேசன்.

நெருடிய விஷயங்கள் எனப் பார்த்தால், முதலில் மொழி. மொத்த தொகுப்பிலும் தேடினாலும் ஆங்கில வார்த்தைகள் இல்லாத கவிதைகள் மிகக் குறைவாகவே கிடைக்கும் எனத் தோன்றுகிறது. பிக்சல், கத்தீட்டர், கார்டூன், கிராபிக்ஸ் , ஆங்கிலச்சொற்களின் தமிழ் உச்சரிப்பு நடை கொஞ்சம் தடுமாற்றம் செய்கிறது.  நாகம் பாம்பு சர்ப்பம் அரவம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு டிராகன் கவிதைகளுக்குள் தலையாட்டுவது, கரடுமுரடான காட்சிப்படிமத்துக்கு மட்டுமெனில் வேட்கை கொண்ட வாசகனை தேர்ந்த கவனத்துடன் குழப்பி விலக்குகிறீர்கள் எனக் குற்றம் சாட்டுவேன்.

அடுத்தது பன்முக வரிகள். ‘ நீரின் கண்’ கவிதையைப்போல ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு குறுங்கவிதை தொகுப்பு ஒரு முழுமைச் சித்திரம் என பிரமித்து நின்றாலும் சில கவிதைகளில் குறுங்கவிதைகள் குறுகி முடிந்துவிடுகின்றன. முழுமையென ஒற்றைத் தலைப்பின் கீழ் நிற்பது வெவ்வேறு வண்டிகளின் பாகங்கள் பொருத்திய இருசக்கரவாகனத்தைப்போல தொடர்பற்றுத் தெரிகிறது.

கவிதைத் தொகுப்புகளை வெவ்வேறுவிதமாய்க்கொள்ளலாம். விதை , தளிர், செடி, மரம் , விருட்சம், போன்சாய் மரம், என் ரசனையில் ”கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்”,  புதிய விருட்சங்களைத் தாங்கி நிற்கும் விதை. அழுத்தமான கைகுலுக்கல் நேசமித்ரன்.

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன்
உயிர்மை பதிப்பகம் – ரூ.50

காந்தியைக் கொன்றது தவறுதான் – ரமேஷ் பிரேதன்

1 பின்னூட்டம்

நீள்கவிதைகளின் மீது எப்போதும் எனக்கு ஒரு முரண் இருந்தே வந்திருக்கிறது. கடைசி மூன்று வரிகளை நோக்கிச் செல்லும் வரிகள் அதற்கான நியாயமென வளவள வரிகளைத் தாங்கிக்கொண்டிருப்பது ஒருவித ஒவ்வாமையே. சில கவிதைகள் மட்டுமே தனக்கான நீள்வரிகளைக் கோருபவை. அவற்றைத் தவிர மற்ற அனைத்தும் வெற்று வார்த்தைக் கோர்வைகளாகவே தெரிகின்றன. காந்தியைக் கொன்றது தவறுதான் முழுக்க முழுக்க நீள்கவிதைகளாலானது. ஆனாலும் முழுக்க தர்க்க நியாயங்களுடன், முன்னொட்டு வரிகளற்று அனுபவத்தை அத்தனை வரிகளில்லாமல் காட்சிப்படுத்தமுடியாதெனுமாறு.,

அப்படியே இந்த தலைப்புக் கவிதைகளும், பெரும்பாலும் தலைப்புக் கவிதைகள் அதிர்ச்சி மதிப்பிற்காகவோ முதல் பார்வையில் ஈர்ப்பைக் கொண்டு வருபவையாகவோ அமைக்கப்பட்டு, தலைப்புக்கவிதை திராபையாகவும் இருக்கும். காந்தியைக் கொன்றது தவறுதான் எனும் தலைப்பில், தொகுப்பில் சுமார் 10 கவிதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தரும் வாசிப்பனுபவம் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது.

உலகில் எந்தப் புரட்சியாளனும்
காந்தியைப்போல
பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்ததில்லை

தானாகவே சாகவிருந்த அக்
கிழவனைச் சுட்டேன்
அதன் மூலம் கிழவன்
வெற்றிபெறுவார் எனும் எண்ணத்தில்

அவர் ஒரு புரட்சியாளர் அல்லர்
சராசரி இந்திய ஆன்மீகவாதி
சுடப்பட்டதால் புரட்சியாளர் ஆகிவிட்டார்
எனது தவறினால்

சுட்டதற்கான பலனை நான் அனுபவித்துவிட்டேன்
சுட்டதற்கான கூலியை அவர்
இன்னும் எனக்குத் தரவில்லை
ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்

பின்னட்டையில் சொல்லப் பட்டிருப்பதைப்போன்ற ‘ஏமாற்றும் எளிமை’ கொண்டவை பெரும்பாலான கவிதைகள். குறிப்பாக இந்தக் கவிதை. எத்தனை எளிமைஎன் புன்னகைத்துக் கடந்து போனபின் எப்போதாவது இதே பக்கத்த்தைப் புரட்டும்போது திடுக்கிட்டுப்போகிறோம்,.

வரலாற்றின் எத்தனை வீரர்கள் எத்தனை தியாகிகள் எத்தனை புரட்சிக்காரர்கள் எத்தனை மகாத்மாக்கள்? எல்லாம் நமக்குத் தெரிந்த அவர்கள் பொது வாழ்க்கைவைத்துதானே? காந்தி சுடப்பட்டார், சுதந்திரத்திற்கு உண்ணாவிரதம் இருந்தார் என திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மகாத்மாவாக்கப்பட்டு எத்தனை மாதங்களாகிறது? எப்ப்போதாவது வரலாற்றில் கலந்திருக்க வாய்ப்பிருக்கும் பொய்களைப்பற்றி யோசித்திருக்கிறோமா?

என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது ஒரு துண்டு வாழ்க்கை. எழுதுபனின் வாழ்க்கையாகவோ அவனுக்குத் தெரிந்தவனின் தெரிந்தவளின் வாழ்க்கையாகவோ கேள்விப்பட்ட கதைகளின் வாழ்க்கையாகவோ இருக்கலாம். உயர் கவித்துவமோ, மொண்ணையாகவோ எளிமையாகவோ பிறழ்வுடனோ இருக்கலாம். எல்லாமே துண்டு வாழ்க்கை. எல்லா வாழ்க்கையும் ஒரு போதும் ஒன்றுபோல் இருக்காதில்லையா?

இயற்கை காதல் என ஒரே வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆரம்ப நிலை கவிதைகளில் நிலைபெற்று, அடுத்த தளத்திற்கு போக விரும்பும் புதியவர்களுக்கு தைரியமாக இந்தத் தொகுப்பை சிபாரிசு செய்யலாம்.

கடைசி ஆசை
என்னவென்று கேட்டார்கள்
ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி
வேண்டும் என்றேன்
கொடுத்தார்கள்
பார்த்தேன்
அதில் என் முகம் இல்லை

தூக்கிலிடும் போது
என் மூடப்பட்ட முகத்தில்
தெரிந்தது
உன் கொலைப்பட்ட முகம்

காந்தியைக் கொன்றது தவறுதான் – ரமேஷ் பிரேதன்
காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100

Older Entries

%d bloggers like this: