மொதவாட்டியா சுப்ரபாரதிமணியந்தான் ‘ நாவல் ஒண்ணு எழுதிப்பாரேன் கோமுன்னு கால் நட்டாப்ல. இதெங்க்கீங் நம்புளுக்கு ஆவுற சமாச்சாரங்களா சொல்லுனு ஒரு சொல்லுங்கிறாங்க, ஆழிஉலகுன்றாங்க, ஓரமா நகத்தக் கொறிச்சினே நின்னு பாத்துனே இருக்கிற பொழப்பு நமக்கு போதுங்காட்டி ப்பிடி நினைக்ககூடாது கோமு, பத்துப்பன்னெண்டு சிறுகதைகள குட்டனாச் சேத்தி நாவலுன்ற வேண்டீதுதான். இப்பதான் எப்படி வேணாலும் எழுதலாமேன்னு சொல்லாங்காட்டி, சரித்தான்னு மனசுல வெச்சுக்கிட்டேன்.

– வாமுகோமு முன்னுரையிலிருந்து.

கொங்குத்தமிழ் மீதான ஈர்ப்புதான் வாமுகோமுவின் எழுத்துக்களை என்னைத் துரத்தச்செய்கிறது எனத் தோன்றுகிறது. நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து திடீரென மேலெழுவதைப்போல்தான் காமம் சார்ந்த எழுத்துகளை நோக்கி ஈர்க்கிறது. ஒளித்துவைத்து படிக்கப்பட்ட கெட்டபுத்தகங்களில் தொடங்கிய ஈர்ப்பு இது. அதே ஆர்வத்தில் சில வார்த்தைகளைப்பார்த்துவிட்டு எழுத்துகளைத் துரத்தத் தொடங்கியவன்  நிற்கும் இடம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஜி. நாகராஜன் அல்லது சாரு நிவேதிதா வழியாக வந்த பாதை இது. தனக்கான இடத்தை தானே தேர்ந்தெடுத்தோ வாசகர்களின் ஆதரவைக்கொண்டே நிலை நிறுத்திக்கொள்ளும் ஒரு எழுத்தாளன் பிறகுதான் தான் சொல்ல விரும்பிய சொல்லித்தீரவேண்டிய விஷயங்களைச் சொல்லத் தொடங்குகிறான். சிறுகதைகளின் ஊடே தன் பிம்பத்தைச் சரியாக செதுக்கிக் கொண்ட வாமுகோமுவின் முதல் நாவலாக வந்திருக்கும் கள்ளி உண்மையிலேயே நாவலா என்பதில் சிறிது ஐயப்பாடு எழவே செய்கிறது.

குறிப்பிட்ட வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளில் எழும் முதல் தடுமாற்றம் அதன் மொழி. வட்டாரவழக்கை முதல் முறையாகச் சந்திக்கும் ஒருவனுக்கு வார்த்தைகள் பிடிபடுவதில்லை. வரிவரியாய் திரும்பத்திரும்ப வாசித்து அதனுடனான உறவை வளர்த்தெடுத்து, புரிந்து பின் சாரத்தை நோக்கிப்பயணப்பட படைப்பு சில நூறு பக்கங்களைக்கேட்கிறது. மொத்ததொகுப்பும் அதற்குள் முடிந்துவிட்டால் என்ன செய்வது. வாமுகோமுவிடம் குறிப்பிட விரும்பும் முக்கிய புள்ளி இங்குதான் நிற்கிறது. ஒரு வரி கூட புரியாமலும் போகவில்லை. வட்டார மொழியை விட்டு விலகியும் போகவில்லை.

மல்லி என்ற மாதாரியின் மாலையிலிருந்து தொடங்குகிறது நாவல். கோவைப்பழங்களை அதக்கிக்கொள்ளும் போது எச்சில் ஊறுகிறது. அவன் நினைவுகளிலேயே அவன் காலை, தொழில் முதலாளி என தடதடவென புதியபுதிய பாத்திரங்கள் நிறைகிறார்கள். நாவெலெங்கும் எத்தனை விதவித மனிதர்கள். பண்ணைக்காரர்களை பண்ணையார்கள் மேய்க்கும் ஒரு சிறு கிராமத்தின் அசல் வாசனை அத்தனை தெளிவாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கன்னாபின்னா நவீனத்துவக்காரர்களுக்காகவோ என்னவோ ஒரு கள்ளிக்கு ஒருத்தன் நாயகன் வீதம் பத்து பாகமும் பத்து கள்ளியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கள்ளிக்கும் ஒவ்வொரு நாயகன் மேலெழுகிறான். பிற நாயகர்கள் துணைபாத்திரமாக பின்புலத்தில் அலைகிறார்கள். ஒரு நாயகன் இன்னொரு நாயகனிடம் தோற்றுப்போகிறான். எல்லாரும் நாயகனாவும் எல்லாரும் வில்லனாகவும் அலைவதுதான் வாழ்க்கைச் சினிமாவின் காட்சிகள் அல்லவா.

நாவலை முடித்தபின்னரும் மனதில் நிற்கும் பாத்திரம் என்றால் சரக்கு வாத்தியார்தான். வெள்ளைவேட்டி சட்டையில் குடையுடன் சிறுவர்களை விரட்டித்திரியும் தமிழ்சினிமா தமிழ் நாவல் வாத்தியார்கள் போல் அல்லாமல், ஊர் திண்ணையில் வேட்டியில்லாமல் குடித்துவிட்டு உருளும் மாணவர்களையே சேக்காளிகளாக்கிக்கொண்டு ஊர்வம்பு பேசும் வாத்தியார் களத்திற்கு புதியவர்.
அவரை ஒழுங்காய் வீடு கொண்டுவர பணிக்கப்பட்டு தானும் குவாட்டரைச்சாய்த்துக்கொண்டு அவருடன் உருளும் மகன் பாத்திரம் பலதடவை பார்த்துச் சலித்த பழைய கிச்சுகிச்சு. இருந்தாலும் ரசிக்கிறோம். கொங்கு மொழியும் வாமுகோமுவும் காரணம்.

அழிந்து போன ரெக்கார்ட் டான்ஸ் கூட்டத்திலிந்து வந்தவள், கவுண்டரின் கண் அசைவுக்கு ஒத்துழைத்து ஆடைகளை கழட்டுமுன் கறாராக காசு வாங்கி முடியும் பண்ணையாள் பெண், கவுண்டர் மகன் ஆசைக்காக இருட்டில் பாறைமீது காமம் செய்யும் குடியானவள் , மாதாரியைக்காதலித்து அவன் பஞ்சாயத்தின் முன் அவமானப்படுத்தப்படும்போது தற்கொலை வரை முயன்று அவனைக்காப்பாற்ற பஞ்சாயத்திற்கே வரும் கவுண்டரின் மகள், செத்துப்போறதுக்கா பெத்துவச்சிருக்கேன். எங்கியோ நலலா இருந்தாச்சரி என மகளைக்கொண்டுவிடும் கவுண்டச்சி என கள்ளிகளில் விதவித பெண்கள் காமம் அல்லது காதலைச்சுற்றியே கட்டப்பட்டிருக்கிறார்கள். ஆண் மனதின் வக்கிரம் எனச் சாடுமளவு நேரடி அர்த்தம் தொனித்தாலும் ஊடாடியிருப்பது ஆணாதிக்கத்தின் வேர் என பொட்டில் அடித்துச் சொல்ல வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.

நாவல் முழுவதும் சாதீய பிம்பம் மிதிக்கப்படுகிறது. மாதாரியை மிதிக்கும் கவுண்டர் வெவ்வேறு ஊரில் வெவ்வேறு உயர்சாதி பண்ணைக்யார்களையே பிரதி நிதித்துவம் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது. கிராமாத்து உலகம் அத்தனைக்கண்கூடாகக் காணக்கிடைக்கிறாது. எலி வேட்டையாகட்டும், அறுப்புக்காலமாகட்டும் சினை ஆட்டைத் தேடிப்போய் நஞ்சு நீக்கி குட்டியை முத்தமிடுவதாகட்டும் என்ன இல்லை இந்தக் கிராமத்தில். கிராமத்தின் பேர் மட்டும் இல்லை. கோவைக்காரர்கள் அருகிலிருப்பதாய்ச் சொல்லப்படும் கிராமங்களைவைத்து மல்லியின் ஊரைக்கண்டுபிடிக்க முயலலாம்.

நாவலில்  நெருடும் ஒரே விஷயம், நாவல் நாவலாகக் சரியாகக் கட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. முன்னுரையிலேயே சொல்லி  கோடி காட்டியிருப்பதைப்போல ஒரு சிறுகதைத்தொகுப்புதான் என அங்கங்கே தோன்றுகிறது. எந்த எழுத்தாளரின் மொத்த சிறுகதைத்தொகுப்பை கிண்டினாலும் ஒரே பெயர்,குணம் தொழிலுடன் நாயகனைக்கொண்ட இரண்டு மூன்று கதைகளாவது கிடைக்கும். அப்படியே இந்த முதல் நாவலும் வாமுகோவின் இன்னொரு சிறுகதைத்தொகுப்புதானோ என எண்ணத்தோன்றுகிறது. பெயரில் கட்டுமானத்தில் என்ன இருக்கிறது. வாசிப்பில் நமக்குக்கிடைக்கவேண்டியது நமது நியாபக அடுக்குகளில் இல்லாத அல்லது ஒத்திருக்கும் ஒரு வாழ்க்கைதான் இல்லையா?

கள்ளி – வாமுகோமு – நாவல்
உயிர்மை பதிப்பகம் – ரூ120