தூப்புக்காரி – மலர்வதி

2 பின்னூட்டங்கள்

முன்குறிப்பு (அ) எச்சரிக்கை : மலம் அள்ளும் கனகம் பற்றிய பதிவு. குறைந்தது 5-6 மணி நேரத்திற்கு சாப்பாடு உள்ளிறங்காமல் போகலாம். எனவே சரியான நேரம் பார்த்து படிக்கவும். . கவனம்.

அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..

-மலர்வதியின் முன்னுரையிலிருந்து

சிறுவயதில் எங்கள் கிராமத்தில் எல்லாவீடுகளிலும், பின்புறம் கழிவறைக்கான மறைப்பு இருந்தது. மறைப்பு மட்டும் இருந்து. வீடுகளின் நிதிநிலைக்கேற்ப மறைப்பானது கூரையற்ற செங்கல் சுவர்களாககவோ, ஓலைத்தடுப்புகளாகவோ இருக்கும். உள்ளே கழிவறைக்கான குழி என்று கூட ஒன்றும் இருக்காது. கால் வைக்கத் தோதாக பழைய அடுப்பைப்போல கொஞ்சம் உயரமாக செங்கல் திண்டுகளோ, அல்லது மண்கட்டிகளோ வைக்கப்பட்டிருக்கும். இரண்டுக்கும் நடுவில் பழைய கழிவுகள் காய்ந்து கெட்டித்துக்கிடக்கும். கால் வைப்பதற்கான திண்டுகளில் வைத்து கடமையை முடித்துவிட்டு வரவேண்டியதுதான். இவையும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும். குழந்தைகள் என்றால், தனியாய் கொஞ்ச தூரம் நடக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டும், பத்துவயதுக்கு மேல் பின் பக்கம் போனால், வீட்டில்யாராவது கம்பெடுத்து வாய்க்கால் பக்கம் ஓடு என விரட்டிவிடுவார்கள். கிராமத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வென்று என்று காலர் ஏற்றிக்கொண்டு போய்வரவேண்டியதுதான்.

இந்த கழிவறை அமைப்புகளைச் சுத்தப்படுத்துவதற்கென்று வாரம் ஒரு முறை எங்கள் ஊருக்குள் வரும், பெண்ணைப்பற்றித்தான் நான் சொல்லவந்தது. அவர் பெயர் நினைவிலில்லை என்று பொய் சொல்லவிரும்பவில்லை. அவர் பெயர் தெரியாது. அப்பவும். ஊர் அவரது ஜாதியைச் சொல்லித்தான் அழைத்த நினைவு. ஒரு பேச்சுக்கு தூப்புக்காரி கனகத்தின் பெயரையே இவருக்கு வைத்துக்கொள்வோம். கனகம் வாரம் ஒரு முறை வருவார். கையில் ஒரு ஓலைக்கூடை. கிட்டத்தட்ட சினிமாக்களில் காட்டப்படும் பரிசல்களின் பாதி அளவு அகலம், ஓரளவு ஆழம். முழ சதுரத்தில் இரண்டு தகரங்கள். இரண்டு தகரங்களாலும், காய்ந்த மனிதமலத்தை வழித்து கூடையில் போட்டு கொண்டு போய் ஊர்க்கோடியில் வாய்க்கால் கரை யோரத்தில் கொட்டிவிட்டு வருவார். இதற்கு சம்பளம் என்று எதுவும் யாரும் குடுத்ததாய் நினைவில்லை. சாப்பாடு மட்டும். அதுவும் ஊர்முறைச் சாப்பாடு என்று பெயர். வேளைக்கு ஒருவீட்டுக்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பின்வாசல் பக்கம் வருவார். இவருக்கென்றே வீட்டிற்குள் ஈயச்சட்டிக்குள் முந்தைய நாளின் மீந்த உணவுகள் மொத்தமாய் சேகரிக்கப்பட்டு இருக்கும், வீட்டு பெண்மணி வழித்து இவர் பாத்திரத்தில் விடுவார்.

வீட்டுப்பெண்மணியின் மன நிலையைப்பொறுத்து சில நாள் சூடாகவும் உணவு கிடைக்கலாம். ஆனால் தனித்தனியாக இல்லை. அதே விதமான மொத்தமாக சோறு, குழம்பு, கூட்டு மொத்தமும் கலக்கப்பட்டு.
தூப்புக்காரியின் கனகத்திற்கும் நான் பார்த்த கனகத்திற்குமான வேறுபாடுகள் இங்குதான் தொடங்குகிறது. நாவலின் கனகத்திடம் சாதிவாரி அடக்குமுறைகள் இல்லை. ஊர்ச்சாதிகளின் ஒன்றைச் சேர்ந்தவள். கணவனை இழந்து வேறுவழியில்லாமல் தூப்புக்காரியாகிறாள். வழக்கம்போல ஊர் கனகத்தின் தொழிலைச் சொல்லி விலக்கிவைக்கிறது. கழிவென்பது எல்லாவிதமான மனிதக்கழிவுகளுக்கும் போகிறது. திருமணவீட்டின் எச்சில் இலையிலிருந்து மருத்தவமனையின் கழிவுரத்தம் தோய்ந்த துணி. நடுவில் எதற்கும் இருக்கட்டுமே என கொஞ்சம் கழிவறை பக்கமும் நாவல் போய் வருகிறது. கழிவறைக்கு சுத்தம் செய்வதற்கு போகும் கனகம், இரு காதலர்களின் லீலைகளைப்பார்க்க நேரிடுகிறது (சரி புணர்ச்சியும் ஒரு கழிவு வெளியேற்றம் தான் இல்லையா? ) தனது பெண்ணை நினைத்துக்கொள்கிறார்.

தூப்புக்காரியின் அனுபங்களில் தொடங்கும் கதை, தூப்புக்காரி மகளின் காதல், தோல்வி, மகளும் தூப்புக்காரியாகும் சூழ்நிலை என ஒன்று தொட்டு ஒன்றாக பயணித்து, தூப்புக்காரியின் மகள் ஆரம்பத்தின் தூப்புக்காரி நிலையைத் தொடும் இடத்தில் முடிகிறது.

கவனத்தில் கொள்ளப்படாத தூப்புக்காரிகளின் வாழ்வியலை கவனப்படுத்த முயற்சித்ததற்காக பாராட்டினாலும், நாவல் அந்தக் களத்தை சரியான வரைவியலோடு தொடவில்லை என்றே உணர்கிறேன். மிக எளிதாக ஒரு பெண் பார்வையிலான காதல் கதையாக இதை வெளியேற்றிவிடமுடியும். களம் என்பது தூப்புக்காரி என்பதை நீக்கிவிட்டு எந்த பெண்-வளர்த்த-பெண் இடத்திலும் கதையை மிக எளிதாகப் பொருத்திவிட முடிகிறது. காதலனை மனஓட்டத்தை, காதலியின் மன ஓட்டத்தைப் பேசிய அளவிற்கு தூப்புக்காரியின் மன ஓட்டம் பதிவு செய்யப்படவேயில்லை. தூப்புக்காரிகளின் வாழ்வை நோக்கி குவிந்திருக்கவேண்டிய வாசக கவனம், ஒரு தேய்வழக்குகளாலான ”தமிழ்சினிமாவில் நாயக- நாயகி இணைந்தார்களா என வெள்ளித்திரையில் காண்க” தரத்தில் போய்க்கொண்டிருக்கிறது.தூப்புக்காரியின் துயரமென்பது, மிகச்சில காட்சிகளுடன் கடந்து போய்விடுகிறது.

கவனப்படுத்தப்படாத மனிதர்களை நோக்கிய பார்வையை எழுத்தில் கொண்டுவர விரும்பிய நம்பிக்கைக்காக மட்டும் பாராட்டலாம்.

தூப்புக்காரி – மலர்வதி – அனல் வெளியீடு – ரூ 75

கட்டியக்காரி குழுவினரின் “அவமானம்” நாடகத்தை முன்வைத்து…

1 பின்னூட்டம்

நாடக அரங்குகளில் எனது பரிச்சயம் என வரிசைப்படுத்தினால், இதுவரை இரண்டு. பார்த்த முதல் நாடகம் இதே ஸ்பேசஸ் அரங்கில் சூர்ப்பணங்கு. அதைப்பற்றி எதையாவது எழுதிவிட கைபரபரத்து, சுமார் ஐந்தாறு வடிவங்களில் எழுதிப்பார்த்தும் , அந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் பின்வாங்கிவிட்டேன். அடுத்தது, தம்பிசெழியனின் ஓரங்க நாடகம் ஒன்று (361 இதழ் வெளியீட்டு விழா – டிஸ்கவரி புக் பேலஸ் என்று நினைவு) . மூன்றாவதாக இது.

பாலியல் தொழிலாளி சுகந்தியின் ஒரு நாள் வாழ்க்கை குறித்த “சதத் ஹசன் மண்ட்டோ”வின் ”அவமானம்” சிறுகதையே இந்த நாடகம். முதல் நாளை காலையில் எழுந்து போகும் கவுன்சிலர், ப்ரோக்கர் ராம்லால், காவலர் மாது, தோழி ஜமுனா, சுகந்தியை நிராகரித்துச் செல்லும் கோபால் நாயக்கர் எல்லாவற்றையும் இணைக்கும் ஒளி இழையாக சுகந்தி. இப்படித்தான் கட்டப்பட்டிருந்தது ’அவமானம்’.

ஜமுனாவிற்கும் சுகந்திக்குமான ஆரம்ப உரையாடல்களின் எள்ளல்தொனியும் இடைவெளிகளுடன் விழும் தபேலா இசையும் விளக்குகள் அணைக்கப்பட்ட அரங்கிலிருந்து மேடைக்குள் பார்க்கிறவனை இணைத்துவிடுகிறது. ராம்லால் அமர்ந்திருக்கும் தோரணையும் மெல்லப்புகையும் சிகரெட்டும் அரங்கின் ஓரத்தின் தனித்து விடப்பட்ட ஒற்றை விளக்கும் ஒரு நாவலின் மனிதர்களுக்குள் நடுவில் போய் நிற்பதான உணர்வையே கொடுத்தது.

நாடகங்களைப்பார்த்த பரிச்சயமில்லை என்றாலும், ஒருவாறாக கற்பனை செய்து வார்த்தைகளற்று சின்ன உடல்மொழிகளின் மூலம் சகல உணர்வுகளையும் கடத்திவிடக்கூடும் என்றே நம்புகிறேன். வார்த்தைகளை வார்த்தைகளாகவே ஒப்புவிக்க தனிமனிதனின் சில மணி நேரத்தில் உருவாகும் ஒரு எழுத்துப்பிரதி போதுமானது. அரங்க நிகழ்வுகளின் மனிதர்கள் வார்த்தைகளால் அல்ல, மனிதர்களாலேயே பிரதி எடுக்கப்படுகின்றனர். அந்த உடல் மொழிகளைத்தான் மேடை முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்.

நிகழ்வு முழுவதும் வரப்போகும் மனிதர்கள் மேடையில் அலைவதும் , இசையும் ஆரம்பம் என்றாலும், எனக்கான நிகழ்வென்பது ராம்லாலின் சிகரெட்டில்தான் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் பிணைத்துக்கொண்டிருக்கும் அதே தருணத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருக்கும் ஒரு அலட்சிய பாவனை, ஒற்றை உதறலில் தீக்குச்சியை அணைத்து எறிந்துவிட்டு பார்வையாளர்களைக் கூர்ந்து பார்த்த பொழுது இருட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவனுக்குள் மெல்லிய உதறல்.சுகந்தியைவிட வேகமாக, ஒரு பாதத்தின் மீது இன்னொரு பாதத்தை வைத்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஜமுனா நிகழ்வுடன் என்னைக்கட்டுகிறார். சுகந்திக்கும் ஜமுனாவிற்கும் இடையே பிறகெப்போதோ நடக்கப்போகும் உரையாடலுக்குப் பின் அரங்கம் இருள்கிறது பிறர் விலகுகிறார்கள் கதை தொடங்குகிறது.

கிளம்பிப்போகும் கவுன்சிலர் எண்ணிப்பார்த்து திணித்துச் செல்லும் நோட்டுகளும், வெளியேறி பின் திரும்பிவந்து தோள் துண்டை எடுக்க நிற்கும்போது சுகந்தி அதை முகத்தில் வீசும் தோரணையும் சுகந்தியை முதல் முறை அறிமுகப்படுத்துகிறது பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு.

ராம்லாலுக்கும் சுகந்திக்கும் இடையேயான உரையாடலின் ஒரு பகுதியாகத்தான் மாது வருகிறான். அவனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே மெல்ல இருளும் அரங்கத்திலிருந்து மற்றவர்கள் மறைந்து மாதுவும் சுகந்தியும் மட்டும் மிச்சமிருக்கிறார்கள். இந்த மாயாஜாலம் ஒவ்வொரு முறை நிகழும்போதும் துணுக்குறுகிறேன். எந்த இடைவெளியில் அடுத்த காட்சிக்கான மனிதர்கள் அவர்கள் இடத்திற்கு வருகிறார்கள் எந்த இடைவெளியில் மேடையிலிருந்து மனிதர்கள் மறைந்து போகிறார்கள்.. தேர்ந்த மாயாஜாலக்காரனின் கைக்குட்டைகள் புறாக்களாக மாறும் தருணங்களை புலன்கள் தெளிந்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கும் இந்த வயதில் ஏன் கண்டடைகிறேன் என்பது விளங்கவேயில்லை. மாது சுகந்தியைக் காதலிப்பதாகச் சொல்கிறார். வீட்டைச் சுத்தம் செய்கிறார். அழுக்கு ஆடைகளைச் சுத்தம் செய்யச் சொல்கிறார். சுகந்தியை உடமையாக்கிக் கொள்வதைப்பற்றி பேசுகிறார். பிறகு அவர் கட்டளைகளைச் செய்யாவிடில் “ நாம் தொடர்ந்து நண்பர்களாக இருக்க முடியாது” என்கிறார். எனக்கான மொதல் நெருடல் முள் விழுந்த இடம் இதுவே.

ஜமுனா ஜரிகைச் சேலையும் முக்காடுமாக சுகந்தியை சந்திக்க வருகிறார். ஏற்கனவே அறிமுகமாக நிகழ்த்தப்படும் உரையாடல் முதல் முறை நிகழ்கிறது. கூச்ச சுபாவியான டாக்டர் அரங்கேறுகிறார். டாக்டரின் குழந்தையின் பாவனைகள ஒட்டிய அதீதத்துள்ளல்கள் அடுத்த நெருடல் என்றாலும், தொடர்ந்த காட்சியில் கூச்சத்தில் நெளிவதெல்லாம் மென்கவிதை. போலவே சுகந்தி தன் குழந்தைப்பிராயத்துக் கதைகளைச் சொல்லுமிடமும், மாது உடனான காதல் பற்றி ஜமுனாவிடம் சொல்லும் இடங்களும் கவிதை என்றால், ஜமுனாவும் சுகந்தியும் இணைந்து ஆடும் அந்த ஒரு நிமிட ஹிந்திப்பாடல் உறுத்தல்.

சுகந்தியின் வீட்டிற்குள் நுழைய மறுத்தும், தெருவில் நுழையத் தயங்கியும், பெண்ணைச் சுகிக்க கார் எடுத்து வந்திருக்கும் கண்ணிய மனிதர் கோபால்நாயக்கரிடம்தான் கதை தொடங்குகிறது. கோபால் நாயக்கரின் நிராகரிப்பு ச்சீ எனும் ஒற்றை வார்த்தைதான் நிகழ்வைப்புரட்டிப்போடுகிறது. சுகந்தியின் தன்னுடல் நோக்கிய சுயபார்வை அந்த இடத்தில்தான் தொடங்குகிறது. ஆளுயரக்கண்ணாடியின் ஊடாக சுகந்திகேட்கும் கேள்விகள் பார்வையாளனுக்குள் ஒரு பதட்டத்தை உண்டாக்குக்கிறது. நிராகரித்துக் கிளம்பிப்போனவன் கார் திரும்பி வரச்சொல்லி குரல் உடைந்து கத்திவிட்டு வெற்றுத்தரையில் சுகந்தி அறையும் போது பார்வையாளர்களின் பார்வைக்கோணங்கள் தாழ்கின்றன. அதிர்வுகள் மனதில் இறங்குகிறது. அழுதுமுடித்தவளின் கைக்காசை பிடுங்கிப்போக வரும் காவலரின் உடல்மொழி கச்சிதம். திரும்ப்பிப்போகிறவர் சாமி சரணம் என அலைபேசியை எடுத்து பேசத் தொடங்கும்போது அத்தனை அதிர்வையும் வெளியில் உதிர்த்துவிடும் உத்வேகத்துடன் தான் உடல் அதிர கைதட்டிக்கொண்டிருந்தேன். பிறகு வந்து மாதுவின் காதலை கேள்விகேட்பதுவும், புகைப்படங்களை உடைப்பதுவும், பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை, காரணம், கூட்டத்தில் ஒருவனாக, சுகந்தி தரையில் அறையும் காட்சியின் காலத்திலேயே நான் உறைந்திருந்தேன்.

நிகழ்வு முடிந்து திரும்பும் பாதை முழுதும், தனித்த அதிர்வுகளையும், கவித்துவ தருணங்களையும் தாண்டி முழுப்படைப்பாக, நெருடல்களுக்குள் மட்டுமே உழன்று கொண்டிருந்தேன். மாதுவுடனான உறவை காதலாக தன் உடலின் அனைத்து துவாரங்களுக்குள் ஊற்றிப்பருகவேண்டுமென்ற சுகந்தியின் வார்த்தை சுழன்று கொண்டே இருந்தது. எதோ ஒரு குறை இருப்பதாக. என்னவென்று ஒற்றை வரியில் விளக்கத்தெரியாத முடிவற்ற கேள்வியது. உடனடியாக அவமானம் சிறுகதையைப் படித்தாகவேண்டும் என்று தோன்றியது. தமிழ் மொழிபெயர்ப்புகள் நெருடும்போது, மூலத்தைத் தேடும் அதே பழக்கம். குறைந்த பட்சம், ஆங்கில மூலத்தையாவது படித்துவிடவேண்டுமென்று அவமானம் வார்த்தையின் சாத்தியமான அனைத்து ஆங்கிலப்பெயர்களையும், சதத் ஹசன் மண்ட்டோவின் பெயரையும் வைத்தும் தேடிப்பார்த்தும் கிடைக்காமல், இணையத்தில் நண்பர்களிடம் கேட்டிருந்தேன். ஒரு நண்பர் மண்டோவின் படைப்புகள் மொத்தத்தொகுதி கொடுத்தார். அதிலிருந்த அவமானம் சிறுகதையை வாசித்துப்பார்த்தேன். நெருடல்களை இனம் காண முடிந்தது.

சதத் ஹசன் மன்ண்டோ சிறுகதை ஒரு கனவுலகத்தை உருவாக்குகிறது. இதே மனிதர்கள்தான் எனினும், அவர்களுக்கிடையேயான உரையாடல்களும் அதன் தொனியும் வேறாக இருக்கிறது. உரையாடல்கள் குறைவாகவும் மனச்சித்திரங்கள் அதிகமாகவும் இருக்கிறது. புகைப்படங்களையும் நிர்வாணப்படங்களையும் தாண்டி, கட்டிலுக்குக் கீழ் கட்டப்பட்டிருக்கும் நாயும், கூண்டுக்கிளியும் கூட ஒரு பாத்திரமாக சிறுகதையில் இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்விலும், கிளியும் நாயும் ஒரு குறுங்காட்சியில் வந்து போகின்றன. போலவே, நாடகத்தில் மாதுவுடனான காதல் பகுதியானது சிறுகதையில் முற்றிலும் வேறாக இருக்கிறது. அங்கு காதல் இல்லை. மிகத் தெளிவாகவே மாது சுகந்தியை ஒரு உடைமைப்பொருளாக கருதுவது காட்டப்பட்டிருக்கிறது. காதல் என்பதே இல்லை. போலவே நிகழ்வில் கோபால் நாயக்கரின் நிராகரிப்பைத் தொடர்ந்து சுகந்தி பேசும் வசனங்கள் அவமானம் என்ற இடத்தைத் தாண்டி எது அழகு என்பதான புறவயகோணத்தில் விரிய, சிறுகதையிலோ இவனொருவன் நிராகரித்தால் என்ன என அகவயமாகக் குவியத் தொடங்குகிறது. நாடகத்தில் கோபால் நாயக்கர் சுகந்தியை நிராகரிக்கிறார், சிறுகதையிலோ, தொடர்ந்த பத்திகளின் மூலம் சுகந்தி கோபால் நாயக்கரை (சிறுகதையில் சேட்) நிராகரிப்பதும், தொடர்ந்து தன்னைச் சுரண்டும் மொத்த ஆண்வர்க்கத்தையும் உதறி நிராகரிப்பதுவுமான தீர்க்கம் , நாடகத்தில் விரக்தியைப்போல மாறிவிடுகிறது. சிறுகதையில் பணம்பிடுங்கும் மாதுவிடமிருந்து தப்பிக்க, காசை ஒளித்துக்கொள்ளுமாறும், சாப்பிட காசில்லை என்று சொல்லுமாறும், ஈரானி டீக்கடையிலிருந்து உணவுவாங்கித்தரச்சொல்லுமாறும், சுகந்தியிடம் ராம்லால் கூறும் தீர்வானது நாடகத்தில் , உணவுவாங்கித்தரச்சொன்னால் தரமாட்டான் என்பதான ஒரு பரிட்சையாக மாறிவிடுகிறது. இந்த ஒற்றை வசனத்திற்காக நிகழ் அரங்கின் வெளியில் நிஜமாகவே ஒரு டீக்கடையை அமைத்து, அதற்கு ஈரானி டீ ஷாப் என பெயர் வைக்குமளவு செலுத்திய உழைப்பை இன்னும் சில தப்படிகள் சிறுகதைக்குள்ளும் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

என் உடல் அதிர தரை அறைந்த சுகந்தியின் கைகளுக்கு மயிலிறகு ஸ்பரிசத்தையும், கூர்பார்வையில் உலுக்கி எடுத்த ராம்லாலுக்கு மனாசீக முத்தங்களையும் பறக்கவிட்டு நிகழ் அரங்கிலிருந்து வெளியே வந்தேன். இரானி டீக்கடையில் ஒப்பனைகளை களைந்துவிட்டு ராம்லாலும், ஜமுனாவும், கோபால் நாயக்கரும், மாதுவும் ஒன்றாக அமர்ந்து டீயும் சமோசாவும் ஆர்டர் சொல்லிக்க்கொண்டிருந்தனர். ஸ்பேசஸிலிருந்து வெளியே வந்தேன். மழை தூறிக்கொண்டிருந்தது. நான் இந்தப்பதிவை மனதிற்குள் எழுதத் தொடங்கியிருந்தேன். நாடக அரங்குகளில் எனது பரிச்சயம் என யோசித்தால்…..

o
நவம்பர் 30 அன்று மாலை பார்த்த, கட்டியக்காரி குழுவினரின் “அவமானம்” நாடகத்தை முன்வைத்து…

என் பெயர் ஜிப்சி – ஹெர்பேரியத்திலிருந்து பூக்கும் மலர்.

பின்னூட்டமொன்றை இடுக

அ.
கவிதைகளை வைத்து அரசியல் செய்வதை விட கவிதைகளுக்குள் அரசியல் எளிதானதாக இருக்கலாம் போலிருக்கிறது. பிரச்சார நெடிகளைக் கடந்து ஒரு சிறு அனுபவத்தை அதன் சாரத்தோடு முண்டு சுற்றி அதற்குள் அரசியலைக் கோர்ப்பதென்பது சாதகப் பட்சியிடம் மிஞ்சும் மழையின் காலம்.

ஆ.
துப்பாக்கி ரவைகளை மூங்கிலுக்குள் இட்டு புல்லாங்குழலென வாசிக்கச் சொல்வதென்பது ஒரு வரலாற்றுத் துயரம். எதோ ஒரு கணத்தில் எல்லோருடைய கைக்கும் மாற்றப்பட்டிருக்கும் மூங்கில்குழல் நக்கீரனுக்கு மட்டும் கவிதையாய்ச் சமைகிறது.

இ.
தன் கருவி மீட்டி இசை கசிந்துருகச்செய்யும் பெண் பெரிய மண்டபத்தில் தன் சுருதி அகழும் நாயனக்காரனாகிறாள். ஹெர்பேரியத்திற்கான தயாரிப்பு குழந்தை வளர்ப்பாகிறது. மூவாயிரத்துத் தொண்ணூறாவது முறையாக வெள்ளரிப்பிஞ்சு விற்கும் சிறுமி சாம் மாமாவுடன் போட்டியிட்டாலும், எலுமிச்சை நிற மெய் நீர் அரசியலின் மீது பெய்கிறது.

ஈ.
நண்பர்கள் சுயத்தை தன் குருதியில் பிறர் படிக்க பொதுவில் வைக்கிறார்கள். பிறர் குருதிகளின் மீது தன் பார்வைகளைக் குவிப்பதே இல்லை. சுயவிமர்சனம் என்றுகூட இதைச் சொல்லலாம். வாசிக்கக்கிடைக்கும் பெரும்பாலான கவிதைகள் கண்ணாடியுடனான உரையாடல்களாயிருந்தன. தன்னைத் தவிரபிறர் நிறங்களை மழுப்பிக்காட்டும் சுயக்கண்ணாடிகள். நக்கீரனுக்கு மூக்குக் கண்ணாடி வாய்த்திருக்கிறது. முன்னால் விரிந்திருக்கும் உலகம் தெரிகிறது. அதே கண்ணாடியின் பிம்பங்கள் வாசிப்பவனுக்கும் அதே சாயலில் கடத்தப்படுகின்றன. ஒருவேளை எங்கள் கண்ணாடிகளில் முகம் பார்க்கும் பகுதியில் ரசம் பூசும் கையாக நக்கீரன் கைகளைப் பற்றிக்கொள்வேன்.


கல்பாலிகைகளை நீருக்குள் மறைத்த சமணமுனி திகம்பரனாய்த் திரும்பி வரும்போது காவலாளிகளின் இருத்தல் குழப்புகிறது. நான் வெட்டிய குளத்திற்கு எவனோ காவலாளியாகி என்னையே துரத்தும் வலி. விடலைகளில் கைகளில் அடைபடும் கல்முலைகளில் கசிந்துருகுகிறது தாய் நிலத்தில் விரட்டப்பட்ட மனிதர்களின் கண்ணீர்.

தமிழ்கவிஞர்களில் போலிச்சமநிலை மீதான சிறுகல் விழுகிறது ஒரு இடத்தில் . எத்தனைச் சம நிலையுடன் எதன் மீது விழுந்தாலும் சிறு நகர்வும் ஒரு முனைக்கு கடத்திவிடுகிறது கவிஞனை (எழுத்தாளன் என்ன இன்னும் கூட்டம் சேர்க்கவா?) கிழக்கு மேற்கு இசங்கள் தோலில் வரிக்குதிரைத் தடங்களை விட்டு சுய அடையளமுமில்லாமல் மாறுவேடமும் இல்லாமல் கோமாளிக்கோலத்தில் கொண்டு நிறுத்திவிடக்கூடும். கொடுமைகளின் உச்சம் சொந்த நிலத்தில் சகதிகளுக்குள் புதைந்து சவப்பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்வது. சொந்த நிலத்தில் விழுந்த நிழல் ஜிப்சியென்றால், இதுவும் அதுவே.

இசைக்கலைஞன் கவிஞனைப்போல நினைவிலிருந்த கானகம் ஒன்றினை மேடையில் மீளூருவாக்கம் செய்கிறான். கூட்டிசைகளை இரைச்சல் என்றும் சொல்லலாம். புத்தகங்களை அதன் நுணுக்கங்களுக்காகப் படிப்பவன் ரசிக்குமளவு ஆதி வேரினை, பியானோ குடுத்த மரத்தினை மரத்திலிருந்த இருவாச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிப்பவன், இசையொத்த கவிதைகளை நுணுக்கங்களுக்காக அன்றி, வரலாற்றுப்புரிதலுடன் படிப்பவன் தன் வெட்டுக்க்காயங்கள் மீதான கவனம் கொண்ட நோயாளியென வாதையினைத் தான் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது இல்லையா?

ஓவியர்கள் வன்முறையாளர்களாகவும் இருக்கிறார்கள். பறக்கும் கிளிகளைவிட கூண்டிலிருக்கும் கிளிகளைத்தான் ஓவியர்களுக்குப் பிடித்திருக்கிறது. வண்ணங்களையும் அதன் நுணுக்கங்களையும் மட்டும் அறியாத சிறுகுழந்தைக்கு மட்டுமே கூண்டு உறுத்துகிறது. கரு மையினால் கூண்டை அழித்துவிட்டு கிளி பறந்து விட்டதாக கற்பனை செய்து கொள்வதுதான் எவ்வளவு எளிது?

படைப்பு குறித்த ஒரு பார்வையினை இன்னொருவருக்குக் கடத்தும்போது அதன் ரகசியங்களை உடைக்காமலிப்பது உத்தமம்தான் இருந்தாலும், ரகசியங்கள் மட்டுமே ஒருவரை படைப்பினை நோக்கி இழுக்க வாய்ப்பிருக்கிறது எனும் பட்சத்தில், ரகசியங்களை விட அதன் நோக்கிய ஈர்ப்பே பிரதானமாக எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன சில நிகழ்வுகளை அதன் பின்னணிகளோடு மொழி அலைகளோடு நக்கீரனின் விளையாட்டை என் பெயர் ஜிப்சியில் பார்க்கலாம். அல்லது பெரிதாய் ஈர்க்கப்பட்ட சில ரகசியங்களை தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்வது குறித்த மனக் கொந்தளிப்பாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.. அல்லது…

சுருள் சுருளாய் விரிகிறது நக்கீரனின் அரசியல் . பென்சிலுக்குள் ஒளிந்திருக்கும் சுருள் அடுக்குகளைப்போல ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு உள் நோக்கி அல்லது வெளி நோக்கி விரிந்து கொண்டே போக முடிகிறது. இந்தக் கவிதைகளில் நக்கீரன் இல்லை. அவரின் தனிமை, அவரின் அடுக்குமாடிக்குடியிருப்பின் தூரத்தில் தனித்த கடலின் சோகம் இல்லை. தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் யுவதியின் கிளர்ச்சியில்லை. சண்டைப்படம் முடிந்து வாகனத்தின் பஞ்சு மெத்தைகளில் முஷ்டி மடக்கிக் குத்திப்பார்க்கும் போலிவீரம், நீ அவனில்லை. நாந்தான் அவன் என்ற செருக்கு இல்லை.

ஒரு கோப்பைத் தேநீருடன் சோபா ஒன்றில் சாய்ந்தமர்ந்து எல்லா நிகழ்வுகளையும் அடுக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிகளில் பார்க்கும் அறிபுனைவுக் கதையின் கடவுளாக அமர்ந்திருக்கிறார் கவிஞர். சில அபத்தக் காட்சிகளின் ஒளித்துண்டை நம் முன்னால் தூக்கிப்போட்டு புன்னகைக்கிறார். அந்தக் காட்சியுடன் ஒன்றலாம், அல்லது அதன் பின்னணிக்குள் சுருள் படிகளுக்குள் இறங்கலாம் அல்லது சுருள் சுருளாக…
ஒள
முன்னுரையில் நக்கீரன் சொல்வது போல கவிஞர்களின் துப்பாக்கி காலியாக இல்லை. நக்கீரன் துப்பாக்கி மொழியால் நிரப்பப்பட்டிருக்கிறது. பொதுமைப்படுத்தப்படவேண்டுமெனில் மீன்களின் நிர்வாணமென்னும் அபத்தத்தைப்போலவே அரசியலற்ற கவிதைகள் என்பதுவும் அபத்தம்தான் என்றாலும் புதையுண்டிருந்த மொகஞ்சதாரோ மனுஷியின் நாவாகவும் இருக்கிறது என் பெயர் ஜிப்சி.

என் பெயர் ஜிப்சி – நக்கீரன்
கொம்பு வெளியீட்டகம் – ரூ.50.

ஆன்லைனில் வாங்க 

Confessions (2010) – வன்மங்களின் வலைப்பின்னல்

பின்னூட்டமொன்றை இடுக

 நன்றி : உயிரோசை

பாவமன்னிப்பில் அமர்ந்திருக்கும் ஒரு பாதிரியாருக்கு என்னென்னவிதமான மனக் கொந்தளிப்புகளை அந்த வாக்குமூலங்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கக்கூடும்?பிறருக்கான சிறு துரோகத்திலிருந்துசில தலையெழுத்துகளை மாற்றியமைக்கும் கொலைகள் வரை எத்தனை கதைகளைக் கேட்டிருக்கக்கூடும் அவர்?

முதலாவதாக ஒரு ஆசிரியைவசந்தகால விடுமுறைக்கு முந்தைய நாளின் இறுதி வகுப்பில் பேசத் தொடங்குகிறார்வகுப்பு பதின்மருக்கான சேட்டைகளுடன்ஆசிரியை குறித்த கவனமின்மையுடன்தான் இருக்கிறது ஆசிரியைதன் குழந்தையின் தந்தை எச்..விவைரஸ் பாதித்தவர் எனும் விவரம் சொல்லும்வரைதிடீரென அமைதி சூழ்கிறதுமூச்சை அடக்கிக் கொள்கின்றனர்ஆசிரியையின் ஸ்பரிசத்திலிருந்து விலகுகின்றனர் எயிட்ஸ் குறித்த விளக்கங்களுக்குப் பிறகு சுவாசம் மீள்கின்றனர்தன் குழந்தை இறந்துவிட்டதாகவும் அது விபத்தல்ல கொலை என்கிறார்அந்தக் கொலைக்குக் காரணம் அதே வகுப்பிலிருக்கும் இருவர் என்றும் இன்னும் சில மாதங்களில் அந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமான இருவருக்கும் எயிட்ஸ் கிருமிகளை உள்ளிட்டதாகக் கூறுகிறார்வகுப்பை நிசப்தம் சூழ்கிறது.நம்மையும்.
ஆசிரியையால் தண்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இரு மாணவர்களில் ஒருவன்விடுமுறை முடிந்தும் பள்ளி திரும்பாதவன்அவனைப்பற்றி அறிந்து கொள்ள அந்த பள்ளியில் புதிதாக இணைந்த இன்னொரு ஆசிரியர் முயல்கிறார்உண்மையில்அவன் பள்ளிக்கு வராமல் போனதன் காரணத்தை அந்த ஆசிரியரைத் தவிர எல்லா மாணவர்களும் அறிந்திருக்கின்றனர்.

பாவமன்னிப்பின் பாதிரி இடத்தில் நாமும் மவுனமாக அமர்ந்திருக்கிறோம்.சிறுவன் மொத்தமாய் மனதை இழந்துவிட்டிருக்கிறான்தன் நோய் எந்த விதத்தில் பரவக்கூடும் என்பதைப் பற்றிய அறியாமையும்மரணம் குறித்த பயமும் கலந்த பிறழ்ந்த மன நிலையில் பல நாட்களாக குளிக்காமல்,உடைகளை மாற்றிக்கொள்ளாமல் முடிவெட்டிக்கொள்ளாமல் அறையில் அடைந்து கிடக்கிறான்தந்தையில்லாமல் தாயால் வளர்க்கப்படுபவன்.தாயையும் இப்போது நெருங்க விடுவதில்லைபுதிய ஆசிரியர் இதைப்பற்றி விவரம் எதுவுமறிமால் இவனை மறுபடியும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்அவ்வப்போது துணைக்கு ஒரு மாணவியையும் அழைத்துக்கொண்டு இவனுக்கு ஆறுதல் சொல்ல வருகிறார்.இவர் வந்து செல்லும்போதெல்லாம் சிறுவனின் மனப்பிறழ்வு உச்சத்தைத் தொடுகிறதுஅடைத்த கதவின் மறுபுறம் கூக்குரலிடுகிறான்எதையாவது கண்ணாடி உடைத்து வெளியில் எறிகிறான்மறுபுறத்தில் பள்ளியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது மாணவன் துறவியின் மன நிலையுடன் பள்ளியில் தொடர்கிறான்கொலை குறித்த குற்ற உணர்ச்சி எதுவும் அவனிடம் இல்லை.சக மாணவர்களுக்கு குற்றம் சாட்டப்பட ஒருத்தன் கிடைத்த கொண்டாட்டம்.மின்னஞ்சல்களில் சிறுசிறு அசைவுகளில் அவர்கள் இவனைச் சீண்டிக்கொண்டேதான் இருக்கிறார்கள்புத்தகங்களைத் தூக்கி எறிகிறார்கள்.சலனம் எதுவுமில்லை.

பள்ளியில் தொடரும் சிறுவன்,அவனைப்பற்றிய அவதூறுகளைப் பரப்பாத இன்னொரு மாணவியுடன் இணைக்கப்படுகிறான்(இவள்தான் வீட்டிலிருக்கும் சிறுவனை அழைக்கச்செல்லும் ஆசிரியருக்கு உதவியாய்ச் செல்பவள் என்பது மெல்லிய பின்னல்). இருவரையும் கைகாலைக்கட்டி தலையைப்பிடித்து முத்தமிட வைக்கிறார்கள்அதை அலைபேசியில் படம் பிடித்து பிறர் மிரட்ட எத்தனிக்கிறார்கள்இவன் தன் பொறுமையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறான்பிளேடால் தன் விரலை அறுத்து ரத்தத்தை அலைபேசி மீது சொட்டுகளாய் விடுகிறான்எயிட்ஸ் குறித்த பயங்கள் மாணாக்கர்களுக்குள் பீதியை ஏற்படுத்துகிறதுமுத்தமிட வற்புறுத்திய மாணவனை இவன் முத்தமிடுகிறான் (உதட்டில்!) . இன்னும் பிற சீண்டல்கள் தொடர்ந்தால்,எல்லாருக்கும் இதையே கடத்தப்போவதாகச் சொல்கிறான்அடுத்த காட்சியில் ஒரு உணவகத்தில் கண்ணாடிப் பெட்டகம் முழுவதும் இரத்தம் சிந்தியிருக்கிறதுஎல்லா உணவுகளின் மீதும்ரொட்டிகள் மீது கேக்குகள் மீது இரு கை பூசிய தடங்கள்இரண்டு கையிலும் ரத்தம் வழிய பாதையிலிருந்து வெளிப்படுவது வீட்டிலிருக்கும் சிறுவன் மிசுகி கிடஹராஒரே நேரத்தில் இரு மாணவர்களையும் ஒரே விதத்தில் இரத்தத்தை பிறர் மீது பூச வைத்த மாயக்கண்ணி பார்ப்பவர்களின் கற்பனைக்கு,
ஷுயா வான்னபிஆசிரியையால் குற்றம் சாட்டப்பட்டும் பள்ளியில் தொடரும் மாணவன்.

பிற குழந்தைகள் போல அழகான பொம்மைகளலல்லாதுபொம்மைகளைப் பிய்த்து அதன் உள்ளடக்கங்களையும் வேலை செய்யும் முறமைகளையும் தாயால் கற்றுக்கொடுக்கப்பட்டு வளர்பவன்எதையும் உள்ளார்ந்து கவனிப்பதே பொழுதுபோக்கானாவன்தன் மேற்படிப்பு ஆராய்ச்சி இன்னபிற காரணங்களுக்காக தாய் குடும்பத்தை விட்டு விலகிவிட தந்தையால் வளர்க்கப்பட்டவன்இருவரும் பிரிந்த சில நாட்களிலியே தந்தை அடுத்த திருமணம் செய்துகொள்கிறார்சின்னம்மா குழந்தை பிறக்கும் தறுவாயில் இவன் இணைந்திருக்கும் சிறுவீட்டில் தனிமையில் விடப்படுகிறான்.தனிமையில் இவன் விருப்பமெல்லாம் பிரிந்த தன் தாயைச் சந்திப்பதுதன் பரிசோதனை வெற்றிகளைப் பகிர்வதுஅவள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு தன் சாதனைகள் அடங்கிய இணைய தளத்தை பகிர்கிறான்.சீண்டுவார் இல்லைபிறகு சிறிய கொலைக்கருவியைத் தயாரித்து தளத்தில் வெளியிடுகிறான்பின்னூட்டப்பெட்டி நிறைகிறதுமறுபடியும் உதவிகரமான கண்டுபிடிப்புடன் ஒரு போட்டியில் கலந்து வெல்கிறான்ஆனாலும்செய்தித்தாள்கள்தன் குடும்பத்தைக் கொன்ற இன்னொரு சிறுமியைத் தான் கவனிக்கின்றனகொலை மட்டுமே உலகத்தின் கவனத்தை தன்பால் திருப்புமென கொலைக்கான துணையைத் தேடும்போது இரண்டாவது சிறுவனுடன் நட்பாகிறான்இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.

நயோகிகுற்றம் சாட்டப்பட்டு வீட்டில் அடைந்து கொள்ளும் சிறுவன்முன்சொன்ன காட்சிகளின் இன்னொரு பரிமாணம் விரிகிறது.இவனுக்கு குளிக்காத,முடிவெட்டாதஅழுக்கடைந்த தேகம் மட்டுமே இவன் இருப்பை உறுதிசெய்கிறது.நாற்றம் இருக்கும்வரை தான் உயிரோடிருப்பதான நம்பிக்கைதான் இவனைத் தொடர்ந்து வாழவைக்கிறதுநயோகி எதற்கும் உதவாதவன் என்ற ஷுயாவின் கூற்று இவனுக்கு ஒலித்துக்கொண்டேயிருக்கிறதுநயோகியின் செயல் முழுவதும் ஷுயாவின் வார்த்தைகளிலிருந்து வெளியானதுகடைசியில் தன் தாயிடமிருந்து அதே சொற்களைக் கேட்கும்போதுதான் நயோகி தன் இரண்டாவது கொலையைச் செய்கிறான்.

எல்லாக் காட்சிகளிலும் பின்னணி இசையாக மெளனத்துடன் சேர்ந்த மெல்லிய கம்பி அறுந்துகொண்டே இருக்கிறதுஒரு வசனத்தின் நடு நடுவே பல்வேறு பாத்திரங்கள் தன் இருப்பை நீட்டிவிட்டுப் போகிறார்கள்இரண்டு மாணவர்கள்,ஒரு மாணவிஒரு ஆசிரியைஒரு ஆசிரியர்மூன்று மாணவர்களுடைய பெற்றோர்கள்இவ்வளவு பேரும் அவரவர் தளத்தை ஒரு புன்னகையில்ஒரு வசனத்தில் ஒரு அசைவில் பலப்படுத்திக்கொண்டே போகிறார்கள்ஆரம்பக் காட்சிகளில் வந்து கொலையுண்டு இறந்து போகும் சிறுமிகூட பஞ்சுப்பொதி பொம்மையின் மீது கனவில் இருக்கிறாள்நாய்க்கு உணவு வைக்கும் சிறு வேலையை வாஞ்சையுடன் செய்கிறாள்இறப்பதற்கு முந்தைய கணம் கண்விழிக்கும் அந்த முகம் படம் முழுவதும் கூடவே வருகிறதுஷுயா தன் தாய் பிரியும்போது தன்னையே இழந்ததாக உணர்கிறான்ஒரு சோப்புக்குமிழி அவன் காதருகே வெடிக்கிறதுபிறிதொரு நாளில் பின்னோக்கி ஓடும் கடிகாரம் ஒன்றை அவன் கண்டுபிடிக்கும்போது தாய் விலகிப்போகும் காட்சி பின்னோக்கி நகர்கிறதுஉடைந்த நீர்க்குமிழி அதே காதருகே பின்னோக்கி நகரும் காட்சியைமைப்பில் முழுதாகிறது பிறகுதான் அவன் கொலை குறித்த எண்ணங்களுக்கு நகர்கிறான்). உணவுவிடுதியெங்கும் ரத்தம் தோய்த்துவிட்டு இரு உள்ளங்கைகளும் முகத்திற்கு நீட்டும் நயோகியிடம் ஒரு புன்னகை உறைந்திருக்கிறது. (அதற்கு முந்தைய காட்சியில்தான் நயோகி புன்னகைத்தபடி இருக்கும் தன் புகைப்படத்தைப் பார்த்து ” யார் இதுஎன்ன……… க்கு இவன் சிரிக்கிறான் எனக் கேட்கிறான்)எல்லாவற்றிற்கும் தானே காசு கொடுத்துவிடுவதாகச் சொல்லும் நயோகியின் தாய் கடைக்காரன் காலில் விழுகிறாள்இப்படி ஒவ்வொரு காட்சியும் முந்தைய பிந்தைய காட்சிகளுடன் பின்னிப்பிணைந்து ஆதி கண்ணி குறித்த எந்த மையமும் இல்லாமல் நீண்டு கொண்டேதான் போகிறது.

கிம்கிடுக் பின்னால் அலைந்ததைப்போல இன்னும் சில மாதங்களுக்கு டெட்ஷுயா நகஷிமா பின்னால் அலைவேன் எனத் தோன்றுகிறது.

அதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல்

பின்னூட்டமொன்றை இடுக

[விஜய மகேந்திரன், ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, வேடியப்பன், விநாயக முருகன்]

ஜீலை இரண்டாம் தேதி, ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் என பேஸ்புக்கில் நண்பர் வினாயகமுருகனும், விஜயமகேந்திரனும் அழைத்திருந்தார்கள். சினிமா மீதான கூர்மையான ரசனையோ, உத்திகள் குறித்த அறிவோ இல்லையென்றாலும், கலந்து கொள்வது இரண்டையும் கொஞ்சம் வளர்க்கும் என்ற நம்பிக்கையில்தான் கலந்துகொள்வதாய் தீர்மானித்திருந்தேன். முன்னதாக என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு ஈர்ப்பும் ஆரண்யகாண்டம் படத்தின் மீது இருந்தது. சுப்பு, சிங்கப்பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி, பெயர் தெரியாத சப் இன்ஸ்பெக்டர், வாழ்ந்து கெட்ட ஜமீன் என வெவ்வேறுவித மனிதர்கள் கலந்து கோர்க்கப்பட்ட திரைக்கதையும் அதன் காட்சிக்கோணங்களும், இதனை மனதில் கருவாக வரித்து அலைந்த படைப்பாளியை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் இன்னொரு காரணம்.

நிகழ்வு  மணி ஆறுக்கு ஆரம்பித்தது. கலந்துரையாடலுக்கு முன்னதாக பீப்பிள்ஸ்தியேட்டரின் ‘ நீங்களே சொல்லுங்க’ எனும் ஓரங்க நாடக நிகழ்வு.  நிகழ்த்தியவர் தம்பி சோழன். இன்னும் மனதின் ரகசிய ஓரங்களில் சிறு அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது.
[பீபுள்ஸ் தியேட்டர் சார்பாக “ நீங்க சொல்லுங்க” – என்ற நாடகத்தை அரங்கேற்றும் தம்பி சோழன்.]

கூட்டத்தின் நடுவில் வந்தவர் தன் பெயர் நீலகண்டன் என்றும் மனநிலை காப்பகத்தில் மன நிலை ஆலோசகராகப் பணிபுரிவதாகவும், தன்னிடம் ஆலோசனைக்கு வந்த இருவரின் கதையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இரண்டுகதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.
முதல் கதை திரைப்படவெறியில் மன நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணைப்பற்றியது. தன்னை  நடிகர் அஜீத்தின் மனைவியென்றும், சிறு மனஸ்தாபத்தினால் அஜீத்தைப்பிரிந்து அப்பாவீட்டில் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இதற்காக அப்பாவும் மகளும் அழுதுகொண்டிருப்பதாக மன நிலை ஆலோசகர் சொல்கிறார். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார். தன் பெயர் நீலகண்டன், மன நிலை ஆலோசகர். கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்து உக்காருகிறேன். எதையோ சொல்லவருகிறார் என. இரண்டாவது மனநிலை பிறழ்வாளரின் கதை. ஒரு பூங்கா ஒன்றில் சந்தித்த நபர், தனக்கு யாரைபார்த்தாலும் கொல்லத்தோன்றுகிறது. இதற்கான காரண்ம் என்ன என ஆலோசனை கேட்கிறார். அவர் கதையைச் சொல்லும்போதே மறுபடியும் சுய அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். விளக்குகள் அணைகிறது. ஸ்ரீ நேசனின் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்குகிறார். ( விளக்குகள் அணையும்பொழுது மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொள்ளும்படியும், கவிதை வாசிக்கப்படும்பொழுது உடன் சேர்ந்து வாசிக்கும்படியும் துண்டுப்பிரசுரம் கொடுக்கப்ப்ட்டிருந்தது.)

கவிதைக்குள் மூன்றாவது கதை வருகிறது. ஒரு குடும்பம் வழக்க்ம்போல் துயிலெழுகிறது. இருக்கும் பாலைக்காய்ச்சி டீ போட்டுக்குடிக்கிறார்கள். கடைத்தெருவிற்குப்போகிறார்கள் (கவிதையை கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்களும் பின்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்)

ஆர்ப்பாட்டமான கடைத்தெரு வழக்கத்திற்கு மாறான
அமைதியாக இருந்தது.

ஆர்ப்பாட்டமான எங்கள் குழந்தையும் வழக்கத்திற்கு
மாறாக அமைதியாக இருந்தது.

ஆறு முழ நீளத்திற்கு நைலான் கயிறு வாங்கிக்கொண்டோம்
குழந்தைக்கு ஒரு ஐஸ்கிரீமும்

கவிதையின் இந்த இடத்தை இருட்டில், 20-30 குட்டி மெழுகுவர்த்தி வெளிச்சங்களுடன் கோரஸாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை கற்பனை செய்து பாருங்கள். கிட்டத்தட்ட அற்புதமான உன்மத்த மன நிலை அது.

வீட்டிற்கு வந்து
தூக்கிட்டுக்கொண்டோம்
நாஙக்ள் தூக்கிட்டுக்கொண்டதற்கான காரணத்தை
இந்த உலகத்திடம் சொல்வதற்கு
எந்த முகாந்திரமும் இல்லை

கூட்டம் மொத்தம் ஒரு பித்து நிலையில் பின்சொல்லிச் சொல்கிறது இந்த வரிகளை அடையும் போது கட்டியங்காரனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. “இந்த உலகத்திடம் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” . திடீரென இரு மருத்துவமனை ஊழியர்கள் இருவர் நடுவில் நுழைந்து பேசிக்கொண்டிருப்பவனை இழுத்துச் செல்கிறார்கள். ‘ இவன் ஒரு மன நோயாளி, இவன் பேசசைக் கேட்டதின் மூலமாக நீங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்’ என மருத்துவமனை ஊழியன் சொல்கிறான். இரு ஊழியர்களும் மையபாத்திரத்தை இழுத்துச் செல்லும்போதே ஓங்கிய குரலில்
கத்துகிறான் கவிதையின் கடைசி வரியை “ நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”. நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”.

விளக்குகள் எரிகின்றன. கூட்டத்தின் பெரும்பாலான முகங்களில் புயல் கடந்த கலக்கம். சில வினாடிகள் தாமதித்து கைதட்டல் காதைப் பிளக்கிறது.  அற்புதமான நிகழ்வு. ஸ்ரீ  நேசனின் கவிதை, மருத்துவர் ஆனந்தனின் ஒரு பதிவு, மற்றும் கோபிகிருஷ்ணனின் ஒரு சிறுகதை மூன்றையும் பிணைத்த கதை என பிரசுரத்தில் சொல்லியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அந்த நிகழ்வில் ஊறிப்போய்க்கிடக்கிறேன். தற்கொலைக்காரணத்தைத் தெரிந்து கொண்ட குழந்தை இந்த மனபிறழ்ந்தவனின் நினைவில் எப்படி வருகிறது? நடிகரின் மீது கொண்ட பித்தால் பிறழ்வடைந்த பெண், எல்லாரையும் கொலைசெய்யும் வெறி கொண்ட ஆண், மனப்பிறழ்வைடைந்த இளைஞன், தற்கொலையின் காரணத்தைத் தெரிந்த ஒரே ஒரு குழந்தை எல்லாம் எந்த புள்ளியில் ஒன்று சேருகின்றன? சில கேள்விகளுக்குப் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள். சில கேள்விகளுக்கு பதிலே இல்லை என்பதுதான் உண்மை.

o

பிறகு ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் நிகழ்வு தொடங்கியது.  முதலாவதாக காலச்சுவடு அரவிந்தன் ஆரண்யகாண்டம் குறித்த தனது கருத்துக்களைக் கட்டுரையாக கொண்டுவந்திருந்து வாசித்தார். (யாராவது இந்த கூட்டங்களில் கட்டுரை வாசிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சிசெய்யுங்களேன் பிளீஸ். தம்மடிக்கும் இடைவெளியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் 😦 ) அடுத்து கவிதா முரளிதரன். தனது கருத்துக்களை குறிப்புகளாகக் கொண்டுவந்து விளக்கமாக சொன்னார். பெரும்பாலான கருத்துக்கள் சுரேஷ்கண்ணனின் இந்த விமர்சனத்தையொட்டியோ, அதை மேற்கோள் காட்டியோதான் இருந்தது. ஒரு கடை நிலை சினிமா ரசிகை இடத்திலிருந்து தான் ரசித்த இடங்களை, ரசித்த பாத்திரங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு வெளி ரங்கராஜன். ( தனிப்பட்ட முறையில் மற்ற இருவரையும் விட ரங்கராஜனின் விமர்சனம் அல்லது கருத்து கொஞ்சம் கூர்மையாக இருந்ததாக கருதினேன் ) மூவர் பேசியதின் ஒரே சாராம்சமாக தொகுத்துச் சொன்னால் இப்படி வரும்.

“ ஆரண்யகாண்டம் குறிப்பிடத்தகுந்த முதல்-வகை முயற்சி.  நிறைய லாஜிக் ஓட்டைகள். சுப்பு இறுதிக்காட்சியில் மரணமடையாமல் தப்பித்தது வரவேற்கத்தகுந்த வித்தியாசம். ” இது போக சப்பை, சுப்பு, ஜமீந்தார் மற்றும் சிறுவனின் பாத்திரப்படைப்பு.

o

கலந்துரையாடல் என்ற அர்த்ததில் வந்தவர்களைவிட க்லந்துரையாடலைக் கவனிக்க வந்தவர்கள்தான் அதிகம் போன்ற ஒரு உணர்வு எழுந்தது. சுமார் 50-60 நபர்கள் வந்திருக்கலாம். அதில் குறிப்பிட்ட 5-6 பேர் தொடர்ந்து கேள்விகள் கேட்க அதற்கு இயக்குனர் குமாரராஜா பதில் சொல்லிக்கொண்டிருந்தார். குமாரராஜாவின் பதில்களைப்பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயமாக நான் கருதுவது, அவர் பதில்களும், ப்டத்தைப்போலவே எதிர்பபாராத முடிவுகளை விட்டுச்செல்வதாகத் தோன்றியது.  நண்பர்கள், குறிப்பிட்ட காட்சியை அதீத கவனத்துடன், “ இப்படி ஒரு காட்சி இருக்கிறது. இதன் மூலம் என்ன சொல்லவருகிறீர்கள் அ எதைக்குறிக்க இந்த காட்சி வைத்தீர்கள்” என கூர்மையான கேள்விகள் வைக்கப்படும்போதெல்லாம் குமாரராஜா “ எதோ எனக்கு அந்த இடத்தில் அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனவே வைத்தேன். பெரிதாய் எந்த உள் நோக்கமும் இல்லை என பலூனை உடைக்கிறார். சில கேள்விகள் “ இந்தக் காட்சி தேவையேயில்லையே ரகமான எளிய கேள்விகளை வைக்கும்போது “குறிப்பிட்ட காட்சி எப்படி படத்தின் போக்கை மாற்றுகிறது அல்லது அதன் குறியீட்டு அர்த்தம் என்ன என வித்தியாச கோணங்களை முன்வைக்கிறார். படம் பார்க்கும்போது சீரியஸ் காட்சி நகைச்சுவையாகவும்,  நகைச்சுவை காட்சி சீரியஸாகவும் முடியும் உத்தி இந்த இடத்தின் நினைவுக்கு வந்தது.

பெரும்பாலானவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை நண்பர் விஜயமகேந்திரனே தொகுத்து வைத்திருந்து, வரிசையாக கேட்டது நிகழ்ச்சியை கொஞ்சம் சரியான பாதையில் கொண்டு சென்றதாகத்தோன்றியது. இருந்தாலும் “ சிங்கப்பெருமாளின் ஆடையில்லாத காட்சி எதற்காக, விருதுவிழாக்களுக்குப்போகும் எல்லாத் திரைப்படங்களிலும் ஒரு ஆடையில்லாத காட்சி இருப்பதைப்போலவா” போன்ற அபத்த கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

o

யாரைப்பார்த்து இன்ஸ்பையர் ஆனீர்கள்? அடுத்த படம் என்ன? இந்த படத்தின் காட்சிகளை மாற்றவேண்டும் என ஆசைப்பட்டீர்களா போன்ற வழக்கமான கேள்விகள் கொஞ்சம் சலிப்பூட்டின. அவற்றையும் சமாளித்து, பொறுமையாக நேர்மையாக குமாராராஜா பதிலளித்தவிதம் அருமை. அதிலும், ‘புரியாத காட்சிகள் வைப்பது அதைப்பார்ப்பதற்காவது இரண்டாவது முறை தியேட்டர்க்கு வருவீர்கள் தானே” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னது நச்.

o

புதிய முயற்சிகளுக்கான வேட்கைகளுடன் படைப்பாளி எல்லா காலகட்டத்திலும் தயாராகத்தான் இருக்கிறான். அதற்கான வரவேற்பும் அது மக்களிடையே கிளப்பும் விவாதங்களும் மட்டுமே அந்த முயற்சிகளை நோக்கிய பயணத்தை நோக்கி படைப்பாளியைச் செலுத்துகிறது. என்னைப்போன்ற புதியவர்களுக்கு படைப்பைப்பற்றிய புதிய பரிணாமங்களைக் காட்டுகிறது. இப்படி ஒரு நிகழ்வை முன்னின்று செலுத்தியதற்காக நன்றிகள் வினாயகமுருகன், விஜயமகேந்திரன்.

o

புகைப்படங்கள் உதவி : http://www.facebook.com/media/set/?set=a.1415059312053.40629.1699704534

குறிப்புகள் எதுவுமின்றி நினைவிலிருந்து எழுதியது. தகவல் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன்

2 பின்னூட்டங்கள்

சில வருடங்களாக கவிதைகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்குமுன்பு எட்டிப்பார்த்தவை எழுதிப்பார்த்தவை எல்லாம் கவிதை என்ற வகைக்குள்ளேயே வராத, அல்லது கவிதைப்பாடசாலையின் மழலைப்பாடங்களான காதல் கிறுக்கல்கள் மட்டுமே. இந்த குறுகிய வாசிப்பிற்குள்ளேயே கவிதைத்தொகுப்புகள் ஆயாசம் கொள்ளச் செய்பவைகளாக, எரிச்சலூட்டுபவையாக பொழுதுபோக்காக, புன்னகைக்கவைப்பவையாக விதவிதமான பரிமாணங்களைப் பெற்றுவிட்டன. இருந்தாலும் இன்னும் சிப்பி பொறுக்கும் சிறுவனாக புத்தகக் கடைகளுக்குள் புதிய கவிதைத்தொகுப்புகளை ஆர்வத்துடன் எடுத்து படித்துப்பார்க்கிறேன். எங்கிருந்தாவது ஒரு அதிசய விதை ஒரு மரத்தை எனக்குள் விதைத்துப்போகாதா என.

2010ன் ஆரம்ப மாதங்களில் எதோ ஒரு நாளில்தான் நேசமித்ரன் என்ற பெயர் முதல் அறிமுகம் எனக்கு. புரியாத கவிதைகள் பற்றிய  நண்பர்களின் பேச்சில் சட்டென்று மேலெழுந்தது இந்தப்பெயர். அன்றிலிருந்து இன்றுவரை நேசமித்ரன் கிறுக்கு என்னைப்பிடித்தாட்கொண்டிருக்கிறது. அந்த ஆர்வத்தில் 34 வது புத்தகக்காட்சிக்கு நேரே போனது உயிர்மை அரங்கிற்கு. கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் இன்னும் வெளிவரவில்லை என்ற பதிலைச் சுமந்து கொண்டுதான் அந்த நாளில் அரங்கிற்குள் சுற்றினேன். என் முதல் தொகுப்பை அச்சில் பார்ப்பதுபோல், அந்த நாளில் தவறிவிட்டதுபோல் அத்தனை வருத்தம். அடுத்த வார இறுதியில் வெளிவந்துவிட்டது என தெரியும். உயிர்மை அரங்கில் மனுஷ்யபுத்ரனிடம் எனது சுய அறிமுகத்திற்குப்பின் சொன்னேன் ‘ நேசமித்ரனுக்காகத்தான் வந்தேன் ‘ ’ஓ! நேசன் வருவதாய்ச்சொன்னாரா?’ ‘இல்லை. அவருக்கு என்னைத் தெரியாது, அவர் புத்தகத்திற்காக வந்தேன்’ . பதிலாக வந்த மனுஷ்யபுத்ரனின் பார்வை  இன்றும் நினைவிருக்கிறது.

எந்தககவிதையையும் ’புரியவில்லை. அதனால் நிராகரிக்கிறேன்’ எனச் சொல்பவர்கள் மேல் ஒரு சின்ன மனவருத்தம் இன்றும் தோன்றுகிறது. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றுவீட்டீர்கள் என உங்களுக்குச் சொன்னது யார்? எல்லா அனுபவங்களையும் புரிதல் சார்ந்து எப்படி தராசில் வைப்பீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையை நீங்கள் கேட்டுப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் மணித்துளிகள் எடுத்துக்கொள்ளும்போது கவிதைக்கு ஒரு சிறு பங்கு உழைப்பைச் செலவழிக்காமல் புரிந்து கொள்ளலாம் என்ற சோம்பேறித்தன நம்பிக்கையை எதைவைத்து வளர்த்தீர்கள்.

நினைவிலிருக்கும் வரை, இத்தனை சிறிய கவிதைத்தொகுப்பை இத்தனை நாள்கள் படித்தது இந்தத் தொகுப்பிற்கு மட்டும்தான் என நினைக்கிறேன் , நேசமித்ரனின் உலகம் எப்போதும் காட்டு நெல்லிக்காயைப்போல உண்டு தீர்க்க நீண்ட நேரத்தையும், உழைப்பைத் தின்று வாழ்க்கையின் காரத்தைக் கண்ணில் பூசுவதாகத்தான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்தத் தொகுப்பும் அப்படியே.

ஸ்டெராயிடும் ஐபில்லும் அற்று அன்றைய நாள்
இனிதே முடிந்தது கணினித் திரைக்கு இருபுறமும்
இருந்த முகமற்ற கிகோலோவுக்கும் அவளுக்கும்
பிக்சல்கள் மற்றும் டெசிபல்கள் வழி

தொகுப்பிலேயே குறைந்த உழைப்பில் புரியும் கவிதை இதுதான் என நினைக்கிறேன். இதற்கே ஐந்து புதிய வார்த்தைகளையும் அதற்குப்பின்னான செயல்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஐபில், ஸ்டெராய்டு,கிகோலோ,பிக்சல்,டெசிபல், இதில் எதாவது ஒன்று புரியவில்லை என்றால் கவிதை மறுவாசிப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. //முகமற்ற கிகோலோ// வில் முதல் வார்த்தை இல்லாமல் வாசித்தால் ஒரு தளத்திலும், கிகாலோ இல்லாமல் வேறு தளத்திலும் இருக்கிறது.

என் ரசனையில் நேசமித்ரனின் கவியுலகம் ஒரு சிலந்திவலை. சிக்கித் தவிக்கலாம், மேலேறி மிதக்கலாம், ஒளி மின்னுவதை ரசிக்கலாம், அல்லது, ரசனையை மறந்து தள்ளி வைத்துவைத்துவிட்டுக்கூட போகலாம். ஒரு விடுகதை போல சொல்லும் வார்த்தைகளை சொல்லாத வார்த்தைகளுக்கான கைகாட்டியைப்போல் அணுகலாம். சொல்லாத வார்த்தைகள் மட்டுமே கவிதையாய் அடைவதால், விடுகதையை விடுவிக்கும் ஆர்வமும் நேரமும் இருப்பவர்களுக்கான , கவிதையை பொழுதுபோக்கின்றி கவிதையாய் ரசிப்பதாற்கான தேடலுக்கு எளிய கண்டடைதல்.

நேசமித்ரனிடம் வியக்கும் இன்னொரு தடம், ஒற்றைக்கவிதைக்குள் தனித்தனியாய் ஒளிந்திருக்கும் பிற கவிதைகள். உதாரணத்திற்கு இது.

நீரின் கண்

விழும் நிழலில் தன்முகம் பார்க்கும்
நீரின் கண்

பாம்பின் உடல் சித்திரத்தில் பிராம்மி
எழுத்தின் சுழி

துரோகம் நெகிழி
திமிங்கலத்தின் மார்புக்காம்பில்
சுரக்கிறது சாவு கலவாத காதல்

சிறகுதான் ஆனால் கனம் பெங்குவினுடையது

ஆகாசம் கூப்பமுடிவது வண்ணத்துப்பூச்சிக்கு மட்டும்

லெஸ்பியனின் கருமுட்டை தானத்தில்
கற்பு கதீட்டர் வழி

கவிதையின் ஒவ்வொரு பத்தியும் தனித்தனியே வாசித்துப்பாருங்கள். பிறகு சேர்த்து.   அல்லது முதல் மூன்று பத்திகள் மட்டும். அல்லது கடைசி மூன்று.  முதல் பத்தியும் கடைசி பத்தியும். எல்லாவித சாத்தியஙக்ளில் ஒவ்வொரு வித அனுபவம் தரும் கவிதை. இது கவிதை. இன்னும் சொல்லப்போனால், நேசமித்ரன் இதை உத்தேசித்து எழுதினாரா, இதுதான் இதன் அர்த்தமா, இதுதான் உண்மையான பார்வையா, எதுவும் தேவையில்லை. உணமையில்  வாசிப்பவன்தானே கவிதையை உயிருடன் எழுதுகிறான். கடைசி இரு வரியின் முழுவீச்சை அறிய, கதீட்டர் பற்றி கூகுள் செய்து பாருங்கள். பிரமிக்கிறேன் நேசன்.

நெருடிய விஷயங்கள் எனப் பார்த்தால், முதலில் மொழி. மொத்த தொகுப்பிலும் தேடினாலும் ஆங்கில வார்த்தைகள் இல்லாத கவிதைகள் மிகக் குறைவாகவே கிடைக்கும் எனத் தோன்றுகிறது. பிக்சல், கத்தீட்டர், கார்டூன், கிராபிக்ஸ் , ஆங்கிலச்சொற்களின் தமிழ் உச்சரிப்பு நடை கொஞ்சம் தடுமாற்றம் செய்கிறது.  நாகம் பாம்பு சர்ப்பம் அரவம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு டிராகன் கவிதைகளுக்குள் தலையாட்டுவது, கரடுமுரடான காட்சிப்படிமத்துக்கு மட்டுமெனில் வேட்கை கொண்ட வாசகனை தேர்ந்த கவனத்துடன் குழப்பி விலக்குகிறீர்கள் எனக் குற்றம் சாட்டுவேன்.

அடுத்தது பன்முக வரிகள். ‘ நீரின் கண்’ கவிதையைப்போல ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு குறுங்கவிதை தொகுப்பு ஒரு முழுமைச் சித்திரம் என பிரமித்து நின்றாலும் சில கவிதைகளில் குறுங்கவிதைகள் குறுகி முடிந்துவிடுகின்றன. முழுமையென ஒற்றைத் தலைப்பின் கீழ் நிற்பது வெவ்வேறு வண்டிகளின் பாகங்கள் பொருத்திய இருசக்கரவாகனத்தைப்போல தொடர்பற்றுத் தெரிகிறது.

கவிதைத் தொகுப்புகளை வெவ்வேறுவிதமாய்க்கொள்ளலாம். விதை , தளிர், செடி, மரம் , விருட்சம், போன்சாய் மரம், என் ரசனையில் ”கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்”,  புதிய விருட்சங்களைத் தாங்கி நிற்கும் விதை. அழுத்தமான கைகுலுக்கல் நேசமித்ரன்.

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன்
உயிர்மை பதிப்பகம் – ரூ.50

காதலென்னும் தூங்கும் மிருகம் – 4

பின்னூட்டமொன்றை இடுக

சும்மா ஒரு உளவியல் ரீதியிலான ஒரு முடிதேடும் படலம். ஆண்பார்வையில் எழுதியிருக்கிறேன். திணை பால் மாற்றிப்படித்தாலும் பொருந்தும்.

o

சசி
சஸி
ஸஸி
ஸசி
எப்படிச்சொன்னாலும்
நீ என்
ஸசி
ஸஸி
சஸி
சசி
-கலாப்பிரியா

o

காதல். மொழிகளை மீறிய மொழி. மனிதர்களை மீறிய மனிதம். மெளனங்களை மீறிய மெளனம். சொற்களையெல்லாம் ஒற்றைத்தாவலில் கடக்கும் ஒரு சொல். கனவுகளில் அசாத்தியங்களைத் தொடும் ஒரு கனவு. நிஜங்களிலேயே நம்ப முடியாத நிஜம். பொய்களில் அடங்காத பொய்.  வலிகளையெல்லாம் மீறிய வலி. இன்னதென வரையறுக்கமுடியாது எதோ ஒரு இன்னது.

இதுவரை எத்தனை பேர் எழுதியிருப்பார்கள் காதலைபற்றி. எத்தனை கதைகள். எத்தனை கவிதைகள். எத்தனை குறும்படங்கள் எத்தனை திரைப்படங்கள். எத்தனை நாவல்கள். பதின்ம வயதில் காதலியைத் தேடிக்கொள்ளச்சொல்லி எவன் சொல்லிக்கொடுக்கிறான். கவிதை எழுதுபவனுக்கு பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் எந்த சட்டத்தில் இருக்கிறது. ஒரு காதல் இருவருக்கிடையில் தொடங்கும் நிமிடத்தை எவன் எப்படி குறித்துவைப்பது.. இவர்கள் காதல் கொள்வார்கள் என எப்போது நண்பர்களால் முடிவு செய்யமுடியும் யார் மீது எனக்கு காதல் வரும் வரவேண்டுமென நான் எந்த நிமிடத்தில் முடிவு செய்கிறேன். எதற்காக முருகன்கள் கையில் தாலியைக் கட்டிக்கொண்டு சுற்றவேண்டும்? எதற்காக கார்த்திக் மூன்று வருடம் பைத்தியக்காரனைப்போல் சுற்றிவிட்டு ஜெஸ்ஸி பெயரில் திரைப்படம் எடுக்கிறான்.

காதல் குறித்து சொல்லப்பட்ட கதைகளை கொஞ்சம் கலைத்து விளையாடலாம். முதன்முதலில் பதின்ம வயதில் தோன்றுகிறது இது முதல் கதை. உண்மையில் அந்த ஈர்ப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதியிலேயே இருக்கிறது, தன் ஈர்ப்பிற்கு காதலென ஒருவன் பெயரிடுவதுதான் பதின்மத்தில் ந்டக்கிறது இல்லையா?. தன் எதிர்பால் ஈர்ப்பிற்கு காதல் எனப் பெயரிடுகிறான். காதல் பாடல்கள் எனச் சொல்லப்பட்டவற்றை கேசட்டுகளில் , குறுவட்டுகளில்,ஐபாட் கருவிகளில் நிறைத்துக்கொள்கிறான். அதைக்கேட்டால் அவள் நினைவு வருவதாய் உணர்கிறான். இத்தனை நாளாய் கேட்கும்போது வராத உணர்வு, அவள்மீதான ஈர்ப்பு காதல் எனப் பெயரிடப்பட்டதும்தான் வருகிறது என்பது நகைச்சுவையில்லையா? . உண்மையில் அவள் நினைப்பு வருவதான இவனது நம்பிக்கைக்குத் தகுந்தே மனம் செயல்படுகிறது. மனம் என்ற கற்பிதமே பொய்தான். மூளையின் செல்களுக்குள் நடக்கும் விளையாட்டுதான் காலில் வலிப்பதும், கண்ணில் ஈரம் கசிவதும் மனதில் காதல் பிறப்பதும்.

ஆதியிலிருந்து பரிணாம வளர்ச்சிக்காக காமம் கொள்ளச் செய்த ஹார்மோன்கள் வேலை செய்யத்தொடங்கும்போது , நண்பர்கள் சினிமா புத்தகங்களின் கற்பிதங்களின் படி அதைக் காதலெனத் தீவிரமாக நம்புகிறான். எந்தப் பெற்றோர் காதல் இந்த வயதில் வரும் என அவனுக்கு போதித்தார்கள்? எந்தப்புத்தகம் காதல் என்பது இதுதான் என வரையறுத்திருக்கிறது? வரையறுக்க முடியும். எழுபதுகளில் தீவிர சண்டையிலிருக்கும் ஆணும் பெண்ணும் காதலர்கள். எண்பதுகளில் தற்செயலாய் மோதிக்கொண்டு புத்தகங்களைத் தவற விட்டவர்க்ள் காதலர்கள். தொண்ணூறுகளில் தற்செயலாய்ச் சந்தித்து கடந்து போகும்போது திரும்பிப்பார்த்த இருவர் காதலர்க்ள். இரண்டாயிரத்து வருடங்களில், நீண்ட கால குடும்ப நண்பர்கள். இரண்டாயிரத்துப் பத்துகளில் முதல் பார்வையிலேயே பிடித்துப்போய் பின்னால் சுற்றி முகவரி கண்டுபிடித்து முதல் வார்த்தையே ஐயம் கிரேஸி அபவுட் யூ வாகத்தான் இருக்க வேண்டும், அப்படி ஆரம்பிக்காமல் நண்பர்களோ உறவுமுறையிலோ நீண்ட கால பழக்கம் இருப்பவர்களோ காதலைப்பற்றி பேசத் தகுதியில்லாதவர்கள். முதல் பார்வையில் அந்த கிரேசியை சொல்லாத ஆண்கள் தைரியம் இல்லாதவர்கள். உடனே ஒத்துக்கொண்ட பெண்கள் முட்டாள்கள். குறைந்தது இரண்டு வருடமாவது பின்னால் சுற்ற வைத்து பிறகு ஒத்துக்கொண்டு கடற்கரைச்சாலையில் இறுக அணைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறந்தே ஆக வேண்டும்.விபத்துகளில் இறந்தாலும் பரவாயில்லை,.

இந்த முடிவுகள் ஒருவன் மனதில் எதிலிருந்து வருகிறது.சினிமா, நட்பு வட்டம், வார மாத இதழ்கள். எல்லாவற்றுக்கும் மேலாக காதல் கவிதைகள் இடை உடை முத்தம் இறுக்க அணைத்தல் காமம் இருந்தால் அவை காதல் கவிதைகள் எனப் பெயர்பெறும். இலக்கியவாதிகள் குப்பை என்று ஒதுக்குவார்கள். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவது முட்டாள்தனம் என நம்புவர்கள் வார இதழ்களை மட்டும் படித்துவிட்டு சாமானியன் என்று ஒத்துக்கொண்டு இந்த்க் கவிதைகளைக்கொண்டாடுவார்கள். பெண்கள் அருமை சொல்வார்கள், ஆண்கள் முதல் வேலையாக வலைப்பூ ஆரம்பித்து கவிதைகள் எழுதத்தொடங்குவார்கள். என் காதல் என் காதலி என் காதலிக்கு பிடித்த  நிறம் என எதையாவது உண்மைபோலவே எழுதுவார்கள். நம்பித்தான் ஆகவேண்டும். நமக்கும் எவள் மீதாவது பாலின ஈர்ப்பு வந்தால் வலைப்பூ ஆரம்பித்தே ஆகவேண்டும் . அல்லது நான் காதலன் இல்லை. பத்து பதிவு போட்டால் கவிஞன் என பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொள்ளலாம், நூறு பதிவு போட்டுவிட்டால் தொகுப்பு கொண்டு வந்துவிடலாம், பத்து தொகுப்பு வந்தால் சினிமா சீரியல் பாடலாசிரியர். (ஒரு அரசியல் வாதிக்கு ஜால்ரா போட்டால் கதாநாயகனாக்கக் கூட ஆகலாம்) இத்தனை நன்மைகள் இருக்கையில் லவ் பண்ணுங்க சார். லைப் நல்லா இருக்கும்.

சரி காமம் மட்டும்தான் காதலா? இல்லை. இல்லவே இல்லை. இன்னொரு விஷயம் இருக்கிறது உள்ளே. தெய்வீகக்காதல். காலுடைந்தவளைத் தூக்கிக் சுமக்கும் காதல் கணவனுக்கும், குடிக்காரனை சகித்துக்கொள்ளூம் மனைவிக்கும் மலைமீதிருந்து வீழ்பவர்களுக்குள்ளும் இருக்கும் எல்லார்க்கும் தெரிந்த தெய்வீகக் காதல். கர்வம். நான் எனும் செருக்கு, நான் தேர்ந்தெடுத்த பெண் என்ற திமிர். நான் தேர்வு செய்த பெண் என்னை ஒத்துக்கொள்ளும்போது நான் வெற்றியாளனாகிறேன். என் வெற்றிக்கு உதவியவளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அவளுக்காய் கவிதைகள் கதைகள். செத்தாலும் அவள் போட்டாவை எல்லார்க்கும் தெரியும் நடுக்கூடத்தில் மாட்டி வைத்து வருபவர் போவோருக்கெல்லாம் கண்ணீருடன் நாங்க எப்படி வாழ்ந்தோம் தெரியுமா சார் என கண்ணீர் மல்க கதைசொல்லுவேன். கால் உடைந்து கிடந்தாலும் தூக்கிச் சுமப்பேன். நான். நான் வெற்றியாளன். நான் நல்லவன். நான் தெய்வீகக்காதலன். நான் யோக்கியன். நான். நான். நான்.

சரி.. இதே கதையைக் கொஞ்சம் திருப்பிப்போடுவோம். அவள் என்னை மறுத்துவிட்டாள். நான் தோற்றுவிட்டேன். இல்லை. தோற்கடிக்கப்பட்டேன். அவள் என்னைத் தோற்கடித்தவள். என்ன செய்யலாம்? இவனுக்கும் அதே அஸ்திரம், எழுது காதல் தோல்வி கவிதைகள். தாடி வளர். தண்ணியடி. தம்மடி. என்னென்ன கெட்ட பழக்கங்கள் உண்டோ எத்தனை பழக்கங்கள் மீது உனக்கு ரகசிய ஆசையுண்டோ அத்தனையும் தீர்த்துக்கொள். கேட்டால் எளிதாக விளக்கிவிடலாம். காதல் தோல்வி. அவளை மறக்க முடியவில்லை. இதெல்லாம் செய்வதால் அவளை கொஞ்ச கொஞ்சமாயாவது மறந்துவிட்டாயா? இல்லை.. இன்னும் அதிகமாய் நினைக்கிறேன் . இன்னும் அதிகமாய் தண்ணியடி. காரணம் வேண்டுமே நம் ரகசிய ஆசைகளுக்கு, அடிப்பதையும் அடித்துவிட்டு ஊரெல்லாம் சொல், அவள் இருந்தால் அப்படி பார்த்துக்கொள்வேன்.. இப்படி பார்த்துக்கொள்வேன். அவள் நண்பர்களிடத்தில் புலம்பு. அவள் நண்பர்களுக்குத் தெரியுமிடத்தில் பைத்தியக்காரனைப்போல் திரி. அவள் நண்பர்கள் அவளிடம் ’அவன் உனக்காய் ஓடாய்த் தேய்கிறான்’ எனச் சொல்வார்கள். சொல்லட்டும். அவள் வருந்துவாள். வருந்தட்டும். கண்ணீர்விடலாம். விடட்டும். அதுதானே என் கர்வ மிருகத்தின் தீனி. என்னைத் தோற்கடித்தவள் என் பொருட்டு கண்ணீர் சிந்தியே ஆகவேண்டும்.

கண்ணீர் சிந்தவில்லையென்றால்? எடு தட்டச்சை. அடி கவிதையை. கல் நெஞ்சக்காரி. இரும்புத்திரை மனது. பொய். பெண்கள் பேய்கள். பெண்ணென்றொரு மாயப்பிசாசு.

பதின்மத்தில் ஆரம்பித்து இருபதில் முடிவு செய்து இருபத்தைந்தில் எல்லாவற்றிலிருந்தும் வெளியில் வந்து திருமணம் செய்து கொள். சிகரெட்டைக் குறை. சரக்கு ஒரு சமூகவியல் அடையாளமாகட்டும். பழைய காதலியின் பெயரை குழந்தைக்கு வை. பணம் தேடும் பணியில் முடங்கு. காதலாவது கத்திரிக்காயாவது. மகளோ மகனோ காதல் செய்தால் கழுத்திலேயே மிதி.

o

கள்ளி – வாமுகோமு

3 பின்னூட்டங்கள்

மொதவாட்டியா சுப்ரபாரதிமணியந்தான் ‘ நாவல் ஒண்ணு எழுதிப்பாரேன் கோமுன்னு கால் நட்டாப்ல. இதெங்க்கீங் நம்புளுக்கு ஆவுற சமாச்சாரங்களா சொல்லுனு ஒரு சொல்லுங்கிறாங்க, ஆழிஉலகுன்றாங்க, ஓரமா நகத்தக் கொறிச்சினே நின்னு பாத்துனே இருக்கிற பொழப்பு நமக்கு போதுங்காட்டி ப்பிடி நினைக்ககூடாது கோமு, பத்துப்பன்னெண்டு சிறுகதைகள குட்டனாச் சேத்தி நாவலுன்ற வேண்டீதுதான். இப்பதான் எப்படி வேணாலும் எழுதலாமேன்னு சொல்லாங்காட்டி, சரித்தான்னு மனசுல வெச்சுக்கிட்டேன்.

– வாமுகோமு முன்னுரையிலிருந்து.

கொங்குத்தமிழ் மீதான ஈர்ப்புதான் வாமுகோமுவின் எழுத்துக்களை என்னைத் துரத்தச்செய்கிறது எனத் தோன்றுகிறது. நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்து திடீரென மேலெழுவதைப்போல்தான் காமம் சார்ந்த எழுத்துகளை நோக்கி ஈர்க்கிறது. ஒளித்துவைத்து படிக்கப்பட்ட கெட்டபுத்தகங்களில் தொடங்கிய ஈர்ப்பு இது. அதே ஆர்வத்தில் சில வார்த்தைகளைப்பார்த்துவிட்டு எழுத்துகளைத் துரத்தத் தொடங்கியவன்  நிற்கும் இடம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஜி. நாகராஜன் அல்லது சாரு நிவேதிதா வழியாக வந்த பாதை இது. தனக்கான இடத்தை தானே தேர்ந்தெடுத்தோ வாசகர்களின் ஆதரவைக்கொண்டே நிலை நிறுத்திக்கொள்ளும் ஒரு எழுத்தாளன் பிறகுதான் தான் சொல்ல விரும்பிய சொல்லித்தீரவேண்டிய விஷயங்களைச் சொல்லத் தொடங்குகிறான். சிறுகதைகளின் ஊடே தன் பிம்பத்தைச் சரியாக செதுக்கிக் கொண்ட வாமுகோமுவின் முதல் நாவலாக வந்திருக்கும் கள்ளி உண்மையிலேயே நாவலா என்பதில் சிறிது ஐயப்பாடு எழவே செய்கிறது.

குறிப்பிட்ட வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளில் எழும் முதல் தடுமாற்றம் அதன் மொழி. வட்டாரவழக்கை முதல் முறையாகச் சந்திக்கும் ஒருவனுக்கு வார்த்தைகள் பிடிபடுவதில்லை. வரிவரியாய் திரும்பத்திரும்ப வாசித்து அதனுடனான உறவை வளர்த்தெடுத்து, புரிந்து பின் சாரத்தை நோக்கிப்பயணப்பட படைப்பு சில நூறு பக்கங்களைக்கேட்கிறது. மொத்ததொகுப்பும் அதற்குள் முடிந்துவிட்டால் என்ன செய்வது. வாமுகோமுவிடம் குறிப்பிட விரும்பும் முக்கிய புள்ளி இங்குதான் நிற்கிறது. ஒரு வரி கூட புரியாமலும் போகவில்லை. வட்டார மொழியை விட்டு விலகியும் போகவில்லை.

மல்லி என்ற மாதாரியின் மாலையிலிருந்து தொடங்குகிறது நாவல். கோவைப்பழங்களை அதக்கிக்கொள்ளும் போது எச்சில் ஊறுகிறது. அவன் நினைவுகளிலேயே அவன் காலை, தொழில் முதலாளி என தடதடவென புதியபுதிய பாத்திரங்கள் நிறைகிறார்கள். நாவெலெங்கும் எத்தனை விதவித மனிதர்கள். பண்ணைக்காரர்களை பண்ணையார்கள் மேய்க்கும் ஒரு சிறு கிராமத்தின் அசல் வாசனை அத்தனை தெளிவாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கன்னாபின்னா நவீனத்துவக்காரர்களுக்காகவோ என்னவோ ஒரு கள்ளிக்கு ஒருத்தன் நாயகன் வீதம் பத்து பாகமும் பத்து கள்ளியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கள்ளிக்கும் ஒவ்வொரு நாயகன் மேலெழுகிறான். பிற நாயகர்கள் துணைபாத்திரமாக பின்புலத்தில் அலைகிறார்கள். ஒரு நாயகன் இன்னொரு நாயகனிடம் தோற்றுப்போகிறான். எல்லாரும் நாயகனாவும் எல்லாரும் வில்லனாகவும் அலைவதுதான் வாழ்க்கைச் சினிமாவின் காட்சிகள் அல்லவா.

நாவலை முடித்தபின்னரும் மனதில் நிற்கும் பாத்திரம் என்றால் சரக்கு வாத்தியார்தான். வெள்ளைவேட்டி சட்டையில் குடையுடன் சிறுவர்களை விரட்டித்திரியும் தமிழ்சினிமா தமிழ் நாவல் வாத்தியார்கள் போல் அல்லாமல், ஊர் திண்ணையில் வேட்டியில்லாமல் குடித்துவிட்டு உருளும் மாணவர்களையே சேக்காளிகளாக்கிக்கொண்டு ஊர்வம்பு பேசும் வாத்தியார் களத்திற்கு புதியவர்.
அவரை ஒழுங்காய் வீடு கொண்டுவர பணிக்கப்பட்டு தானும் குவாட்டரைச்சாய்த்துக்கொண்டு அவருடன் உருளும் மகன் பாத்திரம் பலதடவை பார்த்துச் சலித்த பழைய கிச்சுகிச்சு. இருந்தாலும் ரசிக்கிறோம். கொங்கு மொழியும் வாமுகோமுவும் காரணம்.

அழிந்து போன ரெக்கார்ட் டான்ஸ் கூட்டத்திலிந்து வந்தவள், கவுண்டரின் கண் அசைவுக்கு ஒத்துழைத்து ஆடைகளை கழட்டுமுன் கறாராக காசு வாங்கி முடியும் பண்ணையாள் பெண், கவுண்டர் மகன் ஆசைக்காக இருட்டில் பாறைமீது காமம் செய்யும் குடியானவள் , மாதாரியைக்காதலித்து அவன் பஞ்சாயத்தின் முன் அவமானப்படுத்தப்படும்போது தற்கொலை வரை முயன்று அவனைக்காப்பாற்ற பஞ்சாயத்திற்கே வரும் கவுண்டரின் மகள், செத்துப்போறதுக்கா பெத்துவச்சிருக்கேன். எங்கியோ நலலா இருந்தாச்சரி என மகளைக்கொண்டுவிடும் கவுண்டச்சி என கள்ளிகளில் விதவித பெண்கள் காமம் அல்லது காதலைச்சுற்றியே கட்டப்பட்டிருக்கிறார்கள். ஆண் மனதின் வக்கிரம் எனச் சாடுமளவு நேரடி அர்த்தம் தொனித்தாலும் ஊடாடியிருப்பது ஆணாதிக்கத்தின் வேர் என பொட்டில் அடித்துச் சொல்ல வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.

நாவல் முழுவதும் சாதீய பிம்பம் மிதிக்கப்படுகிறது. மாதாரியை மிதிக்கும் கவுண்டர் வெவ்வேறு ஊரில் வெவ்வேறு உயர்சாதி பண்ணைக்யார்களையே பிரதி நிதித்துவம் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது. கிராமாத்து உலகம் அத்தனைக்கண்கூடாகக் காணக்கிடைக்கிறாது. எலி வேட்டையாகட்டும், அறுப்புக்காலமாகட்டும் சினை ஆட்டைத் தேடிப்போய் நஞ்சு நீக்கி குட்டியை முத்தமிடுவதாகட்டும் என்ன இல்லை இந்தக் கிராமத்தில். கிராமத்தின் பேர் மட்டும் இல்லை. கோவைக்காரர்கள் அருகிலிருப்பதாய்ச் சொல்லப்படும் கிராமங்களைவைத்து மல்லியின் ஊரைக்கண்டுபிடிக்க முயலலாம்.

நாவலில்  நெருடும் ஒரே விஷயம், நாவல் நாவலாகக் சரியாகக் கட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. முன்னுரையிலேயே சொல்லி  கோடி காட்டியிருப்பதைப்போல ஒரு சிறுகதைத்தொகுப்புதான் என அங்கங்கே தோன்றுகிறது. எந்த எழுத்தாளரின் மொத்த சிறுகதைத்தொகுப்பை கிண்டினாலும் ஒரே பெயர்,குணம் தொழிலுடன் நாயகனைக்கொண்ட இரண்டு மூன்று கதைகளாவது கிடைக்கும். அப்படியே இந்த முதல் நாவலும் வாமுகோவின் இன்னொரு சிறுகதைத்தொகுப்புதானோ என எண்ணத்தோன்றுகிறது. பெயரில் கட்டுமானத்தில் என்ன இருக்கிறது. வாசிப்பில் நமக்குக்கிடைக்கவேண்டியது நமது நியாபக அடுக்குகளில் இல்லாத அல்லது ஒத்திருக்கும் ஒரு வாழ்க்கைதான் இல்லையா?

கள்ளி – வாமுகோமு – நாவல்
உயிர்மை பதிப்பகம் – ரூ120

சுகுணாவின் காலைப்பொழுது – மனோஜ்

2 பின்னூட்டங்கள்

சாருவின் தளத்திலிருந்த சுட்டி மூலம் மனோஜின் வெயில் வட்டம் சிறுகதைதான் மனோஜுடனான முதல் வாசிப்பு என நினைக்கிறேன். கடைசியாய் படித்த இரண்டு புத்தகங்களும் கவிதை (1 ,2) எனபதால் இன்று இந்தத் தொகுப்பு. மனோஜின் ”சுகுணாவின் காலைப்பொழுது”. 4 வருடங்கள் கழித்து ஒரு படைப்பாளன் தன் தொகுப்பை வெளியிடுகிறான் அதில் 12 படைப்புகள் மட்டுமே இருக்கிறது என்பதில் ஒரு ஆர்வம். தன்னளவிலான ஒப்பிட்டால் 4 வருடத்தின் ஆகச் சிறந்த 12 கதைகளாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கைதான் காரணம்.

இந்தக் கதைகளிலிருந்து மனோஜ் சிறுகதை வடிவத்தில் தன்னளவிலான ஒரு முடிவிற்கு வந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. எல்லாக் கதைகளிலும் ஒரு மர்ம முடிச்சு இருக்கிறது. முடிச்சைத் தேடுவதற்காவது பாதிவரையிலான கதையை படித்தாக வேண்டியிருக்கிறது. எல்லாக் கதைகளும் சரி பாதியாக பிரிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது. முதல் பாதி ஒரு வெகுஜன ரசனையை முன் வைக்கிறது. தொடர்ந்த வெகுஜன வாசகனை அதே நடையில் உள்ளே கூட்டி வந்து மையத்தில் திடுமென முடிச்சு தெரிகிறது. அதன்பிறகான வேகம் ஒரு அதிவிரைவுவிளையாட்டு ரயில் வேகத்தில் முடிச்சும் அவிழாமல் வேகமும் குறையாமல் விரைந்து செல்கிறது. சட்டென்று முடிச்சை அவிழ்த்து இவ்வளவுதான் என நெற்றிப்பொட்டில் அடிக்கிறது.

இந்த வழிமுறை இல்லாதது தொகுப்பிலேயே ஆயுதம் மட்டும்தான் என நினைக்கிறேன். ஆரம்பித்த கதையைவிட்டு எங்கேயோ போய் முடிக்கும் விளையாட்டுகளில்லாமல் சிலந்தி வலைப்பின்னல் அமைப்பில் ஒன்றோடொன்று இணைந்த மூன்று அல்லது நான்கு கதைகள் இதற்குள்ளேயே ஒளிந்திருக்கிறது. முதல் இரண்டு கதைகளில் ஆரம்பித்த வேகத்தில் படித்து முடித்தவன், மூன்றாவது இந்தக் கதையைப் படித்தவுடன் தடுமாறி கீழே வைத்துவிட்டேன். மனதில் இதயத்துடிப்பு ஏறிக்கொண்டே இருக்க மனுஷ்யபுத்ரன் வரிகளில் வருவது போல் ஒரு காபி குடித்தால் எல்லாம் சரியாகி விடும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதோ பார்த்த விதவித கதைகள் செய்திகள் கொலைகள் தலைசிதைந்த புகைப்படங்கள் காணொளிகள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

வெயில் வட்டம் ஏற்கனவே படித்ததுதான். கார்மேகத்தைப்பற்றி முதல் வரி தொகுப்பில் படிக்கும்போதே அழுக்கு மஞ்சள் பையை சுருட்டி அடிக்கும் அந்த வன்மம் நினைவுக்கு வந்தது. கார்மேகத்தினை யாராவது பள்ளிப்பிராயத்தில் பார்த்திருக்கிறீர்களா? அழுக்கு துணிப்பை. கிழிந்த ஆடை. ஏற்படுத்திக் கொண்ட தனிமை. சக நண்பர்களுடனான தாழ்வு மனப்பான்மை கொடுக்கும் போர்வைக் கோபம். அதன் இறுதி வரிகளை மிகவும் ரசித்தேன்.

செத்த் மிருகத்தின் திறந்த கண் மாதிரி கார்மேகத்தின் கண்கள் இப்போதும் என்னைப்பார்ப்பது போல அடித்துப்பிடித்து எழுவேன். சில்க் சட்டையோடு கடை முதலாளியாய் கற்பனை செய்து சமாதானம் கொள்வேன்.

அறியாமையின் குற்றங்கள் குறித்த உணர்ச்சிகள் எல்லாம் சரியாய் நடந்ததெனும் குருட்டு நம்பிக்கை சமரசம். அத்தனை நெருக்கமாக உணர்கிறேன் இந்தக் கதையுடன்

தேர்வுகள் சிறப்பானவை. தனிப்பட்ட முறையில் மனோஜிடம் ரசித்த முக்கிய விஷயம் பொறுமை. எழுதிக் குவிக்கலாம். எழுதுவதே எழுத்தின் ரகசியம். இருந்தாலும் 4 ஆண்டுகளில் 12 கதைகளை மட்டும் தொகுக்கும் ஒரு சீரிய சுய மதிப்பீடு அருமை. புத்தகக் காட்சியில் புனைவின் நிழல் வாங்குவதாய் முடிவு. பார்க்கலாம். அதுவும் இப்படியே ரசிக்க வைக்கிறதாவென.

இது என் ரசனை வரிசையில் டாப் 3. மற்ற கதைகளை புத்தகத்தில் படித்துக்கொள்ளுங்கள்.

புத்தகம் : சுகுணாவின் காலைபொழுது
பதிப்பகம் : உயிர்மை

வெயில் தின்ற மழை – நிலாரசிகன்

5 பின்னூட்டங்கள்

நிலாரசிகன். தொழில் நுட்பத்துறையில் இவருக்கிருக்கும் புகழ் பொறாமைகொள்ளச் செய்வது (இன்னொருவர் அருட்பெருங்கோ) எனது கவிதை ஆனந்தவிகடனில் வந்ததைப்பகிர்ந்தபோது அதிகம் எதிர்கொண்ட கேள்வி ”இன்னொரு நிலாரசிகன் ஆகிவிடுவீர்களோ?” தனிப்பட்ட முறையில் ஒரு அங்கீகாரமாகவே இதை கருதுகிறேன். நல்ல உழைப்பு நிலா.

முதல்முறை 2009ல் சாரு புத்தக வெளியீட்டுவிழாவில் சந்தித்தேன். 2010ல் நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’ வெளியீட்டுவிழாவில். இடைப்பட்ட காலங்களில் க்டந்துவந்த பாதையை மீள்பதிப்பு செய்கிறது வெயில் தின்ற மழை.

வெயில் தின்ற மழை ஒரு தனி உலகம். அங்கு முழுமையாக ஒரு இழப்பு படிந்திருக்கிறது. மென்சோகப்பாடல் ஒலிக்கும் ஒரு மழைப்பின்னிரவுதான் மொத்த தொகுப்பும். இரவும் மழையும் கண்ணீரும் திரும்பத்திரும்ப வந்து கொண்டே இருக்கிறது. இந்த உலகத்தில் புன்னகைப்பதற்கென்று எதுவுமில்லை. மனப்பாரங்களை அதிலிருந்து மீழும் வாதையினை பின்னப்பட்ட சொற்களால் பேசுகிறது வெயில் தின்ற மழை. சமர்ப்பணத்தில் கூட ஒரு பாரத்தை அழுத்தி தொகுப்பிற்கு தயார் செய்துவிடுகிறான் கவிஞன்.

மொத்தக் கவிதைகளிலும் கவனித்த ஒரு முக்கிய விஷயம், இதில் தன்னிலை மிகக்குறைவு. தொண்ணூறு சதக் கவிதைகளில் ஒரு ‘அவன்’ அல்லது ‘அவள்’ இருக்கிறார்கள். இந்த மூன்றாவது மனிதனை கவிஞன் என்றோ வாசிப்பவன் என்றோ கொள்ளலாம்.

உங்களுக்கான நிறம்
கரைந்துருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

தற்கால கவிதைகளில் அதிகம் கிடைக்கும் பதம் நான் என் உலகம் என் வெற்றுடல். ஒரு தேர்ந்த சிற்பியைப்போல நானையெல்லாம் நீங்களாக்கியிருக்கிறார் நிலா. இதில் ஒரு வேற்றுமை நிகழ்கிறது. கவிஞனைப்பார்க்கும் வாசகன் என்பது இல்லாமல் கவிஞனோடு சேர்ந்து இன்னொருவனை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு கொண்டுபோகிறது வார்த்தைகள். ரசித்தேன்.

‘எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.’

இந்த வரிகளில் ’எதிர்ப்புகளின்றி’ பதத்தை மிகவும் ரசித்தேன். வெட்டுண்ட மரம் என்பதின் கூரிய உணர்வை அழுத்தமாக்குகிறது எதிர்ப்புகளின்றி எனும் பதம். உங்களை ஒருவர் கீழே தள்ளும்போது தள்ளியவனை விட வேடிக்கைப்பார்ப்பவன் மேல் அதிக கோபம் வருமில்லையா அத்தகைய மன நிலை இது,

தொகுப்பிலேயே மிகப்பிடித்த கவிதை என இதைச்சொல்வேன்.

நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன

உரையாடல் முடியும்முன்பே
நின்று போனது அனைத்தும்

மெளன சுகத்துடன் சிரித்துக்கொண்டது
வெண்ணிலா.

மொத்த புத்தகத்திலும் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப படிக்கும் உணர்வை தவிர்க்க முடியவில்லை. பல கவிதைகளின் சாரம் இப்படி இருக்கிறது . ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சோகத்துடன் வருகிறார்கள். இறுதியில் ஒரு இயற்கை காட்சியுடன் முடிகிறது. இந்த வடிவமைப்பை பல கவிதைகளில் பார்த்தேன். இன்னொரு முரண்பாடு கவிதையில் சந்தித்தது அவற்றின் தலைப்புகள். எல்லாத் தலைப்புகளும் கவிதைகளின் முதல் வரியிலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது பத்து கவிதை தாண்டியதும் சலிப்பூட்ட ஆரம்பித்துவிடுகிறது. மொத்தத் தொகுப்பையும் படித்து முடித்தபின் ஒரு கவிதை கூட முழுமையாய் மனதில் நிற்கவில்லை. ( ”நான்கு சுவர்களுக்குள்/ சுற்றி சுற்றி வரும் /ஏதோ ஒரு பறவை /விட்டுச்சென்ற இறகு /நான்” விதிவிலக்கென்றாலும், உச்சங்கள் பிரமிளும் கல்யாண்ஜியும் ஏற்கனவே தொட்டுவிட்டதால் அடிபட்டுப்போகிறது)

அறிமுகப் பதிவில் சொல்லியது போல மென்பொருள் துறையில் கவிதை என்றால் நினைவுக்கு வரும் பெயர்கள் நிலாரசிகனும் அருட்பெருங்கோவும். பெரிய எதிர்ப்பார்ப்புடன் வாங்கிய தொகுப்பு ஏமாற்றத்தைக்கொடுத்தால் தொடர்ந்து வாசிப்பதையே அவர்கள் நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது நிலா. உங்களிடம் எங்கள் எதிர்ப்பார்ப்பு அதிகம். வெயில் தின்ற மழை நிலாரசிகனின் ரசிகர்களுக்கு சோளப்பொரி மட்டுமே.

Older Entries

%d bloggers like this: