உரைமொழிதல் – இறுதிகாண்டம்

பின்னூட்டமொன்றை இடுக

#11

சீண்டலில் நெரித்து
சிலிர்த்து வந்த சேவலை நீங்கள் பிடித்துவிட்டீர்கள்

தார்க்குச்சியினால் அல்ல
சாராயத்தினாலும் அல்ல
திறந்துவிடப்பட்ட வாடிவாசலின் வாசம்
அறிய ஓடிய காளையின் கொம்புதான்
உங்கள் கைகளில் இருப்பது

கூர்முனைகளின் ஆபத்துகளில்
சுவையறியாத உங்கள் கத்திகளை
ரசிக்கிறேன்

நாடகங்கள் போதும்
அடக்குவதின் ஆனந்தம் நிரந்தரமில்லை
அறுத்துவிடுங்கள்

அதற்காகத்தான் தன்னைக்கொடுத்தது
ஒரு மனம்.

o

#12

சிதறிய தலையை கனவில் கண்டபின்
வாகனத்தை முறுக்கிய ஒருவனுக்குத்தான்
தலைக்கவசத்தை பரிசளிக்க முயற்சி செய்தீர்கள்

அழிந்த உறுப்புகளைக் கண்டபின்
தன் விஷத்தைத் தொட்டவனை
உங்களால் காப்பாற்ற முடியாது

உங்கள்
முத்தங்களை
கண்ணீரை, நனிசொற்களை
மிச்சம் வைத்திருங்கள்

அவன் வருவான் ஒரு கையறு நிலையில்
அன்று நீங்கள்
தன்னகங்காரத்தைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்

நன்றி இதுவரை வந்ததற்கு.

உரைமொழிதல்

பின்னூட்டமொன்றை இடுக

#9

விலக்கப்படவேண்டிய ஒருவன்
என்று அஞ்சி ஓடும்
ஒவ்வொருவரையும் நிறுத்திக் கைபிடித்து
காதோரம் சொல்லவேண்டும்

நண்பா,
குரங்குகளின்
பசியாற்றும்படி அனுப்பப்பட விதைகளைச்
சுற்றியிருக்கும் ஒரு ஈரம்

நீ பார்க்கும் பழமல்ல.
0

#10

ஒற்றை முகமாய்
உள்ளிறங்கும் உன் அன்பை
சில சொற்களின் நியாபகம் கொண்டு அழிக்க வேண்டியிருக்கிறது

யாருக்கோவான பாவனையுடன்
புன்னகைத்துக் கடந்த நாட்களை
ஓட்டிப்பார்க்கிறேன்

பொம்மைக்கடையில் தன் குழந்தையைக் கண்டெடுக்கும்
சிறுமியின் கனவில்
ஆடையை நினைத்துக்கொள்வது

அத்தனை நிகழ்தகவுகளிலும் அடங்காத
பேருண்மை என
எப்பொழுது உணரப்போகிறீர்கள்?
o

உரைமொழிதல்

பின்னூட்டமொன்றை இடுக

#7

என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா?
ஒருபைத்தியக்காரனின் இருப்பு
எதனால் உங்களைப் பதட்டம் கொள்ளச் செய்கிறதென்று

கல்லால் உங்களை பயமுறுத்தாதபோதும்
ஆடைகளைக் கிழித்து குறிகளை
உங்களை நோக்கி நிமிர்த்தாத போதும்

தன் இடத்தை விட்டு உங்களை விரட்டாதபோதும்
உங்களைப்பார்த்து முகஞ்சுழிக்காத போதும்.

அவன் தன் மூட்டைக்காகிதங்களுடன் பேசிக்கொண்டிருந்தான்
கிழிந்த ஆடைகளை இழுத்துவிட்டு தொங்கும்
குறிகளை மறைக்கத்தான் விரும்பினான்

என்றாவது சிந்திதிருக்கிறீர்களா
அதே இடத்தில்
அதே நிலையில் இருக்கும்
பைத்தியக்காரியிடம் இரக்கமும்
பைத்தியக்காரனிடம் பயமும்
உங்களுக்கு ஏன் உருவாகிறது என்று?
0

#8

தூக்கிவீசப்படும் பைகளின் மறுமுனையில்
நின்ற அந்தக் குழந்தையை
இனி நீங்கள் பார்க்க முடியாது

சிறு அரவணைப்பின் வெம்மைச் சூட்டுக்காக
கள்ளக்காதல்களின் நன்மைகளைப்
பிரசங்கிக்கும் ஒருவனை
யார் புரிந்து கொள்வது

முலை உறிஞ்சிய நினைவுகளை
உதடுகளில் தேடும்போது
கழுத்தை இறுகப்பற்றும் ஒருவன்
உங்களுக்குத் தேவையில்லை

இவன் போகட்டும்
ஒரு போத்தலின் கடைசி மிடறுக்குத்தோதான
மீன் துண்டைத் தேடி
0

உரைமொழிதல்

பின்னூட்டமொன்றை இடுக

#5

இரக்கமற்ற இந்த பாழ் நிலத்தில்
அந்தக் கிழவி தன்
ஆகாரத்தில் ஒரு பாதியை
நாயுடன் பகிர்ந்து கொள்கிறாள்

அந்தச் சிறுமி
தன் தம்பியை இடுப்பிற்கும்
காலுக்கும் நடுவில்
இறுக்கி இழுத்துச் செல்கிறாள்

வரிசையில் முன்னால் நிற்கும்
குழந்தையின் மூக்குச்சளியை
தன் கைக்குட்டையில்
துடைக்கும் பெண் இருக்கும் அதே தெருவில்

நான் சாக்கடையில் விழும்பொழுது
ஒரு அமிர்தக்கலசம் பீரோவில் இருந்தது.
o

#6
நாடகங்கள் அற்ற புன்னகையை
அறிந்து கொள்ள முடியாத
முத்தத்தை வைத்திருக்கிறேன்

எந்தப்பறவையும் அறியாத
வானத்தை தன் மகளுக்குப் பொத்திவைத்திருக்கும்
தந்தையை இதுவரை நீங்கள்
கை காட்டிச் சிரித்ததில்லை

அன்புடையீர்,
மொழி ஒரு நாளும் தன்னைத்தானே தின்றுகொள்வதில்லை

கொலை ஒரு பூவைப்போலத்தான்
உதிரக்கூடும் ஒரு தந்தையின்
நாடகீயப் புன்னகையில்.

உரைமொழிதல்

பின்னூட்டமொன்றை இடுக

#3

கண்ணீர் துடைக்கும் விரல்களை விரும்பி
மொட்டை மாடியின் செம்மண் ஓடுகள்
மீது தன் சூட்டை அறியும் ஒருவன்
அவன் கடைசி மூச்சிற்கான
அரளி விதைகளை நினைத்துக்கொள்ளும்போது

முத்தங்களைத் தாங்கி வந்த
ஒரு குறுஞ்செய்தியை
அனுப்பியவளுக்காக

இன்னும் ஒரு ஜென்மத்தின்
ஒவ்வொரு மணித்துளியையையும்
தீயிலிட்டுப்பொசுக்குவதில்
தவறில்லை தானே?

#4

இன்று சில கவிதைகளை நான் எழுதக்கூடும்
வெள்ளைத்தாளில் நிரப்பும்
மசிகளின் வேகத்தில் நிதானமில்லை

சிலவருடங்களுப்பின் எடுத்ததால்
நடுக்கம் கொடுக்கும் இந்த
எழுதுகோல்களை
கைக்கெட்டும் தூரத்தில் வைத்தவன் எவன்?

நாம் ஒரு கடிகாரத்தை
பின்னோக்கித் திருப்ப முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்
என நீ அறியவில்லையே..

அதை அறிந்த யாரோ ஒருத்திக்காக
திருப்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது
இதை.
o

உரைமொழிதல் – 2

பின்னூட்டமொன்றை இடுக

உனக்காக
வடிவமைக்கப்பட்ட இந்த முத்தத்தை
யாருக்கு அனுப்பி வைப்பது

உன் சொற்களை எந்தக் கிணற்றில் ஆழ்த்துவது

கனவை வண்ணம் தீட்டுவதாய்
பாவித்துக்கொண்ட பாழ்மனதை எவரிடம் சொல்லி
மெழுகித் துடைப்பது

முழுதாய் எரிந்து கொண்டிருக்கும்
ஒரு சிதையை
வெளியிலிருந்து பார்க்கும்
வெட்டியான்களை எதுவும்
சொல்வதற்கில்லை

வெடித்து எழும் சில எலும்புகளை
உடைத்துச் சிதைக்குள் திருப்பி அனுப்பும்
உங்களுக்கும் நன்றி.

Womens Day – எங்கள் பையன்களை எங்களைப்போல் வளர்க்காதீர்கள்

2 பின்னூட்டங்கள்

சோ கால்ட் கூட்டுமனசாட்சியை நிருப்யா கொஞ்சம் அசைத்துப்பார்த்துவிட்டாள் இல்லையா? தண்டனைச் சட்டங்களின் படி, குழந்தை என வரையறுக்கப்பட்ட ஆணும், இந்த குடும்ப முறையில், காதலைப் பற்றி பேசக்கூட தடை இருக்கும், அவன் அண்ணனும் ஒரே கடப்பாரையைத்தான் தனியாக மாட்டிய பெண்ணிடம் உபயோகித்திருக்கிறார்கள் இல்லையா?

ஊடகங்களுக்கு எல்லாமே டி.ஆர்.பிக்கான தீனிமட்டுமே. எல்லா பாலியல் வன்முறை வழக்குகளும் தூசு தட்டப்பட்டன, இளம்பெண் தனியே இரவில் தன் காதலனுடன் சென்றால் இப்படியெல்லாம் நடப்பது சகஜம் தான் என மேதைகள் சொன்னார்கள். அதே மேதைகளின் ஆண்பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்தார்கள். இளம்பெண்ணுக்குப் பதிலாக, குழந்தைகளும் வயதான கிழவிகளும், வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வெளி வந்தன. இரவில் மட்டுமில்லை, நண்பகலில், மாலையில், அதிகாலையில் வன்முறை நிகழ்வுகள் இருந்தன. காதலனுடன் மட்டுமில்லை. அண்ணனுடன், தந்தையுடன், என எல்லா சக உறவுகளுடன் சென்ற போதும் இதே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என புட்டுப்புட்டு வைத்தன புள்ளிவிபரங்கள். அரைகுறை ஆடைகள் என்றார்கள். பள்ளிச் சீருடை அரைகுறை ஆடையில் வராது இல்லையா?

அரசிற்கு எல்லாமே ஓட்டுத் தந்திரம் மட்டுமே. நிருப்யா இறந்தவுடன், இனியொரு வன்முறை நிகழ்வைத் தவிர்க்க தடுக்க தண்டிக்க சட்டம் இயற்றுமுன்னர், முதல் வேலையாக கட்சி வாரியாக சில பல லட்சங்களைப் பெட்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனை முன்பு நின்றதைப்பார்த்தீர்களா? இனியொரு பெண்ணுக்கு இந்தக் கொடுமை நடக்காமல் தடுக்கவேண்டுமெனத்தானே நிருப்யா வேண்டியிருந்தாள்?

தூக்குத் தண்டனை, ரசாயன ஆண்மை நீக்கம் முதல், கருட புராணத்தின் படி மர்ம உறுப்பில் எலிகளை விட்டு கடிக்க வைக்கும் வரை எத்தனை தண்டனைகள் முன்மொழியபட்டன? மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் ஆணாதிக்கம் (நானும் ஒரு அடையாளம்தானே?) கால்களுக்கு நடுவில் இல்லை. மூளைக்குள் இருக்கிறது.

எதுவரை நிருப்யா பற்றி பேசிக்கொண்டிருந்தோம் நினைவிருக்கிறதா? வினோதினி ஊடகப் பார்வைக்கு வரும்வரை. பிறகு வித்யா என இன்னொரு மாணவி. இன்னும் ஊடகங்களும், அரச யந்திரமும், மற்ற ஆசிட் வழக்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அடுத்த விதத்தில், அடுத்த வன்முறை நிகழும் வரை, ஆசிட் மட்டுமே நினைவிலிருக்கும். சூர்யநெல்லி பெண் பற்றி படித்தீர்களா? 1996ல் மூணாறில் காணாமல் போன ஒரு தபால்காரர் மகள். 40 நாள்களுக்கு, போதையூட்டப்பட்டு ஆள் மாற்றி ஆள் அவளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி , கடைசியில் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியைக் கொண்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு வருடங்களில் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றம், இது பாலியல் வன்முறை இல்லையென்றும், பணத்துக்காக நடந்த பாலியல் வியாபாரம் என்றும் தீர்ப்பை மாற்றி, விடுதலையும், தண்டக்குறைப்பும் செய்து, குற்றவாளிகளை விடுதலை செய்தது. அதில் ஒருவர் எம்.பி. இன்னொருவர் சமீபத்தில், கேரள வணிக வரித்துறையில் அதிகாரியாகவும் வளர்ந்திருக்கிறார்கள். வினோதினி, வித்யா, சூர்யா நெல்லிப் பெண்ணெல்லாம் கூட்டு மனசாட்சியின் கண்களுக்கு கொண்டுவரப்படவில்லை இல்லையா?

மறுபடியும் சொல்கிறேன். எங்க‌ள் வ‌ன்முறை எங்க‌ள் கால்க‌ளுக்கு ந‌டுவில் இல்லை. மூளையில் இருக்கிற‌து. எல்லா குழந்தைகளுக்கான க‌ளிம‌ண் மூளைகளைப் பாண்ட‌மாக்கும் பெற்றோர், எங்க‌ளுக்கு ஆதிக்க‌த்தையும், உங்க‌ளுக்கு அடிமைத்த‌ன‌த்தையும் க‌ற்றுக்கொடுத்திருக்கிறார்க‌ள். எங்க‌ளைவிட‌ அதிக‌ம் ச‌ம்பாதிக்கும் பெண்ணை , எங்க‌ளைவிட‌ அதிக‌ம் புத்திசாலியான‌ பெண்ணை, எங்க‌ளைவிட‌ வ‌ய‌தில் அதிக‌மான‌ பெண்ணைக்கூட‌ எங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌முடியாது. தாய்வ‌ழிச் ச‌மூக‌த்தில் ஆண்களின் நிலை ஒரு ஜீனாக‌ த‌லைமுறை த‌லைமுறையாக‌க் க‌டத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒரு நடையில் எங்களைக் கடந்து செல்லும் பெண்கூட எங்கள் அகங்காரத்தை அசைத்துப் பார்த்துவிடுகிறாள். எங்களைப்போலவே விரும்பிய‌தை அணியும் பெண்க‌ள், எங்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பின்னிர‌வுக‌ளில் க‌ண்ணில் ப‌டும் பெண்க‌ள், எங்க‌ள் வ‌ன்முறைக்கு இல‌க்காக‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்ற‌ எண்ண‌ம் விதைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ளுக்கு உத‌விசெய்யாது. ந‌ட‌க்கும்வ‌ரை வேடிக்கை பார்த்து பின் , ப‌ண‌ம் கொடுத்து ஊரிலுள்ள‌ ம‌ற்றவ‌ர்க‌ளின் ஓட்டு வாங்க‌ முய‌லும். ஊட‌க‌ங்க‌ள் உதவி செய்யாது. டி.ஆர்.பி ரேட்டிங்க் கூட்டும் தார‌க‌ ம‌ந்திர‌மில்லையா? உங்க‌ளுக்கு ம‌ர‌ண‌மே நேர்ந்தாலும் சீரிய‌ விள‌ம்ப‌ர‌ இடைவேளைக‌ளில்தான் செய்திக‌ளே வ‌ரும்.

த‌ப்பிப் பிற‌ந்த‌, இன்றுவ‌ரை பெண்க‌ளை அடிமைப்ப‌டுத்தியதைக் குறித்த‌ குற்ற‌வுண‌ர்ச்சி கொண்ட‌ ஒரு சிறு குழு ஆண்க‌ளுக்குள்ளுள் உண்டு. ஆனால் அதுவும் உத‌வாது. ஒரே வ‌ழி இந்த‌ த‌லைமுறையிட‌ம் ஜாக்கிர‌தையாக‌ இருங்க‌ள். த‌ப்பிப் பிற‌ந்த‌ ஆண்க‌ளை க‌ண்ட‌றிய‌ க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். கணவன், சகோதரன், அப்பா, அண்ணனின் வார்த்தைக‌ளிலும் செய‌லிலும், நேர‌டியாக‌ ம‌றைமுக‌மாக‌ இருக்கும் விஷ‌ முட்க‌ளை அவ‌ர்க‌ள் முன்னால் எடுத்துச் சொல்லுங்க‌ள். உங்க‌ளிட‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல், பிற‌ பெண்க‌ளைப்ப‌ற்றிய‌ அவ‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ளையும் க‌வ‌னியுங்க‌ள். 6 ம‌ணிக்குள் வீட்டு வ‌ந்துருமா என‌ குடும்ப‌த்தின‌ர் சொன்னால், “அட‌டா இது அக்க‌றை” என நீங்கள் ஏற்றுக்கொண்டால், த‌ன் குடும்ப‌த்தின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட‌ ஒரு க‌ட்டுப்பாட்டை மீறும் பொதுவெளிப்பெண்ணுக்கு “அவ‌ நைட்டு வெளிய‌ சுத்துனா இப்ப‌டித்தான் ந‌ட‌க்கும், எங்க‌க்காவும் இருக்கா.. ஆறு ம‌ணிக்கு வீட்டு வ‌ ந்துருவா.. அவ‌ளுக்கு இதுவ‌ரை எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ர‌லியே” என‌ ஒரு வ‌ட்டார‌த்தையே அடுத்த‌ த‌லைமுறை குற்ற‌வாளிக‌ளாய் உருவாக்க‌ ஆண்க‌ள் த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.

ஒரே விஷ‌ய‌ம். உங்க‌ள் ஆண் குழ‌ந்தைக‌ளை எங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள். உங்க‌ள் பெண் குழ‌ந்தைக‌ளை உங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள்.

இதுவ‌ரை ஒரு சொல்லில், ஒரு பார்வையில், ஒரு நிக‌ழ்வில், என்னை மாற்றிய‌ ஒவ்வொரு பெண்ணுக்கும் ந‌ன்றி க‌ல‌ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக‌ள்‌

:)

1 பின்னூட்டம்

மரணத்தை எப்பொழுதும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டுமா என்ன? சீக்கிரம் மரணம் ஏற்படுவதைக்குறித்த ஒரு வரியை எழுதிவிட முடிவதில்லை. என்ன நடந்துவிட்டதென இவ்வளவு சோகமென அத்தனை ஆறுதல் வார்த்தைகளையும் அதன் அனைத்துப்பரிமாணங்களுடனும் நம் முன் திரையிட்டுக்காட்டிவிட்டுத்தான் ஓய்கிறார்கள். ஒரு காதல் கவிதைக்கு யார் அந்த பெண்/ஆண் என்ற உப்பு சப்பில்லாத கேள்வியும் கூடவே. இறந்து போகத் தூண்டும் சோகத்தையோ, வாழ்ந்து தீரப்பணிக்கும் அந்தக் காதலையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. அதன் விளைவுகள் குறித்த சிறுவரிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பொதுவில் எழுதும் ஒருவனை/ஒருத்தியை நட்பு வட்டத்தில் பெற்ற பெருமையுடன்.

0
நிகழ்வுகள் சோர்வூட்டும் போதெல்லாம் கொஞ்சம் மாற்றி விளையாடிப்பார்க்கலாம். ஆட்டம் இழுக்கையில் பாதியில் நிறுத்தி கலைத்துப்போடப்படும் சீட்டுக்கட்டைப்போல. இடது கையால் பல் துலக்குவதாக. கவிதைக்கு நடுவில் ஒரு கதை எழுதிப்பார்ப்பது போல. இரண்டு நாள் முள்கரண்டியில் தோசை பிய்த்து சாப்பிட முயல்வதைப்போல. பின்னூட்டப்பெட்டியை நான்கு பதிவுகளுக்கு மூடி வைப்பதைப்போல. ஒரு மாதம் முழுவதும் வாரவிடுமுறைகளில் வீடு தங்காமல் எங்காவது அலைவதைப்போல. வாசிப்பை நிறுத்திவிட்டு திரைப்படங்களைப் பார்த்து தீர்ப்பதைப்போல. மாற்றங்களுக்கான தேடலில் கண்டடைகிறோம் புதிய பறவைகளின் சிறகசைப்பை. தார் சாலை வெயிலில் இடந்திரும்பி கொஞ்சம் விலகக்கிடைக்கும் திடீர் கடலை. அருகிலிருக்கும் அதிகமாய்ப்பேசியிராத புதிய நெருங்கிய நண்பனை.

0
உலகின் பெரும் பின்ன நவீனத்துவ படைப்பு என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாறு. எதையும் எப்படியும் திரித்து அல்லது உடைத்து புரிந்து கொள்ளலாம். ஆயிரம் மனிதர்கள் அவரவர் புரிதல் படி கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சேர்த்து ஒரு பெரும் படைப்பாய் மிகச்சமீபத்தில் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டதையே வரலாறு குறித்த அறிதல்கள் நிரூபிக்கின்றன. ஈ என்பதின் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பான அர்த்தமும், சமகாலத்தின் அர்த்தமும் வெவ்வேறாக மாறிய நிலையில் வரலாற்றின் ஆழத்திலிருந்து புதுப்புரிதல் என்பது புதிதான ஒன்றை உருவாக்குவதென்பது வெறும் பிம்பமே. எதை நாம் அறிந்திருக்கிறோமோ , எதை நாம் விரும்புகிறோமோ அதையே ஏற்கனவே இருப்பதில் இருந்து பிரித்து எடுப்பதில் மட்டுமே கவனம் செல்கிறது. கொள்ளிக்கட்டையில் எந்தக்கட்டை தலை சொரியத் தோதென்பது அவரவர் பாடு. நமக்கென்ன வந்தது.

0

நாளையே உலகம் அழிவதான பாவனையுடன் தான் எல்லாம் நிகழ்கிறது. தள்ளிப்போடாமல் உடனடி நிகழ்த்துதலென்பது இன்றியமையாத வேலைகளுக்கு மட்டும் போதாதா என்ன? அல்லது நேரத்தின் போதாமை என்பதான பாவனைக்கு நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறார்களா. 15 நிமிட காணொளிகளின் காலத்தில் ஒரு திரைப்படத்தை அதன் இடைவேளைகளுடன் பார்க்கும் பொறுமை சுத்தமாயில்லை. இடைவேளைகளற்ற தரவிறக்கப்பட்ட திரைப்படங்களில் சில காட்சிகள் வழக்கமான நேரத்தைவிட வேகமாய் பின் தள்ளப்படுகின்றன. ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள் இல்லாதிருப்பதான மன பிம்பத்துடன் தாண்டிச் செல்லப்படுகிறது. ஒரு ரகசியத்தை உடைக்கும் நாளுக்கான காத்திருப்பு எரிச்சலூட்டுகிறது. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களுக்கு ஓடுவதான பாவனையில்தான் தவறவிடுகிறேன் இந்த நொடியின் ரகசியங்களை காதலை அன்பை அழகை. காலம் கடிகாரத்தின் பேட்டரிகளுக்கு காத்திராமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

காதெலென்னும் தூங்கும் மிருகம் – 2

பின்னூட்டமொன்றை இடுக

காதல் இருக்கே… அதை மாதிரி உலகத்துலையே காமெடியான விஷயம் எதுவுமே கிடையாது சார்.  சும்மா சொல்லல. நீங்க வேணும்னா காதலர்க்ள் இருக்கிற ஒரு ஹோட்டலையே கடையிலையோ கடற்கரையிலயோ போய் நின்னு பாருங்க. பக்கத்து பக்கத்துல உக்காந்திருப்பாங்க. ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருப்பாங்க. ஆர்டர் எடுக்கிற பையனையும் விரட்டிவிட்ருவாஙக. எதோ முதமுறையா அப்பதான் ஒருத்தர ஒருத்தர் பாக்குற மாதிரி பே ன்னு பாத்துட்டு இருப்பாங்க. எதாவது பேசுவாங்களான்னு பாத்தா அதுவும் கிடையாது. இவரு என்னடா பண்றதுன்னு தெரியாம சுத்திமுத்தி பாப்பாரு, அந்தப்பொண்ணு இவன் எங்கபாக்குறான்னு பின்னாடியே கண்ண உடும். எங்கயாவது அவன் பார்வை பட்ற எடத்துல ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சு… பையன் தொலைஞ்சான்னு அர்த்தம்

‘சரி அப்ப நான் கிளம்புறேன்’
‘ஏன் மா? ‘
‘அதான் உனக்கு நிறைய பொண்ணுங்க இருக்கிறாங்களே பாக்குறதுக்கு’
‘அப்டி இல்லைமா, சும்மா.. தற்செயலா.. ஆக்சுவலி…’
‘ நான் அவள மாதிரி இல்லைல?, தெரியுண்டா… கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.. அதுக்கு நான் இருக்கும்போதே இன்னொருத்திய பாப்பியா நீ?’
‘அய்யோ… அப்டியில்லாம் இல்ல செல்லம்..’
‘ஆமா வெல்லம்.. இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஆனா சும்மா சைட்டடிச்சுட்டே இருப்ப.. அத நாங்க பாத்துட்டு இருக்கணும்?”
‘ஏண்டி இப்ப இப்படில்லாம் பேசுற?’
‘ஆமாடா.. நீ என் பின்னாடி அலைஞ்சல்ல.. உடனே ஒத்துக்கிட்டேண்பாரு என்னைச் சொல்லணும்…’

எப்பவாது பொண்ணு அமைதியாகும்னு நினைக்கிறீங்க? ஹீம்ஹும்! அது போன வருஷம் அப்பா நகை செஞ்சதுல இருந்து .. முந்தின நாள் பொண்ணுபாத்துட்டு போனவன் வரைக்கும் எல்லாக்கதையையும் சொல்லிட்டு டபால்னு எந்திருச்சு ஆட்டோ புடுச்சு போய்டும், நம்மாளு ஓடுவான். சர்வர் புடுச்சிப்பான். (பில்லக் குடுத்துட்டு போ சார்) இவன் பில் செட்டில்பண்ணிட்டு வரதுக்குள்ள ஆட்டோ போய்டும்.  வெளிய வந்து எதாவது ஒரு டீகடையில டீ அடிச்சு தம் போட்டாதான் ( மால்ல அப்பதான் ரெட்புல் 80+80 பில் பே பண்ணியிருப்பான்) நம்ம பயலுக்கு கண்ணே தெரியும், சரி அவளுக்கு கால் பண்ணலாம்னு போன் எடுத்தா ‘ ஹனி 8 மிஸ்டு கால்ஸ்’. அப்டியே ஷாக் ஆகி, திருப்பி கூப்ட முயற்சி பண்ணா ‘ யுவர் பேலன்ஸ் இஸ் லோ ந்னு ஒரு பொண்ணு ( ஆணின் காத்லுக்கு இன்னொரு பெண் தான் எதிரி) சொல்லும். மறுபடியும் நம்மாளு ஓடுவான், ரீசார்ஜ் செண்டர் எதுவும் கண்ணுல படாது, மூச்சு வாங்க ஓடி ரீசார்ஜ் பண்ணிட்டு இருக்கும் போது மெசேஜ் மேல மெசேஜ் வரும் ‘பை!’ ‘ கெட் லாஸ்ட்’ டோண்ட் ஸ்பீக் டூ மீ’ ‘ஒரு ரிப்ளை பண்ணக்கூட டைம் இல்லாம சைட் அடிச்சுட்டு இருக்கீங்களாசார்?’ ’எங்க சார் இருக்கீங்க?’ ’வேர் ஆர் யூ டா’ ‘ ஆர் யூ ஓக்கே’

கடைசி மெசேஜ் பாத்ததும் கெத்தாயிடுவான் நம்மாளு, ஆகா பொண்ணு கூல் ஆயுடுச்சுடா சாமின்னு, மறுபடியும் ஒரு டீ, ஒரு தம்மு. முடிச்சிட்டு வெளிய வந்து (ரோட்டோர பிளாட்பாரத்துல நின்னுகிட்டு)

‘ஹல்லோவ்!’
‘என்ன சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு?’
‘இல்லப்பா.. எங்க இருக்க?’
‘இப்பதான் வீடு வந்து சேர்ந்தேன். எண்டரிங். ’ (பொண்ணு அதுக்குள்ள பால் சாப்டுட்டு டீவி போட்டுட்டு ரூம்ல செட்டில் ஆகியிருக்கும்)
‘ஹேய் ஏண்டி அப்டி திடுதிப்னு போய்ட்ட.. “
‘ஆமால்ல.. நான் மறந்தே போய்ட்டேன்… ஏண்டா அப்டி பண்ணே?”
(நம்மாளுக்கு குழப்பம் ஸ்டார்ட்டட்.  ஆமா நாம என்ன பண்ணோம்?)
‘இல்லமா, நான் தப்பா எதுவும் இல்ல.. சும்மாதான் பராக்கு பாத்தேன்.. அந்த பொண்ணு தற்செயலா கிராஸ் ஆச்சு’
‘எந்த பொண்ணு?’ (அடுத்த ட்டிராப்)
’அதாண்டி அந்த கிரீன் சுடி.. நீ கூட கோவப்பட்டு கிளம்பிட்டியே’
‘அவ கிரீன்சுடின்ற அளவுக்கு நியாபகம் இருக்கா உனக்கு?’
‘அய்யோ தெய்வமே மறுபடியும் முருங்கமரம் ஏறாத.. தயவு செஞ்சு…’
‘வேதாளம்ன்றியா என்ன? முன்னாடில்லாம், தேவதை தேவதைன்னு எத்த்தனை கவிதை எழுதுன.. இப்ப நான் ஒத்துகிட்டதும், வேதாளம் ஆகிட்டேன்ல?’
‘அய்யோ! அந்த அர்த்த்துல சொல்லல.. இப்ப சொல்லு, ஒரு நோட்டு புல்லா தேவதை கவிதை எழுதி கொண்டுவந்து தரேன்…’
’ஹாம்.. ஒன்னும் தேவையில்ல.. நாங்க கேட்டு நீங்க எழுதிக் கொடுக்கிறது’
’உன்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறது?’
‘மரமண்டைன்றியா? ..”
‘…..”
’என்னடா சத்தத்தையே காணும்?.. மறுபடியும் கிரீன் சுடியா’

இது ஒரு வட்டம்ங்க.. ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு பொண்ணப் பார்த்து, பிடிச்சுப்போய், பின்னால சுத்தி அவள ஒத்துக்கவைக்கிற காலம் இருக்கே நரக வாசல். தூங்கவிடாம, படிக்கவிடாம எழுதவிடாம,வேலைசெய்யவிடாம எங்கயோ இருந்துகிட்டு நம்ம மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருப்பா… அவ ஒத்துக்கலைனு வைஙக, மண்டையவே கழட்டிப்போனமாதிரி ஆகிடும், என்ன பண்றோம், என்ன பண்ணனும் ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும். ஒத்துகிட்டான்னு வைங்க,, நரக வாசல்னு சொன்னனே அங்க இருந்து கதவு திறந்து உள்ள போன மாதிரிதான். முத்து டையலாக் மாதிரி.. ‘வந்தாலும் ஏன்னு கேட்கமுடியாது.. போனாலும் போகாதன்னு சொல்லமுடியாது.. இச்சச்ச்ச இச்சச்ச கச்சச்ச கச்சச்ச்ச சா’ அப்புறம் நீங்க ஒரு டம்மி பீஸ். வேற வழியே இல்ல.. ஐஸ்கிரீம் ஸ்கூப்ப காபில்ல போட்டு குடிச்சா சூப்பாரா இருக்கும்னு கிண்டலுக்கு அவ சொன்னாக்கூட நீங்க குடிச்சே ஆகணும்.

இதுக்கு முக்கியமான காரணம், சினிமாக்காரங்க. படங்களப்பாருங்க.. படத்துல இருக்கிற காதலப்பாருங்க.. காதல் பட கிளைமாக்ஸையே பாருங்களேன்.. மூணு வருஷத்துல பரத் பைத்தியம், சந்தியாக்கு இரண்டு குழந்தைக. விண்ணைத்தாண்டி வருவாயா? ஜெஸ்ஸி எங்கயோ ல்ண்டன்ல செட்டில் ஆகிடும் ( பிளடி வெளி நாட்டு மாப்பிள்ளை) , கார்த்திக் ஜெஸ்ஸியோட பழைய வீட்டுல சுத்திக்கிட்டு, நொந்து நூலாகி, அந்து அவலாகி, ஒரு படம் எடுத்து தன்னோட படத்துல ஹீரோ ஹீரோயின் சேர்ற மாதிரி வச்சு ஜெஸ்ஸினு பேர்வைப்பான். பொண்ணு வந்து படம் பார்த்த்து, நல்லா இருக்கு ராசா உன் ஒர்க்கு.. இப்படியே மெயிண்டைன் பண்ணுனு வடிவேலு காமடி டையலாக்க சீரியஸ் மூஞ்சி வச்சு சொல்லி, பய்ல பீல் பண்ண உட்டுட்டு கார்ல ஏறி போய்டும் கார்த்திக் நடு ரோட்டுல நிப்பான் (இது அல்லவா குறியீடு பின்னாவின்னத்துவம்)

இவ்வளவு காமெடி தெரிஞ்சும் ஏண்டா மாமா லவ்ன்னு கேட்டா என்னோட ஒரே பதில்.. லவ் சார்… காதல் சார்… லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்… ஹி ஹி!

காதெலென்னும் தூங்கும் மிருகம் : 1

%d bloggers like this: