ரிபு – 5

பின்னூட்டமொன்றை இடுக

கெளரி,

சத்தமிட்டுச் சிரிக்கும் பெண்களை எனக்குப் பிடிக்காது. அதில் ஒரு பொய் இருக்கிறது. தன் சிரிப்பின் மூலம் திரும்பிப்பார்க்கவைக்கும் ஒரு காரியம் இருக்கிறது. அந்த நாடகம் எல்லா ப்வெறுப்பிற்குரியதாய் இருக்கிறது. உண்மையில் சிரிப்பதே ஆண்களே எனினும் பிடிக்காமல் போய் பல வருடங்கள் ஆகிறது. ஒரு வேளை, நான் சிரிப்பை இஅந்த காலத்தில்ரிஉந்து நான் சிரிப்பை வெறுக்கத் தொடங்கியிருக்கக்கூடும்.

எந்தச் சிரிப்பும் வாதையை நினைவூட்டுகிற்து. என் வலிகளைத் தந்து சென்ற மனிதர்களை அவர்களின் சிரிப்பின் அடையாளத்திலேதான் உள்ளே பதிந்து வைத்திருக்கிறேன். சிரிக்கும்போது கன்னங்களும் கண்களும் இணையும் புள்ளியை வைத்தே இவர் எந்தக்காலத்தின் என் வாழ்வில் வந்து சென்றவர் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. சத்தமிட்டு சிரிப்பவர்களின் இன்னல்களற்ற வாழ்வு சாவின் கணங்களை எதிர்பார்த்திருந்த என் வாழ்வினை மூர்க்கமாக கேலி செய்வதாக உணர்கிறேன். ஆகவே எனக்கு சிரிப்பு பிடிக்கவில்லை. பிறர் சிரிப்பது. பெண்கள் சிரிப்பது. பிறகு அவர்கள் தங்கள் நாடக முகங்களுடன் சத்தமிட்டுச் சிரிப்பது.

பெண்களின் சிரிப்பில் குழந்தைகளின் சிரிப்பை நீ குழப்பிக்கொள்ளக்கூடாது. ஓட்டைப்பல் பெண்குழந்தைகள் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதற்கான காரணங்களைப் பற்றி ஒருவேளை அடுத்த நாவலில் எழுதுகிறேன். பெண்குழந்தைகளின் சிரிப்பில் கபடம் இல்லை. ஆண்குழந்தையென்றாலும். தேவதைகளுக்குப் பால் ஏது. குழந்தைகளின் சிரிப்பை விரும்பும் அளவிற்கு அவர்களின் அழுகையை வெறுக்கிறேன்.

பெரியவர்களின் சிரிப்பும் சிறியவர்களின் அழுகையும் என் வாழ்வின் மறக்க விரும்பும் காலங்களுக்கு என்னைக் கொண்டு சென்று என்னை துன்புறுத்துகிறது. உன் சிரிப்பு அப்படியல்ல. சத்தமில்லாத மெல்லிய புன்னகை மட்டும் கொண்டது. பெரும்பாலும். கண்களை மட்டும் இறுக்கி மிகச் சிறிய அளவில் உதடுகளைத் திறந்து உன் சிரிப்புகள் இன்னும் பொத்திவைத்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும். முதற் சந்திப்பில். கடைசி சந்திப்பில். எதிர்பாராத சந்திப்புகள். எல்லாக் காலங்களிலும் உன்னிடம் சிரிப்பிருந்தது.

உடனிருந்த காலங்களின் சிரிப்பிற்கும் பிரிந்த காலங்களின் சிரிப்பிற்கும் இடையில் மெல்லிய இடைவெளிதான். உடனிருந்த காலங்கள் கண்கள் என்னைப்பார்க்கையிலும் பிரிந்த காலங்களில் என் முகத்தினை நீங்கிய பிறகும் உனக்கு சிரிப்பு கொண்டிருந்தது. Not that i am complainining. It was really fantastic. எந்த காரணமுமற்று யாராகவும் இல்லாமல் தொலைவிலிருந்து சிரிப்பைப்பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் இன்றும் செய்யமுடியும்.

என்னைச் சந்திக்க விரும்பாத உன் கோபம் அழகானது. என்னைப்பார்த்ததும் முகஞ்சுருக்கி வேறுபுறம் திரும்பி பின் பழைய சிரிப்பைத் தொடரும் உன் கர்வமும் அழகாகவே இருக்கிறது. அழகு என்ற சொல் ஆபாசமாகிவிட்டதா. சொல் எப்படி ஆபாசமாகமுடியும். உன்னைப் பற்றி பேசும்போது எந்தச் சொல் ஆபாசம் என அறியப்படும். என்ன பேசிக்கொண்டிருந்தேன் என்பதையே மறந்துவிடுகிறேன். சிரிப்பு. கணம் கணமாக நீ புன்னகைகளாக மட்டுமே என்னுள் நிறைந்திருக்கிறாய். முதற் சந்திப்பில், உனக்கு நியாபகம் இல்லாத நம் முதற்சந்திப்பில். அந்தப்பெரும் அறையில் உன் முதல் புன்னகை எனக்கானதில்லை. ஆனாலும் அது அழகாக இருந்தது. அந்தக்கணத்திலிருந்தே அந்தப்புன்னகை என்னுடன் எல்லாக்காலங்களிலும் இருக்கவேண்டும் என விரும்பினேன்

அன்று தொடங்கியதை பிறகு நீ வந்து என்னுடன் இணைந்து கொண்ட சிறுகாலங்களும், விலகி பின் வெறுத்து சொல்லற்று, சொல்ல விரும்பாமல் காணாமல் போன இந்த நாட்கள் வரை அந்தப்புன்னகையை நான் மறக்காமல் உள்ளேயே பொத்திவைத்திருக்கிறேன். சிறு கண்களுக்கு அசையும் சிரிப்பிற்குப் பிறகு எல்லா சிரிப்பின் ஒலிகளும் என்னை குழப்புகின்றன. பெரும்பாலும் உன்னை நினைவூட்டுகின்றன. உன்னிடமிருந்து விலகியோடும் ஒருவனை மீண்டும் மீண்டும் இழுத்து எல்லா சிரிப்புகளும் உன் நினைவுகளுக்குள் தள்ளுகின்றன.

என்னிடம் இருந்தது பெரும் வெற்றிடம் கெளரி. அதை முற்றிலுமாக நிரப்பிச் சென்றிருக்கிறாய். உன்னிடமிருந்து வெளியேறுவது மீண்டும் ஒரு வெற்றிடத்திற்குச் செல்வது என்பதை அறிந்திருக்கிறேன். அந்த அறிதலே என்னை உன்னையே பற்றியிருக்கச் செய்கிறது. உன் குரல் மெல்ல மறந்து காதற்றவனாக மாற நான் விரும்பவில்லை. உன் சிரிப்பிலிருந்து வெளியேறி எல்லா சிரிப்பினையும் வெறுக்கும் பழைய நாட்களுக்குத் திரும்ப எனக்குத் திராணியில்லை. கண்ணிருடனான பொழுதுகளிலிருந்து தனிமையின் மலர்களை ஏந்தி மிதக்கும் வானப்பறவையாக நீ மாற்றித்தந்த வானத்திலேயே தங்கியிருக்க விரும்புகிறேன். ஆனால் நீ எடுத்துச் சென்றுவிட்ட சிறகுகளில்லாமல் எப்படி இருப்பேன்

உன்னுடன் பேசிய சொற்கள் என் தனியறையின் சுவர்களின் மோதி ஒலிக்கின்றன. இங்கிருந்து நான் வெளியேறப்போவதில்லை. என் தனியறைகளில் யாரையும் உள்ளே விடப்போவதில்லை. உண்மையில் நான் தனியறையில் எப்போதும் இருந்தவனில்லை. விஷ்வாவையும் ஜோசப்பையும் உனக்கு இன்று அறிமுகப்படுத்துகிறேன். உனக்குத் தெரிந்தவர்கள்தான். நம் நண்பர்கள்தான், ஆனால் அவர்கள் இங்கே புதுப்பெயரில் உனக்கு மீண்டும் அறிமுகமாகிறார்கள். எனக்கு வேறு வழிகளை நீ விட்டுச் செல்லவில்லை.

உனக்குத் தெரிந்தவர்களைத்தான் உனக்கு மீண்டும் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னை நானே உன்னிடம் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. உன் மறதிகள் அழகானவை. என்னை அறிமுகம் செய்து கொள்வது எனக்குப்பிடிக்கும். உன்னிடம் அறிமுகம் செய்துகொள்வது கொஞ்சம் குழப்பமானது. அதில் நிறைய பொய்கள் இருக்கின்றன. அறிமுகத்திலேயே ஏராளமான பொய்கள் இருக்கின்றன. நாம் அறிமுகம் செய்துகொள்வது போல ஒருபோதும் நாம் இருப்பதில்லை. உன்னிடம் நான் அறிமுகம் செய்துகொண்டது போல் இன்று நான் இல்லை. என்னிடம் அறிமுகம் செய்துகொண்ட அந்தச் சிறுபெண்ணை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் நீ இன்று அவள் இல்லை.

வேறெந்த பெண்ணிலும் நான் தேடுவதும் அதே புன்னகையாகவே இருக்கிறது. நெருங்கிவரும் எந்தப்பெண்னும் ஒரு சொல்லில் ஒரு புன்னகையில் உன்னை நினைவூட்டுகிறார்கள். குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறார்கள். விலகச் செய்கிறார்கள். அவர்களுக்கு என் விலகலின் காரணங்கள் புரியாமல் இருக்கலாம். அவர்கள் உன்னை அறிந்திருக்கிறார்கள். பேசும் இடங்களிலெல்லாம் உன்னைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் உன்னைத்தவிர என்னிடம் பேசுவதற்கு வேறு விசயங்கள் இல்லை. என் போதை கணங்களெல்லாம் உன் நினைவுகளை மீட்டெடுத்து நண்பர்களை விலக்குகிறேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனியே குடிக்க பழகிக்கொண்டேன். கண்ணீர் என்னுடனேயே போகட்டும். யாருடனும் எந்த சொல்லும் இல்லை. உன்னையன்றி வேறு கனவுகள் இல்லை. என் வெற்றிடங்களில் உன்னைத்தவிர மறைக்க வேறு கூரைகள் இல்லை.

முதற்சந்திப்பில் யாருக்கோ அளித்த சிரிப்பு. முதல் முறை உன்னிடம் பேசும் பதட்டத்தில் நீ அளித்த அந்த இலகுவாக்கும் புன்னகை. நீண்ட நாளுக்குப் பின் சந்திக்க நேர்கையில் அந்த இடைவெளியை நொடிப்பொழுதில் விரட்டும் அந்தக் கண்களுக்குள் பூத்த சிரிப்பு. சிறு சண்டைக்குப் பின் மீண்டும் சந்திக்கையில் ஒரு புன்னகை. பேச்சற்றப்போன நாட்களில் தற்செயலாய் சந்திக்க நேர்கையில் வரவா வேண்டாமா என தயங்கும் அந்த தயக்கப்புன்னகை. வெறுப்பின் நாட்களில் முறைத்து பின் மறுபுறம் திரும்பு உன் தோழியிடம் உனது புன்னகை. அத்தனையும் இருக்கிறது கெளரி. அத்தனையும் தடம் மாறாமல், நிறம் மாறாமல், அந்த ஒலி மாறாமல் இந்தத் தனியறையிலும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிகளில் குறுக்கே வரும் மனிதர்களை நான் வெறுக்கிறேன்.

எனக்குள்ளாக நானே நான்காக ஐந்தாகப் பிரிந்து சண்டையிடுகிறேன். உன்னை இழந்துவிட்டதற்காக. உன்னை இழந்துவிட்டதற்காக என்னை நானே சமாதானம் செய்கிறேன். என் புன்னகைகளை எனக்கு நானே நினைவுபடுத்துகிறேன். எனது வெற்றிடத்திற்கு திரும்பி வந்ததை எனக்கு நானே நினைவூட்டுகிறேன். மீண்டும் எழும் கனவுகளில் மீண்டும் ஒரு இரவில் ஆழத்திலிருந்து நீ மேலெழுந்து அமர்ந்து புன்னகைப்பதற்காக, உனக்கென தனியறையொன்றை ஒதுக்கியிருக்கிறேன். அங்கே ஒரு நாற்காலி யாரும் அமராமல் காத்திருக்கிறது.

அந்த அறையில் என் இசைக்கருவிகளை வைத்திருக்கிறேன். அந்த நாற்காலியில் ஒரு மஞ்சள் மலரை வைத்திருக்கிறென். அந்த அறையெங்கும் உன் புன்னகை எதிரொலிக்கட்டும். என் இசையினை நீ எங்கிருந்தோ ஆசிகளை வழங்குவதாக இருக்கட்டும். உனக்கு செய்யப்பட்ட என் சொல்வன்மைகளுக்கு அது ஒரு பரிகாரமாக அமையட்டும். என் இசைகள் நாளை உன் பெயர் சொல்லி வெளிவரக்கூடும். என் எழுத்துக்கள் உன் பெயரில் கதையெழுதியவனின் சொற்களாகவே அறியப்படட்டும்

ஒரு புன்னகை. அந்தப்புன்னகைக்காகத்தான் இவ்வளவுவ்மா. உன்னைத்தவிர வேறு பெண்ணில்லையா என்பவர்களிடமெல்லாம் இதுவரை எப்பொழுதும் ஒரே பதிலைத்தான் சொல்லிவந்திருக்கிறேன். உண்மையில் கேள்வி கேட்கும் எல்லாரும் பதில்பெற வேண்டியவர்கள் இல்லை. பதிலக்ளுக்குத் தகுதியானவர்களுக்கு என் பதில்களை எப்பொழுதும்போலவே மாறாமல் சொல்லிவருகிறேன். உன்னைத்தவிர வேறு பெண்கள் என்பது ஒரு சொல் விளையாட்டு. உண்மையில் அப்படி யாரும் இல்லை என்பதுதான் தொந்தரவு,

எல்லா பெண்களிலும் நீயே இருக்கிறாய். எல்லா பெண்ணாகவும் நீயே இருக்கிறாய். ஒரு புன்னகை. மீண்டும் அதே புன்னகை. அல்லது ஒரு கோபம் மீண்டும் அதே கோபம். அல்லது சிறிது அன்பு. மீண்டும் அதே அன்பு. அல்லது சிறுது விலக்கம். மீண்டும் அதே விலக்கம். கொஞ்சம் கண்ணீர். மீண்டும் அதே கண்ணீர். யார் தோளிலோ கைவைத்து ஆதுரமாய் சாய்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உறவு நமது. யார் குழந்தையையோ பார்த்து விளையாட்டுக்காட்டி இனிப்புகளைக் கொடுக்கும் கரங்கள் உனது. வழியறியாமல் தவறி நிற்கும் சிறு நாய்க்குட்டியை உரியவர் வந்து அழைத்துச் செல்லும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் சாய்ந்த முகமும் உனது.

எல்லாம் உனது. எல்லாம் நீயே. நான் உட்பட. இந்த பதிலை இதுவரை பதிலுக்கு தகுதியான எல்லாரிடமும் சொல்லிவிட்டேன். சிலரிடம் போதையில். சிலரிடம் தெளிவில். ஆனால் இருவகையினருக்கும் எனக்கு மன நிலை தவறிவிட்டது என்பதாக அறிந்திருந்தார்கள். அல்லது அப்படிச் சொன்னார்கள். என்னால் உன்னுடன் பேச முடிகிறது. உனக்கு கேட்காத போதும். என்னால் பிறருடன் பேச முடியவில்லை. அவர்களுக்கு கேட்கிற போதும். நான் யாருடன் இருக்கவேண்டியவன் கெளரி?

உன் சொற்களை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கிறேன். எனக்குள்ளாகவே சொல்லிப்பார்க்கிறேன். இடைவெளி மெளனங்களை அதன் அத்தனை சாத்தியங்களையும் வைத்து பின்னிப்பின்னி உருவாக்குகிறேன். சொற்கள் பிரவாகமென ஆட்கொள்கின்றன. காணாமல் போன இடைவெளிகள் தானாக வந்து துலங்குகின்றன. மெளனத்தினை மொழிபெயர்க்க பெருந்தனிமை துணையாக இருக்கிறது. தனிமையில் உருவாகும் கனவுகள் புதிய சொற்களை இடைவெளிகளில் இட்டு நிரப்புகிறது.

எல்லா சொற்களையும் அடித்துகரைபுரண்டு ஓடிவரும் நதி ஒரு கடற்பாறையில் மோதியபின் செயலற்றுப்போகிறது. உண்மையில் அது பெருஞ்சொற்களின் கடலில் கலந்து காணமலாகிறது. அல்லது கடலாகவே மாறிப்போகிறது. பிறகு அதற்கு தனித்த அடையாளங்கள் இல்லை. அதற்கென்று தனித்த பெயர்கள் இல்லை. என் சொற்கள் என் மெளனங்கள் எல்லாம் உன்னில் மோதி உடைந்து சிதறி உறைந்து கலைந்து நீயாக மாறி நிற்கின்றன. இனி தனித்த சொற்கள் இல்லை. எல்லா கவிதைகளுக்குள்ளும் நீ எப்படியோ வந்துவிடுகிறாய். ஒரு பெரு நாவலின் அத்தனை பக்கங்களிலும் உன் பெயரின் எழுத்துக்களை மட்டும் வட்டமிட்டு வைத்திருக்கிறேன். உனக்கு அதைப் பரிசளிக்கவேண்டும். அல்லது உன்னையே திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சொற்களை பொருளற்ற குவையானாலும் உன்னிடம் ஒப்படைக்கவேண்டும்

அல்லது நீ இவற்றை ஒரு போதும் காணக்கூடாது. அதுதானே உன் தேவையாக இருந்தது. உன்னைப்பற்றி பேசாமல் இருப்பது. உன்னைப்பற்றி எழுதாதமல் இருப்பது. உன் பயணத்தில் ஒரு சுமையாக கால்சங்கிலியில் பிணைக்கப்பட்ட இரும்புக்குண்டாக என் சொற்கள் வந்து அமர்ந்துவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொள்கிறேன். ஒருவேளை முன்பாகவே இதையெல்லாம் ஒரு முறை ஒரே முறை சொல்லி ஒரு புன்னகையை நான் அடைந்திருக்கவேண்டும். எந்த நதியும் கடந்து போனபிறகுதான் அதன் மரத்தக்கைகள் நினைவுக்கு வருகிறது. தத்தளிப்பின் கணத்தில் பற்றிக்கொள்ள கிடைக்கும் மதகுகளை நாம் பெரும்பாலும் பற்றிக்கொள்வதில்லையா. அல்லது மதகுகளை வெறும் தக்கைகளென்று, நம் எடை தாங்கக்கூடியவை அல்ல என்று விலக்கி வைக்கிறோமா. எடையற்ற தக்கையென, அத்தக்கையை நம் சுமை கொண்டு நிரப்பக்கூடாதென விலகியிருத்தல் அத்தனை தவறான செயலா. நினைவிருக்கிறது. என் கனவொன்றில் இந்தக் காட்சி வந்தது. அல்லது நான் நிஜமாகவே மிதந்து கொண்டிருந்தேனா. அல்லது போதையிலிருந்திருக்கக்கூடும். எண்ணற்ற சாத்தியங்கள். ஆனால் நிகழ்வு அதன் உணர்வு நிஜம்.

நான் பெரும் அலைப்பெருக்கான நதியில் த்தத்தளித்துக்கொண்டிருந்தேன். எனக்கென்று பற்றிக்கொள்ள எந்த ஒரு கொழுகொம்புகள் அற்று, மிதப்பதற்கான வழிகளை அதுவரை வாசித்திருந்த வழிகளை நீர் நடுவிலிருந்து நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஒரு தக்கை வந்தது. என் பார்வையில் அது அத்தனை எடையுள்ளதாக நான் அறியவில்லை. அது என் சுமையைத்தாங்காது என்பதை எப்படியோ அறிந்திருந்தேன். அதைப்பற்றிக்கொள்ள விரும்பவில்லை.

உண்மையில் நான் தத்தளிப்பதற்கு முன்னதாக வழக்கமாக எல்லாரும் மிதந்துசெல்லும் அந்தப்படகில்தான் இருந்தேன். பெரும்பாலானோர் எந்தக்குழப்பமும் இன்றி ஒரு இறகைப்போல சுமந்து மிதந்து செல்லும் அதே படகு. ஆனால் என்னுடையது உடைந்தது. எப்படி உடைந்தது யார் உடைத்ததென்பதை இப்பொழுது எனக்கு நியாபகம் இல்லை. ஆனால் படகு உடைந்திருந்தது. அதன் நீர் வெளியேற்றும் பொறுமை என்னிடம் இல்லை. அதனை விட்டுவிலகிவிடவே நான் விரும்பியிருந்தேன். ஆனாலும் எல்லாருக்கும் போலவே எனக்கும் படகு தன்னுடன் பிணைத்திருந்தது. நான் மெல்ல உடைத்துக்கொண்டு வெளியேறினேன். படகிலிருந்து. விடுபட்ட்டேன். அதன் சுழலிருந்து. உண்மையில் ஆசுவாசமாக உணர்ந்தேன். மிகச் சில நேரத்திற்கு. மிகக்குறைந்த நொடிகளிலேயே நான் நீரில் தனித்திருப்பதை உணர்ந்து அச்சம் கொண்டேன். இருபது வருடங்கள் ஆகியிருந்தது.

எத்தனை காலங்கள் படகிலிருந்தேன் எத்தனைக்காலம் தத்தளித்தேன் என்பதை அறியேன். ஆனால் தத்தளிப்பதை அறிந்தபோது இருபது வருடங்கள் ஆகியிருந்தது. எப்பொழுதாவது கவனித்திருக்கிறாயா கெளரி, நீச்சல் அறியாதவர்கள் நீரில் தள்ளப்படும்போது, அவர்கள் பயம் கொள்ளத்தொடங்கும் காலம் வரை அவர்களை நீர் விழுங்குவதில்லை.அவர்களை மிதக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பயங்கொள்ளத்தொடங்கும் அந்த முதல் நொடியிலிருந்து அவர்கள் மூழ்கத்தொடங்குகிறார்கள்(இன்று எனக்கு நீச்சல் தெரியும். தனியாக ஆண்டாட்டுகளாக அடித்து பழகி, இப்பொழுது படகைவிட நீச்சலே வசதியாக இருக்கிறது.இந்தக்கதைக்கு பிறகு வருகிறேன். முதலில் கனவைச் சொல்லிமுடித்துவிடுகிறேன்). ஆம். நான் தனித்து தத்தளித்துக்கொண்டிருக்கையில்தான் அந்தத் தக்கையைக் கண்டறிந்தேன்.

மிகப்பூஞ்சையான, அழகான சிறிய மரத்துண்டு. அதைப்பற்றிக்கொள்வதையும் விட்டுவிலகுவதையும் பற்றி எனக்கு இரண்டு வித குழப்பங்கள் இருந்ததை இன்று சொல்லமுடியும். என் தனிப்பட்ட பயத்திற்கு ஒரு மருந்தாக அதைப்பற்றிக்கொள்ளமுடியும். முன்பே கணித்ததுபோல, என் சுமையைத்தாங்குமளவு அதன் திராணி குறித்து எனக்கு சந்தேகங்கள் இருந்தன. இந்தச் சந்தேகத்தின் பொருட்டு அத்தக்கையை விட்டு விலகியே இருந்தேன். அது நீர் ச்சுழலில் மீண்டும் மீண்டும் என் மீது மோதிக்கொண்டிருந்தது. நான் மீண்டும் மீண்டும் அதை நதிப்போக்கில் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நான் எங்கிருக்கிறேன் எனக்குழப்பமாக இருக்கிறது. நிச்சயம் தக்கை என்னுடன் இல்லை. நான் மூழ்கவும் இல்லை. நீச்சல் அறிந்திருக்கிறேன். நதிச்சுழல் குறித்த பயங்கள் அந்தத்தக்கை தொட்டு விலகிய முதல் நொடியிலேயே அழிந்துவிட்டன. அந்த்தக்கையைப்பற்றி எப்பொழுதாவது எங்காவது பேசவேண்டும் கெளரி. ஆனால் நம்புவார்களா. நான் தனித்து மிதப்பது குறித்த கேள்விகள் முதலில் வரும். கடந்து செல்லும் படகுகளுக்கு கையசைத்தபடி மிதந்து கொண்டிருக்கும் ஒருவன், நீச்சல் தெரியாமல் தவறி விழுந்தவன் என்றால் நம்புவார்களா. நானே நம்பமுடியாது. நான் தவறி விழுந்தவனா தள்ளிவிடப்பட்டவனா என்ற குழப்பமே இன்னும் தீரவில்லை. ஒவ்வொன்றாய் ஒவ்வொரு கடிதமாய் உன்னிடம் எழுதிச் சொல்வதில் எதோ ஒரு ஆசுவாசம் எழுகிறது கெளரி. பார். வெறும் கனவு. இத்தனை வார்த்தைகளை விரயம் செய்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் கெளரி, கேட்காத தூரத்திலிருக்கும் உன்னிடம் சொல்வதற்கு சொல்லமுடியாத தூரத்திலிருக்கும் எனக்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன.

உன் அசைவுகளை சில நேரம் சந்திக்கிறேன். விரித்த விரல்களின் நகங்களுக்குள் அலைபாயும் மோதிரத்தை தன்னிச்சையாகச் சுழற்றும் சுண்டுவிரல் அசைவு நினைவிலிருக்கிறது. ஆட்காட்டி விரல் கொண்டு நீ ஒதுக்கிவிடும் முடிக்கற்றைகளின் அலையசைவுகளை சிலர் செய்திருக்கிறார்கள். ஆட்காட்டி கொண்டு நீ சரி செய்யும் நெற்றிப்பொட்டு எல்லா திசைகளிலிருந்தும் வருகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மறக்காமல் வாங்கி ஒட்டிவிடுகிறேன். ஒருபோதும் உனதில்லை எனினும் உனக்காக காத்திருக்கும் அந்தச் சிவப்பு மாறாமல் இருக்கிறது. கண்விழிக்கும் திசையில் சுவரில் ஒட்டப்பட்டும் மஞ்சள் மலர்கள் உன்னை நினைவுறுத்துவதாற்காகவே அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.

உன் விருப்ப நிறம் நினைவிலில்லை கெளரி. எனக்கு விருப்பமான உன் நிறமாக எப்படியோ மஞ்சள் மனதில் பதிந்திருக்கிறது. விளையாடுவதுபோல சீண்டுவதுபோல வெறுப்பதுபோல மீண்டும் மீண்டும் உன் மஞ்சள் நிறத்தை உன்னிடம் பலமுறை நியாபகப்படுத்தியிருக்கிறேன். அப்பொழுது அது என் நினைவில் நீங்காமல் இருப்பதற்காகவேயென நான் அறிந்திருக்கவில்லை. அறியாமல் செய்த ஒவ்வொன்றையும் மீட்டெடுத்து எழுதுவதற்காகத்தான் எல்லாமும் நிகழ்ந்ததா கெளரி?

சுழல் மீண்டும் மீண்டும் என்னை ஆரம்பத்தில் கொண்டு விடுகிறது. முதற் சொல் பேசிய நாட்களில் அவ்வப்போது உறைந்து போகிறேன். முதல் ரகசியம் சொன்ன மாலையை ஒரு முறை நினைத்துப்பார்க்கிறேன். முதல் மறுதலிப்பின் கணத்தை மீண்டும் உருவாக்குகிறேன். எல்லாவற்றிலும் ஒரு போதாமை இருந்தது. அன்பும் புன்னகையும் அசைவுகளும் எல்லா நேரத்திலும் இல்லை இல்லை இன்னும் இன்னும் இன்னும் என்றே உள்ளே கொதித்துக்கொண்டிருந்தன.

காலம் ஊறவைத்த திராட்சையென மதுவாக நொதித்திருக்கிறது சொற்கள். சொல்லப்படாதவை. சொல்லி புரிந்துகொள்ளப்படாதவை. சொல்லிச் சொல்லித் தீராதவை. மீண்டும் மீண்டும் அந்தக்கணங்களில் வாழ்தல் வரமாக விதிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அல்லது இது சாபமா. ஒரே கணத்தில் உறைதல் வரமா அல்லது திரும்பத்திரும்பே அங்கே நிகழ்வது வரமா. முடிவற்று பெருஞ்சுழல் போல மீண்டும் மீண்டும் அதே தொடக்கத்தில் கொண்டுவந்து விடும் விளையாட்டின் மீது எந்தக்கணத்தில் வேட்கை கொண்டேன். என்ன காரணம் கொண்டு நீதான் நீ என்று அறியாமலையே சொற்களால் உன்னுடன் போரிட்டேன். எந்தக்கணத்தில் விலகமுடிவெடுத்தாய். எப்படி அதை அறியாமல் ஒரு விளையாட்டைப்போல தொடர்ந்து என் அம்புகளை இழந்தேன்.

உன்னை அறிவதன் முன்னதாகவே நான் சொற்களுடன் விளையாடிக்கொண்டிருந்தவன் கெளரி. பிறகுதான் மெளனத்திற்கு வந்தடைந்தேன். இந்தத்தனிமையில் மெளனம் எத்தனை அழகானது என்பதை அறியஏண்டியிருக்கிறது. சொல்லற்று மெளனத்தில் உள்ளாக உலாவுகையில் எத்தனை கூர்மையாக சொற்கள் உருவாகின்றன என்பதை அவதனிப்பது மாபெரும் விளையாட்டாக மாறியிருக்கிறது. வெறுப்பின் சொற்களிலிருந்து அன்பின் நியாபகத்திற்குத்திரும்பும்போது நதி அதன் கடலுடன் ஆதூராமாகப் போய் அடைந்துகொள்கிறது.

மெளனம் அறிதலின் இறுதிக் கண்ணி கெளரி, சொல் அதன் முதல் காலடி. முடிவற்ற பெரும் பயணத்தில் நினைவுகளுடன் அமைதியாகப் பயணப்படுவதென்பது ஒரு பெரும் ஆடல் கெளரி. அலையடிக்கும் சொற்களை உள்ளாகவே மென்றபடி. கர்வத்தின் கணங்களை உருவாகும் முன்னதாகவே வெண்றபடி. வெடித்த இலவம்பஞ்சு விதைகளுடன் தனக்கான நிலம்தேடி பறப்பது போல. கூட்டிலிருந்து தள்ளிவிடப்பட்ட கழுகுக்குஞ்சுகள் தன் வானத்தையும் இறகையும் அறிந்துகொள்வது போல. ஆற்றொழுக்கின் நதி நீர் தேங்கும்போது உருவாகும் மீன்கள் தன் முதல் உணவைப் புசிப்பது போல.

மஞ்சள் நிறத்தின் கடைசி அடையாளமாக எஞ்சியிருப்பது உன் மஞ்சள் குடை கெளரி. பிரிதலுக்கு பிறகான மழை நாள் ஒன்றில் வேகமாய்க் கடந்து செல்லும் பெண் நீயென்பதை வெகுதொலைவில் அறைந்திருந்தேன். பிறகு கொஞ்சம் மறைந்து நின்றேன். வெறுப்பின் கண்களை விருப்பத்தின் கண்களுக்கு மறுதிலியாக பார்ப்பதில் ஒப்பில்லை. கண்களுக்குள் அதே அமைதி.உடன் சிரித்துவரும் தோழியிடம் அதே கன்னம் பூரித்த புன்னகை. உனக்குள்ளும் சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் அவை எனக்கானவை இல்லை. எனக்குள் ஓடிக்கொண்டிருந்த சொற்கள் உனக்கானவை. அன்று என் அருகமர்ந்தவள் என் தோழி. உன்னை அறியாதவள். எனக்குள் இருக்கும் உன்னையும் அறியாதவள். ஆனால் கெளரி என்ற பெயர் தெரியும். அதன் சூழலில் உருவாக்கிய சொற்களை அறிந்திருவள். நான் முற்றிலுமாக அவளிடமிருந்து உடைந்திருந்தேன்

சொற்கள் வெறும் ஒலியாக மாற ஆளுக்கு ஒரு நபர். மஞ்சள் குடை. அரக்கு கைப்பிடி. பிடித்திருந்த விரல் நகங்களில் தீட்டப்பட்டிருந்த கருஞ்சிவப்பு நகச்சாயம். கண்கள் மறைந்து நாசியும் உதடுகளும் மட்டும் வெளிப்படுத்தும் மஞ்சள் முகமூடியை இன்றும் என்னால் வரைய முடியும். மழைபட்டு உறைந்திருந்த கூந்தல் பின் தள்ளப்பட்டு, பனிபட்ட மல்லிகை முன்வந்திருந்தது. வெகு சுலபமாக கடந்து சென்றவள் நான் இருப்பதை அறிந்திருக்கப்போவதில்லை.

ஒருவேளை அறிந்திருக்கலாம். உன் கண்களின் வேகம் அறிந்ததுதான். அது பெண்களின் கண்வேகம். அசைவுகளுக்குள் அத்தனை நபர்களையும் எடைபோட்டு பின் தன் பாதைக்குத் திரும்பிக்கொள்ளும் கொலைகாரனின் வேகம். நீரருந்தவரும் மானுக்காக நீருக்குள் கண்மூடிக்காத்திருக்கும் முதலையின் கண்கள். ஆழ் நீரில் உணவைக்கண்ட பருந்தின் அனிச்சை அசைவுகள். அவற்றை அறிந்திருந்தேன். வெறுத்தும் இருந்தேன். உனக்கு முன்பு.

பிறகு அந்தக் கண்களை பார்க்க வாய்க்கவேயில்லை. இந்த மஞ்சள் குடை மறைத்தது போல. மறுபுறம் திரும்பிக்கொண்ட உன் அன்பைப்போல. பிரியம் ஒரு குழந்தையாக வருகிறது. கிழவனாக மறைந்துவிடுகிறது. இருத்தல் மட்டுமே மாறிலி. அதுவே சாபமும். வருதலும் போதலுமான பயணத்தில் இருக்கும் சிலைகளைப் பூசி விளக்கேற்றி ஏன் செல்லவேண்டும். காட்டுக்கொடி சுற்றிக்கிடந்த மறைந்த தெய்வங்களை ஏன் வேலியில் அடைத்து தனித்து விட்டுச் செல்லவேண்டும். உணவற்ற தெருமிருகத்திற்கு ஒருவேளை உணவளித்து விட்டுச் செல்லும் உங்களுக்குத் தெரியுமா. இறப்பினைத் தள்ளிப்போட்டு பசி நாட்களை நீட்டிக்கிறீர்கள் என்று?

புன்னகை சொல்லாகி நின்றது. சொல் மெளனமாகி நின்றது. மெளனம் அறிதலாகி நின்றது. அறிதல் இசையானது. இசை அனல் ஆனது. அனல் காடுகளை எரிக்கிறது. மெளனம் சொற்களை எரிக்கிறது. பயணம் எரிதலை அன்பென்கிறது. அன்பு எல்லாம் கனவென கடந்து செல்கிறது. எந்தப் பெரு நாடகத்தின் பாத்திரம் நீ எனக்களித்து விட்டுச்சென்றது.பெரு நாடகத்தின் இயக்கி எந்தக்கணத்தில் மேடையிலிருந்து இறங்கிச் சென்றாய்? இந்த ஒப்பனையை நான் எப்பொழுது கலைக்கவேண்டுமென யார் எனக்குச் சொல்வார்கள் கெளரி?

– நந்து

ரிபு-4

பின்னூட்டமொன்றை இடுக

பெயருக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடைப்பட்ட கணத்தில் நந்து மஞ்சள் வண்ணத்தில் தொடங்கி அதன் ஒளிவிடும் அறிவியல் காரணங்கள் வரை நீண்ட தூரம் சென்றிருந்தான். அடுத்த வார்த்தை நாக்கில் சிக்கி புரண்டிருந்தது.

“ஏன் உங்கூர்ல பொண்ணுங்களையே பாத்ததில்லையா ஏன் அப்டி பாக்குறீங்க எல்லாரும்” மிகச் சுலபமாக மெளனத்தை உடைத்தாள். பதில் சொல்வதற்கு யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு அவகாசாம் வேண்டும். பெரிய நகைச்சுவை கேட்டவன் போல் சத்தமாகச் சிரித்தான். இடைவெளி கிடைத்தது. கொஞ்சம் சிரித்தபோதே பதில் கிடைத்திருந்தது. “ஊரு பொண்ணெல்லாம் ஒண்ணுதான். எப்பவும் புதுசு மேல ஒரு ஆச்சர்யம் இருக்கும்ல. அதான் அப்டி பாக்குறாங்களா இருக்கும். எங்கூர் கட்டம் போட்ட கரும்பச்சை சுடிதாருக்கும் உங்க மஞ்சள் ப்ளைன் சுடிதாருக்கும் உங்களுக்கு வேணா வித்தியாசம் தெரியாம இருக்கலாம். ஆனா எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும்ன்றதே இந்த ப்ளைன் சுடிதார பாக்கும்போதுதான் தோணும்னா பாத்துக்கங்களேன்.”

” நல்லா பேசுறீங்க” பதிலில் குத்தல் இருந்ததுபோல் நந்துவிற்குத் தோன்றியது. பெரிய விளையாட்டு போலவும். பிடித்த பெண்கள் பாராட்டினாலும் முகம் சுளித்தாலும் ஒரே மாதிரியான குழப்பம்தான் முதுகுத்தண்டில் ஊர்கிறது. “அட நிஜமாங்க. இப்ப நீங்க கேட்குறவரைக்கும் உங்கள வெறிச்சுப் பாத்ததுக்குக் காரணம் அந்த மஞ்சள்தான்னு எனக்கு சத்தியமா தெரியாது, இவ்வளவு ஏன், நான் வெறிச்சுப்பாத்தானான்னு கூட தெரியாது”

“அப்ப நான் பொய் சொல்றேன்றீங்களா?” கெளரியின் கேள்வியில் ஒரு கொஞ்சல்கோபம் இருந்தது.அமைதியாக இருந்தான். போட்டியை நீட்டாமல் வேறு இடத்திற்கு செல்லத் தோன்றியது. “எந்தூர் நீங்க… எங்காலேஜ்ல எப்படி புதுசா… அதுவும் ப்ரியா கூட” இத்தனை நேரம் உடனிருந்தவளை ஒருவார்த்தை கேட்காமல் வாயடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்து துணுக்குற்றான். திரும்பி ப்ரியாவைப் பார்த்தான். அவள் உதட்டோர குறும்புச் சிரிப்புடன் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தாள்

“ஆராம்ளி. மெப்கோலதான் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப தூரமா இருக்குன்னு இந்தவருசம்தான் மாத்திட்டாங்க. இப்பவும் போகவர கஷ்டம்னு ஹாஸ்டல்லதான் இருக்கேன். இங்க பலதடவ வந்திருக்கேன். உங்களத்தான் பாத்ததில்லை. இதுதான் முதல்தடவ. அதுவும் ஒரே ஆளா அஞ்சாறு பாட்டிலோட”

“அதென்ன ஆராமுளி ஏழாமுளி. ஆரல்வாய்மொழின்னு முழுசாவே சொல்லலாம்ல.” அவள் பார்வையிலிருந்து மறுபடியும் சீண்டிவிட்டதாகத் தோன்றியது. இந்த மாட்டுத்தடியன்கள் திரும்பி வந்து தொலையலாம். “எவ்வளவு அழகான பேர் இல்ல நெருப்பு வாய் மொழி. ஒளிவடிவம். நெருப்புகூட மஞ்சள்தான். உங்கள மாதிரி..” நாக்கைக் கடித்துக்கொண்டான். ப்ரியா அதிர்ந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“என்னல வம்பளத்துட்டு இருக்கியோ. ஏய் நீங்க போய் படிங்கட்டி. நாங்க எங்க வேலையப்பாக்கோம்” சந்துரு சரியான இடைவெளியில் உள்ளே நுழைந்தான். நிஜாம் பாக்கு வாசம் அவன் சட்டையெல்லாம் வீசியது. அது பணக்கார வாசமும் கூட. அரசியலின் வாசனை. எங்கொ தொலைதூர நகரத்தின் மூலவர் பெற்றிருக்கும் அதிகாரம் குட்டைகள் ஆறுகள் வாய்க்கால்களைக் கடந்து பாயும் கடைசி வரப்புகளுக்குப் பாயும்போது செழித்துவளரும் சிறு நகரத்து வரப்போர செடிகளின் மினுமினுப்பு. கொஞ்ச நாள் இப்படியே எதாவது கோர்ஸ் அது இது என சுற்றிவிட்டு எந்தத் தருணத்திலும் ஒரு சண்டையில், பஞ்சாயத்தில் இறங்கி யாரையாவது அடித்தோ வெட்டியொ ஒரு கேஸ் கிடைத்துவிட்டால் திரும்பி வரும்போது அப்பாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாய் உள்ளுர் அரசியல் கணக்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எதிர்காலம் இதுதான். இதுவும் சிறப்புதான் எனத் தெளிவாகத் தெரிந்தபின் முகத்தில் எழும் பூரிப்பு, பணம் கொடுக்கும் நிம்மதியான உணவில் வரும் ஊட்டம்.

ப்ரியா கண்காட்ட கெளரியும் அவளும் அறையை விட்டு கிளம்பினார்கள். கெளரி திரும்பி பார்த்தாள். கண்களில் கோபமும் உதட்டில் சிரிப்பும் இருந்தது.

o

வேலையைப்பத்தி சொல்லம்ல கேப்போம்

சந்துரு வந்து லாவகமாக சரக்குபாட்டிலை, சோடாபாட்டிலைத் திறந்தபடியே கேட்டான். நந்துவுக்கு நிச்சயம் தெரியும் எதைச்சொன்னாலும் கிண்டல் செய்யப்போகிறார்கள் என்று. குடிக்கிறவர்கள் எப்பொழுதும் குடிக்காமல் உடன் இருப்பவர்கள் தங்கள் பொழுதுபோக்கு என நினைத்துதான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டாவது மூன்றாவது கிளாஸ் உள்ளே நுழையும்போதே அது தலைகீழாக மாறிவிடுகிறது. மறு நாள் எழுந்தபின்னர் அவர்களுக்கு பெரும்பாலும் மூன்றாவது கிளாஸின் கதை நியாபகத்தில் இருப்பதில்லை. முதல் இரண்டு கிளாஸ்களையே நகைச்சுவையாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“அதுக்கென்ன மாப்ள. போகுது. இப்பதான உள்ளபோய்ருக்கேன் தலையும் புரியல வாலும்புரியல. ஆனா பெரிய கம்பெனி பாத்துக்க. மூச்சப்புடிச்சு ரெண்டுவருசம் இருந்தா அப்புறம் எப்படியும் சுத்தி சுத்தி இதே மாதிரி கம்பெனிகதான். வாய்ப்பு கிடைச்சா அமேரிக்க பறந்துருவேன் பாத்துக்க.”

” வாய்ல சுட்டா நல்லாத்தாம்லே இருக்கும். இந்தா நம்ப கோம்பை வெளி நாடு போறேன்னு ஆடுமாட வித்துப்போனான். ஆறே மாசத்துல முதுகு பழுத்து திரும்பி வந்தாம்ல. நாம நினைக்கது இருக்கட்டும். நடக்கது என்னன்னு ஒண்ணு இருக்கு பாத்துக்க” சோடா பாட்டிலை விட்டு முகத்தைத் திருப்பாமல் சொன்னான் மணி. இன்பா எதுவும் பேசவில்லை. கையில் கிளாஸை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ” நீ தப்பிட்ட பாத்துக்க. நானும் எங்கியாவது போய்டணும்ல. குறைஞ்சது மதுரை திரூந்தபுரம்னாவது. வீட்ல இருந்தா வெளங்காது.”

முதல் கிளாஸை ஒருவருக்கருவர் மோதிக்கொண்டனர். நந்துவும் தனது பெப்சி பெட் பாட்டிலை அதனுடன் மெல்ல உரசிக்கொண்டான். சத்தமாய் ஒரு ச்சியர்ஸ். உண்மையில் இது அடுத்த அறையில் இருக்கும் பெண்களுக்கான அறிவிப்பும் கூட. ஆரம்பித்துவிட்டோம் இனி விடியும் வரை வரக்கூடாது என்றொரு அறிவிப்பு. எப்பொழுதும் பிரியா இந்தத் தருணத்திற்காக காத்திருப்பாள் என்பது தெரியும். அவள் அறையிலிருந்து எழுந்துவந்து பட்டாசல் விளக்கை அணைத்துவிட்டு போய் அறையில் அமர்ந்து கொள்வாள். எப்பொழும் நந்து இவர்களுடன் இருக்கும் நாட்களில் தெருவாசல் விளக்கு போடப்படும். இவர்கள் மூன்று ரவுண்டு தாண்டி நான்காவது ரவுண்டில் சொன்னதையே சொல்லும் கணம் வந்ததும் நந்து போய் வெளியில் நின்றிருப்பான். மிகச் சிறிய நேரம். அந்த நள்ளிரவில் மஞ்சள் விளக்கொளியில் பறந்தடங்கிய மண் புழுதியைப் பார்த்துக்கொண்டு நிற்பதுவும் ஒரு வகை போதை என்றறிந்திருந்தான். எதிர்பார்த்ததே இம்மி பிசகாமல் நிகழ்ந்தது.

வழக்கமான கச்சேரி கதைகள். சந்துருவின் அரசியல் முகம் பூசிய கதைகள். வட்டிவசூலில் சந்தித்த மனிதர்களின் கதைகள். அவர்களின் கதறல்கள். நந்து சுவாரசியமின்றி பெப்சி பாட்டிலை பார்த்துக்கொண்டே கெளரியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். இத்தனை காலங்களில் ஏற்படாத ஒரு உணர்வு. வாலிபத்தின் முதற்காலடிகளில் நண்பர்கள் ஆளுக்கொரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கையில் எந்தப்பெண் மீதும் எழாத ஒரு உணர்வு.

உண்மையில் பிறரை விட நந்துவிற்கு பெண் நண்பர்கள் அதிகம். அவர்கள் நண்பர்களாகவே கடைசி வரை இருந்ததுதான் காரணம். சிலர் காதல் கடிதங்களுக்காக எழுதிக்கொடுக்கும்படி கேட்டு அணுகியவர்கள். சில நேரங்களில் ஒரு இணையின் இரு கடிதங்களையுமே நந்துவே எழுதியிருக்கிறான். இருவருக்குமே அது தெரியாது. அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கு உணர்வு இருக்கிற்து. நந்துவிடம் சொற்கள் இருக்கிறது. சொற்கள் மட்டும். எழுதி எழுதியும் தீராத காதல் இருந்தாலும், கடைசி வரை, அதாவது இந்த குறிப்பிட்ட நாள் வரை அந்தக் காதலை தனக்காக எழுதிக்கொள்ளும் தேவை ஏற்படவே இல்லை.

“என்னல கனவு கண்டுட்டு இருக்க”, சந்துரு வண்ணங்களுடன் பறந்துகொண்டிருந்த சோப்புக்குமிழியை உடைத்தான்.

அதொண்ணுமில்லை. சும்மாதான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்.

அதான் நீ யோசிக்க லெச்சணம் மூஞ்சில எழுதி ஒட்டிருந்துச்சே அந்த புதுபுள்ளைட்ட பேசிட்டு இருந்தப்பவே.

ச்ச. அதெல்லாம் ஒண்ணுமில்ல

மொசப்புடிக்க நாய மூஞ்சப்பாத்தா தெரியாதா. எத்தன பாத்துட்டோம். ஏன் நீயேஎத்தனதடவ இவன் வந்து எங்கிட்ட லட்டர் எழுதச் சொல்லி கேட்பன்னு எத்தனபேரப்பாத்துச் சொல்லிருக்க. நடந்துச்சா இல்லியா.

அதில்ல… மூஞ்சில தெரியும்தான்.

அதேதான். நீயும் அப்டித்தான் மூஞ்ச வச்சுட்டு இருக்க அவளப்பாத்ததுல இருந்து. ஆனா ஒண்ணு சொல்லுதன் மாப்ள. நீ சிக்கி சீரழிஞ்சு போகப்போற உன் முழியெல்லாம் ஒண்ணும் வெளங்குதாப்ல இல்ல பாத்துக்க.

பாட்டில் பாதிக்கு மேல் காலியாகிருந்தது. இன்பாவும் மணியும் காரசாரமாக அடிதடி நிலமைக்கு நெருங்கியவாறு எதையோ உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். மிகச்சுலபத்தில் போதை ஏறிவிடக்கூடியவர்கள். சந்துரு மெதுவாகத்தான் சுருதிக்கு வருவான். அவனுக்கும் சுருதி ஏறியபின் நிச்சயம் அமரமுடியாது. உண்மையில் சண்டையிடும் அந்த இருவரைவிட சமாதானம் செய்யும் சந்துருவின் சத்தம் கொடுமையாக ஒலிக்கும். அவர்கள் நிறுத்தியபிறகும் கூட சில நாள் தொடர்ந்து உரத்த குரலில் சமாதானம் செய்து கொண்டிருப்பான்.

அடச்சே. எங்கியோ பாத்தமாதிரி இருக்கு மாப்ள அவள. அதான் யோசிச்சுட்டு இருக்கேன் எங்கன்னு. சரியாத்தெரியல.

கிழிச்ச. ஆராம்ப்ளிக்கும் போனதில்ல. மெப்கோல எங்க போய்ருப்ப. என்ன போய்ருக்கியா..

ஆராம்ளிக்கு போனதில்ல.ஆனா ஒரு தடவ ஸ்கூல்ல டிஸ்ட்ரிக் லெவல் காம்பெடிசன்ன்னு மெப்கோ போய்ருக்கேன் மாப்ள. அங்க இருக்கலாம்ல.

மிதிவாங்கப்போறபாத்துக்க. நீ ஸ்கூல் போய் நாலுவருசம் இருக்குமா. அவ அந்தக்காலேஜ்ல ரெண்டு வருசந்தான். சும்மா பேசணும்னு பேசாத என்ன.

ஆனாலும், சொல்லிவிட்ட பிறகு அந்த நினைப்பு உருண்டுகொண்டே இருந்தது. எங்கோ பார்த்திருக்கிறோம். எங்கே. நான்கு வருடத்திற்கு முன் அவள் அந்தக்கல்லூரிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா. ஆனாலும், பெண்கள் நிச்சயம் நான்கு வருடங்களாக ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பதின்மத்தில் வாய்ப்பே இல்லை. மிகச் சிறிய இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசங்களை அடைந்து ஆளே மாறியிருப்பார்கள். ஆனாலும் இந்தச் சிந்தனை உழன்றுகொண்டே இருந்தது. பெப்சி முடிந்திருந்தது. “மாப்ள இன்னொரு பெப்சி எடுத்துட்டு வரேன் என்ன. ” சந்துருவும் பிறருக்கும் தனக்கான பொதுப் பஞ்சாயத்தைத் தொடங்கியிருந்தார்கள். நந்து மெல்ல எழுந்து அறைக்கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி அருகில் மீண்டும் அவள். கெளரி.இருட்டில்.விளக்கைப்போடாமல். குளிர்சாதனப்பெட்டியின் மெல்லிய வெளிச்சம் அவள் மீது விழுந்திருந்தது. பிரதிபலிப்பதைப்போல. நந்து விளக்கருக்கே போய்விட்டு அதைப்போடாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அந்த முகத்தின் தனியாக விழும் ஒளி. நிச்சயம் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று உறுதியாகத் தெரிந்தது. எதோ ஒரு கணத்தில் தடுமாறி சுவிட்சை அழுத்திவிட்டான். கெளரின் கையிலிருந்த தண்ணீர்பாட்டில் சற்று குலுங்கியது. திடீர்வெளிச்சத்தில் பயந்திருக்கக்கூடும். திரும்பி ” நீங்களா ” என்றாள். “பயந்துட்டேன்” அந்த ஆசுவாசம் பிடித்திருந்தது. அழகாக இருந்தது.

“ம். உள்ள போரடிச்சுது. அதான் கிளம்பி வெளிய வந்தேன். வாசல்ல கொஞ்ச நேரம் நிக்கலாம்னு” பதில் நினைத்ததற்கும் சொன்னதும் வேறாக இருந்தது. மெல்ல குளிர்சாதனப்பெட்டிலிருந்து அடுத்த பெப்சியை எடுத்துக்கொண்டான். கொஞ்சம் தயங்கி நின்றான். என்ன எதிர்பார்த்தான் என அவனுக்கே தெரியவில்லை. “எனக்கும் அதே. வெளிய இன்னேரத்துல நிக்கலாமா. யாரும் தப்பா நினைக்கமாட்டாங்களே” என்றாள். இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று திடீரென விளங்கியது. இந்நேரத்துல யாரும் வரப்போறதில்ல. நான் எப்பவும் நிக்கிறதுதான். வாங்க”

“வாங்கவா… என்ன கொழுப்பா. போரடிச்சுதுன்னு சொன்னேன். நீங்க நின்னா தப்பா நினைக்கமாட்டாங்களான்னு கேட்டேன். என்னையும் வந்து நிக்கச் சொல்றீங்களா. அதுவும் இன்னேரத்துல”

“ஏன் பயமா. இருட்டா நாயா”

“எனக்கென்ன பயம். வாங்க நிப்போம்”

என்ன நிகழ்ந்ததென்று குழப்பமாக இருந்தது. வருகிறேன் என்றாளா வரமாட்டேன் என்றாளா. வந்து நிற்பது வெறும் வீம்புதானா. இல்லை சீண்டல் விளையாட்டா. ஏன் எளிய விஷயங்கள் விருப்பமானதாய் ஆனபிறகு இத்தனை சிக்கலான கேள்விகளை உருவாக்குகின்றன. பெப்சி மூடியைத் திருகித் திறந்தான். ஒலியுடன் திறந்துகொண்டது. எந்த சலனமும் இன்றி வாசல்கதவைத் திறந்து திண்ணையில் அமர்ந்துகொண்டாள். அவள் எதிரே அவளது சைக்கிள் நின்றிருந்தது.சில நொடிகள் திண்ணையில் அமர்வதா அருகில் நிற்பதா என்ற குழப்பத்திற்குப் பிறகு முடிவெடுத்து அவள் சைக்கிளின் பின் இருக்கையில் இருபுறம் கால் போட்டு அமர்ந்துகொண்டான். எதிரில் சைக்கிள் கைப்பிடி இடைவெளியில் அவள் முகம் இருந்தது. இடதுபுறம் தூரத்தில் எங்கோ எதையோ தேடிக்கொண்டிருப்பவள் போல திரும்பியிருந்தாள். எதிரிலிருந்த தெருவிளக்கிலிருந்து மஞ்சள் ஒளி ஒரு பக்க முகத்தில் மட்டும் விழுந்திருந்தது. கழுத்தின் தங்கச்சங்கிலியில் மெல்லிய மினுமினுப்பு. ஒளிவிழுவதால் கண்ணில் தெரியும் கண்ணீரின் பிரதிபலிப்பு. இந்தப்பிரதிபலிப்புக்குள் தானும் ஓரக்கண்ணில் பார்க்கப்படுகிறோம் என்ற உணர்வு எழுந்து மயிர்க்கால்கள் குறுகுறுத்தன.

“ஆமா அதென்ன அரளிப்பூ”

“ம்ம் செவ்வரளி. சின்னவயசுல இருந்தே செவ்வரளி புடிக்கும். அதான்.”

“ நீங்களே வரைஞ்சதா”

“இதுக்கு ஆள்வச்சா வரைவாங்க. அதுவும் யார்கிட்டையாவது சைக்கிள்ள அரளிப்பூ வரைஞ்சு தாங்கன்னா சிரிக்கமாட்டாங்க”

சிறிதாக புன்னகைத்தான்.

“பாருங்க நீங்களே சிரிக்கிறீங்க. ஆமா எப்ப பாத்தீங்க அரளிய”

“ நானா சின்னவயசுல. எங்கூர் கோயில் நந்தவனத்துல. அரளி நந்தியாவெட்டையெல்லாம்.”

“என்ன நக்கலா. என் சைக்கிள்ள இருக்கத எப்ப பாத்தீங்கன்னு கேட்டேன்.”

“ம். வந்ததுமே உங்க தரிசனத்துக்கு முன்னாடியே அரளி தரிசனம்தான்”

முறைத்தாள். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள். கண்களில் மெல்லிய சிரிப்பு தெரிந்ததைப்போல் இருந்தது.

”ஏன் எதும் தப்பா சொல்லிட்டனா” நந்துவுக்கு பேச்சை வளர்க்கத் தோன்றியது. இடைவெளிகள் ஒவ்வொன்றிலும் எங்கோ தூர விலகிப்போகும் சாயல். ஒவ்வொரு சொல்லும் உரிமை எடுத்துக்கொண்டு சீண்டும் விளையாட்டு. சீண்டும்போது மேலதிகமாக எழும் இதயத்துடிப்பின் ஓசை. அவளுக்கும் இப்படித்தான் இருக்குமா. இல்லை ஆண்களுக்கு மட்டுமா. சந்தித்த சில மணி நேரங்களில் இதெல்லாம் நிகழ்வது சாத்தியம்தானா. சாத்தியம் என்றாலும் சரிதானா. இடைவெளிகளில் சிந்தனைகள் வேகமாகச் சென்று எங்கோ ஒரு சுவற்றில் மோதி உடைந்தது. உடைதலைத் தவிர்ப்பதற்காகவாது எதையாவது பேசிக்கொண்டிருக்கவேண்டும்.

தப்பு சரின்னு சொல்லல. ஆனா கொஞ்சம் ஓவரா பேசறீங்க.

வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டுப்போய்டும்னு எங்க அப்பத்தா கூட சொல்லும்

ஆமா தூக்கிட்டுப்போற எலும்புத்துண்டு மாதிரிதான் இருக்கீங்க.

நந்துவுக்கு உள்ளே எதோ உடைந்தது.

“சாரி… விளையாட்டுக்குத்தான் சொன்னேன். மறுபடியும் சாரி”

“அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாரும் சொல்றதுதான. பழகிடுச்சு.”

அவள் முகம் சுருங்கியிருந்தது. பெண்கள் எத்தனை துல்லியமாக உணர்வுகளை முகத்தில் மறைப்பார்கள் என்பதை அறிந்திருந்தான். இவள் புதிதாக இருந்தாள். எல்லாவகையிலும். பல நாட்களாக அதே நடைபாதையில் இருக்கும் மலர் மழை நாளில் புதிய முகம் அடைவதைப்போல அத்தனை நாட்கள் பழகிய பெண்களிலிருந்து முற்றிலும் புதிதாக இருந்தாள். இருகைகளிலும் செயினைப்பிடித்துக் கடிக்கும் பெண்களிலிருந்து புலிப்பல்லின் நுனியில் செயினை கடித்துக்கொண்டு கைகளைப் பின் சாய்த்து நிறுத்தி உடல் தாங்கி தொலைவின் குரல்களை கூர்மையான கண்களால் கற்றுக்கொள்ள எத்தனிக்கும் அந்த அமர்வு புதிதாக இருந்தது. எல்லா நேரத்திலும் சொந்த சகோதரன் முன் கால்களை இறுக்கிக்கொண்டு சங்கடத்துடன் அமர்ந்திருக்கும் பெண்களிலிருந்து சகஜமாக கால்மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் அந்த உடல்மொழி புதிதாக இருந்தது.

” நான் வரும்போது எதோ பாடிட்டு இருந்தீங்களே என்ன பாட்டு.” மிகச்சுலபமாக குற்ற உணர்ச்சிகளைத் தாண்டிச்செல்கிறாள். அல்லது அதற்கு முயற்சி செய்கிறாள்.

“ம்ம். மன்றம் வந்த தென்றலுக்கு. நேத்து எங்கையோ மறுபடி கேட்டேன். அப்பமேருந்து முணுமுணுத்துட்டே இருக்கேன். மேடையைப்போல வாழ்க்கையல்ல என்ன மாதிரி வரி.. அந்த சிச்சுவேசன் கூட. எவ்வளவு கனவோட உறவுக்குள்ள வந்திருப்பான் அந்த புருஷன். வேசத்தைக் கலைச்சு மாறமுடியாத உறவுக்குள்ள பழசையே நினைச்சுட்டு இருந்தா எப்படி..”

“ரேவதி இடத்துல இருந்து யோசிச்சுப்பாருங்க. எத்தன வருச கனவு. பாத்தவுடனேல்லாம் ஒருத்தர வாழ்க்கைல ஏத்துக்கமுடியுமா. மோகனுக்கு மனைவின்றது ஒரு கொடுக்க்கப்பட்டது. அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் அவர் அதே உணர்வோடதான் இருந்திருப்பாரு. ஆனா அவளுக்கு அப்டியா. இன்னொருத்தர அந்த இடத்துல வச்சுப்பாத்துட்டு திடீர்னு மாத்திக்கணும்ன்றது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா. அதெல்லாம் பொண்ணா இருந்து பாத்தாதான் புரியும். உண்மை என்ன தெரியுமா காதலோட பாக்குற மோகன் மறுபடி மறுபடி கார்த்திக்க நியாபகப் படுத்துறதுதான் பெரிய வேதனையே. மத்தவங்க கிட்ட சிரிச்சு பேசுற அவளால அவன்கிட்ட பேசமுடியாதுன்னா அதுவும்தான். கூட உரிமை உள்ளவன், உரிமை எடுத்துக்குவான்னு பயம் கூட இருக்கும்ல.”

“அதுக்குன்னு கம்பளிப்பூச்சி ஊர்றமாதிரி இருக்காமா. மீறி கைவைக்க உரிமை உள்ளவந்தான. பண்ணல. அதும்போக இந்தக்காலத்துல அப்டி யாராவது முட்டாளா இருப்பாங்களா என்ன”

“ஓ. மறுத்தாலும் கேட்காம பாஞ்சிருவீங்க அதான உங்க ஆம்பள புத்தி”

“பாய்வோம் மாட்டோம்ன்றது ரெண்டாவது. மறுக்கிறது நியாயமான்னு கேக்கேன்”

“இதுல என்ன நியாயம் அனியாயம் இருக்கு. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. யார் வாழ்க்கைலையும் யாரும் மூக்க நுழைக்கக்கூடாது. அது யாரா இருந்தாலும் ஹஸ்பண்டா இருந்தாலும் லவ்வரா இருந்தாலும். தனிப்பட்ட ஸ்பேஸ் ஒண்ணு இருக்கணும். அப்டி இல்லைன்னா என்ன வாழ்ந்து என்னத்த”

நந்து மிரண்டு போய் நின்றான். அவள் குரல் நேரத்துக்கு நேரம் உயர்ந்துகொண்டே வருவதுபோல் இருந்தது. தன்னுடன் பேசும் சாக்கில் தனக்குள்ளாகவே எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாளாயிருக்கலாம். ஆனாலும் நாணிக்கோணாமல் மென்மையான இதயம் போன்ற பூச்சுகள் இல்லாமல் எகிறிப் பேசியது பிடித்திருந்த்து.

“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றீங்க” நந்து உண்மையில் மிரட்டலாக குரல் உயர்த்தி கோபத்தைக் காட்ட நினைத்தான். கடைசி வார்த்தையில் தொண்டை திடீரென வறண்டு கீச்சிட்டது. அவள் சிரித்துவிட்டாள்.

உள்ள போலாம்ன்றேன். எதோ குடும்பச்சண்டைய ராக்கருக்கல்ல ரோட்ல போட்றாப்ல இருக்கு

ஏன் படிக்கப்போறீங்களா உள்ளே போனால் அவன் குடிகும்பலோடும் அவள் வேறு அறையிலும் இருக்கவேண்டும் என்பது இடறியது. இந்தச் சண்டையாவது இப்படியே இடைவெளியில்லாமல் நீண்டு பின் உறங்கினால் இந்த இரவுக்கு அர்த்தமிருக்கக்கூடும்.இந்தப்பெண்ணுக்கு மட்டும் இதுவரை தான் கண்டிராத புன்னகையொன்று கண்களுக்குள் பயணம் செய்வதை உணர்ந்தான். ஒற்றை இமைதூக்கிமுக்கால்பாக உதடுகள் மட்டும் நெளிய மறுபாகம் அதே மென்கோபத்துடன் இறுகியே இருக்கிறது. அர்த்த நாரி புகைப்படத்தில் இடப்பாகம் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கும் அம்பிகை போல.

குடும்பச்சண்டை என்ற வார்த்தை அழகாக உள்ளே நுழைந்து உறைந்தது. “எல்லா குடும்பமும் சண்டை போட்றதுதான். ஏன் குடும்பத்துக்கூடத்தான உரிமையா சண்டை போடத்தோணும். உரிமையில்லாதவங்கள நாம சண்டைபோட்றதில்லைல.”

“ஏன் இப்ப நாம சண்டை போடல. இதுல எங்க இருந்து வந்து உரிமை.சண்டையெல்லாம் எப்பவும் யார்கூடவேணா போடலாம். சும்மா அளக்காதீங்க”.

“சண்டை இல்ல உரிமை. திரும்ப வர்றதுல இருக்கு. தெரியாதவங்க கிட்ட போட்ற சண்டையும் தெரிஞ்சவங்க கிட்ட போட்ற சண்டையும் குடும்பத்துல நடக்குற சண்டையும் ஒண்ணில்ல. நடுவில பெரிய இடைவெளி இருக்குல்ல. அங்கதான் எல்லா விஷயமும் இருக்கு”

“கவிஞருக்கு பேச சொல்லியா குடுக்கணும்”

சில நொடிகள் உறைந்து மீண்டான். ” நான் கவிதை எழுதுவேன்னு யார் சொன்னா”
“அதுவா உள்ள தற்செயலா பேச்சு வந்துது உங்களப்பத்தி அப்ப ப்ரியாதான் சொன்னா. கவிதையெல்லாம் எழுதுவீங்களாம். டைரி டைரியா வச்சுருக்கீங்களாம். யார்கிட்டையும் காட்டமாட்டீங்களாம்.”

“ஹா ஹா. தற்செயலா என்னப்பத்தி பேச்செல்லாம் வருதா… நல்லவிஷயந்தான்”

இமை உயர்த்தி ஒரு நொடி முறைத்துவீட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள். சிரிக்கும்போதெல்லாம் மறுபுறம் திரும்பிக்கொள்ளும் அவள் தன்னுணர்வில் ஒரு அழகு இருந்தது. ஆண்பார்க்கையில் மாரப்பைச் சரிசெய்யும் பதட்டமின்றி எதிர் வருகிறவன் வழிவிடத்தூண்டும்படி கூந்தலைத் தூக்கி கழுத்தோரமாக பின்னால் எறியும் கர்வம். உன்னைக் கவனிக்கிறேன். நீ பொருட்டில்லை. நீ என் பிரியத்துக்குரியவன் இல்லை என முகத்திலறையும் கர்வம்.

“ஆமா கவிதையெல்லாம் ஏன் எழுதுறீங்க”

“எதூ.”

கவிதை. கவிதை ஏன் எழுதுறீங்கன்னு கேட்டேன்.

“இதுவரைக்கும் எப்படி எழுதுறீங்கன்னு கேட்டவங்கதான் இருக்காங்க. ஏன் எழுதுறீங்கன்னு யாருமே கேட்டதில்ல.”

“ஓ. சாரி. இல்ல. யாருக்கும் காட்டாம எழுதி எழுதி ஒளிச்சு வைக்கிறதுல என்ன ஆர்வம்னு தெரிஞ்சுக்கத்தான். தப்பா இருந்தா மறுபடி சாரி”

தப்பெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா கொஞ்சம் புதுசு அவ்ளோதான்.

ம்ம். அப்ப சொல்லமாட்டீங்க அப்டித்தான

அப்டி சொல்லல… ஆனா இதுல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. அது சின்ன வயசு பழக்கம். எதோ ஒரு காரணத்துக்காக எழுத ஆரம்பிச்சி, இப்ப சும்மா எடுத்து வைச்சிருக்கேன். காரணங்கள் முடிஞ்சுபோனதால இப்ப எங்கியும் பகிர்ந்துக்கிற்தில்லை. ஒரு தடவ காலேஜ் பேக்ல இருந்துது. பசங்க பாத்துட்டாங்க. மத்தபடி கவிஞனா நான் சொல்லிக்கிறதோ காட்டிக்கிறதோ இல்ல

ம்ம். என்ன காரணம். சொல்லலாமா

முதல் நாவல் அனேகமா எழுதுவேன். எழுதுனதும் முதல்ல உங்ககிட்டையே காட்டுறேன் சரிதான

அதுவரைக்கும் காண்டக்ட்ல இருந்தா பாப்போம்

முதல் நாளே இப்படி சொல்றீங்க. உங்கள நம்பி காரணம்வேற சொல்லணும்ன்றீங்க. சரியவா இருக்கு

அதுவும் சரிதான்

மெளனம் மெல்ல வந்து உள்ளே விழுந்தது. முதல் சந்திப்பிலேயே நியாபகத்திற்கு கொண்டுவர விரும்பாத காலங்களைப்பற்றி ஏன் பேசினோம் என்பது குழப்பமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் பேசுகிறோம். என்ன உரிமையில் பால்யத்தைப் பேசுகிறோம். அல்லது எந்த உரிமையில் பால்யத்தின் கதைகளை தயக்கமின்றி இவளால் கேட்க முடிகிறது.

”உள்ள போலாம்” படக்கென எழுந்து கொண்டாள். சொல்வதற்கு இதற்கு மேல் எதுவும் இல்லை என்பதைப்போன்ற ஒரு வேகம். பேசியது அத்தனையும் சரிதானா என்ன எண்ணிப்பார்த்துக்கொள் என வாய்ப்புக்கொடுக்கும் ஒரு அசைவு. திரும்பிப்பார்க்காமல் மிதிவண்டியிலிருந்து எழுந்தானா என்பதைக் கூட கவனிக்காத ஒரு அலட்சியம். இந்தப்பெண் எப்படி இத்தனை சிறு நிமிடங்களில் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்திப்போகிறாள். ஏன் அவள் கோபம் இத்தனை சுடுகிறது. ஏன் சிறிய முகச்சுளிப்பு இப்படி சுடு நீரில் அமிழ்த்துகிறது. யாரையும் எதற்கும் ஏற்காமல் தள்ளி வைத்துப்பார்க்கும் மனது இவளை மட்டும் ஏன் இப்படி கட்டி பின் தொடர்கிறது. மறுபேச்சின்றி தன் பாதையில் போகும் ஒரு பெண்ணை எது இழுத்து பதறி ஓடிப் பின் தொடரவைக்கிறது. கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன, உண்மையில் கேள்விகள் அப்பொழுதுதான் தொடங்குகின்றன என்பது அவனுக்கு எங்கோ ஒரு ஆழத்தில் தெரிந்திருந்தது,

ரிபு – 3

பின்னூட்டமொன்றை இடுக

துடியன் பெரும்பாலையின் நினைவுகளிலிருந்து வெளியேறி மழைப்பசுங்காட்டின் முதல் நிழலுக்குள் காலடி வைத்தபோது மழை வெளுத்து நிழல் எழுந்திருந்தது. இருள்காட்டின் மழைப்பொழுதுகள் மேலும் இருளானவை. அவற்றினை மீறி ஒரு முறை எரி உள் நுழையும்போது தனி ஒளி கொண்டு சுடர் விடுகிறது காடு. நனைந்த அகல் நுனி தீபற்றி இருள் விரட்டுவது போல ஆதவன் முகம் பட்டு இலைகளைத் திருப்பி வெளியே பார்க்கிறது. ஆனாலும் ஆழத்தின் இருள் அப்படியே சமைந்திருக்கிறது. வெளியிருந்து பார்ப்பவர்களுக்கான ஒளியையும் அகல் பாதத்தின் இருளையும் அப்படியே கொண்டு நதி பொருள் மரம்விட்டு எரிகிறது காட்டின் அகல். பெருமரத்தின் சிற்றிலைகள் தலைவணங்கி ஒளியை சிறு கொடிகளுக்கும் கொடிகள் தாள்பணிந்து சிறுகாளான்களுக்கும் ஒளியினைப் பகிர்ந்திருந்தன. மென்பனி பயணத்திற்கு முந்தைய இறுதி வணக்கங்களைத் தன் சருகுகளில் வழிந்து அளித்திருந்தது.

மொத்த காடும் சோம்பல் முறிப்பதைப்போல வளைந்து ஒளிக்கு வழிவிட்டு நிலம் பார்த்து சிரித்திருந்தது. துடியன் காட்டின் மீது பாடப்பட்ட பழம்பாடல்களின் சொற்களை ஒரு முறை மீட்டெடுத்தான். சொல்லப்பட்ட மரங்களின் பெயர்களை. அவற்றின் உன்மத்தம் கொண்ட பாடல்களின் மீது உடல் அதிர நரம்பெரிய ஆடிய கணங்களை. மலர்களின் வகைகளை. அவற்றின் கூர் இலைகள் மீதான கனவுகளை. முதல்முறை காடுபார்ப்பவன் கண்ணற்றவர்கள் கண் அடைவதன் கணமொத்திருந்ததை உணர்ந்து சிலிர்த்தான். வறண்ட நாவும் காய்ந்த உடலும் வெடித்த பாதங்களும் வெறிகொண்டு சாட்டின. இதோ கையருகே மரம். இதோ கையருகே மலர். இதோ கையறுகே நதி. கானல்களற்ற பெரும்பாதை எதிரே மூடி ஒளித்துவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அவற்றை அடைவாயாக சிதனே. அவற்றை அள்ளிப்பருகுவாயாக. சொரிந்து சூடுவாயாக என அகம் குரலிட்டது. சலித்த கால்களை வெறியூட்டி கண்மூடி கொஞ்சம் மூச்சிழுத்து காட்டின் உள் நுழைந்தான்.

புது ஈரத்தில் மட்கத் தயாராகும் நிலம் களிமண் வாசனையை காட்டிற்கு பூசியிருந்தது.
மென்பசுமையின் பனித்துளிகளில் சூரியன் சுடர் விட்டது. வெளிச்சத்தின் குரல் இருளின் பாதைகளுக்குள் சின்ன காலடிகள் வைத்து நடந்துகொண்டிருந்தது. மழை கழுவிய மரங்கள் தலைகளைச் சிலுப்பி மிஞ்சிய மழையை மட்கும் வேர்களுக்கு பரிசளித்தது. சிறுதாவரங்களின் மழைவெடித்த வேர்கள் புடைத்து மண்கீறி மேலேறி சூரியன் காண சித்தம்கொண்டு மேலேறின. விதைகள் நிலம் நோக்க ஆளத்திலிருந்து மண்புழுக்கள் கீறி எடுத்துவரக்கூடும். காலடிகளில் கசங்கி ஓசையெழுப்பாமல் மட்கிய இலைகள் நிலத்தில் புதைந்தன. சிறுபறவைகள் மண்டிய இலைகளுடன் சிறகடித்து வழிசமைத்தன. முட்டைகள் உடைத்து வெளியேறும் குஞ்சினைப்போல பறவைகள் காட்டின் இருள் உடைத்து சூரியனுக்கு ஏறி வெம்மை பட்டு மீண்டும் குளிர் இறைஞ்சி கூடுகளுக்குத் திரும்பி தன் குஞ்சுகளை அடைந்து கொண்டன. புதர்களின் கொடிகளின் சிறுவேர்களின் பெருந்தண்டங்களில் நிறம்மாறி குரல் மட்டும் வெளியிட்ட உயிரிகள் சிலிர்த்து குரல்வற்றி மீண்டும் பேரிசையின் தன் பாடல்களை தேடி அடைந்தன.

துடியன் சிறுகூர் கிளை கொண்டு பாத வெடிப்பு நிரடி அனல் நீக்கி முன்சென்றான் . அனல் காய்ந்த அரையாடை தொடைகளை அறுத்து சிவக்கச் செய்திருந்தது. மழைக்காலத்தின் முதற்பனி தொடுகையில் சிவந்த நரம்புகள் குளிர்ந்து அதிர்ந்து சுருங்கி வலி கொண்டன. தொடைச் சிவப்பின்மீது கைக்கெட்டிய இலைகளைக் கொய்து பிசைந்து பூசினான். காடு தன் மருந்துகளை தானே வளைத்து நீட்டியதைப்போல் உணர்ந்தான். எரிந்த தோல் மெல்ல குளிர்ந்து அடங்கியது. தலையெட்டும் கிளைகளில் நா நீட்டி இலை அனுப்பும் மழை தரையடையும் முன்னதாக கொஞ்சம் நாபி நனைத்தான். குளிர்ந்த நாபி முதல்முறை குரல் எழுப்பி காட்டின் நடனத்தில் தன்னை இணைக்க இறைஞ்சியது. நீரறியாத திரிசைடைகளின் மீது சொரிந்து மஞ்சள் மலர்கள் குளிர்வித்தன. குளிர்வித்த மரத்திற்கு சிறுமாரோடம் என பெயரிட்டு அழைத்தான்.அன்னையிழந்த குழந்தைக்கு மார்பினைப் புகுத்தி பசியாற்றும் கன்னித்தாயின் சிறுமார்புகள் நினைவில் எழுந்தன. சூடான அமுதுபோல் அந்தக் குளிர் உச்சம் நனைத்தது. . பெருங்காட்டின் ஒவ்வொரு காலடியிலும் சொல்லில் மட்டும் அறிந்த மரங்களைக் கண்டான். அவற்றின் வண்ணங்களையும். மர அசைவுகளுக்குள் கூட்டமாய் ஆடும் வெறியாட்டின் ஒத்திசைவு ஒளிந்திருந்தைக் கண்டு மனம் நிறைந்தான். உரசும் கிளைகள் ஒன்றையொன்று உடைக்காமல் தலையசைத்து காற்றிற்கு வழிவிட்டதைப்போலிருந்தது.

வண்ணங்களுக்குப் பழகாத கண்களைச் சுருங்கி அசைவுகளையும் மலர்களையும் இலையடையளாங்களையும் கொண்டு பெயர்களைச் சூட்டியபடி முன் நடந்தான். ஏற்கனவே இடப்பட்ட பெயர்கள் காடே தன் நாவில் எழுதிப் பெற்றுக்கொள்வதாகத் தோன்றியது. அனல் நிறைந்து மழை பூசிய கண்கள் சிவந்து எரிந்தன. விழி சுருக்கி மேலும் மேலும் என மரங்களின் பெயர்களை வாய்விட்டுச் சொல்லி செவிவிட்டுக் கேட்டான். உடல் மொத்தமும் மழையாகிப் பொழிந்தவன் போல குளிர்ந்து புது தணலால் எரிந்து அலைந்தபடி இருந்தான். விழைவின் வழியாக வெளியேறும் உயிர்வளி வாய்திறந்து பெருமூச்சுகளை எழச் செய்தது . தன் கரங்களால் தரையறிந்த துடியன் அதன் பசையொட்டி வெயிலில் காட்ட விரும்பினான் . ஒவ்வொரு மரத்தின் பட்டையும் உரித்துச் சுவைத்தான் . ஒவ்வொரு சுவையின் வழியாக தன் குருதியின் வெம்மையைத் தணித்து குளிரோட்டத்தை தனக்குள் எழுப்ப விழைந்தான் . விழிகாணும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நிறமும் கண்க000ளைக் குழைந்து மயக்கு எழுப்பியது . சிறுமீனை கடல் நோக்கி இழுத்துச் செல்லும் நதியின் வேகத்தொடு காடு இழுப்பதை உணர்ந்தான். மெளனம் காய்ந்த நாவினை நீட்டி மரத்திலிருந்து சொட்டும் பசும் இலை நீரை மீண்டும் சுவைத்தான். ஒவ்வொரு மரத்திற்கும் மழை ஒவ்வொரு சுவையை அளித்திருந்தது. மென் கசப்பு. குடல் பிரட்டும் துவர்ப்பு அல்லது நாசியில் வாசம் நிறையும் இனிப்பு.

அனலறுத்த பாதங்கள் மட்கிய இலைகளின் சகதியை அறியும்போது தன் ஒவ்வொரு செல்லிலும் அந்த ஈரத்தைச் சுவைத்துவிரிந்தன . சகதிகள் நிறைக்கும் பாதவெடிப்புகள் தன் முழுவடிவை முதன்முறை அடைந்தன . பனிசொட்டும் மலர்களைச் சூடிய சிகை காய்ந்த மயிர்களைக் களைந்து புதுமயிர்களை முழுதாய் முளைக்க ஏறி ஊறல்கொண்டன . துடியன் வறட்டுக் கரங்களை சிகைகளை விரித்து மழையாட்டினான் . முதல்முறை ஈரம்பட்ட சிகைப்பூச்சிகள் தன் பாதைகளின் மழையை அறிந்து மலர் மிதந்து சருகுகளுக்கு இறங்கின . நீண்ட நகங்களை துடியன் மரப்பட்டைகளை உரிக்கும் இடைவெளிகளில் உடைத்துச் சீர்செய்தான் . ஈரம்படிந்த காலடிப்பாறைகளின் கையுரசி நகங்களை ஒழுங்குபடுத்தினான் . பெருஞ்சிகை அளிக்கும் முதற்கர்வத்தை அனல் காய்ந்து இடம்மறந்த கிளைமயிர்களை மீண்டும் ஒழுங்குபடுத்தினான் . முதலீரம் தொட்ட தோற்செதில்கள் உதிர்ந்து விடைபெற்றன . ஒவ்வொரு மலரும் கசக்கி துடியன் உடல்பூசிக்கொண்டான் . அரையாடையை கிழித்து உறிந்து மறுஆடை புனைந்து அரையில் கட்டினான் . மழையீரத்தின் கரங்கள் பட்ட தொடை இடுக்குகள் சிவந்து கன்றி குளிர்ந்தன . உடல்கூசிச் சிரித்தான் துடியன் . கடைசியாய் சிரித்த பழங்காலம் நினைவுக்கு வந்தது.

புன்னகைகளை எண்ணிக்கொள்ளும்போதே ஆடல் உள்ளே எழுந்தது. கானல் நீருக்குப் பின் பாலைச்சுனைகளில் கால் நனைத்து ஆடிய நினைவுகள் பாதங்களை நிலையழியச் செய்தது. பேராடல்களில் விரல்கோதி மணல் பறக்க எழும் உன்மத்தம் உடல் நடுங்கச் செய்தது. கைகளை வீசி தொலைவின் சிறு இலைகளைப் பிய்த்தெறிந்தான். வெறிகொண்டு கால்களை வீசி மட்கிய இலைகளைச் சாட, காணாத திசைகளில் உடல்வீச தடுக்கும் அனிச்சை அச்சம் கால்களைக் கூசச் செய்ததது. பாலை மணல் நுழையும் காற்றினால் திறந்திருப்பது. ஆடல்களை வரவேற்பது. பசி மயக்கும் நாபி வறட்சியும் கொண்டும் உடலை அச்சமுற வீசி ஆடச் செய்வது. காடு மொத்தமாய் தன்னளவில் மூடியிருப்பவது. பாலையின் திறப்பு கொடுக்கும் தைரியம், மூடிய காடுகளில் அச்சமென கவிந்து இருள் கொள்ளச் செய்கிறது. . சொல்லற்று உடலற்று எழும் ஆடல் காற்றின் திசையை மூச்சின் வழியில் அறிந்து இசைவு கொள்ளும் ஆடல். மூச்சிரைக்க நா துடிக்க நரம்புகள் தெறிக்க உயிர்வளிதனை உன்மத்தம் கொள்ளச் செய்யும் ஆடல். ஆனாலும் பாலைச் சுனைகள் கால் படும் உயிர்கள் அற்றவை. ஆனால் இந்த மட்கிய இலைகளுக்குக் கீழே நிலப்புழுக்களின் பயணம் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடும் என்ற அச்சமே நிலையழிந்து நடை கெடுத்தது.

காடு தனக்குள் சுருங்கிக்கிடந்ததது . செடியில் எழும் காடு மரமாகக் கவிந்து சருகாக அழுகி மண்ணாகச் சமைந்து காடெழுப்பியிருந்தது . நிலமறியா பாதங்களாக மட்கிய சருகுகளுக்குள்ளாக மழை ஈரத்தின் முழு உயிராக தான் அறிந்த முதற்காட்டை துடியன் முழுதுமாய் விழுங்கிட விரும்பினான் . ஒவ்வொரு இலையும் தனக்காக எழுந்தாக எண்ணி அரைத்து பூசிக்கொண்டான் . ஒவ்வொரு மலரும் தனக்காக மலர்ந்தாக எண்ணி சிகைசூடினான் . ஒவ்வொரு கனியும்தனக்காய் கனிந்ததாய் எண்ணி உடைத்துச் சுவைத்தான் . காடென்பது மனிதர்களை முழுதாய் விழுங்கிவிடும் அமானுஷ்ய பெரு மிருகம் . மிருகங்களை ஒளிக்கும் காடு , மனிதர்களுக்கு முன்பாக தன் பல்லாயிரம் கரங்கள் விரித்து எழுந்து நிற்கிறது . ரீங்காரங்களை நிறைக்கும் காடு செவிப்புலனை மயக்குகிறது . மலர்களும் கனிகளும் பின்னெடுங்காலத்துச் சருகுகளும் குழைந்து எழும் மட்கிய வாசனை நாசியை மயக்குகிறது . மழையின் கம்பிகளின் ஊடாக இலை நிழல்களால் எழும் இருட்டு கண்ணை மயக்குகிறது . தீராமழைச்சுவையும் அழியாப்பெருந்தாகமும் நாவினை மயக்குகிறது . பலத்தின் மாயையிலிருந்து உயர்வின் மாயையிலிருந்து இறுக்கத்தின் மாயையிலிருந்து உடலைப் பெருமரங்கள் மயக்குகிறது . துடியன் உளமயக்குகளை அது நிகழும் கணங்களை அதற்கான காலடிகளை எண்ணிக்கையினால் அளந்தபடி காடேகினான் .

காட்டின் இருளுக்கு கண்பழகும் காலம்வரை சித்தனின் புலன்களை காடே நடத்தியது . பிறட்டல் வாசனை எழும் மனமயக்கி வனங்களிலிருந்து காடே அவனை விலக்கியது . பறித்துச் சுவைத்த சிறு இலைகளில் விடங்கள் அவனை அடையவேயில்லை. பெருமிருகங்கள் தொலைவிலிருந்தபடி பேரொலியெழுப்பி பின் தன் பாதை நடந்தன. .காந்தல்சுவை கனிகளின் தோல் கருக்கி விலக்கியது . முறிகிளைகள் பாதைகளைத் தீர்மானித்தன . விலக்கா இருள் மட்டும் பாதங்களை இடறி சருகுகளுடன் அவனை இறுக்கியது . மோதும் மரத்தண்டுகள் பட்டைகிழித்து உடலுரசின . விழுந்தும் எழுந்தும் உடைந்தும் கீறியும் குளிர்ந்தும் எரிந்தும் பிரிந்தும் நிறைந்தும் துடியன் முதற்பாதைகளை வெடிப்பின் பாதங்களால் அறிந்தான் . பெரு அனலுக்குப் பழகிய உடல் சிறு ஈரத்திற்கும் , கொடுங்காற்றின் காதுகள் ரீங்காரத்திற்குள்ளும் சுடுமணல் நிறைந்த நாசிகள் மட்கிய மலர் வாசனைக்கும் பழகின . பேரமைதியென கவிந்திருந்த காட்டினை காதுபழகியதும் இடையற்ற இரைச்சல் இருப்பதை உணர்ந்தன. பிறகு இரைச்சல் தங்களுக்குள் பிரிந்து இலையசைவென மர முறிவென பறவைக்குரலென பூச்சி அசைவென அடையாளம் அறிவித்தன. ஊறாக்கழியொன்றை உடைத்து நிறுத்தி நிற்க முயற்சித்தான் . கழிஉடைந்து மண் எடுத்துக்கொண்டது . உடல் பூசிய இலைச்சாறுகள் பனி நனைந்து வாசம் உண்டாக்கின.

நக்கிச்சுவைக்கும் கடித்து விழுங்கும் உடைத்துத் தின்னும் கனிகள் அவற்றுக்குள் பிரிந்து காடெங்கும் விரிந்திருந்தன. நீண்ட உணவற்ற பாதைகளின் நினைவுகள் அவனைத் தொடர்ந்து எல்லாவற்றையும் சுவைக்க வைத்தது. பறித்துக் கட்டி பயணத்திற்குச் சேமிக்க காடு அவன் மனதினை அனுமதிக்கவில்லை. கண்ணில் படும் தொலைவுகளில் வெவ்வேறு நிறங்களில் பழுத்து வெடித்த உணவுகள் கிளை விரித்து அழைத்தபடி இருந்தன.

கால்கள் தன் பாதையை தானே அறிந்தன . உள்ளார்ந்து ஓடும் அனலின் காற்று உடலை வெம்மை கொள்ளச் செய்தது . ஒவ்வொரு தப்படியிலும் அனல்வெடிப்பின் நீர்கோர்த்து தோல்சுருங்கி பாதங்களின் முழுமையை நிறைக்க முயன்றது . மலர்கள் தொடர்ந்து உதிர்க்கும் மரம் ஒவ்வொரு இலையையும் அசைத்து விட்டிருந்த மழையின் இறுதித் துளிகளை சித்தனின் மீது கோர்த்தது . காய்ந்து பிரிந்த சடையின் நீர்க்கோர்ப்புகளின் ஊடாக மயிரிழைகள் பிரிந்தன . விரல்தொட்டுக்கோதி பிரிகற்றைகளை நீவிச்சேர்த்தான். அனல்வெந்த விரல்கள் நீரறியும்போது தெறித்துக் கோர்த்தன. உடல்வெம்மை புறவெம்மைக்குப் பழகாமல் தன் மயிர்க்கால்களைச் சிலிர்த்தும் தளர்த்தியும் புது நடனம் புரிந்தது. உள்ளார்ந்த மனஒலியின் வெடிப்பு நீர்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் புடைத்துக்கிளம்பியது. அதிரா நடையின் வழி துடியன் தன் ஒவ்வொரு மரத்தையும் கடந்து சென்றான்.

மணல் மஞ்சளுக்கும் மலர் மஞ்சளுக்குமான இடைவெளிகளை கண்கள் கூசி அசங்கி பின் அறிந்து முன்சென்றான். பழுத்த வேர்கொடிகளை பிய்த்து எறிந்தபடி. சிறு கரடுகள் துள்ளித் தாவியபடி. வளைந்த மரங்களில் கால் தொற்றி ஏறி மறுபுறம் குதித்தபடி. மட்கிய இலைவாசங்களை முழுக்க இழுத்து பின் வெளிமூச்சினை விட்டான். வலுத்த பெருமரங்களை ஓங்கி அறைந்து கிளைகளைக் குலுங்கச் செய்தான். ஆடும் விழுதுகளில் தொற்றி ஆடி கொஞ்சம் அறுத்து இடைசுற்றிக் கட்டிக்கொண்டான். அடுத்த விழுதுகள் கைக்கெட்டும்போது தூரத்துச் சிறுசெடிகளை குறித்து எறிந்துச் சாய்த்தான்.

அனல் கொப்புளங்கள் உடைந்து நீர்வடிந்தது. பனித்துளிகளால் புண் துடைத்த குருதி ஒவ்வொரு மயிர்காலின் வழியாகவும் அழுக்கை வெளியேற்றிவிடத் தூண்டியது. தன்புண்களை தானே நக்கித்தீர்க்கும் பூனையின் வெறியுடன் துடியன் தன் உடற்பாகங்களை நீவி நீரை வெளியேற்றினான். வெளியேற்றும் ஒவ்வொரு துளி அழுக்கும் இன்னும் இன்னும் என பனி குடித்தது. பாலையின் உணவாக விரல் நகங்களைத் தின்று நடந்த நினைவு அதிர உரசி அழுக்கு நீக்கும்போது சித்தனின் கண்களின் எழுந்தது. இருள் பழகும்போது அறியும் ஒவ்வொரு உருவமும் முதலில் பேயாக எழுந்து பின் மலராக மலர்ந்து சிரித்தது. கொடுமஞ்சளின் அனலிலிருந்து கண்களின் வெம்மையை சிவப்பும் மஞ்சளும் வெள்ளையுமான மலர்கள் தனக்காக பெற்றுக்கொண்டன. பதிலியாகக் கிடைத்த குளுமையை கண்கள் உள்ளத்தின் துளிகளுக்கு குருதியோட்டத்தை எழச் செய்தது.

கனிந்துதிர்ந்த நாவல்மரங்களின் கரையை நடக்கும்போது வாயில் துவர்ப்புச் சுவை எழுந்தது. உமிழ் நீர் திரட்டி காறினான். அவிந்த கருவண்டுகளை ஒத்த நாவல்பழங்களை உடலில் சிறிது தேய்த்து நாவிலிட்டான். உப்பும் துவர்ப்புமான சுவை வேர்வை மணத்துடன் நாசியிலிருந்தும் எழுந்தது. அலர்ந்து காய்ந்த அடிவயிற்றின் அமிலஎரி அடங்கும் வரை கனிந்த பழங்களையும், பின் சுவைக்கான செங்காய்களையும் பின் பச்சை மணத்திற்கான பசுங்காய்களையும் கடித்துச் சுவைத்து உமிழ்ந்தபடியே நாவல் மரங்களின் கரையைக் கடந்தான்.

கொடிகளுக்குள் ஒளிந்து ரீங்காரமிடும் சிறு பூச்சிகளைப்போல, சிறு நதிகள் ஒளிந்து காடுகளைப் பிரித்து ஓடிக்கொண்டிருந்தது. சிறுகற்களை விரைவுடன் உருட்டி இழுத்துச் செல்லும் சிற்றாறுகள் அடிபாதைகள் அத்தனையும் மணலாக்கியிருந்தது. உருளும் கற்கள் தொடர்ந்து நதிசெல்ல, அசையா பாறைகள் கரைகளென ஒதுங்கி நின்றிருந்தன. சலசலத்தோடும் நதிவழிகளைக் கடக்கும்போது பாசிபடிபடிய துடியன் பாறைகளில் அமர்ந்தமர்ந்து எழுந்தான். வெம்மை உலர்ந்து உடல் குளிர் அறிந்து அமிலஎரி தொடங்கும்போது அடுத்த நதிமுகத்தைத் தேடி அவன் அலையத்தொடங்கினான். மணல்பரப்புகளுக்கும் வீசுஅனலுக்கும் பழகிய உடல் சரலும் நதிஉருட்டிய கற்களுக்கும் மெல்ல தன்னை முகம்மாற்றிக்கொண்டிருந்தது. இன்னொரு முறை பாலைக்கு திரும்பும் தேவையில்லை என்பதே ஆசுவாசமாக இருந்தது. பசியும் எரியும் அனலும் வற்றா நீரூற்றென உப்புமண வியர்வையும் வறண்ட நாவும் நினைவில் எழும்போதெல்லாம் கொடுங்கனவிலிருந்து எழுவதைப்போல உடல் உலுக்கி தனைமீட்டான். குழந்தையின் முதற் நகமணலைப்போல கிடைத்த கனி, மரம், பட்டை செடி அத்தனையும் முகர்ந்து பின் சுவைத்தான். கூழாங்கற்களை வாயிலிட்டு குதப்பி ஓலமிட்டான். காடெங்கும் எதிரொலிக்கும் ஆதிச்சொல்லின் திசையறியும் விளையாட்டென செவிப்பறைகளை கூர்தீட்டிக்கொண்டான்.

குதப்பிச் சுவைத்து எஞ்சும் விதைகளை நதிகளில் உழிந்தான். நதி சிறு நீர்ப்பந்துகளை உருட்டி அவனை உமிழ்ந்தது. சிறுகிளைகளை உடைத்து தூரத்தில் செல்லும் நதிகளை எறிந்தான். நதி எங்கிருந்தோ சில பெருமரத் தண்டுகளைப் பறித்துக் கொண்டுவந்து முதுகில் அறைந்தது. மிகச் சிறு கனிகளைப் பிய்த்து அவன் நதிக்கு படைத்தபோது, தூரத்தின் கனிந்த பழங்கள் நதியின் ஓட்டத்தில் மிதந்து வந்து கால் தொட்டு மேல்செல்லாமல் ஆடிக்கொண்டிருந்தன. நதியினைத் தன் மூத்தோனென வணங்கினான். இளையோனெனச் சீண்டினான். தந்தையென மடி அணைந்தான். அம்மையென் முலைகுடித்தான். அத்தனை நாடகங்களையும் நதியும் இவனுடன் விளையாடியது.

கண்பழகி உடல்பழகி இறுதியாக செவி காடு பழகுகிறது என்றறிந்தான். கண்பழகிய இருளிலும் ஒளிந்து வெளியாகும் ஒளியிலும் குரல்களால் மட்டும் சிறுபூச்சிகள் இருப்பறிவித்தன.. உடல் பதறி ஓசையின் திசையடைந்து புலன்சுருக்கி கண்களைக் குவித்தான். பின் ஓசையின் முகத்தை பேரிரைச்சலின் ஒசையிலிர்ந்து பிரித்து உயிரிகளின் முகம் கண்டான். பின்னரே முகம் ஓசையுடன் இணைந்து உயிரென உருக்கொண்டு நிறைந்தன. உயிர் பின்னொரு பழம் இலக்கிய பெயராக நினைவில் எஞ்சியது. பிறகெப்போதும் ஓசையின் கணத்திலேயே கண்ணும் மெய்யும் உயிரைச் சென்றடைந்துவிடுவதை, அவற்றைக் கண்ட தருணத்தை மீட்டெடுத்துவருவதை அறிந்தான். நினைவுகள் எல்லாம் இறுதியாய் நினைவினைத் தொட்ட நொடிகளை மீட்டெடுத்தலே என உணர்ந்தான். ஒரு ஒலி அதன் சூழலையும் இணைத்துக்கொண்டுவருவதை அறிந்து அதிர்ந்தான். அதிரும் ஒரு மரத்தின் முறி, சற்றுமுன் வேறொரு நதிக்கரையில் இன்னொரு உயிரின் குரலுடன் முறிந்ததை நினைவூட்டியது. ஆடலின் ஒவ்வொரு பெருங்குரலின் உயிரிகளிலும் காடெங்கும் நிறைந்திருக்கும் இசை சிறு உயிர்களின் மொழியிலிருந்தே எழுவதாகத் தோன்றியது. உள்கரங்களின் தன் வாழ்வினை அடக்கிவிடக்கூடும் சிறு உயிரின் குரல் சன்னதம் கொண்டெழுவதைப்போல காடெங்கும் எழுந்து நிறைவதை செவிபழகிய சில நொடிகளில் உணர்ந்து கொள்ளமுடிகிறது. சிறு சிறு குரல்களின் ஒழுங்கின்மைகள் இணைந்து ஒரு பேரிசையை உருவாக்கிவிடுகின்றன. இசைபழகாத காதுகள் மட்டுமே அவற்றை இரைச்சலாக உணர்கின்றன என்றான். பிறகு திரும்பி யாருமின்மையை உணர்ந்து புன்னகைத்தான். விழியும் உடலும் மயிர்க்கால்களும் அறிவதெல்லாம் செவி அறியும் குரல்களையே என்றொரு எண்ணம் எழுந்தது. ஒவ்வொரு உயிரியையும் பிரித்தரியும் விசை உள்ளிருந்தே எழுகிறதே. ஒன்றாகவே இருக்கும் ரீங்காரம் ஒன்றிற்கொன்று ஒத்திருப்பதில்லை என்பதொரு உளமயக்கா அல்லது ஆழ்மனதின் அறிதலா என்பதை அறியாத வண்ணம் துடியன் அக்காட்டின் பெருவளைவிற்குள் செவிப்பறைகளின் வழியாக வளைத்து அறிய முயற்சித்தான்.

சில நாழிகை அலைதலுக்குப்பின் துடியன் அச்சிறுகுன்றின் மீதிருந்த பெருமரத்தை அடைத்தான். பல்லாயிரம் கைகொண்டெழும் கொற்றவை போல அம்மரம் பல நூறு வேர்களை கிளைகளிலிருந்து பரப்பி பெரும்பரப்பில் விரிந்து அசையாமலிருந்தது. இலைகள் பிரித்து உடைத்த தாமரை இலைகளைப்போல பெருத்து நரம்புகள் நீவ உள்ளங்கை அளவிருந்தன. அரைக்கச்சை இலைகளை அறுத்து வீசிவிட்டு துடியன் அம்மரத்தின் இலைகளை காம்புகளால் கட்டி பெருங்கச்சையை அவற்றின் சிறுவேர்களின் ஒன்றினால் கோர்த்து இடையணிந்தான். கால்கள் வீசவும் குறியாடவும் குளிர் இறங்கவுமான பரப்புடன் அவ்வாடை விரிந்து அரை நிறைத்தது. கருமரத்தின் தண்டென நிறைந்திருந்த கால்களை, உள்ளழுக்கு வெளியேறி பிசுபிசுத்த உடலை நரம்புகள் புடைத்த கரங்களை அவ்விலைகளின் நீர்கொண்டே பூசினான். உடல் அறியும் சுகங்களுக்கு எல்லையே இல்லையெனத் தோன்றியது.

விழுதுகளை அறுத்து உரசி, வெம்மைக்கொப்புளங்களை உடைத்தான். பனிதொட்டு நீவி குருதிச்சுவைகளைத் துடைத்தான். நதிக்கற்களை உதைத்து நரம்புகளை உடைப்பெடுத்தான். போதுமென்ற நிகழ் எழுவதாயில்லை. குருதியோட்டம் தீபற்றி இன்னும் இன்னும் என வெறி கொண்டது. கனிகளைச் சவைத்தும் விதைகளை உடைத்தும் அவிக்க அவிக்க அடிவற்றில் எரி மேலும் மேலும் என்றது. பட்டைகளின் துவர்ப்பும், இலைகளின் பசுமையும் கனிகளின் இனிமையும் கொள்வோம் கொள்வோம் என்றது. குளிரை பனியை மேலும் மேலும் என்றது அனல் காய்ந்த உடல். கானல் நினைவுகளை நதிகளில் கழுவ எழுக எழுக என்ற சூடு. நரம்பதிரும் ஓசைகளை மரத்தண்டுகளால் அறைந்து அடைந்தான். உன்மத்த ஆடல்களில் காடு அவனை ஏந்தி எறிந்து தாங்கி பேராட்டு கொண்டது. எறிந்த கிளைகளில் பதறி எழுந்த பறவைகள் சித்தனின் முகங்களில் நகம் உரசி காடு தனது என்றன. மேலும் கிளைகளை எறிந்து காடு தனது என்றான். அகந்தை எழும்பொழுதெல்லாம் சிறு புற்களால் இடறி காடு தானே என்றது. முதற்காலடி பழகும் குழவியின் வெறியாட்டம் கொண்டான். அருகமர்ந்தது பூரிக்கும் தாய் என்றானது காடு. .

ஆடல் வழிப்பாதையின் சுழிந்து அமிந்திருந்த நதியின் அழிமுகத்தை அடைந்தான். நதிக்கரையில் விரிந்த ஆலம் தன் விழுதுகளை நீராட விட்டு கவிந்திருந்தது. பழங்கொத்திகள் பறித்தளித்த ஆலவிதைகளை புழுக்கள் தன் வீடென எண்ணி நெளிந்து வாழ்ந்திருந்ததைக் கண்டான். இலையொன்று பறிந்து கசக்கு முகர்ந்து ஆலம் என்றறிந்தான். காலம் ஆலமென விரிந்து ஆலகாலமாகிறதென்றொரு வரி நினைவில் விழுந்தது. பெரு நரம்புகளை புடைத்து நதிக்கரையினை நிறைத்திருந்த ஆலம் கனிகளை நதியில் எறிந்தபடி இருந்தது. நதி பதிலுக்கு உருளாத கூர்கற்களை வேர்களின் இடைவெளிகளில் எறிந்து சுணங்கி முன் சென்றது. அலையாடும் மரங்களில் வாலில் தொங்கும் மந்திகளைப்போல நதிவெள்ளத்தில் மிதந்த தக்கைகள் ஆலவிழுதுகள் பற்றி திசைமாற்றி தொடந்து மிதந்து சென்றன. அனிச்சையாய் ஒரு முறை ஆலம்பழம் கடித்து கசந்து நதி உமிழ்ந்தான். வேர் இடைவெளியொன்றைக் கண்டறிந்து கால் நதியினை உதைக்க அமர்ந்து ஓடும் நதியை ஊறும் மீன்களை விரல்களால் உரசியபடி பெருமரத்தின் சரிவொன்றில் அமர்ந்து நதியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

உடல்சாய அமரும்போது நதியின் எதிர்ப்புறமாக அப்பெருங்குன்றைக் கண்டான். முழுக்க செவ்வெரி மலர்கள் பூத்துச்சிவந்து தீப்பற்றிய தனிமரத்தைப்போல அக்குன்று எழுந்து முன்னால் நின்றது. ஒழுங்கற்ற காட்டின் முதல் ஒழுங்கென அக்குன்றின் மர வரிசைகளை துடியன் உணர்ந்தான். நிலம் தெரியாத படி செவ்வெரி மலர்களால் நிறைந்திருந்த குன்று உச்சத்தில் செல்ல மெல்லக் குறைந்து மேற்பரப்பின் ஒற்றை குறுமரம் மட்டுமே கொண்டிருந்தது. ஒற்றை குறுமரத்தின் அருகில் பெருமர்க் கிளைகள் முழுதும் நீக்கப்பட்டு பருத்த ஆதிமரத் தண்டொன்று பீடெமன சமைந்திருந்து. அதில் அவள் இருந்தாள். மஞ்சள் ஆடைகொண்டு விரித்த சடையும் பழுத்த நெற்றியும் கொண்டு. அவள் என்பதை தொலைவிலேயே அறிவிக்கும் கண் முகத்தினை மழுங்கச் செய்திருந்தது. அனல் விளக்கில் திரி மையத்தில் எழுந்து நின்றது போல் அவள் மஞ்சள் இருந்தது.
ஆழத்திலிருந்து மேடையின் பீடத்தில் அமர்ந்திருந்தவள் அகல்விளக்கின் ஒளியெனத் தெரிந்தாள். பாலையின் ஒற்றைப்பனை தொலைவிலிருந்து காண்கையில் உருவாக்கும் கானல் போல அவள் பீடம் இருந்தது. மஞ்சள் ஆடையினை மலர்களைக் கொண்டு பிணைத்திருக்கவேண்டும் என்று தோன்றியது. தெளிவற்ற முகம் தொடர்ந்து காண்கையின் ஒளிவடிவாக இருந்தது. மலர்களின் மீதாக மிதக்கும் கருவண்டுகளைப்போல விழிகள் உருவம் கொண்டன. அருகமர்ந்து காதல் கொள்ளும் வேட்கை எழுந்தது. ஆனாலும் பீடங்களற்று குன்றின் உச்சி தனித்திருந்தது. காலடியில் மட்டுமே அடுத்தவர் அமரமுடியும். யட்சி என்றொரு ஒற்றைச் சொல் உள்ளத்தில் நிறைந்தது.

ரிபு-2

பின்னூட்டமொன்றை இடுக

கெளரி,

நான் பெண் வெறுப்பினை அடையாளமாக வைத்திருந்தவன். வெறுப்பில்லை. வெறுப்பென்னும் அடையாளம். சின்னச் சலுகைகளிலிருந்து பெரிய மரியாதைகள் எதிர்பார்க்கும் சுய நலத்திற்கு எதிரான விளையாட்டு. ஒட்டுமொத்தமாக அல்ல. பெண்காதலை மட்டும். தொந்தரவில்லாத தொலைவிலிருக்கும் பெண்கள் அல்ல. அவர்கள் மீது விருப்பமே. அவர்களை அவர்களின் தொலைவில் இருத்தியபடி அவர்களிடம் பழகுவதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. தொலைவிலிருப்பவர்களுக்கான மரியாதைகளை அளிப்பதில் என்னைப்போல் சமர்த்தனில்லை. ஆண்பெண் வேறுபாடின்றி பரஸ்பர மரியாதையை வழங்குவதில் எனக்கு குழப்பமில்லை.

பெண்களை நெருங்கவிடும்போது அவர்கள் அதிகமாக நெருங்கிவிடுகிறார்கள். நம்மை ஒட்டுமொத்தமாக கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு கணத்தையும் அவர்கள் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிக்கிறார்கள். அவர்களை நாம் நெருங்கமுடியாத தொலைவில் இருந்துகொண்டு நம்மை எடுத்தாட்கொள்ளும் கணத்திற்கு அத்தனை தெளிவாக வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களின் நகப்பூச்சு வண்ணத்தை நாம் மாற்ற நினைத்தால் கூட கோபம்கொண்டு உடைத்துக்கொண்டு விலகிவிடுவதாக பயமுறுத்தியபடியே ஆடைகளை தலைமயிர் வடிவங்களை அவர்கள் சொற்படி நாம் மாற்றவேண்டுமென எதிர் நோக்குகிறார்கள். பெருங்கால எதிருக்கு வராமலேயே இன்றைய நாளை மட்டும் அவர்கள் இஷ்டப்படி வாழப்பணிக்கிறார்கள்.

இது என்னால் கூடியதில்லை நான் அவர்களை வெறுத்திருந்தேன். என்னை மாற்ற முயற்சி செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் நான் ஓட ஓட விரட்டியிருக்கிறேன். சொற்களால். அவர்கள் திரும்பி வர அஞ்சும் சொற்களால். விஷம்தோய்ந்த, வெறுப்பு தோய்ந்த சொற்களால் துரத்தியிருக்கிறேன். பேசாமல் இருப்பேன். மூஞ்சைத்திருப்பிக்கொள்வேன். இரவெல்லாம் அழுது வீங்கிய முகத்துடன் வந்து புன்னகைக்காமல் விலகிச் செல்வேன் போனற சில்லறை விளையாட்டுகள் எதுவும் என்னை ஒருபோதும் பாதிப்பதில்லை

அத்தனை ஆடடமும் சலித்து அவர்கள் திரும்பி வரும் இன்னொரு நாளில் மீண்டும் துரத்துவேன். அதே சொற்களால். நான் முற்றிலும் மாறாதாவனாக. இடைப்பட்ட சோக நாட்களுக்காக அவர்கள் என்னிடமிருந்து காரணம் கேட்கும் ஒரு அப்பாவி முகத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது நிச்சயமாக தெரியும் அவர்கள் தொனியில். அப்பொழுதெல்லாம் அ ந் நாட்களில் அவர்களை மேலும் வெறுப்பேற்றுவதற்காகவே அந் நாட்களின் நான் எவ்வளவு சந்தோசமாக இருந்தேன் என்பதைச் சொல்லுவேன். இடை நாட்களின் வெற்றிகள், இடை நாட்களின் கொண்டாட்டங்கள். மிகச்சிறிய சிரிப்பு நிகழ்வுகள். அவை அவர்களைச் சீண்டும். அவர்களின் அகங்காரத்தை. நாம் கண்ணீருடன் திரிந்த நாட்களின் சிரித்துக்கொண்டு நமமைக் கவனிக்காமல் திரிந்திருக்கிறான் என்பது அவர்களின் ஆழ்மன் ஆங்காரத்தைத் தூண்டுவது கண்களீன் அப்பட்டமாகத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து சொல்லியிருக்கிறேன்.

நெருங்கியவர்கள் மட்டுமே நம்மை துன்புறுத்த முடியும் கெளரி. நம் எண்ணங்களை அசைக்க, வாழ்வில் ஒரு அங்கமாக மாறுவதன் முதற்படி அது. புதியவர்களை வாழ்வின் உள்ளே விடுவதில் எனக்கெதுவும் தயக்கமில்லை. என் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் தொலைவில் நிற்கவைத்திருந்தேன். நெருங்கிய ஒவ்வொரு பெண்ணும் தொலைவிற்கு போவதற்கு காத்திருப்பதை அறிந்திருந்தேன். விலகும் பெண்கள் உருவாக்கும் வெற்றிடம் தாங்க முடியாததாக இருக்கிறது. நட்பாக, உறவாக, அத்தனை முகங்களுடன் வருபவர்கள் அத்தனை தொலைவிற்கு அத்தனை முகங்களுக்கான வெற்றிடங்களை உருவாக்கிப் போகிறார்கள்.

என் வெற்றிடங்களுடனே நான் மகிழ்ந்திருக்கும்போது அதை ஏன் இவர்கள் நிரப்பவருகிறார்கள். பிறகு ஏன் அந்த இடத்தை என்னிடம் கையளித்துவிலகுகிறார்கள். அந்த வெற்றிடம் ஏன் மீண்டும் பழைய வெற்றிடமாக இருப்பதில்லை. இந்தக் குழப்பம் இந்த வெற்றிடம் இந்த மாற்றம் என்னை பித்துகொள்ளச் செய்கிறது. வெறியேற்றுகிறது. என் காலங்களை மாற்றிப்போடுகிறது. என் கனவுகளை முகம் மாற்றுகிறது. இதை நான் வெறுக்கிறேன். இந்த வெற்றிடத்தை. இந்த வெற்றிடம் உருவாக்கும் பெண்களை. வெற்றிடம் உருவாக்கும் நெருங்கும் பெண்களை.

தொலைவில் நிறுத்துவது ஒரு எளிய சமன்பாடு. உங்களிடமிருந்து வெளியேறி என் வெற்றிடங்களுடன் என் கனவுகளுடன் என் கூட்டினை சுத்தமாக வைத்திருக்க நெருங்காமலிருபபது நியாயமாக இருக்கிறது. இந்த விலக்கத்தில் என்னை நான் சுதந்தரிக்கிறேன். இந்த கனவுகளை அதன் முகம் மாறாமல் பொத்தி வைத்துக்கொள்கிறேன். என் காலங்களை என் விருப்பப்படி எவருக்குமான ஏக்கமுமின்றி வாழ்ந்து திரிகிறேன். எளிதாக இருக்கிறது அழகாக இருக்கிறது. இப்படியே இருக்க விடுங்கள் என பெண்களை இறைஞ்சுகிறேன்.

பெண்கள் இந்த வெற்றிடங்கள் அறிந்திருக்கவில்லை. இந்த துயரத்தை உணர்வதில்லை. தினம் வருடிச் செல்லும் விரல்கள் ஒரு நாள் இல்லாமலாகும்போது உண்டாகும் வெயிலை மலர்கள் உணர்வது போல விரல்கள் உணர்வதில்லை. உண்மையில் விரல்கள் செடிகளுக்கு வெளியில் இருக்கின்றன. அவை வருடுவதற்கு பெருந்தோட்டமெங்கும் மலர் இருக்கிறது. நான் வருடபடாத மலர் கூட்டத்தில் விரல்களிலிருந்து மறைந்திருக்கும் ஒரு மலராக இருக்க விரும்பினேன்.

விதைகளைப் பரப்பும் பொருட்டு மரம் விட்டு பிரியும் மலர் திரும்பி பார்ப்பதேயில்லை. கூழாங்கற்களை கரையொதுக்கும் நதியலைகள் பிறகு மீண்டும் ஒருபோதும் தொடுவதில்லை. மரமாக கூழாங்கல்லாக கைவிடப்பட்டவனாக வெளியேறியவனாக திரும்ப முந்தைய தேவ கணத்திற்கு திரும்ப இயலாதவனாக என்னால் இருக்க முடியாது. உறவுகளிலிர்ந்து வெளியேறிவிட நினைப்பவன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணுவது முட்டாள்தனம் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே விலகியிருந்தேன்

கெளரி, பட்டாம்பூச்சிகள் பறப்பதற்காக பிறப்பெடுத்தவை. நான் நெடுமரமென நிலைக்காமல் கிடைத்த இளைப்பாறுதல் மரங்களைக் கடந்து பறந்து கொண்டிருக்க நினைப்பவன். என்னால் பட்டாம்பூச்சிகளை ரசிக்கமுடியும். அவற்றைக் கையிலேந்தி பார்த்துக்கொண்டிருக்கலாம்தான். வைத்திருந்தால் இறந்துவிடும். விரும்பிய வண்ணங்களில் இறப்பினை தாங்காதவன் நான். விட்டுவிடக்கூடும். விட்டபின் வண்ணங்களை மற்க்கக்கூடியவன் அல்ல. தாழமுடியாமல் ஏங்கிச்சாகிறவன். இந்த விளையாட்டை வெறுக்கிறேன். கையில் வந்தமரும் பட்டாம்பூச்சிகளை விரட்டிவிடுவது இதற்காகத்தான். வைத்திருந்து பின் விட்டு விடுதலையாகி ஏங்கி செத்து எலலா விளைவுகளின் கண்ணிகளையும் அறுத்துச் சூடி இந்த அலகிலா விளையாட்டில் எந்தப்புள்ளியில் அமரவிரும்பாதவனாக இருந்தேன்.

திருவிழாக்கடைகள் எடுத்துவைக்கப்படும் போது போக விரும்புகிறவனாகியிருக்கிறேன். அந்த மெல்லிய துயரம் ஒரு சிறுகுருவியுடன் இணைந்து அந்த ஆற்றுமணலில் தத்திதத்தி நடந்துபோய்க்கொண்டிருக்கிறது. நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு வேகமூட்டப்பட படக்காட்சியில் உறைந்து நிற்பவனைப்போல துயரத்தையும் பற்வையையும் பார்த்துக்கொண்டே மணல்புதையபுதைய நடந்துவந்திருக்கிறேன். எதையும் வாங்காமல் எதையும் அறியாமல் எதனுடனும் இணையாமல் சுற்றிவருகிறவன் வியாபாரம் முடிந்து கிளம்பிச் செல்கிறவர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறான். அவர்கள் பொருட்களை இன்னும் வேகமாக அடுக்கிறார்கள். இன்னும் கோபமாக மண்பாண்டங்களை தரையில் வைக்கிறார்கள்.

மிட்டாய்கடைகளிலிருந்து எறியப்படும் மீந்த இனிப்புகளை தின்று அலையும் நாய்களை வெறுமனே பார்த்திருக்கிறேன். அவை தலையுயர்த்தி ஒருமுறை பார்த்துவிட்டு சில இனிப்புகளை தூக்கிக்கொண்டு மறைவிடங்களுக்கு ஓடுகின்றன. நான் இனிப்புகளுக்கு காத்திருக்கவில்லை நண்பர்களே என்று மானசீகமாக சொல்லிக்கொள்கிறேன். திருட்டுத்தனமாக மட்டுமே இனிப்புகளைத் தின்னமுடியும் என நாய்களுக்கும் கற்றுக்கொடுத்த மனிதர்களை நான் வெறுக்கிறேன். மனிதர்களிடமிருந்து வெளியேறி அந்த நாய்களுடன் நாயாக அமர்ந்து பகிர்ந்துண்ண முடிந்தால் நிச்சயம் செய்திருப்பேன். ஆனாலும் வெளியிலிருந்து விளையாட்டுகளை பார்த்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.

அலையா துயரத்தின் வாசனை என் நாசிகளுக்கு பிடித்திருக்கிறது. திருடி ஓடும் நாய்களின் கீழ்மை கண்களில் சிரிப்பைத்தருகிறது. இப்படித்தான் வாழ்கிறேன். என் கனவுகளை நானே தேடியலைந்து கண்டடைவதில் ஒரு ஆணவம் உருவாகிறது. வெற்றிபெற்ற ஆணுக்குப்பின்னால் இருப்பவளாக தோழியாக ஆசிரியையயாக கடவுளாகக்கூட பெண்களை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பொதுவாகவே மனிதர்களிலிருந்து விலகி நடக்கிறேன். பெண்களிடமிருந்து விலகிஓடுகிறேன். புரிகிறதா?

தெருவில் அலையும் நாய்க்குட்டிகளை தூக்கிக் கொஞ்சி மீண்டும் தெருவிலேயே விட்டுச் செல்பவர்களை நாய் வெறுக்கிறது. தூக்க எத்தனிக்கும் கரங்களை அந்த விரல்களை குதறி விரட்டுகிறது. உனக்குத்தெரியுமா வீட்டு நாய்களை விட தெரு நாய்கள் ஆக்ரோசம் ஏன் அதிகமாக இருக்கிறதென்று? அவை மனிதர்களை அறிந்திருக்கின்றன. தெருவில் விட்ட விரல்களை. வாஞ்சையுடன் தடவி மெல்ல சத்தமில்லாமல் பின்புறமாக நடந்து மறைந்துவிடுபவர்களை அவை நினைவில் வைத்திருக்கின்றன. கூடவே காலடியில் உரசித்திரிந்த நாட்களையும். அந்த ஆங்காரம் இழப்புகளிலிருந்து உருவானது. இழப்பினை விரும்பாத ஆளமனதிலிருந்து. தலைவருடும் கரங்கள் உண்மையில் சத்தமில்லாமல் விலகப்போகும் நாளைத்தான் அவை நினைவில் வைத்திருக்கின்றன.

நீங்கள் வீட்டிற்கு ஒரு நாய்வளர்க்கிறீர்கள். அதற்கான எலும்புத்துண்டங்களை பத்திரமாக பையில் சுற்றி எடுத்துச் செல்கிறீர்கள். செல்லும் வழியில் தவறிவிடப்பட்ட நாய்குட்டிகள் உங்களுக்கு க்யூட்டாகத்தெரிகின்றன. அதற்கு நாலு எலும்புத்துண்டங்களை போகிற போக்கில் வீசுகிறீர்கள். அதை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நீங்கள் விரும்பவில்லை எனும்போது, நீங்கள் வேலையின் அவசரத்திலிருக்கும் பிற நாட்களில் உங்களால் தலைவருடமுடியாது எனும்போது வீட்டு நாய்க்கு வாங்கிச்செல்லாதபண்டங்கள் நீங்கள் தெரு நாய்க்கு அளிக்க முடியாது எனும்போது எதற்காக அந்த ஆரம்பம். நாளை உங்களை வாலாட்டும் நாய்களுக்கு கல்லெறிகளை அளிப்பதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள் எனில் எதற்காக தெரு நாய்களை அன்பிற்கு பழக்க வேண்டும். வெறுப்பில் குரைக்கும் நாய்களை மெல்ல பழக்கப்படுத்தி அன்பினால் கட்டி வாலாட்டி அழைத்துச் சென்று மிகச் சரியாக உங்கள் தெரு முனையில் ஏன் மீண்டும் சத்தமில்லாமல் பிரிந்து நடக்க வேண்டும்

உங்கள் நாடகங்கள் அலுத்துவிட்டன. அன்பென்பது விலகத்தயாராக எ ந் நாளும் என்பதென்ற உங்கள் சட்டகங்கள் எனக்கு உவப்பாக இல்லை. ஆகவே பெண்களிடமிருந்து விலகியிருக்கேன். அன்பென்ற பெயரில் நீங்கள் எதிர்பார்க்கும் வாலாட்டும் நாய்க்குட்டிகளை உங்களுக்காக உருவாக்கி தருவதில் எனக்கு விருப்பமில்லை. ஓனாய்கள் வளர்க்கப்படுவதற்கல்ல. அவை வாழ்வதற்கு. தன் உணவை தான் வேட்டையாடி உண்டு தனித்து மலை மீது அமர்ந்திருக்கும் பெரும் ஓ நாய்கள் எனக்கு உவப்பாக இருக்கின்றன. மழை மரங்களை ஒட்டி சுற்றிப்படரும் கொடிகளின் வாழ்வினை எனக்காக நான் நினைத்திருக்கவில்லை.

ஆனாலும் நீங்கள் விடாமல் நெருங்கி வருகிறீர்கள். ஓ நாய்களைப்பழக்கிவிட விரும்புகிறீர்கள். அவற்றை ஒரு நாய்க்குட்டியைப்போல புறங்கைகளை நக்கிக்கொண்டு கிடப்பதற்கு பழக்கப்படுத்த விரும்புகிறீர்கள். அடிபட்ட ஓனாய்கள் உங்களை வந்தடையும் நாளின் அவற்றின் குருதியைத்த்துடைத்து காயங்களுக்கு மருந்திட்டு மெல்ல ஆற்றுப்படுத்தி அன்பினை அவற்றின் நினைவுகளில் இருத்திவிட எத்தனிக்கிறீர்கள். எந்தக்கணத்தில் பிறர் குருதி வெளிப்படும்போதும் ஓ நாய்கள் தங்கள் கூர்பற்களை வெளிக்காட்டி மொத்தமாக உறிஞ்சிவிட காத்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிவதேயில்லை இல்லை.

அல்லது அறிந்திருக்கிறீர்களா? அந்தக்கணத்திற்காகத்தான் அத்தனையுமா? எங்கள் கோரப்பற்களை நாங்கள் வெளிக்காட்டுகிறோமா எனில் எப்பொழுது வெளிக்காட்டுகிறோம் என்பதை அறிந்து கொள்வதுதான் உங்கள் நோக்கமா? நான் நான் நினைப்பது போல நான் காட்டில் இல்லையா? உங்கள் சோதனைச்சாலையில் சிறு பெட்டிக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிறு குட்டியா நான்? எந்தக்கணத்திலும் எழுந்துவிடும் ஆறுகளை ஒரே தாவலில் கடந்துவிடும் எனது வேகம் வெறும் கனவா?

உங்கள் மருந்துகள் என்னை மயக்க்த்தில் வைத்திருக்கின்றனவா? என் குருதியை ஆற்றுப்படுத்த நீங்கள் அளித்த மருந்து வாசம்தான் பிறர்குருதியைப்போல் என் நாசி அறிந்துகொள்கிறதா? நான் அடைய விரும்பும் காடு இனி இல்லையா? உங்கள் பூட்டுகளிலிருந்து வெளியேறிச்செல்லும் பாதைகளை நான் அறியப்போவதில்லையா? இந்த மருந்தும் இந்த கூண்டும்தான் என்னிடமிருந்து நினைவாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்போகிறேனா?

காதுகளுக்குள் குரல்கள் ஒலிக்கும் பால்யத்த்தின் நினைவுகளை பிறர் அறிய முடியாது கெளரி. இந்த அடையாளத்திலிருந்து மீட்டெடுக்க பெண்வெறுப்பினை அடையாளமாக்குவது எனக்குப்பிடித்திருந்தது. பதின்மத்தில் உடல் ஆடும் ஆட்டத்திலிருந்து முற்றிலும் வெளியேறி முகம் பார்க்கும் கண்ணாடியைப்போல பெண்களை பார்த்துக்கொண்டிருக்க வெறுப்பு மட்டுமே உதவியாக இருந்தது. அவ்வெறுப்பினை மெல்ல மெல்ல கூர்தீட்டி என் நானை வந்தடைந்தேன். நட்பற்ற வெறுப்பின் முகத்திலிருந்து ஆழ்ந்த நட்புடனான கவனமற்ற சீண்டல்காரனை உருவாக்க ஆண்டுகள் பிடித்தன. ஆனாலும் அதை வெற்றிபெற்று மெல்ல மெல்ல என் கோபுரத்தைக் கட்டினேன்.

பெண்களின் முன்னால் ஒரு நல்ல நண்பனாக, வலிகளை சொஸ்தப்படுத்தும் தந்தையாக, புலம்பல்களை வேடிக்கை பார்க்கும் சக மனிதனாக இருக்கும் அதே நேரத்தில் அவர்களிடம் என்னை உடைக்காதவனாக, என்னை திறந்து காட்டாதவனாக, என்னை முற்றிலும் மூடியவனாக உணர்வற்றவனாக வெறித்த பார்வையும் கசந்த புன்னகையுமாக அவர்களுடன் பெரும் இடைவெளிகளை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.

இந்த முகமூடி அளித்திருந்த சுதந்திரத்தை நீ ஒரு பொழுதும் உணரமுடியாது கெளரி. இது ஒரு பெரு நாடகம். அந்தரங்களுக்குள் இறங்கி ஒரு பல்லாண்டு அனுபவங்கொண்ட சிற்பியைப்போல அவர்களுக்கான தீர்வுகளை வெளி ஆளாக நின்று வேடிக்கைபார்த்தபடி தீர்த்துவைப்பது கொடுக்கும் ஆண்மையின் அகங்காரத்தை ஒரு பெண் எக்காலத்திலும் அறியப்போவதில்லை. சொல்ல விரும்பாத ஒரு சொல்லைக்கூட ஒருவரிடமும் சொல்லத்தேவையில்லாத வாழ்வென்பது கடவுளாக உணரச்செய்வது. எல்லார்கதைகளையும் கேட்டிருப்பவன். எல்லா குறைகளுக்கும் தீர்வு வைத்திருப்பவன். எதையும் குற்றம் சொல்லாதவன். எதன் மீதும் குறையில்லாதவன் என்றொரு முகத்தை வைத்திருந்தேன்.

எந்தக்காயத்தின் மீதும் எத்தனை பெரிய கத்தியைக்கொண்டும் என்னால் கீறி ரணமாக்க முடிந்தது. அவர்களின் அந்தரங்கச்சுவர்களில் என் பெயரை எழுதிக்கொண்டபடி தீர்வுகளை உருவாக்கிக்கொடுத்தேன். புலம்பவிட்டேன். வேடிக்கை பார்த்திருந்தேன். அத்தனை குரூரத்தையும் நம் பெண்கள் அத்தனை இலகுவாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்று இப்பொழுது தோன்றுகிறது. மெல்லிய மனதினை தூக்கிக்கொண்டு அலைகிறவர்களை வெறுப்பதுபோல குரூர மனங்களை அவர்கள் விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.

என் பெண் நட்பு வட்டம் மிகப்பெரியது கெளரி. நீ நம்ப முடியாத அளவு பெரியது. அவர்கள் இந்தக்குரூரத்தை விரும்பி, காது கொடுத்துக்கேட்கும் ஒருவனை விரும்பினார்கள். எந்தக்கணத்திலும் எந்த தொந்தரவையும் அளிக்காது கண்பார்த்து பேசும் என்னை தாங்கிக்கொண்டார்கள். புலம்பல்களை உளவியல் விளையாட்டாக பிய்த்து எறியும் என் குரூரத்தை ரசித்தார்கள். நிறைய அழவிட்டேன். அழுதார்கள். அவர்களுக்கு அது தேவையாக இருந்தது. என் அகங்காரத்தை தீர்த்துக்கொள்ள அவர்கள் தேவையாய் இருந்தார்கள்.

உண்மையில் நான் செய்ததை ஒரு அறுவைச்சிகிச்சை என்றே சொல்வேன் கெளரி. நடுக்கத்தில், பயத்தில். அழுவதற்கான சரியான காரணங்கள் இல்லாமல் , காரணம் தெரியாமல் அழும் வேட்கையுடன் வந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் நான் சீண்டி அழவைத்தேன். அதையே விரும்பி வந்தவர்கள் கைகூப்பி அதைப்பெற்றுக்கொண்டு அழுது தீர்த்தார்கள். அழுது நிறைந்தபின் ஒரு இரவு உறங்கி எழுந்து அதுவரை காணாத முகத்துடன் வந்து நன்றி சொன்ன எத்தனையோ பெண்களை என்னால் காட்டிக்கொடுக்க முடியும். ஆனால் அதில் பிறர் பலரின் அந்தரங்களையும் சொல்லவேண்டியிருக்கும் என்பதால் சொல்வதற்கில்லை.

ஆனாலும், இதெல்லாம் நீ அறியவேண்டும் கெளரி. என் மனப்பெருங்கோட்டையின் மதில்சுவர் மீது நின்று இறங்காமல் ஆசியளித்தவனைத்தான் நீ இறங்கிவரச்செய்தாய் என்பதை நீ அறியவேண்டும். பிறரின் ஆழ்மனக்காயங்களின் மீது ஆடல் புரிந்து கொண்டிருந்தவனைத்தான் நீ சொற்களில் காலெடுத்து அளந்து பேசி சொல் உன்னைச் சீண்டிவிடும் என அஞ்சுகிறவனை உருவாக்கினாய் என்பதை நீ அறியவேண்டும். இடையறாத ஆட்டத்தின் எல்லா மூலையிலும் உன் கண்ணீர் சுவரில் தெரியாமலும் மோதிவிடக்கூடாதென்று மெல்ல மெல்ல ஆடலைக் குறைத்தவனை நீதான் கண்டறிந்தாய் என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும் கெளரி.

பொய்முகங்களில் நெருங்கி வருகிறவர்கள் நிஜத்தின் கோரத்தினை விட்டு விலகி ஓட விரும்புவதன் காரணத்தை நான் அறிய வேண்டும். என்னுடன் நான் பேசிக்கொண்டிருந்த காலத்தில் வெறும் நிழல்களுக்கு உன் பெயரை இட்டுப்போன கதையை எங்காவது சொல்லிவிடவேண்டும். அலைகடலின் முக்ங்களில் தன் சிலைகளை நிறுவிப்போகிற கூத்தினை யாராவது கேள்விகேடகவேண்டும். ஒற்றைப்பறவைகள் தன் இறகுகளை உறைந்த பனிச்சிலைகளின் மீது விட்டு அவற்றை உடைப்பதின் காரணத்தை எப்படியாது அறிந்து கொள்ளவேண்டும்

சொற்கள் அலையடிக்கும் பெருங்காட்டிலிருந்து வெளியேறி மோனத்தில் ஆள்வதிற்கு முன்னதாக. சொல்லற்றுப்போன காலங்களை சொற்களில் மீளுருவாக்கம் செய்யும் விளையாட்டாக. எழுதக்கூடாதென்று சொல்லப்பட்ட நினைவுகளை எழுத்தின் மூலமாக மட்டுமே வெளியேற்ற வேண்டிய துயரத்தை சொற்களை உணவாக அள்ளி கடல்மீன்களுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

அஞ்சிய எல்லாவற்றையும் விலகியிருந்த எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க நீ வந்திருக்கவேண்டும். அலையற்ற பெருங்குளத்தில் மிதக்கும் கற்களை எறிந்து தொடர்ந்து அலைகளை உருவாக்கிப்போயிருக்கவேண்டாம். உணவை உரமாக்கிக்கொண்டிருந்த ஒரு மண்புழுவை எடுத்து நீ தார்ச்சாலையில் விட்டுப்போயிருக்கவேண்டாம். வீழத்தயாராக இல்லாத ஆழவேர் மரங்களை மெல்ல அசைத்து சிறுகாற்றில் ஆட்டும் நாணல்களை நீ உருவாக்கியிருக்கவேண்டாம்.

எதற்கெல்லாம் அஞ்சியிருந்தேனோ எதற்கெல்லாம் விலகியிருந்தேனோ அதிலேயே என்னை ஆழ்த்திச் சென்றிருக்கவேண்டாம். பிறர் குருதியில் எழுதப்பட்ட விதிகளை அழித்து என் குருதியில் அதே விதிகளை எழுதச் செய்திருக்கவேண்டாம். இது ஏற்கனவே தெரிந்தது. இதற்காகவே நான் விலகியிருந்தது. இதிலிருந்துதான் என்னை காத்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே அறிந்ததை மிக அழுத்தமாக மீண்டும் ஒரு முறை நீ உருவாக்கிச் சென்றிருக்கவேண்டாம் கெளரி. இந்தச் சொற்களை எழுதாமலேயே உணர்ந்திருந்த காலத்திற்கு நான் திரும்பிச்செல்லவிரும்புகிறேன். இந்தக் கதைகளை யாரோ ஒருவருவருடைய கதைபோல விலகிச் செல்கிறேன். சொற்களின் ஆடல்களிலிருந்து மெல்ல மெளனத்தின் உயர் மலையுச்சிக்கு நான் சென்று சேர விரும்புகிறேன்.

அலைகளின் வெளியிருந்து கடலாழத்தைக் கணக்கிடுபவனை கன்னிகள் எதற்காக உள்ளே அழைக்கிறார்கள். இடைவெளிகளற்ற பெருந்தொலைவிற்கு அழைத்துச் சென்றபின் மெல்ல விலகிச்செல்ல எந்தத் தருணத்தில் முடிவெடுக்கிறார்கள். நெருங்குதல் ஒரு விளையாட்டாகவும், விலகுதல் ஒரு தேவையாகவும் என்று முடிவெடுக்கிறார்கள். நெருங்குதலின் வேகம் விலகுதலில் ஏன் கூடுவதில்லை. பறித்த பழங்களை தயக்கத்துடன் வேரருகில் வைத்துப்போகும் குழந்தையைப்போல, விலகும்போது ஏன் அத்தனை தயக்கமும் துணிவின்மையும்?

நீங்களே அறிந்திருக்கிறீர்களா மரத்திலிருந்து பறித்த கனிகள் ஒருபோதும் தண்டுகளுக்கு திரும்பாது என்று? பழைய காலத்திற்கு திரும்பிச் சென்றுவிட அம்மரத்தால் முடியாதென்பதை அறிந்து ஏற்படும் குற்றவுணர்ச்சி பாவனைதானா விலகுதலின் தயக்கங்கள்? இந்த விளையாட்டுகளை வெறுத்து இதிலிருந்து விலகியிருக்க விரும்பினேன். நெருங்கிப்பின் விலகும் ஆடல்களில் பங்குகொள்ளாமல் தள்ளியிருந்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் தூரத்துப்பனையாக இருந்துகொள்ள விரும்பினேன்.

கரைகளை உடைப்பதற்கென்றே நடுக்கடலில் உருவாகி வரும் அலைபோல எங்கிருந்தோ வந்து என் வேலிகளை நிலமதிர பிடுங்கி எறிந்தவள் நீ. என் நாடகங்களை முற்றிலும் நிறுத்தி என் ஒப்பனைகளைக் கலைத்து முகமற்றவனாக நிலையழிந்து நிற்கச் செய்தவள். சணல்கயிறுகளில் கட்டப்பட்ட மாமத யானைகள் வெறிகொண்டு விலக ஒற்றைப்புள்ளியில் அறைந்த நிகழ்வு நீ. பாலையில் தனித்தலையும் ஒட்டகங்களை பதறியோடச்செய்யும் மணற்புயல் அல்லது ஆற்றங்கரையில் கடிவாளமற்று ஓடிக்களைத்து இறக்கும் குதிரையின் முதற்சேணம் இரவுப்பறவையின் தூக்கமழிக்கும் ஒளி அல்லது பகல்பறவையின் இருள் நிலம்.

இந்தக்கனவிலிருந்து என்னை நானே எழுப்பிக்கொள்ள முயற்சிக்கிறேன். என் பழைய ஆடைகளை மீண்டும் எடுத்து அணிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மீண்டும் பழைய மனதிற்கு திரும்பிச் செல்ல வேண்டுகிறேன். ஆனாலும் எழுகிறது எங்கிருந்தொ ஒரு சொல். ஒரு பெயர். சிறு நிகழ்வு. ஒரு தென்றல். அல்லது எங்கோ நிகழ்கிறது ஒரு கொடும் போர் எங்கோ விளைகிறது ஒரு முதல் நெல்மணி. மீண்டும் என்னை இழுத்து உன்னிடம் கொண்டு சேர்க்க. அடுக்கிய சட்டங்களை உடைத்து வெளியேறிச் செல்ல. கட்டற்ற பெரும் கனவிற்கு மீண்டும் தள்ள. ஒரு அற்புத கணம் மீண்டும் நிகழ்ந்து மீண்டும் வெற்றுக்கோப்பையாக நிலவொளியில் காய.

அத்தனை அகங்காரங்களையும் மீறி உன்னருகில் அமர்ந்திருந்த சில நிமிடங்களில் உணர்ந்ததென்ன? எடையிழந்த இறகு நீரில் மிதக்கையில் தொட்டுச்செல்லும் தென்றல் கொடுக்கும் அசைவை மனமாகக் கொண்டிருந்த நிகழ்வு எங்கனம் நேர்ந்தது. எதை உன்னிடத்தில் கண்டெடுத்தேன். எதை இன்று என்னில் இன்மையாக உணர்கிறேன் எதற்காக காத்திருக்கிறேன். எதற்காக இன்னபிற பெண்களில் உன்னைத் தேடி கண்டடைய முடியாமல் தோற்றுப்போகிறேன். காமமற்ற இந்த உணர்விற்கு எப்படி நான் என்னை ஒப்புக்கொடுத்தேன்?

யாரை நான் இப்பொழுது தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் இன்னும் அறியவில்லை கெளரி. யாருக்காக இந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்து மறக்காமல் இருக்கிறேன் விலகிச்செல்லாமல் இந்த மனமயக்கி வனங்களுக்குள்ளேயே அலைந்திருக்கிறேன் என்பதை நான் அறிந்திலேன். அந்த வெறுப்பு முகமூடிகளை எங்கே தொலைத்தேன் என்பதை நிச்சயம் நான் அறிந்திருக்கவில்லை.

தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறேன். நீ முற்றிலுமா என் கனவுகளிலிருந்து வெளியேறிவிட்டாய் என்றறிந்த பின்னரும். இன்ன பிற சொற்கள் யாவும் யாருக்காக எழுதப்படுகின்றனவோ அவர் சீண்டலுக்குக் கூட சாத்தியமில்லை என்றறிந்த பின்னரும் எழுதிக்கொண்டிருக்கிறேன். உன்னை அடைதலா, இல்லை பழைய என்னை மீண்டும் அடைதலா என் விருப்பமென்ன என்பதை நானே அறியாமல் இருக்கிறேன். நான் தேடுவது பழைய உன்னையா இல்லை இத்தனை ஆண்டுகள் கழித்தும் நீ மாறாமல் இருக்கக்கூடும் என்றொரு முட்டாள்தனமான ஆசையா என்பதை நான் அறிகிலேன். திசைமாறி உதித்து ஒருவேளை நீ திரும்பி வந்தால் அடையப்போவது எந்த கெளரியை என்பதில் குழப்பம் தீராமலிருக்கிறது.

ஆனாலும் அறிந்து கொள்ள முடிகிறது . விழைவு மட்டுமே மனிதர்களை தொடர்ந்து வாழவைக்கிறது. தூரதேசத்தின் கனவுதான் தொடர்ந்து நடமாட வைக்கிறது. வாழ்வின் மீதான பிடிப்பென்பது எதையாவது தேடுவது. திரும்பிவராத ஒன்றுக்காக காத்திருப்பது. ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஓய்வினை நினைத்து வேகமெடுப்பது போல. பயணத்திலிருப்பவர் சென்றடையும் தூரத்தில் கனவை வைப்பதுபோல. செல்வதற்கு பாதைகள் அற்றவர்கள் இல்லாத தேசங்களை கனவுகளில் உருவாக்கியதைப்போல் உருவாக்கி வைத்திருக்கிறேன் உன் மீதான விழைவை.

திரும்பிப்பார்க்கும்போது இந்தக்காலங்கள் ஒரு கனவாக மிச்சமிருக்கிறது. நினைவுகளும் கனவுகளும் கலந்துவிட்ட ஒரு மீப்பெரு சித்திரம். இச்சித்திரத்தில் எது உண்மை எது பொய் என்றறியறியமுடியாத பெரு நிகழ்வுகளின் தொகுப்பு. எல்லாவற்றையும் உண்மையென நம்ப விரும்பும் மனதிற்கும் எல்லாம் பொய்யாக இருக்கக்கூடுமென்ற நிகழ்வுதகவுக்கு அஞ்சும் நனவிலிக்குமான போராட்டம். இந்தப்போராட்டத்திலிருந்துதான் விலகியிருக்க விரும்பினேன் கெளரி. நிகழாத வாழ்வின் நினைவுகள் தூக்கத்தில் நழுவும் குழந்தைகைப்பொம்மையைப்போல தவறவிட விரும்பாமலும் பற்றியிருக்க வாய்ப்பின்றும் விளையாடிக்கொண்டிருக்கும் இந்த சூழலை நான் அஞ்சினேன்.

விலகியிருத்தலின் சுதந்திரம் நெருங்கிப்பின்விலகுதலில் அழியும் கணத்திற்கு அஞ்சினேன். மெல்ல என் பனிக்கட்டிச் சுவர்களை உடைத்தவள் நீ. விலகுதலுக்காக் உருவாக்கி வைத்திருந்த மதிற்சுவர்களை தகர்த்தவள் நீ. எதன் மீதும் பற்றற்ற பெருங்காலத்திலிருந்து சிறு நிகழ்வுகளுக்கு நெகிழ்ந்து கண்ணீர் சிந்தும் காலத்திற்கு என்னை அழைத்து வந்தவள் நீ. விலகுதலின் சுவையின் அதன் பெருங்காவிய ஆடலை நிகழ்த்திப்பின் பிரிவதற்காக அத்தனை தொலைவிலிருந்த சிறுசெடிக்கு பனித்துளிகளை வேர்தொட அனுப்பியவள் நீ.

காயங்களுக்கு அஞ்சுதல் வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதங்கள் அற்றவர்களும் பாதுகாப்பின் அங்கிகளை அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிகளை அழித்து அகங்காரங்களை அழித்து நிராயுதபாணிகளாக நிறுத்தி பிறகு வடுக்களை விட்டுச் செல்வது எந்த தந்திரத்தின் போர்முறை கெளரி?

– நந்து

ரிபு – 1

பின்னூட்டமொன்றை இடுக

நந்து ரயில் நிலையத்தின் படிகளை விட்டிறங்கி எதிரில் மெதுவாக விடியத்தொடங்கியிருந்த பாதையைப் பார்த்தான். மழை சுத்தமாக நின்றிருந்தது. இரவெல்லாம் தூங்காமல் மழைபார்த்தபடி ரயிலின் படிகளில் அமர்ந்திருந்தது இப்போது கண்களை கரிக்கச் செய்தது. ரயில்படிகளின் மெல்லிய காலடிப்பொட்டுகள் அழுத்தி தொடைகளின் கன்னியிருந்தது ரத்தம்பாய்ந்து நரம்புகளை இழுத்துக்காட்டியது. படிகளை விட்டிறங்கி எதிரில் இருந்த டீக்கடை தடுப்புக்குள் நுழைந்து தோள்பையை இறக்கி கீழே வைத்துவிட்டு நெட்டிமுறித்துவிட்டு. டீக்கடைகளுக்கே உரிய இனிய சிகரெட் மணத்திலிருந்து கொஞ்சம் விலகி நின்று கைகளை உரசி சூடாக்கி கன்னங்களில் வைத்துக்கொண்டான். ஆறுமாதங்களுக்கு முன்னதாக அதே டீக்கடையில் முதல் சென்னை பயணத்திற்காக பெட்டியுடன் அமர்ந்திருந்த நாட்களை ஒருமுறை எண்ணி சிரித்துக்கொண்டான். முதல் பயணம் கொடுக்கும் பயமும் முதல் வேலை கொடுக்கும் தைரியமும் எப்போதும் நினைவிலிருக்கவேண்டும் என்று தோன்றியது.

முந்தைய இரவின் மழையில் எங்கிருந்தெல்லாமோ அடித்துவரப்பட்ட நெகிழிப்பைகள் சாக்கடைக்குள் நீர் புகுந்துவிடாமல் காற்றில் படபடத்தபடி தடுத்துக்கொண்டிருந்தன. டீக்கடைக்காரர் நீண்ட குச்சியை வைத்து ஒவ்வொரு பையாக குத்தி வெளியிலெடுத்து விட்டுக்கொண்டிருந்தார். நீர் நிறைந்து உப்பிய பைகள் ஒவ்வொன்றாக சாக்கடைக்கு மேலாக சாக்கடையில் வழிந்துவிடாமல் பத்திரமாக ஓடிக்கொண்டிருந்த குறு நீரோட்டங்களில் கலந்து அடுத்த கடையைப்பார்த்து சென்றுகொண்டிருந்தது. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ மெல்லிய குரலில் எங்கிருந்தோ வழிந்தது. ‘அண்ணே ஒரு காப்பி’ நந்து புகைநெடி தாங்காமல் இன்னும் சற்று தள்ளி நின்ற பிறகு குரல்கொடுத்தான். ‘இருடே வாரேன் உன் அவசரத்துக்கு வந்தம்னா மழைத்தண்னிலதான் காப்பி போடணும்’ சிரித்துக்கொண்டே கோலப்பன் குச்சியை பாய்லர் தடுப்பின் மூலையில் சாய்த்துவைத்தார். கூரையின் மழை நீர் வழியும் பிளாஸ்டிக் ட்ரம்மில் கை நனைத்து சாரத்தில் துடைத்துக்கொண்டார். சிறுமுடிகள் மறைத்திருந்த வழுக்கையை நன்கு நீவி இன்னும் கொஞ்சம் மறைக்க முயற்சித்து பிறகு தோற்று கடைக்குள் நுழைந்து காப்பிக்கான காரியங்களில் ஈடுபட்டார்.

மழை நீர்ப்பாதைகள் தார்ச்சாலைக் கழுவி செம்மண்கரைகளைப் புரட்டி மீண்டும் தார்ச்சாலைகளில் படியச்செய்து விளையாடியபடி வடிகால்களைத் தப்பி ஒரு விளையாட்டைப்போல ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். நீரில் அடித்துச் செல்லப்படும் இலைகள் உருட்டிச்செல்லப்படும் கற்கள் பெரிய நதியில் நீந்திக்கொண்டிருப்பதாக கடலின் ஆழத்தில் விளையாடிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்கும்போதே காப்பி வந்தது. ‘என்னடே பகல்லையே கனவு கண்டுட்டு இருக்க.. வீட்டுக்குப்போறதா இல்லியா’ என்றார் கோலப்பன். ’என்னண்ணே காப்பி நல்லாருக்குல்லா வீட்டுக்குப்போனா உங்க காப்பி குடிக்கமுடியுமா சொல்லுங்க’ நந்துவும் சிரித்துவைத்தான்.

’ண்ணே பக்கத்துல கடை எங்கண்ணே இருக்கு’ தயங்கிக்கேட்டான். ஏம்டே உங்கப்பண்ட்ட சொல்லணுமா… போய் ஆறுமாசம் ஆகல அதுக்குள்ள பழகிட்டியாக்கும் உனக்கேம்டே இதெல்லாம் போனா பொழப்பப்பாத்துட்டு வீட்டுக்கு வந்தமான்னு இல்லமா பழக்கம்லா பழகிட்டுவந்திருக்கான்’ சொந்த ஊர் முகங்கள் முழுமையாய்ப்பழகிப்போனதின் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. எந்தப்பழக்கத்தையும் வீட்டுக்குத்தெரியாமல் மறைத்துவிடமுடியாது . யாராவது எங்கிருந்தாவது பார்த்து எப்படியாவது வீட்டிற்கு தகவல் அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் இப்படி குறுக்குசால் விழுவதும் உண்டு. ‘எனக்கில்லைண்ணே பயலுவளுக்கு.. ட்ரீட் வைக்கலாம்னு.. ‘

”ஆமாடே பூனைகளெல்லாம் சேர்ந்து மீனப்பத்திரமா பாத்துக்கப்போறீயன்னு கடை எங்கிருக்குன்னு எங்கிட்டியே கேட்க. ஆனாலும் மெட்ராஸ் பெரியமனுசன் சின்னமனுசன் மரியாதை எல்லாத்தையும் உறிஞ்சிட்டுதான் அனுப்புதுல்ல. நீ கிளாஸ்ஸ வச்சுட்டுப்போடே, காச உங்கப்பன்கிட்ட நான் பேசி வாங்கிக்கிடுதேன்” பேச்சு அபாயத்திற்குப் போவதற்கு முன்னால் தடை போடத்தோன்றியது. காசை பர்ஸிலிருந்து உருட்டி பாய்லர் தடுப்பின் மீது வைத்துவிட்டு நகர்ந்தான். அருகிலிருந்த மின்கம்பத்திற்கு கீழே குத்தவைத்து அமர்ந்திருந்த அவன் எழுந்து வந்தான். ‘கடையா… கட்டிங்கா.. எனக்கொண்ணு சேர்த்துவாங்குவன்னா சொல்லு நாங்கூட்டிப்போரேன்” ‘இல்லண்ணே பிரண்டுக்கு.. ‘ தெரியும்டே எல்லா பிரண்டும். கட்டிங்க் உண்டுமா கிடையாதான்னு சொன்னா நடையக்கட்டுவேன்.. ’ ’சரி வா வாங்கித்தரேன்”

எந்தத்தருணத்தில் மரியாதை இறங்கியதென்று நந்து சட்டென்று துணுக்குற்றான். அவனுக்கு வயது நிச்சயம் முப்பதுக்கு மேல் இருக்கும். நாடியைவிட்டு கீழிறங்கத் தொடங்கியிருக்கும் தாடி. தண்ணீர்விட்டு படிய மேல் நோக்கி இழுத்துசீவப்பட்ட தலை. முழுக்கச் சிவந்த கண்கள். காலையின் முதல் ரயிலுக்கே கடைக்குப்போகிறவர்களைக் கண்டறிந்து கட்டிங் கேர்க்கும் தீர்க்கமான மனம். ஆனாலும் கடைசி அடையாளம்தான் மரியாதையைக் குறைத்திருக்கவேண்டும் . குடிப்பது அதுவும் இரந்து குடிப்பது அதுவும் விடிபகலில் தயாராக இருப்பது குழப்பமாக இருந்தது. என்ன பழக்கம்..

‘அந்தா செவப்புத்துண்டு போட்ருக்கான்ல அவண்ட்ட ஒரு கட்டிங் சொல்லிடு’
‘யாருக்குன்னு’
‘சும்மா என்னைய கையகாட்டி சொல்லு. அவனுக்குத் தெரியும்’

மழையில் சதசதத்துக்கிடந்தது டாஸ்மாக். பழைய தியேட்டரை, ஒருவகையில் டூரிங் டாக்கிஸ் அது, அதை எடுத்து டாஸ்மாக் ஆக்கியிருந்தார்கள். டிக்கர்கவுண்டரின் கைவிடும் சிறுபொந்துகளை மொத்தமாக உடைத்து பெரிய அழிக்கம்பி போட்ட கதவு. இடைவெளிக்குள் கைவிட்டு பாட்டில்களை வாங்கிக்கொள்ளும்படி. தியேட்டருக்கான வலது பக்கத்துப்பாதை பார் என எழுதி அம்புக்குறியிடப்பட்டிருந்தது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த கூம்பு ஸ்பீக்கர்கள் தொடர்ந்து பாடல்களை மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கக்கூடும். முருக்குக்காரர்கள், ஐஸ்க்காரர்கள், இன்னும் நொறுக்குத் தீனிகள், தண்ணிப்புட்டிகள் எல்லாவற்றிற்கும் குடிகாரர்களிடம் வேலையிருக்கிறது. திரைமட்டும் என்னவாகியிருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை. போய்ப்பார்க்கும் துணிச்சலும் இல்லை. கடை வரை வந்ததே பெரிய ரிஸ்க். யாராவது பார்த்து எதையாவது சொல்லக்கூடும் அல்லது ..

“ஏ என்னடே வேணும்..”

”ஒரு புல்லு.. அந்தா நிக்காருல்லா அவருக்கொரு கட்டிங்”

“புல்லுன்னா எதுவேணும்.. கரெட்ட்டா சொல்லுவீயா’

“தெரியலைண்ணே நீங்களா நல்லதா ஒண்ணு குடுங்களேன். பசங்களுக்கு பார்ட்டி…”

“இந்தா இத எடுத்துட்டு போ. காலேஜ் பயலுவளே இதத்தான் வாங்கிட்டுப்போறானுவ”

காசைக்கேட்டு மொத்தமா குடுத்தான். கட்டிங்கிற்கான காசு எப்படி தூரத்தில் சுவரோரமாய் சாய்ந்திருப்பவனைப்போய்ச்சேரும் என்று தெரியவில்லை. கடையைவிட்டு வெளியேறும்போது சுவரில் சாய்ந்து பீடி ஊதிக்கொண்டிருந்தவன் அங்கிருந்தே கையை துதிக்கையைப்போல தூக்கி ஒரு சல்யூட் வைத்தான். அவனது குடிக்கான ஒரு பொழுதா அல்லது சிறுதுளி பெருவெள்ளக்கணக்குகள் எதுவும் இருக்கிறதா என்பதை யூகிக்க முடியவில்லை. கடையைவிட்டு வெளியேறி வீட்டிற்கு நடக்கத்தொடங்கினான். பச்சை நிற பாட்டில் பிளாஸ்டிக் கவரிலிருந்து வெளியேறி பனியன் ஜட்டிகள் சூழ ஆளத்தில் கனத்துக்கிடந்தது.

O

வீட்டிற்கு வந்து சாரத்திற்கு மாறி மாடியறையில் கட்டிலில் போய் விழுந்தான் . விடிபகலின் மெல்லிய அனல் கலந்த காற்று தூரத்து குளத்தின் செம்மண் கலந்த நீர்வாசத்துடன் வீச அப்படியே தூங்கிப்போனான். எழுந்தபோது வெயில் தாழ்ந்திருந்தது, மணி மூன்றைக் கடந்தது. திடீரென கீழே தோள்பையில் வைத்திருந்த பாட்டில் நினைவுக்கு வர வீட்டில் யாரும் எடுத்திருக்கக்கூடாதே என பதறியது. கீழிறங்கிவந்தான். தோள்பை அப்படியே எடுக்காமல் இருந்தது. பையிலிருந்து துணிகளை எடுத்து வாளியில் நிரப்பிவிட்டு உள்ளாடைகளுக்குள் ஒளிந்திருந்த புட்டியை எடுத்துப்போய் புத்தக அடுக்குகளுக்குள் ஒருக்களித்து வைத்தான். அலைபேசியை எடுத்து மீண்டும் மாடியறைக்கு ஏறி சந்துருவை அழைத்தான்.

“டேய்”

“ம்ம் வீட்லதான் இருக்கேன்”

கேட்கும்முன்பாகவே வீட்டிலிருப்பது வருகின்றதால் அருகில் அப்பா இருப்பதாக அர்த்தம். நந்து சிரித்துக்கொண்டான். இதெல்லாம் ஒரு பழக்கமாகவே பதின்மத்தில் ஊறிவிடுகிறது. யாரிடமிருந்தோ யாருக்கோ தொற்றி யாரவது இதை சம்பிராதயாமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“சரி விடு. பாட்டில் இருக்கு. நைட்டு வழக்கம்போல பார்ட்டி உங்கவீட்லையே வச்சிரலாம்ல… இல்ல ஸ்டேசன் போயிரலாமா”

“அதெல்லாம் பிரச்சினையில்ல. நீ நைட்டு கிளம்பி வா. தங்கச்சி பிரண்ட்ச் இருப்பாங்க. ஷார்ட்ஸ மாட்டிட்டு வந்துராத. ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிக்க”

“சரி அப்பாக்கு ஒரு ஹாய் சொல்லிவை. நைட்டு பாப்போம்”

போனை அணைத்து டேபிளில் எறிந்துவிட்டு மீண்டும் கட்டிலில் படுத்தான். முந்தைய இரவின் மழை ஓட்டுக்கூரையின் மீது பொழிவது போல் இருந்தது . அதிகாலையின் மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் தூரத்தில் ஒலிப்பதான பிரமை. சிறுவயதில் மடியமர்த்தி சீட்டுக்கச்சேரியின் நடுவில் கதலிபழ வாசனையுடன் முத்தமிட்ட சித்தப்பாக்கள். அவர்களை அருகமர்ந்திருந்த சில்வர் டம்ப்ளர் போதைகள். வெகுகாலத்திற்கு பிறகு நண்பர்களால் திரும்பிவந்த அதே கதலிப்பழ வாசனை. ஆளற்ற ரயில் நிலையத்தில் வெயில் சாய்ந்த மாலைகளில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த கல்லூரிக்காலங்கள். ஆரம்ப குடி இளைஞர்கள் முதற்போதையில் அடையும் பிறழ்வு விளையாட்டுகள். மப்பாகல மப்பேறல மப்பாகல என முதல் கிளாஸிலிருந்து கடைசியாய் கிளம்பும்வரை புலம்பிக்கொண்டேயிருந்த நண்பர்கள். நந்து இதுவரை குடித்ததில்லை. பெரிய காரணங்கள் எதுவுமில்லை. பணம். வீட்டில் வாங்கும் காசில் குடிப்பதைக் குறித்த தயக்கம் இருந்தது. அதுவும் யாராவது குடிப்பதற்கு காசு தந்திருக்கிறார்களா.. நோட்டுகளுக்கு, பாடங்களுக்கு, கல்லூரிக்கட்டணங்களுக்கு என ஏமாற்றி வாங்கும் காசுகளைத் திரட்டி கோயில்தீர்த்தத்தைப்போல் குடித்து கோயில் யானையைப்போல் மூத்திரம் விட்டு… போதையில் என்ன இருக்கிறது இந்த கதலிப்பழ வாசனை என்ன பெரிய சந்தோசத்தைக் கொடுத்துவிடமுடியும். சுற்றியிருப்பவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தன் வழியை தான் அறிவதற்கு குழந்தையின் மன நிலை போதுமே எதற்காக தனியாக ஒரு செலவு ஒரு ஏமாற்று ஒரு மூளை மயக்கம்.. என்னன்னெவோ நினைவுகள் தொட்டு தொட்டு ஓடிக்கொண்டிருக்க படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியில் வந்தான். இருளத்தொடங்கியிருந்தது. வயற்பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. அருகிலிருந்த வேப்பமரக்காற்று கூட்டினை அடையும் பற்வைகளைக் கலைக்காமல் மெல்ல அசைந்துகொண்டிருந்தது. தெருவிளக்குகளும் வீட்டின் மஞ்சள் வெளிச்சங்களும் மெல்ல மெல்ல தொடங்கியிருந்தன.

கிராமத்தின் தெருக்களில் இரவு ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. வீடுகள் சோகையான மெல்லிய மஞ்சள் விளக்குகளில் தன் முகத்தை பார்க்கத் தொடங்குகிறது. இளஞ்சோடிகளை மட்டும் சமையலுக்கு விட்டு குழந்தைகளையும் புத்தகங்களையும் தூக்கிக்கொண்டு பெரியவர்கள் திண்ணைகளுக்கு நகர்கிறார்கள். நதிபோக்கில் உருட்டும் கூழாங்கற்களைப்போல இந்த விளையாட்டு இவர்களுக்கு பழகியிருக்கக்கூடும். நந்துவிற்கு சிறுவயதில் வீட்டிற்கு வெளியில் அனுப்புவதற்கு மறுப்பு சொன்ன நாட்கள் நினைவுக்கு வந்து மெல்ல சிரித்துக்கொண்டான். நாட்கள் ஓடும்போது வயது அன்பின் புதிய முகங்களை காட்டியபடியே இருக்கிறது. முந்தைய நாளின் அன்புகள் இன்று வேறொன்றாக இருக்கின்றன. இன்றைய நாளின் அன்பு நாளை வேறு பெயரில் அழைக்கப்படக்கூடும். வீட்டிற்குள் மறுபடி வந்து ஒளித்து வைத்த பாட்டிலை பைக்குள் போட்டுக்கொண்டு சந்துருவீட்டிற்குப்போவதை அறிவித்துவிட்டு வெளியேறினான். பதின்மத்தில் பெற்றோரும் அன்பினை மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு பையன்கள் எங்கு போகிறார்கள் எதற்கு போகிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. ஆனாலும் தடுப்பதில்லை.

சைக்கிளில் தெருக்களில் வளையும்போது மீண்டும் அதே பாடல் எங்கிருந்தோ மெல்ல ஒலிக்க முணுமுணுப்பில் ஒட்டிக்கொண்டது. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே..

O

சந்துரு வீட்டுவாசலில் தாறுமாறாக லேடிபேர்ட் சைக்கிள்கள் ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து விழுந்துகிடந்தன. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு மெல்ல நுழைந்தான். வெளிக்கதவிற்கும் அழிக்கதவிற்கும் இடைப்பட்ட வெளியில் அப்பாவின் எம்மெய்ட்டி அண்ணனின் பல்சர் இரண்டும் இல்லை. செருப்பினைக்கழற்றிவிட்டு நுழைந்தான். சந்துரு அறையில் அவனுடன் மணி, இன்பா, முத்து மூவரும் அமர்ந்திருந்தனர். இவர்களின் கதையை இன்னொரு நாள் தனியாக பேசவேண்டும்.

“என்ன மாப்ள தயாரா இருக்க போல.. அதென்னல வாசல்ல அவ்ளொ சைக்கிள்குமிச்சுப்போட்ருக்க யாவாரம் பண்ணப்போறீயா”

“எது குமிஞ்சுகிடக்கா.. சொன்னம்லா தங்கச்சி பிரண்சுக வந்துருக்காளுக, அவளுக சைக்கிளாருக்கும் காத்தில விழுந்துருக்கும்”

சந்துரு சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு எழுந்தான். கழுத்திருந்த ஒற்றைச்சங்கிலி வியர்வையின் நனைந்து மின்னியது. “வாங்கல எடுத்துவச்சுத்தொலைவம், அவளுவள எடுத்துவைக்கச் சொன்னா நைட்டு கச்சேரிய வீட்ல மாட்டிவிட்ரும் எங்கூட பொறந்தது. நண்டு சிண்டுக்கெல்லாம் பயப்படவேண்டியிருக்கு பாரேன் நம்ம தலையெழுத்தெளவு.. மணி, இன்பா, சுந்தர் மூவரும் அசைந்து எழுந்தார்கள். நந்துவும் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு இணைந்து கொண்டான். நால்வருமாக வெளியில் வந்து ஒவ்வொரு சைக்கிளாக எடுத்து வரிசையாக நிறுத்தினர்.

“இது யார்ல இது புதுசா இந்த சைக்கிள முன்னாடி பாத்தமாதிரியே இல்லியே” நந்து கேட்டான். ஹேண்டில் பார் இணையும் இருந்த நட்டுக்கு மீதாக சிறிய சிவப்பு நிற அரளிப்பூ வரையப்பட்டிருந்தது. முதலில் சில்வரின் மீது ஒயிட்னரில் வரைந்து காம்புப்பகுதியில் பச்சை மையையும் இதழ் பகுதியில் சிவப்பு மையையும் மெல்லிய சொட்டுகளாக ஊற்றியிருக்கவேண்டும். அல்லாமல் இப்படி ஒட்டியிருக்காது. எந்த மலர் புகைப்படத்தையும் வெட்டி ஒட்டியிருக்க முடியும் ஒரு செல்லோடேப் கொண்டு. ஆனாலும் அதில் அரளிப்பூ கிடைக்காது. லில்லிகள், ட்யூலிப்புகள் இன்னபிற வெள்ளைக்கார மலர்கள் மட்ட்டுமே இத்தனை சிறிய அளவில் புகைப்படங்களாக ஸ்டிக்கராக கிடைத்திருக்கும். இந்தப்பெண் மிகத்தெளிவாக அரளிப்பூவைத் தேடியிருக்கிறாள். அதிலும் செவ்வரளி. அத்தனை திருத்தமாக யோசித்து அத்தனை பொறுமையாக திட்டமிட்டு மலரை நிறத்தை அதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்ந்தெடுத்து தெளிவாக திட்டமிட்டு இரண்டு நிற பேனா மைகளை வாங்கி அவை மிகச்சிறியதாக இந்த மலரில் சொட்டுமளவு பேனாக்களைத் தேர்ந்தெடுத்து.. பெண்ணே நீ யார். உன் பெயர் என்ன. எந்த நதியிலிருந்து இந்த மலரை எடுத்துவந்திருக்கிறாய்…

“உனக்கு மட்டும்ந்தாம்ல ஒரே வண்டில ஓராயிரம் வித்தியாசாம் தெரியும்… எதோ புதுப்பொண்ணு போல இவ இன்னைக்குத்தான் வீட்ருக்கு கூப்ட்ருக்கா. சரின்னு வந்திருக்கு. பிரியாகிட்ட மத்தவளுககிட்ட வாயடிக்கமாதிரி அவகிட்டையும் வாயடிக்காத. இந்தா எக்ஸாம் முடிஞ்சிரும் இந்த மூணு மாச கேப்ல என்ன எளவுக்கு புதுசா ஒரு எதிரி உனக்கு. ஏற்கனவே வாங்கின கெட்டபேருல்லாம் உனக்கு பத்தும்லா” சந்துருவுக்கு அவன் பயம். நந்துவுக்கு அந்த செவ்வரளிப்பெண்ணை பார்த்தே ஆகவேண்டும் போலிருந்தது. எப்படியும் இவன்கள் குடிக்க ஆரம்பித்ததும் கத்தும் கத்தலில் பக்கத்து அறையிலிருந்து அலறியடித்து வந்து அடக்குவார்கள் என்பது தெரியும். இது நாள்வரையினால கதைதானே. வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தான். திரும்பி சந்துருவின் அறைக்குப் போனார்கள்.

சந்துரு நேராக நந்துவின் பையை எடுத்து பிரித்தான். முழுபாட்டில் அறுங்கோணத்தில் பச்சை அட்டை கசங்கலுடன் எடுத்தான். “ஏம்ல சிக்னேச்சர் இந்தா நாலு தெரு தாண்டுனா கிடைக்கு. இதுக்கேம்ல அங்கிருந்து தூக்கிட்டு வந்த. ஒரு வெளினாட்டு சரக்கு எதாச்சும் வாங்கிருக்கலாம்லல.” “லேய் சென்னைலதான் இருக்கேன். சிங்கப்பூர்ல இருக்கமாதிரி கேக்க. சிங்கப்பூர்போனா வாங்கிட்டுவாரேன். நீயும் இவனும் ஊத்திட்டு அழறதுக்கு எந்தூர் சரக்கா இருந்தா என்னல… சென்னைலருந்துல்லாம் தூக்கிட்டு வரல.. இங்க வந்துதான் வாங்குனேன்.” நந்து சொன்னான். “ நொட்டி. நீ என்ன நொட்டுதன்னு நாங்களும் பாக்கத்தான போறோம். “ கட்டிலுக்கு கீழிருந்து பிளாஸ்டிக் கப்புகள், பசுமதி பேக்கரி மிச்சர் பாக்கெட், வேர்க்கடலை பாக்கெட் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருந்தது. மிக இலகுவாக அதே சமயம் கவனமாக அந்த அறுங்கோணப்பாட்டிலை ஆளுக்குக் கொஞ்சமாம கலந்துகொண்டார்கள். நந்து தனக்கான கிளாஸில் அவர்கள் கலந்த அதே லாவகத்துடன் பெப்சியை ஊற்றிக்கொண்டான். “மாப்ளைக்கு ஒரு ஜே மெட்ராஸுக்கு ஒரு ஜே” ஆளாளுக்கு அரைகிளாஸை கவிழ்த்து கீழே வைத்தார்கள். நந்து பெப்சியை செல்லமாக ஒரு மிடறு குடித்துவிட்டு கீழே வைத்தான்.

மூத்திர நிற திரவத்தை குடிப்பதால் இவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை நந்துவுக்கு ஒருபோதும் புரிந்ததில்லை. கல்லூரி தொடங்கிய காலத்திலிருந்து மெல்ல மெல்ல உருவான நட்பு வட்டம். குடியைத் தவிர பெரும்பாலான விசயங்களில் ஒவ்வொருவரும் மற்ற்வரின் கண்ணாடி பிம்பம். விளையாட்டாக படிப்பது. தேவையான மதிப்பெண்களை பார்டரில் பெறுவதென கல்லூரிக்கான முகங்களில் தொடங்கி பெண்களைவெறுப்பது வெறுப்பேற்றுவதை வரை அத்தனை ஒற்றுமை. நந்துவிற்கு ஆரம்பத்திலிருந்தே குடிமீது மோகம் இல்லை. வெறுப்பும் இல்லாமல் இருந்ததே இவர்களுடன் வைத்திருந்தது. வள்ளியூர் ப்ஸ்டாண்டு, கல்லூரி இசக்கியம்மன் ஆலமரம் என வழக்கமான எல்லா குடிபகுதிகளிலும் நந்துவும் அந்த மூன்றாண்டுகளில் இவர்களுடன் இருந்திருக்கிறான். ஆனால் ஒருபோதும் குடித்ததில்லை.

குடிப்பதைவிட குடிப்பவர்களை பார்த்துக்கொண்டிருப்பதில் நிச்சயம் ஒரு போதை இருக்கவேண்டுமென்று நந்துவுக்குத் தோன்றியது. மெல்ல மெல்ல ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறுவதைப்போல. கொஞ்சம் அசிங்கமான பட்டாம்பூச்சி. முகமூடிகளைக் கழற்றிவிட்ட மனிதமுகங்களைப்போல. மெல்ல மாப்ளையில் ஆரம்பிப்பவர்கள் தேவ்டியாக்களில் முடிப்பார்கள். ஆனாலும் தெளிந்ததும் அதே தோள்கள் அதே கரங்கள் அதே அன்பு. குடித்தபோது பேசிய வார்த்தைகள் அத்தனையும் மறந்திருக்குமா என்றால் இல்லை. அவர்களிடம் தனியாக கேட்டால் ஒவ்வொருவரும் பேசிய காரணங்களை வாங்கிய பேச்சுக்களை விலாவரியாகச் சொல்வார்கள். ஆனால் கோபமில்லையா என்றால் அவனும் குடிச்சிருந்தான் நானும் மப்புல இருந்தேன். அதெல்லாம் சகஜம் மாப்ள. இதுக்கெல்லாம் கோச்சுகிட்டா ஒருத்தன் கூடையும் குடிக்கமுடியாது என சொல்லிவைத்தார்போல் நால்வரும் சொல்வார்கள். இந்த ஒற்றுமை எங்கிருர்ந்து வருகிறது? குடியிலிருந்தா, குடி குடுக்கும் சுதந்திரத்திலிருந்தா?

“மாப்ள… கப்னு குடிச்சுட்டு வா.. வெளியபோய் ஒரு தம்போட்டுட்டு வரலாம்ல” சந்துரு அழைத்தான். அவனுக்கு ஒரு கிளாஸுக்கு ஒரு தம் வேண்டும். ஆலமரத்தடி தாபா இசக்கியம்மன் கோயில்களில் சரி, ஆளரவற்ற இடம். ஆனால் சந்துருவீட்டிலிருந்து தம்மடிக்க போகவேண்டுமென்றால் ஏழுகடல் ஏழுமலை தாண்டும் விஷயம். சந்துசந்தாக நுழைந்து சாவடிக்குப்போகவேண்டும். அங்குதான் இன்னேரத்து யாரும் இருக்கமாட்டார்கள்.வேறு எங்கு நின்றாலும் யார்பார்த்தாலும் வீட்டில் சொல்லிவிடுவார்கள். கிராமத்தில் ஊர் மொத்தமும் ஜேம்ஸ்பாண்டுகள். அடுத்தவர் ரகசியங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லாமல் தூக்கம் இறங்காது. “ நீங்க போங்கல நான் உக்காந்திருக்கேன்” என்றான். “திடீர் திடீர்னு பத்தினியாருவல. இருந்துதொல. இந்தா வந்துருவோம்” எழுந்து ஒவ்வொருவராய் வெளியில் போனார்கள். பேப்பர் விரிப்பு பிளாஸ்டிக் டம்ளர் குளிரில் நனைந்திருந்தது. நந்து கிளாஸை எடுத்து அவர்களைப்போலவே ஒரே மடக்கில் கவிழ்த்தினான். புரையேறி கொஞ்சம் சட்டையில் சிந்தியது. துடைத்துக்கொண்டான்.

“மெல்ல மெல்ல…. உங்க கிளாஸ்தான எங்கியும் ஓடிராது”பின்னாடியிருந்து குரல் வழியாக அவள்.கருப்பு வரியிட்ட மஞ்சள் சுடிதார். கருப்பு துப்பட்டா. மருதாணி கோடிட்ட பாதங்கள். மென்மையாக. அத்தனை மென்மையாக. ஒழுங்காக வெட்டப்பட்ட நகங்கள். மென்கால்களை கட்டிப்பிடிக்க முயற்சிசெய்யும் முன் மருதாணியின் மீதுவந்து விழும் வெள்ளிக்கொலுசு. நிமிர்வதற்கு முன்பாகவே செவ்வரளியை வரைந்தவளின் பாதங்கள் இப்படித்தான் இருக்குமெனத் தோன்றியது. இந்தப்பாதங்களை எடுத்து சென்னியில் சூடிக்கொள்ளலாம். “குடிச்சுட்டு இருக்குங்களா… தள்ளுடி நான் எடுத்தாரேன்” விலக்கிக்கொண்டு நுழைந்தவள் பிரியா. அந்த செம்மண் பூசிய மஞ்சள் பாதங்கள் பின்னால் நகர்ந்தன. நகராதே நகராதே என்றடித்துக்கொண்டது மனம். பெப்சி தொண்டையில் நற நறத்தது. அடிவற்றியிலிருந்து உருவமில்லாதொரு உருளையும் பாடல் அசந்தர்பமாக நினைவுக்கு வந்தது. பிரியா நுழைந்து பார்த்துவிட்டு “இவனா… சும்மா உக்காந்து பெப்சி குடிச்சுட்டு இருந்திருக்கும். நீ வா ஒண்ணுமில்ல” என்றாள் அவமானமாக இருந்தது. இந்தத்தருணத்திற்கு மட்டுமாவது குடித்து பழகியிருக்கலாம் என்று தோன்றியது.

அவள் நுழைந்தாள். பிரியாவும் நுழைந்திருக்கக்கூடும். நந்து நிச்சயமாய் குழப்பத்திலிருந்தான். பாதம் மடக்கிவைத்திருந்ததில் விர்ரென்றது தடுமாறியபடி எழுந்தான். “ஜாவா புக் எங்கண்ணே” ப்ரியா கூடைகளுக்குள் அலமாரிகளில் கட்டிலுக்கு கீழ் என மெல்ல மெல்ல கலைத்துக்கொண்டிருந்தான். நந்து அம்மஞ்சள் சுடிதார் பெண்ணைப் பார்த்தபடி பேயறைந்தாற்போல் நின்றிருந்தான். எங்கேயோ பார்த்தமுகம். எங்கேயென்று மூளையின் அத்தனை செல்களும் ஆங்காங்கே உறைந்து சுற்றிலும் தேடிக்கொண்டிருந்தன. மிக அளவாக அந்த ஒற்றை ஆடைக்கென அளவெடுத்துச் செதுக்கிய சிலை போன்ற பெண். காற்றில் மெல்ல அசையும் கூந்தல். காதிலிருந்து மீறி முகத்தில் விழாதபடி மிகச்சாதூர்யமாக அவர்களின் எல்லைக்குள்ளேயே நின்றாடும் கடலலைகளைப்போல. விஜயாபதி கடற்கரையின் கருமணல் நினைவுக்கு வந்தது. மணலே அலையாகி எல்லைக்குள் மீண்டும் மீண்டும் மோதுவதைப்போல கூந்தல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் கைகட்டி இடப்புறம் எங்கோ பார்ப்பவள் போல் நின்றிருந்தாள்.

குடிக்கிறவன் என்று நினைத்திருக்கக்கூடும். குடியைப் பார்க்காமல் முகம் திருப்பிக் கொள்வதன் மூலம் அவர்களின் எதிர்ப்பை காட்டுவதாக நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனாலும் இந்த முகத்தை கடைசியாய் எங்கு பார்த்திருக்கிறோம் என அவனுக்கு எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. எதாவது பேசவேண்டும் போலிருந்தது. அவள் பேசவேண்டும். அவளிடம் பேசவேண்டும். அவளாக பேசுவது நடக்காத காரியம். “ மப்புல்லாம் இல்லீங்க. நான் சந்துரு நந்து பிரண்ட்” உளறுகிறோம் என்று அவனுக்கே தெரிந்தது. ஆனாலும் எதையோ தொடங்கிவிட்டோம் என்பது தொண்டைக்குழியிலிருந்த காற்றை வெளியேற்றியிருந்தது. “தெரியுது. பேசுறதுலையே தெரியுது” என்றாள். “ஏண்டி அவனப்போட்டு கொமைக்க. அவன் குடிக்கமாட்டான். சும்மா உக்காந்திருப்பான் எங்கூட்டு எருமைமாடு இன்னும் மூணு எருமைக குடிச்சுட்டு இருந்திருக்கும். இவன் சும்மாதான் உக்காந்திருப்பான்” அம்மா ப்ரியா ஆபத்பாந்தவி. அந்த சில நிமிடங்கள் இதயம் இஷ்டத்திற்கு கண்ட இடத்தில் துடித்துக்கொண்டிருந்தது. பின்கழுத்து நரம்பு துடிப்பது காதில் கேட்டது. “ இது….. “ என் பிரண்டுண்ணே… நம்ம காலேஜ்தான் இங்க வந்ததில்ல… காலேஜ் ஓனருக்கு தெரிஞ்ச பொண்ணுண்ணே கடைசி செமஸ்டருக்குத்தான் வந்துச்சு. நீகூட பார்த்திருப்பண்ணே”

“ஹல்லோ அய்யம் கெளரி”

“நந்து”

புயலடித்த கனவிலிருந்து எழுந்து அமர்ந்தது போலிருந்தது. ஒட்டுமொத்தமாக மஞ்சளும் கருப்பும் கலந்து சூரியகாந்தி தோட்டத்திற்குள் தூக்கி எறியப்பட்டதுபோல. மழை நடுக்கம் நின்றபின் காய்ச்சல் வராமலிருக்க ஒரு கைமழை நீரைப்பிடித்து குடிப்பதைப்போல நெஞ்சமெல்லாம் குளிர்ந்து மூச்சுக்காற்று இறங்கியது. மேலும் மழைவேண்டும். அவள் குரல் வேண்டும். கைகுலுக்கலின் அந்த வினாடி மீண்டும்வேண்டும்போலிருந்தது. அவள் அங்கேயே தன் தூசுகளால் தன் பிம்பத்தை விட்டுச் சென்றதைப்போல. நிழலுக்கு ஆடைகட்டி அங்கேயே நிறுத்திச் சென்றதுபோல அவள் விலகிப்போன அறையில் மல்லிகை வாசனை நிறைகிற்து. அவள் திரும்பும்போது மல்லிகை வைத்திருந்தாளா.. பார்த்த நியாபகம் இல்லை. ஆனாலும் அவள் நீங்கிய இடத்தில் அந்த வாசனை இருக்கிறது. அவளாகவே இருக்கிறது. திரும்பத்திரும்ப பூக்கூடைகளை நினைத்துப்பார்த்தான். இதுவரை பலமுறை மல்லிகைப்பெண்கள் கடந்து சென்றிருக்கிறார்கள். அத்தனை பேரிடமும் வியர்வை வாசத்தையே விட்டுச் சென்றிருக்கிறார்கள். தோவாளையின் மல்லிகைத்தோட்டங்களுக்கு போயிருக்கிறான். அங்கும் செத்தல்களும்செதல்களும் மழையில் நில நீரில் மட்கிய வீச்சம்தான் இருக்கும். முழுக்க உதிர்க்கப்பட்டு கூடையிலேற்றும் வரை மல்லிகை அதன் மணத்தை வைத்திருந்தது. பிறகு தொட்டி ஆட்டோவின் புகைவாசனை மட்டுமே மிச்சம். இதுவரை சந்தித்த பெண்களும் அப்படியே. எவளும் மன்னிக்க.. யாரும் நினைவில் நின்றதில்லை. பெண்வெறுப்பு அவர்களிடமிருந்து விலகியிருக்க வைத்திருக்கிறது. கூடவே எதிரிகளை வெறுப்பேற்றும்பொருட்டு அவர்களின் காதலிகளை பேசிப்பேசி சிரிக்க சிரிக்க பல மணி நேரம் கல்லூரியின் அத்தனை வராண்டாக்களில் படிகக்ட்டுகளில் நின்றிருந்தாலும் எந்தப்பெண்ணிலும் இந்த காற்றுக்குமிழிகள் வார்த்தைகளைத் தடுத்ததில்லை. இவள். யாரிவள். எங்கிருந்து வந்தவள். பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்தான்.

கெளரி.

அவிழும் கயிறுகளின் இடம்

பின்னூட்டமொன்றை இடுக

இந்த இரவில்
உன் கால்பெருவிரல்களுக்கு கட்டப்பட்டிருந்த
கயிறு நினைவுக்கு வருகிறது

அது அத்தனை
வெளுப்பு

புதிய கோடித்துணியிலிருந்து
திரித்திருந்தார்கள்

அதே போன்ற ஒரு
வெள்ளைத்துணியில்

என்றோ ஒரு நாள் தூளியில்
ஆடியிருக்கிறேன்

புகைப்படம் எடுத்திருக்கலாம் நீ

O

இத்தனை ஆண்டுகள் கழித்து

உன்னை நீ என்று
சுட்டியதன் அபத்தங்கள் பற்றி

திடீரென யாரோ
நினைவூட்டுகிறார்கள்

ஆனாலும் அதன் கதகதப்பு
இன்னும்
கையில் இருக்கிறது.

சொற்களின் சூடு
உன் கைச் சூடு

நான் பற்ற வைக்கவேண்டியிருந்த
இன்னொரு கற்பூரத்தின் சூடு.

O

அங்கே ஆழத்திற்கு செல்வதற்கான
வழிகள்
இருக்கின்றன

அங்கே ஒரு பழைய தையல்மிஷின்
இடையறாது ஓடிக்கொண்டிருக்கிறது

அங்கே சொற்கள்
மெளனத்திற்கு திரும்பும் பாதைக்கு
காத்திருக்கின்றன

அங்கே தலைகோதும் விரல்கள்
இருக்கின்றன

அங்கே கிழித்தெறியப்பட்ட
ஒரு உயில் இருக்கிறது

அங்கேதான்.

காற்றில் நிற்கும் கூழாங்கற்கள்

1 பின்னூட்டம்

துரந்தரா,

உன் அன்பு உன்னைக் காலங்களிலிருந்து துண்டித்து,
தனித்த வான்வெளியில் அலையச் செய்யும்
உன் காலங்கள்
உன்னுடையவைதானா என சிந்தித்தபிறகாக
இந்தப்
பாதையின் வழியாக
செல்வாயாக

தேவி,
என் காலங்கள் அன்பின் பாற்பட்டவை.
இந்த அழிவின் பொருட்டே
என் பாதங்களை வைக்கிறேன்

துரந்தரா,
நீ கொலைகளின் புத்திரனாக
இருக்க விரும்புகிறாயா
ஆம் தேவி,
உன்னைக் கொல்லுமளவு கோவமும்
உனக்காக சாகுமளவு அன்பும்தான்
என்னுள்
ஓயாத சண்டையிலிருக்கிறது.

O

இன்னும் அந்த கூழாங்கற்கள்
காற்றில்தான்
நிற்கின்றன

அவள் அதை ஒருவேளை
பிடிக்கக்கூடும்
அவன் அதை ஒருவேளை
வெறுப்பில்
தட்டிவிடக்கூடும்

காற்றில் நிற்கும் கூழாங்கற்களில்
நிற்கிறது
காலம்
சில ஆண்டுகளுக்கு முந்தைய நாளொன்றில்.

O

ஆடல்வல்லோன்
தன் சடைவிரித்து நிற்கிறான்
அவளைக் கையில் ஏந்தியபடி

அவள் அவள் என்கிறான் அவன்
அது அது என்கிறது காலம்

கால்மாற்றும் பொழுதில்
குண்டலம் தவறி வீழ்கிறது

அவன் அதை எடுக்கப்போவதில்லை.

O
யாரோ கடிகாரங்களை
திருப்பி வைத்துவிட்டார்கள்
யாரோ பேட்டரிகளை திருப்பிப்போட்டுவிட்டார்கள்
யாரோ
காலத்தை முதலிலிருந்து மீண்டும் வாழ்கிறார்கள்
தூக்கிப்போட்ட பொம்மையை
திரும்ப எடுத்துச்செல்லும்
குழந்தையிடம்
பொம்மைக்கு எந்த கோபமும் இல்லை

யாரோ காலங்களை தூக்கிப்போட்டுவிட்டார்கள்
யாரோ கடிகாரங்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்

O

வீழ்கிறவனின் கைகள் காற்றில் துழாவுகிறது
பற்றிக்கொள்ளும்
ஒரு விழுதுக்காக
விரிந்து காக்கும் ஒரு துணிக்குடைக்காக
ஏந்திக்கொள்ளும்
கரங்களுக்காக

வீழ்ந்தவனின் கைகள்
தரையில் துழாவுகிறது
நொறுங்கிய எலும்புகளை சேர்த்துக்கட்டும்
ஒரு கயிறுக்காக
உதிராமல் எடுத்துச் செல்லும்
ஒரு படுக்கைக்காக
ஊன்றி எழத்தேவையான
ஒரு கோலுக்காக
எழுந்து நடக்கும்போதுதான்
பொழியத்துவங்குகிறது
குருதியைக் கழுவும் மழை

ஆனாலும் இது
அவையல்ல.

ஈரமணலில் கொஞ்சம் மரணங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

மழைக்காலங்களை கைவிரித்து
ஈரமணலில் படுத்திருப்பவர்கள்
திரும்பிச் சிரிக்கும்போது
உயரத்திலிருந்து
குதிப்பதற்காக
அவன் நின்றிருந்தான்

இந்தத்தருணத்தில்
பல்லாயிரம் பேர்
தனித்தனியே நின்றிருக்கிறார்கள்
மலைமுகடுகளில்
உயரக்கட்டிடங்களில்
ஆற்றுப்பாலங்களில்
வெளிச்சப்புள்ளியான ரயில் பாதைகளில்

சிலரை கைகள் பற்றிக்கொள்கிறது
சிலரை கைகள் உதறிவிடுகிறது
சிலருக்கு சில சமயம்
கைகள் கொடுக்கிறது
ஒரு நைஸான புஷ்.

O

டாக்டரின் ஊசிக்குப் பயந்து
சுருண்டு படுத்திருந்த
வாயில் புடவை
எங்காவது மக்கிக்கொண்டிருக்கும்

திருமண விருந்திற்குப் பின்
விளையாட்டாய் கைதுடைத்த
பட்டுப்புடவையை
நீ கத்தரித்தது எனக்குத் தெரியும்

அதே அரக்கு நிற காட்டன்
புடவையில்தான் நீ
ஹனிமூன்களுக்குச் செல்லவேண்டியிருந்தது

புடவைக்காரர்கள்
இப்பொழுதெல்லாம் சைக்கிளில்
கத்திக்கொண்டே வருவதில்லை

புடவைகளை நினைவில் வைத்திருப்பவர்கள்
கத்திக்கொண்டிருந்தால்
கடந்து சென்றுவிடுங்கள்.

O

நிறைய மரணங்கள் நிஜத்தில் வருகின்றன
நிறைய மரணமடைந்தவர்கள்
கனவுகளில் வருகிறார்கள்

மரணத்திற்குக் காத்திருப்பதாய்
புலம்பிச் செல்கிறவர்கள்
நிறைய தொடர்பில் இருக்கிறார்கள்

எல்லாரும் பழகி
எல்லாமும் பழகி
மிகத்தயாராய் இருக்கையில்

ஒருவர் தன் மரணத்தை
தானே எடுத்துக்கொண்ட
செய்தி
காத்திருக்கிறது.

நான் போனை எடுக்கப்போவதில்லை.

பிரபோ இதென்ன கொடுமை

பின்னூட்டமொன்றை இடுக

பிரபோ நீங்கள் அனுப்பிவைத்த
முத்தங்கள் இன்று வந்துசேர்ந்தன நன்றி

நந்தனா மரணம் இதோ உனக்காக

பிரபோ நீங்கள் ஏன்
என்னைக்கொல்லக்கூடாது

நீ இருக்கவேண்டும் நந்தானா
நான் முத்தங்களை
அனுப்புவேன்
பிறகு நண்பர்களை அனுப்புவேன்
பிறகு மரணங்களை அனுப்புவேன்
பிறகு நண்பர்களை அனுப்புவேன்
பிறகு துரோகங்களை அனுப்புவேன்

பிரபோ இதென்ன கொடுமை

நந்தனா நான் கொடுமைகளை அனுப்புவேன்
பிறகு
மீண்டும் கொடுமைகளை அனுப்புவேன்

உங்கள் நம்பிக்கைகளுக்கு நன்றி பிரபோ.

O

புதுப்பெண்கள் என்னைக்குழப்புகிறார்கள்

நந்தனா
அன்பு தெரியுமா இதுதான் அது
உன் அலைபேசி எண் சொல் உனக்கு அனுப்புகிறேன்

இல்லை நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்

நந்தனா உன் பதில்கள்
அழகாக இருக்கின்றன
உன் விளையாட்டு
முதல் நாள் போல் இல்லை
உன் வேலை பற்றி
சொன்னார்கள்

இல்லை நான் கொஞ்சம் தனிமை விரும்புகிறேன்

நந்தனா நானும் தனிமை விரும்புகிறேன்

நன்றி மஞ்சள்முகத்தவளே
இந்த முகம் இன்னொருத்தியை
இங்கே அழைத்து வருகிறது

நந்தனா

ஆம், அத்தனைக்கும் நன்றி
நான் கிளம்புகிறேன்

ஆம், நாளை பார்ப்போம் நந்தனா.

O

என்றோ ஒரு நண்பகலில் தொலைவிலிருந்து
வரும்
எருமைகளின் மூச்சைக்
காற்றைக் கேட்டபடி
ஓட்டுக்கூரையின் வெப்பத்தை முதுகில்
வாங்கி படுத்திருந்தேன்

என்றோ ஒரு மாலையில்
நதிக்கரை ஓரப்புல்வெளியில்
பியர் புட்டிகளை அசையாமல் நிறுத்தி
படுத்திருந்தேன்

பின் ஒரு இரவில்
குளிரில் நடுங்கியபடி
கண்ணீர் வழிய
ஒரு பெரும் எரி நகரத்தின்
வட்டப்பாறையின் மேல்தனித்து
அமர்ந்திருந்தேன்.

இதோ வெளிச்சம் தெரிகிறது
இதோ மழை பொழிகிறது
இதோ ஜன்னல் திறக்கிறது

அய்யோ வெள்ளம் வந்துவிட்டது.

இன்னும் முடியாத கதைகள்

பின்னூட்டமொன்றை இடுக

அவள்

ஒருமுறை தன் கரங்களை விரித்துச்
சொன்னாள்
நந்தனா உன் சுதந்திரம்
என் கையில்
இல்லை என்று

இவள்
ஒருமுறை மடியிலிட்டுச் சொன்னாள்
நந்தனா
உன் மரணம் எனக்குப்பிறகுதான்
என்று

அவள்
மரணித்தாலும் உன்னைத் திரும்பிப்பார்க்க
என்னால் கூடாது
என்றாள்

இவள்
நந்தனா என்
மரணத்திற்கு முன்பாக அவளுடன்
நீ என்னிடம் வந்து ஆசிகள்
பெற வேண்டும் என்றாள்.

அவள் முதலில் இறந்தாள்
நான் தனியனானேன்

இவள் பிறகு இறந்தாள்
நான் அனாதையானேன்.

O

இரு பெண்கள்
அவர்கள் ஆசைப்பட்டபடி
அவர்கள் விரும்பிய கணத்திலேயே
அவர்கள் விரும்பிய
கனவுகளுக்கு நடுவிலேயே
அவர்கள் விரும்பிய படியே

மெல்ல தன் மூச்சை நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஒரு ஆண்
அங்கே காத்திருக்கிறான்
அவனுக்கு அடுத்த நிகழ்வு பற்றிய எண்ணமில்லை

அவனுக்கு கனவுகள் கலைந்துவிட்டன
அவன் குழப்பத்தில் இருக்கிறான்
அவன் கொல்வதற்கு தயாராக இருக்கிறான்

அவன் கவிஞனாகவும் இருக்கிறான்.

O

அவள் தானளிக்கும் சுதந்திரம்
உடலைக் கெடும்
போதைகளுக்குள் சென்று சேரக்கூடாது என்றாள்.

இவள் தானளிக்கும் சுதந்திரத்தில்
பிற பெண்களின்
உடலைத் தொடுவதிலிருந்து விலக்களித்தாள்

முதலில்
அவள் தன் தளைகளை அறுத்துவிட்டு
போய்சேர்ந்தாள்

அவன் தன் போதைகளைக்
கண்டறிந்தான்

பிறகு இவள்
தன் தளைகளை அறுத்துவிட்டு
போதக்காலமொன்றில் அவனை முத்தமிட்டாள்

பிறகு
அவன் தன் உடல்களைக் கண்டறிந்தான்.

கதை
இன்னும் முடியவில்ல்லை.

Older Entries Newer Entries

%d bloggers like this: