பெயருக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடைப்பட்ட கணத்தில் நந்து மஞ்சள் வண்ணத்தில் தொடங்கி அதன் ஒளிவிடும் அறிவியல் காரணங்கள் வரை நீண்ட தூரம் சென்றிருந்தான். அடுத்த வார்த்தை நாக்கில் சிக்கி புரண்டிருந்தது.

“ஏன் உங்கூர்ல பொண்ணுங்களையே பாத்ததில்லையா ஏன் அப்டி பாக்குறீங்க எல்லாரும்” மிகச் சுலபமாக மெளனத்தை உடைத்தாள். பதில் சொல்வதற்கு யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு அவகாசாம் வேண்டும். பெரிய நகைச்சுவை கேட்டவன் போல் சத்தமாகச் சிரித்தான். இடைவெளி கிடைத்தது. கொஞ்சம் சிரித்தபோதே பதில் கிடைத்திருந்தது. “ஊரு பொண்ணெல்லாம் ஒண்ணுதான். எப்பவும் புதுசு மேல ஒரு ஆச்சர்யம் இருக்கும்ல. அதான் அப்டி பாக்குறாங்களா இருக்கும். எங்கூர் கட்டம் போட்ட கரும்பச்சை சுடிதாருக்கும் உங்க மஞ்சள் ப்ளைன் சுடிதாருக்கும் உங்களுக்கு வேணா வித்தியாசம் தெரியாம இருக்கலாம். ஆனா எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும்ன்றதே இந்த ப்ளைன் சுடிதார பாக்கும்போதுதான் தோணும்னா பாத்துக்கங்களேன்.”

” நல்லா பேசுறீங்க” பதிலில் குத்தல் இருந்ததுபோல் நந்துவிற்குத் தோன்றியது. பெரிய விளையாட்டு போலவும். பிடித்த பெண்கள் பாராட்டினாலும் முகம் சுளித்தாலும் ஒரே மாதிரியான குழப்பம்தான் முதுகுத்தண்டில் ஊர்கிறது. “அட நிஜமாங்க. இப்ப நீங்க கேட்குறவரைக்கும் உங்கள வெறிச்சுப் பாத்ததுக்குக் காரணம் அந்த மஞ்சள்தான்னு எனக்கு சத்தியமா தெரியாது, இவ்வளவு ஏன், நான் வெறிச்சுப்பாத்தானான்னு கூட தெரியாது”

“அப்ப நான் பொய் சொல்றேன்றீங்களா?” கெளரியின் கேள்வியில் ஒரு கொஞ்சல்கோபம் இருந்தது.அமைதியாக இருந்தான். போட்டியை நீட்டாமல் வேறு இடத்திற்கு செல்லத் தோன்றியது. “எந்தூர் நீங்க… எங்காலேஜ்ல எப்படி புதுசா… அதுவும் ப்ரியா கூட” இத்தனை நேரம் உடனிருந்தவளை ஒருவார்த்தை கேட்காமல் வாயடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்து துணுக்குற்றான். திரும்பி ப்ரியாவைப் பார்த்தான். அவள் உதட்டோர குறும்புச் சிரிப்புடன் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தாள்

“ஆராம்ளி. மெப்கோலதான் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப தூரமா இருக்குன்னு இந்தவருசம்தான் மாத்திட்டாங்க. இப்பவும் போகவர கஷ்டம்னு ஹாஸ்டல்லதான் இருக்கேன். இங்க பலதடவ வந்திருக்கேன். உங்களத்தான் பாத்ததில்லை. இதுதான் முதல்தடவ. அதுவும் ஒரே ஆளா அஞ்சாறு பாட்டிலோட”

“அதென்ன ஆராமுளி ஏழாமுளி. ஆரல்வாய்மொழின்னு முழுசாவே சொல்லலாம்ல.” அவள் பார்வையிலிருந்து மறுபடியும் சீண்டிவிட்டதாகத் தோன்றியது. இந்த மாட்டுத்தடியன்கள் திரும்பி வந்து தொலையலாம். “எவ்வளவு அழகான பேர் இல்ல நெருப்பு வாய் மொழி. ஒளிவடிவம். நெருப்புகூட மஞ்சள்தான். உங்கள மாதிரி..” நாக்கைக் கடித்துக்கொண்டான். ப்ரியா அதிர்ந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“என்னல வம்பளத்துட்டு இருக்கியோ. ஏய் நீங்க போய் படிங்கட்டி. நாங்க எங்க வேலையப்பாக்கோம்” சந்துரு சரியான இடைவெளியில் உள்ளே நுழைந்தான். நிஜாம் பாக்கு வாசம் அவன் சட்டையெல்லாம் வீசியது. அது பணக்கார வாசமும் கூட. அரசியலின் வாசனை. எங்கொ தொலைதூர நகரத்தின் மூலவர் பெற்றிருக்கும் அதிகாரம் குட்டைகள் ஆறுகள் வாய்க்கால்களைக் கடந்து பாயும் கடைசி வரப்புகளுக்குப் பாயும்போது செழித்துவளரும் சிறு நகரத்து வரப்போர செடிகளின் மினுமினுப்பு. கொஞ்ச நாள் இப்படியே எதாவது கோர்ஸ் அது இது என சுற்றிவிட்டு எந்தத் தருணத்திலும் ஒரு சண்டையில், பஞ்சாயத்தில் இறங்கி யாரையாவது அடித்தோ வெட்டியொ ஒரு கேஸ் கிடைத்துவிட்டால் திரும்பி வரும்போது அப்பாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாய் உள்ளுர் அரசியல் கணக்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எதிர்காலம் இதுதான். இதுவும் சிறப்புதான் எனத் தெளிவாகத் தெரிந்தபின் முகத்தில் எழும் பூரிப்பு, பணம் கொடுக்கும் நிம்மதியான உணவில் வரும் ஊட்டம்.

ப்ரியா கண்காட்ட கெளரியும் அவளும் அறையை விட்டு கிளம்பினார்கள். கெளரி திரும்பி பார்த்தாள். கண்களில் கோபமும் உதட்டில் சிரிப்பும் இருந்தது.

o

வேலையைப்பத்தி சொல்லம்ல கேப்போம்

சந்துரு வந்து லாவகமாக சரக்குபாட்டிலை, சோடாபாட்டிலைத் திறந்தபடியே கேட்டான். நந்துவுக்கு நிச்சயம் தெரியும் எதைச்சொன்னாலும் கிண்டல் செய்யப்போகிறார்கள் என்று. குடிக்கிறவர்கள் எப்பொழுதும் குடிக்காமல் உடன் இருப்பவர்கள் தங்கள் பொழுதுபோக்கு என நினைத்துதான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டாவது மூன்றாவது கிளாஸ் உள்ளே நுழையும்போதே அது தலைகீழாக மாறிவிடுகிறது. மறு நாள் எழுந்தபின்னர் அவர்களுக்கு பெரும்பாலும் மூன்றாவது கிளாஸின் கதை நியாபகத்தில் இருப்பதில்லை. முதல் இரண்டு கிளாஸ்களையே நகைச்சுவையாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“அதுக்கென்ன மாப்ள. போகுது. இப்பதான உள்ளபோய்ருக்கேன் தலையும் புரியல வாலும்புரியல. ஆனா பெரிய கம்பெனி பாத்துக்க. மூச்சப்புடிச்சு ரெண்டுவருசம் இருந்தா அப்புறம் எப்படியும் சுத்தி சுத்தி இதே மாதிரி கம்பெனிகதான். வாய்ப்பு கிடைச்சா அமேரிக்க பறந்துருவேன் பாத்துக்க.”

” வாய்ல சுட்டா நல்லாத்தாம்லே இருக்கும். இந்தா நம்ப கோம்பை வெளி நாடு போறேன்னு ஆடுமாட வித்துப்போனான். ஆறே மாசத்துல முதுகு பழுத்து திரும்பி வந்தாம்ல. நாம நினைக்கது இருக்கட்டும். நடக்கது என்னன்னு ஒண்ணு இருக்கு பாத்துக்க” சோடா பாட்டிலை விட்டு முகத்தைத் திருப்பாமல் சொன்னான் மணி. இன்பா எதுவும் பேசவில்லை. கையில் கிளாஸை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ” நீ தப்பிட்ட பாத்துக்க. நானும் எங்கியாவது போய்டணும்ல. குறைஞ்சது மதுரை திரூந்தபுரம்னாவது. வீட்ல இருந்தா வெளங்காது.”

முதல் கிளாஸை ஒருவருக்கருவர் மோதிக்கொண்டனர். நந்துவும் தனது பெப்சி பெட் பாட்டிலை அதனுடன் மெல்ல உரசிக்கொண்டான். சத்தமாய் ஒரு ச்சியர்ஸ். உண்மையில் இது அடுத்த அறையில் இருக்கும் பெண்களுக்கான அறிவிப்பும் கூட. ஆரம்பித்துவிட்டோம் இனி விடியும் வரை வரக்கூடாது என்றொரு அறிவிப்பு. எப்பொழுதும் பிரியா இந்தத் தருணத்திற்காக காத்திருப்பாள் என்பது தெரியும். அவள் அறையிலிருந்து எழுந்துவந்து பட்டாசல் விளக்கை அணைத்துவிட்டு போய் அறையில் அமர்ந்து கொள்வாள். எப்பொழும் நந்து இவர்களுடன் இருக்கும் நாட்களில் தெருவாசல் விளக்கு போடப்படும். இவர்கள் மூன்று ரவுண்டு தாண்டி நான்காவது ரவுண்டில் சொன்னதையே சொல்லும் கணம் வந்ததும் நந்து போய் வெளியில் நின்றிருப்பான். மிகச் சிறிய நேரம். அந்த நள்ளிரவில் மஞ்சள் விளக்கொளியில் பறந்தடங்கிய மண் புழுதியைப் பார்த்துக்கொண்டு நிற்பதுவும் ஒரு வகை போதை என்றறிந்திருந்தான். எதிர்பார்த்ததே இம்மி பிசகாமல் நிகழ்ந்தது.

வழக்கமான கச்சேரி கதைகள். சந்துருவின் அரசியல் முகம் பூசிய கதைகள். வட்டிவசூலில் சந்தித்த மனிதர்களின் கதைகள். அவர்களின் கதறல்கள். நந்து சுவாரசியமின்றி பெப்சி பாட்டிலை பார்த்துக்கொண்டே கெளரியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். இத்தனை காலங்களில் ஏற்படாத ஒரு உணர்வு. வாலிபத்தின் முதற்காலடிகளில் நண்பர்கள் ஆளுக்கொரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கையில் எந்தப்பெண் மீதும் எழாத ஒரு உணர்வு.

உண்மையில் பிறரை விட நந்துவிற்கு பெண் நண்பர்கள் அதிகம். அவர்கள் நண்பர்களாகவே கடைசி வரை இருந்ததுதான் காரணம். சிலர் காதல் கடிதங்களுக்காக எழுதிக்கொடுக்கும்படி கேட்டு அணுகியவர்கள். சில நேரங்களில் ஒரு இணையின் இரு கடிதங்களையுமே நந்துவே எழுதியிருக்கிறான். இருவருக்குமே அது தெரியாது. அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கு உணர்வு இருக்கிற்து. நந்துவிடம் சொற்கள் இருக்கிறது. சொற்கள் மட்டும். எழுதி எழுதியும் தீராத காதல் இருந்தாலும், கடைசி வரை, அதாவது இந்த குறிப்பிட்ட நாள் வரை அந்தக் காதலை தனக்காக எழுதிக்கொள்ளும் தேவை ஏற்படவே இல்லை.

“என்னல கனவு கண்டுட்டு இருக்க”, சந்துரு வண்ணங்களுடன் பறந்துகொண்டிருந்த சோப்புக்குமிழியை உடைத்தான்.

அதொண்ணுமில்லை. சும்மாதான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்.

அதான் நீ யோசிக்க லெச்சணம் மூஞ்சில எழுதி ஒட்டிருந்துச்சே அந்த புதுபுள்ளைட்ட பேசிட்டு இருந்தப்பவே.

ச்ச. அதெல்லாம் ஒண்ணுமில்ல

மொசப்புடிக்க நாய மூஞ்சப்பாத்தா தெரியாதா. எத்தன பாத்துட்டோம். ஏன் நீயேஎத்தனதடவ இவன் வந்து எங்கிட்ட லட்டர் எழுதச் சொல்லி கேட்பன்னு எத்தனபேரப்பாத்துச் சொல்லிருக்க. நடந்துச்சா இல்லியா.

அதில்ல… மூஞ்சில தெரியும்தான்.

அதேதான். நீயும் அப்டித்தான் மூஞ்ச வச்சுட்டு இருக்க அவளப்பாத்ததுல இருந்து. ஆனா ஒண்ணு சொல்லுதன் மாப்ள. நீ சிக்கி சீரழிஞ்சு போகப்போற உன் முழியெல்லாம் ஒண்ணும் வெளங்குதாப்ல இல்ல பாத்துக்க.

பாட்டில் பாதிக்கு மேல் காலியாகிருந்தது. இன்பாவும் மணியும் காரசாரமாக அடிதடி நிலமைக்கு நெருங்கியவாறு எதையோ உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். மிகச்சுலபத்தில் போதை ஏறிவிடக்கூடியவர்கள். சந்துரு மெதுவாகத்தான் சுருதிக்கு வருவான். அவனுக்கும் சுருதி ஏறியபின் நிச்சயம் அமரமுடியாது. உண்மையில் சண்டையிடும் அந்த இருவரைவிட சமாதானம் செய்யும் சந்துருவின் சத்தம் கொடுமையாக ஒலிக்கும். அவர்கள் நிறுத்தியபிறகும் கூட சில நாள் தொடர்ந்து உரத்த குரலில் சமாதானம் செய்து கொண்டிருப்பான்.

அடச்சே. எங்கியோ பாத்தமாதிரி இருக்கு மாப்ள அவள. அதான் யோசிச்சுட்டு இருக்கேன் எங்கன்னு. சரியாத்தெரியல.

கிழிச்ச. ஆராம்ப்ளிக்கும் போனதில்ல. மெப்கோல எங்க போய்ருப்ப. என்ன போய்ருக்கியா..

ஆராம்ளிக்கு போனதில்ல.ஆனா ஒரு தடவ ஸ்கூல்ல டிஸ்ட்ரிக் லெவல் காம்பெடிசன்ன்னு மெப்கோ போய்ருக்கேன் மாப்ள. அங்க இருக்கலாம்ல.

மிதிவாங்கப்போறபாத்துக்க. நீ ஸ்கூல் போய் நாலுவருசம் இருக்குமா. அவ அந்தக்காலேஜ்ல ரெண்டு வருசந்தான். சும்மா பேசணும்னு பேசாத என்ன.

ஆனாலும், சொல்லிவிட்ட பிறகு அந்த நினைப்பு உருண்டுகொண்டே இருந்தது. எங்கோ பார்த்திருக்கிறோம். எங்கே. நான்கு வருடத்திற்கு முன் அவள் அந்தக்கல்லூரிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா. ஆனாலும், பெண்கள் நிச்சயம் நான்கு வருடங்களாக ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பதின்மத்தில் வாய்ப்பே இல்லை. மிகச் சிறிய இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசங்களை அடைந்து ஆளே மாறியிருப்பார்கள். ஆனாலும் இந்தச் சிந்தனை உழன்றுகொண்டே இருந்தது. பெப்சி முடிந்திருந்தது. “மாப்ள இன்னொரு பெப்சி எடுத்துட்டு வரேன் என்ன. ” சந்துருவும் பிறருக்கும் தனக்கான பொதுப் பஞ்சாயத்தைத் தொடங்கியிருந்தார்கள். நந்து மெல்ல எழுந்து அறைக்கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி அருகில் மீண்டும் அவள். கெளரி.இருட்டில்.விளக்கைப்போடாமல். குளிர்சாதனப்பெட்டியின் மெல்லிய வெளிச்சம் அவள் மீது விழுந்திருந்தது. பிரதிபலிப்பதைப்போல. நந்து விளக்கருக்கே போய்விட்டு அதைப்போடாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அந்த முகத்தின் தனியாக விழும் ஒளி. நிச்சயம் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று உறுதியாகத் தெரிந்தது. எதோ ஒரு கணத்தில் தடுமாறி சுவிட்சை அழுத்திவிட்டான். கெளரின் கையிலிருந்த தண்ணீர்பாட்டில் சற்று குலுங்கியது. திடீர்வெளிச்சத்தில் பயந்திருக்கக்கூடும். திரும்பி ” நீங்களா ” என்றாள். “பயந்துட்டேன்” அந்த ஆசுவாசம் பிடித்திருந்தது. அழகாக இருந்தது.

“ம். உள்ள போரடிச்சுது. அதான் கிளம்பி வெளிய வந்தேன். வாசல்ல கொஞ்ச நேரம் நிக்கலாம்னு” பதில் நினைத்ததற்கும் சொன்னதும் வேறாக இருந்தது. மெல்ல குளிர்சாதனப்பெட்டிலிருந்து அடுத்த பெப்சியை எடுத்துக்கொண்டான். கொஞ்சம் தயங்கி நின்றான். என்ன எதிர்பார்த்தான் என அவனுக்கே தெரியவில்லை. “எனக்கும் அதே. வெளிய இன்னேரத்துல நிக்கலாமா. யாரும் தப்பா நினைக்கமாட்டாங்களே” என்றாள். இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று திடீரென விளங்கியது. இந்நேரத்துல யாரும் வரப்போறதில்ல. நான் எப்பவும் நிக்கிறதுதான். வாங்க”

“வாங்கவா… என்ன கொழுப்பா. போரடிச்சுதுன்னு சொன்னேன். நீங்க நின்னா தப்பா நினைக்கமாட்டாங்களான்னு கேட்டேன். என்னையும் வந்து நிக்கச் சொல்றீங்களா. அதுவும் இன்னேரத்துல”

“ஏன் பயமா. இருட்டா நாயா”

“எனக்கென்ன பயம். வாங்க நிப்போம்”

என்ன நிகழ்ந்ததென்று குழப்பமாக இருந்தது. வருகிறேன் என்றாளா வரமாட்டேன் என்றாளா. வந்து நிற்பது வெறும் வீம்புதானா. இல்லை சீண்டல் விளையாட்டா. ஏன் எளிய விஷயங்கள் விருப்பமானதாய் ஆனபிறகு இத்தனை சிக்கலான கேள்விகளை உருவாக்குகின்றன. பெப்சி மூடியைத் திருகித் திறந்தான். ஒலியுடன் திறந்துகொண்டது. எந்த சலனமும் இன்றி வாசல்கதவைத் திறந்து திண்ணையில் அமர்ந்துகொண்டாள். அவள் எதிரே அவளது சைக்கிள் நின்றிருந்தது.சில நொடிகள் திண்ணையில் அமர்வதா அருகில் நிற்பதா என்ற குழப்பத்திற்குப் பிறகு முடிவெடுத்து அவள் சைக்கிளின் பின் இருக்கையில் இருபுறம் கால் போட்டு அமர்ந்துகொண்டான். எதிரில் சைக்கிள் கைப்பிடி இடைவெளியில் அவள் முகம் இருந்தது. இடதுபுறம் தூரத்தில் எங்கோ எதையோ தேடிக்கொண்டிருப்பவள் போல திரும்பியிருந்தாள். எதிரிலிருந்த தெருவிளக்கிலிருந்து மஞ்சள் ஒளி ஒரு பக்க முகத்தில் மட்டும் விழுந்திருந்தது. கழுத்தின் தங்கச்சங்கிலியில் மெல்லிய மினுமினுப்பு. ஒளிவிழுவதால் கண்ணில் தெரியும் கண்ணீரின் பிரதிபலிப்பு. இந்தப்பிரதிபலிப்புக்குள் தானும் ஓரக்கண்ணில் பார்க்கப்படுகிறோம் என்ற உணர்வு எழுந்து மயிர்க்கால்கள் குறுகுறுத்தன.

“ஆமா அதென்ன அரளிப்பூ”

“ம்ம் செவ்வரளி. சின்னவயசுல இருந்தே செவ்வரளி புடிக்கும். அதான்.”

“ நீங்களே வரைஞ்சதா”

“இதுக்கு ஆள்வச்சா வரைவாங்க. அதுவும் யார்கிட்டையாவது சைக்கிள்ள அரளிப்பூ வரைஞ்சு தாங்கன்னா சிரிக்கமாட்டாங்க”

சிறிதாக புன்னகைத்தான்.

“பாருங்க நீங்களே சிரிக்கிறீங்க. ஆமா எப்ப பாத்தீங்க அரளிய”

“ நானா சின்னவயசுல. எங்கூர் கோயில் நந்தவனத்துல. அரளி நந்தியாவெட்டையெல்லாம்.”

“என்ன நக்கலா. என் சைக்கிள்ள இருக்கத எப்ப பாத்தீங்கன்னு கேட்டேன்.”

“ம். வந்ததுமே உங்க தரிசனத்துக்கு முன்னாடியே அரளி தரிசனம்தான்”

முறைத்தாள். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள். கண்களில் மெல்லிய சிரிப்பு தெரிந்ததைப்போல் இருந்தது.

”ஏன் எதும் தப்பா சொல்லிட்டனா” நந்துவுக்கு பேச்சை வளர்க்கத் தோன்றியது. இடைவெளிகள் ஒவ்வொன்றிலும் எங்கோ தூர விலகிப்போகும் சாயல். ஒவ்வொரு சொல்லும் உரிமை எடுத்துக்கொண்டு சீண்டும் விளையாட்டு. சீண்டும்போது மேலதிகமாக எழும் இதயத்துடிப்பின் ஓசை. அவளுக்கும் இப்படித்தான் இருக்குமா. இல்லை ஆண்களுக்கு மட்டுமா. சந்தித்த சில மணி நேரங்களில் இதெல்லாம் நிகழ்வது சாத்தியம்தானா. சாத்தியம் என்றாலும் சரிதானா. இடைவெளிகளில் சிந்தனைகள் வேகமாகச் சென்று எங்கோ ஒரு சுவற்றில் மோதி உடைந்தது. உடைதலைத் தவிர்ப்பதற்காகவாது எதையாவது பேசிக்கொண்டிருக்கவேண்டும்.

தப்பு சரின்னு சொல்லல. ஆனா கொஞ்சம் ஓவரா பேசறீங்க.

வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டுப்போய்டும்னு எங்க அப்பத்தா கூட சொல்லும்

ஆமா தூக்கிட்டுப்போற எலும்புத்துண்டு மாதிரிதான் இருக்கீங்க.

நந்துவுக்கு உள்ளே எதோ உடைந்தது.

“சாரி… விளையாட்டுக்குத்தான் சொன்னேன். மறுபடியும் சாரி”

“அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாரும் சொல்றதுதான. பழகிடுச்சு.”

அவள் முகம் சுருங்கியிருந்தது. பெண்கள் எத்தனை துல்லியமாக உணர்வுகளை முகத்தில் மறைப்பார்கள் என்பதை அறிந்திருந்தான். இவள் புதிதாக இருந்தாள். எல்லாவகையிலும். பல நாட்களாக அதே நடைபாதையில் இருக்கும் மலர் மழை நாளில் புதிய முகம் அடைவதைப்போல அத்தனை நாட்கள் பழகிய பெண்களிலிருந்து முற்றிலும் புதிதாக இருந்தாள். இருகைகளிலும் செயினைப்பிடித்துக் கடிக்கும் பெண்களிலிருந்து புலிப்பல்லின் நுனியில் செயினை கடித்துக்கொண்டு கைகளைப் பின் சாய்த்து நிறுத்தி உடல் தாங்கி தொலைவின் குரல்களை கூர்மையான கண்களால் கற்றுக்கொள்ள எத்தனிக்கும் அந்த அமர்வு புதிதாக இருந்தது. எல்லா நேரத்திலும் சொந்த சகோதரன் முன் கால்களை இறுக்கிக்கொண்டு சங்கடத்துடன் அமர்ந்திருக்கும் பெண்களிலிருந்து சகஜமாக கால்மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் அந்த உடல்மொழி புதிதாக இருந்தது.

” நான் வரும்போது எதோ பாடிட்டு இருந்தீங்களே என்ன பாட்டு.” மிகச்சுலபமாக குற்ற உணர்ச்சிகளைத் தாண்டிச்செல்கிறாள். அல்லது அதற்கு முயற்சி செய்கிறாள்.

“ம்ம். மன்றம் வந்த தென்றலுக்கு. நேத்து எங்கையோ மறுபடி கேட்டேன். அப்பமேருந்து முணுமுணுத்துட்டே இருக்கேன். மேடையைப்போல வாழ்க்கையல்ல என்ன மாதிரி வரி.. அந்த சிச்சுவேசன் கூட. எவ்வளவு கனவோட உறவுக்குள்ள வந்திருப்பான் அந்த புருஷன். வேசத்தைக் கலைச்சு மாறமுடியாத உறவுக்குள்ள பழசையே நினைச்சுட்டு இருந்தா எப்படி..”

“ரேவதி இடத்துல இருந்து யோசிச்சுப்பாருங்க. எத்தன வருச கனவு. பாத்தவுடனேல்லாம் ஒருத்தர வாழ்க்கைல ஏத்துக்கமுடியுமா. மோகனுக்கு மனைவின்றது ஒரு கொடுக்க்கப்பட்டது. அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் அவர் அதே உணர்வோடதான் இருந்திருப்பாரு. ஆனா அவளுக்கு அப்டியா. இன்னொருத்தர அந்த இடத்துல வச்சுப்பாத்துட்டு திடீர்னு மாத்திக்கணும்ன்றது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா. அதெல்லாம் பொண்ணா இருந்து பாத்தாதான் புரியும். உண்மை என்ன தெரியுமா காதலோட பாக்குற மோகன் மறுபடி மறுபடி கார்த்திக்க நியாபகப் படுத்துறதுதான் பெரிய வேதனையே. மத்தவங்க கிட்ட சிரிச்சு பேசுற அவளால அவன்கிட்ட பேசமுடியாதுன்னா அதுவும்தான். கூட உரிமை உள்ளவன், உரிமை எடுத்துக்குவான்னு பயம் கூட இருக்கும்ல.”

“அதுக்குன்னு கம்பளிப்பூச்சி ஊர்றமாதிரி இருக்காமா. மீறி கைவைக்க உரிமை உள்ளவந்தான. பண்ணல. அதும்போக இந்தக்காலத்துல அப்டி யாராவது முட்டாளா இருப்பாங்களா என்ன”

“ஓ. மறுத்தாலும் கேட்காம பாஞ்சிருவீங்க அதான உங்க ஆம்பள புத்தி”

“பாய்வோம் மாட்டோம்ன்றது ரெண்டாவது. மறுக்கிறது நியாயமான்னு கேக்கேன்”

“இதுல என்ன நியாயம் அனியாயம் இருக்கு. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. யார் வாழ்க்கைலையும் யாரும் மூக்க நுழைக்கக்கூடாது. அது யாரா இருந்தாலும் ஹஸ்பண்டா இருந்தாலும் லவ்வரா இருந்தாலும். தனிப்பட்ட ஸ்பேஸ் ஒண்ணு இருக்கணும். அப்டி இல்லைன்னா என்ன வாழ்ந்து என்னத்த”

நந்து மிரண்டு போய் நின்றான். அவள் குரல் நேரத்துக்கு நேரம் உயர்ந்துகொண்டே வருவதுபோல் இருந்தது. தன்னுடன் பேசும் சாக்கில் தனக்குள்ளாகவே எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாளாயிருக்கலாம். ஆனாலும் நாணிக்கோணாமல் மென்மையான இதயம் போன்ற பூச்சுகள் இல்லாமல் எகிறிப் பேசியது பிடித்திருந்த்து.

“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றீங்க” நந்து உண்மையில் மிரட்டலாக குரல் உயர்த்தி கோபத்தைக் காட்ட நினைத்தான். கடைசி வார்த்தையில் தொண்டை திடீரென வறண்டு கீச்சிட்டது. அவள் சிரித்துவிட்டாள்.

உள்ள போலாம்ன்றேன். எதோ குடும்பச்சண்டைய ராக்கருக்கல்ல ரோட்ல போட்றாப்ல இருக்கு

ஏன் படிக்கப்போறீங்களா உள்ளே போனால் அவன் குடிகும்பலோடும் அவள் வேறு அறையிலும் இருக்கவேண்டும் என்பது இடறியது. இந்தச் சண்டையாவது இப்படியே இடைவெளியில்லாமல் நீண்டு பின் உறங்கினால் இந்த இரவுக்கு அர்த்தமிருக்கக்கூடும்.இந்தப்பெண்ணுக்கு மட்டும் இதுவரை தான் கண்டிராத புன்னகையொன்று கண்களுக்குள் பயணம் செய்வதை உணர்ந்தான். ஒற்றை இமைதூக்கிமுக்கால்பாக உதடுகள் மட்டும் நெளிய மறுபாகம் அதே மென்கோபத்துடன் இறுகியே இருக்கிறது. அர்த்த நாரி புகைப்படத்தில் இடப்பாகம் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கும் அம்பிகை போல.

குடும்பச்சண்டை என்ற வார்த்தை அழகாக உள்ளே நுழைந்து உறைந்தது. “எல்லா குடும்பமும் சண்டை போட்றதுதான். ஏன் குடும்பத்துக்கூடத்தான உரிமையா சண்டை போடத்தோணும். உரிமையில்லாதவங்கள நாம சண்டைபோட்றதில்லைல.”

“ஏன் இப்ப நாம சண்டை போடல. இதுல எங்க இருந்து வந்து உரிமை.சண்டையெல்லாம் எப்பவும் யார்கூடவேணா போடலாம். சும்மா அளக்காதீங்க”.

“சண்டை இல்ல உரிமை. திரும்ப வர்றதுல இருக்கு. தெரியாதவங்க கிட்ட போட்ற சண்டையும் தெரிஞ்சவங்க கிட்ட போட்ற சண்டையும் குடும்பத்துல நடக்குற சண்டையும் ஒண்ணில்ல. நடுவில பெரிய இடைவெளி இருக்குல்ல. அங்கதான் எல்லா விஷயமும் இருக்கு”

“கவிஞருக்கு பேச சொல்லியா குடுக்கணும்”

சில நொடிகள் உறைந்து மீண்டான். ” நான் கவிதை எழுதுவேன்னு யார் சொன்னா”
“அதுவா உள்ள தற்செயலா பேச்சு வந்துது உங்களப்பத்தி அப்ப ப்ரியாதான் சொன்னா. கவிதையெல்லாம் எழுதுவீங்களாம். டைரி டைரியா வச்சுருக்கீங்களாம். யார்கிட்டையும் காட்டமாட்டீங்களாம்.”

“ஹா ஹா. தற்செயலா என்னப்பத்தி பேச்செல்லாம் வருதா… நல்லவிஷயந்தான்”

இமை உயர்த்தி ஒரு நொடி முறைத்துவீட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள். சிரிக்கும்போதெல்லாம் மறுபுறம் திரும்பிக்கொள்ளும் அவள் தன்னுணர்வில் ஒரு அழகு இருந்தது. ஆண்பார்க்கையில் மாரப்பைச் சரிசெய்யும் பதட்டமின்றி எதிர் வருகிறவன் வழிவிடத்தூண்டும்படி கூந்தலைத் தூக்கி கழுத்தோரமாக பின்னால் எறியும் கர்வம். உன்னைக் கவனிக்கிறேன். நீ பொருட்டில்லை. நீ என் பிரியத்துக்குரியவன் இல்லை என முகத்திலறையும் கர்வம்.

“ஆமா கவிதையெல்லாம் ஏன் எழுதுறீங்க”

“எதூ.”

கவிதை. கவிதை ஏன் எழுதுறீங்கன்னு கேட்டேன்.

“இதுவரைக்கும் எப்படி எழுதுறீங்கன்னு கேட்டவங்கதான் இருக்காங்க. ஏன் எழுதுறீங்கன்னு யாருமே கேட்டதில்ல.”

“ஓ. சாரி. இல்ல. யாருக்கும் காட்டாம எழுதி எழுதி ஒளிச்சு வைக்கிறதுல என்ன ஆர்வம்னு தெரிஞ்சுக்கத்தான். தப்பா இருந்தா மறுபடி சாரி”

தப்பெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா கொஞ்சம் புதுசு அவ்ளோதான்.

ம்ம். அப்ப சொல்லமாட்டீங்க அப்டித்தான

அப்டி சொல்லல… ஆனா இதுல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. அது சின்ன வயசு பழக்கம். எதோ ஒரு காரணத்துக்காக எழுத ஆரம்பிச்சி, இப்ப சும்மா எடுத்து வைச்சிருக்கேன். காரணங்கள் முடிஞ்சுபோனதால இப்ப எங்கியும் பகிர்ந்துக்கிற்தில்லை. ஒரு தடவ காலேஜ் பேக்ல இருந்துது. பசங்க பாத்துட்டாங்க. மத்தபடி கவிஞனா நான் சொல்லிக்கிறதோ காட்டிக்கிறதோ இல்ல

ம்ம். என்ன காரணம். சொல்லலாமா

முதல் நாவல் அனேகமா எழுதுவேன். எழுதுனதும் முதல்ல உங்ககிட்டையே காட்டுறேன் சரிதான

அதுவரைக்கும் காண்டக்ட்ல இருந்தா பாப்போம்

முதல் நாளே இப்படி சொல்றீங்க. உங்கள நம்பி காரணம்வேற சொல்லணும்ன்றீங்க. சரியவா இருக்கு

அதுவும் சரிதான்

மெளனம் மெல்ல வந்து உள்ளே விழுந்தது. முதல் சந்திப்பிலேயே நியாபகத்திற்கு கொண்டுவர விரும்பாத காலங்களைப்பற்றி ஏன் பேசினோம் என்பது குழப்பமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் பேசுகிறோம். என்ன உரிமையில் பால்யத்தைப் பேசுகிறோம். அல்லது எந்த உரிமையில் பால்யத்தின் கதைகளை தயக்கமின்றி இவளால் கேட்க முடிகிறது.

”உள்ள போலாம்” படக்கென எழுந்து கொண்டாள். சொல்வதற்கு இதற்கு மேல் எதுவும் இல்லை என்பதைப்போன்ற ஒரு வேகம். பேசியது அத்தனையும் சரிதானா என்ன எண்ணிப்பார்த்துக்கொள் என வாய்ப்புக்கொடுக்கும் ஒரு அசைவு. திரும்பிப்பார்க்காமல் மிதிவண்டியிலிருந்து எழுந்தானா என்பதைக் கூட கவனிக்காத ஒரு அலட்சியம். இந்தப்பெண் எப்படி இத்தனை சிறு நிமிடங்களில் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்திப்போகிறாள். ஏன் அவள் கோபம் இத்தனை சுடுகிறது. ஏன் சிறிய முகச்சுளிப்பு இப்படி சுடு நீரில் அமிழ்த்துகிறது. யாரையும் எதற்கும் ஏற்காமல் தள்ளி வைத்துப்பார்க்கும் மனது இவளை மட்டும் ஏன் இப்படி கட்டி பின் தொடர்கிறது. மறுபேச்சின்றி தன் பாதையில் போகும் ஒரு பெண்ணை எது இழுத்து பதறி ஓடிப் பின் தொடரவைக்கிறது. கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன, உண்மையில் கேள்விகள் அப்பொழுதுதான் தொடங்குகின்றன என்பது அவனுக்கு எங்கோ ஒரு ஆழத்தில் தெரிந்திருந்தது,