இன்றே இப்படம் கடைசி
போஸ்டர் ஒட்டப்படாத
சுழல்களுக்குள்
மீண்டும் மீண்டும் போய் நிற்கும்
நமது
தவ்ளூண்டு மனசை
எரி கொள்க

நீ எனக்கு பொருட்டே
இல்லை
என
மீண்டும் மீண்டும் சொல்லப்படும்
காலடிகளில் தாள் பணியும்
நமது
தவ்ளூண்டு கரங்களை
எரி கொள்க

ஒற்றைக்கால் யானைகளின்
வால் நுனியினும் சிறிய
ரிங் மாஸ்டர்களின்
தவ்ளூண்டு சாட்டைகளை
யானைகளே கொள்க.

O

முன்னூறு முறை மறுதலிக்கப்பட்டபின்
முதல்முறையாக
உங்களை விரும்புவதாக
சொல்லும்
குரல் அளிப்பது
காதலை
அல்ல
புதிய பதட்டத்தை

காத்திருக்கிறோம்
முன்னூற்றி ஓராவது முறையாக
மறுதலிக்கப்படுவதற்கு

இவர்கள்
ஒருபோதும் ஏமாற்றுவதேயில்லை.

O

ரகசிய யானைகளை இவர்கள்
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்
படுக்கைக்குக் கீழே

துதிக்கைகள் மீது
தலையணைகள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
வாலின் மீது சிறுபோர்வை
முதுகில் அம்பாரியென
ஒரு
காபிக்கோப்பை

கண்திறக்க அஞ்சும் ஆனைகள்
ஒரு நாள்
பிளிறியபிறகு

அவை அறிவது
அம்பாரிகளின்
வெற்றிடத்தை

இனி துதிக்கைகளும்
வால் நுனிகளும்
அம்பாரி இறங்காது

என்பதை
ரிங் மாஸ்டர்கள் அறியப்போவதேயில்லை