முகம் பார்த்துப் பேசுவதற்கான நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. வலது பக்கம் அமர்ந்திருப்பவனுடன் மின்னரட்டையில்தான் எளிதாக பேசமுடிகிறது. குறுஞ்செய்தி, பேஸ்புக், டுவிட்டர், கூகுள்பிளஸ், செய்தித்தாள்கள். உலகம் வார்த்தைகளால் ஆனது. நீங்களும் நானும் ஒரு வலைப்பூவின் ஜன்னலைத் திறந்துவைத்து எழுதப்பட்ட அல்லது தட்டச்சப்பட்ட வார்த்தைகளில்தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். கணினியுகம். இருந்தாலும் ஆதிகாலம் குறித்த நினைவுகள் செல்களில் தங்கியிருக்கின்றன. இரும்புக்கை மாயாவி அல்லது சிறுவர் மலரின் பலமுக மன்னன் ஜோ எதொ ஒரு புத்தகமாக நினைவடுக்குகளில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்கும் ஆசைதான் இந்த வயதிற்கான நண்பர்களின் பரிந்துரைகளைத் தூக்கிக்கொண்டு புத்தக கடைகளை நோக்கி எனை விரட்டுகிறது எனத் தோன்றுகிறது.

திரும்பிப்பார்த்தால், 2011ல் படித்த புத்தகங்கள், அதற்கு முந்தைய ஆண்டைவிடக்குறைவு. இந்த 2011 கோர்வையில் பெரும்பாலானவை சிறுகதை தொகுப்புகள்/நாவல்கள். (2012ற்கு மொழிபெயர்ப்பு நாவல்கள்/சிறுகதைகள்/கவிதைகள்).

o புனைவின்நிழல் – மனோஜ்
உயிர்மையில் மனோஜின் வெயில் வட்டம் சிறுகதையும், சாருவின் அறிமுகமும் மனோஜின் சிறுகதை தொகுப்பு என்றதும் வாங்க வைத்தன. கதைகள் இடம்பெற்ற இதழுக்கேற்றவாரு கதைகளின் களமும் மொழியும் வேறுபட்டிருப்பது இவர் ஒருவருக்கான இடமில்லை எனத் தோன்றுகிறது

o சுகுணாவின்காலைப்பொழுது – மனோஜ்

மனோஜின் சிறுகதைகளுக்குள் எதோ ஒரு ரசனையைத் தேடியலைகிறேன் என்றே தோன்றுகிறது. சில கதைகளைப் படிக்கும்போது வரும் சலிப்பு அடுத்த கதையைக்குதான் இழுத்துச் செல்கிறது. இந்த தொகுப்பிலும் கூட.
o ரப்பர் – ஜெயமோகன்

கன்னியாக்குமரி வட்டார வழக்கு குறித்த விதந்தோதுதல்கள் இந்த புத்தகத்தை நோக்கி என்னைச் செலுத்தின. திருனெல்வேலியும் இல்லாமல் நாகர்கோவிலும் இல்லாமல் நடுவாந்திரத்தில் வளர்ந்தவன் என்ற முறையில், தென் தமிழகத்தில் எல்லா வட்டாரவழக்குகளையும் பிறரைவிட எளிதாகவே கிரகித்துக் கொள்ளமுடிவது எனக்கான வரம் என்றே கொள்ளலாம். ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் மனிதர்கள் எனக்குப் புதியவர்கள். காடும் இருட்டும் ஜெமோவிடம் கைக்குழந்தையைப்போல தோளில் தொற்றி அலைகிறது. அதன் உள்ளரசியல்களை(பாதிரியார் வரும் பகுதிகள்) பிறர் பார்த்துக்கொள்ள மனிதனும் மனிதன் சார்ந்த இடமுமாகவே கொண்டாடத் தலைப்படுகிறேன் ரப்பர் நாவலுக்கு.
o பரத்தையருள்ராணி – லீனாமணிமேகலை
உடலைக்கொண்டாடுதல் குறித்த பிம்பங்கள் கருத்துகளில் தனித்து நிற்க, கவித்துவத்தின் இறுகக்கட்டிய கோடுகளைக் கிழித்து வெளியேறும் கவிதை தொகுப்பாக பரத்தையருள் ராணியை மதிக்கிறேன். சொற் சேர்க்கைப்பிழைகளை தமிழ் முனைவர்களிடம் விட்டுவிடுவோம். கவிதையும் அதன் வாசிப்பனுவமும்தானே எனது நோக்கம். இதை எழுதியவரிலிருந்து பிரித்து வெறும் கவிதையாக வாசிக்கும் பக்குவத்தை இன்னும் நான் அடையவில்லை. செங்கடல் வரையிலான லீனா மணிமேகலையின் பாதையை “ஒற்றையிலையென” கவிதையிலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என வரப்போகும் காலங்களில் தன் குறிப்பில் எழுதிக்கொள்ளலாம் தானே?
இந்த புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து படிப்பதைவிட கடைசி பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்குவது காலங்களில் ஒரு எழுத்தாளரிடம் வளரும் சொற்சேர்க்கை ரகசியங்கள் புரிய உதவலாம். இதுவரையிலான (வெளியிட்ட நாள் வரையிலான) கவிதைகளின் மொத்த தொகுப்பில், சமீபத்திய கவிதைகளை முதலிலும், பழைய கவிதைகளை கடைசியிலும் வைத்திருக்கும் வரிசை, கால யந்திரத்தில் ஜன்னல் வழி வேடிக்கையுடன் பின்னோக்கி பயணப்படும் அனுபவத்தைத் தருகிறது.
o புலிநகக்கொன்றை- பி.ஏ.கிருஷ்ணன்
இந்த நாவலின் மனிதர்கள் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். இதே நாங்குனேரி ஐயங்கார்களை தினமும் சந்திக்கும் ஒரு சூழலில்தான் என் கல்லூரிக்காலம் கடந்தது. நாவலில் படுத்த படுக்கையாய் கிடந்த பொன்னாப்பாட்டியைக் கூட , மின்சாரக் கட்டணம் செலுத்த நாங்குனேரி பெருமாள் கோயில் பின்பக்கத்துத் தெருவில் வைத்து கைத்தடியுடன் கூன்விழுந்த முதுகுடன் பார்த்த நியாபகம். பொன்னாப்பாட்டியின் இளமையிலிருந்து அவள் பேரனின் இளமைக்காலம் வரையிலான 4 தலைமுறை வாழ்க்கைத்தான் கதை. கதையின் முடிச்சுகளை படித்தே பிடித்துக்கொள்ளுங்கள். இங்கே சொல்லித் தீர வேண்டியது, அந்தந்த கால கட்டங்களின் வாழ்க்கையின் கண்ணாடிச்சித்திரம் வெளியே துருத்தாமல் போகிற போக்கில் சொல்கிற தகவல் களாக உள்மினுங்கும் அழகு. படித்ததும் உறுத்திய ஒரே விஷயம், எழுத்தாளர், இந்த நாவலை முதலில் ஆங்கிலத்தில்தான் வெளியிட்டிருக்கிறார். தமிழில் வெளியிடாததற்கான காரணமாக அவர் சொல்லியிருப்பது “பயம்”.

o வந்தநாள்முதல் – செழியன்
“உன்னைப்பார்த்ததொரு வெண்ணிலா வேளையில்” என்றொரு காதல் தொடரை விளையாட்டாக எழுதிக்கொண்டிருந்தேன். அந்த பதிவுகளைப்படித்த நண்பர்களின் பரிந்துரை. அப்படியே கடனாகக் கொடுக்கவும் ஒரு தோழி கிடைக்க, இந்த புத்தகத்தைப் படித்து முடித்தேன். விகடனின் வெளிவந்த காதல் கவிதைத் தொடர். 2010 க்கு பா.விஜயின் “காதல்“. 2011க்கு இந்த தொகுப்பு. நான் படித்த வரிசை எண்ணிக்கையில் ஒன்று அதிகமானதைத் தவிர இந்த தொகுப்பு எனக்குள் செய்தது எதுவுமில்லை.

o 37 – ரமேஷ்பிரேம்

ரமேஷ்-பிரேம் நாவல்கள் குறித்த பரிந்துரைகளை இரண்டு மூன்று நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும், எனது புரிதல் அளவு குறித்த பயத்தினால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து, ஒரு வழியாக கணக்கைத் தொடங்கியாயிற்று. 37 தட்டைப்பார்வையில் ஒரு சாகசக்கதை என்றே கொள்ளலாம். என்றாலும், அதன் மொழிக்கட்டுமானமும் கதை சொல்லல் வடிவமும் உள்மனதில் எதையோ உருட்டுகிறது. இது பாசாங்கு எளிமையோ, எதையோ நாம் தவறவிடுகிறோமோ என்ற பயமாக இருக்கலாம். இவர்களின் இன்னொரு நாவலைப் படித்தபிறகு, ரமேஷ் பிரமை படிக்க ஆரம்பிக்க, 37 ஐ எடுத்தது சரியே எனத் தோன்றுகிறது.

o சொல்என்றொருசொல் – ரமேஷ்பிரேம்

37ஐ முடித்துவிட்டு இதைக் கையிலெடுத்தால், தலை கீழாக புரட்டிப்போடுகிறது நாவலின் ஒவ்வொரு வரியும். நேர்பேச்சிற்கான காலம் குறைந்து, குறுஞ்செய்தி,மின்னரட்டை, வலைப்பதிவுகள்,புத்தகங்கள் என வார்த்தைகளின் வாதைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் கணினிக்காலத்தில் இந்த நாவலின் வார்த்தைகளுக்கான வெளி இன்னும் விரிகிறது எனச் சொல்லலாம். எல்லோருக்குமான கதைகளை போகிற போக்கில் சொல்வதுமட்டுமன்றி நாவலுக்கான தன் விமர்சனத்தையும் தனக்குள்ளேயே புதைத்து அலையும் ராட்சச விரிவு கொள்ளும் மகாபலியை நினைத்துக்கொள்கிறேன்.

o கதாவிலாசம் – எஸ்.ரா

கிட்டத்தட்ட வருடத்தின் ஆரம்ப காலத்தில் படித்தது. எஸ்.ராவின் விமர்சனங்களுக்கென்று தனி முகம் உள்ளது. பார்ப்பவனின் முகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி முகம். அல்லது எழுத்தாளன் வாழ்வின் எதோ ஒரு நிமிடம் உறைந்திருக்கும் புகைப்பட முகம். கதாவிலாசம், வாசக பர்வம் என கதைகள், நாவல்கள் அல்லது சினிமா குறித்த எல்லா விமர்சனங்களிலும் இதே ஒற்றை வரைபடத் தொனியை திரும்பத்திரும்ப பார்க்கிறேன். இதுவும் அதுவே.

o உறுபசி – எஸ்.ரா

உறுபசியின் சம்பத்தை என்னுள்ளிருந்து எந்த வகையிலும் வெளியேற்ற முடியாதென்றே தோன்றுகிறது. செக்குமாடு கோடிட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி, தனித்துவங்களைப் படைத்துக்கொள்ள துடிக்கும் எல்லாருக்குமான பிம்பமாகவே சம்பத் தெரிகிறான்.

o இடாகினிப்பேய்கள் – கோபிகிருஷ்ணன்

இடாகினிப்பேய்கள் , தூயோன், டேபிள் டென்னிஸ் மூன்றும் சில இணைய நண்பர்களின் முயற்சியில் இலவசமாக அளித்தார்கள். அதிலிருந்து கோபியை அறிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். மனஎழுச்சியில் ஒரு எழுத்தாளன் பதிந்து வைக்கும் நாட்குறிப்புகளின் பிம்பம் மனதிலெழுந்தது இந்த தொகுப்பை படிக்கும்போது (கொஞ்சம் கொஞ்சமாக கோபி பழகிவிட்டது வேறுவிஷயம்). கோபியின் பார்வைகள் தனித்துவமானது. எல்ல்லார்க்குமான வாழ்க்கையை எல்லாரும் பார்க்கும் கோணத்திலல்லாமல் எழுதியிருப்பதே கோபியின் எழுத்துகளைப் படிக்கும்ப்போது எனக்குள் எழும் அதிர்வுகளுக்கு காரணம் என நம்புகிறேன்.

o சொல்லக்கூசும்கவிதை – வாமு.கோமு

தகரத்தில் நகம் கீறும் கூச்சம் கொண்டுவரும் கவிதைகளின் பாதையிலிருந்து விலகி சொல்லப்படாத வாழ்க்கை பக்கங்களை கொங்குத் தமிழில் முன்வைக்கும் கவிதைகள். வாசிப்பு அனுபவம் எல்லாவற்றையும் கவிதை என நம்பாமலிருப்பதற்கான சாத்தியங்களைத் தந்திருந்தாலும், கவிதையாக தலைப்பிடப்பட்டு, இடைவெளியிட்ட ஒவ்வொரு பக்கத்திலும் நிச்சயம் தெரியாத யாரோ இருவரின் சொல்லப்படாத ஒரு அந்தரங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது. பிறகும், “இதையெல்லாம் சொல்லித்தான் தீரவேண்டுமா” மாதிரியான கேள்விகளுக்கு பதிலில்லை என்னிடம். என் ரசனைக்கு ஒத்து வருகிறது அவ்வளவே!

o நெடுங்குருதி – எஸ்.ரா

வெயிலேறிய தெருக்கள் எஸ்.ராவின் எழுத்துகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புதிதல்ல என்றாலும், வேம்பலையின் தெருக்கள் ஒரு புதிரை ஒளித்துவைத்தே தகித்துக்கொண்டிருக்கின்றன. வேம்பர்களின் வாழ்வு திருனெல்வேலி கிராமங்களின் மதிய நேரத்தை நினைவூட்டுவதாகவே இருந்தன. அந்த திருடர்களின் வாழ்வு குறித்த நம்பிக்கைகள் தூர இருந்து கைதட்ட ஒரு கதைக்களனாக கடந்து போகிறது. இதுவும் ஒரு வாழ்வுதானே என அதன் பின்னால் தேடிச்சென்றால், நம் முன்னோர்களில் யாராவது ஒருவர் கூட அந்த தெருவில் ஒரு மூலையில் கிடைக்கக்கூடும்.

o யாமம் – எஸ்.ரா

தலைமுறைகளை சுருக்கித் தரும் நாவல்களை இந்த வருடம் திரும்பத் திரும்ப சந்தித்தேன். சென்னையின் வரலாறு ஒரு குப்பி அத்தருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ஆட்டம் காட்டுகிறது. எஸ்.ரா பாணி என பெயர்சூட்டப்பட்ட வரிகளுடன் தான் கடந்து போகிறது ஒவ்வொரு பக்கமும். ஆனாலும் ஆட்டம் சுவாரசியம்.

o தீக்கடல் – நர்சீம்

கவிதைகள் வாசகனிடமிருந்துதான் உயிரடைகின்றன எனத் தோன்றுகிறது. இந்த தொகுப்பு அப்படியேதான் இருக்கிறது. வாசகனாக எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள், பிடித்த கவிதைகளை பிடிக்காததாகவும், பிடிக்காம்ல் இருந்தவற்றை, பிடித்ததாகவும் மாற்றியிருக்கிறது, மாறும் மனதிற்கேற்ப எல்லா மனநிலைக்குமான எதோ ஒரு கவிதை எனக்கு கிடைக்கிறது என்பது தொகுப்பில் ஆசுவாசமே.

o பெயரற்றயாத்ரீகன் – ஜென்கவிதைகள் – யுவன்

மொழிபெயர்ப்புகளை என்ன பயத்தில் விலக்கி வைத்திருந்தேனோ அதே பயங்கள் சாத்தியமுடையவைதான் என தோன்ற வைக்கின்றன இந்த தொகுப்பிலுள்ள கவிதைகள். யுவனின் சிறுகதைகள் எனக்கு திரும்பத் திரும்ப வாசிப்பதற்கானவை. இந்த தொகுப்பைப் பார்க்கும்போதெல்லாம் ஏமாற்றப்பட்ட மன நிலையே எஞ்சுகிறது. மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கிருந்து தமிழுக்கு இழுப்பதென்பது, இந்த நிலையில் வந்து சேராமல் இருந்திருக்கலாம்.

o கருவேலநிழல் – பாரா

பாராவின் கவிதைகளில் எப்போதும் ஒரு பாசாங்கு எளிமை ஒளிந்து கிடக்கிறது. புகைப்பட துல்லியத்தில் கணங்களை வார்த்தைகளுக்குள் ஒளித்து வைக்க பா.ரா விற்கு வாய்த்திருக்கிறது. வாசிக்கும் மனதற்கு முன்விரியும் பிம்பங்களில் மெய்மறந்து நிற்கையில் வலது கீழ்மூலை கையெழுத்து சிரிக்கிறது நான் பா.ராஜாராம் என்று. ( கவிதையெல்லாம் படித்து அடுத்த புத்தகங்களுக்கு தாவிய நிலையில், கூகுள் பஸ்ஸில் அறிமுகமாகி – கும்மியடித்து – சித்தப்பூ என உறவுகொண்டாடியதெல்லாம் பின்னர் நடந்த கதை)

o வெயில்தின்றமழை – நிலாரசிகன்

தட்டை ஒற்றை சோ-கால்ட்-கவிதைகளிலிருந்து வாசிப்பனுவத்தைத் தூண்டும் கவிதைகளுக்கு என்னைப்போல் ஒரு வெகுஜன வாசகன் வருவதற்கு ஒரு பாலம் தேவைப்ப்படுகிறது. நிலா ரசிகன், அய்யனார், அனுஜன்யா,செல்வராஜ் ஜெகதீசன் என சிலர் போதுமெனக்கு.

o கார்ட்டூன்பொம்மைக்குகுரல்கொடுப்பவள் – நேசமித்ரன்

மொழியின் சரடுகளில் நர்த்தனம் புரியும் கைகள் நேசமித்ரனுடையவை. எல்லா கவிதைகளையும் புரிந்து கொண்டேன் என தைரியமாகச் சொல்லமுடியவில்லை. இருந்தாலும், ஒண்ணைத் தொட்ட ஒண்ணூ என பா.ரா சொல்வதைப்போல, நேசன் தொட்ட எதோ ஒன்றின் இன்னொரு நுனியைத்தான் நானும் தொட்டிருப்பேன் என நம்புகிறேன். வாசிப்புதானே எழுத்திற்கும்.

o கள்ளி- வாமு.கோமு

நாவல் வகைப்பாடுகளின் கோடுகள் மாறிவிட்டனவோ எனத் தோன்றுகிறது. தனித்தனி பத்து சிறுகதைகளாகவும் வாசிக்கலாம். அல்லது கதை மாந்தர் பெயர்களைத் தூக்கிக்கொண்டு நாவலாகவும். இறுதி அத்தியாத்தின் தடாலடி வெகுஜன முடிவைத் தவிர மிகவும் ரசித்தேன் இந்த நாவலை.

o உப்புநீர்முதலை – நரன்

நரன் வரிசையில் நான் வாசிக்கும் முதல் புத்தகம், நரனுக்கு இரண்டு களங்களுக்கிடையிலான பாலம் போடும் வகைமுறை எளிதாக வசப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. தொகுப்பு முழுவதும் யாரவது ஒருவர் ஒரு களத்திலிருந்து முந்தைய களத்திற்கு தவறி விழுந்து கொண்டே இருக்கிறார்கள். மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் பழைய சொல்லாடல் ஒன்று நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது தொகுப்பு முழுவதும். நான் ரசிகனாக விரும்பும் கவிஞர்கள் வரிசையில் தாரளாமாக சேர்த்துக்கொள்கிறேன் நரனை.

o காந்தியைக்கொன்றதுதவறுதான் – ரமேஷ்பிரேதன்

தலைப்புக் கவிதை நாடகமாக நிகழ்த்தப்பட்டது பற்றிய வினாயகமுருகனின் ஒரு பதிவிலிருந்துதான் இந்த புத்தகத்தின் பெயரை எடுத்தேன். ஒரு மாய உலகத்தில் உலவும் வார்த்தைகள் ரமேஷ் பிரேதனுடையவை. தன் களங்களை தனக்கான கச்சாப்பொருட்களை சுற்றிவர வைத்துக்கொண்டு திறமையாக முன் நிற்கின்றன களங்கள். ரசனையான தொகுப்பு.

O பனிமனிதன் – ஜெயமோகன்

குழந்தைகளுக்கான நாவல். அட்டைப்படமே தவறவிட்ட பால்யத்தை நினைவூட்ட தூக்கிக்கொண்டு வந்தேன். குழப்பமான எரிச்சலான மன நிலைகளில் பரபரவென படித்து முடித்து ஆசுவாசமாகி கீழ் வைக்க ஒரு புத்தகம். குழந்தைகளுக்கான நாவலிலும் ஜெமோவின் நுண்ணிய நகைச்சுவைக் கண்ணிகளைத் தொட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

o ஏழாம்உலகம் – ஜெயமோகன்
நான் கடவுள் படம் தந்த அதிர்விற்குப் பிறகே ஏழாம் உலகம் படிக்க ஆசை வந்தது. புத்தகமளவிற்கு படமில்லை என மிதமிஞ்சிய விதந்தோதுதல்கள் அசூயை கொடுத்திருந்தது. விருவிரு சுறுசுறு. பிச்சைக்காரர்களின் உலகின் கருப்பு நகைச்சுவை ஜெமோவின் வழக்கமான விவரணைகள் என ரசிக்கும் பக்கங்கள் கிடைத்தாலும், எல்லாரும் விதந்தோதிய ஒரு நாவலைப் படிக்கும்போது “அந்த அளவு இது இல்லையே” என்ற கேள்வி எழவே செய்கிறது

o வெட்டுப்புலி – தமிழ்மகன்

இன்னொரு வரலாற்று நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டியின் முகப்புப்படத்திலிருக்கும் மனிதனை நோக்கிய வரலாற்றுத் தேடல் என்ற ஒற்றை வரி. நிகழ்காலத்தின் கதைசொல்லிகளால் முன்காலத்தை வரிசைப்படுத்தும் கட்டுமானம். வரலாறு கதைகளால் ஆனது. ஒரே கதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது. காலத்தின் சாயல்கள் நினைவுகளில் தங்கியிருக்கின்றன. மனதின் அடியாளத்திலிருந்து எதை எதையோ கிளறி விட்ட நாவல். எதை எதையோ கிளறிவிட்ட ஒரு நாவல்.

o பரத்தைகூற்று – சி.எஸ்.கே.

விடலைக்காலத்தின் உணர்ச்சிக்குவியலென்றோ, முதலெழுத்தில் கவிதை எண்ணிக்கை மீதான பெருமையோ இவற்றைப் படிக்கும்போது பிம்பமாக மேலெழுகிறது.

ஓர் உடனடிப்புன்னகையோ, ஓர் அதிர்ச்சித்தீற்றலோ, ஒரு கண்ணீர்ச்சுவடோ உத்திரவாதம். வாசிக்கும் அந்தக் கணத்தில் தீப்பொறி போல் ஒரு சிந்தனைத்தெறிப்பை உண்டாக்க வல்லவை இவை. சுவாரஸ்யம் தான் இவற்றின் ஆதார குணம்”

கவிஞரே சொன்னபின் இதற்கு மேல நான் சொல்ல என்ன இருக்கிறது. இதேதான் என் கருத்தும்.

o பீக்கதைகள் – பெருமாள்முருகன்
சொல்லாத களங்களைத் தான் தேடியலைகிறேன் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்களைச் சுமந்து கொண்டு. இந்தத் தொகுப்பின் சந்தனச் சோப்பு கதை இன்னும் மனதிற்குள் நெருடிக்கொண்டிருக்கிறது. நாம் வழக்கமாய் சந்திக்கும் நம் கவனத்திலேயே வராத மனிதர்கள்தான் இந்தத் தொகுப்பின் கதைகளெங்கும். நல்லதொரு வாசிப்பனுவம். புதிய மனிதர்கள். சாப்பிடும் போது கையில் வைத்து படிப்பதற்கல்ல என்று கூட சொல்லுவேன்.

o ராயர்காபிகிளப் – ரா.முருகன்

இணைய குழுமங்களின் காலத்தில் ராயர் காபி கிளப் குழுமத்தில் ரா.முருகன் எழுதியவற்றின் தொகுப்பாம். என்னவோ ரா.முருகனை வாசிக்கும்போதெல்லாம் சுஜாதா நினைவுக்கு வந்து தொலைக்கிறார், இந்தத் தொகுப்பிற்கு கற்றதும் பெற்றதும் நினைவிற்கு வந்தது.

o நெம்பர் 40 ரெட்டைத்தெரு- ரா.முருகன்

மறுபடியும் ஒரு சுஜாதாத்தன இரா.முருகன் புத்தகம். இந்த தொகுப்பு சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் நினைவுக்கு வந்தது. ஒரு ஆசுவாசத்திற்காக அவ்வவப்போது எடுத்து படித்துக்கொண்டிருக்கிறேன். கிழக்கு அதிரடி புத்தக விற்பனையில் வாங்கியது.

o உள்ளேயிருந்துசிலகுரல்கள் – கோபிகிருஷ்ணன்

கோபி கோபி கோபி.50க்கும் மேற்பட்ட மனப்பிறழ்வு நிலைகள். அதன் தொடர்பான காட்சிகள். ஒவ்வொரு நிலையைப்படிக்கும்போது நமக்கும் அதே நிலை சில காலம் இருந்ததாக ஒரு கற்பனை ஓடுகிறது. படித்து முடிக்கும்போது உலகமே ஒரு மன நிலை தவறியவர்களின் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. என்ன.. சிலர் மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

O விமலாதித்தமாமல்லன்கதைகள்

நான் திண்ணையைப்பிடித்து நடந்து கொண்டிருந்த காலத்தில் சிற்றிதழ்களில் வெளிவந்த கதைகள். இன்னும் அதன் உயிர்ப்பு அப்படியே இருக்கிறது காலங்களைக் கடந்து. சிறுமி கொண்டு வந்த மலர் நண்பர்களாலும், எழுத்தாளர்களாலும் திரும்பத்திரும்ப பாராட்டப்பட்ட கதை இந்த ஒற்றைப்பராட்டு பிற கதைகளை மறைப்பதாகத் தோன்றுகிறது. மாமல்லனின் தனித்துவமாக எனக்கு முன் நிற்பது காட்சிகளின் பின்புலம் குறித்த விவரணைகள். கதை மாந்தர்களை ரகசிய காற்றாக அருகிலிருந்து பார்க்கும் மயக்கத்தைத் தருகின்றன. இந்தப் பானைக்கு ஒரு சோறு சோழிகள் குறு நாவலில் சோதிடர் வெற்றிலை போடும் இடம்

O இரவுக்குமுன்வருவதுமாலை- ஆதவன்

ஆதவனின் ரகசியக்கண்ணாடி மனிதர்களின் மனங்களை ஊடுருவி வெளிக்காட்டுகிறது. ஒரு நொடிக்குள்ளான மனசஞ்சலங்களைக்கூட விடாமல் பதிவு செய்துவிடுகிறார். அதுவும் ஒரு சில வரிகளில். இந்த பகுதியை தட்டச்சும்போது நினைவுக்கு வருகிறது எதோ ஒரு கதையில் சிக்னலில் ஒரு பெண்ணைப்பார்க்கும் ஆணின் மனக் கொந்தளிப்பு கொண்ட ஒரு பகுதி. கதைச்சுருக்கமோ கதை விவரணைகளோ வாசிக்கும் முடிவைத் தள்ளிப்போடும் வல்லமை கொண்டவை எனக் கருதியே இதைக் கடக்கிறேன்.

o வனப்பேச்சி – தமிழச்சிதங்கப்பாண்டியன்

தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதைகளின் தொகுப்பு. கிராமத்துச் சிறுமியின் அறியாமைகள் ஆச்சர்யங்களை வெளிச்சொல்லி பெண் சந்திக்கும் எல்லா மனிதர்களையும் கோடிட்டுக்காட்டும் கவிதைகள். இருந்தாலும், கவித்துவம் என்ற ஒன்றை எங்கிருந்து கண்டெடுப்பது எனத் தெரியவில்லை. நவீன கவிதைகள் எனச் சொல்லப்பட்டவற்றின் இறுக்கமும் இல்லாமல், வட்டாரக் கவிதைகள் என முயல்வோரின் பாய்ச்சலும் இல்லாமல் நடுவில் துள்ளித் திரிகின்றன முதிராத கன்னுக்குட்டியைப்போல கவிதைகள்.

O முதல் 74 கவிதைகள் – யுவன்

யுவன் எனக்குப்பிடித்த கதைசொல்லி. அவரின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு எனக்குள் எழுப்பிய அதிர்வலைகள் இன்றும் எதாவது சிறுகதையைப்படிக்கும்போது நினைவுக்கு வரும். ஆனால் கவிதை அந்த சுருக்கம். செறிவு எதையோ இழந்து வார்த்தைகளைக் குவித்துப்போட்டு ஜல்லியடிப்பதான ஒரு மன நிலையே தோன்றுகிறது. முதல் 74 கவிதைகள் என்கிறார்கள். அதன் பிறகான கவிதைகள் எப்படி இருந்தன எனத் தெரியாது. ஆனால் இந்தத் தொகுப்பு எனக்கு அன்னியமே.

o எக்ஸைல் – சாருநிவேதிதா

கிட்டத்தட்ட ஒரு ரஜினிபட ரிலீஸ்க்கான களேபரங்களைக் கடந்து வெளியான நாவல். சாருவின் புனைவுகளில் ஒரு ஒற்றை நிறை எழுத்து முறையைக் காண்கிறேன். ஒரே தொகுதி மனிதர்கள், வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாவல் சிறுகதைகளில் வருகிறார்கள். அதேதான் இங்கேயும். கூடவே நிகழ்காலத்தின் அரசியல் சமூக கதைகளின் மாந்தர்களும் வேறு பெயரில் உலவுகிறார்கள். எல்லோரும் கொக்கரக்கோவைச் சொல்ல. எனக்கென்னவோ பக்கிரிசாமியின் ஆவி பிடித்திருக்கிறது. உதயாவும் அஞ்சலியும் ஒரே ஆள்தான் என்கிறார் சாரு. கொக்கரக்கோ கதையின் வில்லன். குடும்ப அழுக்காச்சி பகுதிகளில் ரகளை செய்யும் ஹீரோவும் கூட. பணம் பார்க்கும் இயந்திரம், அய்யப்ப சரணம் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள அல்லது கடந்து போக முடிகிறது. அந்த “சாட்” மேட்டர்க்கு பூச்சூடி மெழுகாமல் இருந்திருந்தால் இந்த நாவலைக்கொண்டாடித் தீர்த்திருக்கலாம்.

o வயதுவந்தோர்க்குமட்டும் – கி.ரா

பாலியல் கவிதைகள், வார்த்தைகள் பற்றி வரும்போதெல்லாம் கலாச்சாரக் காவலர்கள் “முன்னாடியெல்லம் இப்படிக் கிடையாது, இப்பதான் எல்லாரும் இதையெல்லாம் பரப்புறாங்க” மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வழக்கம்தான். (சமீப காலமாக ஐ.டிக்காரர்களால்தான் எல்லாம் என்ற வாதமும் சேர்ந்திருக்கிறது) ஆனால், நமது பழைய பக்கங்களில் ஆதி காலத்திலிருந்தே இதைக் குறித்த அறிவு கதைகள் வழியாகத்தான் கடந்து வந்திருக்கிறது என்பதற்கான ஆய்வுச்சான்றாகவே இந்த தொகுப்பைக்கொள்ளலாம். கிழவிகளிடமிருந்து பெண்களுக்கும் கிழவர்களிடமிருந்து ஆண்களுக்கும் இந்தக் கதைகள் பரவியிருக்கின்றன. “பாலியல் கல்வி ஒரு காலத்தில் பாடமாக ஆக்கப்பட்டால், அதற்கு துணைப்பாடமாக இந்த நூலிலிருந்து கதைகளை வைக்கலாம்” என்ற முன்னுரை வார்த்தைகளுடன் அட்சர சுத்தமாக ஒத்துப்போகிறேன்.

o பேயோன் 1000

பேயோன். . இவரின் 1000 டுவிட்டுகளின் தொகுப்பே இந்த நூல் (இதுவும் ஒரு ஆச்சர்ய முன்னுதாரணம். இப்படி டுவிட் தொகுப்பு புத்தகமாக வேறெங்காவது வந்திருக்கிறதா?) எப்போது மன பாரம் ஏற்பட்டாலும், குத்துமதிப்பாக எதோ ஒரு பக்கத்தை எடுத்தால் சிரித்து மனம் லேசாவது உறுதி. அப்படி ஒரு நாளில் திடீரென பார்த்த பேயோனின் டுவிட்

“வெள்ளி ஸ்பூன்! எனது வெள்ளி ஸ்பூனைக் காணவில்லை!”

அடுத்த பக்கத்தில் இன்னொரு டுவிட்
” நண்பருக்கு பிறந்த நாள். வாழ்த்த வயதில்லை. கிளம்பி வந்துவிட்டேன்.”

o திசைகாட்டிப்பறவை – பேயோன்

சர்க்கஸில் கோமாளிக்கு எல்லா வித்தையும் தெரிந்திருக்கும் என்பார்கள் இல்லையா? அந்த சொல்லாடல் இவரின் ஒவ்வொரு பதிவைப்படிக்கும்போதும் நினைவுக்கு வரும். இலக்கியம் பற்றிய தெளிந்த அறிவுடன் எல்லாவற்றையும் போகிற போக்கில் கொஞ்சமும் காயம் படாமல் நாசூக்கு நகைச்சுவை இவர் பலம்கதைகள் கவிதைகள், நாவலின் பகுதிகள் என இவர் தளம் நிச்சய சுவாரசியம். சில நேரங்களில் யாரை அல்லது எதைப் பகடி செய்கிறார் எனப் புரியாவிட்டாலும், ஒரு வாசகனாக சிரிக்காமல் கடக்க முடிவதில்லை இவரின் வரிகளை. இவர் தொகுப்பு இவரே எழுதிய முன்னுரை ஆச்சர்ய அட்டகாசம். பின்னட்டைக்குறிப்பும் பேயோன் என ஒரே பேயோன் மயம். பின்னட்டையில் வரும் இந்த வரிகள் தான் என் கருத்தும்
” பேயோனைப்போல் யாராலும் எழுதமுடியாது. ஒரு வேளை பேயோனைப்போல் எழுதும் யாரையாவது கண்டுபிடித்தீர்கள் என்றால், நீங்கள் பேயோனைத்தான் கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்”

o வால்காவிலிருந்துகங்கைவரை – ராகுலசாங்கிருத்தியாளன்

கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு முன்பே இணையத்தில் இந்த நாவலுக்கான சுட்டி நண்பரால் பரிந்துரைக்கப்பட்டு கிடப்பில் கிடந்தது. பிறகு 34வது புத்தகக் கண்காட்சியில் வாங்கி கொஞ்ச மாதம் அலமாரியிலும். தாய்வழிச் சமூகத்தின் ஆதிகாலக் காட்சியிலிருந்து தற்காலம் வரை குதிரைப்பாய்ச்சலில் நீளும் வரலாற்றுக் கதை. ஆரியர் திராவிடர் குறித்து சாதாரணமாக வாசிக்கக்கிடைக்கும் பகுதிகளின் மறுபக்கத்தைச் சொல்லும் சில அத்தியாயங்கள் அட்டகாசம். கொஞ்சம் வரலாறு தெரிந்தவர்கள் மறுத்துப்பேசியோ ஆதரித்தோ ஒரு விரிவான விவாதம் நடந்தால் தெளிவு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. ஒரு வேளை அப்படிப்பேசியிருந்தால் விவரம் கொடுத்தாலும் நன்றி.

o விசும்பு – ஜெயமோகன்

ஜெயமோகனின் அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு. ஜெயமோகன் உருவாக்கும் புதிய கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அறிவியல் சாதனங்களுக்கான சிறப்புப் பெயர்கள் முதல் முறை நெருடி, தொடர்கையில் பழகிவிடுகின்றன. சித்த மருத்துவம் மரபு இந்த தொகுப்பில் அங்கங்கே தூவிப்போவது காமெடி. இலக்கியவாதி பிம்பம் தாண்டி வெகுஜன எழுத்துப்பிம்பமே மேலெழுவது இன்னொரு நெருடல்.

oOo