#1
அதிகபட்சம்
ஆறுமாதகாலத்திற்குள் இருக்கலாம்

இடைவிடாது காதில் ரீங்காரமிடுகிறது
பிரசவப் பூனையின் குரல்

சவலை வார்த்தைகள் பிறப்பதை
மிகுந்த பிரயாசையுடன்
காதுகள் கூசுமளவிற்கு
ஒலியுடன் கவனிக்க நேர்வது எத்தனை
வாதை தெரியுமா?

சில வார்த்தைகள் பிறக்கும்போது
பூனைக்கு கொம்பு முளைக்கிறது
சில நேரங்களில்
தேவதை சிறகுகள்

கச்சாவாக சில நேரம்
விஷம்
சில நேரம் ஆயுதம்

ஒரு நள்ளிரவில் காண நேரிட்டது
அதே பூனையை
உடையில்லாமல்
பால் நக்கிக் குடித்தபடி.

கொஞ்சம் ஆசுவாசம்.
இதுவரை இல்லாதது.

#2

தனித்தலையும் பூனைகளை
மட்டுமே சந்திக்கிறேன்
ஒவ்வொருமுறையும்

தனக்கான புண்களுடன்
தனிக்குரூரக் கண்களுடன்
குட்டியை மட்டும் மென்மையாய்க்
கவ்வும் கூர் பற்களுடன்

பிறர்முன் பிரசவிக்கச் சீறும்
தனிக்கோபத்துடன்
தலையில் சுமந்தலையும்
சொந்த சிம்மாசனத்துடன்

கூடவே
பாலுக்கு கால் ஈஷும்
நாடகத்தில் தோன்றிவிடுகிறது
எந்தப் பூனையும் பூனை மட்டுமில்லையென.

oOo

இரண்டாவது கவிதையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கு நன்றி