மரணத்தை எப்பொழுதும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டுமா என்ன? சீக்கிரம் மரணம் ஏற்படுவதைக்குறித்த ஒரு வரியை எழுதிவிட முடிவதில்லை. என்ன நடந்துவிட்டதென இவ்வளவு சோகமென அத்தனை ஆறுதல் வார்த்தைகளையும் அதன் அனைத்துப்பரிமாணங்களுடனும் நம் முன் திரையிட்டுக்காட்டிவிட்டுத்தான் ஓய்கிறார்கள். ஒரு காதல் கவிதைக்கு யார் அந்த பெண்/ஆண் என்ற உப்பு சப்பில்லாத கேள்வியும் கூடவே. இறந்து போகத் தூண்டும் சோகத்தையோ, வாழ்ந்து தீரப்பணிக்கும் அந்தக் காதலையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. அதன் விளைவுகள் குறித்த சிறுவரிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பொதுவில் எழுதும் ஒருவனை/ஒருத்தியை நட்பு வட்டத்தில் பெற்ற பெருமையுடன்.

0
நிகழ்வுகள் சோர்வூட்டும் போதெல்லாம் கொஞ்சம் மாற்றி விளையாடிப்பார்க்கலாம். ஆட்டம் இழுக்கையில் பாதியில் நிறுத்தி கலைத்துப்போடப்படும் சீட்டுக்கட்டைப்போல. இடது கையால் பல் துலக்குவதாக. கவிதைக்கு நடுவில் ஒரு கதை எழுதிப்பார்ப்பது போல. இரண்டு நாள் முள்கரண்டியில் தோசை பிய்த்து சாப்பிட முயல்வதைப்போல. பின்னூட்டப்பெட்டியை நான்கு பதிவுகளுக்கு மூடி வைப்பதைப்போல. ஒரு மாதம் முழுவதும் வாரவிடுமுறைகளில் வீடு தங்காமல் எங்காவது அலைவதைப்போல. வாசிப்பை நிறுத்திவிட்டு திரைப்படங்களைப் பார்த்து தீர்ப்பதைப்போல. மாற்றங்களுக்கான தேடலில் கண்டடைகிறோம் புதிய பறவைகளின் சிறகசைப்பை. தார் சாலை வெயிலில் இடந்திரும்பி கொஞ்சம் விலகக்கிடைக்கும் திடீர் கடலை. அருகிலிருக்கும் அதிகமாய்ப்பேசியிராத புதிய நெருங்கிய நண்பனை.

0
உலகின் பெரும் பின்ன நவீனத்துவ படைப்பு என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாறு. எதையும் எப்படியும் திரித்து அல்லது உடைத்து புரிந்து கொள்ளலாம். ஆயிரம் மனிதர்கள் அவரவர் புரிதல் படி கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சேர்த்து ஒரு பெரும் படைப்பாய் மிகச்சமீபத்தில் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டதையே வரலாறு குறித்த அறிதல்கள் நிரூபிக்கின்றன. ஈ என்பதின் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பான அர்த்தமும், சமகாலத்தின் அர்த்தமும் வெவ்வேறாக மாறிய நிலையில் வரலாற்றின் ஆழத்திலிருந்து புதுப்புரிதல் என்பது புதிதான ஒன்றை உருவாக்குவதென்பது வெறும் பிம்பமே. எதை நாம் அறிந்திருக்கிறோமோ , எதை நாம் விரும்புகிறோமோ அதையே ஏற்கனவே இருப்பதில் இருந்து பிரித்து எடுப்பதில் மட்டுமே கவனம் செல்கிறது. கொள்ளிக்கட்டையில் எந்தக்கட்டை தலை சொரியத் தோதென்பது அவரவர் பாடு. நமக்கென்ன வந்தது.

0

நாளையே உலகம் அழிவதான பாவனையுடன் தான் எல்லாம் நிகழ்கிறது. தள்ளிப்போடாமல் உடனடி நிகழ்த்துதலென்பது இன்றியமையாத வேலைகளுக்கு மட்டும் போதாதா என்ன? அல்லது நேரத்தின் போதாமை என்பதான பாவனைக்கு நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறார்களா. 15 நிமிட காணொளிகளின் காலத்தில் ஒரு திரைப்படத்தை அதன் இடைவேளைகளுடன் பார்க்கும் பொறுமை சுத்தமாயில்லை. இடைவேளைகளற்ற தரவிறக்கப்பட்ட திரைப்படங்களில் சில காட்சிகள் வழக்கமான நேரத்தைவிட வேகமாய் பின் தள்ளப்படுகின்றன. ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள் இல்லாதிருப்பதான மன பிம்பத்துடன் தாண்டிச் செல்லப்படுகிறது. ஒரு ரகசியத்தை உடைக்கும் நாளுக்கான காத்திருப்பு எரிச்சலூட்டுகிறது. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களுக்கு ஓடுவதான பாவனையில்தான் தவறவிடுகிறேன் இந்த நொடியின் ரகசியங்களை காதலை அன்பை அழகை. காலம் கடிகாரத்தின் பேட்டரிகளுக்கு காத்திராமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது.