மணல் அளைந்தபடி இருந்த அந்தக் கடற்கரையில்தான் நீயும் நானும் அமர்ந்திருந்தோம். மெளனம் ஒரு அலையையைப்போலே நமக்குள் அடித்துக்கொண்டிருக்கிருந்தது. அனேகமாய் நம் பிரியலாம் என ஆரம்பிப்பாய் என்று காத்திருந்தேன். துப்பட்டா வழக்கத்தைப்போல் அல்லாமல் ஒரு பாரமாய் இருந்தது. காற்றில் என் முகத்தில் மோதும்போது எனக்கும் அப்படியே.

கொலைசெய்யக்காத்திருக்கிறாய்
எனத் தெரியும்
எந்த
வருத்தமும் இல்லை
என்
முகத்தில் விழும்
துப்பட்டாவை அவசரமாய்
இழுப்பதில் இருக்கும்
உன் வெறுப்பைவிடவா
கொலை கொடியதாய் இருக்கப்போகிறது.

மார்கழிப்பனி அதிகாலையில் பூசணிப்பூ சூடிய சாணிப்பிள்ளையார்கருகில் சரிகைப்பாவாடையை இடுப்பில் சொருகி கோலம்போட்டுக்கொண்டிருக்கும்போதுதான் உன்னை முதல்முறைப்பார்த்தேன். எந்த மாற்றமும் இல்லை. என் எத்தனையோ நாள்களில் கடந்த எத்தனையோ பெண்களில் இன்னொருத்தி நீ . அப்படியே இருந்து தொலைத்திருக்கலாம் நீ.

மஞ்சள் அத்தனை பிடிக்கும் உனக்கு. பிறகு எனக்கும். கோபம் அத்தனை வரும் உனக்கு. நான் குறைத்துக்கொண்டேன். கருப்பு அத்தனைபிடிக்கும் எனக்கு. என்னைமாற்றிவிட்டாய்.
உன்னை அத்தனை பிடிக்கும் எனக்கு. என்னை அத்தனை பிடிக்கும் உனக்கு. ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்போது மந்தையிலிருந்து விலகிவிடுகின்றன என்கிறது பழையகவிதை ஒன்று. என் காதலை காதல் என ஒத்துக்கொண்டபோது நீ விலகத்தொடங்கியதும் அதே வகைதானா?

ரசனைகள் இருவருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. குணங்களும். கோபங்களும். கர்வங்களும். மெளனங்களும். வீம்புகளும். என் காதலை காதல் என உணர்வதற்குமுன் உன்னைச் ஜெயிக்க அத்தனை பிடிக்கும் எனக்கு. வெட்டிச்சண்டைகளைத் தொடங்கி பேசாமல் இருப்போம். முகங்களைத் திருப்பிக்கொண்டு ஒரே அறையில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். வலிக்கும். அழுகைவரும். கோபம் வரும். இழுத்துப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டு மன்னிப்புக்கேட்கத்தோன்றும். கன்னத்தில் அறைந்துவிடத் தோன்றும். காதல் என்பதை காதல் என உணரும் வரை என்னைச் ஜெயிக்கவைத்து உணரவைத்து பின் தோற்கடித்தாய். ஒற்றை வாழ்க்கையின் ஒற்றைத் தோல்வி அது.

இடையறாது பின் தொடர்கிறது
அந்த
மஞ்சனத்தி மரம்
கனவில்
கவிதைகளில்
கதைகளில்
மஞ்சனத்தி மரத்தின்
கிளைகளும் நம்மைப்போலவே
பிரிந்திருக்கும் அருகருகே.

பிரிவதாய்ச் சொன்னதைவிட
மஞ்சனத்தியின் கீழ் பிரிவதாய்ச்
சொன்னததுதான்
பதிந்து போயிற்று ஒரு வரலாற்றுப்பிழையென.

இன்று வரை புரியாத கதை ஒன்றே ஒன்றுதான். உனக்கு காதலில் விரும்பமில்லை. என்மீது விருப்பமில்லை. வயதின் முடிவுகளின் மேல் நம்பிக்கையில்லை. என்னவேண்டுமாயினும் இருந்துவிட்டுப்போகட்டும். நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் என உறுதி செய்துகொள்வதில் ஏன் அத்தனை ஆர்வமாய் இருந்தாய் நீ? என் கவிதைகளில் எவளையோ எழுதிவிட்டுப்போகிறேன். அது யாரென தெரிந்துகொள்வதின் அவசியம் என்ன உனக்கு?

கண்களைச் சாய்த்து
எதிரமர்ந்து கேட்டாய்
கவிதைகளில்
திரும்பத்திரும்ப வரும்
தேவதை யாரென
யாரையோ காதலிப்பவன்
கூட நீ என்றே சொல்லியிருப்பான்
உன் பாவனைக்கு.
நான் என்ன செய்வேன்?

கடற்கரையில் ஓடிக்கொண்டிருக்கிறது குறும்புன்னகை உன் இதழெங்கும். அலையோடி கடலில் சேரும் கூழாங்கல்லைப்போல் உன் நினைவுகளுப்பின் ஓடி உன்னைத் துரத்த முயல்பவனைப்போல் உன்னருகில் அமர்ந்திருந்தேன். என் முகம் என்னை உனக்குச் சொல்லிவிடுகிறது. உன் முகம் உன்னைப்பற்றி எதுவும் சொல்வதில்லை அல்லது என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
எதுவும் சொல்லாமல் எழுந்தாய் மணல் உதறி செருப்புகளை அணிந்துகொண்டாய். கொலுசுகள் ஒலியெழுப்பியது எதோ ஒரு நாளின் உன்னைப்போல. ரொம்பச் சுலபமாய் மணலைத் தட்டி நடந்து போய்விட்டாய்.

அமர்ந்திருந்து எழுந்து போகும் போது தட்டிவிட்டுப்போக வேண்டிய கடற்கரை மணல்தானா நான் உனக்கு?

(காதல் செய்வோம்……)

oOo

o காதலர் தினம் – 2011க்கான தொடர். காதல் என்ற வார்த்தையை , பெற்றோர் பாசம், நாய்குட்டி பாசம், செடி வளர்ப்பு, ரசனை போன்ற வார்த்தைகளுடன் குழப்பிக்கொள்பவர்கள் கொஞ்சம் விலகியிருங்கள். இது வாலிபத்தில் தொடங்கி உடன் உறங்கி உடன் இறக்கத் தயாராகும் உணர்வுப்பூர்வ முடிச்சின் மொழி.