2009 | 2010 | 2011

வாசிப்பு ஒரு போதையாக மாறிப்போகும் சாத்தியங்களைக் கொண்டது. எந்தக் களத்தில் தொடங்குகிறோமோ, அதன் ஆழங்களை நோக்கி அதன் சாத்தியங்களை நோக்கி இழுத்துச் செல்லக்கூடியது. முன்முடிவுகளைக் கழற்றிவைத்து, அரசியல்கள், தனிப்பட்ட காழ்ப்புகள், கிசுகிசு கேட்கும் மனநிலைகள் எல்லாவற்றையும் விடுத்து, புனைவுகளை, அதன் புதிர்த்தன்மையுடன் வாசிக்கும் மனம், மீளுருவாக்கம் செய்து நிகழ்வுகளைத் தனக்குள் நடத்தி, அதன் மறைகண்ணிகளைத் தேடும் வாசக மனம் வாய்க்க வேண்டும் என்பதே பிரார்த்தனை. 2012ல் வாசிப்பு குறைவு. அடிக்கடி அறை மாற்றிக்கொண்டிருந்ததும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதும், இணைய மேய்ச்சல்களில் காலம் செலவிட்டதுமென சமாதானங்களைச் சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். எதையும் ஒரு சட்டமாக குறுக்கிக்கொள்ளாமல், அந்த நொடிக்காக வாழ்வதென ஆசை கொண்டபின், இத்தனை புத்தகங்களை இந்த வருடம் வாசித்தாகவேண்டுமென மட்டும் சட்டம் போட்டுக்கொள்ள முடியுமா என்ன?

உலோகம் – ஜெயமோகன்

இந்த நாவலின் பின்னாலிருக்கும் அரசியலோ (அப்படி யாரும் இருந்தால்) இதில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும் மனிதர்களோ எதைப்பற்றிய அறிதல் இல்லாமல், அவற்றைத் தெரிந்து கொள்ளும் விருப்பமில்லாமல்தான் படித்தேன். ஈழப்பின்னணியில் ஒரு திரில்லர் போன்ற விளம்பர வாக்கியங்கள் கொடுத்திருந்த நெருடல்வேறு. இலக்கியத்தரத்தில் ஒரு திரில்லர் வகையறா வாசக-விளம்பரங்கள் வேறு. ஆனாலும், எல்லா நெருடல்களையும் தாண்டி, பரபரவென படித்து முடிக்க முடிந்தது. ஜெமோவின் பிற புனைவுகளில் நிகழும் மின்னல் தருணங்களும் கூடவே. குறிப்பாக நாயகனின் தொடையில் வெளியேறாமல் தங்கிவிட்ட தோட்டாவின் விவரணைகள் வரும் இடங்களிலெல்லாம், முன்னோ பின்னோ, விருப்பமில்லாமல் செய்யும் ஒரு நிகழ்வு ஒட்டிக்கொண்டேயிருந்தாக உணர்ந்தேன். ஜெமோ இல்லையா? :)
விசும்பு – ஜெயமோகன்


புத்தகக் கண்காட்சியில் வாங்கி, வரும்வழியிலேயே (ரெயில்வே ஸ்டேஷனிலோ, ரயிலிலோ, நினைவில்லை) படித்து முடித்த புத்தகம். அறிவியல் புனைகதைகள் என நான் படித்தவை சுஜாதா மட்டும்தான். அதைத்தாண்டி எதுவும் தெரியாது. (சுஜாதா தவிர மற்றவர்கள் அனைவரும் எழுதியவை சுஜாதாவின் சாயல் என்றும், சுஜாதாவின் கதைகளே மேலை நாட்டு உருவல் என்றும் பிரியும் இன்ன பிற கிளைக்கதைகளை விட்டுவிடுவோம் ) என்றாலும், ஜெமோவின் களம் வேறாக இருக்கிறது. மறுவாசிப்பு செய்யாமல் யோசித்துப்பார்த்தால் கூட சித்த மருத்துவம் சார்ந்த சிறுகதையொன்று உடனடியாக நினைவுக்கு வருகிறது. ரசவாதம், தியான முறைகள் என்றெல்லாம் ஜெமோவின் வழக்கமான இந்திய ஞான மரபிற்குள்ளான சாத்தியங்கள்தான் இந்த தொகுப்பு முழுவதும் என்றே நம்புகிறேன். வழக்கமான ஆய்வுக்கூடம் – நரைத்த தலை புரபசர்களெல்லாம் குறைந்து, ஏற்கனவே நமது சூழல் பார்த்திருக்கக்கூடும் சாதாரண வயதானவர்களின் அறிவியல்தான் இந்த தொகுப்பு முழுவதும் கிடைக்கிறது.

குட்டி இளவரசன் (மொழிபெயர்ப்பு) – ஆந்த்வான் து செந்த்


குழந்தைகளுக்கான கதைதான். இருந்தாலும், குட்டி இளவரசனின் கதையை எல்லா சமகால அரசியல்களையும் பேசும் சுருக்கப்பட்ட வடிவமாகவே உணர்ந்தேன். எல்லா வேலையும் தானே செய்யும், தினமும் பலமுறை சூரிய உதயத்தைக் காணும் கிரகம், அதிலிருந்து வெளியேறி பிற கிரகங்களுக்குச் செல்லும்போது அவன் சந்திக்கும் மனிதர்கள் எல்லாமே தனித்துவிடப்பட்ட ஒருவனின் மனக்குமுறல்களாகவே தோன்றியது. அவனை எல்லா விதத்திலும் எல்லாவற்றிலிமிருந்து விலகிக்கொண்ட ஒரு தனி மனிதனாகவும், அவன் சந்திக்கும் கிரகங்களை அதன் உரிமையாளர்களை அவன் தனது குறுகிய வட்டத்திலிருந்து வெளிவரும்போது உலகம் அவனை எதிர்க்கொள்ளும் விதமாகவும், ஒவ்வொரு காட்சியையும் விரித்துக்கொண்டே வாசிக்க முடிகிறது. எத்தனை பெரிய உலகம் இது… எத்தனை குறுகிய வட்டம் நமது? அவன் கேட்கும் கேள்விகளில், அவன் உணர்வுகளில் எதை எதையோ ஒப்பிட்டுப் பார்த்து குழப்பிக்கொள்ள எத்தனை குதர்க்கமான மனம் எனது? :)

மேன்ஷன் கவிதைகள் – பவுத்த அய்யனார்

தனிப்பட்ட முறையில் , ஆண்களின் உலகம் பற்றிய எழுத்துகளில் ஒரு ஆர்வமிருக்கிறது. பொதுவாக தனிமை – குறித்து ஆயிரக்கணக்கான கவிதைகளை அள்ளிக்கொட்ட எத்தனை பேர் இருந்தாலும், மேன்ஷன்களைப் பற்றி எத்தனை தூரம் எழுதப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. திருவல்லிக்கேணியின் மேன்சன்களில் கொட்டிக்கிடக்கும் கதைகளைப்பற்றி அங்கு தங்கியிருந்த நண்பன் சொல்லியிருந்தவை தந்த மயக்கத்தின் காரணமாகவே இதன் பால் ஈர்ப்பு வந்தது. ஆண்களின் தனிமை உலகை எளிய வார்த்தைகளில் தடதடவென தட்டிப்போகும் தொகுப்பாகவே பார்க்கிறேன். எதோ ஒரு கவிதையின் முடிவாக வரும் ”பிரம்மாண்ட நகரின் சிறிய குடுவைக்குள் மின்விசிறி நான்” போதாதா?
மயன் சபை – தபசி


எளிய மொழியில் மின்னல்கணங்களைப் பிடித்துவைக்கும் கவிதைகளை எழுதுபவர்களும், அந்தக் கவிதைகளும் இருக்கும் இலக்கிய குறுவட்டத்திற்குள் ஒரு ரகசிய வட்டமாக இயங்கிவருகிறார்களோ என்றொரு சந்தேகம் உண்டு எனக்கு. தபசியை அறிமுகம் செய்தது வினாயகமுருகன் என்பதாலும் இந்த சந்தேகம் வந்திருக்கலாம். மிக எளிய மொழி. மிக நுண்ணிய கணங்கள். ஒரு வாராந்தரியைப் படிக்கும் வேகத்தில் படிக்க முடிகிறது. ஒரு புன்னகையுடன், அதன் குறியீடு என்ன கேள்விகள் என்னென்ன என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளாமல், ஒரு அனுபவஸ்தரிடம் கதை கேட்கும் பாணியில் இந்தக் கீற்றுகளை புன்னகைத்தே உள்வாங்கிவிட முடிகிறது. எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான் பாடலை மேற்கோள் காட்டும் கவிதை ”அப்பா ஊதாரியாய் இருந்தால், எல்லாம் அம்மா தலையில்தான் விடியும் என முடிகிறது. வாவ்!

எம்ஜி ஆர் கொலைவழக்கு – ஷோபா சக்தி

ஷோபா சக்தியின் இணைய எழுத்துகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். அச்சுப்படைப்புகள் எதுவும் வாசித்ததில்லை. பொதுவாக எனக்கு நிகழும் தடுமாற்றம்தான் இந்த புத்தகம் வாசிக்கும்போது. ஒன்று மொழி. எந்தவித முன் அனுபவமும், இந்த மொழியுடன் எனக்குக் கிடையாது என்பதால், பக்கங்களைக் கடக்க, பொருளை உணர கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கிறது (சில வட்டார வழக்கு வார்த்தைகள் தென் தமிழகத்தின் சில வட்டார வார்த்தைகளுடன் ஒத்துப்போவது இன்ப அதிர்ச்சி). இரண்டாவது அரசியல். எனது அறியாமைதான் வேறென்ன? இதைத்தாண்டி சிறுகதைக்குள் நுழையலாமென்றால், என் தேடலுக்கான எதுவும் கிடைக்கவில்லை. காரணம் , மொழியும் அரசியலும் அன்னியப்பட்டுப் போனபின், கிட்டத்தட்ட சுயசரிதைத்தன்மை கொண்ட கதைகளில் எதை எடுத்துச் செல்வது?
யுரேகா என்றொரு நகரம் – எம்,ஜி சுரேஷ்

எம்ஜிசுரேஷினைப் படிக்கும்போதெல்லாம் ஒரு குழப்பம் வருகிறது. இவை இலக்கிய பெர்சுகளின் பார்வையில், இலக்கியத்துக்குக் கீழ்வருமா, இல்லை வணிக எழுத்தின் கீழ் வருமா? (பிரேம் – ரமேஷ் படிக்கும்போதும் இந்தக் குழப்பம் வரும்) யுரேகா என்றொரு நகரம் ஆராய்ச்சியாளர்கள் கண்டடையும் தொலைந்து போன அல்லது புதையுண்டுபோன ஒரு பழங்கால நகரம். அதற்கான ஆராய்சியாளர்களின் உழைப்பு, அந்த இடத்தை அவர்கள் அடையும் நாட்கள் என விரியும் நாவல், அத்தனை நிச்சயத்தன்மையுடன் நிகழ்கிறது. புதையுண்ட நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்களின் புகைப்படம் கூட நடுவில் வருகிறது . இறுதி அத்யாயத்தில் கொண்டை ஊசி வளைவில் பொசுக்கென திரும்பும்போது, இன்னொரு முறை நாவலை படிக்கத் தோன்றுகிறது.
நகுலன் – நவீனன் டைரி

நகுலன் ஒரு போதை. இது இந்த வருடம் படித்த நாவல் என்பதைவிட, இந்த வருடம் தொடங்கிய நாவல் என்றே சொல்லலாம். எதோ ஒரு இடைவெளியில், மனம் கனத்து கண்ணீர் பொங்கும் நேரத்தில், அல்லது கொண்டாட்டமாய் ஒரு ஆட்டம் போடத்தோன்றும் நாளில், அல்லது எதுவுமற்ற வெளியில் மனம் அடங்கியிருக்கும் நாளில் என எந்த மன நிலையில் புரட்டினாலும், எதோ ஒரு திடுக்கிடலை, சந்தோசத்தை, புன்னகையை அதன் நொடி ஆச்சர்யத்தை எப்போதும் நகுலனின் நாவல்கள் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றன. ஒரு நாளில் டைரிப்பகுதியை, ஒரு நாளில் சம்பாஷணைப்பகுதியை, இன்னொரு நாளில் கவிதைப் பகுதியை என தொடர்ந்து பலமுறை, முழுவதுமாகவும், இடையிலிருந்தும், சில பக்கங்களென்றும் விதவிதமாய் படித்துப்பார்த்தாயிற்று. ஒரு நாளும் நாவல் அதன் நிச்சய-ஆச்சர்யத்திலிருந்து தவறியதேயில்லை. நகுலன் போதை. வேறென்ன்ன சொல்ல? :)
பாம்புத் தைலம் – பேயோன்

இந்த முகம் (எனக்குத்) தெரியாத மனுஷனுக்கு மட்டும் எங்கிருந்து பகடி இத்தனை சரளமாக வருகிறது எனத் தெரியவில்லை. அதுவும், துணுக்குத் தோரணம் கட்டும் சிறுபிள்ளைத் தனமில்லை, நுண்ணிய இதுவரையிலான படைப்புகளின் போலித்தன்மையை வஞ்சமாய்ப் புகழும் பகடி. கட்டுரைகளின் முதல் வரி கூட, ஏற்கனவே படித்த கட்டுரைகளின் தேய்வழக்கு முறையில் ஆரம்பித்து, சின்ன டுவிஸ்ட், சின்ன நகைச்சுவையுடன் கைவருகிறது. தாம்பரம் பயணக்கட்டுரை அதன்பிறகு எந்த எழுத்தாளருடைய எந்த பயணக்கட்டுரை படித்தாலும் நினைவுக்கு வரும். பேயோன் பேயோன் தான்.
மங்கலத்து தேவதைகள் & எட்றா வண்டிய – வாமுகோமு

மணி பாரதியாகட்டும், சாமி நாதனாகட்டும் ,பொன்ராசு உள்ளிட்ட இன்ன பிற பாத்திரங்கள் ஆகட்டும், வாமுகோமுவின் நாயகர்கள் கனவுகள் அற்றவர்கள். பெண்களைத் தேவதையென்றுயர்த்தி, பின் மனைவியென்று அடக்கித் தூக்கிப்போட்டு உடைக்காதவர்கள். காமத்தை, அதன் கனலை, மழைக்காலத்தில் கடந்து போகும் தெரு நெருப்பைப்போல அதன் பழக்கத்தில் மிகச்சுலபமாய் அண்மித்தும் தொலைவுற்றும் கடந்து செல்கிறவர்கள். சினிமாக்களைப்போல, கெட்ட கணவன் திருந்தி கிளைமாக்ஸில் திரு நீறு வைத்து கோவிலுக்குப்போய் பத்தினி தெய்வத்தின் வேண்டுதலை நிறைவேற்றாதாவர்கள். குடியும் காமமும் அதன் நெளிவு சுழிவுகளும் அதன் ஓட்டத்தில் அனுபவத்தில் தெரிந்த தெளிவுள்ள எளியவர்கள். இதே விரிவும் களமும், எதிர்பாலுக்கும் சம அளவில் கொடுக்கப்பட்டிருக்கும். அய்யய்ய்யோ நான்லாம் காதலிக்கமாட்டேன்பா அப்பா திட்டுவார் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர்கள். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என சுற்றியிருக்கும் பதினாறுமுழத்தை இழுத்துவிட்டுக்கொள்ளாதவர்கள். வாழ்க்கை . எல்லா கிராமப்புறங்களின் கிண்டல் கேலி காமம் சாதி. கூடவே வாமுகோமுவின் அனுபவத்திலிருந்து ஊர்கள், மொழி நடை. எத்தனை நாவல், எத்தனை சிறுகதைகள் படித்தாலும் இதே கூட்டணியில்தான் வெவ்வேறு ஆள்கள், வெவ்வேறு காதலையும், வெவ்வேறு பின்னணிகளையும் , வெவ்வேறு தொழில்களையும் வைத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் களம் ஒன்றேதான்.

அழிக்கப்பிறந்தவன் – யுவகிருஷ்ணா


யுவகிருஷ்ணாவின் பதிவுகளை, அறிமுகம் கிடைத்த நாளிலிருந்து தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், யுவாவின் எழுத்துக்களைப்போலவே அவரின் தொடக்கங்கள் பிடிக்கும். சரியாகச் சொல்வதென்றால், முதல்வரி. தலைப்பு ஒன்றைச் சொல்லியிருக்கும், அதன் மீதான நம் முன்முடிவு ஒன்றாக இருக்கும், முதல் வரி இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் ஆரம்பிக்கும், கிட்டத்தட்ட ஐந்தாறுவரிகளுக்கு ஏன் இதைப்பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உள் யோசனையுடன் ஓடி, திடீரென தலைப்புக்கும் களத்திற்கும் உள்ளே வருவார். இந்த நாவலிலும் முதல் வரி அப்படித்தான் இருந்தது. “இயக்குனர் ஷங்கர் கமிஷனர் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருந்தார்” நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் உங்களை நகரும் ரயிலுக்குள் பொசுக்கென ஒருவர் பிடித்து இழுத்தால் ஏற்படும் அதிர்ச்சி. தொடர்ந்து திருட்டு டிவிடி, வாப்பா, பர்மா பஜாரின் நிழல் உலகம், இருள் பூசிய சப்வேக்களின் மறைகதைகள் என தடதடக்கும் ரயில் வேகத்தில் ஓடுகிறது கதை. அட்டை டூ அட்டை அட்டகாசம் என்ற பழைய விளம்பர வரி தெரியுமா உங்களுக்கு? நம்பி படிக்கலாம் :)

மாதொருபாகன் – பெருமாள்முருகன்


பெருமாள்முருகன் பற்றி அவர் எழுதிய எல்லா படைப்புகளையும் வாசித்தவர்கள் யாராவது விரிவாக பேசவேண்டும். எந்த சுயவிளம்பரங்களும், படைப்புகளுக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் விளையாட்டுத்தனங்களும் அற்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் ஒரு ஆளுமையெனத் தோன்றுகிறது. என் கடன் எழுதிக்கிடப்பதே வகையறாவெல்லாம் இணைய வெளியில் சாத்தியமில்லை என்பதாலேயே இந்த ஆச்சர்யம். வாமுகோமுவின் கொங்கு நிலத்திற்கும், பெருமாள் முருகனின் கொங்கு நிலத்திற்குமான பொதுவாக வேறுபாடாக நான் கருதுவது, வாமுகோமுவின் ஊர்கள், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்டவை. தறியோட்டிகளாலும், பஞ்சாலைத் தொழிலாளர்களாலும் ஆன ஒரு கடாமுடா வகையறா. பெருமாள் முருகனின் ஊர்கள் பச்சை நிலம் கொண்டவை. நகரத்தின் சாயல்களற்ற வெள்ளந்தி மனிதர்களாலானவை. காமத்தை புறங்கையால் ஒதுக்கி உறவுகளும், மண்வாசனையும், வீம்புகளும் பிணைந்தவை. மாதொருபாகன் குழந்தையில்லாத தம்பதிகளின் வாழ்வைப்பேசுகிறது. 20களின் இறுதியில் திருமணம் செய்து ”பிளானிங்கில்” இருக்கும் இன்றைய தலமுறையில் எவ்வளவு தூரம் ’மலடி’ ‘மலடன்’ போன்ற உளவியல் தாக்குதல்கள் இருக்கின்றன என யோசித்தோமானால், குறைவென்றே தோன்றுகிறது. அதன் நெருக்கடிகள், உறவினர்களின் குத்தல் பேச்சுகள், அதற்கான வேண்டுதல்கள் என பச்சை ரத்தம் ஒழுகும் மன உலகம் அது. அத்தனை வீரியமாய் இதில் வெளிப்பட்டிருக்கிறது. நேர்கோட்டில் பயணிக்கும் இந்த வகை கூட ரசிக்கவே வைக்கிறது. இவரின் இன்னபிற புத்தகங்களையும் படிக்கவேண்டும்.

ராஸலீலா – சாரு நிவேதிதா


ஹா. வாசிப்பைப்பற்றி பேசும்போது சாரு இல்லாமலா? ராஸலீலா குறித்த குறிப்புகள் சாருவினைத் தொடர்ந்து படிக்கும் யாருக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதை தன் படைப்புகளில் சிறந்ததென்று சாருவே சொல்லிக்கொள்வதும், வாசகர் வட்டத்தில் பிறமொழி எழுத்தாளர்களைப் பற்றி பேச்சுவரும்போது அவர்களைப்படித்தவர்கள், அதைவிட ராஸலீலா சிலபல மடங்குகள் சிறப்பென்று புகழ்வதுவும், அந்த அரசியல் இன்னபிறவுக்குள் நமக்கு வேலையில்லை. புத்தகம் பேசட்டும். ராஸலீலாவின் சாருவின் வழக்கமான புள்ளிகள் அத்தனையும் உண்டு. தனித்துவிடப்பட்ட எழுத்தாளன், சுயபுலம்பல்கள், காமம். கூடவே இதில் டெல்லியும் குமாஸ்தா வேலையும், அரசாங்க அலுவலகங்களின் பின்புலமும், அதன் அபத்தங்களும். அதே விறுவிறுப்பாக, நேர்ந்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டியைப்போல் இழுத்துச் செல்லும் மொழி நடையும். ஆனால் இதைச் சாருவின் படைப்புகளில் சிறந்ததென்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆட்டுக்குட்டியை இழுத்துச் செல்லும் மொழி நடை என்று சொன்னேனில்லையா? இதில் நீண்ட தூரத்திற்கு நடையோ நடையென நீள் நடை. ஆட்டுக்குட்டி கால் வலித்துச் சோர்ந்து தரையில் படுக்குமளவு அதீத விளக்கங்கள், அதீத விவரணைகள் இன்னும் பல இழுவைகள். ஒரு பிரபல மலையாள இதழில் தொடராக வெளிவந்ததாக சாரு சொன்னதாக நினைவு. எனில், அந்த இதழுக்கான சமரசங்களாக இருக்கலாம் என்று கூட ஒரு சந்தேகம் வருகிறது. ஆனாலும், முதல் முறையாக சாருவை ஆரம்பிப்பவர்கள், ராஸா லீலாவை தாராளமாகத் தொடங்கலாம். காமம் என்ற வார்த்தையே ஆபாசம் என நினைப்பவர்கள் சாருவை விட்டு தூரம் செல்லலாம். உங்களுக்கு நல்ல்லது. எதற்கு தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டு? :)

எல்லாமே பிறருக்கு தைரியமாக பரிந்துரைக்கும் படைப்புகளாகவே இந்த வருடம் அமைந்திருக்கிறது. எதையும் நொந்து கொண்ட நினைவில்லை. ஆரம்பித்து சலிப்புற்று பாதியில் நிறுத்திய புத்தகங்களை தொடர்வதற்கான மன நிலை வாய்க்காமல், அவை இந்த பட்டியலில் வராமல் போனது கூட காரணமாக இருக்கலாம். எப்படியோ, என் காலங்களை சில புத்தகங்கள் தன் புதிர்களால் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை வாழ்வில் ருசியிருக்கும்.