நட்சத்திரகுறியிட்ட பலூனில்
கழுத்து இறுகும்படி
வானத்தை அடைபவர்களைப் பற்றி
பேச வேண்டியிருக்கிறது

சிறுமுலைத்தெய்வங்களை
தனித்துவிட்ட
கோயில் காப்பாளர்களை
யாராவது கேள்விகேட்கவேண்டியிருக்கிறது

காற்றில் அசையும்
ஒற்றைப்பட்டத்தின் ஆதார நூலை
மண்ணில் சிறுகயிற்றில்
கட்டிப்போகிறவர்களே கொஞ்சம் நில்லுங்கள்

சொல்மட்டுமே இருப்பவர்கள்
யாரும் பார்க்காமல்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

கானகத்தின் இறுதிப்பாடலை.

o

விசேச நாட்களில்
நான் அறைக்கு திரும்ப
விரும்புவதில்லை

அறை மிகவும்
தனியாக இருக்கிறது
விசேச பண்டங்களை விசேசமாக
எனக்கு
சமைக்கத்தெரியாது
தனியே சமைத்து உண்பவர்கள்
தெறிக்கும் தீப்பொறிகளைக் கவனிக்க
மறந்துவிடுகிறார்கள்

மிகுத்துச்செறிந்த வாஞ்சையுடன்
தன் வீட்டு
பண்டங்களைக் கொண்டுவருபவர்கள்
கொஞ்சம்
பரிதாபத்தையும் தட்டில்
வைத்திருக்கிறார்கள்

கூடவே,

விசேச நாட்களில்
யாராவது நினைவுக்கு வந்துவிடுகிறார்கள்

வரக்கூடாதவர்கள் வரும் மாலைகளில்
போகவேண்டியவர்கள் போகாமல்
இருப்பதுதானே நல்லது?

o

ஆம்
நன்னீர் மீன்களை
உயிருடன்
கொதிக்க வைத்திருக்கிறேன்

ஆம்
மெழுகுவர்த்தியை
அறுக்கும்போது கழுத்தை
அறுக்கும் கற்பனையை
உருவாக்கிப்பார்த்திருக்கிறேன்

ஆம்
மரத்து வண்டுகளை
எந்த காரணமும் இன்றி
எரிவிறகில் வெடிக்கும்படி எறிந்திருக்கிறேன்

ஆம்
நாக விசத்தை நேரடியாக
நாவில் வாங்கி
போதமுற்றிருக்கிறேன்

ஆம்
அவ்வப்போது நான்
பிறருக்கான அன்பாக
சில போலி முத்தங்களை பரிசளித்திருக்கிறேன்