திரும்பும்பாதையில்
எதிர்ப்படும் மரங்களைக்
கொத்திச்செல்லும் பறவை
அல்லது
புத்துணர்ச்சி முகாமிலிருந்து
திரும்பி வந்த
யானையின்
துதிக்கை நுனி
துழாவும் தார்ச்சாலை
அல்லது
மூச்சடக்கப்பட்டதுபோல்
நின்றுபோகும்
மேல்வீட்டுக்காரியின் அழுகுரல்
அல்லது
எல்லாம் சுகம்.
இனியொன்றுமில்லை எனும் சொற்களுக்கிடையேயான
இடைவெளி.
O
பழையகணக்குகளின் தீ சுடர்விடும்
கண்களை
மரணப்படுக்கைக்கு அருகிலமர்ந்து
பார்த்துக்கொண்டிருக்கும்
மாலைகளில்
மழை சத்தமில்லாமல் பெய்கிறது.
வருகிறவர்களின் எல்லாருக்கும் கொடுப்பதற்கு
எதையாவது தயார் செய்யச்சொல்லி
அவள்
என்னைப்பணித்துக்கொண்டேயிருக்கிறாள்
திடீரென இருள் கவிகிறது
ஏகப்பட்ட பெருமூச்சுகள்
சிலர்மட்டும்
நினைத்து நினைத்து தேம்ப விதிக்கப்பட்டவர்களாக
பணிக்குத்திரும்புகிறார்கள்.
O
சோப்புக்குமிழிகள் காற்றெங்கும்
பறக்கும்
ஒரு பின்மதியத்தில்
நீரில்
இறங்கும்
குமிழி மட்டும்
உடையாமல் நீண்ட நேரத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறது
உடையாமல் காத்திருக்கும் குமிழிகளின் பதட்டம்
நீயும் அறிவாய்தானே?
O
மறுமொழியொன்றை இடுங்கள்