சோ கால்ட் கூட்டுமனசாட்சியை நிருப்யா கொஞ்சம் அசைத்துப்பார்த்துவிட்டாள் இல்லையா? தண்டனைச் சட்டங்களின் படி, குழந்தை என வரையறுக்கப்பட்ட ஆணும், இந்த குடும்ப முறையில், காதலைப் பற்றி பேசக்கூட தடை இருக்கும், அவன் அண்ணனும் ஒரே கடப்பாரையைத்தான் தனியாக மாட்டிய பெண்ணிடம் உபயோகித்திருக்கிறார்கள் இல்லையா?

ஊடகங்களுக்கு எல்லாமே டி.ஆர்.பிக்கான தீனிமட்டுமே. எல்லா பாலியல் வன்முறை வழக்குகளும் தூசு தட்டப்பட்டன, இளம்பெண் தனியே இரவில் தன் காதலனுடன் சென்றால் இப்படியெல்லாம் நடப்பது சகஜம் தான் என மேதைகள் சொன்னார்கள். அதே மேதைகளின் ஆண்பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்தார்கள். இளம்பெண்ணுக்குப் பதிலாக, குழந்தைகளும் வயதான கிழவிகளும், வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வெளி வந்தன. இரவில் மட்டுமில்லை, நண்பகலில், மாலையில், அதிகாலையில் வன்முறை நிகழ்வுகள் இருந்தன. காதலனுடன் மட்டுமில்லை. அண்ணனுடன், தந்தையுடன், என எல்லா சக உறவுகளுடன் சென்ற போதும் இதே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என புட்டுப்புட்டு வைத்தன புள்ளிவிபரங்கள். அரைகுறை ஆடைகள் என்றார்கள். பள்ளிச் சீருடை அரைகுறை ஆடையில் வராது இல்லையா?

அரசிற்கு எல்லாமே ஓட்டுத் தந்திரம் மட்டுமே. நிருப்யா இறந்தவுடன், இனியொரு வன்முறை நிகழ்வைத் தவிர்க்க தடுக்க தண்டிக்க சட்டம் இயற்றுமுன்னர், முதல் வேலையாக கட்சி வாரியாக சில பல லட்சங்களைப் பெட்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனை முன்பு நின்றதைப்பார்த்தீர்களா? இனியொரு பெண்ணுக்கு இந்தக் கொடுமை நடக்காமல் தடுக்கவேண்டுமெனத்தானே நிருப்யா வேண்டியிருந்தாள்?

தூக்குத் தண்டனை, ரசாயன ஆண்மை நீக்கம் முதல், கருட புராணத்தின் படி மர்ம உறுப்பில் எலிகளை விட்டு கடிக்க வைக்கும் வரை எத்தனை தண்டனைகள் முன்மொழியபட்டன? மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் ஆணாதிக்கம் (நானும் ஒரு அடையாளம்தானே?) கால்களுக்கு நடுவில் இல்லை. மூளைக்குள் இருக்கிறது.

எதுவரை நிருப்யா பற்றி பேசிக்கொண்டிருந்தோம் நினைவிருக்கிறதா? வினோதினி ஊடகப் பார்வைக்கு வரும்வரை. பிறகு வித்யா என இன்னொரு மாணவி. இன்னும் ஊடகங்களும், அரச யந்திரமும், மற்ற ஆசிட் வழக்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அடுத்த விதத்தில், அடுத்த வன்முறை நிகழும் வரை, ஆசிட் மட்டுமே நினைவிலிருக்கும். சூர்யநெல்லி பெண் பற்றி படித்தீர்களா? 1996ல் மூணாறில் காணாமல் போன ஒரு தபால்காரர் மகள். 40 நாள்களுக்கு, போதையூட்டப்பட்டு ஆள் மாற்றி ஆள் அவளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி , கடைசியில் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியைக் கொண்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு வருடங்களில் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றம், இது பாலியல் வன்முறை இல்லையென்றும், பணத்துக்காக நடந்த பாலியல் வியாபாரம் என்றும் தீர்ப்பை மாற்றி, விடுதலையும், தண்டக்குறைப்பும் செய்து, குற்றவாளிகளை விடுதலை செய்தது. அதில் ஒருவர் எம்.பி. இன்னொருவர் சமீபத்தில், கேரள வணிக வரித்துறையில் அதிகாரியாகவும் வளர்ந்திருக்கிறார்கள். வினோதினி, வித்யா, சூர்யா நெல்லிப் பெண்ணெல்லாம் கூட்டு மனசாட்சியின் கண்களுக்கு கொண்டுவரப்படவில்லை இல்லையா?

மறுபடியும் சொல்கிறேன். எங்க‌ள் வ‌ன்முறை எங்க‌ள் கால்க‌ளுக்கு ந‌டுவில் இல்லை. மூளையில் இருக்கிற‌து. எல்லா குழந்தைகளுக்கான க‌ளிம‌ண் மூளைகளைப் பாண்ட‌மாக்கும் பெற்றோர், எங்க‌ளுக்கு ஆதிக்க‌த்தையும், உங்க‌ளுக்கு அடிமைத்த‌ன‌த்தையும் க‌ற்றுக்கொடுத்திருக்கிறார்க‌ள். எங்க‌ளைவிட‌ அதிக‌ம் ச‌ம்பாதிக்கும் பெண்ணை , எங்க‌ளைவிட‌ அதிக‌ம் புத்திசாலியான‌ பெண்ணை, எங்க‌ளைவிட‌ வ‌ய‌தில் அதிக‌மான‌ பெண்ணைக்கூட‌ எங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌முடியாது. தாய்வ‌ழிச் ச‌மூக‌த்தில் ஆண்களின் நிலை ஒரு ஜீனாக‌ த‌லைமுறை த‌லைமுறையாக‌க் க‌டத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒரு நடையில் எங்களைக் கடந்து செல்லும் பெண்கூட எங்கள் அகங்காரத்தை அசைத்துப் பார்த்துவிடுகிறாள். எங்களைப்போலவே விரும்பிய‌தை அணியும் பெண்க‌ள், எங்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பின்னிர‌வுக‌ளில் க‌ண்ணில் ப‌டும் பெண்க‌ள், எங்க‌ள் வ‌ன்முறைக்கு இல‌க்காக‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்ற‌ எண்ண‌ம் விதைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ளுக்கு உத‌விசெய்யாது. ந‌ட‌க்கும்வ‌ரை வேடிக்கை பார்த்து பின் , ப‌ண‌ம் கொடுத்து ஊரிலுள்ள‌ ம‌ற்றவ‌ர்க‌ளின் ஓட்டு வாங்க‌ முய‌லும். ஊட‌க‌ங்க‌ள் உதவி செய்யாது. டி.ஆர்.பி ரேட்டிங்க் கூட்டும் தார‌க‌ ம‌ந்திர‌மில்லையா? உங்க‌ளுக்கு ம‌ர‌ண‌மே நேர்ந்தாலும் சீரிய‌ விள‌ம்ப‌ர‌ இடைவேளைக‌ளில்தான் செய்திக‌ளே வ‌ரும்.

த‌ப்பிப் பிற‌ந்த‌, இன்றுவ‌ரை பெண்க‌ளை அடிமைப்ப‌டுத்தியதைக் குறித்த‌ குற்ற‌வுண‌ர்ச்சி கொண்ட‌ ஒரு சிறு குழு ஆண்க‌ளுக்குள்ளுள் உண்டு. ஆனால் அதுவும் உத‌வாது. ஒரே வ‌ழி இந்த‌ த‌லைமுறையிட‌ம் ஜாக்கிர‌தையாக‌ இருங்க‌ள். த‌ப்பிப் பிற‌ந்த‌ ஆண்க‌ளை க‌ண்ட‌றிய‌ க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். கணவன், சகோதரன், அப்பா, அண்ணனின் வார்த்தைக‌ளிலும் செய‌லிலும், நேர‌டியாக‌ ம‌றைமுக‌மாக‌ இருக்கும் விஷ‌ முட்க‌ளை அவ‌ர்க‌ள் முன்னால் எடுத்துச் சொல்லுங்க‌ள். உங்க‌ளிட‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல், பிற‌ பெண்க‌ளைப்ப‌ற்றிய‌ அவ‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ளையும் க‌வ‌னியுங்க‌ள். 6 ம‌ணிக்குள் வீட்டு வ‌ந்துருமா என‌ குடும்ப‌த்தின‌ர் சொன்னால், “அட‌டா இது அக்க‌றை” என நீங்கள் ஏற்றுக்கொண்டால், த‌ன் குடும்ப‌த்தின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட‌ ஒரு க‌ட்டுப்பாட்டை மீறும் பொதுவெளிப்பெண்ணுக்கு “அவ‌ நைட்டு வெளிய‌ சுத்துனா இப்ப‌டித்தான் ந‌ட‌க்கும், எங்க‌க்காவும் இருக்கா.. ஆறு ம‌ணிக்கு வீட்டு வ‌ ந்துருவா.. அவ‌ளுக்கு இதுவ‌ரை எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ர‌லியே” என‌ ஒரு வ‌ட்டார‌த்தையே அடுத்த‌ த‌லைமுறை குற்ற‌வாளிக‌ளாய் உருவாக்க‌ ஆண்க‌ள் த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.

ஒரே விஷ‌ய‌ம். உங்க‌ள் ஆண் குழ‌ந்தைக‌ளை எங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள். உங்க‌ள் பெண் குழ‌ந்தைக‌ளை உங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள்.

இதுவ‌ரை ஒரு சொல்லில், ஒரு பார்வையில், ஒரு நிக‌ழ்வில், என்னை மாற்றிய‌ ஒவ்வொரு பெண்ணுக்கும் ந‌ன்றி க‌ல‌ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக‌ள்‌