நந்து ரயில் நிலையத்தின் படிகளை விட்டிறங்கி எதிரில் மெதுவாக விடியத்தொடங்கியிருந்த பாதையைப் பார்த்தான். மழை சுத்தமாக நின்றிருந்தது. இரவெல்லாம் தூங்காமல் மழைபார்த்தபடி ரயிலின் படிகளில் அமர்ந்திருந்தது இப்போது கண்களை கரிக்கச் செய்தது. ரயில்படிகளின் மெல்லிய காலடிப்பொட்டுகள் அழுத்தி தொடைகளின் கன்னியிருந்தது ரத்தம்பாய்ந்து நரம்புகளை இழுத்துக்காட்டியது. படிகளை விட்டிறங்கி எதிரில் இருந்த டீக்கடை தடுப்புக்குள் நுழைந்து தோள்பையை இறக்கி கீழே வைத்துவிட்டு நெட்டிமுறித்துவிட்டு. டீக்கடைகளுக்கே உரிய இனிய சிகரெட் மணத்திலிருந்து கொஞ்சம் விலகி நின்று கைகளை உரசி சூடாக்கி கன்னங்களில் வைத்துக்கொண்டான். ஆறுமாதங்களுக்கு முன்னதாக அதே டீக்கடையில் முதல் சென்னை பயணத்திற்காக பெட்டியுடன் அமர்ந்திருந்த நாட்களை ஒருமுறை எண்ணி சிரித்துக்கொண்டான். முதல் பயணம் கொடுக்கும் பயமும் முதல் வேலை கொடுக்கும் தைரியமும் எப்போதும் நினைவிலிருக்கவேண்டும் என்று தோன்றியது.

முந்தைய இரவின் மழையில் எங்கிருந்தெல்லாமோ அடித்துவரப்பட்ட நெகிழிப்பைகள் சாக்கடைக்குள் நீர் புகுந்துவிடாமல் காற்றில் படபடத்தபடி தடுத்துக்கொண்டிருந்தன. டீக்கடைக்காரர் நீண்ட குச்சியை வைத்து ஒவ்வொரு பையாக குத்தி வெளியிலெடுத்து விட்டுக்கொண்டிருந்தார். நீர் நிறைந்து உப்பிய பைகள் ஒவ்வொன்றாக சாக்கடைக்கு மேலாக சாக்கடையில் வழிந்துவிடாமல் பத்திரமாக ஓடிக்கொண்டிருந்த குறு நீரோட்டங்களில் கலந்து அடுத்த கடையைப்பார்த்து சென்றுகொண்டிருந்தது. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ மெல்லிய குரலில் எங்கிருந்தோ வழிந்தது. ‘அண்ணே ஒரு காப்பி’ நந்து புகைநெடி தாங்காமல் இன்னும் சற்று தள்ளி நின்ற பிறகு குரல்கொடுத்தான். ‘இருடே வாரேன் உன் அவசரத்துக்கு வந்தம்னா மழைத்தண்னிலதான் காப்பி போடணும்’ சிரித்துக்கொண்டே கோலப்பன் குச்சியை பாய்லர் தடுப்பின் மூலையில் சாய்த்துவைத்தார். கூரையின் மழை நீர் வழியும் பிளாஸ்டிக் ட்ரம்மில் கை நனைத்து சாரத்தில் துடைத்துக்கொண்டார். சிறுமுடிகள் மறைத்திருந்த வழுக்கையை நன்கு நீவி இன்னும் கொஞ்சம் மறைக்க முயற்சித்து பிறகு தோற்று கடைக்குள் நுழைந்து காப்பிக்கான காரியங்களில் ஈடுபட்டார்.

மழை நீர்ப்பாதைகள் தார்ச்சாலைக் கழுவி செம்மண்கரைகளைப் புரட்டி மீண்டும் தார்ச்சாலைகளில் படியச்செய்து விளையாடியபடி வடிகால்களைத் தப்பி ஒரு விளையாட்டைப்போல ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். நீரில் அடித்துச் செல்லப்படும் இலைகள் உருட்டிச்செல்லப்படும் கற்கள் பெரிய நதியில் நீந்திக்கொண்டிருப்பதாக கடலின் ஆழத்தில் விளையாடிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்கும்போதே காப்பி வந்தது. ‘என்னடே பகல்லையே கனவு கண்டுட்டு இருக்க.. வீட்டுக்குப்போறதா இல்லியா’ என்றார் கோலப்பன். ’என்னண்ணே காப்பி நல்லாருக்குல்லா வீட்டுக்குப்போனா உங்க காப்பி குடிக்கமுடியுமா சொல்லுங்க’ நந்துவும் சிரித்துவைத்தான்.

’ண்ணே பக்கத்துல கடை எங்கண்ணே இருக்கு’ தயங்கிக்கேட்டான். ஏம்டே உங்கப்பண்ட்ட சொல்லணுமா… போய் ஆறுமாசம் ஆகல அதுக்குள்ள பழகிட்டியாக்கும் உனக்கேம்டே இதெல்லாம் போனா பொழப்பப்பாத்துட்டு வீட்டுக்கு வந்தமான்னு இல்லமா பழக்கம்லா பழகிட்டுவந்திருக்கான்’ சொந்த ஊர் முகங்கள் முழுமையாய்ப்பழகிப்போனதின் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. எந்தப்பழக்கத்தையும் வீட்டுக்குத்தெரியாமல் மறைத்துவிடமுடியாது . யாராவது எங்கிருந்தாவது பார்த்து எப்படியாவது வீட்டிற்கு தகவல் அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் இப்படி குறுக்குசால் விழுவதும் உண்டு. ‘எனக்கில்லைண்ணே பயலுவளுக்கு.. ட்ரீட் வைக்கலாம்னு.. ‘

”ஆமாடே பூனைகளெல்லாம் சேர்ந்து மீனப்பத்திரமா பாத்துக்கப்போறீயன்னு கடை எங்கிருக்குன்னு எங்கிட்டியே கேட்க. ஆனாலும் மெட்ராஸ் பெரியமனுசன் சின்னமனுசன் மரியாதை எல்லாத்தையும் உறிஞ்சிட்டுதான் அனுப்புதுல்ல. நீ கிளாஸ்ஸ வச்சுட்டுப்போடே, காச உங்கப்பன்கிட்ட நான் பேசி வாங்கிக்கிடுதேன்” பேச்சு அபாயத்திற்குப் போவதற்கு முன்னால் தடை போடத்தோன்றியது. காசை பர்ஸிலிருந்து உருட்டி பாய்லர் தடுப்பின் மீது வைத்துவிட்டு நகர்ந்தான். அருகிலிருந்த மின்கம்பத்திற்கு கீழே குத்தவைத்து அமர்ந்திருந்த அவன் எழுந்து வந்தான். ‘கடையா… கட்டிங்கா.. எனக்கொண்ணு சேர்த்துவாங்குவன்னா சொல்லு நாங்கூட்டிப்போரேன்” ‘இல்லண்ணே பிரண்டுக்கு.. ‘ தெரியும்டே எல்லா பிரண்டும். கட்டிங்க் உண்டுமா கிடையாதான்னு சொன்னா நடையக்கட்டுவேன்.. ’ ’சரி வா வாங்கித்தரேன்”

எந்தத்தருணத்தில் மரியாதை இறங்கியதென்று நந்து சட்டென்று துணுக்குற்றான். அவனுக்கு வயது நிச்சயம் முப்பதுக்கு மேல் இருக்கும். நாடியைவிட்டு கீழிறங்கத் தொடங்கியிருக்கும் தாடி. தண்ணீர்விட்டு படிய மேல் நோக்கி இழுத்துசீவப்பட்ட தலை. முழுக்கச் சிவந்த கண்கள். காலையின் முதல் ரயிலுக்கே கடைக்குப்போகிறவர்களைக் கண்டறிந்து கட்டிங் கேர்க்கும் தீர்க்கமான மனம். ஆனாலும் கடைசி அடையாளம்தான் மரியாதையைக் குறைத்திருக்கவேண்டும் . குடிப்பது அதுவும் இரந்து குடிப்பது அதுவும் விடிபகலில் தயாராக இருப்பது குழப்பமாக இருந்தது. என்ன பழக்கம்..

‘அந்தா செவப்புத்துண்டு போட்ருக்கான்ல அவண்ட்ட ஒரு கட்டிங் சொல்லிடு’
‘யாருக்குன்னு’
‘சும்மா என்னைய கையகாட்டி சொல்லு. அவனுக்குத் தெரியும்’

மழையில் சதசதத்துக்கிடந்தது டாஸ்மாக். பழைய தியேட்டரை, ஒருவகையில் டூரிங் டாக்கிஸ் அது, அதை எடுத்து டாஸ்மாக் ஆக்கியிருந்தார்கள். டிக்கர்கவுண்டரின் கைவிடும் சிறுபொந்துகளை மொத்தமாக உடைத்து பெரிய அழிக்கம்பி போட்ட கதவு. இடைவெளிக்குள் கைவிட்டு பாட்டில்களை வாங்கிக்கொள்ளும்படி. தியேட்டருக்கான வலது பக்கத்துப்பாதை பார் என எழுதி அம்புக்குறியிடப்பட்டிருந்தது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த கூம்பு ஸ்பீக்கர்கள் தொடர்ந்து பாடல்களை மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கக்கூடும். முருக்குக்காரர்கள், ஐஸ்க்காரர்கள், இன்னும் நொறுக்குத் தீனிகள், தண்ணிப்புட்டிகள் எல்லாவற்றிற்கும் குடிகாரர்களிடம் வேலையிருக்கிறது. திரைமட்டும் என்னவாகியிருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை. போய்ப்பார்க்கும் துணிச்சலும் இல்லை. கடை வரை வந்ததே பெரிய ரிஸ்க். யாராவது பார்த்து எதையாவது சொல்லக்கூடும் அல்லது ..

“ஏ என்னடே வேணும்..”

”ஒரு புல்லு.. அந்தா நிக்காருல்லா அவருக்கொரு கட்டிங்”

“புல்லுன்னா எதுவேணும்.. கரெட்ட்டா சொல்லுவீயா’

“தெரியலைண்ணே நீங்களா நல்லதா ஒண்ணு குடுங்களேன். பசங்களுக்கு பார்ட்டி…”

“இந்தா இத எடுத்துட்டு போ. காலேஜ் பயலுவளே இதத்தான் வாங்கிட்டுப்போறானுவ”

காசைக்கேட்டு மொத்தமா குடுத்தான். கட்டிங்கிற்கான காசு எப்படி தூரத்தில் சுவரோரமாய் சாய்ந்திருப்பவனைப்போய்ச்சேரும் என்று தெரியவில்லை. கடையைவிட்டு வெளியேறும்போது சுவரில் சாய்ந்து பீடி ஊதிக்கொண்டிருந்தவன் அங்கிருந்தே கையை துதிக்கையைப்போல தூக்கி ஒரு சல்யூட் வைத்தான். அவனது குடிக்கான ஒரு பொழுதா அல்லது சிறுதுளி பெருவெள்ளக்கணக்குகள் எதுவும் இருக்கிறதா என்பதை யூகிக்க முடியவில்லை. கடையைவிட்டு வெளியேறி வீட்டிற்கு நடக்கத்தொடங்கினான். பச்சை நிற பாட்டில் பிளாஸ்டிக் கவரிலிருந்து வெளியேறி பனியன் ஜட்டிகள் சூழ ஆளத்தில் கனத்துக்கிடந்தது.

O

வீட்டிற்கு வந்து சாரத்திற்கு மாறி மாடியறையில் கட்டிலில் போய் விழுந்தான் . விடிபகலின் மெல்லிய அனல் கலந்த காற்று தூரத்து குளத்தின் செம்மண் கலந்த நீர்வாசத்துடன் வீச அப்படியே தூங்கிப்போனான். எழுந்தபோது வெயில் தாழ்ந்திருந்தது, மணி மூன்றைக் கடந்தது. திடீரென கீழே தோள்பையில் வைத்திருந்த பாட்டில் நினைவுக்கு வர வீட்டில் யாரும் எடுத்திருக்கக்கூடாதே என பதறியது. கீழிறங்கிவந்தான். தோள்பை அப்படியே எடுக்காமல் இருந்தது. பையிலிருந்து துணிகளை எடுத்து வாளியில் நிரப்பிவிட்டு உள்ளாடைகளுக்குள் ஒளிந்திருந்த புட்டியை எடுத்துப்போய் புத்தக அடுக்குகளுக்குள் ஒருக்களித்து வைத்தான். அலைபேசியை எடுத்து மீண்டும் மாடியறைக்கு ஏறி சந்துருவை அழைத்தான்.

“டேய்”

“ம்ம் வீட்லதான் இருக்கேன்”

கேட்கும்முன்பாகவே வீட்டிலிருப்பது வருகின்றதால் அருகில் அப்பா இருப்பதாக அர்த்தம். நந்து சிரித்துக்கொண்டான். இதெல்லாம் ஒரு பழக்கமாகவே பதின்மத்தில் ஊறிவிடுகிறது. யாரிடமிருந்தோ யாருக்கோ தொற்றி யாரவது இதை சம்பிராதயாமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“சரி விடு. பாட்டில் இருக்கு. நைட்டு வழக்கம்போல பார்ட்டி உங்கவீட்லையே வச்சிரலாம்ல… இல்ல ஸ்டேசன் போயிரலாமா”

“அதெல்லாம் பிரச்சினையில்ல. நீ நைட்டு கிளம்பி வா. தங்கச்சி பிரண்ட்ச் இருப்பாங்க. ஷார்ட்ஸ மாட்டிட்டு வந்துராத. ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிக்க”

“சரி அப்பாக்கு ஒரு ஹாய் சொல்லிவை. நைட்டு பாப்போம்”

போனை அணைத்து டேபிளில் எறிந்துவிட்டு மீண்டும் கட்டிலில் படுத்தான். முந்தைய இரவின் மழை ஓட்டுக்கூரையின் மீது பொழிவது போல் இருந்தது . அதிகாலையின் மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் தூரத்தில் ஒலிப்பதான பிரமை. சிறுவயதில் மடியமர்த்தி சீட்டுக்கச்சேரியின் நடுவில் கதலிபழ வாசனையுடன் முத்தமிட்ட சித்தப்பாக்கள். அவர்களை அருகமர்ந்திருந்த சில்வர் டம்ப்ளர் போதைகள். வெகுகாலத்திற்கு பிறகு நண்பர்களால் திரும்பிவந்த அதே கதலிப்பழ வாசனை. ஆளற்ற ரயில் நிலையத்தில் வெயில் சாய்ந்த மாலைகளில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த கல்லூரிக்காலங்கள். ஆரம்ப குடி இளைஞர்கள் முதற்போதையில் அடையும் பிறழ்வு விளையாட்டுகள். மப்பாகல மப்பேறல மப்பாகல என முதல் கிளாஸிலிருந்து கடைசியாய் கிளம்பும்வரை புலம்பிக்கொண்டேயிருந்த நண்பர்கள். நந்து இதுவரை குடித்ததில்லை. பெரிய காரணங்கள் எதுவுமில்லை. பணம். வீட்டில் வாங்கும் காசில் குடிப்பதைக் குறித்த தயக்கம் இருந்தது. அதுவும் யாராவது குடிப்பதற்கு காசு தந்திருக்கிறார்களா.. நோட்டுகளுக்கு, பாடங்களுக்கு, கல்லூரிக்கட்டணங்களுக்கு என ஏமாற்றி வாங்கும் காசுகளைத் திரட்டி கோயில்தீர்த்தத்தைப்போல் குடித்து கோயில் யானையைப்போல் மூத்திரம் விட்டு… போதையில் என்ன இருக்கிறது இந்த கதலிப்பழ வாசனை என்ன பெரிய சந்தோசத்தைக் கொடுத்துவிடமுடியும். சுற்றியிருப்பவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தன் வழியை தான் அறிவதற்கு குழந்தையின் மன நிலை போதுமே எதற்காக தனியாக ஒரு செலவு ஒரு ஏமாற்று ஒரு மூளை மயக்கம்.. என்னன்னெவோ நினைவுகள் தொட்டு தொட்டு ஓடிக்கொண்டிருக்க படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியில் வந்தான். இருளத்தொடங்கியிருந்தது. வயற்பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. அருகிலிருந்த வேப்பமரக்காற்று கூட்டினை அடையும் பற்வைகளைக் கலைக்காமல் மெல்ல அசைந்துகொண்டிருந்தது. தெருவிளக்குகளும் வீட்டின் மஞ்சள் வெளிச்சங்களும் மெல்ல மெல்ல தொடங்கியிருந்தன.

கிராமத்தின் தெருக்களில் இரவு ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. வீடுகள் சோகையான மெல்லிய மஞ்சள் விளக்குகளில் தன் முகத்தை பார்க்கத் தொடங்குகிறது. இளஞ்சோடிகளை மட்டும் சமையலுக்கு விட்டு குழந்தைகளையும் புத்தகங்களையும் தூக்கிக்கொண்டு பெரியவர்கள் திண்ணைகளுக்கு நகர்கிறார்கள். நதிபோக்கில் உருட்டும் கூழாங்கற்களைப்போல இந்த விளையாட்டு இவர்களுக்கு பழகியிருக்கக்கூடும். நந்துவிற்கு சிறுவயதில் வீட்டிற்கு வெளியில் அனுப்புவதற்கு மறுப்பு சொன்ன நாட்கள் நினைவுக்கு வந்து மெல்ல சிரித்துக்கொண்டான். நாட்கள் ஓடும்போது வயது அன்பின் புதிய முகங்களை காட்டியபடியே இருக்கிறது. முந்தைய நாளின் அன்புகள் இன்று வேறொன்றாக இருக்கின்றன. இன்றைய நாளின் அன்பு நாளை வேறு பெயரில் அழைக்கப்படக்கூடும். வீட்டிற்குள் மறுபடி வந்து ஒளித்து வைத்த பாட்டிலை பைக்குள் போட்டுக்கொண்டு சந்துருவீட்டிற்குப்போவதை அறிவித்துவிட்டு வெளியேறினான். பதின்மத்தில் பெற்றோரும் அன்பினை மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு பையன்கள் எங்கு போகிறார்கள் எதற்கு போகிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. ஆனாலும் தடுப்பதில்லை.

சைக்கிளில் தெருக்களில் வளையும்போது மீண்டும் அதே பாடல் எங்கிருந்தோ மெல்ல ஒலிக்க முணுமுணுப்பில் ஒட்டிக்கொண்டது. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே..

O

சந்துரு வீட்டுவாசலில் தாறுமாறாக லேடிபேர்ட் சைக்கிள்கள் ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து விழுந்துகிடந்தன. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு மெல்ல நுழைந்தான். வெளிக்கதவிற்கும் அழிக்கதவிற்கும் இடைப்பட்ட வெளியில் அப்பாவின் எம்மெய்ட்டி அண்ணனின் பல்சர் இரண்டும் இல்லை. செருப்பினைக்கழற்றிவிட்டு நுழைந்தான். சந்துரு அறையில் அவனுடன் மணி, இன்பா, முத்து மூவரும் அமர்ந்திருந்தனர். இவர்களின் கதையை இன்னொரு நாள் தனியாக பேசவேண்டும்.

“என்ன மாப்ள தயாரா இருக்க போல.. அதென்னல வாசல்ல அவ்ளொ சைக்கிள்குமிச்சுப்போட்ருக்க யாவாரம் பண்ணப்போறீயா”

“எது குமிஞ்சுகிடக்கா.. சொன்னம்லா தங்கச்சி பிரண்சுக வந்துருக்காளுக, அவளுக சைக்கிளாருக்கும் காத்தில விழுந்துருக்கும்”

சந்துரு சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு எழுந்தான். கழுத்திருந்த ஒற்றைச்சங்கிலி வியர்வையின் நனைந்து மின்னியது. “வாங்கல எடுத்துவச்சுத்தொலைவம், அவளுவள எடுத்துவைக்கச் சொன்னா நைட்டு கச்சேரிய வீட்ல மாட்டிவிட்ரும் எங்கூட பொறந்தது. நண்டு சிண்டுக்கெல்லாம் பயப்படவேண்டியிருக்கு பாரேன் நம்ம தலையெழுத்தெளவு.. மணி, இன்பா, சுந்தர் மூவரும் அசைந்து எழுந்தார்கள். நந்துவும் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு இணைந்து கொண்டான். நால்வருமாக வெளியில் வந்து ஒவ்வொரு சைக்கிளாக எடுத்து வரிசையாக நிறுத்தினர்.

“இது யார்ல இது புதுசா இந்த சைக்கிள முன்னாடி பாத்தமாதிரியே இல்லியே” நந்து கேட்டான். ஹேண்டில் பார் இணையும் இருந்த நட்டுக்கு மீதாக சிறிய சிவப்பு நிற அரளிப்பூ வரையப்பட்டிருந்தது. முதலில் சில்வரின் மீது ஒயிட்னரில் வரைந்து காம்புப்பகுதியில் பச்சை மையையும் இதழ் பகுதியில் சிவப்பு மையையும் மெல்லிய சொட்டுகளாக ஊற்றியிருக்கவேண்டும். அல்லாமல் இப்படி ஒட்டியிருக்காது. எந்த மலர் புகைப்படத்தையும் வெட்டி ஒட்டியிருக்க முடியும் ஒரு செல்லோடேப் கொண்டு. ஆனாலும் அதில் அரளிப்பூ கிடைக்காது. லில்லிகள், ட்யூலிப்புகள் இன்னபிற வெள்ளைக்கார மலர்கள் மட்ட்டுமே இத்தனை சிறிய அளவில் புகைப்படங்களாக ஸ்டிக்கராக கிடைத்திருக்கும். இந்தப்பெண் மிகத்தெளிவாக அரளிப்பூவைத் தேடியிருக்கிறாள். அதிலும் செவ்வரளி. அத்தனை திருத்தமாக யோசித்து அத்தனை பொறுமையாக திட்டமிட்டு மலரை நிறத்தை அதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்ந்தெடுத்து தெளிவாக திட்டமிட்டு இரண்டு நிற பேனா மைகளை வாங்கி அவை மிகச்சிறியதாக இந்த மலரில் சொட்டுமளவு பேனாக்களைத் தேர்ந்தெடுத்து.. பெண்ணே நீ யார். உன் பெயர் என்ன. எந்த நதியிலிருந்து இந்த மலரை எடுத்துவந்திருக்கிறாய்…

“உனக்கு மட்டும்ந்தாம்ல ஒரே வண்டில ஓராயிரம் வித்தியாசாம் தெரியும்… எதோ புதுப்பொண்ணு போல இவ இன்னைக்குத்தான் வீட்ருக்கு கூப்ட்ருக்கா. சரின்னு வந்திருக்கு. பிரியாகிட்ட மத்தவளுககிட்ட வாயடிக்கமாதிரி அவகிட்டையும் வாயடிக்காத. இந்தா எக்ஸாம் முடிஞ்சிரும் இந்த மூணு மாச கேப்ல என்ன எளவுக்கு புதுசா ஒரு எதிரி உனக்கு. ஏற்கனவே வாங்கின கெட்டபேருல்லாம் உனக்கு பத்தும்லா” சந்துருவுக்கு அவன் பயம். நந்துவுக்கு அந்த செவ்வரளிப்பெண்ணை பார்த்தே ஆகவேண்டும் போலிருந்தது. எப்படியும் இவன்கள் குடிக்க ஆரம்பித்ததும் கத்தும் கத்தலில் பக்கத்து அறையிலிருந்து அலறியடித்து வந்து அடக்குவார்கள் என்பது தெரியும். இது நாள்வரையினால கதைதானே. வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தான். திரும்பி சந்துருவின் அறைக்குப் போனார்கள்.

சந்துரு நேராக நந்துவின் பையை எடுத்து பிரித்தான். முழுபாட்டில் அறுங்கோணத்தில் பச்சை அட்டை கசங்கலுடன் எடுத்தான். “ஏம்ல சிக்னேச்சர் இந்தா நாலு தெரு தாண்டுனா கிடைக்கு. இதுக்கேம்ல அங்கிருந்து தூக்கிட்டு வந்த. ஒரு வெளினாட்டு சரக்கு எதாச்சும் வாங்கிருக்கலாம்லல.” “லேய் சென்னைலதான் இருக்கேன். சிங்கப்பூர்ல இருக்கமாதிரி கேக்க. சிங்கப்பூர்போனா வாங்கிட்டுவாரேன். நீயும் இவனும் ஊத்திட்டு அழறதுக்கு எந்தூர் சரக்கா இருந்தா என்னல… சென்னைலருந்துல்லாம் தூக்கிட்டு வரல.. இங்க வந்துதான் வாங்குனேன்.” நந்து சொன்னான். “ நொட்டி. நீ என்ன நொட்டுதன்னு நாங்களும் பாக்கத்தான போறோம். “ கட்டிலுக்கு கீழிருந்து பிளாஸ்டிக் கப்புகள், பசுமதி பேக்கரி மிச்சர் பாக்கெட், வேர்க்கடலை பாக்கெட் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருந்தது. மிக இலகுவாக அதே சமயம் கவனமாக அந்த அறுங்கோணப்பாட்டிலை ஆளுக்குக் கொஞ்சமாம கலந்துகொண்டார்கள். நந்து தனக்கான கிளாஸில் அவர்கள் கலந்த அதே லாவகத்துடன் பெப்சியை ஊற்றிக்கொண்டான். “மாப்ளைக்கு ஒரு ஜே மெட்ராஸுக்கு ஒரு ஜே” ஆளாளுக்கு அரைகிளாஸை கவிழ்த்து கீழே வைத்தார்கள். நந்து பெப்சியை செல்லமாக ஒரு மிடறு குடித்துவிட்டு கீழே வைத்தான்.

மூத்திர நிற திரவத்தை குடிப்பதால் இவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை நந்துவுக்கு ஒருபோதும் புரிந்ததில்லை. கல்லூரி தொடங்கிய காலத்திலிருந்து மெல்ல மெல்ல உருவான நட்பு வட்டம். குடியைத் தவிர பெரும்பாலான விசயங்களில் ஒவ்வொருவரும் மற்ற்வரின் கண்ணாடி பிம்பம். விளையாட்டாக படிப்பது. தேவையான மதிப்பெண்களை பார்டரில் பெறுவதென கல்லூரிக்கான முகங்களில் தொடங்கி பெண்களைவெறுப்பது வெறுப்பேற்றுவதை வரை அத்தனை ஒற்றுமை. நந்துவிற்கு ஆரம்பத்திலிருந்தே குடிமீது மோகம் இல்லை. வெறுப்பும் இல்லாமல் இருந்ததே இவர்களுடன் வைத்திருந்தது. வள்ளியூர் ப்ஸ்டாண்டு, கல்லூரி இசக்கியம்மன் ஆலமரம் என வழக்கமான எல்லா குடிபகுதிகளிலும் நந்துவும் அந்த மூன்றாண்டுகளில் இவர்களுடன் இருந்திருக்கிறான். ஆனால் ஒருபோதும் குடித்ததில்லை.

குடிப்பதைவிட குடிப்பவர்களை பார்த்துக்கொண்டிருப்பதில் நிச்சயம் ஒரு போதை இருக்கவேண்டுமென்று நந்துவுக்குத் தோன்றியது. மெல்ல மெல்ல ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறுவதைப்போல. கொஞ்சம் அசிங்கமான பட்டாம்பூச்சி. முகமூடிகளைக் கழற்றிவிட்ட மனிதமுகங்களைப்போல. மெல்ல மாப்ளையில் ஆரம்பிப்பவர்கள் தேவ்டியாக்களில் முடிப்பார்கள். ஆனாலும் தெளிந்ததும் அதே தோள்கள் அதே கரங்கள் அதே அன்பு. குடித்தபோது பேசிய வார்த்தைகள் அத்தனையும் மறந்திருக்குமா என்றால் இல்லை. அவர்களிடம் தனியாக கேட்டால் ஒவ்வொருவரும் பேசிய காரணங்களை வாங்கிய பேச்சுக்களை விலாவரியாகச் சொல்வார்கள். ஆனால் கோபமில்லையா என்றால் அவனும் குடிச்சிருந்தான் நானும் மப்புல இருந்தேன். அதெல்லாம் சகஜம் மாப்ள. இதுக்கெல்லாம் கோச்சுகிட்டா ஒருத்தன் கூடையும் குடிக்கமுடியாது என சொல்லிவைத்தார்போல் நால்வரும் சொல்வார்கள். இந்த ஒற்றுமை எங்கிருர்ந்து வருகிறது? குடியிலிருந்தா, குடி குடுக்கும் சுதந்திரத்திலிருந்தா?

“மாப்ள… கப்னு குடிச்சுட்டு வா.. வெளியபோய் ஒரு தம்போட்டுட்டு வரலாம்ல” சந்துரு அழைத்தான். அவனுக்கு ஒரு கிளாஸுக்கு ஒரு தம் வேண்டும். ஆலமரத்தடி தாபா இசக்கியம்மன் கோயில்களில் சரி, ஆளரவற்ற இடம். ஆனால் சந்துருவீட்டிலிருந்து தம்மடிக்க போகவேண்டுமென்றால் ஏழுகடல் ஏழுமலை தாண்டும் விஷயம். சந்துசந்தாக நுழைந்து சாவடிக்குப்போகவேண்டும். அங்குதான் இன்னேரத்து யாரும் இருக்கமாட்டார்கள்.வேறு எங்கு நின்றாலும் யார்பார்த்தாலும் வீட்டில் சொல்லிவிடுவார்கள். கிராமத்தில் ஊர் மொத்தமும் ஜேம்ஸ்பாண்டுகள். அடுத்தவர் ரகசியங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லாமல் தூக்கம் இறங்காது. “ நீங்க போங்கல நான் உக்காந்திருக்கேன்” என்றான். “திடீர் திடீர்னு பத்தினியாருவல. இருந்துதொல. இந்தா வந்துருவோம்” எழுந்து ஒவ்வொருவராய் வெளியில் போனார்கள். பேப்பர் விரிப்பு பிளாஸ்டிக் டம்ளர் குளிரில் நனைந்திருந்தது. நந்து கிளாஸை எடுத்து அவர்களைப்போலவே ஒரே மடக்கில் கவிழ்த்தினான். புரையேறி கொஞ்சம் சட்டையில் சிந்தியது. துடைத்துக்கொண்டான்.

“மெல்ல மெல்ல…. உங்க கிளாஸ்தான எங்கியும் ஓடிராது”பின்னாடியிருந்து குரல் வழியாக அவள்.கருப்பு வரியிட்ட மஞ்சள் சுடிதார். கருப்பு துப்பட்டா. மருதாணி கோடிட்ட பாதங்கள். மென்மையாக. அத்தனை மென்மையாக. ஒழுங்காக வெட்டப்பட்ட நகங்கள். மென்கால்களை கட்டிப்பிடிக்க முயற்சிசெய்யும் முன் மருதாணியின் மீதுவந்து விழும் வெள்ளிக்கொலுசு. நிமிர்வதற்கு முன்பாகவே செவ்வரளியை வரைந்தவளின் பாதங்கள் இப்படித்தான் இருக்குமெனத் தோன்றியது. இந்தப்பாதங்களை எடுத்து சென்னியில் சூடிக்கொள்ளலாம். “குடிச்சுட்டு இருக்குங்களா… தள்ளுடி நான் எடுத்தாரேன்” விலக்கிக்கொண்டு நுழைந்தவள் பிரியா. அந்த செம்மண் பூசிய மஞ்சள் பாதங்கள் பின்னால் நகர்ந்தன. நகராதே நகராதே என்றடித்துக்கொண்டது மனம். பெப்சி தொண்டையில் நற நறத்தது. அடிவற்றியிலிருந்து உருவமில்லாதொரு உருளையும் பாடல் அசந்தர்பமாக நினைவுக்கு வந்தது. பிரியா நுழைந்து பார்த்துவிட்டு “இவனா… சும்மா உக்காந்து பெப்சி குடிச்சுட்டு இருந்திருக்கும். நீ வா ஒண்ணுமில்ல” என்றாள் அவமானமாக இருந்தது. இந்தத்தருணத்திற்கு மட்டுமாவது குடித்து பழகியிருக்கலாம் என்று தோன்றியது.

அவள் நுழைந்தாள். பிரியாவும் நுழைந்திருக்கக்கூடும். நந்து நிச்சயமாய் குழப்பத்திலிருந்தான். பாதம் மடக்கிவைத்திருந்ததில் விர்ரென்றது தடுமாறியபடி எழுந்தான். “ஜாவா புக் எங்கண்ணே” ப்ரியா கூடைகளுக்குள் அலமாரிகளில் கட்டிலுக்கு கீழ் என மெல்ல மெல்ல கலைத்துக்கொண்டிருந்தான். நந்து அம்மஞ்சள் சுடிதார் பெண்ணைப் பார்த்தபடி பேயறைந்தாற்போல் நின்றிருந்தான். எங்கேயோ பார்த்தமுகம். எங்கேயென்று மூளையின் அத்தனை செல்களும் ஆங்காங்கே உறைந்து சுற்றிலும் தேடிக்கொண்டிருந்தன. மிக அளவாக அந்த ஒற்றை ஆடைக்கென அளவெடுத்துச் செதுக்கிய சிலை போன்ற பெண். காற்றில் மெல்ல அசையும் கூந்தல். காதிலிருந்து மீறி முகத்தில் விழாதபடி மிகச்சாதூர்யமாக அவர்களின் எல்லைக்குள்ளேயே நின்றாடும் கடலலைகளைப்போல. விஜயாபதி கடற்கரையின் கருமணல் நினைவுக்கு வந்தது. மணலே அலையாகி எல்லைக்குள் மீண்டும் மீண்டும் மோதுவதைப்போல கூந்தல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் கைகட்டி இடப்புறம் எங்கோ பார்ப்பவள் போல் நின்றிருந்தாள்.

குடிக்கிறவன் என்று நினைத்திருக்கக்கூடும். குடியைப் பார்க்காமல் முகம் திருப்பிக் கொள்வதன் மூலம் அவர்களின் எதிர்ப்பை காட்டுவதாக நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனாலும் இந்த முகத்தை கடைசியாய் எங்கு பார்த்திருக்கிறோம் என அவனுக்கு எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. எதாவது பேசவேண்டும் போலிருந்தது. அவள் பேசவேண்டும். அவளிடம் பேசவேண்டும். அவளாக பேசுவது நடக்காத காரியம். “ மப்புல்லாம் இல்லீங்க. நான் சந்துரு நந்து பிரண்ட்” உளறுகிறோம் என்று அவனுக்கே தெரிந்தது. ஆனாலும் எதையோ தொடங்கிவிட்டோம் என்பது தொண்டைக்குழியிலிருந்த காற்றை வெளியேற்றியிருந்தது. “தெரியுது. பேசுறதுலையே தெரியுது” என்றாள். “ஏண்டி அவனப்போட்டு கொமைக்க. அவன் குடிக்கமாட்டான். சும்மா உக்காந்திருப்பான் எங்கூட்டு எருமைமாடு இன்னும் மூணு எருமைக குடிச்சுட்டு இருந்திருக்கும். இவன் சும்மாதான் உக்காந்திருப்பான்” அம்மா ப்ரியா ஆபத்பாந்தவி. அந்த சில நிமிடங்கள் இதயம் இஷ்டத்திற்கு கண்ட இடத்தில் துடித்துக்கொண்டிருந்தது. பின்கழுத்து நரம்பு துடிப்பது காதில் கேட்டது. “ இது….. “ என் பிரண்டுண்ணே… நம்ம காலேஜ்தான் இங்க வந்ததில்ல… காலேஜ் ஓனருக்கு தெரிஞ்ச பொண்ணுண்ணே கடைசி செமஸ்டருக்குத்தான் வந்துச்சு. நீகூட பார்த்திருப்பண்ணே”

“ஹல்லோ அய்யம் கெளரி”

“நந்து”

புயலடித்த கனவிலிருந்து எழுந்து அமர்ந்தது போலிருந்தது. ஒட்டுமொத்தமாக மஞ்சளும் கருப்பும் கலந்து சூரியகாந்தி தோட்டத்திற்குள் தூக்கி எறியப்பட்டதுபோல. மழை நடுக்கம் நின்றபின் காய்ச்சல் வராமலிருக்க ஒரு கைமழை நீரைப்பிடித்து குடிப்பதைப்போல நெஞ்சமெல்லாம் குளிர்ந்து மூச்சுக்காற்று இறங்கியது. மேலும் மழைவேண்டும். அவள் குரல் வேண்டும். கைகுலுக்கலின் அந்த வினாடி மீண்டும்வேண்டும்போலிருந்தது. அவள் அங்கேயே தன் தூசுகளால் தன் பிம்பத்தை விட்டுச் சென்றதைப்போல. நிழலுக்கு ஆடைகட்டி அங்கேயே நிறுத்திச் சென்றதுபோல அவள் விலகிப்போன அறையில் மல்லிகை வாசனை நிறைகிற்து. அவள் திரும்பும்போது மல்லிகை வைத்திருந்தாளா.. பார்த்த நியாபகம் இல்லை. ஆனாலும் அவள் நீங்கிய இடத்தில் அந்த வாசனை இருக்கிறது. அவளாகவே இருக்கிறது. திரும்பத்திரும்ப பூக்கூடைகளை நினைத்துப்பார்த்தான். இதுவரை பலமுறை மல்லிகைப்பெண்கள் கடந்து சென்றிருக்கிறார்கள். அத்தனை பேரிடமும் வியர்வை வாசத்தையே விட்டுச் சென்றிருக்கிறார்கள். தோவாளையின் மல்லிகைத்தோட்டங்களுக்கு போயிருக்கிறான். அங்கும் செத்தல்களும்செதல்களும் மழையில் நில நீரில் மட்கிய வீச்சம்தான் இருக்கும். முழுக்க உதிர்க்கப்பட்டு கூடையிலேற்றும் வரை மல்லிகை அதன் மணத்தை வைத்திருந்தது. பிறகு தொட்டி ஆட்டோவின் புகைவாசனை மட்டுமே மிச்சம். இதுவரை சந்தித்த பெண்களும் அப்படியே. எவளும் மன்னிக்க.. யாரும் நினைவில் நின்றதில்லை. பெண்வெறுப்பு அவர்களிடமிருந்து விலகியிருக்க வைத்திருக்கிறது. கூடவே எதிரிகளை வெறுப்பேற்றும்பொருட்டு அவர்களின் காதலிகளை பேசிப்பேசி சிரிக்க சிரிக்க பல மணி நேரம் கல்லூரியின் அத்தனை வராண்டாக்களில் படிகக்ட்டுகளில் நின்றிருந்தாலும் எந்தப்பெண்ணிலும் இந்த காற்றுக்குமிழிகள் வார்த்தைகளைத் தடுத்ததில்லை. இவள். யாரிவள். எங்கிருந்து வந்தவள். பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்தான்.

கெளரி.